Skip to content
Home » பாலஸ்தீனம் #14 – குருதியில் பிறந்த தேசம்

பாலஸ்தீனம் #14 – குருதியில் பிறந்த தேசம்

பாலஸ்தீனம்

‘இஸ்ரேல் எனும் தேசம் உருவானபோது அதை ஏற்றுக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் யூத நகரங்கள்மீது தாக்குதல் நடத்தினார்கள். தற்காப்புக்கு யூதர்கள் திரும்பித் தாக்கினார்கள். இது போதாது என்று அரபு நாடுகளும் இஸ்ரேல்மீது படையெடுத்து வந்தன. இஸ்ரேல் ஒற்றை ஆளாக நின்று எதிரிகளைத் துவம்சம் செய்து சமாளித்தது. போரின் முடிவில் இஸ்ரேல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைத் தற்காத்துக்கொண்டது. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வந்த அரபு தேசங்களோ ஆளுக்கு ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டன. முடிவில் பாலஸ்தீனர்கள் நிலங்களை இழந்து நிராதாரவாக நின்றனர்.’ இஸ்ரேல் – அரபுப் போர் தொடர்பாக தேடினால் நமக்குக் கிடைக்கும் வரலாறு இதுதான்.

ஒரு நிகழ்வுக்கு எப்போதும் இரு தரப்பு நியாயங்கள் இருக்கும் என்பது உண்மை. ஆனால் அதில் ஒரு தரப்பு முழுவதும் பொய்யும் புரட்டுகளும் மட்டுமே இருந்தால் அதை என்னவென்று சொல்வது? இதுதான் பாலஸ்தீனர்கள் விஷயத்தில் நடந்தது.

0

நவம்பர் 29, 1947 அன்று இரவு பிரிவினை தீர்மானம் வெற்றியடைந்த செய்தி பாலஸ்தீனத்தில் தெரியவந்தபோது சியோனியர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். வீடுகளில் இருந்து வெளியில் ஓடிவந்த யூதர்கள் ஜெருசலேம், டெல் அவிவ் நகரத் தெருக்களில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டாடினர். சியோனியக் குடியேற்றப் பகுதிகளில் முழுவதும் இந்த உற்சாகம் பரவியது.

சியோனிய அலுவலக அதிகாரிகள் வாழ்த்துச் சொல்வதற்காக டேவிட் பென்குரியன் இருந்த அறைக்குள் நுழைந்தனர். உள்ளே பென்குரியன் அமைதியாக இருந்தார். அவரது கண்கள் எதையோ நோக்கிக்கொண்டிருந்தன. அவரது சிந்தனை இந்தக் கொண்டாட்டத்தில் நிலைகொள்ளவில்லை. வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களிடம் அவர் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அறையைத் தாழிட்டுக்கொண்டார். மீண்டும் சுவரையே உற்றுநோக்கத் தொடங்கினார்.

அந்த அறையின் சுவரில் பாலஸ்தீனத்தின் வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்தில் யூதர்கள் வசித்து வரும் பகுதிகள் எல்லாம் சிவப்பு நிறக் கோடுகளில் குறிக்கப்பட்டிருந்தன. பென்குரியன் வரைபடத்தில் இருந்த ஒவ்வொரு கிராமத்தையும் உற்று நோக்கினார். அந்தக் கிராமத்தில் வாழும் மக்கள், அவரது தொழில்கள், கிராமங்களைச் சுற்றி இருந்த நிலபரப்புகள், அதன் விவரங்கள் என ஒவ்வொன்றையும் மனதிற்குள் கணக்கிட்டார்.

பென்குரியன் ஏற்கெனவே சியோனிய வீரர்களை பாலஸ்தீனம் முழுவதும் ரகசியமாக ஊடுருவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். சியோனிய ராணுவம் ஹகனா (Haganah), பால்மச் (Palmach), இர்குன் (Irgun), லெகி (lehi) எனப் பல பிரிவுகள், உட்பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் தளபதிகள், வீரர்கள் என முறையாக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் சரியான போர் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது.

சியோனிய சிறப்பு முகவர்கள் நவம்பர் தொடக்கத்திலேயே பாலஸ்தீனத்தில் இருந்து கிளம்பி ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தனர். அவர்களிடம் அமெரிக்காவில் திரட்டப்பட்டிருந்த 30 லட்சம் டாலர் தொகை கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய வேலை ஐரோப்பிய நாட்டு ராணுவத் தளபதிகளைச் சந்தித்து ரைபில்கள், எந்திரத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், கனரக ஆயுங்கள் மற்றும் சில மூலப்பொருட்களை வாங்குவது. இதைத்தவிர பாலஸ்தீனத்திலேயே பல்வேறு இடங்களில் ஆயுதத் தொழிற்சாலைகள் ரகசியமாக அமைக்கப்பட்டு இருந்தன. ஐரோப்பாவில் இருந்து திருட்டுத்தனமாகக் கொண்டு வரப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு ஆயுதங்கள் தயாரிக்கும் வேலைகள் தொடங்கி இருந்தது. இதுஒருபுறம் இருக்க சில சியோனியர்கள் கிளம்பி செக்கோஸ்லோவாக்கியா தேசத்துக்குச் சென்று அங்கு பெரிய அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கான பேரமும் நடத்திக்கொண்டிருந்தனர்.

ஏன் இதுவெல்லாம் நடக்கிறது? பென் குரியன் என்ன திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்? யாருக்கும் தெரியவில்லை. அவரிடம் இருந்து அடுத்த உத்தரவு என்ன வரும் என்றும் சொல்வதற்கு இல்லை. பாலஸ்தீனத்தில் உள்ள யூத ஜனத்தொகையில் சரிபாதி மக்கள் மூன்று முக்கிய நகரங்களில் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் பாலஸ்தீனர்களோ எல்லா நகரங்களிலும், எல்லா கிராமங்களிலும் நிரம்பி இருந்தனர். அதனால் பிரிவினை அறிவிக்கப்பட்டவுடன் பாலஸ்தீனர்கள் தாக்கினால் தற்காத்துக்கொள்வதற்கு இத்தகைய திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் பென் குரியன் தெளிவாகத்தான் இருந்தார். அவருடைய திட்டம் பாலஸ்தீனர்கள் தாக்குதலில் இருந்து தங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலத்தைத் தற்காப்பது அல்ல. மாறாக யூத தேசத்தை அமைப்பதற்காகத் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம் போதாது என்று அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களையும் சேர்த்து பிடுங்குவதுதான். அதற்காகத்தான் அவர் ராணுவத்தைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்.

பென்குரியன் தன்னுடைய திட்டத்துக்கு டேலெட் திட்டம் (Plan Dalet) எனப் பெயரிட்டிருந்தார். டேலெட் என்பது ஹீப்ரு எழுத்துகளின் வரிசையில் வரும் நான்காவது எழுத்து. அதற்கு லட்சியங்களுக்காக மனக் கதவுகளைத் திறப்பது என்று அர்த்தம். அதேபோல் அந்த எழுத்துக்கு வேறொரு உள்ளார்ந்த அர்த்தமும் இருக்கிறது. டேலெட் என்பது இந்த உலகத்தில் உள்ள உடைமைகள் யாருக்கும் சொந்தமில்லை எனும் தத்துவார்த்த அர்தத்தையும் தரும். அதைத்தான் பென்குரியன் பாலஸ்தீனர்களுக்கு அவர் சொல்ல நினைத்தார். உங்களுடைய உடைமைகள் எதுவும் இனி உங்களுக்குச் சொந்தமில்லை.

0

பிரிவினை அறிவிக்கப்பட்டபோது பாலஸ்தீனர்கள் அச்சத்தில் உறைந்திருந்தனர். போர் மூளும் சூழல் ஏற்பட்டு இருந்தது. யூதர்கள் தெருக்களில் வெறிபிடித்து ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஊர்வலமாக வருவதை பாலஸ்தீனர்கள் அச்சத்துடன் நோக்கிக்கொண்டிருந்தனர். மூளப்போகும் சண்டையில் எப்படித் தங்கள் தேசத்தைப் பாதுகாப்பது என்று சிந்தித்தபடி இருந்தனர்.

பாலஸ்தீனம் இரு தேசங்களாகப் பிரிக்கப்பட்டதில் அவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். ஆனால் யூதர்களை எதிர்த்துச் சண்டையிடும் வலு இல்லை. தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களும் அவை ஒடுக்கப்பட்டதும் மனதளவில் அவர்களைத் தளர்த்தியிருந்தது. ஆனால் சியோனியர்கள் தாக்கினால் என்ன செய்வது? அவர்களிடம் மண்டியிடலாமா? எதிர்த்துப் போரிடுவோம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

அவர்கள் எதிர்பார்த்த ஆயுதங்கள் ஐரோப்பாவில் இருந்து வரவில்லை. 1936ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியில் பயன்படுத்தப்பட்ட துருப்பிடித்த துப்பாக்கிகளே அவர்களிடம் மிச்சமிருந்தன. அதுவும் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தன. ஒட்டுமொத்த யோப்பாவிலும் வெறும் 8 எந்திரத் துப்பாக்கிகள்தான் அவர்களிடம் இருந்தன.

இதுமட்டுமில்லாமல் 1936ஆம் ஆண்டு புரட்சியில் பிரிட்டன் அறிவித்திருந்த அவசரச் சட்டங்கள் அப்போதும் அமலில் இருந்தன. பாலஸ்தீனர்கள் துப்பாக்கி வைத்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்கிற உத்தரவுக்குக் கட்டுப்பட்டே பொதுமக்கள் பலரும் துப்பாக்கிகள் இல்லாமல் இருந்தனர். இதுவே பெரிய பலவீனமாகிப்போனது.

இதைத்தவிர பாலஸ்தீனர்களுக்குத் தலைமையும் இல்லை. அவர்களுக்கு இருந்த ஒரே தலைமையான அரபு உயர் ஆணையமும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டிருந்தது. அந்த அமைப்பை மீண்டும் சில அரபுத் தலைவர்கள் உயிர்ப்பிக்க முயற்சித்தபோதும் அவர்கள் பின்னால் அணிதிரள்வதற்குப் பாலஸ்தீனர்கள் யாரும் தயாராக இல்லை. இதனால் பெரும்பாலான பாலஸ்தீனர்கள் வரப்போகும் யுத்தத்திற்காக அரபு நாடுகளையே நம்பி இருந்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது அரபு நாடுகள் இணைந்து அரபுக் கூட்டமைப்பை (Arab League) உருவாக்கி இருந்தது. போருக்குப் பிறகான நாட்களில் வளர்ச்சிக்கான தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கி இருந்தனர். இந்த அமைப்புதான் பிரிவினை அறிவிக்கப்பட்டவுடனேயே பாலஸ்தீனர்களுடன் நிற்கப்போவதாக அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. ஆனால் அவர்களும்கூட வரப்போகும் போரில் பாலஸ்தீனர்களுக்குப் பயிற்சி அளிக்கும் முயற்சியிலோ, அவர்களுக்கு ஆயுதம் வழங்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை. வெறும் வாய்வார்த்தையாக மட்டுமே அவர்கள் ஆதரவு இருந்தன. இது பாலஸ்தீனர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அரபுத் தலைவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டனையும் அமெரிக்காவையுமே நம்பி நின்றனர். ஈராக்கின் பிரதமரான நூரி அஸ் சாயித் போன்றவர்கள் சுதந்திரத் தலைவர்களாக இல்லாமல் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களிடம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் போலவே நடந்துகொண்டனர். அவர்கள் பாலஸ்தீனர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கி ஏகாதிபத்தியங்கள் தங்கள்மீது வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயங்களை இழக்கத் தயாராக இருக்கவில்லை.

ஆனால் அரபு நாடுகளின் பொதுமக்கள் பாலஸ்தீனர்கள் பக்கமே நின்றனர். அவர்கள் தொடர் ஊர்வலங்களாலும் கவன ஈர்ப்பு போராட்டங்களாலும் தங்கள் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். வெறும் பேச்சில் இல்லாமல் தங்கள் நாட்டுத் தலைவர்கள் செயலில் உதவ வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தனர். சில அரபு இயக்கங்கள் தங்கள் நாடு அமெரிக்கா பிரிட்டனுக்கு எண்ணெய் வழங்குவதையே நிறுத்த வேண்டும் என்ற வலுவான பரிந்துரைகளை எல்லாம் முன்வைத்தன.

சிரியா ஒருபடி மேலே சென்று அமெரிக்காவின் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திட மாட்டோம் என மறுத்தது. லெபனான், டிரான்ஸ்ஜோர்டன் நாடுகளில் இருந்த தொழிலாளர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் சவுதி அரேபியாவின் மன்னரான இபின் சவுத் (Ibn Saud) அரபுத் தலைவர்களை அழைத்துப் பேசி இந்த வேலை நிறுத்தங்களை எல்லாம் நீர்த்துப்போகச் செய்தார். அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து அவருடைய அரண்மனைக்கு வந்துகொண்டிருந்த கொழுத்த லாபம் எங்கே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தருவதினால் நின்றுவிடுமோ என்ற அச்சத்தில் அவ்வாறு செயல்பட்டார்.

பாலஸ்தீனர்களுக்கு தங்கள் கண்முன் அரங்கேறும் துரோக நாடகங்கள் புரிந்தன. ஆனால் அவர்கள் அதைக்கூடக் கேட்க முடியாத அளவுக்குத் தனித்துவிடப்பட்டிருந்தனர்.

0

1947ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிட்டனிடமிருந்து அறிவிப்பு வந்தது. மே 15, 1948 அன்று நாங்கள் பாலஸ்தீனத்தில் இருந்து முழுதாக வெளியேறிவிடுவோம். இன்னும் 5 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் உங்களுக்கு வேண்டிய நிர்வாக அமைப்புகளை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். அதன்பின் பாலஸ்தீனம் சுதந்திர தேசமாகச் அறிவிக்கப்படும். இதுதானே நீங்கள் கேட்டது? பாலஸ்தீனத்தின் சுயாதீன உரிமையை உங்களுக்கே தந்துவிடுவோம் என்றது. ஆனால் இந்த வார்த்தைகளுக்குப் பின் எத்தகைய சூழ்ச்சி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை.

பாலஸ்தீனர்கள் பிரிவினைக்கு எதிராக ஜெருசலேமிலும் யோப்பாவிலும் பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஜெருசலேம் வீதிகளில் போராட்டங்களில் நடைபெற்றன. கலந்துகொண்ட மக்களில் சிலர் வன்முறையையும் கையில் எடுத்தனர். சியோனியர்கள் இந்தத் தருணத்துக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தனர்.

பாலஸ்தீனர்கள்மீது துரித தாக்குதல் நடத்தி அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள். பாலஸ்தீனத்தின் பிரிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தால்கூட அங்குள்ள யூதர்களைவிட அரேபியர்களே அதிகம் இருக்கின்றனர். இதனால் யுத்தத்தை நீண்ட நாட்களுக்கு நீட்டிப்பது அவர்களுக்குச் சாதகமாகச் சென்று முடிவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் உடனே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட வேண்டும். அவர்கள் எதிர்ப்பார்ப்பதற்கு முன்பே அடித்து ஒடுக்கிவிட வேண்டும் எனத் திட்டமிட்டனர். அவர்கள் கருதியதுபோலவே அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்தச் சண்டை நாடு முழுவதும் நடைபெறும் போராக உருவெடுத்தது.

பாலஸ்தீனர்கள் யூதர்கள்மீது தாக்குதல் நடத்துவதைத் தொடர்ந்து தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குவதாக பென் குரியன் அறிவித்தார். இவ்வாறாகப் போர் தொடங்கியது.

0

போரின் ஆரம்பக் கட்டத்தில் சில சிறிய கொரில்லா குழுக்கள், உள்ளூர் மக்களை ஒருங்கிணைந்துச் சண்டையிட முனைந்தனர். ஆனால் இவர்கள் மொத்தமாகச் சேர்ந்து ஆயிரம் பேர் இருந்தாலே பெரிய எண்ணிக்கையாகத் தோன்றியது. இவர்களுக்கு உதவ அண்டைய அரபு நாட்டு மக்கள் நான்காயிரம் பேர் முன்வந்தனர். இவர்கள்தான் அரேபிய விடுதலைப் படை (Arab Liberation Army) என அழைக்கப்பட்டனர். இவர்கள்தான் சியோனிய ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடத் தொடங்கினர்.

இவர்களுக்குப் பொதுமக்களும் தங்களாலான அனைத்து உதவிகளையும் செய்தனர். பெண்கள் குழுக்களாக இணைந்து மலைகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றனர். போருக்கு உதவும் வகையில் பதுங்குக் குழிகள் அமைத்துக் கொடுத்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை அளிப்பதிலும் உதவி வந்தனர்.

ஆனால் சியோனியர்கள் ராணுவம் நன்றாகப் பயின்றுவிக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் நவீன ஆயுதங்களும் இருந்தன. அவ்வளவு சிறப்பாக வழிநடத்தப்பட்ட சியோனியப் படையை அரேபிய விடுதலைப் படையால் எதிர்க்க முடியவில்லை. போரின் தொடக்கத்திலேயே பாதிப்பு பாலஸ்தீனர்கள் பக்கம் அதிகமாக இருந்தது. பிப்ரவரி வாக்கில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்தும் 25,000 எண்ணிக்கை கொண்ட பாலஸ்தீனர்கள் 50,000 பயிற்சி பெற்ற சியோனிய வீரர்களை எதிர்க்க வேண்டியதாக இருந்தது.

பிப்ரவரி மாதம் முழுவதும் சியோனிய ராணுவப் பிரிவுகளான ஹகனா, இர்குன் வீரர்கள் அரபு கிராமங்கள் முழுவதும் ரோந்து சென்றனர். இதன் நோக்கம் பாலஸ்தீன அரேபியர்களை எச்சரிப்பதற்காக என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த வீரர்கள் எந்தச் சண்டையிலும் பங்குகொள்ளாத அமைதியான, தனித்துவிடப்பட்ட கிராமங்களில் கொடூரத் தாக்குதல்களை நிகழ்த்தினர்.

ஹகனா வீரர்கள் இரவுகளில் கிராமங்களுக்குள் நுழைந்து கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் வெடிகுண்டுகளைப் புதைத்தனர். அந்த வீடுகளின் மரக் கதவுகளிலும், ஜன்னல்களிலும் எரிபொருள்களை ஊற்றினர். பின் பாதுக்காப்பான தூரத்திற்குச் சென்று துப்பாக்கிகளை வைத்து சராமரியாகச் சுட்டனர். இதில் பற்றிக்கொண்ட எரிபொருள் கடகடவென கொழுந்துவிட்டு எரிய, இதனால் எரியூட்டப்பட்ட வெடிகுண்டுகள் சராமாரியாக வெடித்துக் கிராமங்களைத் தரைமட்டமாக்கின. வெளியே என்ன நடப்பது என்று தெரியாமல் வீடுகளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே மக்கள் கொத்துக்கொத்தாக உயிர் இழந்தனர்.

சியோனிய ராணுவத்தின் இந்த அட்டூழியம் தெரியவந்த மற்ற கிராம மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளைவிட்டு வெளியேறினர். ஆனால் அவர்களால் தப்பித்துத் தொலைதூரத்துக்குச் செல்ல முடியவில்லை. அவர்கள் சென்ற பகுதிகளில் பதுங்கியிருந்த மற்றொரு படை வருபவர்களை விரட்டியடித்தது.

சியோனியர்களின் நோக்கம் அவர்களை நிலத்தைவிட்டு விரட்டுவதாக இருந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்த்து சண்டையிட்ட பாலஸ்தீன அரேபியர்கள் பொசுங்கி மண்ணோடு மண்ணாகினர்.

மார்ச் மாதம் தொடங்கியவுடன் சியோனியத் தலைவர் பென்குரியன் டேலெட் திட்டத்தை அறிவித்தார். இதன்படி பாலஸ்தீனம் முழுவதும் எல்லா முனைகளில் இருந்தும் தாக்குதல் முடுக்கிவிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் உத்தியே பல்வேறு நிலைகளில் திட்டமிட்டு அரபு மக்களை வெளியேற்றுவதுதான்.

முதலில் பாலஸ்தீன மக்களை அச்சுறுத்தும் உளவியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மார்ச் 28ஆம் தேதி சியோனிய இலவச ரேடியோ ஒன்று அரபு மொழியில் பாலஸ்தீன கிராமங்களில் காலரா, டைபஸ் நோய்கள் பரவுவதாக அறிவித்து பீதியூட்டியது. இதனால் மக்கள் நெருக்கமான நகரங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்தது. மக்களுக்கு இத்தகைய செய்திகள் நிஜமா, பொய்யா என்றுகூடத் தெரியவில்லை. ஒருபக்கம் சியோனியர்கள் தாக்குவார்கள் என்ற அச்சம், மறுபக்கத்தில் நோய் வதந்தி. அவர்கள் அச்சத்திலேயே உறைந்து நம்பிக்கை இழந்துகொண்டிருந்தனர்.

இந்த உளவியல் தாக்குதலின் உச்சக்கட்ட கொடூரம் டெயிர் யாசின் (Deir Yassin) கிராமத்தில் அரங்கேறியது. டெயிர் யாசின் ஜெருசலேமிற்கு அருகேயுள்ள ஓர் அமைதியான கிராமம். இந்தக் கிராமத்தின் மக்கள் போரின் தொடக்கத்திலேயே யூத அமைப்புகளுக்கு ஒத்துழைப்பதாகக் கூறி அமைதியாக வெளியேறிக்கொண்டிருந்தனர். ஆனால் ஏப்ரல் 9ஆம் தேதி கிராமத்துக்குள் நுழைந்த இர்குன் வீரர்கள் கிராமத்துக்குள் வெறும் 15 நிமிடத்தில் எல்லோரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு மக்கள் அனைவரையும் சென்றடைவதற்கு முன்பே தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் யூதர்களின் இர்குன் படை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒருவர் விடாமல் இரக்கமே இல்லாமல் 254 பேரைக் கொலை செய்தது.

டெயிர் யாசின் படுகொலையில் தப்பித்த ஒருசிலரையும் இர்குன் வீரர்கள் விடவில்லை. குத்துயிரும் கொலை உயிருமாக அடிபட்டுக் கிடந்த கிராமத்தினரை இர்குன் படையினர் ஜெருசலேமிற்குள் ஊர்வலமாக வீதிகளில் அழைத்துச் சென்றனர். அங்கே கூடியிருந்த யூதர்கள் அவர்கள் மேல் எச்சிலை உமிழ்ந்து அவமதித்தனர்.

இந்தச் செய்தி மற்ற பாலஸ்தீனர்களுக்குத் தெரியவர அவர்கள் யூத அலுவலகங்கள் முன்பு போராட்டத்தை அறிவித்தனர். இதனையடுத்து அங்கே செயல்பட்டு வந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அதன் உறுப்பினர் ஜாக் டி ரெய்னியர் என்பவரை டெயிர் யாசினுக்கு அனுப்பி நிலைமை என்னவென்று விசாரிக்கச் சொன்னது.

அவர் முதலில் சியோனியர்களைத்தான் சந்தித்தார். அவர்கள் கிராமங்களைத் ‘தூய்மைப்படுத்தும்’பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினர். மேலும் அவரைக் கிராமத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இருந்தும் அவர் விடாப்பிடியாக உள்ளே சென்று நடந்ததைப் பார்த்து மனதளவில் உலுக்கப்பட்டு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கைதான் டெயிர் யாசின் கிராமத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை உலகுக்குத் தெரியப்படுத்தியது. அந்த அறிக்கையில் இவ்வாறு கூறி இருந்தார்.

‘நான் அங்கு கொடூரமாகக் கொல்லப்பட்ட சில உடல்களைக் கண்டேன். அவர்கள் கூறிய சுத்திகரிப்புப் பணி எந்திரத் துப்பாக்கிகளாலும், கையெறி குண்டுகளாலும் செய்யப்பட்டுள்ளது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அந்த இர்குன் கும்பலுக்கு என்மீது நேரடியாகத் தாக்குதல் நடத்த தைரியமில்லாததால் நான் மேலும் முன்னேறிச் சென்றேன். அங்குள்ள வீடுகளில் சிதறிக் கிடக்கும் உடல்களைப் பொறுக்கியெடுத்து ஒரு லாரியில் ஏற்றுவதற்கு உத்தரவு கொடுத்துவிட்டு அடுத்தடுத்த வீடுகளுக்குச் சென்றேன். எங்கு பார்த்தாலும் அதே பயங்கர காட்சிகள்தான் காணக் கிடைத்தன. அத்தனை உடல்களுக்கு மத்தியில் இரண்டே இரண்டு பேர்தான் உயிர்பிழைத்து இருந்தனர்.’

இந்த டெயிர் யாசின் படுகொலை வெளியே தெரியவந்ததும். சியோனியர்களுக்கு எதிரான குரல்கள் பதிவாகத் தொடங்கின. உடனே யூத அலுவலகமும் இர்குன் வீரர்களைக் கண்டித்து வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதே நாளில் ஹகனா வீரர்களோடு இர்குன் படையை இணைத்து வேறு சில அதிகாரங்களையும் வழங்கியது.

இன்னொரு வகையில் இர்குன் வீரர்கள் மீதான குற்றச்சாட்டே பாலஸ்தீனர்களை அச்சுறுத்த சியோனியர்களுக்கு உதவியது. இது அவர்கள் எதைச் செய்ய விரும்பினார்களோ அந்த வேலையைச் சுலபமாக்கியது. இர்குன் படையினர் மீதான அச்சம் பாலஸ்தீனம் முழுவதும் பரவியது. அந்தப் படை ஒவ்வொரு கிராமமாக வந்து ஈவுஇரக்கமில்லாமல் படுகொலையை நிகழ்த்துவார்கள் என்று சியோனியர்கள் திட்டமிட்டுப் பிரசாரம் அடித்தனர். இதைக் கேட்டு பீதியுற்ற பாலஸ்தீனர்கள் தாங்களும் அதே நிலையைச் சந்திக்க நேரிடுமோ என அஞ்சி குடும்பம் குடும்பமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.

டெயிர் யாசின் கிராமத்தின்மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹைஃபாவில் ஒரு படுகொலையை நடத்துவதற்கு இர்குன்–ஹகனா வீரர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அங்கே செல்வதற்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்பே படுகொலை பற்றிய செய்தி மூலை முடுக்கெல்லாம் பரவி மக்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறி இருந்தனர்.

ஏப்ரல் 21, 1948 அன்று ஹைஃபா நகரத்தின் பிரிட்டன் தளபதி தனது படைகளை திரும்பி பெறுவதாக சியோனியர்களிடம் அறிவித்தார். ஆனால் இந்தத் தகவல் பாலஸ்தீனத் தலைவர்களுக்குச் சொல்லப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கும் இந்த விஷயம் தெரியவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சியோனியர்கள் பொழுதுசாய்ந்தவுடன் எரிகுண்டுகளை வீசும் பீரங்கி போன்ற ஆயுதத்தைக் கொண்டு ஹைஃபா அரேபியர்கள் மீதுத் தாக்குதல் நடத்தினர். சுமார் 60 பவுண்ட் எடையுள்ள எரிகுண்டுகள் 300 மீட்டர் அமைந்திருந்த அரேபியர்களின் குடியிருப்புகள்மீது வீசப்பட்டன. இது தவிர எரிபொருட்களும் வெடிகுண்டுகளும் பீப்பாய்களில் வைக்கப்பட்டு அந்நகரத்தின் குறுகிய தெருக்களில் வீசப்பட்டது. இதில் தெருக்கள் எங்கும் நெருப்பு ஜுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்து காற்றில் பரவி மக்களைச் எரித்துக் கரியாக்கின. இந்தச் சமயத்தில் மக்களை மேலும் அச்சுறுத்த மற்றொரு செயலும் மேற்கொள்ளப்பட்டது.

யூத வீரர்கள் பாலஸ்தீன மக்கள் அலறிக்கொண்டு ஓடும் நிகழ்வுகளைப் பதிவு செய்து மற்ற நகரங்கள், கிராமங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பத் தொடங்கினர். அதில் அரபு பெண்களின் வேதனை கலந்த மரண ஓலங்களும் மனதை நடுங்க வைக்கும் அழுகைச் சத்தங்களும் காற்றில் பரவின.

அரேபியர்கள் துயரக் குரலெடுத்து ‘ஓடுங்கள், ஓடுங்கள். யூதர்கள் விஷ வாயுக்களையும் அணு ஆயுதங்களையும் நம் மீது வீசப்போகிறார்கள்’ என்று உயிரை உறைய வைக்கும் குரல்களும் வெளிப்பட்டன. இதைக் கேட்டே பல பாலஸ்தீனர்கள் வீடுகளைவிட்டு உயிரைப் பிடித்துக்கொண்டு தப்பியோடினர். இதைக் கண்ட இர்குன் வீரர்கள் வீதிகளில் களியாட்டம் ஆடினர். அவர்களது தளபதி உரத்தக் குரல் எடுத்து ‘டெயிர் யாசின்! டெயிர் யாசின்!’ எனக் கத்தினார். இந்த உளவியல் சித்திரவதையால் ஒரே வாரத்தில் துறைமுக நகரமான யோப்பா ஆள்அரவமே இல்லாமல் காலியானது.

இத்தனைக்கும் யோப்பா நகரம் பிரிவினை தீர்மானத்தின்படி அரேபிய நாட்டுக்குச் சொந்தமானது. அங்கிருந்த 80,000 அரேபியர்களும் உயிருக்குப் பயந்து வெளியேறி இருந்தனர். இதன்பின் அந்த நகரத்தில் சியோனியர்கள் செய்த அட்டூழியங்களை வரலாற்று ஆசிரியர் ஜான் கிம்சி (Jon Kimche) இவ்வாறு பதிவு செய்கிறார். ‘மக்கள் வெளியேறிய பகுதிகளில் கிடைக்கும் அத்தனைப் பொருட்களையும் சியோனிய வீரர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினர். எதையெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அத்தனையும் யோப்பாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. கொண்டு செல்லப்படாதவை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டது.’

விவசாய நிலங்கள் அமைந்திருந்த கலிலியில் இருந்து கோட்டை கொத்தளங்கள் அமைந்திருந்த ஏக்கர் வரை சியோனியர்கள் மேற்கூறிய அதே போர் முறையைத்தான் கையாண்டனர். பாலஸ்தீனத்தில் இருந்த வீடுகள், கிராமங்கள், நிலங்கள் என்ன ஒவ்வொன்றும் இவ்வாறு சூறையாடப்பட்டன.

1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாலஸ்தீனத்தில் நடந்த 13 தாக்குதல்களில் 8 தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபை அரேபியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலங்களில் நிகழ்த்தப்பட்டன.

மே 15ஆம் தேதி பிரிட்டன் அரசு பாலஸ்தீனத்தின்மீதான தனது நீண்ட கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, முழுவதுமாக அங்கிருந்து வெளியேறியது. அதே தேதியில் சுமார் 3 லட்சம் பாலஸ்தீனர்கள் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறி இருந்தனர். இந்த அகதிகள் ஜோர்டன் பள்ளத்தாக்கு, லெபனான், சிரியா எல்லைகளில் தங்க வைக்கப்பட்டனர். இத்தனைப் பெரிய அநீதிக்கு எதிராக அமெரிக்காவோ, அதை அத்தனை நாட்கள் ஆட்சி செய்து வந்த பிரிட்டனோ ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை.

0

ஏப்ரல் 24ஆம் தேதி பென்குரியன் சியோனியர் சங்கத்தைக் கூட்டினார். எல்லாம் நல்லபடியாக முடிந்த நிம்மதி அவருடைய முகத்தில் நிழலாடியது. இந்தக் கூட்டம் வெற்றிக் களிப்பின் ஒருபகுதி என்று அங்கு வந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது. ‘யூத தேசத்தை அமைப்பதற்காக இந்த மாலையில் நாம் கூடி இருக்கிறோம்..’ பேசும்போதே அவருக்குள் உணர்ச்சிக் கொப்பளித்தது. இருந்தும் பாலஸ்தீனர்களை முழுவதுமாக வெளியேற்றுவதற்கு முன்பே நாம் கொண்டாடக்கூடாது என்பதால் அவர் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டார்.

அவரது மனதில் என்றைக்கு யூதர்களின் புதிய தேசம் பிறக்க வேண்டும் என்ற கணக்கு இருந்தது. மே 15, 1948 அன்று பாலஸ்தீனத்தில் பிரிட்டனின் ஆட்சி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது. அதே நாளில் சியோனியர்களின் ஆட்சி உதயமாகிறது. இதுதான் அவர் விரும்பியது.

இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்துக்கு முக்கியக் காரணம் ஒன்று இருந்தது. பாலஸ்தீனப் பிரிவினை தீர்மானம் ஏற்கெனவே ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறி இருந்தாலும், அது சரியா என்பதுபோன்ற விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய தேசத்தின் இருப்பை உலகத்தின் முன் தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு உருவாகி இருந்தது. அதுகுறித்து ஆலோசிக்கவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சியோனியர்களின் மூத்த தலைவர் சைம் வெயிஸ்மேனால் அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவர் தனது ஆலோசனையை தந்தியில் அனுப்பி இருந்தார். ‘உடனே தேசத்தை அறிவியுங்கள், என்ன நடந்தாலும் பரவாயில்லை.’

சியோனியத் தலைவர்கள் அதற்கான வேலைகளில் இறங்கினர். முதலில் புதிதாகப் பிறக்கப்போகும் தேசத்துக்கு அமெரிக்காவின் அங்கீகாரம் வேண்டும். அது கிடைத்துவிட்டால் மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதற்காக அவர்கள் அமெரிக்க அதிபர் ட்ரூமேனைச் சந்தித்து அதற்கான நடைமுறைகளைச் செய்யத் தொடங்கினர். என்றைக்கு அறிவிக்கப்போகிறோம், புதிய தேசத்துக்கு என்ன பெயரிட்டுள்ளோம் எல்லா விவரங்களுகும் அமெரிக்காவுக்குச் சொல்லப்பட்டது.

இறுதியாக அந்த நாள் வந்தது. மே 15, 1948 மாலை ஆறு மணிக்கு டேவிட் பென் குரியன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். ‘இந்தச் சுதந்திர தினப் பிரகடனம் சில கொள்கைகளை வகுத்துள்ளது. இஸ்ரேல் எனும் தேசம் புதிதாகப் பிறக்கிறது. இந்த நாடு நம் நிலத்தில் நன்மையை அறுவடை செய்வதற்காக தன்னை அர்ப்பணிக்கும். அது சுதந்திரம், நீதி மற்றும் அமைதியை அடித்தளமாகக் கொண்டிருக்கும்.

‘சமயம், இனம் மற்றும் பாலின வேறுபாடு இல்லாமல் அதன் அனைத்து குடிமக்களுக்கும் முழுமையான சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைகளை வழங்கும். அதிகமான புலம்பெயர்ந்தோரை வழைத்து, வேலைகள் வழங்கி, அவர்களுக்கு கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும். இந்த வரலாற்று நிகழ்வில் எங்களுடன் இணைய வெளிநாடுகளில் உள்ள எங்கள் நண்பர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

இஸ்ரேல் அறிவிக்கப்பட்ட அடுத்த 11வது நிமிடத்தில் அதனை அமெரிக்கா அங்கீகரிப்பதாக அறிவிப்பு வெளியானது. இத்தகைய நிகழ்வு அரங்கேறிக் கொண்டிருப்பதைத் தெரிவிக்க தூதுவர்கள் ஐநா சபைக்கு விரைந்தனர். அந்தத் தூதுவர்களின் மூலமாகத்தான் இஸ்ரேல் பிறந்த செய்தி ஐநாவின் அமெரிக்கப் பிரதிநிதிக்கே தெரியும்.

இஸ்ரேல் பிறந்தது என்ற செய்தியைக் கேட்டவுடனேயே அரபுப் பிரதிநிதிகள் ஐநா சபையில் இருந்து வெளியேறி கண்டனத்தைத் தெரிவித்தனர். அமெரிக்காவின் சதித்திட்டங்களுக்கு ஐநா துணைபோவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சோவியத் ஒன்றியமும் அடுத்த சில தினங்களில் இஸ்ரேலின் பிறப்புக்குத் தன் அங்கீகாரத்தை வழங்கியது.

0

அரேபிய மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். டெயிர் யாசின் சம்பவங்களும் அதன் குருதியில் இருந்து உருவான இஸ்ரேல் என்ற தேசமும் அவர்களிடையே கொந்தளிப்பையும் ஆற்றாமையையும் உருவாக்கி இருந்தது.

பாலஸ்தீனத்தில் இயங்கி வந்த சின்னஞ் சிறிய அமைப்புகள் எல்லாம் ஒன்றுகூடி அரபு தேசங்கள் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தத் திட்டமிட்டன. மக்கள் பாலஸ்தீனம் பக்கத்தில் நிற்க இஸ்ரேலின் பிறப்புக்கு எதிர்வினையாற்ற வேண்டிய நெருக்கடி அரபுத் தலைவர்களுக்கும் ஏற்பட்டது.

அரேபியக் கூட்டமைப்பு உடனடியாகத் தமது உறுப்பு நாடுகளை எல்லாம் அழைத்துப் பாலஸ்தீனத்துக்குப் படைகளை அனுப்பும்படிக் கேட்டுக்கொண்டது. அந்த உத்தரவில் பிரிவினைத் தீர்மானத்தின்படி அரேபியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளை மட்டும் பாதுகாக்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே அரபு ராணுவமும் கிளம்பி பாலஸ்தீனத்துக்குள் நுழைந்தது.

ஆனால் இந்த ராணுவத்திடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அதன் வீரர்களை வழிநடத்த தளபதிகளோ உரிய கட்டளையைப் பிறப்பிக்கும் மையப்படுத்தப்பட்ட தலைமையோ இல்லை. யாரிடம் உத்தரவு வாங்குவது, யார் பேச்சைக் கேட்பது என்று எதுவும் தெரியாமல் வெறும் சொர்ப்ப எண்ணிக்கையிலான வீரர்கள் ஒருசில துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டையிட கிளம்பி இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

டிரான்ஸ் ஜோர்டனின் மன்னர் அப்துல்லாதான் அவருடைய நாட்டுப் படைகளுக்கு தலைமைத் தளபதியாக இருந்தார். ஆனால் அவரோ படைவீரர்களுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் பாலஸ்தீனத்தின் துண்டு நிலத்திற்காக பிரிட்டனிடமும் சியோனியத் தலைவர்களிடமும் பேரம் பேசிக்கொண்டிருந்தார். இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்படாத பாலஸ்தீனப் பகுதிகளைத் தனது ராஜ்ஜியத்திற்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவருடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. இதற்காக அவருடைய அரபுப் படையணியை (Arab Legion) யூதர்களுக்கு எதிரான யுத்தத்துக்கு அனுப்ப மாட்டேன் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். சொல்லப்போனால் அரபு ராணுவங்களிலேயே அந்தப் படையணி மட்டுமே உண்மையில் போரிடும் வல்லமைப் படைத்த ஒரே படையாக இருந்தது. அதையும் யூதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் தடுத்து நிறுத்தியிருந்தார்.

அப்துல்லாவின் சுயநலமிக்க தலைமையால் அரபுக் கூட்டமைப்பின் ராணுவம் எந்த ஒரு முன்னேற்றத்தையும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் அடையாமல் தவித்துக்கொண்டிருந்தது. அதன் வீர்ர்கள் இஸ்ரேலியத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தனர். இதில் யூதர்களுக்கு எதிராகத் தீவிரப் போர் புரிந்தது எகிப்தின் இளைஞர் ராணுவம் மட்டும்தான். ஆனால் அவர்களுக்கும் தங்களுடைய தளபதிகளிடம் இருந்து எந்த ஒரு ஆதரவும் கிடைக்காததால் இஸ்ரேலிய வீரர்களுக்கு எதிராக அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இப்படியாகச் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெற்ற சிறிய போரைத்தான் மேற்கத்திய வரலாற்றாய்வாளர்கள் ஊதிப் பெரிதாக்கி 1948ஆம் ஆண்டு இஸ்ரேலிய-அரபுப் போர் என்று வர்ணிக்கின்றனர். மேலும் அப்போது புதிதாய் பிறந்திருந்த இஸ்ரேல் என்கிற குட்டி தேசம் ஐந்து அரபு நாடுகளில் பெரும் படைகளை துவம்சம் செய்ததாகவும் தம்பட்டம் அடித்து இஸ்ரேலைக் கதாநாயகராக்க முயற்சிக்கின்றனர். உண்மை என்னவென்றால் எந்த அரபு தேசமும் முழுத் தீரத்துடன் பாலஸ்தீனத்துக்கு உதவ வரவில்லை என்பதுதான்.

இஸ்ரேல் என்ற தேசம் அதிகாரப்பூர்வமாக உருவானவுடன்தான் பாலஸ்தீனம் மீதான அவர்களுடைய தாக்குதலும் ஆக்கிரமிப்பும் மேலும் தீவிரமடைந்தது. ஜூலை 11, 1948 அன்று பாலஸ்தீனத்தின் லைடா (Lydda) நகரத்துக்குள் மோஷே தயான் தலைமையிலான கமாண்டோ பிரிவினர் ரைபில்கள், ஸ்டென் துப்பாக்கிகள், எந்திரத் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ராணுவ வாகனங்களில் சென்றனர்.

அவர்கள் கண்ணில் பட்ட அனைரையும் சுட்டுப் பொசுக்கினர். லைடாவில் ஊரடங்கு அறிவித்துவிட்டு எது நகர்ந்தாலும் சுடச்சொல்லி உத்தரவு பறந்தது. ஒருசில நிமிடங்களில் அந்நகரமே மயான அமைதியில் உரைந்தது. சாலைகளில் பாலஸ்தீனர்களின் பிணங்கள் சிதறிக் கிடந்தன. அடுத்த நாள் இஸ்ரேலியர்கள் அதற்கு அருகில் இருந்த சிறுநகரமான ராம்லாவைக் கைப்பற்றினர்.

இஸ்ரேலியப் படை ஒலிபெருக்கிகளை வைத்துக்கொண்டு பாலஸ்தீனர்கள் 48 மணி நேரங்களில் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்தபடி ரோந்து சென்றது. இதனைக் கேட்டு வெளியேறிய மக்கள் மீதும் கோரத்தாக்குதல் நடத்தப்பட்டது. சில மணி நிமிடங்களில் ஒரு சிறு ஊரே தரைமட்டமானது.

துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் உணவு, நீர் எதுவும் இல்லாமல் வெயிலில் காய்ந்தபடி டிரான்ஸ்ஜோர்டன் மலைப்பிரதேசங்களை நோக்கி நடந்தனர். பசி தாகத்தாலேயே முதியவர்களும் குழந்தைகளும் உயிர் இழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன.

இத்தனை அத்துமீறல்களுக்குப் பிறகுதான் உலக நாடுகள் பாலஸ்தீனம் பக்கம் கவனத்தைத் திருப்பின. ஐநாவின் பிரிவினைத் திட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அமெரிக்காவுடன் இணைந்துகொண்டு ஐநாவும் கண்ணைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கின.

இதன்பின்தான் ஐநா தலையிட முடிவு செய்தது. இந்த நிலைமைத் தொடர்ந்தால் தங்களுக்குடைய பெயர் நாறத் தொடங்கிவிடும் என்று அதற்குப் தெரிந்தது. உடனே ஃபோல்க் பெர்னாடோட் (Folke Bernadotte) என்பவரை அனுப்பி பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டது. மேலும் அரேபியர்களின் இழந்த உரிமையையும் மீட்டளிக்கும்படி அவரிடம் அறிவுறுத்தியது.

பெர்னாடோட் பாலஸ்தீனத்தில் நுழைந்து பல்வேறு போர் நிறுத்த நடவடிக்கைகளை முயற்சி செய்தார். ஆனால் அத்தனை உத்தரவுகளையும் கொஞ்சம்கூட மதிக்காமல் அரபுப் பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருந்தது இஸ்ரேல். பெர்னாடோட் இஸ்ரேலியர்கள் உடனே பாலஸ்தீனர்களை அவர்களது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மோஷே ஷெர்டோக், ‘பாலஸ்தீனர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது பொருளாதார ரீதியில் சாத்தியமே இல்லாதது’ எனப் பதிலளித்தார்.

நிஜம் என்னவென்றால், புதிதாகப் பிறந்த இஸ்ரேல் தேசம் விரட்டப்பட்ட பாலஸ்தீனர்களின் வீடுகளையும் நிலங்களையும் கடைகளையுமே நம்பி இருந்தது. அரேபியர்கள் ஊரில் இருந்து கிளம்பியவுடனேயே யூதக்குடியேறிகள் புகுந்து அரபு வீடுகளை ஆக்கிரமித்தனர். அவர்களது கடைகளைச் சீரமைத்து தங்கள் வியாபாரங்களைத் தொடங்கினர்.

வெளியேறிய பாலஸ்தீனர்கள் 80 சதவிகித நிலங்களையும், 50 சதவிகித சிட்ரஸ் பழத் தோப்புகளையும், 90 சதவிகித ஆலிவ் தோப்புகளையும், 10,000 கடைகளைவும் விட்டுச் சென்றதாக அப்போதைய கணக்கெடுப்புகள் சுட்டிக்காட்டுக்கின்றன. இந்த வளங்கள்தான் புதிய இஸ்ரேலை உருவாக்குவதற்கு யூதர்களுக்குத் தேவையானதாக இருந்தது. இதனால் அவர்கள் ஐநாவின் போர் நிறுத்தத்தைக் கேட்கவே விரும்பவில்லை.

ஆனால் பெர்னடோட்டும் விடவில்லை. அவர் தொடர்ந்து பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் கிராமங்கள் கிராமங்களாகப் பயணித்து விரட்டப்பட்ட பாலஸ்தீனர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று உறுதியுடன் போராடினார். பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டார்.

அவர் உருவாக்கிய அறிக்கைகள் பாலஸ்தீனர்கள் வலுகட்டாயமாக விரட்டப்பட்டதையும், அமைதி திரும்பியவுடன் தாங்கள் நிலத்திற்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததையும் சுட்டிக்காட்டின. உலகம் கவனிக்கத் தொடங்கியது. பெர்ன்டோட்டின் குரல் ஓங்கி ஒலித்தது.

இஸ்ரேலிய ராணுவம் பார்த்தது. தனது பிரிவான ஸ்டென் குழுவை அனுப்பி செப்டம்பர் 17ஆம் தேதி பெர்னடோட்டைப் படுகொலை செய்தது. அவ்வளவுதான், உலகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பெர்னடோட்டின் கொலை ஐக்கிய நாடுகள் சபையின் மெத்தனத்தை வெளிச்சம்போட்டு உலகுக்குக் காட்டியது. உலகம் முழுவதும் இந்த மரணச் செய்தியே செய்திதாள்களை ஆக்கிரமித்து இருந்தன. இப்போது இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகளிடம் இருந்தே அழுத்தம் ஏற்படத் தொடங்கியது. அவர்கள் உடனே போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டனர்.

ஒருவழியாக ஜனவரி 7, 1949 அன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது புதிதாகப் பிறந்த இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் 80% நிலங்களை ஆக்கிரமித்து இருந்தது. இந்தப் போரில் இஸ்ரேல் அடைந்த ஒரே வெற்றி பாலஸ்தீன அரபு மக்களை அவர்கள் நிலங்களில் இருந்து விரட்டியடித்ததுதான்.

மேற்கத்திய உலகம் புதிய தேசம் பிறந்ததை இப்போதுதான் கொண்டாடியது. அமெரிக்காவில் அதன் அதிபர், செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் என அனைவரும் கரோஷம் எழுப்பி இஸ்ரேலின் சாதனையைப் போற்றிப் புகழ்ந்தனர். பல புத்தகங்கள், கட்டுரைகள் இஸ்ரேலின் போர் வெறியை அரேபிய தேசங்களுக்கு எதிரான சிறிய தேசத்தின் பெரும் வெற்றியாகப் சித்தரித்தன. அந்தப் பிரசுரங்களில் அரேபியர்கள் அடர் நிறம் கொண்டவர்களாகவும் பிந்தங்கியவர்களாகவும் இருந்தனர் என்றால் அவர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வெற்றிபெற்ற இஸ்ரேலியர்கள் புத்திசாலித்தனமும் துணிச்சலும் கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.

இஸ்ரேலின் இந்தச் சாதனை ஒரு தேசத்தின் பூர்வக்குடிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் அவர்களுடைய நிலங்களை அபகரித்த நடவடிக்கையாகவும் யாருக்குமே தெரியவில்லை. மாறாக இஸ்ரேலின் கதை துணிச்சலும் உத்வேகமூம் அளிக்கும் சாகசமாகவே அவர்களுக்குத் தெரிந்தது. அரேபியர்கள் உண்மை நிலை குறித்த தகவல்கள் மேற்கத்தியப் பிரசாரப் பேரலையின் வீச்சில் புதைந்துபோனது.

இஸ்ரேல் எனும் தேசம் உருவானதற்குப் பிண்ணனியில் 7.50 லட்சம் பாலஸ்தீனர்கள் அவர்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டிருந்தனர். போரின் முடிவில் மன்னர் அப்துல்லா அவர் விரும்பியபடியே பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை டிரான்ஸ்ஜோர்டனுடன் இணைத்துக்கொண்டார். மேலும் இப்போது மேலும் விரிவடைந்திருந்த அவரது ராஜ்ஜியத்திற்கு ஜோர்டன் எனவும் பெயர் மாற்றினார். எகிப்திய மன்னர் ஃபரூக் காசா துண்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றினார். இப்படியாக பாலஸ்தீனம் என்கிற பண்டைய நிலம் உலக வரைபடத்தில் இருந்து மறைந்துபோனது. அந்நிலத்தில் இருந்து துரத்தப்பட்ட ஏராளமான மக்கள் வேறு நாடுகளை அடைந்தபோது அகதிகள் எனும் அடையாளத்தைப் பெற்றிருந்தனர்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *