Skip to content
Home » பாலஸ்தீனம் #15 – அமெரிக்க அடியாள்

பாலஸ்தீனம் #15 – அமெரிக்க அடியாள்

palestine

பாலஸ்தீனர்களுக்கு அந்தக் குளிர்காலம் கடுமையானதாக இருந்தது. ஏழரை லட்சம் பேர் பொடிநடையாக உறைவிடம் தேடி சென்றுகொண்டிருந்தபோது நடுங்கும் குளிரில் அதற்கு மேலும் நடக்க தெம்பு இல்லாதவர்கள் குகைகளில் பதுங்கிக்கொண்டனர். சிலர் கிழிந்த தார்பாய்களில் குடில்கள் அமைத்து இரவைக் கழித்தனர். அப்போது பெய்த மழை அத்தனை பேரையும் இரக்கம் இல்லாமல் நனைத்துச் சென்றது.

ஐநா அகதிகளின் நிலை குறித்து விவாதம் செய்துகொண்டிருந்தது. அமெரிக்கர்களோ இஸ்ரேலுக்கு நன்கொடை அளித்துக்கொண்டிருந்தனர். ஜோர்டனின் ராமல்லா பகுதியில் குளிர்காலத்தின் ஒவ்வோர் இரவிலும் பட்டினியாலும் வசிப்பிடம் இல்லாமலும் தினம் 40 பேர் உயிரிழந்து கொண்டிருந்தனர்.

பாலஸ்தீனக் குழந்தைகளின் உடல் தீக்குச்சியைவிட மெலிந்திருந்ததாக நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று குறிப்பிட்டது. அவர்களது வயிறு தொடர் பட்டினியால் உப்பி இருந்ததாகவும், குடிப்பதற்குப் பால்கூட இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் இறந்து கொண்டிருந்ததாகவும் அந்தக் காட்சியை விவரித்தது.

இதில் கொடுமை என்னவென்றால் பசியால் வாடிய பாலஸ்தீனர்களின் சொந்த தோப்புகளும் வயல் வரப்புகளும் அவர்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து சில மைல் தூரத்தில்தான் இருந்தன. ஆனால் அவை இப்போது இஸ்ரேலுக்குச் சொந்தமாகிவிட்டன.

கைக்கு எட்டும் தூரத்தில் தங்கள் உடைமைகள் இருந்தும் உயிர் துறக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். அகதிகளின் இந்த நிலைமையைக் கண்டு மனம் வெதும்பிய பென் குரியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.‘பாவப்பட்ட அவர்கள் திரும்பி வராமல் இருப்பதற்கு முடிந்த அத்தனையையும் செய்வோம்.’

அமெரிக்க ஊடகங்கள் பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டதற்கும் இஸ்ரேலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல எழுதிக்கொண்டிருந்தன. மேலும் இந்த அகதிகள் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எளிமையான தீர்வு ஒன்றையும் முன்வைத்தன. ‘அதுதான் பக்கத்தில் அத்தனை அரபு நாடுகள் இருக்கின்றனவே? அவர்கள் அங்கே சென்று அடைக்கலம் தேடலாமே!’.

பாலஸ்தீனர்களைப் பொறுத்தவரை அது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வு. எங்கள் தேசத்தில், எங்கள் நிலங்களுடன் நாங்கள் ஆயிரம் கண்ணிகளால் பிணைக்கப்பட்டுள்ளோம். எங்கள் தேசம் பிடுங்கப்பட்டிருக்கிறது. எங்கள் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் வசித்த வீடுகளில் இன்று வேறு யாரோ குடியிருக்கிறார்கள். நாங்கள் உழுத நிலங்களில் நுழைவதற்குக்கூட எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் எங்கள் நிலம் இருக்கும்போது நாங்கள் ஏன் வேறு ஒரு தேசத்தில் குடியேற வேண்டும்?

ஆனால் அவர்கள் அண்டை நாடுகளுக்குச் செல்லும் நிலைதான் ஏற்பட்டது.

அரபு நாடுகள் அகதிகளை அனுமதிப்பதில் எந்தச் சுணக்கமும் காட்டவில்லை. ஜோர்டன் 4.60 லட்சம் அகதிகளை அனுமதித்தது. காசா துண்டில் 2 லட்சம் அகதிகள், லெபனானில் 1 லட்சம் அகதிகள், சிரியாவில் 85,000 அகதிகள் அனுமதிக்கப்பட்டனர். பிரச்னை என்னவென்றால் அந்த நாடுகளே அப்போது வறுமையில் திண்டாடி வந்ததால் பாலஸ்தீனர்கள் வாழ்க்கையும் நரகத்தில் குடியேறியதுபோல் இருந்தது.

அரபு நாடுகளை மேற்கத்திய நாடுகள்தான் மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வந்தன. ஏற்கெனவே அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. எகிப்து மேற்கத்திய நாடுகளுக்கு பருத்தியை ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் சொந்த தேச மக்களுக்கு உணவளிக்க முடியாமல் தவித்தது. லெபனான் தனது ஆண்டு பட்ஜெட்டில் 20 சதவிகிதத்தை பாலஸ்தீனர்களுக்கு ஒதுக்குவதாகச் சொன்னது. அரபு நாடுகளின் மதம் சார்ந்த அமைப்புகள், தனிநபர்கள் என எல்லோரும் தங்களால் ஆன உதவிகளைப் பாலஸ்தீனர்களுக்குச் செய்து வந்தனர். ஆனால் இத்தனை உதவிகள் இருந்தும் அது மூன்றில் ஒருபங்கு பாலஸ்தீனர்களுக்கே போதுமானதாக இல்லை. பலரும் ஒருவேளை உணவுக்குக்கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

1949ஆம் ஆண்டு இறுதியில்தான் ஐநா சபை ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது. ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் நிர்வாகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு அதன்மூலம் 60 அகதிகள் முகாம்களுக்குத் தேவையான உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

அகதிகள் என்பதற்குச் சில வரையறைகள் வகுக்கப்பட்டு அதற்குள் வருபவர்கள் எல்லோருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டையை வைத்திருந்தால் ஆண்டுக்கு 37 டாலர் பெற்றுக்கொள்ளலாம் என்றது ஐநா. இதுதான் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவி. ஆனால் அகதிகள் என்ற வரையறைக்குள் வராமலேயே பல பாலஸ்தீனர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

உதாரணமாக அகதிகள் எனும் தகுதியைப் பெறுவதற்கு ஒரு பாலஸ்தீனர் சொந்த நாட்டில் நிலம் வைத்திருக்கக்கூடாது என்றது ஐநா. அந்த நிலத்தைப் பிடுங்கிக்கொண்டுதானே இஸ்ரேல் விரட்டியது என்று யாரும் யோசிக்கவில்லை. இதுமட்டுமில்லாமல் நிறுவப்பட்ட அகதிகள் முகாம்களில் சுத்தம் இல்லை. சுகாதாரம் இல்லை. அகதிகள் எண்ணிக்கை நிரம்பி வழிந்த அளவுக்கு அவர்கள் அடைவதற்கு வசிப்பிடங்கள் இல்லை.

போர் முடிந்த முதல் சில மாதங்களுக்கு இரவுகளில் வானொலி ஒலித்தபடியே இருந்தது. அதில் வரும் செய்திகளில் போர்களில் உயிர்நீத்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்படும். இதை வைத்துத்தான் தங்கள் குடும்பத்தின் நிலை என்ன, உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்றே பாலஸ்தீன மக்கள் தெரிந்துகொண்டனர்.

பாலஸ்தீனக் குடும்பங்கள் எல்லாம் சிதைந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் ஒவ்வொரு தேசத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். பாலஸ்தீனப் பெண்கள் போரில் கலந்துகொண்ட தங்கள் கணவன்மார்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்று வருபவர் செல்பவர் எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

எல்லாவற்றுக்கும் வரிசை அமைக்கப்பட்டிருந்தது. உணவு வேண்டுமா வரிசையில் நிற்க வேண்டும். குடிநீர் வேண்டுமா வரிசையில் நிற்க வேண்டும். மருந்துகள் வேண்டுமா வரிசையில் நிற்க வேண்டும். இரவுகளில் பெய்யும் மழையில் தாற்காலிக் கூரை பெயர்த்துக்கொண்டு கீழே விழும். களிமண்ணால் கட்டப்பட்டிருந்த தாற்காலிக வசிப்படங்கள் கரைந்து சாலையில் சேறாக ஓடும். அதில்தான் வாழ்க்கை நடத்த வேண்டும். மிச்சக் காலத்தை ஓட்ட வேண்டும்.

பாலஸ்தீன அகதிகள் இரவுகளில் ஒன்றாகக் கூடி அமர்ந்து போரின் கதைகளைப் பேசினர். 1936ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் கதைகள்தான் பெரும்பாலும் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டன. குழந்தைகள் பாலஸ்தீனர்களின் வரலற்றையும் தங்கள் எதிர்ப்புணர்வையும் கவிதைகள் மூலமாகவும் நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாகவும்தான் தெரிந்துகொண்டனர். அவர்கள் விளையாட்டே இஸ்ரேலிய எல்லைகளுக்குள் நுழைந்து யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் தங்கள் பெற்றோர்கள் வாழ்ந்த வீடுகளை ஒருமுறை பார்த்துவிட்டு வருவதாகத்தான் இருந்தது. முடிந்தால் அங்கிருந்து ஒரு பொருளைத் எடுத்து வந்து பெற்றோர்களிடம் கொடுப்பது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரே ஒரு விஷயத்தைத்தான் மீண்டும் மீண்டும் சொல்லி வளர்த்தனர். நன்றாகப் படிக்க வேண்டும். இந்த முகாம்களில் இருந்து வெளியேற வேண்டும். கல்வியே இந்தச் சூழலில் இருந்து நம்மை மீட்டுச் செல்லும் ஒளி வெளிச்சம்.

அகதிகள் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த நடமாடும் வகுப்பறைகள் எப்போதும் நிரம்பி வழிந்தன. ஆசிரியர் ஒவ்வொருவரும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து குழந்தைகளுக்குப் போதித்தனர். வகுப்பறைகளில் இஸ்ரேலில் இருந்து வெளிவரும் அத்தனைச் செய்தித்தாள்களும் இருந்தன. அந்தச் செய்திகள் மூலமாகத்தான் தங்கள் நிலம் குறித்த தகவல்களை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்துவந்தனர்.

1948 நவம்பர் மாதம் பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் உரிமையை ஐநா சபை அங்கீகரித்தது. அவர்கள் அண்டை இஸ்ரேலுடன் அமைதியாக வாழ விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். வீடுகளுக்குத் திரும்பாத அகதிகளுக்கு இழப்பீடாகக் கொஞ்சம் பணம் வழங்கப்படும் என்றது.

பாலஸ்தீனர்கள் இழந்த சொத்துகளை எல்லாம் சேர்த்து வைத்துப் பார்த்தால் அன்றைய மதிப்பில் 12 பில்லியன் டாலர் வரும். ஆனால் அதில் கால்பங்கு இழப்பீட்டைக்கூட தருவதற்கு ஐநா முன்வரவில்லை என்பதுதான் நிஜம்.

பாலஸ்தீனர்களின் ஒரே கனவாக தாய்நிலத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் இருந்தது. அவர்கள் ஐநா தரும் நிவாரணங்களையோ இழப்பீடுகளையோ விரும்பவில்லை. இது குறித்து ஐநாவில் நடைபெற்ற ஒவ்வொரு விவாதத்திலும் வாக்கெடுப்பிலும் இஸ்ரேலின் நண்பனான அமெரிக்கா பாலஸ்தீனர்கள் மீண்டும் தங்கள் நிலங்களுக்குத் திரும்பாத வண்ணம் கவனமாகப் பார்த்துக்கொண்டது.

மே 5, 1951 அன்று ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த மேற்பார்வை அமைப்பின் தலைவர் பெனிக் என்பவர் எகிப்துக்கு அருகேயுள்ள எல்-ஆஜா எனும் பகுதிகளில் இருந்து 7000 அரேபியர்களை விரட்டிவிட்டு அந்தப் பகுதியை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக்கொண்டது என்று ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார். ஆனால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.

இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தங்களைத் தொடர்ந்து மீறுவதாக அறிக்கைகள் வந்துகொண்டிருந்தன. ஐநா கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. இந்தச் சமயத்தில்தான் பாலஸ்தீனர்கள் மீண்டும் தங்கள் தாய்நிலம் திரும்ப வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கினர்.

உடனே இஸ்ரேல் ஓர் உடன்பாட்டுக்கு வந்தது. காசா துண்டில் அகதிகளாக இருக்கும் பாலஸ்தீனர்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதற்குப் பதில் காசா துண்டை எங்களுக்கே தந்துவிட வேண்டும் என்றது. பாலஸ்தீனர்கள் மறுத்துவிட்டார்கள். எங்கள் நிலம் எங்கள் உரிமை. அங்கே திரும்புவதற்கு நிபந்தனைகள் இடும் நீ யார்? என்று கேட்டுவிட்டனர்.

1950ஆம் ஆண்டு 25,000 அகதிகள் ஐநாவிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். பாலஸ்தீனத்துக்கு வெளியில் வாழ்வதைவிட உணவருந்தாமல் உயிரை விடுவோம் என்று முழக்கமிட்டனர். உடனே ஐநா அவர்களுக்கு கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி பணிகளைத் தொடங்கியது. அதையும் பாலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் கேட்டது நல்ல வீடுகள் இல்லை. எங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் உரிமையை. அதைத் தராமல் ஐநா வேறு என்னனென்னவோ செய்துகொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டினர்.

இளம் பாலஸ்தீனர்கள் பெய்ரூட், டமாஸ்கஸ் போன்ற இடங்களில் அமெரிக்கத் தூதரகங்கள் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டங்களில் சியோனியர்களால் பாலஸ்தீன தேசத்தின் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் பேசப்பட்டன. பால்ஃபர் பிரகடனம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 2, இஸ்ரேல் உருவக்கப்பட்ட மே 15 ஆகிய தேதிகளில் பாலஸ்தீன மாணவர்கள் அரபு நாடுகளில் ஊர்வலமாக சென்று எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். ஆனால் இந்தப் போராட்டங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

பாலஸ்தீனர்கள் இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக மட்டும் குரல் கொடுக்கவில்லை. பாலஸ்தீன மக்களுக்குப் போரின்போது உதவ முன்வராத அரேபியத் தலைவர்களையும் கேள்வி கேட்டனர். குறிப்பாக ஜோர்டனில் அந்நாட்டு மன்னர் அப்துல்லாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. அவர் இஸ்ரேலியர்களுடன் தொடர்ந்து நட்புறவு பேணி வருவதை எதிர்த்து அரேபியர்கள் கலகம் செய்தனர். அதே ஆண்டு பாலஸ்தீனத் தையல்காரர் ஒருவரால் அப்துல்லா ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

புதிய மன்னராக பதவியேற்ற அப்துல்லாவின் பேரன் ஹுசைன் ஜோர்டன் காவல்துறையை இஸ்ரேல் ராணுவத்துடன் இணக்கமாகப் போகச் சொல்லி எல்லைகளில் பாலஸ்தீனர்கள் நுழையாமல் பார்த்துக்கொள்ளும்படி உத்தரவிட்டார். இதையடுத்து எல்லைகளில் பாலஸ்தீனர்கள் போராட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. உடனே இஸ்ரேல் முள்வேலிகளை எழுப்பி, தம் நாட்டு எல்லையை அடைத்தது.

மேலும் இருதரப்பு படைகளும் இணைந்து ஜோர்டனின் எல்லையில் இருந்த பாலஸ்தீன விவசாயிகளிடம் இருந்து அவர்கள் நிலங்களையும் கால்நடைகளையும் பிடுங்கிக்கொண்டு அவர்கள் வாழ்விடங்களைச் சேதப்படுத்தினர். 80 கிராமங்கள் முழுதாக அழிக்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு ஐநாவின் உதவி கிடைக்காதவாறும் செய்யப்பட்டன. சொந்த வருமானமும் இல்லாமல், ஐநாவின் உதவித்தொகையும் இல்லாமல் விவசாயிகள் நிராதரவாக நின்றனர்.

சில பாலஸ்தீனர்கள் தங்கள் உறவினர்களைத் தேடி இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அவர்களையும் இஸ்ரேலியத் தோட்டாக்கள் பதம் பார்த்தன. பலர் தப்பித்துச் செல்லும் வழியிலேயே கொல்லப்பட்டனர். இப்படியாகப் பாலஸ்தீனத்தைச் சுற்றி கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த்து. இதற்கு நேரெதிராகப் புதிய தேசமான இஸ்ரேலுக்குள் நிலைமை வேறுவிதமாக இருந்தது.

0

இஸ்ரேலிய அரசு போர் முடிந்தவுடன் திட்டமிட்டு பாலஸ்தீனத்தின் நினைவுகளை அழிக்கும் பணிகளைத் தொடங்கியது. அச்சகங்கள் பாலஸ்தீனத்தின் பழைய வரைபடங்களை எடுத்து அவற்றின் எல்லைகளை மாற்றி வரைந்து இஸ்ரேல் என்று புதிய பெயர் கொண்ட வரைபடங்களை உருவாக்கத் தொடங்கின.

எழுத்தாளர்கள் வேகமாக புத்தகங்களில் பாலஸ்தீனம் என்ற பெயரைத் திருத்தி இஸ்ரேல் என மாற்றி எழுதினர். பள்ளிகளில் இருந்த வரலாற்றுப் பாடநூல்கள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டு, புதிதாக மாற்றப்பட்டன. பாலஸ்தீன நகரங்கள், கிராமங்களின் அரபுப் பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டன.

சாலைகளில்கூட அரபு மொழி அழிக்கப்பட்டு ஹீப்ரு மொழி பயன்பாட்டுக்கு வந்தது. பண்டைய பாலஸ்தீன நகரங்களுக்கு எல்லாம் புதிய பெயர்கள் வழங்கப்பட்டன. பண்டைய துறைமுக நகரமான யோப்பா டெல் அவிவ் நகரத்துடன் இணைக்கப்பட்டு டெல் அவிவ் யாஃபோ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லைடா நகரம் லோட் எனப் பெயர் மாறியது. பல அரபு கிராமங்கள் யூதக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு வரைபடங்களில் இருந்து முழுதாக மறைந்துபோயின.

பாலஸ்தீனத்தின் அரபு ஆன்மாவை அழிப்பதில் சியோனியத் தலைவர்கள் பெரும் அக்கறை எடுத்துக்கொண்டனர். அவர்கள் இஸ்ரேலை யூத குணாம்சம் கொண்ட தேசமாக மறுகட்டுமானம் செய்தனர். ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்தோ அதுபோல யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற வாசகங்கள் தெருக்களில் எல்லாம் காணப்பட்டன.

ஆனால் சியோனியர்களுக்கு அப்போது தொந்தரவாக இருந்தது இன்னமும் வெளியேறாமல் இருந்த 3 லட்சம் அரேபியர்கள்தாம். அவர்கள் இருக்கும்வரை இஸ்ரேல் என்னதான் வெளியே தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டாலும் உள்ளே தொடர்ந்து அரேபிய மணம் வீசும் வரலாற்றைத்தான் கொண்டிருக்கும் என்று தெரிந்தது. இந்த அரேபியர்கள் வெளியேறும் வரை புதிய வரலாறு உதயமாகாது என அவர்கள் அறிந்திருந்தனர்.

இஸ்ரேல் ஏற்கெனவே தனது எல்லைகளை எல்லாம் மூடி இருந்தது. தங்கள் நிலங்களுக்குத் திரும்ப விரும்பும் அகதிகள் எந்த மூலையில் இருந்தும் மீண்டும் நுழைந்துவிடாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இஸ்ரேலுக்கு இன்னொரு பிரச்னையும் இருந்தது. திரும்பி வராத பாலஸ்தீனர்களின் நிலங்களும் சொத்துகளும் இன்னமும் யூத மக்களால் அபகரிக்கப்படாமல் இருந்தது. இப்போது ஐநா வேறு அவர்கள் திரும்புவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. இதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்ற அச்சம் இஸ்ரேலிய அரசுக்கு ஏற்பட்டது. இதனைச் சரி செய்ய புதிய நில அபகரிப்புச் சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டுவந்தது.

இதன்படி பாலஸ்தீனர்கள் விரும்பினால் தங்கள் நிலங்களுக்கு வந்து அங்கே குடியேறலாம். ஆனால் அவ்வாறு செய்யாதவர்களை திரும்பாதவர் (Absentee) எனக் கருதி அவர்களுடைய நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவித்தது.

எப்படியும் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பாலஸ்தீனர்கள் உள்ளே நுழைய முடியாது என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. இருந்தும் சட்டம் ஒன்றை நிறைவேற்றிவிட்டால் நிலத்தை அதிகாரப்பூர்வமாக அபகரிக்கலாம் என முடிவு செய்தது. கிட்டத்தட்ட 60 சதவிகித பாலஸ்தீன விவசாய நிலங்கள் இவ்வாறு அரசால் கையகப்படுத்தப்பட்டன.

அடுத்ததாக இஸ்ரேல் தலைவர்கள் கவனத்தைத் தங்கள் நாட்டுக்குள் வாழும் பாலஸ்தீனர்கள் பக்கம் திருப்பினர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறிவிட்டனர். இருப்பது மிச்ச சொச்சம். இவர்களையும் எப்படி விரட்டியடித்து அவர்களுடைய நிலங்களை அபகரிக்கலாம் என்று யோசித்தனர். அப்போது அவர்களுக்கு உதவியது பிரிட்டன் மேன்டேட் காலத்தில் நடைமுறையில் இருந்த பழைய பிரிட்டன் பாதுகாப்புச் சட்டங்கள்.

உண்மையில் அந்தச் சட்டங்கள் 1945ஆம் ஆண்டில் சியோனியக் குடியேறிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டவைதான். சியோனியர்கள் பிரிட்டன் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்திவந்தபோது அவர்களை ஒடுக்குவதற்குக் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்கள் அவை. அவற்றைத்தான் இப்போது தூசு தட்டி எடுத்து பாலஸ்தீனர்களுக்கு எதிராகப் பயன்படுத்த நினைத்தது இஸ்ரேலிய அரசு.

இந்தச் சட்டங்கள் பிரிட்டிஷ் காலத்தில் அமலுக்கு வந்தபோது சியோனிய வழக்கறிஞர் யாக்கோவ் ஷாபிரோ இவ்வாறு சொல்லியிருந்தார்: ‘பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டங்கள் வேறு எந்த நாகரிகம் அடைந்த தேசத்திலும் இல்லாத ஒன்று. இதுபோன்ற சட்டங்கள் நாஜி ஜெர்மனியில்கூடக் கிடையாது. எந்த அரசுக்கும் இதுபோன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு உரிமையும் கிடையாது.’

மூன்று வருடங்கள் கழித்து இதே ஷாபிரோதான் இஸ்ரேல் நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரியாக இருந்து பாலஸ்தீனர்களுக்கு எதிராக இந்தச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

0

இஸ்ரேல் அரசு இந்தப் பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி ராணுவ ஆட்சியை பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் மட்டும் கொண்டுவந்தது. அது ஏன் என்பதற்கு பென் குரியன் விளக்கம் ஒன்றையும் அளித்தார். ‘பாலஸ்தீனர்கள் அராஜகவாதிகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து யூதக் குடியேற்றங்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கு இத்தகைய ஆட்சி எல்லா இடங்களிலும் அமலுக்கு வருகிறது’ என்றார்.

ஆனால் உண்மையில் அந்தச் சட்டங்கள் பாலஸ்தீனர்கள் வாழ்ந்த பகுதிகளில் மட்டுமே அமலுக்கு வந்தன. ராணுவ ஆட்சியின் நோக்கம் தண்டனை என்ற பெயரில் பாலஸ்தீனர்களிடம் இருக்கும் மிச்ச சொச்ச நிலங்களையும் பிடுங்கிவிட்டு, எதிர்க்கத் துணியும் மக்களையும் முழுவதுமாக ஒடுக்குவதுதான்.

இஸ்ரேல் உருவான முதல் 10 ஆண்டுகளில் அந்தத் தேசத்துக்குள் வாழ்ந்த பாலஸ்தீனர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் ஏக்கர் நிலத்தை இழந்தனர். பல பகுதிகள் திரும்பாதவர் கணக்கில் எழுதப்பட்டு பிடுங்கப்பட்டன. பல நிலப் பகுதிகளை யூதர்கள்மீது பாலஸ்தீனர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகக் கூறி தண்டனையாகப் பிடுங்கப்பட்டன.

இந்தத் திரும்பாமைச் சட்டத்திலும் பல குளறுபடிகள் இருந்தன. இந்தச் சட்டம் ஐநா பிரிவினை அறிவிக்கப்பட்ட நவம்பர் 29ஆம் தேதியில் இருந்து பாலஸ்தீனத்தில் இல்லாதவர்களின் நிலம் பிடுங்கப்படும் என்று கூறுகிறது. இதன்படி ஏதாவது ஒரு பாலஸ்தீனக் குடும்பம் வருடாந்திர புனித யாத்திரைக்காக நாசரேத் சென்றுவிட்டு மறுநாளே திரும்பி இருந்தால்கூட அவர்களைத் திரும்பாதவர்கள் கணக்கில் எழுதி அவர்களுடைய நிலத்தைப் பிடுங்கியது இஸ்ரேல் அரசு.

பாலஸ்தீனத்தின் ஏகர் பகுதியில் வாழ்ந்த மக்கள் 1948 ஹகனா தாக்குதலின்போது தப்பிப்பதற்காக அடுத்த ஊரில் சென்று பதுங்கி இருந்தனர். இவர்கள் போர் முடிந்தவுடனேயே திரும்பிவிட்டனர். ஆனால் அவர்களைத் திரும்பாதவர்கள் கணக்கில் எழுதிவிட்டு அவர்களுடைய வீடுகளையும் கடைகளையும் ஜப்தி செய்தது அரசு.

அரசு காவல்துறையை ஏவி வேண்டுமென்றே கிராமங்களில் தாக்குதல் நடத்தி அவர்கள் தப்பித்து வெளியேறினாலும் திரும்பாதவர்கள் கணக்கில் எழுதி நிலத்தைப் பிடுங்கிக்கொண்டது. இதேபோல பயிரிடப்படாத நிலம் பிடுங்கப்பட்டது. பயிரிடப்பட்ட நிலத்தில் இருந்த பயிர்கள் பிடுங்கப்பட்டன. கலிலியில் இருந்த இக்ரிட் எனும் கிராமத்தில் இந்த அட்டூழியம் மேலும் ஒருபடி சென்றது.

1948ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது இஸ்ரேல் ராணுவம் இக்ரிட்டை ஆக்கிரமித்தது. அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் கிறிஸ்தவர்கள். அதனால் அவர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் சரணடைந்தனர். அவர்களை அழைத்துப் பேசிய ராணுவ வீரர்கள் இந்தப் பகுதியில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவை முடியும்வரை அனைவரும் பாதுகாப்பாக வேறு இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். மறு உத்தரவு வந்தவுடன் மீண்டும் திரும்பி வாருங்கள் என்று அறிவித்தது.

விவசாயிகளும் தாற்காலிகமாகச் சென்றனர். ஆனால் ராணுவ ஆளுநர் அந்த இடத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு விவசாயிகள் தங்கள் நிலத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள் என்று அறிக்கைக் கொடுத்துவிட்டார்.

திரும்பி வந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி. அவர்களுடைய நிலத்தை அரசு பிடுங்கியிருந்தது. உடனே இக்ரிட் மக்கள் இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்து இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். இதற்கான தீர்ப்பு 1951ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் அந்தப் பகுதியை மீண்டும் கிராமத்தினருக்கே தரும்படி இஸ்ரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் ராணுவம் கேட்கவில்லை. அவர்களுக்குத் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் டிசம்பரில் நடைபெற இருந்தது. அதற்கு ஒருமாதத்துக்கு முன்னே இக்ரிட்டுக்குள் நுழைந்த ராணுவம் அங்கிருந்த வீடுகளை ஒன்று விடாமல் குண்டு வைத்துத் தகர்த்தது. நிலத்தை அவசரம் அவசரமாக யூதர்களுக்கு கைமாற்றிக் கொடுத்துவிட்டு வழக்கை முடித்துவிட்டது. இத்தகைய நடவடிக்கைகளை இஸ்ரேலிய ஊடகங்கள் ‘பாலைவனத்தைப் பசுமையாக்கிய இஸ்ரேலியர்கள்’என்று புகழ்ந்தன.

1948 முதல் 1950 வரை பாலஸ்தீனர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட 37,000 ஏக்கர் நிலத்தில் 35,000 ஏக்கரில் இஸ்ரேலியர்கள் குடியேறி இருந்தனர். இஸ்ரேலிய அரசு சிறிய இழப்பீடை வழங்க முன்வந்தது. ஆனால் பாலஸ்தீனர்கள் அந்தத் தொகையை வாங்க மறுத்துவிட்டனர். பல பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த நிலத்துக்கு அருகிலேயே தாற்காலிக தார்பாய் குடில்கள் அமைத்துத் தங்கிக்கொண்டனர்.

இது குறித்து ஃபௌஸி அஸ்மர் எனும் பத்திரிகையாளர் To Be An Arab in Israel எனும் நூலில் தனக்குச் சிறுவயதில் ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார். ‘நான் மூன்று, நான்கு வயதில் எங்களது தோட்டத்தில் இருந்த அத்திப் பழங்களைப் பறித்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே சில ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்கள் என் கையில் இருந்த பழங்களைப் பிடுங்கி வீசிவிட்டு திருடுவதற்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டனர். நான் அவர்களிடம் திருடவில்லை, இது எங்களுடைய தோட்டம் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் அப்போது சொன்ன பதில் அங்கே இருந்த ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களின் நிலைமையையும் குறித்தது. நாயே, உங்களுடையது என்று நிலம் எதுவும் இங்கு இல்லை. இந்த நிலம் முழுக்க யூதர்களுடையது. நீங்கள் எங்களுடைய காவல் நாய்கள். நீங்கள் எங்கள் நிலத்தை இரண்டாயிரம் வருடங்களாகக் காவல் காத்தீர்கள். இப்போது கிளம்புங்கள். இந்த நிலம் என்றைக்கும் எங்களுடையதாகத்தான் இருந்திருக்கிறது.’

இந்த நிலைதான் அப்போது இஸ்ரேல் உருவான பின்னும் அங்கு தங்கி இருந்த அரேபியர்களுக்கு ஏற்பட்டது. பாலஸ்தீனர்கள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் குடியேறிகளால், காவல்துறையால், ராணுவத்தால் தொடர்ந்து வதைக்கப்பட்டனர். குழந்தைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இதனால் தினசரி வாழ்வு தாங்க முடியாததாக மாறி இருந்தது.

1966ஆம் ஆண்டு அரேபியப் பகுதிகளில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வரும்வரை இதே நிலைதான் நிலவியது. இஸ்ரேலில் வாழ்ந்துவந்த பாலஸ்தீனர்கள் தங்கள் ஊரில் இருந்து ராணுவத்தின் சிறப்பு அனுமதி இல்லாமல் நுழையவோ வெளியேறவோ முடியாது.

ஒவ்வொரு பகுதியிலும் ராணுவ ஆளுநர்கள் இருந்தனர். இவர்களுக்கு இந்தச் சட்டங்களை மீறுபவர்களைத் தண்டிப்பதற்கு அத்தனை அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஆளுநர்கள் அரேபியர்கள் யாராவது சட்டத்தை மீறினால் அவர்களைத் தூர கிராமங்களுக்கு விரட்டியடிப்பர். ஆனால் தினமும் தங்களது கிராமத்துக்கு வந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடுவார்.

இந்த ஆளுநர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் வாழும் குடும்பங்களைக் கண்காணித்து அந்தக் குடும்பங்களுக்குச் சம்பாதித்து தருபவர்களை வெளியேற்றினர். இதன்மூலம் நம்பிக்கை இழந்து மற்றவர்களும் அவர்களுடன் சென்றுவிடுவார்கள் என்பது எண்ணம்.

இத்தனை அக்கிரமங்களைச் சந்தித்தாலும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலில் இருந்தபடியே தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்தனர். இந்த உரிமையையும் முடக்குவதற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘திரும்புபவர்களின் சட்டம்’ (Law of Return) என்ற ஒன்றை 1950ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

இந்தச் சட்டத்தின்படி உலகின் எந்த நாட்டில் உள்ள யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்தாலும் அவர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும். யூதர்கள் அனைவரும் 2000 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலில் இருந்து சென்றவர்கள் என்பதால் அவர்கள் தங்கள் தாய்நிலம் திரும்புவதற்காக இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகிறது என்று இஸ்ரேல் அரசு சொன்னது.

ஆனால் தங்கள் நிலத்திலேயே காலம் காலமாக வாழ்ந்து வந்த அரேபியர்கள் புதிதாக இஸ்ரேல் எனப் பெயர் மாற்றப்பட்ட நிலத்தில் குடியுரிமையை வாங்குவதற்கு அத்தனைத் தடைகளைக் கடந்துவர வேண்டியிருந்தது. உதாரணமாக பாலஸ்தீனர்கள் குடியுரிமையைப் பெறுவதற்கு 1948 போர் நடந்ததற்கு முன்பு அங்கே இருந்ததற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்களுக்கு ஹீப்ரு மொழியில் கொஞ்சம் அறிவும் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தியபோது இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் மோசஸ் ஷாரெட் எளிமையாகச் சொன்னார். ‘நம்மைப் பொறுத்தவரை அந்நியர்கள் என்பது பாலஸ்தீன அரேபியர்கள்தான்.’

இத்தனைத் தாக்குதல்கள், கட்டுப்பாடுகள், வெளியேற்றங்களுக்கு மத்தியிலும் பாலஸ்தீனர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தனர்.

1951ஆம் ஆண்டு நாசரேத்தில் உள்ள அரேபியர்கள் தங்கள் நிலம் பிடுங்கப்படுவதற்கு எதிராகப் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இந்தச் செய்தி அண்டை நகரங்களுக்கும் பரவி கலிலியில் போராடுவதற்கு ஏராளமானோர் திரண்டுவிட்டனர். இப்படி வெளிப்படையான எதிர்ப்பை ராணுவ அரசால் தாங்கிகொள்ள முடியவில்லை. உடனே அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கும் தலைவர்களைக் கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் வேலைகளைத் தொடங்கியது. அந்த மக்கள் இஸ்ரேல் தேசத்திற்கு எதிரானவர்கள் என்று முத்திரைக் குத்தியது.

ஆனால் 1954ஆம் ஆண்டு பாலஸ்தீனர்கள் பாப்புலர் அரபு முன்னணி (Popular Arab Front) எனும் அமைப்பைத் தொடங்கி ராணுவ ஆட்சியின் முடிவையும் அனைத்து இஸ்ரேலிய மக்களுக்கான சமத்துவத்தையும் வலியுறுத்தினர். இந்த அமைப்புக்கு தேசம் முழுவதிலும் இருந்த அரேபியர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்தது. ஆனால் ராணுவ அரசாங்கம் அந்த அமைப்பை மொத்தமாக அழித்தொழித்தது.

பாலஸ்தீனர்கள் எதிர்ப்புக் காட்ட தொடங்கிவிட்டார்கள் என்றவுடன் அதனை ஒடுக்குவதற்கு மேலும் யூதர்களை வேறு நாடுகளில் இருந்து அழைத்துவந்து பாலஸ்தீனத்தில் குடியேற்றும் தேவை இஸ்ரேலுக்கு ஏற்பட்டது. அவ்வாறு யூத எண்ணிக்கையை அதிகரிக்கும் பட்சத்தில் பாலஸ்தீனர்கள் தாங்களாக அடங்கிவிடுவார்கள் என்று நினைத்தது. பென் குரியன் பாராளுமன்றத்தில் ‘யூதக் குடியேற்றங்கள் தொடர்ந்து நிகழாதவரை பாதுகாப்பு என்பதே நமக்குக் கிடையாது’ என்று சுட்டிக்காட்டினார்.

இதனால் புதிய யூதர்களின் வருகையை ஈர்ப்பதற்கு இஸ்ரேலிய அரசும் சியோனிய அமைப்புகளும் மானிய விலையில் வீடு, நிலம் என வாரி வழங்கியது. மேலும் இஸ்ரேல் வரும் அனைத்து யூதர்களுக்கும் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்புகள்மூலம் ஏராளமான யூதர்கள் இஸ்ரேலுக்குப் படையெடுத்து வருவார்கள், அவர்களுக்கு இருப்பிடம் வழங்குவதைக் காரணம் காட்டி ஆரேபியர்களை விரட்டிவிடலாம் என்று அரசு கணக்கு போட்டது.

ஆனால் இஸ்ரேலின் இந்த வெளிப்படையான அழைப்பைப் பெரும்பாலான யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு அமெரிக்கா செல்வதே கனவாக இருந்தது.

ஐரோப்பாவில் போர்ச் சூழலில் சிக்கிய, வதைமுகாமில் வாடிய, வறுமையில் வாழ வழியில்லாத யூதர்கள் மட்டுமே இஸ்ரேலுக்கு வந்தனர். இஸ்ரேல் உருவாகி முதல் மூன்று வருடங்களில் வருகை புரிந்த 3.70 லட்சம் யூதர்களில் ஒருவரிடமும் காசு, பணம் எதுவும் இல்லை.

இஸ்ரேலிய அரசோ பணக்கார யூதர்கள் இஸ்ரேலில் குடியேறி முதலீடுகளைக் குவிப்பார்கள் என்று எதிர்பார்த்தது. வசதியான அமெரிக்க யூதர்களும் ஐரோப்பிய யூதர்களும் யூத தேசத்துக்கு தங்கள் வருடாந்திர நன்கொடைகளை மட்டும் வழங்கி வந்தனர். அவர்களுக்கு இஸ்ரேலில் குடியேறும் நோக்கம் சிறிதும் இருக்கவில்லை.

மேற்கத்திய யூதர்களின் வருகை போதுமானதாக இல்லை என்றவுடன் இஸ்ரேல் தனது கவனத்தை கிழக்கத்திய யூதர்கள் என அழைக்கப்படும் ஆப்பிரிக்க, அரபு நாடுகளில் வாழும் யூதர்கள் பக்கம் திருப்பியது.

அரேபிய நாடுகளில் மேற்கத்திய நாடுகளினால் சுரண்டப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துவந்த யூதர்கள் இஸ்ரேலில் இந்த அறிவிப்பைக் கேட்டு நல்ல வசதி, வாய்ப்பான வாழ்க்கையை வாழலாம் என இடம்பெயரத் தொடங்கினர். மேலும் இஸ்ரேல் உருவானதில் இருந்து அரேபிய நாடுகளில் வாழ்ந்துவந்த யூதர்களுக்கு அவப்பெயர் உருவாகி இருந்தது. அவர்கள் நேர்மையற்ற குடிமக்களாக அங்குள்ள இஸ்லாமியர்களாலும் கிறிஸ்தவர்களாலும் பார்க்கப்பட்டனர். விரோத மனப்பான்மைக்கு இடையில் வாழ்வதைவிட இஸ்ரேலுக்கு சென்றுவிடலாம் என்று லிபியா, சிரியா, எகிப்து, லெபனான் ஆகிய பகுதிகளில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணப்பட்டனர்.

சியோனியர்கள் அரேபிய நாடுகளில் இருந்த உரசல்களைப் பயன்படுத்திக்கொண்டு குடியேறிகளின் எண்ணிக்கையை அதிகரித்தனர். இதற்காக இவர்கள் கீழ்த்தரமான வேலைகளையும் செய்யத் தொடங்கினர். ஈராக்கின் பாக்தாத்தில் யூதர்கள் 2500 ஆண்டுகளாகவே வாழ்ந்து வந்தனர். இவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்களாகவும் இருந்தனர். இவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த யூதர்களை இஸ்ரேல் அரசு தொடர்ந்து தங்கள் நாட்டில் குடியேறும்படி அழைத்து வந்தது. ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. இப்போது இருக்கும் நல்ல சூழலில் இருந்து ஏன் இஸ்ரேலுக்குச் சென்று வாழவேண்டும் என்று அவர்கள் கருதினர்.

ஆனால் அடுத்த சில நாட்களில் பாக்தாத்தில் அவர்கள்மீது தாக்குதல் தொடங்கியது. யூதக் கடைகள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்று ஆங்காங்கே குண்டுகள் வெடித்தன. இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் பயந்து இஸ்ரேலுக்குப் பயணப்பட்டனர். இஸ்ரேல் அரசே விமானங்களை அனுப்பி அவர்களை அழைத்து வந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் 1966இல்தான் உண்மை தெரியவந்தது. Ha’olam Hazeh எனும் யூத பத்திரிகை ஒன்று இஸ்ரேலிய உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவரின் பேட்டியைப் பிரசுரித்தது. அதில் இந்தக் குண்டு வெடிப்புகளுக்கு இஸ்ரேலிய அரசே காரணம் என அவர் உளறிவிட்டார். இஸ்ரேலியக் குடியேற்றங்களை அதிகரிப்பதற்காக இஸ்ரேலிய அரசே உளவாளிகளை அனுப்பி யூதர்களுக்கு எதிராக கலகங்களை, விரோத மனப்பான்மையை உருவாக்கியதாகவும் அவர் கூறி இருந்தார்.

அப்போது இஸ்ரேலில் நடைபெற்ற கூட்டு வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஈராக்கில் இருந்து வந்து குடியேறி இருந்த யூதர்கள் இத்தகைய ஒரு பாடலைப் பாடினர்.

‘என்ன செய்தீர்கள் பென் குடியன்? எங்களைக் கடத்தி வந்தீர்கள்?

கடந்தகாலத்தில் நாங்கள் வாழ்ந்த தேசத்தின் குடியுரிமையைத் துறந்துவிட்டு இஸ்ரேலுக்கு வந்தோம்

நாங்கள் கழுதையில் கிளம்பி இருந்தால் இந்நேரம் இங்கு வந்து சேராமல் இருந்திருக்கலாம்

ஆனால் என்ன கறுப்பு நாள் அது? எங்களை அழைத்து வந்த விமானம் நரகத்துக்குச் செல்லட்டும்.’

இதேபோல வேறு சில விமானங்கள் ஏமனில் இருந்து ‘மந்திரக் கம்பளத் திட்டம்’ என்ற பெயரில் 45,000 யூதர்களை அழைத்து வந்தது. இவ்வாறு வந்த ஏமன் யூதர்களிடம் பண்டைய காலத்தில் வாழ்ந்த தேவதூதர்கள் வழங்கிய தீர்க்கதரிசனங்களின்படி வெள்ளி இறக்கை முளைத்த தேவதைகள் (விமானங்கள்) யூதர்களை இஸ்ரேலுக்கு மீட்டு வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்த யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்த ஓரிரு நாட்களில் தனித் திறனற்ற தொழிலாளர்களாக வகை பிரிக்கப்பட்டு துப்புறவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் ஐரோப்பிய யூதர்களால் கேலிக்கும் பாகுபாட்டுக்கும் உள்ளாகினர்.

இதுபோல ஏமாற்றப்பட்டு வருகை புரிந்த யூதர்களால்தான் இஸ்ரேல் தேசம் உருவானது. ஆனால் இவர்களின் எண்ணிக்கையே ஒரு கட்டத்தில் இஸ்ரேலியப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தது.

0

1951ஆம் ஆண்டு வாக்கில் 7.65 லட்சம் யூதர்கள் ஐரோப்பா, அரபு நாடுகள் மற்றும் ஆசியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறினர். இந்த ஒவ்வொரு குடியேறிகளுக்கும் இஸ்ரேலிய அரசு சராசரியாக ஆண்டுக்கு 2250 டாலர் செலவழிக்க வேண்டி இருந்தது. இது இஸ்ரேலிய அரசுக்குப் பெரும் சுமையாக மாறிப்போனது.

புதிதாக வந்தவர்களுக்கு இஸ்ரேலில் நிலவிவந்த சூழல் திருப்தியளிக்கவில்லை. இதனால் அவர்கள் தம்மை ஏமாற்றி அழைத்து வந்த அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

1950இல் அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றை அறிவித்த யூதர்கள், சுகாதாரமான, பாதுகாப்பான வசிப்பிடம், உணவுப் பொருள் வாங்குவதற்கு மானியம் ஆகியவற்றுக்குக் குரல் கொடுத்தனர். குறிப்பாக கிழக்கத்திய யூதர்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தத் தொடங்கினர். இஸ்ரேலில் சந்தித்த பாகுபாடுகளைத் தாங்கள் எந்த இடத்திலும் சந்தித்ததில்லை என்றும் அழுது புலம்பினர். இது மட்டுமில்லாமல் பென் குரியனின் கட்சி ஐரோப்பியர்களை ஒருவிதமாகவும் கிழக்கத்திய யூதர்களை வேறொரு விதமாக நடத்துவதாகக் குற்றம்சாட்டினர்,

இஸ்ரேலிய அரசு இந்தக் குடியேறிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் திணறியது. வளரும் பொருளாதாரச் சிக்கல் பென் குரியன் அரசை அச்சுறுத்தியது. முதல் வருடத்தில் பாலஸ்தீன அகதிகள் விட்டுச் சென்ற சொத்துகளால் இஸ்ரேலிய அரசு ஒருவாறு சமாளித்துவிட்டது. ஆனால் இப்போது நிலைமை கழுத்தை நெரிக்கத் தொடங்கியது.

இஸ்ரேலில் தொழில்துறைகள் மந்தமடைந்தன. அதனை ஊக்குவிப்பதற்கு தொடர்ந்து முதலீடுகள் தேவைப்பட்டன. 1950களில் இஸ்ரேல் ஏற்றுமதி செய்த பொருட்களைவிடப் பத்து மடங்கு அதிகமான பொருட்களை இறக்குமதி செய்தது. அரபுக் கூட்டமைப்பு வேறு இஸ்ரேலுடன் வணிகம் செய்யமாட்டோம் என்று பொருளாதாரத் தடை விதித்திருந்தது அந்நாட்டிற்கு தலைவலியாக இருந்தது. இஸ்ரேல் அரசு ஓர் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் பாதியை ராணுவத்திற்கே செலவிட்டு வந்தது. இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஏதாவது வழியைக் கண்டடைய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இஸ்ரேலின் பெரும்பாலான நிதி வெளியில் இருந்தே வந்துகொண்டிருந்தது. பாலஸ்தீன நிலத்தில் குடியேற்றம் தொடங்கியபோது சியோனிய அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்த நன்கொடைகளே போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது தனியாக தேசம் என்று அமைந்தவுடன் அதற்கான செலவுகளுக்கு அந்தத் தொகை போதுமானதாக இல்லை.

1949இல் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வரிவிலக்கு அறிவித்தது. இதன்மூலம் சாதாரண மக்களும் உதவலாம் என அறிவித்தது. மேலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஏற்றுமதி, இறக்குமதி வங்கி இஸ்ரேலுக்கு 100 மில்லியன் டாலர் கடனாக வழங்கியது. இப்படிப் பல வழிகளில் இருந்து நிதி வந்துபோதும் போதவில்லை.

இதையடுத்து 1951ஆம் ஆண்டு பென் குரியன் யூதர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் மேற்கு ஜெர்மனியின் உதவியை நாடிச் சென்றார். அந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில்தான் மேற்கு ஜெர்மன் அரசு யூதர்களுக்கு நாஜிகள் புரிந்த போர்க் குற்றங்களுக்கு இழப்பீடுத் தொகை ஒன்றைக் கொடுக்க முன்வந்தது. ஆனால் இந்தத் தொகை நாஜி குற்றங்களை வெள்ளையடித்து சுத்தமாக்கும் முயற்சி என இஸ்ரேலிகள் போராட்டம் செய்ய பென் குரியன் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

ஆனால் இப்போது வேறு வழியில்லாமல் இஸ்ரேலிய அரசு 12 ஆண்டுகளுக்கு 862 மில்லியன் டாலர் பெற்றுக்கொள்வதற்குச் சம்மதித்தது. இந்தப் பணம் அப்போதைய இஸ்ரேலியப் பொருளாதார பிரச்னையை தீர்ப்பதற்கு ஓரளவுக்கு உதவியது. ஆனால் நீண்ட ஓட்டத்துக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் உதவாது என பென் குரியன் உணர்ந்தார். இதனால் மேற்கத்திய நாடுகளை, குறிப்பாக அமெரிக்காவை அண்டி நின்றால் தங்களுக்கு வேண்டிய விஷயங்களைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று புரிந்துகொண்டார்.

மேற்கத்திய நாடுகள் தமக்கு உதவ வேண்டும் என்றால் இஸ்ரேல் மத்திய கிழக்கின் நம்பகமான நண்பன் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும் என்று கருதினார்.

மத்தியக் கிழக்கில் அப்போதைய அரபு நாடுகளின் உறவுகள் எதுவும் மேற்கத்திய நாடுகளுடன் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அவர்கள் அரபு நாடுகளுடன் உறவில் இருந்தாலும் இன்னமும் நிலப்பிரப்புத்துவ சமூக அமைப்பில் இருந்த நாடுகள் தேசியவாத இயக்கங்களை எதிர்கொள்ள வேண்டியாதகவே இருந்தது.

மேலும் அந்த நாடுகள் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு இயற்கை வளங்களை விநியோகம் செய்யவதிலும் மேலை நாடுகள் அரபு தேசங்களில் ராணுவத் தளம் அமைப்பதிலும் தயக்கம் காட்டி வந்தன.

இதனால் அந்த நாடுகள் சோசியலிச இடதுசாரி நிலைப்பாடுகளையும் எடுக்கின்றனவோ என மேலை நாடுகள் அஞ்சின. இதனால் மேலை நாடுகளுக்கு நம்பகமான ஒருவர் மத்திய கிழக்கில் தேவைப்பட்டது. இந்த இடத்தை இஸ்ரேல் பிடித்துக்கொள்ள முடிவு செய்தது.

இஸ்ரேலுக்கு உதவி செய்வதன்மூலம் மத்தியக் கிழக்கு முழுவதும் சமநிலையை, நிலைத்தன்மையை பெற முடியும் என மேற்கத்திய நாடுகளுக்கு இஸ்ரேல் நிரூபிக்க நினைத்தது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் எத்தகைய கொள்கையையும் அனுமதிக்கக்கூடாது என்று இஸ்ரேல் முடிவு செய்தது. அத்தகைய கொள்கைகளை அரபு நாடுகள் கொண்டு வந்தால் அவர்களையும் எதிர்ப்பதற்கு தயங்கக்கூடாது என்று நினைத்தது. அதாவது அமெரிக்காவின் அடியாளாக மாறுவதற்கு இஸ்ரேல் முந்திக்கொண்டு நின்றது.

ஆனால் 1950களில் அமெரிக்க அரசியவால்திகளின் கவனம் முழுவதும் இஸ்ரேல்மீதோ, மத்தியக் கிழக்கின்மீதோ இல்லை. அமெரிக்கப் படைகள் உலகில் பெருகி வந்த சோவியத்தின் ஆதிக்கத்தை முடக்கும் கவலையில்தான் மூழ்கிக் கிடந்தன. சோசியலிசம் பெருகாமல் தடுக்க உலக நாடுகளில் எல்லாம் சண்டை செய்து வந்தன. அமெரிக்காவில் ஒரு பிரிவு கொரியாவில் யுத்தம் செய்தது, மற்றொரு பிரிவு வியட்நாமில் கவனம் செலுத்தியது.

மத்தியக் கிழக்கைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அவசரப் பிரச்னைகள் இல்லை. சோசியலிசம் பரவாமல் இருப்பதற்கு அங்கிருந்த அரபு நாடுகளின் வலதுசாரித் தலைவர்களிடம் நட்புறவில் இருந்தாலே போதும் என்றுதான் அமெரிக்கா நினைத்தது. அவர்களுக்கு ஆதரவு வழங்குவதன்மூலம் அந்தந்த நாடுகளில் இருந்த இடதுசாரி தேசிய இயக்கங்களை முடக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தது. இந்த முயற்சியும் ஓரளவுக்கு வெற்றிகரமான விளைவையே தந்ததால் அமெரிக்கத் தலைவர்கள் தங்கள் முழு நம்பிக்கையையும் இஸ்ரேல் மீது வைக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகள் மேற்கத்தியத் தலைவர்களை இஸ்ரேலை ஏன் அடியாளாகப் பணியமர்த்தக்கூடாது என்று யோசிக்க வைத்தன.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *