Skip to content
Home » பாலஸ்தீனம் #16 – நம்பிக்கை நாயகன்

பாலஸ்தீனம் #16 – நம்பிக்கை நாயகன்

Gamal Abdel Nasser

ஒரு மரத்தை வேருடன் பிடுங்கும்போது அது வளர்ந்த இடத்தைச் சுற்றிய பகுதிகளிலும் விரிசல் ஏற்படும். அதேபோலத்தான் பாலஸ்தீனர்களை அவர்களுடைய நிலங்களில் இருந்து பிடுங்கி அங்கே இஸ்ரேல் எனும் அந்நிய மரத்தை நட்டபோது சுற்றி இருந்த அரபு நிலங்கள் முழுவதும் அதிர்வு எதிரொலித்தது.

1952ஆம் ஆண்டு எகிப்தில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. புரட்சியாளர்கள் ஊழல் மிகுந்த மன்னர் பரூக்கை ஆட்சியில் இருந்து நீக்கினர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அங்கே புரட்சித் தலைவர் ஒருவர் ஆட்சியில் அமர்ந்தார். அவரது பெயர் கமால் அப்துல் நாசர்.

நாசர் எனும் பெயரைக் கேட்டாலே அன்றைக்கு மேற்கத்திய நாடுகள் எல்லாம் கதிகலங்கின. மக்களோ அவரை ஆதர்ச நாயகனாகக் கொண்டாடினர். நாசர் தன்னிரகற்ற தேசியத் தலைவராக இருந்தார். அவரது நிலச் சீர்த்திருத்த திட்டம் ஏழைகள் எல்லாம் அவரை தேவத்தூதராக வழிபடும் அளவுக்கு செய்தது. நாசர் சமத்துவத்தை விரும்பும் தலைவராக இருந்தார். சமூக நீதியைப் போதித்தார்.

பெரும் முதலாளிகள், நிலக்காரர்களிடம் இருந்த நிலங்களை எல்லாம் பிடுங்கி நிலமற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். அதேபோல எகிப்து மண்ணில் இருந்து பிரிட்டன் ஆதிக்கத்தை நீக்குவதற்கும் பாலஸ்தீனத்தில் சியோனிய ஆக்கிரமிப்புக்கு எதிராகச் சண்டையிடுவதாகவும் சூளுறைத்தார். இத்தகைய நடவடிக்கைகள்தான் அவரை மத்தியக் கிழக்கின் நாயகனாக உயர்த்தியது.

அதேபோல 1954ஆம் ஆண்டு சிரியாவில் பாத் கட்சி (Ba’ath) ஆட்சியைப் பிடித்தது. அந்தக் கட்சி மத்தியக் கிழக்கின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் அமைப்பான சிரியா கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து புதிய அரசை அமைத்தது. ‘ஒற்றுமை, சுதந்திரம், சோசியலிசம்’என்பதே அந்தக் கட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் கட்சியும் மத்தியக் கிழக்கில் மேற்கத்திய ஆதிக்கங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது.

கெய்ரோ, டமாஸ்கஸில் இருந்து நைல் நதியையொட்டிய சிறிய கிராமங்கள் வரை எகிப்தியர்களும் சிரியர்களும் ஒன்றிணைந்து தங்கள் நாடுகளின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் விவாதங்கள் நடத்தினர். செய்தித்தாள்களும் சுவர் சித்திரங்களும் அமெரிக்காவையும் பிரிட்டனையும் தாக்கிய சித்திரங்களையும் சுமந்திருந்தன. அதேபோல காலனிய நாடுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் சியோனியர்களையும் பணக்கார அரபு மன்னர்களையும்கூட அவர்கள் எதிர்த்தனர்.

மேற்கத்திய ஆதிக்க நாடுகள் நடுங்கிபோய் நின்றன. எகிப்து, சிரியாவின் மீதான பொருளாதாரக் கட்டுப்பாடு எங்கே தங்கள் கைகளில் இருந்து நழுவிவிடுமோ என அஞ்சின. புதிய அரசாங்கங்கள் சோசியலிசக் கொள்கைகளைப் பேசுவது மத்தியக் கிழக்கில் சோவியத்தின் ஆதிக்கத்திற்குக் கதவுகளைத் திறந்துவிடுமோ என்ற அச்சமும் அவர்களை வாட்டியது.

ஆனால் நாசர் தன்னை சோசியலிசக் கொள்கை கொண்டவன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை. அவர் ஆயுதங்கள் வேண்டும் என்றவுடன் முதலில் அமெரிக்காவிடம்தான் உதவி வேண்டி நின்றார். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் நாசருக்கு உதவ வேண்டும் என்றால் கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தை குறைக்கும் ராணுவக் கூட்டணியில் சேர வேண்டும் என்று அவரை வற்புறுத்தினர்.

நாசர் மறுத்துவிட்டார். எகிப்து நடுநிலை வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட தேசம். எனக்கு சோசியலிசவாதிகளின் கூட்டணியும் தேவையில்லை. முதலாளிகளின் கூட்டணியும் தேவையில்லை என்றார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் ஃபோஸ்டர் டல்லஸ் நாசரின் நிலைபாட்டை ஏற்கவில்லை. நடுநிலை என்பது ஒன்று கிடையாது. ஒன்று, நீங்கள் அமெரிக்காவின் பக்கம் இருக்க வேண்டும். இல்லையென்றால் சோவியத்தின் பக்கம் இருக்க வேண்டும். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று உடனே முடிவு செய்துசொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

டல்லஸ் கார்பரேட் வழக்கறிஞராக அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். அதனால் அவர் மத்தியக் கிழக்கின் எண்ணெய் வளங்களை விட்டுவிடவே கூடாது. அது முழுக்க முழுக்க அமெரிக்க நிறுவனங்களுக்குத்தான் சேவையாற்ற வேண்டும் என உறுதியாக இருந்தார்.

அதனால் எந்தெந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவுடன் கூட்டணி வைக்கவில்லையோ, எந்தத் தலைவர்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு இணங்க மறுக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் சோசியலிசம் பக்கம் திரும்பிவிடுவார்கள். சோசியலிச நாடுகளுக்கு எண்ணெய் கடைகளைத் திறந்துவிட்டு விடுவார்கள் என அஞ்சினார்.

இதனால்தான் நாசரின் நடுநிலைவாதம்கூட சோவியத் ஒன்றியுத்துடனான கூட்டணியின் தொடக்கம் என்று நினைத்தார். அது மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் எடுத்துக்கொண்டார்.

இஸ்ரேலும் நாசரைப் பற்றியும் வளர்ந்து வரும் அரபு தேசியவாதம் குறித்தும் கவலைகொண்டது. இஸ்ரேல் உருவாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும் எந்த அரேபிய நாடுகளும் அதனை அங்கீகரிக்கவில்லை. ஏன் அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் ஜோர்டன், சவுதி அரேபியாகூட இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்கவில்லை. அரேபியர்களின் இஸ்ரேல் புறக்கணிப்பு அந்தத் தேசத்தின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது. ஏதாவது அதிசயம் நடக்காத வரை, இஸ்ரேலின் பொருளாதார நெருக்கடிகள் மாறாது என்ற நிலையிலேயே இருந்தது.

ஏற்கெனவே இஸ்ரேலிய குடியேற்றம் முற்றிலுமாக நின்றுபோய் இருந்தது. அமெரிக்க யூதர்கள் அனுப்பும் நன்கொடைகள் மட்டும் தேசத்தை இயக்குவதற்குப் போதுமானதாக இல்லை. அதனால் அரேபியர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் அவர்களுடன் வணிகம் மேற்கொள்வதற்கும் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தேடிக்கொண்டிருந்தது.

பென் குரியன் அரேபியர்களின் மனநிலையை நன்கு அறிந்து வைத்திருந்தார். அரபு தேசியவாதிகள் சுமுகமான வழிகளில் வழிக்கு வரமாட்டார்கள் என்று கருதினார். அதனால் இஸ்ரேல் நிச்சயமாக அமெரிக்காவின் கையாளாக மாற வேண்டும் என்று உறுதியாக நம்பினார்.

நாசர் எப்போதாவது அமெரிக்காவின் வழியில் குறிக்கிட நேர்ந்தால் அவருக்கு எதிரான ஒரு தாக்குதலை மேற்கொண்டு அமெரிக்காவுக்குத் தனது விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். அதேபோல முடிந்தால் எகிப்து பகுதிகளை அபகரித்து தங்கள் எல்லைகளையும் பெருக்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார். அதற்கான சூழல்தான் உருவாகி வந்தது.

0

1955ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கெய்ரோவில் சிக்கிய இஸ்ரேலிய உளவாளிகளைப் பிடித்து எகிப்திய அரசு தூக்கிலிட்டது. அவ்வளவுதான் இஸ்ரேலுக்கு எகிப்தைத் தாக்குவதற்கு நல்ல காரணம் கிடைத்ததுபோல்ஆகிவிட்டது. உடனே பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலியப் படை காஸா துண்டில் இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தி 36 எகிப்திய வீரர்களைக் கொன்றது.

ஐநா இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தது. எகிப்து இஸ்ரேலிய எல்லையில் எந்தப் பிரச்னையும் செய்யவில்லை, எகிப்திய வீரர்கள் எந்தத் தாக்குதலையும் தொடுக்கவில்லை. பிறகு இஸ்ரேலுக்கு எகிப்துமீது தாக்குதல் நடத்த என்ன அவசியம் என்று கேட்டது.

நாசர் கோபத்தில் கொந்தளித்தார். எகிப்துமீது நடத்தப்படும் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அமெரிக்கா ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அமெரிக்கா அப்போதுதான் மேற்கூறிய நிபந்தனையை விதித்தது. முதலில் எகிப்து சோவியத் எதிர்ப்பு ராணுவக் கூட்டணியை உறுதி செய்யும் பாக்தாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். எங்கள் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் யோசிப்போம் என்றது.

நாசர் கடுப்பானார். என்ன நடந்தாலும் நானே பார்த்துக்கொள்கிறேன். உங்கள் உதவியை எந்த நேரத்திலும் நாடி நிற்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டார். அப்போதுதான் அவருக்கு வேறொரு யோசனை தோன்றியது. காசாவில் வாழ்ந்து வந்த பாலஸ்தீன அகதிகள் தங்கள் எல்லைகளில் இஸ்ரேலியர்கள் நடத்தும் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆயுதப் பயிற்சி அளிக்குமாறு தொடர்ந்து நாசரிடம் வேண்டுகோள் விடுத்துவந்தனர். அவர்களுக்குப் பயிற்சியளித்து ஏன் இஸ்ரேல் தாக்குதலைத் தடுக்கக்கூடாது என்று நினைத்தார். உடனேயே பாலஸ்தீனர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதற்கு உத்தரவிட்டார்.

முதலில் சிறு குழு ஒன்றுக்குப் முறையாக ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டன. இந்தக் குழு தங்களை Fedayeen என்று அழைத்துக்கொண்டது. ஃபெடாயீன் என்றால் அரேபிய மொழியில் தியாகிகள் என்று அர்த்தம். இந்தக் குழுதான் முதன் முதலில் எல்லைகளைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினர்மீது தாக்குதல் நடத்தியது. எல்லைகளில் இருந்த குடியிருப்புகளை தகர்த்துத் தள்ளியது.

பாலஸ்தீனர்களிடம் இருந்து இப்படியொரு தாக்குதலை இஸ்ரேல் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆடிபோய் நின்றது. இவர்களுக்கு எப்படி இத்தனை தையரியம்? யார் உதவுவது? நாசரா? அவர் கனவில்கூட அஞ்சி நடுங்கும்படி செய்கிறேன் பார் என்று எகிப்துக்குப் பதிலடிகொடுக்க திட்டமிட்டது.

ஆனால் இதனை முறியடிக்கவும் நாசர் ஒரு வழி வைத்திருந்தார். அமெரிக்கா உதவாவிட்டால் என்ன? செக்கோஸ்லோவியாக்கியா ஆயுதங்களை விற்கிறது. அவர்களிடம் பேசி போருக்குத் தேவையான ஆயுதங்களை வாங்கிக்கொள்வோம் எனப் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார். இந்த விஷயம் வெளியே தெரியவர அமெரிக்க வெளியுறவு செயலாளர் முதல் விமானத்தைப் பிடித்துக்கொண்டு கெய்ரோவுக்கு ஓடிவந்தார்.

நாசர், நீங்கள் செய்வது மிகவும் தவறு. நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கம்யூனிஸ்டுகளின் கைகளுக்குள் விழுந்து கொண்டிருக்கிறீர்கள். இப்படிச் செய்வது உங்களுக்குத்தான் பிரச்னையாய் சென்று முடியும் என்று எச்சரித்தர். ஆனால் நாசர் டல்லஸின் அறிவுறுத்தலைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். தயவு செய்து உங்கள் நாட்டுக்குக் கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டார். இது அமெரிக்காவுக்கு மேலும் வலித்தது.

உடனே அமெரிக்க அரசு எகிப்தில் கட்டப்பட்டு வரும் அஸ்வன் அணைக்கு உதவி வருவதை நிறுத்துவதாக அறிவித்தது. அந்த அணைதான் எகிப்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பாகமாகக் கருதப்பட்டது. எகிப்து தேசத்தில் பாலைவனமாகவுள்ள 75 சதவிகித பகுதிகளில் நடைபெறும் விவசாயத்துக்கு நீர் வழங்கி வாழ்வாதாரம் அளிப்பதாக இருந்தது. இதனைத் தடுத்து நிறுத்தினால் எகிப்து பயந்துகொண்டு வந்து காலில் விழும் என்று அமெரிக்கா நினைத்தது. பிரிட்டனும் பிரான்ஸும் கூட அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை மனம்விட்டுப் பாராட்டின.

ஆனால் நாசர் அசரவில்லை. நீ அணையில் கைவைத்தால் நான் அடியில் கைவைப்பேன் என்று அதுவரை மேற்கத்திய வணிகத்திற்கு சொர்க்க வாசலாக இருந்துவந்த சூயஸ் கால்வாயைத் தேசியமயமாக்குவதாக அறிவித்துவிட்டார்.

மேற்கத்திய கப்பல்கள் ஆசியாவிற்குள் நுழையும் குறுக்குப் பாதையாக சூயஸ் கால்வாய்தான் இருந்துவந்தது. அதுவும் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அதனை தேசியமாக்கிவிட்டதால் நீங்கள் கட்டணம் செலுத்தித்தான் உள்ளே வர வேண்டும். அந்த வருமானத்தை வைத்து நான் அஸ்வன் அணையைக் கட்டி பாலைவனத்தைப் பசுமையாக்கிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

மேற்கத்திய நாடுகள் மிரண்டு விட்டன. கடிதங்களும் தந்திகளும் ஐரோப்பிய, அமெரிக்க தேசத் தலைவர்கள் இடையே பறந்தன. பிரிட்டனும் பிரான்ஸும் இணைந்து உடனே எகிப்துக்கு எதிரான ராணுவப் படையெடுப்பை நிகழ்த்த வேண்டும் என்று அவசரப்படுத்தின. பிரிட்டன் மீண்டும் சூயஸில் காலடி எடுத்துவைத்துவிட வேண்டும் என்று குதியாய் குதித்தது. பிரான்ஸோ எப்படியாவது நாசரை அடித்து ஓடவிட வேண்டும் என்று ஆடியது. ஆனால் அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் இருவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.

பொறுங்கள், அவசரம் வேண்டாம். நாம் இந்தப் பிரச்னையை நுட்பமாக கையாள வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என இறங்கக்கூடாது. முதலில் பொருளாதார அழுத்தம் கொடுத்து எகிப்தைப் பணிய வைப்போம். அது வேலைக்கு ஆகவில்லை என்றால் படையெடுத்து வழிக்குக் கொண்டு வருவோம் என்றார்.

ஆனால் பிரிட்டனும் பிரான்ஸும் அமெரிக்காவின் பேச்சைக் கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தன. எகிப்துக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என்று முந்திக்கொண்டு நின்றன. அதற்காக அமெரிக்காவுக்குத் தெரியாமல் ரகசியமாக இஸ்ரேலுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டன.

பிரிட்டனும் பிரான்ஸும் என்ன செய்யலாம் என்று தேடிக்கொண்டிருந்தபோது இஸ்ரேல் மேற்கத்திய நாடுகளுடன் நட்புகொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிந்தது. நாம் என்ன சொன்னாலும் மறுபேச்சு இல்லாமல் செய்துமுடிக்கும் என்று இரு நாடுகளுக்கும் புரிந்தது. உடனேயே இஸ்ரெலைத் தொடர்புகொண்டு அவர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி பிரான்ஸும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும். ஆனால் இஸ்ரேல் எகிப்தின் சினாய் தீபகற்பத்திலும் காசா துண்டிலும் நுழைந்து தாக்குதல் நடத்த வேண்டும். விரும்பிய விளைவு கிடைக்கும்பட்சத்தில் பொருளாதார உதவிகளை வழங்குவது பற்றிப் பேசுவோம் என்று சொல்லிவிட்டன. இஸ்ரேலும் உற்சாகமாக ஆமோதித்தது.

பிரிட்டனும் பிரான்ஸும் வேண்டிய விமானங்களையும் கப்பல்களையும் வரிசையாக இஸ்ரேலுக்குள் அனுப்பி வைத்தன. சொன்னபடி சரியாக செய்ய வேண்டும். காரியத்தில் எந்தத் தடங்கலும் வந்துவிடக்கூடாது என்றன.

இஸ்ரேலியப் படையினர் பிரிட்டன் கொடுத்த விமானங்களில் பறந்தனர். அவர்களைப் பின் தொடர்ந்து கப்பற்படையும் ஒருங்கிணைந்து சென்றது. ஒருவாரம்தான் சண்டை நீடித்தது. இஸ்ரேல் வெற்றிகரமாக சூயஸ் கால்வாயைக் கைப்பற்றிவிட்டது. அதன்பின்னும் முன்னேறி அடுத்த சில மாதங்களில் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. எகிப்து அதிந்துபோய் நின்றது.

பென் குரியன் அகம் மகிழ்ந்து நின்றார். வெற்றிபெற்றுவிட்டோம். மாபெரும் எகிப்து ராணுவத்தை வீழ்ததிவிட்டோம். இனி மேலைநாடுகளின் கதவுகள் திறக்கும் என்று பெருமையுடன் முழங்கினார்.

ஆனால் சோவியத் ஒன்றியம் பார்த்தது. எகிப்தில் மீண்டும் மேற்கத்திய ஆதிக்கம் திரும்புவதுபோல அதற்குத் தோன்றியது. இந்தப் படையெடுப்பை நிறுத்தவில்லை என்றால் மாஸ்கோவில் இருந்து படையை அனுப்பி இஸ்ரேலை துவம்சம் செய்துவிடுவேன் என்று சீறியது. சோவியத்தே நேரடியாக உள்ளே வருகிறது என்றவுடன் அமெரிக்கா பயந்துவிட்டது.

முதலில் என்ன நடக்கிறது என்றே அதற்குத் தெரியவில்லை. எகிப்துமீது நாம்தான் எந்தப் படையெடுப்பையும் நிகழ்த்தவில்லையே ஏன் இந்த சோவியத் இஸ்ரேல் படையெடுப்பைச் சர்வதேசப் பிரச்னையையாக மாற்றுகிறது என்று குழம்பியது. அதன்பிறகுதான் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ரகசிய திட்டம் இருப்பது தெரிந்தது.

அமெரிக்கா கொந்தளித்துவிட்டது. பிரிட்டனையும் பிரான்ஸையும் அழைத்து கன்னாபின்னாவென திட்டியது. கையை வைத்துக்கொண்டு கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டீர்களா? அமைதியாக இருங்கள் என்று எத்தனை முறை சொன்னேன். என்னைக் கேட்காமல் சுயமாக முடிவெடுக்கிறேன் என்று ஏன் இப்படிப் பிரச்னையைப் பெரிதுபடுத்துகிறீர்கள்? உடனே நீங்கள் இஸ்ரேலுக்கு அனுப்பிய ஆயுதங்களைத் திரும்ப பெறுங்கள். அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று நான் சொல்வதை மட்டும் வாயைப் பொத்திக்கொண்டு அமைதியாகக் கேளுங்கள் என்றது. இரு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராகத் தன் கண்டனத்தையும் வெளிப்படையாகப் பதிவு செய்தது.

அமெரிக்கா, சோவியத் இரு நாடுகளும் ஒரே அணியில் நின்றவுடன் ஐநா தலையிட்டு எகிப்தின் எல்லையில் நடைபெறும் இந்தப் படையெடுப்பை தடுத்து நிறுத்தியது.

இஸ்ரேலுக்கு இது பெருத்த அவமானமாகிப்போனது. நானே கஷ்டப்பட்டு தொடர் தாக்குதலை நடத்தி சில பகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறேன். இதனைத் திரும்பி தர முடியாது என்று முதலில் மறுத்தது. அதன்பின் தயக்கத்துடன் பின் வாங்கியது. இஸ்ரேல் படைகள் கிளம்பியவுடன் ஐநா படைகள் காசாவிலும், தைரன் ஜலசந்தியிலும் (Straits of Tiran) கூடாரமிட்டன.

இஸ்ரேலின் சூயஸ் படையெடுப்பு அதன் ஆக்கிரமிப்பு காலனிய முகத்தை உலக நாடுகளுக்கு வெளிகாட்டியது. மேலும் இந்தப் படையெடுப்பின்போது இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீன எல்லை கிராமமான ஃபார் கசிமில் நுழைந்து ஊரடங்கை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாலை 4.30 மணிக்கு வெளியானது. இப்படியொரு அறிவிப்பு இருப்பது தெரியாமல் காலையில் வேலைக்குச் சென்ற விவசாயிகள் மாலை 6 மணி வாக்கில் வீடுகளுக்குத் திரும்பியபோது இவர்களை எல்லால் இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதில் 37 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

அதேபோல காசா துண்டிற்குள் நுழைந்தபோது அப்பகுதியில் இருந்த பாலஸ்தீனப் போராளிகளின் பெயர் பட்டியலைத் தயாராக வைத்துக்கொண்டுதான் இஸ்ரேல் கிளம்பியது. இதனைக் காரணம் காட்டி அங்கே இருந்த எகிப்திய அரசாங்க அலுவலகம் ஒன்றிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் போராளிகள், பொதுமக்கள் என 250 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர். எகிப்திய ராணுவத்தால் எதுவும் செய்யமுடியவில்லை. அங்கிருந்த பாலஸ்தீனப் போராளிகள்தான் துணிந்து இஸ்ரேலிய வீரர்களை எதிர்த்தனர்.

1956ஆம் ஆண்டு ஐநா துருப்புகள் உள்ளே நுழைந்தவுடனேயே நாசர் பாலஸ்தீனர்களுக்குப் பயிற்சி தருவதை நிறுத்துவதாக அறிவித்துவிட்டார். எதற்குத் தேவையில்லாமல் இஸ்ரேலுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க வேண்டும்? அமைதியாக நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம் என்றுதான் பின்வாங்கினார்.

இது பாலஸ்தீன மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. நாசாரின் தயவால் அவர்கள் இஸ்ரேலை எதிர்க்க அப்போதுதான் தயாராகி இருந்தனர். எப்படியும் இழந்த நிலங்களை இஸ்ரேலிடம் மீட்டுவிடலாம் என்று கனவு கண்டனர். ஆனால் நாசரின் அறிவிப்பு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. உருவாகி இருந்த முதல் தலைமுறை போராளிகளையும் இஸ்ரேல் முற்றிலுமாக அழித்திருந்தது.

ஆனால் நாசர் தூவிய எதிர்ப்புணர்வின் விதை மக்கள் மனதில் வேர்விட்டு வளரத் தொடங்கி இருந்தது. புதிதாக உருவாகியிருந்த புரட்சியின் முளை பல்வேறு அரபு நாடுகளிலும் வாழ்ந்த பாலஸ்தீனர்களிடமும் கிளைவிட்டிருந்தது.

இஸ்ரேல் காசாவில் தோன்றிய போராளிகளை ஒடுக்கிவிட்டது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே மழைக் காலத்தில் முளைக்கும் காளான்கள்போல ஆங்காங்கே புரட்சிகர இயக்கங்கள் தோன்றத் தொடங்கின. இப்படித்தான் பாலஸ்தீன மக்களின் தேசிய விடுதலை இயக்கம் உதயமானது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *