ஐம்பதுகளில் பாலஸ்தீன இளைஞர்கள் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இருந்தனர். லெபனானின் பெய்ரூட் நகரத்தில் இருந்து குவைத்தின் சிறு கிராமங்கள்வரை எல்லா இடங்களிலும் கல்லூரிகளில் படித்துக்கொண்டும், சிறுவேலைகள் செய்துகொண்டும் பிழைத்து வந்தனர். இவர்களைத்தான் பாலஸ்தீன போராளி இயக்கங்கள் ஈர்த்தன.
1953ஆம் ஆண்டு லைடாவைச் சேர்ந்த பாலஸ்தீன மருத்துவர் ஜோர்ஜ் ஹபாஷ் என்பவர் அரபு தேசியவாத இயக்கத்தைத் (Arab Nationalist Movement) தொடங்கினார்.
ஜோர்டனில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் அங்கேயே ரகசியமாக இயங்கி மக்களைப் பாலஸ்தீன அரசியல் லட்சியங்களுக்காக ஒருங்கிணைத்து வந்தது. ஒருகட்டத்தில் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் மாட்டினால் மரணம் அல்லது கடுஞ்சிறை என்கிற நிலைக்குச் சென்றனர்.
ஆனால் மற்ற அரபு நாடுகளில் இந்த இயக்கம் மக்களிடையே எழுச்சியையூட்டி மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், சியோனியர்களுக்கு எதிராகவும் அவர்களை ஒன்று திரட்டியது. இந்த இயக்கம் இஸ்ரேலின் ஒவ்வொரு நகர்வையும் கூர்ந்து ஆராய்ந்தது. இஸ்ரேல் இதற்கு முன் என்ன செய்தது? இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது? அடுத்து என்ன செய்யும்? அலசி ஆராய்ந்தது.
நம்மால் ஏன் இஸ்ரேல் எனும் கொசு அளவு தேசத்தை வீழ்த்தமுடியவில்லை? இந்த மண் எங்கிலும் அரேபியர்கள்தாம் இருக்கிறோம். அனைவரும் ஒற்றுமையாகவும் இருக்கிறோம். நாம் சேர்ந்தால் இஸ்ரேலை வென்றுவிட முடியாதா? எது தடுக்கிறது?
அரபு தேசியவாத இயக்க உறுப்பினர்கள் பிரச்னையை உற்றுநோக்கியபோது ஒன்று புரியவந்தது. அது, இங்கே பாலஸ்தீனர்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணம் இஸ்ரேல் அரசோ, மேற்கத்திய நாடுகளோ மட்டுமல்ல அரபு மன்னர்களும்தான். 1948ஆம் ஆண்டு போரில் அவர்கள் செய்த துரோகங்களும்தான்.
மன்னர்கள், ஆட்சியாளர்கள், நிலக்கிழார்கள், வணிகர்கள், மதத்தலைவர்கள் இவர்கள் எல்லோரும் மனதில் குறுகிய எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சுயநலவாதிகளாக சிந்திக்கிறார்கள். அதனாலேயே மேலை நாடுகளுக்குச் சேவகம் செய்வதற்கு வரிசையில் நிக்கின்றனர். ஆனால் நமது மக்களோ இவர்களைத்தான் தங்களின் பிரதிநிதிகள் என நம்பி ஏமாறுகின்றனர்.
சவுதி அரேபிய எண்ணெய் தொழிலாளர்களுக்கு அந்நாட்டு மன்னர் வெறும் 12 செண்ட்தான் கூலி தருகிறார். ஜோர்டானில் விவசாயிகள் சம்பாதிக்கும் தொகை அவர்கள் வயிற்றுப் பசியை போக்கவே போதவில்லை. லெபனான் விவசாயக் கூலிகள் தங்கள் சொந்த நிலங்களில் இருந்து துரத்தப்பட்டு வேலையில்லாமல் பெய்ரூட் நகரங்களில் அல்லாடுகிறார்கள். ஆனால் இவர்களை எல்லாம் அரபு அதிகார வர்க்கம் கண்டுகொள்வதே இல்லை.
அரபு தலைவர்கள் மூச்சுக்கு முன்னூறு முறை பாலஸ்தீனர்கள், பாலஸ்தீனர்கள் என உணர்ச்சி கொந்தளிக்க பேசுகிறார்கள். ஆனால் உரிமையைக் கேட்டு குரல் கொடுப்பவர்களை பிடித்து சிறையில் தள்ளுகிறார்கள். லெபனான் அரசு பாலஸ்தீனர்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கிறது. வாழ்வை ஓட்டுவதற்கு வேலை தராமல் விரட்டுகிறது. ஜோர்டன் அரசு பாலஸ்தீனர்களைக் கண்டாலே பிடித்து சிறையில் அடைத்துவிடுகிறது. இதையெல்லாம் யார் கேட்பது? நாம்தான் கேட்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக மட்டுமல்ல நம்மை வஞ்சிக்கும் அரபு தலைவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டும். இது பாலஸ்தீனர்களுக்கான போராட்டம் அல்ல. ஒட்டுமொத்த அரேபியர்களுக்கான போராட்டம் என்றனர்.
சூயஸ் கால்வாய் விவகாரத்தில் நாசர் நடந்துகொண்ட விதம் பல பாலஸ்தீனர்களுக்கு நம்பிக்கையை விதைத்தது. நிச்சயம் அரபுலகில் அடிதளத்திலேயே அவர் மாற்றப்போகிறார் என்று நம்பினர். பாலஸ்தீனத்தின் விடுதலை அவராலேயே அரங்கேறும் எனக் கனவு கண்டனர்.
நாசர் பாலஸ்தீனர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை நாயகனாக மாறினார். அவருடைய படங்கள் அகதி முகாம்களில் இருந்த ஒவ்வொரு குடிசையின் சுவரிலும் மாட்டப்பட்டிருந்தது. நாசர் வானொலியில் பேசுகிறார் என்றால் பாலாஸ்தீன மக்கள் தாங்கள் செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்து கூட்டமாகக் கூடி நின்று அவருடைய உரைகளைக் கேட்டனர். மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அவரது வீரதீரக் கருத்துகள் பாலஸ்தீனர்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டன.
1958ஆம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரேபியக் குடியரசை நிறுவின. மத்தியக் கிழக்கில் ஒருங்கிணைந்த அரபு தேசத்தை எதிர்பார்த்துக் கனவு கண்ட தேசியவாதிகளுக்கு இந்த நகர்வு பெரும் உவப்பை அளித்தது.
இருநாடுகள், சியோனியத்தையும் மேற்கத்திய ஆதிக்கத்தையும் எதிர்க்கும் செயல்திறன்மிக்க இரு நாடுகள் இணைந்தது படித்த மாணவர்களுக்கும் எண்ணெய்க் கிணறுகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கும் அரசு இயந்திரங்களில் செயலாற்றி வந்த சான்றோர்களுக்கும் புது உத்வேகத்தை அளித்தது.
இந்த அரபு தேசியவாதத்தின் எழுச்சி அமெரிக்காவுக்குக் கவலையூட்டியது. சூயஸ் விவகாரத்தில் பிரிட்டனும் பிரான்ஸும் வாங்கிய மட்டையடி அமெரிக்காவை மத்தியக் கிழக்கில் யாரும் எதிர்க்கத் துணியாத வல்லாதிக்கச் சக்தியாக உருவாக்கி இருந்தது. ஆனால் இதனை அரபு தேசியவாதம் அசைத்துப் பார்க்க நினைப்பது அதற்குக் கவலையூட்டியது. அமெரிக்கா தனது நட்புநாடுகளுடன் இணைந்து மத்தியக் கிழக்குப் பகுதிகளில் புதிய ராணுவத் தளங்களை உருவாக்கத் தொடங்கியது. அமெரிக்கப் போர்க் கப்பல்கள் (Sixth Fleet) மத்தியத்தரைக்கடல் பகுதிகளில் ரோந்து சென்றன.
1957ஆம் ஆண்டு அமெரிக்கா ஐசனோவர் கொள்கை எனும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இது ஏற்கெனவே மத்தியக் கிழக்கில் இருந்த திட்டம்தான். இதன்படி மத்தியக் கிழக்கு நாடுகள் கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியைத் தயங்காமல் நாடலாம். அமெரிக்காவும் கேள்வியில்லாமல் உதவி செய்யும். கம்யூனிசப் பரவலை எதிர்க்கப் போதிய ஆள் பலம் இல்லை என்றால் அமெரிக்க வீரர்களே நேரில் வந்து சண்டையிட்டு தருவார்கள்.
இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். கம்யூனிசம் என்றால் மார்க்ஸ்-லெனின் கொள்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்தெந்தக் கொள்கைகள் எல்லாம் அமெரிக்க வணிகங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதோ அதுவெல்லாம் கம்யூனிசம்தான். அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தும் அரசியல் இயக்கங்கள் அனைத்தும் கம்யூனிச இயக்கங்கள்தாம்.
எகிப்தும் சிரியாவும் நிலசீர்த்திருத்தம் என்ற பெயரில் முதலாளிகளின் நிலங்களைப் பிடுங்கி பொதுமக்களுக்குத் தருவதும், மேற்கத்திய வணிக அடிதளங்களை அசைத்துப் பார்ப்பதும் கம்யூனிசம்தான். இதனால் அதனை அழித்தே ஆகவேண்டும் என்று துடித்தது அமெரிக்கா. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் மேலேகூறிய ஐசனோவர் திட்டத்தைக் கொண்டு வந்தது.
சிரியாவும் எகிப்தும் ஐக்கிய அரபு குடியரசைத் தோற்றுவித்தவுடன் அமெரிக்காவின் விஸ்வாசியான ஈராக் நாட்டின் தலைவர் நூரி எஸ்-செயித் சிரியாமீது படையெடுக்க முடிவு செய்தார். அவ்வாறு செய்து எகிப்திடம் இருந்து சிரியாவைப் பிரித்துவிட வேண்டும் என்பது அவரது திட்டம்.
ஆனால் ஈராக் படைவீரர்களே அவரது கொள்கைக்கு எதிராக இருந்தனர். ஈராக் வீரர்கள் தேசியவாத லட்சியங்களைக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் ஈராக் தலைவரின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து, தங்கள் அணிவகுப்பைத் தலைநகரான பாக்தாத் நோக்கி திருப்பினர். சில நாட்கள்தான் சண்டை நடந்தது. ஜூலை 14,1958 அன்று எஸ்-செயித்தின் ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஈராக் குடியரசை நிறுவினர். இந்தச் செய்தி கிடைத்தவுடன் ஈராக் மக்கள் பாக்தாத் நகர வீதிகளில் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து லெபனான், ஜோர்டன் நாடுகளில் இருந்த அரபு தேசியவாதிகளும் அங்கிருந்த வலதுசாரி அரசுகளுக்கு எதிராகச் சண்டையிடத் தொடங்கினர். லெபனானில் மேலை நாடுகளுக்கு ஆதரவு தந்துவந்த காமில் சாமூன் இரண்டாவது முறையாக அதிபராக முயற்சித்தபோது உள்நாட்டு யுத்தமே வெடித்தது. லெபனிய நகரமான சோர் பகுதியை அரபு தேசியவாதிகள் கைப்பற்றி மக்களை ஒன்றுதிரட்டினர்.
இவர்கள் அருகில் இருந்த சிறைகளுக்குள்ளும் காவல்நிலையங்களுக்குள்ளும் புயலாக நுழைந்தனர். கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லி கைது செய்யப்பட்ட போராளிகளை விடுதலை செய்தனர். இது மற்ற நகரங்களுக்கும் பரவினால் நிலைமை மோசமாகிவிடும் என்று கருதிய அமெரிக்க அரசு பெய்ரூட்டுக்குக் கப்பல் படையை அனுப்பி சாமூனின் அரசைப் பாதுகாத்தது. பிரிட்டன் விமானப்படை ஜோர்டனுக்குள் நுழைந்து அங்குள்ள தேசியவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த ஹுசைனின் ஆட்சியைக் காப்பாற்றியது.
அன்றைய தேதியில் மேற்கத்திய நாடுகளின் உதவியால்தான் ஜோர்டன் அரசும் லெபனான் அரசும் தப்பித்தன என்பதுதான் நிஜம். ஆனால் இதே மேற்கத்திய கும்பலால் எகிப்து, சிரியாவிடம் வாலாட்ட முடியவில்லை.
மேற்கூறிய புரட்சியில் எல்லாம் பங்கேற்றது பெரும்பாலான மக்கள் பாலஸ்தீனத்தில் இருந்து அந்தந்த நாடுகளுக்குக் குடிபெயர்ந்தவர்கள்தாம். அவர்கள் பிற நாட்டு அரேபியர்களுக்கும் உதவி, தம் நாட்டையும் மீட்க வேண்டும் என்ற லட்சியத்தில் இயங்கி வந்தனர்.
ஆனால் 1958இன் இறுதியில் அரபு தேசிய எழுச்சி தானாகவே அடங்கத் தொடங்கியது. அரிதாக உருவாகி இருந்த அரபு தேசிய எழுச்சியை ஒருங்கிணைத்து கொண்டுபோக இந்த முறையும் சரியான தலைவர்கள் இல்லை. இதனால் அவர்கள் எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். பாலஸ்தீனத்தின் மீதான அவர்கள் கவனமும் கலையத் தொடங்கியது.
ஆனால் பாலஸ்தீனர்கள் அப்போதும் நம்பிக்கை இழக்கவில்லை. நிச்சயம் பாலஸ்தீன விடுதலைக்கு தங்களை அழைத்துச் செல்லும் பாதை கண்முன் தோன்றும் என்றே உறுதியாக இருந்தனர்.
அவர்களுடைய ஒரே கவலை தாம் சிதறிக் கிடக்கிறோம் என்பதுதான். நாம் பல்வேறு தேசங்களில் குடிபுகுந்துள்ளோம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு திசையில் உள்ளது. ஒவ்வொரு திசையும் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நாம் எல்லோரும் எப்படி ஒருங்கிணைந்து நமது விடுதலைக்காக சண்டையிட முடியும்? இதுதான் அவர்களுடைய வருத்தம்.
அவர்கள் எல்லோருக்கும் ஃபெடாயீன் என்று அழைக்கப்பட்ட காசா போராளிகளின் கதைகள் உத்வேகமூட்டின. அரபு அரசாங்கங்கள் வெட்டிக் கதை பேசிக்கொண்டிருந்தபோதே வீரதீர செயல்கள் செய்து இஸ்ரேலை எதிர்த்துச் சண்டையிட்டவர்கள் அவர்கள். நமது மாவீரர்கள்.
நாசர் ஏற்றி வைத்த தீபம் இன்று எல்லோர் மனதிலும் எரிந்துகொண்டிருக்கிறது. இனியும் நாம் அரபு தலைவர்களை எதிர்ப்பார்த்து நிற்பது நல்லதல்ல. அவர்களுடைய பேச்சுவார்த்தைகளுக்கு இஸ்ரேல் பணியும் என்று நம்புவதும் வேலைக்கு ஆகாது. ஆயுதங்களே ஒரே தீர்வு. நாம் ஆயுதங்கள் ஏந்த வேண்டும். அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும். அப்போது அலறியடித்துக்கொண்டு இஸ்ரேல் வழிக்கு வரும். பாலஸ்தீன தாயகம் நமக்கு மீண்டும் கிடைக்கும். இதுவே லட்சியம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
1958ஆம் ஆண்டு 12 இளம் பாலஸ்தீனர்கள் குவைத்தில் கடற்கரை ஒன்றில் ரகசியமாகக் கூடி எதற்கும் கட்டுப்படாத, சுதந்திரமாக இயங்கும் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு இயக்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஆலோசனை செய்தனர். அந்த இயக்கம் நிச்சயம் அரபு அரசாங்கங்களுக்குக் கீழ் இயக்கங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இந்தப் பாலஸ்தீனர்கள் தீவிரமாக இயங்கி வந்த பல்வேறு மாணவர் அமைப்புகளில் இருந்தவர்கள். சிலர் வளர் பருவத்திலேயே 1948ஆம் ஆண்டு போரில் ஆயுதம் தாங்கி இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டையிட்டவர்கள். இவர்கள்தான் இப்போது ஒன்றிணைந்து இருந்தனர்.
அவர்கள் லட்சியம் தீர்க்கமாக இருந்தது. பாலஸ்தீனர்கள் தமது தேசத்தின் விடுதலைக்காக அரபு தலைவர்களைச் சார்ந்திருக்கக்கூடாது. அவர்கள் என்ன வாக்குறுதிகள் கொடுத்தாலும் காதில் வாங்கிக்கொள்ளக்கூடாது. சுதந்திர பாலஸ்தினம் அமையப்போவது உறுதி. ஆனால் அதற்கான பாதையை நாம்தான் உருவாக்க வேண்டும். நாம்தான் அதற்கான முன்னெடுப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். விதி என்பது அரபு தலைவர்களால் எழுதப்படுவதாகக் இருக்கக்கூடாது. விதியின் எழுதுகோலை பாலஸ்தீனர்கள்தான் தம் கைகளில் வைத்திருக்க வேண்டும்.
இந்த 12 வீரர்கள் இணைந்து உருவாக்கிய இயக்கம்தான் ஃபதா. ஃபதா என்றால் அரபியில் திறப்பு அல்லது வெற்றி என அர்த்தம். அரபு மொழியில் இந்த வார்த்தைகளைத் தலைகீழாகப் படித்தால் பாலஸ்தீன தேசிய விடுதலை இயக்கம் என்கிற வார்த்தையின் சுருக்க வடிவமாகத் தோன்றும். இப்படித்தான் ஃபதா உருவானது.
ஃபதாவைத் தொடங்கிய 12 வீரர்களில் ஒருவரின் பெயர் யாசர் அராஃபத்.
0
ஃபதா தொடங்கப்பட்டவுடன் முதலில் மக்கள் அனைவரிடமும் பாலஸ்தீன விடுதலை தொடர்பான கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்று நினைத்தது. இதற்காக ஓர் இதழைத் தொடங்கி (Falasteenuna) ரகசியமாக அதில் விடுதலை தொடர்பான கருத்துகளைப் பிரசுரித்தது. அரபு நகரங்கள், அகதிகள் முகாம்களில் இருந்த ஒவ்வொருவரின் கைகளிலும் இந்த இதழ் தவழும்படி பார்த்துக்கொண்டது.
ஃபதா பாலஸ்தீனர்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. பாலஸ்தீனர்கள் ஏதாவது அரபு நிறுவனங்களில் இருந்தால் அதில் இருந்து முதலில் வெளியேறுங்கள். நாம் தனியாக நிறுவனங்களை உருவாக்குவோம். நமக்கு வேண்டியவற்றை நாமே செய்துகொள்வோம். எல்லோரும் இணைந்து பணியாற்றினால்தான் சுதந்திர பாலஸ்தீனம் உதயமாகும்.
ஏகாதிபத்தியங்களின் தோட்டாக்கள் 1936 புரட்சியை ஒடுக்கின. சியோனிய ராணுவம் நம்மை வீடுகளில் இருந்து வெளியேற்றியது. அமெரிக்க ராணுவம் இந்த அத்துமீறல்களுக்கு எல்லாம் துணைபோகிறது. இன்னும் ஏன் கண்ணைக் கட்டிக்கொண்டு அரபு தலைவர்களை நம்பிக்கொண்டு இருக்க வேண்டும்? 1936இல் நடந்ததுபோல பாலஸ்தீனர்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களை ஏந்துவோம். ஏகாதிபத்தியங்களையும் அவற்றின் நண்பர்களையும் விரட்டியடிப்போம். விரைவில் போர் வரப்போகிறது. அதற்குத் தயராகுங்கள் என்று அழைப்பு விடுத்தது.
ஆனால் ஃபதா தொடங்கப்பட்ட புதிதில் ஒருசில பாலஸ்தீனர்களே உறுப்பினர்களாக இணைந்தனர். பெரும்பாலானோர் நாசர் வந்து நம் அரபு மக்களை பாலஸ்தீனம் நோக்கி அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் ஃபதா நாசரின் வரம்பு என்ன என்பதைச் சுட்டிக்காட்டியது. அவர் செய்யத் துணியாத காரியங்கள் என்னென்ன என்று பட்டியலிட்டது.
நாசர் ஒரு நம்பிக்கை ஆளுமைதான் என்றாலும் அவர் ஒரு தேசத்தில் தலைவர். எந்தத் தலைவரும் தம் தேசத்தை முதன்மையாக வைத்துத்தான் இயங்குவார். அதனால் அவரது கருத்துகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, நாசரே நம்மை மீட்கும் இறைதூதர் என்று நம்புவது மடைமை என்று சொன்னது.
உண்மையில் ஃபதா சொன்னதுதான் நிஜமாக மாறியது. 1961ஆம் ஆண்டு சிரியா எகிப்துடனான ஐக்கியக் குடியரசில் இருந்து விலகிக்கொண்டது. நாசர் அதன் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செய்கிறார் என்று குற்றம்சாட்டியது. ஐக்கியக் குடியரசின் சிதைவு அரபு ஒற்றுமை சாத்தியமா என்ற கேள்வியை மக்களுக்கு உண்டு பண்ணியது. மேலும் நாசரின் மீதான அரபு மக்களின் மதிப்பையும் குறைத்தது. இதுதான் ஃபதாவை நோக்கி பாலஸ்தீனர்கள் திரும்புவதற்கு காரணமாக அமைந்தது.
1963ஆம் ஆண்டு நாசரின் கவனம் முழுவதையும் எகிப்தில் நிலவி வந்த பொருளாதாரப் பிரச்னைகளே ஆக்கிரமித்து இருந்தன. அதனால் அவர் பாலஸ்தீனத்தை விடுவிக்கத் தன்னிடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். இது பாலஸ்தீனர்களின் மனதில் இடியாக விழுந்தது.
அவர்கள் இதுவரை நாசரையே இறைவனாக வழிபட்டு வந்தனர். அவரையே கதாநாயகராகக் கொண்டாடி வந்தனர். இப்போது அவரே பாலஸ்தீனத்துக்கு உதவ முடியாது என்று கைவிரித்தது அவர்களை ஆழமாகப் பாதித்தது. எனில் அதுவரை எகிப்திய வானொலியில் அவரது குரலில் ஒலித்து வந்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யா?
நாசரின்மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதைப் பாலஸ்தீன எழுத்தாளர் ஃபவாஸ் துர்கி தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை விவரித்து சுட்டிக்காட்டுகிறார். ‘வீட்டில் என் தந்தையுடன் காரசாரமாக வாதாடிக்கொண்டிருந்தேன். மத்தியக் கிழக்கு அரசியல் குறித்த அவரது வெகுளித்தனமான அபிப்ராயங்களால் ஆத்திரம் அடைந்தேன். ஒருகட்டத்தில் கோபத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த நாசரின் படத்தைக் கிழித்து எறிந்து அதில் காறி உமிழ்ந்தேன். வாழ்க்கையில் இன்பத்தையே கண்டிராத என் தந்தைக்கு ஒருவரின் சிரிக்கும் முகம் கொடுத்த நம்பிக்கையை நான் தகர்த்தேன். பூமியில் என் தந்தை தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். அவருக்கு நாசரைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. நாசர்தான் அவரது நம்பிக்கையாய் இருந்தார். அவர் மட்டுமல்ல அங்கிருந்த பத்து லட்சம் மக்களும் நாசரையே நம்பி இருந்தனர்.’
இந்தக் காலகட்டத்தில்தான் அரபு தேசியவாத இயக்கங்களில் இருந்த எண்ணற்ற பாலஸ்தீனர்கள், நாசரின் வாக்குறுதிகளால் கட்டப்பட்ட கனவுக் கோட்டையைத் தகர்த்துவிட்டு தனி வழியில் செல்லத் தொடங்கினர். சிலர் ஃபதாவில் இணைந்தனர். சிலர் தனியாக கெரில்லா இயக்கங்களை நிறுவினர்.
எல்லா அமைப்புகளும் மாணவர்கள், தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தன. அகதி முகாம்களில் இருந்தும் அந்த அமைப்புகளுக்கு ஆட்கள் வரத் தொடங்கினர். பெரும்பாலானவை மார்க்சியப் போராளி இயக்கங்களாக இருந்தன.
அது உலகம் முழுவதும் புரட்சிகரக் கருத்துகள் பரவிக்கொண்டிருந்த காலம். ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளில் புரட்சிகர இயக்கங்கள் தோன்றி ஆங்காங்கே புரட்சிகள் அரங்கேறிகொண்டிருந்தன. அதன் பாதிப்பு உலகம் முழுவதும் எதிரொலித்தது. அதன் தாக்கம்தான் அரபு நாடுகளிலும் குடிகொண்டது. அங்கு மதம் எனும் அம்சம் எந்த முக்கிய பாத்திரமும் வகிக்கவில்லை. அரேபியர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்கள் மதத்தை முன்னிறுத்தி இஸ்ரேலையும் அமெரிக்காவையும் எதிர்க்கவில்லை. அவர்கள் இயக்கம் ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்க்கும் சமூக இயக்கங்களாகவே இருந்தன.
இந்த இயக்கவாதிகள் மார்க்ஸ், லெனின், மாவோ, சே குவேரா ஆகியவர்களைத்தான் படித்தனர். இதனால் ஜோர்டான் உள்ளிட்ட சில நாடுகளில் மார்க்சிய புத்தகங்களை வைத்திருந்தால்கூட சிறை எனும் உத்தரவுகள் எல்லாம் வரப்பட்டன. ஆனால் எதுவும் மக்கள் அந்த இயக்கங்களை நோக்கி உந்தப்படுவதைத் தடுக்க முடியவில்லை.
பாலஸ்தீனர்கள் மார்க்சியப் புரட்சிகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்று வந்தனர். குறிப்பாக பிரெஞ்சு காலனியாதிக்கத்துக்கு எதிராக 7 ஆண்டுகள் சண்டையிட்ட அல்ஜீரியர்களின் அனுபவங்களை அவர்கள் கேட்டறிந்தனர். அமெரிக்காவுக்கு எதிராகச் சண்டையிட்ட வியாட்னாமியர்கள், கியூப மக்களின் அனுபவங்கள் பல பாடங்களைச் சொல்லித் தந்தன.
அரபு நாடுகளின் மூளை முடுக்கெல்லாம் பரவி இருந்த பாலஸ்தீனர்கள் இந்த இயக்கங்களில் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டையிடுவதற்காகப் பயிற்சியைத் தொடங்கினர். அவர்கள் எல்லோருக்கும் ஒரே அரசியல் தத்துவம்தான் இருந்தது. மக்கள் சுதந்திரமானவர்கள். யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் ஒன்றிணைந்தால் சக்திவாய்ந்த எதிரிகளைக்கூட வீழ்த்திவிடலாம்.
இந்தப் புதிய தலைவர்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை. நிலபுலன்கள் இல்லை. இனிமேல் இழக்க எதுவும் இல்லை. எங்களுக்கு வேண்டியது மக்களின் விடுதலை. வேறு எதை பற்றியும் கவலையில்லை. இந்தத் துணிச்சலே அவர்களை வழிநடத்தியது.
ஆதிக்கத்துக்கு எதிரான போர் நடைபெறப்போகிறது. அதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும். அவர்களை வழிநடத்த வேண்டும். யாரெல்லாம் சண்டையிட விரும்புகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் பயிற்சி அளித்தார்கள். அரசியல் பாடம் நடத்தினார்கள். ஆயுதங்களை வழங்கினார்கள். நடைபெறப்போகும் இந்த போரில் ஆளும் வர்க்கத்தினருடன் சமரசம் என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அவர்கள் உறுதியாக இருந்தனர்.
போராளிகளின் இத்தகைய உறுதிபாடும், விடுதலைக்காக உயிரையே தியாகமாக அளிக்க முன்வந்த மக்கள்கூட்டமும் இஸ்ரேலியர்களை மட்டுமல்ல அரபு தலைவர்களையுமேகூட அச்சுறுத்தியது.
இந்தத் தலைவர்கள் பாலஸ்தீனப் பிரச்னையை தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்தி வந்தவர்கள். எதிரிகளுடன் போட்டிப் போடுவதற்காக வெறும் பேச்சளவில் ஆதரவு தெரிவித்து வந்தவர்கள். அவர்கள் எல்லோருக்குமே இப்போது உருவாகி இருந்த சுதந்திர பாலஸ்தீன இயக்கங்களின்மீது அச்சம் ஏற்பட்டது.
1964ஆம் ஆண்டு அரபு தலைவர்கள் மாநாட்டை ஒன்றுகூட்டி பாலஸ்தீனர்களிடம் இழந்துவரும் செல்வாக்கை மீட்க வேண்டும் என்று பேசத் தொடங்கினர். என்றைக்கு இருந்தாலும் பாலஸ்தீனர்கள் ஆதரவு நமக்கு முக்கியம். அவர்கள் நம்முடன் இருப்பவர்கள். போராளி இயக்கங்கள் அவர்களை அபகரிக்க முயல்கின்றன. அதற்கு முன் நாம் முந்திகொள்ள வேண்டும். நாமும் போராளி இயக்கம் ஒன்றைத் தொடங்குவோம் என்று முடிவு செய்தனர்.
நாசர் தலைமையில் போராளி குழுக்களை எல்லாம் கட்டுப்படுத்துவதற்கு புதிய இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த இயக்கத்தின் பெயர் பாலஸ்தீன விடுதலை அமைப்பு. ஆங்கிலத்தில் Palestine Liberation Organization. சுருக்கமாக பி.எல்.ஓ.
பிஎல்ஓவின் தலைவராகப் பழைமை விரும்பி வழக்கறிஞரான அகமத் சுக்கெய்ரி என்பவரை அரபு தலைவர்கள் நியமித்தார்கள். இவர் சவுதி அரேபியாவில் பாலஸ்தீன விவகாரங்களை கையாளும் அமைச்சராக இருந்தவர். பாலஸ்தீனப் பிரச்சனைகளில் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவரே போராளிகளின் விவகாரங்களையும் பார்த்துக்கொள்ளட்டும் என்று நினைத்தனர்.
பிஎல்ஓ மே 1964இல் தனது முதல் கூட்டத்தைக் கூட்டியது. இதில் கலந்துகொள்ள அனைத்துப் போராளி இயக்கங்களுக்கும் அழைப்பு விடுத்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் ஃபதா மட்டுமே கலந்துகொண்டது. வேறு எந்த இயக்கங்களும் தலைகாட்டவில்லை.
ஃபதாவுக்கு மட்டும் ஒரு தெளிவு இருந்தது. எந்தப் போராளி இயக்கமும் தன்னிச்சையாக இயங்க முடியாது. ஆயுதங்கள் வாங்குவதற்கும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அண்டை நாடுகளின் ஆதரவு அவசியம். நாம் அவர்களுக்கு அடிபணிந்து போக வேண்டாம் ஆனால் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள தயங்கக்கூடாது.
எல்லா நாடுகளையும் ஏற்காவிட்டால்கூடக் குறைந்தது நாசர் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகளிடம் நட்புறவாக இருப்பதே நல்லது என்று நினைத்தது. ஆனாலும் சுதந்திரமாக செயல்படும் வகையிலேயே அந்த உறவை வைத்துக்கொண்டது.
இதுதான் மற்ற பாலஸ்தீன இயக்கங்களுக்கும் ஃபதாவுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு. பின்னாளில் பிஎல்ஓவுக்குக் கீழ் பல போராளி இயக்கங்கள் ஒருங்கிணைந்தபோது ஃபதாவின் தலைவர்கள் அவர்களை வழிநடத்துவதற்குக் காரணம் அவர்களுக்கு இருந்த இந்தத் தெளிவு. இதனால்தான் அவர்களே ஒருகட்டத்தில் பாலஸ்தீன மக்களின் ஒரே பிரதிநிதியாக நிலைத்து நின்றனர். அவர்கள் காட்டிய வழியிலேயே பாலஸ்தீன அரசியல் தீர்மானிக்கப்பட்டது.
ஜனவரி 1, 1965 அன்று உலகம் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடி வந்த வேலையில் ஃபதா இஸ்ரேல்மீதான தனது முதல் ஆயுதம் தாங்கிய தாக்குதலைத் தொடங்கியது. புயல்போன்ற தாக்குதல் அது. எல்லையில் நின்றிருந்த இஸ்ரேல் வீரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல். யார் தாக்கியது, எப்படித் தாக்கினார்கள் என்று எதுவும் தெரியாது. ஜோர்டனின் எல்லையில் நின்றிருந்த இஸ்ரேல் வீரர்கள் தெறித்து ஓடினர். எங்கே ஜோர்டன் ராணுவம்தான் தாக்குகிறதோ என்று இஸ்ரேல் நினைத்துவிட்டது. அதற்குப்பின்தான் உண்மைத் தெரிந்தது.
தாக்குதலுக்குப் பிறகு Al-Assifa (அரபியில் புயல் என அர்த்தம்) என்ற பெயரில் ஓர் அறிக்கையை ஃபதா வெளியிட்டது. போர் தொடங்கிவிட்டது. இஸ்ரேலிய அரசே கேட்டுக்கொள். பாலஸ்தீனத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்கள் மக்களுக்குச் சொந்தம். அதை விட்டு நீ ஓடும்வரை விடாமல் துரத்துவோம். நாங்கள் ஃபதா. எங்கள் வேட்கை பாலஸ்தீனத்தின் விடுதலை. அது கிடைக்கும் வரை ஓயமாட்டோம். அவ்வளவுதான். இஸ்ரேல் அரண்டுபோய் நின்றது.
ஃபதாவைத் தொடர்ந்து மற்ற போராளி இயக்கங்களும் இஸ்ரேல் மீதான தங்கள் தாக்குதலைத் தொடங்கின. நாலாப்புறங்களில் இருந்தும் தாக்குதல். யார் அடிக்கிறார்கள், எப்படி அடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இது புதிய யுகத்தின் தொடக்கம் என்பது மட்டும் இஸ்ரேலுக்குத் தெரிந்தது.
(தொடரும்)