பாலஸ்தீனப் போராளிகள் சியோனியத் தத்துவத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கத் தொடங்கி இருந்தனர்.
சியோனியத் தத்துவம் தொடக்கத்தில் இருந்தே பாலஸ்தீனத்தை மக்கள் இல்லா நிலம் என்றே கூறிவந்தது. அங்கு வாழ்ந்த அரேபியர்கள் அந்த நிலத்துக்குச் சொந்தமில்லாதவர்கள் என்றே கருதி வந்தது. சியோனியர்களின் ஆரம்பக் காலத் தலைவர்களில் இருந்து அப்போதைய பிரதமர் கோல்டா மேயர் வரை அதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர்.
‘பாலஸ்தீனர்கள் என்ற பதமே தவறானது. அப்படி ஒருவரும் கிடையாது. இங்கே பாலஸ்தீன மக்கள் இருந்தார்கள் என்றும், நாங்கள் அவர்களைத் துரத்திவிட்டு நாட்டைக் கைப்பற்றினோம் என்றும் கூறுவதே தவறு. இது எங்கள் நிலம். நாங்கள்தான் பூர்வகுடிகள். பாலஸ்தீனம் என்ற ஒன்றே இல்லை’. இதுதான் அவர்களுடைய வாதம்.
இப்போதும்கூட இஸ்ரேலின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அது யூத மக்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்பி வந்ததாகத்தான் இருக்கும். பாலஸ்தீனர்கள் என்ற வார்த்தை ஓரிடத்தில்கூடக் குறிப்பிடப்பட்டிருக்காது.
இந்தப் பொய்யை அசைத்துப் பார்ப்பதாகப் போராளி இயக்கங்கள் இருந்தன.
கெரில்லா இயக்கங்கள் வெளியிட்ட ஒவ்வோர் அறிக்கையும் மீண்டும், மீண்டும் பாலஸ்தீனர்களின் கதைகளையே பேசியது. வரலாற்றில் அவர்களின் இருப்பை உரக்க அறிவித்தது. இதுதான் இஸ்ரேலுக்குத் தலைவலியாக அமைந்தது.
பாலஸ்தீனர்கள் வரலாற்றில் தம்மை மீட்டெடுக்கிறார்கள். இது நடக்கக்கூடாது. பாலஸ்தீன இயக்கங்கள் வளர்ந்தால் அடையாள யுத்தங்களைத் தாண்டிய தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதற்காகவாவது போராளிகளைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று முடிவு செய்தது.
1960களில் போராளிகளை ஒடுக்குவதற்கு அரபு அரசுகள் இஸ்ரேலியக் காவல்துறைக்கு உதவி செய்தன. ஜோர்டன், லெபனான் போன்ற தேசங்களில் அதிக அளவில் பாலஸ்தீனர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் என்றைக்கு வேண்டுமானாலும் போராளிகளாகி நம்மை எதிர்க்கலாம் என்று அந்த அரசுகள் அஞ்சின. இதனால் அவர்களை ஒடுக்குவதற்கு வேண்டிய உதவிகளைத் தாமாகவே முன்வந்து இஸ்ரேலுக்குச் செய்தன.
தொடக்கத்தில் சிரியாவிலும் அதே நிலைமைதான் இருந்தது. கெரில்லா இயக்கங்கள் சிரிய எல்லைகளுக்குள் நுழைந்துவிடாமல் அவர்கள் கண்காணித்தனர். எகிப்து எல்லைகளில் ஐநா படைகள் நின்றதால் அங்கேயும் போராளிகளால் நுழைய முடியவில்லை. இதனால் தொடக்கக்காலப் போராளிகளுக்கு அரபு நாடுகளில் ஒரு வலுவான அடித்தளம் இல்லாமலேயே இருந்தது.
ஆனால் 1966இல் சிரியாவில் இடதுசாரி ராணுவ ஆட்சி ஏற்பட்டது. இது பாலஸ்தீன போராளி இயக்கங்கள் கிளைவிட்டுப் பரவுவதற்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சிரியாவின் புதிய அரசு போராளிகளுக்குத் தம் நாட்டு எல்லைகளைத் திறந்துவிட்டது. மேலும் அவர்களுடைய இதழ்கள், அறிக்கைகள் ஆகியவை எந்தத் தடையும் இல்லாமல் மக்களிடம் சென்றடைவதற்கும் உதவி செய்தது.
மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடித் தீர்த்தனர். சிரியா, பாலஸ்தீன பந்தம் பல நூற்றாண்டுகள் பழைமையானது. இப்போது மீண்டும் இணைந்திருக்கிறது. நிச்சயம் இது புதிய தொடக்கமாக அமையும் என்று கருதினர்.
சிரியா அரசுக்கு அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மத்தியக் கிழக்கில் இயங்குவது பிடிக்கவில்லை. அதெப்படி அரபு தேசங்கள் வெட்கமே இல்லாமல் அமெரிக்காவுக்குப் படியளக்கின்றன? அரபு எண்ணெய் வளங்கள் அனைத்தும் அரேபியர்களின் சொத்து. அதில் வரும் மொத்த வருமானமும் அவர்களுக்கே சொந்தம். லெபனான், ஜோர்டன், சவுதி அரேபியா போன்ற தேசங்கள் அரபு மக்களை அடகு வைத்து அமெரிக்காவுக்குச் சேவகம் செய்கிறார்கள். சிரியா இப்படி இருக்காது. அமெரிக்காவுக்கு இனி இங்கு வேலை இல்லை. மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டது.
அரம்கோ (ARAMCO – Arabian American Oil Compay) எனும் அமெரிக்க நிறுவனம்தான் அன்றைக்கு மத்தியக் கிழக்கின் முக்கிய எண்ணெய் நிறுவனமாக இருந்தது. அதன் எண்ணெய்க் குழாய்கள் அரபு நாடுகள் அனைத்திலும் ஊடுருவி மத்தியக் கிழக்கின் எண்ணெய்களை மத்தியத் தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றது. இந்தக் குழாய்யின் வழிதடம் சிரிய எல்லைக்கு உள்ளேயும் இருந்தது. இதன் மீதுதான் சிரியா கை வைத்தது.
இனி ஆரம்கோ நிறுவனம் சிரியாவில் இருந்து எண்ணெய்யை எடுத்துச் செல்ல முடியாது. முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள். இதுதான் அவர்கள் வெளியிட்ட சுருக்கமான அறிக்கை. அமெரிக்காவும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் அதிர்ந்துவிட்டன.
அப்போது அமெரிக்க அரசு தனது முழு பலத்தையும் வியட்நாமில் நடைபெற்றுக் கொண்டிருந்த போரில் பிரயோகித்து வந்தது. அதன் பணமும் ஆயுதங்களும் வியாட்நாமில் போரிடும் அமெரிக்க ஆதரவு படைகளுக்குச் சென்றுகொண்டிருந்தன. அமெரிக்க வீரர்களும் அங்குதான் இருந்தனர். இதனால் எடுத்த எடுப்பில் அதனால் மத்தியக் கிழக்கு புரட்சிகளில் கவனம் செலுத்த முடியவில்லை.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கோ மத்தியக் கிழக்கு முக்கியம். அங்கே இருக்கும் எண்ணெய் வளங்கள் முக்கியம். உலக நாடுகளின் தேவையில் 70 சதவிகிதத்தை மத்தியக் கிழக்கு எண்ணெய் பூர்த்தி செய்துவந்தது. இந்த எண்ணெயை உலக நாடுகளுக்கு விற்பதனால் மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 200 கோடி டாலர் லாபம் கிடைத்துக்கொண்டிருந்தது.
இவ்வளவு ஏன், அமெரிக்கா வியட்நாமில் செய்து வந்த யுத்தத்துக்கு வேண்டிய பணமும், அங்கே பயன்படுத்தப்பட்டு வந்த போர் தளவாடங்களுக்கு வேண்டிய எண்ணெயும் மத்தியக் கிழக்கில் இருந்துதான் வந்துகொண்டிருந்தது. இதனால் உடனே ஏதாவது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அமெரிக்க நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கின.
முதலில் அமெரிக்கா மத்தியத்தரைக் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது மிகப்பெரிய படையான ஆறாவது கப்பல்படையை சிரிய பகுதிகளில் உலாவ வைத்தது. இந்தப் படை மத்திய கிழக்கில் இருந்ததன் நோக்கமே எண்ணெய் வளங்களைக் கண்காணிப்பதும், அரேபியர்களை மிரட்டி வைப்பதும்தாம். அதனால் இந்தப் படையை அனுப்பினால் சிரியா பயந்துவிடும் என்று அமெரிக்கா நினைத்தது. ஆனால் சிரியா அசரவில்லை. மாறாக ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கிலும் இடதுசாரிகள் அலையடிக்கத் தொடங்கியிருந்தது. எங்கு பார்த்தாலும் புரட்சி வெடித்துக் கொண்டிருந்தது.
1962இல் ஏமனில் இருந்த அரபு தேசியவாதிகள் தங்கள் நாட்டைக் குடியரசாக அறிவித்தனர். இது அமெரிக்காவுக்கு மேலும் தலைவலியாகிப்போனது. எண்ணெய் வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவின் எல்லையில்தான் அந்த நாடு அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நாடு இடதுசாரிகள் கைகளுக்குச் சென்றால் அது சவுதி அரேபியாவில் குவித்துள்ள அமெரிக்காவின் முதலீடுகளைப் பாதிக்கும் அல்லவா? அதனால் இந்தப் புதிய அரசை ஒடுக்குவதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் சவுதி அரேபிய ராணுவத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தொடங்கின.
சவுதி தாக்குதலை ஆரம்பித்தவுடன் நாசர் எகிப்தில் இருந்து தன் படைகளை ஏமனுக்கு ஆதரவாக அனுப்பினார். இதே சமயத்தில் தெற்கு ஏமனில் பிரிட்டனுக்கு எதிரான போரும் ஓமனில் கெரில்லா யுத்தங்களும் அதிகரிக்கத் தொடங்கின. இப்படியே அடுத்தடுத்த கிளர்ச்சிகள். இருக்கும் நிலைமையைப் பார்த்தால் மத்தியக் கிழக்கு வியாபாரத்தில் துண்டுவிழுந்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சியது. எதாவது செய்து அனைத்தையும் தடுத்தாக வேண்டும் என்று தவித்தது.
இந்தப் புரட்சியாளர்களை எல்லாம் நாசர்தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். நாசரியமயமாக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் லெபனான், ஜோர்டன், அரேபிய தீபகற்பங்களுக்கும் புரட்சி பரவி முழுமையாக நமக்கு ஆப்படித்துவிடும். இத்தகைய நிலைக்கு உடனே ஒரு முடிவு கட்ட வேண்டும். என்ன செய்யலாம்? எப்படித் தடுக்கலாம்? நமது லட்சக்கணக்கான வீரர்கள் வியட்நாமில் இருக்கிறார்கள். இவர்களை மத்தியக் கிழக்கிற்கு அனுப்பினால் வியட்நாம் எதிர்காலம் என்னாவது?
யாராவது ஒருவன் வேண்டும். அவன் எல்லாம் வல்ல நண்பனாக இருக்க வேண்டும். அரேபியர்கள் அல்லாதவனாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் நேரடித் தலையீட்டை எதிர்பார்க்காமல் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும். அப்படி ஒரு தகுதி இருக்கும் நாடு எது என்று தேடத் தொடங்கியபோதுதான் அமெரிக்காவின் கவனம் இஸ்ரேல் பக்கம்போனது.
1966ஆம் ஆண்டு அமெரிக்கா இஸ்ரேலை அழைத்துப் பேசியது. இதோ பார் இதுதான் நிலைமை. அரபு நாடுகளில் நாசரியவாதம், கம்யூனிசவாதம், சோவியத்வாதம் என்று ஏதேதோ நோய் பரவிக்கொண்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் எங்களால் இங்கிருந்து சரிசெய்துகொண்டிருக்க முடியாது. ஆனால் அதனை வளரவும் விடக்கூடாது. இது அமெரிக்காவை மட்டும் அழிக்கும் நோய். அத்தனை ஆபத்தான நோய். ரிஸ்க் எடுக்க முடியாது.
எனக்கு ஒரு காவலன் வேண்டும். அவன் 24 மணி நேரமும் அமெரிக்க நலனைக் கண்காணிப்பவனாக, பாதுகாப்பவனாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக அவன் கேட்கும் எதையும் நாங்கள் செய்து தருவோம். வேண்டும் அனைத்தையும் கொண்டு வந்து தருவோம்.
அப்படிப்பட்ட ஆதர்ச நண்பனாக நீ மட்டும்தான் தெரிகிறாய். உனக்கு எங்களுக்கு உதவ சம்மதமா? கேள்வி எல்லாம் இல்லை. உதவியே ஆக வேண்டும். நீ எங்களுக்குக் கடமைபட்டிருக்கிறாய். உடன்படிக்கைக்குத் தயாரா? இதோ இப்போதே புதிய போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் அனுப்பிவைக்கிறோம். உன்னைத் தொந்தரவு செய்யும் போராளிகளைத் தாக்கு. அவர்களோடு சேர்த்து நாங்கள் சொல்லும் எல்லாவற்றையும் சேர்த்துத் தாக்கு. எங்களுடன் கைகோர்க்கத் தயரா?
அமெரிக்கா கேட்டது.
இதற்காகத்தான் இஸ்ரேல் காத்துக்கொண்டிருந்தது. உடனே சரி என்று தலையாட்டியது.
(தொடரும்)