Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் #6 – நெம்புகோல் மேடை

பன்னீர்ப்பூக்கள் #6 – நெம்புகோல் மேடை

பிள்ளையார் கோவிலிலிருந்து தொடங்கி ரயில் பாதை வரைக்கும் நீண்டிருக்கும் பஞ்சாயத்து போர்டு தெரு முடிவடையும் இடத்தில் இடதுபுறமாகப் பிரியும் பாதை பெருமாள் கோவில் வரை செல்லும். உயர்ந்தோங்கிய அதன் மதிலுக்கும் ரயில் பாதைக்கும் இடைப்பட்ட நிழல் சூழ்ந்த பகுதி விளையாடுவதற்குப் பொருத்தமான இடம். ஆனால் அங்கே காலை, பகல், மாலை எல்லா நேரங்களிலும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அங்கே எங்களைப்போன்ற சிறுவர்கள் வேடிக்கை பார்க்கலாமே தவிர விளையாடமுடியாது.

பெருமாள் கோவில் பக்கமாகச் செல்லாமல் வலதுபுறமாகத் திரும்பும் பாதையில் நடந்தால் ரயில்வே ஸ்டேஷனை அடையலாம். ஸ்டேஷனை நெருங்கும்போதே ஆலமரங்களும் அரசமரங்களும் வரவேற்கும். இரும்புத்தண்டு வேலியை ஒட்டி உயரமான ஒரு நெம்புகோல் மேடை நின்றிருக்கும். கடற்கரைக்கு ஒரு கலங்கரை விளக்கத்தைப் போல ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு நெம்புகோல் மேடை. மேடைக்கு அருகில் புங்கமரங்களும் நாவல் மரங்களும் உண்டு. நிழல் சூழ்ந்திருக்கும் அந்த இடமே எங்களுக்கான விளையாட்டுத்திடல். விடுப்பு நாட்களில் பொழுது போவது தெரியாமல் அந்த இடத்தில் விளையாடுவோம்.

புங்கை மரத்தைக் கடந்து, இரும்புத்தண்டு வேலியைக் கடந்து, ரயில் தண்டவாளங்களையும் கடந்து சென்றால் ரயில்நிலையத்துக்குச் சொந்தமான குட்ஸ் ஷெட் இருக்கும். அதையொட்டி மரங்களால் சூழப்பட்ட இன்னொரு இடத்தையும் பார்க்கலாம். அதுவும் நாங்கள் விளையாடும் திடலே. எந்தத் திடலில் விளையாடுவது என்பதை அந்தந்த நேரத்தை ஒட்டி முடிவுசெய்துகொள்வோம்.

நானும் சுப்பிரமணியனும் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள். மனோகரன், சந்திரசேகர், சுந்தரம், குமரவேல் எல்லோரும் வேறுவேறு தெருக்களிலிருந்து வருபவர்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பஞ்சாயத்து போர்டு தெருவில் நடந்து சென்று கஜேந்திரன், பரசுராமன் இருவரையும் அவர்கள் வீட்டிலிருந்து அழைத்துக்கொள்வோம். பிறகு கடைசியாக நெடுஞ்செழியன் வீட்டுக்குச் செல்வோம்.

வீட்டு வாசலில் நெடுஞ்செழியனின் ஆயா காலை நீட்டி உட்கார்ந்தபடி நரைத்துப்போன தலைமுடியை பக்கவாட்டில் சரியவிட்டு ஈர்க்கொல்லியால் சீவிக்கொண்டிருப்பார். எங்களைப் பார்த்ததும் ‘வாங்கடா வானரங்களா, காலையிலயே ஆட்டம் போட கெளம்பிட்டீங்களா?’ என்று வரவேற்பார். பிறகு நாங்கள் சொல்லாமலேயே வீட்டுப்பக்கம் முகத்தைத் திருப்பி ‘செழியா செழியா, உன் கூட்டாளிங்க வந்துருக்கானுங்க பாருடா’ என்று குரல் கொடுப்பார்.

உள்ளே இருந்து எந்தப் பதிலும் வராது. ‘வருவான் வருவான் இருங்க’ என்று எங்களை அமைதிப்படுத்துவதுபோல பதில் சொல்வார் ஆயா. பிறகு ‘நீ எந்தத் தெரு? உன் பேரு என்ன? உங்க அப்பா என்ன பண்றாரு?’ என்று ஒவ்வொருவரிடமும் கேட்க ஆரம்பித்துவிடுவார்.

நாங்கள் சொல்லும் பதில்கள் எதுவும் அவர் மனத்தில் பதிவதே இல்லை. முகமும் பெயரும் கூட மறந்துவிடும். காதால் கேட்கும் ஒரு விஷயத்தை அந்தந்தக் கணத்திலேயே அவர் மறந்துவிடுகிறார் என்பது எங்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம் என்பதால் ஒருநாளும் பதில் சொல்ல சலித்ததே இல்லை. சில நேரங்களில் தவறான பதில்களை உண்மைபோலவே சொல்லிவிட்டு உள்ளூர சிரித்துக்கொள்வோம். ஆயா அதையும் சிரத்தையோடு கேட்டுக்கொள்வார்.

ஐந்தாறு நிமிடங்கள் நாங்கள் வாசலில் காத்திருந்த பிறகுதான் நெடுஞ்செழியன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருவான். சிரித்துக்கொண்டே ‘வாங்கடா, வாங்க. வீட்டுக்கணக்கு அது இதுன்னு எங்க வராம போயிடுவீங்களோன்னு நெனச்சிட்டிருந்தேன்’ என்று சொல்வான். தொடர்ந்து எதைஎதையோ பேசுவான். கடைசியாக ‘நீங்க போயிட்டே இருங்கடா. ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துருவேன்’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிடுவான்.

என்ன வேலை, என்ன அவசரம் என்பதைப்பற்றி எல்லாம் எதுவும் சொல்லமாட்டான். எங்களால் அதைப்பற்றி எதுவும் கேட்கவும் முடியாது. விளையாடுவதற்குரிய டென்னிகாய்ட், வாலிபால், புட்பால், பந்துகள், மட்டைகள் எல்லாமே அவனிடம்தான் இருந்தன.

எங்களிடம் சொந்தமாக ஒரு ரப்பர் பந்து கூட கிடையாது. நெடுஞ்செழியனின் அப்பா வளவனூரிலிருந்து ஆறேழு ஊர்கள் தள்ளி ஒரு பெரிய பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அங்கே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிது புதிதாக விளையாட்டுக்கருவிகள் வாங்குவது வழக்கம். அப்போது பழைய விளையாட்டுப்பொருட்களையெல்லாம் ஆசிரியர்களிடையில் ஏலத்தில் விற்றுவிடுவார்கள்.

நெடுஞ்செழியனைத் தவிர, அவன் வீட்டில் இன்னும் இரண்டு அக்காக்களும் இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் இருந்தனர். அவர்கள் பொழுதுபோக்காக விளையாடுவதற்குப் பயன்படக்கூடும் என்ற எண்ணத்தில் அந்தப் பந்துகளையெல்லாம் அவர் ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கி விடுவார். பந்துகளுக்கு உரிமைகொண்டவன் என்பதால், என்ன விளையாட்டு விளையாடலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை நெடுஞ்செழியனிடமே இருந்தது.

‘வாங்கடா’ என்று பேசிக்கொண்டே நடந்துசென்று புங்கைமர நிழலில் அமர்ந்தோம். பரசுராமன் போன வாரம் பார்த்த ஒரு சினிமாப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு சண்டைக்காட்சியை சுவாரசியமாக விவரித்தான். சுப்பிரமணியன் பாண்டிச்சேரி கடற்கரைக்குச் சென்றதையும் மணற்பரப்பில் அத்தை பிள்ளைகளோடு ஓடிப் பிடித்து விளையாடிய கதையையும் சொன்னான். கதைகள் அலுத்த சமயத்தில் மனோகரன் விடுகதை விளையாட்டைத் தொடங்கிவைத்தான். ஒவ்வொருவரும் ஒரு விடுகதையைச் சொல்லிவிட்டு அது என்ன, அது என்ன என்று ஒவ்வொருவர் முகமாகப் பார்த்துக் கேட்டபடி சுவாரசியமாக பொழுதை ஓட்டினோம்.

‘உடம்பே இல்லாத ஒருவன் ஒன்பது சட்டை போட்டிருப்பான், அவன் யார்?’ என்று புதிதாக வந்த குரலைக் கேட்டு நாங்கள் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தோம். நெம்புகோல் மேடையில் காசி மாமா உட்கார்ந்திருந்தார். கீழேயிருந்து பார்ப்பதற்கு அரண்மனை உப்பரிகையில் நின்றிருக்கும் ராஜாவைப் பார்ப்பதுபோல இருந்தது. அவர் உயரமும் குரலும் ஒரு ராஜாவுக்கு உரியவைபோலவே இருந்தன.

‘என்னடா பாக்கறீங்க, சொல்லுங்க’ என்று ஒலித்த அவருடைய குரலைக் கேட்ட பிறகுதான் எனக்கு சுய உணர்வு திரும்பியது. அவ்வளவு நேரமும் அங்கே அவர் உட்கார்ந்திருந்ததையே கவனிக்காமல் இருந்ததை நினைத்து வெட்கமாக இருந்தது.

காசி மாமா ரயில்வே ஊழியர். பாய்ண்ட்ஸ்மேன். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மாற்றலில் வளவனூருக்கு வந்தவர். அங்கேயே தங்கிவிட்டார். மேடையில் வரிசையாக பல நிறங்களில் சாய்ந்தமேனியில் நிறுத்திவைக்கப்பட்ட நெம்புகோல்களை அவருக்குச் சொல்லப்படும் கட்டளைகளுக்கு ஏற்ற வகையில் கீழ்ப்பக்கமாக அழுத்திவிடுவார் அல்லது மேல்பக்கமாக உயர்த்திவிடுவார். உடனே தொலைவில் இருக்கிற கைகாட்டிகள் தாழ்ந்துவிடும். அல்லது உயர்ந்து செல்லும். அதெல்லாம் ரயில்கள் நிற்பதற்கும் செல்வதற்கும் தெரிவிக்கப்படும் குறியீடு. அவர் மேலே உட்கார்ந்திருந்தால் ஏதோ ஒரு ரயிலின் வருகைக்காக காத்திருக்கிறார் என்று பொருள். இல்லையென்றால் புங்கைமர நிழல்தான் அவருடைய இடம்.

‘ம், சொல்லுங்கடா. என்ன பாக்கறீங்க?’ என்றார் காசி மாமா.

சில கணங்கள் யோசனைக்குப் பிறகு ‘நவரத்தினக்கல்லா மாமா?’ என்று சந்தேகத்தோடு இழுத்தான் பரசுராமன். இல்லை என்பதுபோல தலையை அசைத்த காசி மாமா ‘வெங்காயம்’ என்றார். அப்போதுதான் ‘அட இது தெரியாமல் போயிற்றே’ என்று எல்லோரும் வெட்கத்துடன் நாக்கைக் கடித்துக்கொண்டோம்.

‘சரி, இன்னொன்னு கேக்கட்டுமா?’ என்ற காசி மாமா ஒன்றிரண்டு கணங்கள் யோசித்துவிட்டு ‘என்னைப் பார்த்து சிரித்தால் நான் உன்னைப் பார்த்து சிரிப்பேன். என்னைப் பார்த்து அழுதால் நான் உன்னைப் பார்த்து அழுவேன், நான் யார்? சொல்லுங்க’ என்றார்.

‘மாமா, குரங்குதான?’ என்று அவசரமாகக் கேட்டான் மனோகரன்.

‘போடா, நீதான் குரங்கு’ என்று சிரித்தார் மாமா. அதைக் கேட்டு கூட்டமே சிரித்தது.

‘ரேடியோ?’ என்று நான் தயங்கிக்கொண்டே சொன்னேன். மாமா புன்னகையோடு ‘ம்ஹூம்’ என்று தலையசைத்தார்.

எல்லோரும் ஒரு பதிலைச் சொல்லிவிட்டு குழப்பத்தோடு தலையைச் சொறிந்துகொண்டிருந்தனர். கிட்டத்தட்ட எல்லாருமே மெளன நிலைக்குச் சென்றுவிட்டதால் மாமாவே ‘என்னடா, நானே இதுக்கும் பதில் சொல்லிடவா?’ என்று கேட்டார். ‘சொல்லுங்க மாமா’ என்று நாங்கள் சொன்னதுமே மாமா ‘முகம் பார்க்கிற கண்ணாடிடா’ என்றார். இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் கண்டுபிடித்திருக்கலாமே என்று த்ச்த்ச் என்று நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டேன்.

‘சரி, இன்னொரு விடுகதை சொல்றேன். இதுக்காவது பதில் சொல்றீங்களான்னு பார்க்கலாம். சரியான பதில் சொல்றவனுக்கு ஒரு பந்து பரிசு’ என்றார் மாமா.

பந்து என்ற சொல்லைக் கேட்டதுமே எங்கள் மனம் துடிக்கத் தொடங்கியது. எல்லோரும் அவருடைய முகத்தையே பார்த்தோம்.

‘எனக்குள்ள ஏராளமான அறை இருக்குது. ஆனா வீடு இல்லை. காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு. ஆனா கோட்டையும் இல்லை. நான் யார்?’

அறை, வீடு, கோட்டை என நாங்களே எங்களுக்குள் பல பதில்களை முணுமுணுத்துக்கொண்டோம். ஒரு கோணத்தில் பொருத்தமாகத் தோன்றும் அந்தப் பதில்கள் இன்னொரு கோணத்தில் பொருத்தமற்றவையாகத் தோன்றின. கஜேந்திரம் மட்டும் மெதுவாக ‘காட்டு பங்களா’ என்றான். மாமா உதட்டைப் பிதுக்கினார். உடனே குமரவேல் ‘பாதாள உலகம்’ என்றான். மாமா புன்னகையாலேயே அதை நிராகாரித்தார். சுந்தரம் ‘அரண்மனை’ என்று சொன்னான். அந்த விடையும் தவறானது என்பதுபோல மாமா த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டினார். பிறகு. கடைசியாக அவரே ‘தேன்கூடு’ என்று பதில் சொன்னார்.

அப்போது நெடுஞ்செழியன் பேஸ்பால் மட்டையையும் பந்தையும் எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான். மனோகரன் ஓடிச் சென்று அந்தக் குண்டாந்தடியை வாங்கி அதன் வழவழப்பான பகுதியைத் தொட்டுத்தொட்டுப் பார்த்தான். ‘ஓங்கி ஒரு அடி அடிச்சா உன் மண்டை உடைஞ்சிடும். ஜாக்கிரதை’ என்று சிரித்தான் பரசுராமன்.

பேஸ்பால்தான் அன்றைய விளையாட்டு என்று தீர்மானமானதும் நாங்கள் எல்லோரும் எழுந்து தண்டவாளங்களைக் கடந்து மறுபுறம் உள்ள ஷெட் பக்கமாகச் செல்லத் தயாரானோம். பேஸ்பால் விளையாடப் பொருத்தமான நான்கு மூலைகள் கொண்ட சதுரமான பரப்பு அங்குதான் இருந்தது.

‘என்னடா, இன்னைக்கு பேஸ்பாலா?’ என்றார் காசி மாமா. ‘ஆமா மாமா’ என்று எல்லோரும் சொல்லிக்கொண்டே முதல் மேடையிலிருந்து இறங்கி இரண்டாவது மேடைக்குச் சென்றோம்.

‘மாமா, பந்து வாங்கிக் கொடுக்கறேன்னு சொன்னீங்களே? எப்ப கிடைக்கும்’ என்று கேட்டான் மனோகரன். ‘சரியான பதில் சொல்லியிருந்தா பந்து கிடைச்சிருக்கும். ஒருத்தனும் ஒரு விடுகதைக்கும் பதில் சொல்லலையே, அப்புறம் எப்படி பந்து கிடைக்கும்?’ என்றார் மாமா. ‘சரி சரி, சீக்கிரமா தாண்டி போங்கடா. பாண்டிச்சேரி போற ரயில் வர போவுது’ என்று அவசரப்படுத்தினார். நாங்கள் வேகமாகக் கடந்து மறுபக்கம் சென்று விளையாடத் தொடங்கினோம்.

சிறிது நேரத்தில் ஸ்டேஷன் மணி அடித்துவிட்டது. ஸ்டேஷன் நடைமேடையில் நடமாட்டம் அதிகமாக இருந்தது. புகைவிட்டபடி வேகமாக வந்த ரயில் மெல்ல மெல்ல வேகத்தைக் குறைத்தபடி வந்து மூச்சு வாங்குவதுபோல நின்றது. நெம்புகோலுக்கு அழுத்தம் கொடுத்து உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக நெம்புகோல் மேடையில் நின்றிருந்தார் மாமா. அவர் பார்வை தொலைதூரத்தில் கைகாட்டி தாழ்வதையும் உயர்வதையும் கண்காணித்தபடி இருந்தன. ஒரு நிமிடம் நின்று பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் புறப்பட்டுச் சென்றதும் நடைமேடையில் நடமாட்டம் குறைந்து வெறுமை சூழ்ந்தது. கடலை உருண்டை, தேன்மிட்டாய் விற்றுக்கொண்டிருந்த தட்டு வியாபாரிகள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். ஓடு ஓடு, பிடி பிடி என்று நாங்கள் போட்ட சத்தம்தான் எங்கெங்கும் நிறைந்தபடி இருந்தது.

நெம்புகோல் மேடையிலேயே உட்கார்ந்துகொண்டு எங்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்தார் மாமா. எங்கள் ஆட்டம் அப்போதுதான் களைகட்டி உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

ரயில் வரத்து எதுவும் இல்லாத நேரங்களில் கூட மாமா அந்த நெம்புகோல் மேடைக்கு அருகிலேயே புங்கை மரத்தடியில் காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். அவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, அந்தப் பக்கமாகச் செல்லும் யாராவது ஒரு தயிர்க்காரப் பெண் அல்லது வண்டிக்காரர் அருகில் வந்து சிறிது நேரம் நிழலில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள். சுருக்குப்பையைத் திறந்து வெற்றிலை பாக்கு போட்டபடி ஊர்க்கதைகள் சொல்வார்கள். பேச்சுத்துணைக்கு யாருமே கிடைக்கவில்லை என்றால், சற்றே தொலைவில் மாடு மேய்க்கும் சிறுவர்களை அழைத்து எதையாவது உரையாடிக்கொண்டிருப்பார் மாமா. அவர்களுக்கு ஏதாவது பழைய சினிமாப்பாட்டு பாடிக் காட்டுவார். எல்லாமே சோகமான பாடல்கள். யாருமே இல்லாத சூழலில் கூட மாமா தனியாகத் தனக்குத்தானே பாடிக்கொள்வார்.

ஒருநாள் இரவு சாப்பிட்டு முடிந்த பிறகு நிலா வெளிச்சத்தில் நானும் தம்பிகளும் உட்கார்ந்திருக்க அப்பா எங்களுக்கு ஒரு கதை சொன்னார். நான் ஒரு குள்ளக்கத்திரிக்காய் கதை சொன்னேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிரித்து சிரித்து தம்பிக்கு புரையேறிவிட்டது. அவன் அப்பாவிடம் ‘கதை போதும்பா. ஒரு பாட்டு பாடுங்கப்பா’ என்று கேட்டான். உடனே அவர் ‘பாட்டா?’ என்று மோவாயைச் சொறிந்தபடி வானத்து நிலவையே சில கணங்கள் பார்த்தார். பிறகு தொண்டையைச் செருமி சரிப்படுத்திக்கொண்டு மெல்லிய குரலில் ’ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா அலங்காரத் தாரகைபோல அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே’ என்று பாடினார்.

அவர் முதல் பத்தியைக் கடக்கும் வரையில் நானும் அப்பாடலை ஆழ்ந்து கேட்டபடி இருந்தேன். ஆனால் இரண்டாவது பத்தியைத் தொட்டதுமே ஏற்கனவே ஒருமுறை காசி மாமா பாடி அதைக் கேட்டிருக்கிறோம் என்பது புரிந்துவிட்டது. அப்பா பாடி முடிக்கும் வரைக்கும் காத்திருந்து ‘நான் இந்தப் பாட்டை ஏற்கனவே கேட்டிருக்கேன்பா’ என்றேன்.

‘எங்க கேட்ட? ரேடியோவுலயா?’

‘இல்லைப்பா, ஸ்டேஷன்ல காசி மாமா இந்தப் பாட்ட அடிக்கடி பாடுவாரு. அப்ப கேட்டிருக்கேன்’

‘ஓ. அவனா?’ என்று நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்ட அப்பா த்ச் என்று ஒருமுறை நாக்கு சப்புக்கொட்டினார். பிறகு அவரிடமிருந்து தன்னிச்சையாக ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. ‘பாவம், எப்படி எப்படியோ இருந்திருக்கவேண்டிய ஆளு இப்படி இங்க வந்து கெடக்கறான்’ என்று சங்கடத்தோடு சொன்னார்.

‘அவருக்கு என்னப்பா?’

‘என்னன்னு சொல்ல? குடும்பம்னு சொல்ல யாரும் இல்லை அவனுக்கு. அம்மா அப்பா மனைவி புள்ளைன்னு யாருமே இல்லை. திருப்பதிக்கு குடும்பமா போய் திரும்பற நேரத்துல ஒரு விபத்துல எல்லாருமே போய் சேந்துட்டாங்க. இவன் மட்டும் பொழைச்சி வந்துட்டான்’

‘காசி மாமா ரொம்ப நல்லவருப்பா.’

‘நல்லவங்களத்தானே கடவுள் ரொம்ப சோதிக்கறாரு.’

‘தனியா இருந்தா நிறைய பாட்டு பாடிகிட்டே இருப்பாருபா. ஆளுங்க வந்தா நிறுத்திட்டு பேச ஆரம்பிச்சிடுவாரு.’

‘அப்படியா?’

‘அது மட்டுமில்லை. அவருக்கு நிறைய விடுகதைகள் எல்லாம் தெரியும். ஆனா எங்களுக்குத்தான் அவரு சொல்ற விடுகதைகளுக்கு விடையே கண்டுபுடிக்க தெரியாது. சரியான விடையை சொன்னா, சொல்றவங்களுக்கு பந்து வாங்கி கொடுக்கறேன்னு சொல்லியிருக்காரு.’

நெம்புகோல் மேடையில் இல்லாத நேரங்களில் கூட காசி மாமா ஓய்வெடுக்கமாட்டார். ஸ்டேஷனலிருந்து கிழக்குப் பக்கமாகவோ மேற்குப்பக்கமாகவோ தண்டவாளத்தின் இணைப்புகளைச் சோதித்தபடி அடுத்த ஸ்டேஷன் வரை நடந்துபோய் வருவார்.

ஒருமுறை நாங்கள் விளையாடுவதற்காகச் சென்று வழக்கம்போல நெடுஞ்செழியனுக்காகக் காத்திருந்த நேரத்தில் மேடைமீது வைத்திருந்த ஒரு சாக்குமூட்டையை எடுத்துவந்து எங்கள் முன்னால் வைத்தார்.

‘என்ன மாமா?’ என்று கேட்டுக்கொண்டே மூட்டையைத் தொட்டு அழுத்திப் பார்த்தான் மனோகரன்.

‘இருடா. இருடா. அவசரப்பட்டு அழுத்திடாத. நசுங்கிட போவுது. பிரிச்சி பாருங்கடா’ என்று சிரித்தார் மாமா.

கயிற்றின் முடிச்சை அவிழ்த்து சாக்கைத் திறந்து பார்த்தபோது பத்துக்கும் மேற்பட்ட மாம்பழங்கள் இருந்தன. எல்லாப் பழங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே அடுக்கினான் மனோகரன். ‘எங்க கிடைச்சிது மாமா?’ என்று கேட்டான்.

‘ஒரு தோப்புல வித்துட்டிருந்தாங்கடா. ரொம்ப மலிவா விலை சொன்னாங்க. வாங்கிவந்துட்டேன். ஆளுக்கு ரெண்டு எடுத்துக்கங்கடா.’

அப்படிச் சொல்வார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ‘எங்களுக்கு எதுக்கு மாமா? நீங்க வச்சிருந்து சாப்புடுங்க’ என்றேன் நான்.

‘நான் சாப்பிடறதுன்னா, தோப்புலயே வாங்கி சாப்ட்டுட்டு வந்திருக்க போறேன். உங்களுக்காகத்தான்டா வாங்கி வந்தேன். எடுத்து சாப்புடுங்கடா.’

அப்போதும் நாங்கள் சற்றே தயங்கி அமைதியாக இருந்ததைப் பார்த்ததும் மாமாவே இரண்டிரண்டாக எடுத்து ஒவ்வொருவரிடமும் கொடுத்தார். பழம் மிகவும் ருசியாக இருந்தது.

‘இது மல்கோவா மாம்பழமா மாமா?’

‘அந்த விவரமெல்லாம் எனக்கு தெரியாது தம்பி. மல்கோவாவா இருந்தா என்ன, செந்தூரமா இருந்தா என்ன? நாக்குக்கு ருசியா இருக்குற பழம். அவ்வளவுதான்.’

ஒருமுறை சாலையாம்பாளையத்திலிருந்து சைக்கிள் கேரியரில் வைத்து விற்றுக்கொண்டு வந்த வியாபாரியிடம் வாங்கிவைத்ததாகச் சொல்லி கொய்யாப்பழங்களை எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். இன்னொருமுறை முந்திரிப்பழங்கள் கொடுத்தார். அடிக்கடி இப்படி பழங்களைக் கொடுத்து எங்களுக்கு நல்ல ருசியை அறிமுகப்படுத்தினார்.

தீபாவளியை முன்னிட்டு எங்கள் வீட்டில் முறுக்கு சுட்டிருந்தார்கள். நான் அதை ஒரு தாளில் வைத்துச் சுற்றி நூலால் கட்டி கால்சட்டைப் பையில் வைத்து எடுத்துச் சென்று மாமாவிடம் கொடுத்தேன். ‘எனக்காகவாடா எடுத்தாந்த? எனக்காகவாடா எடுத்தாந்த?’ என்று கேட்டுவிட்டு என் தோளில் தட்டிக் கொடுத்தார். தாளில் இருந்த முறுக்குகளை எடுத்து உடைத்து எங்கள் அனைவருக்கும் ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுத்துவிட்டு அவரும் சாப்பிட்டார்.

முழு ஆண்டுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கூடத்தில் எழுதிப் போட்ட நாளில் வீட்டில் அறிவுரை மழை பொழியத் தொடங்கிவிட்டது.

‘ஊட்டுலயே உக்காந்து ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாக்கணும். புரியுதா? நல்ல மார்க் எடுத்தாதான் ஆறாங்கிளாஸ்க்கு ஹைஸ்கூலுக்கு போகமுடியும். இல்லைன்னா என் கூடவே கடைக்கு வந்து காஜா எடுக்கற வேலையைத்தான் கத்துக்கணும்.’

காலையில் படிப்பு, மாலையில் படிப்பு, இரவிலும் படிப்பு என்று ஒவ்வொரு நாளும் புத்தகங்களோடு பொழுது கழிந்தது. தூக்கத்தில் கூட கேள்வி பதில்கள் கனவுகளாகவே வந்தன.

தேர்வுகள் எல்லாம் முடிவடைந்தன. நன்றாகத்தான் எழுதியிருந்தேன். ஆனால் வீட்டுக்கு வந்து சென்ற விருந்தினர் அனைவரும் ‘என்ன தம்பி, பாஸ் பண்ணிடுவியா?’ என்று கேட்கும்போதெல்லாம் ஒரு திகில் எழுந்து பரவுவதைத் தடுக்கமுடியவில்லை.

அடுத்து வந்த ஞாயிறு முதல் வழக்கம்போல ரயில்வே ஸ்டேஷன் பக்கம் சென்று விளையாடத் தொடங்கிவிடலாம் என்று நண்பர்களுக்குள் தகவல் பரிமாறிக்கொண்டோம். எல்லோருமே சுப்பிரமணியன் வீட்டில் சேர்ந்து எனக்காகக் காத்திருந்தனர். நான் போய்ச் சேர்ந்ததுமே எல்லோரும் கூட்டமாக நெடுஞ்செழியன் வீட்டுக்குச் சென்றோம். மட்டையைச் சுழற்றி பந்தை அடிப்பதுபோல கைகள் தாமாகவே வளைந்து வளைந்து கற்பனையில் மிதந்தன.

வழக்கம்போல நெடுஞ்செழியன் ஆயாவின் குரல்தான் எங்களை வாசலில் வரவேற்றது. ‘வாங்கடா வானரங்களா, இத்தன நாளு பரீட்சை பரீட்சைன்னு சுருட்டி வச்சிருந்த வாலு இன்னைக்கு நிமுந்துடுச்சா? பட்டாளமா கெளம்பிட்டீங்களா?’ என்றார்.

நான் அவர் சொன்னதைப் பொருட்படுத்தாமலேயே ‘நெடுஞ்செழியன கூப்புடுங்க ஆயா’ என்றேன்.

‘அவன் வீட்டுல இருந்தாதான கூப்புடறதுக்கு?’

‘என்ன ஆயா சொல்ற? எங்க போயிட்டான்?’

‘விடிகாலையிலயே முத பஸ்ல அவுங்க சித்தப்பன்காரன் ஊருக்கு போயிட்டான்.’

ஆயா சொன்னதை எங்களால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவர் சொன்னதைக் கேட்டு திகைத்து நின்றோம். எங்கள் அமைதியே அவரை மேலும் சொல்வதற்கு தூண்டிவிட்டது.

‘அவன பாண்டிச்சேரியில இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துல சேர்க்கப் போறாங்கடா. அதுக்குத் தகுந்த மாதிரி இங்கிலீஷ ஒழுங்கா கத்துக்கணுமில்லயா? இந்த ஊருல வாழ்ந்து என்னத்த கத்துக்க முடியும்? அதான் அனுப்பிவச்சிட்டாங்க.’

நெடுஞ்செழியன் இப்படி ரகசியமாக ஊரைவிட்டுச் சென்றது உண்மையிலேயே எங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. நாங்கள் மேற்கொண்டு ஆயாவிடம் எதுவும் பேசவில்லை. ‘வரோம் ஆயா’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டோம்.

எங்கு போவது என்று தெரியாமலேயே புங்கைமரத்தடிக்குப் போய்ச் சேர்ந்தோம். அன்று மாமாவுக்கு யாரும் பேச்சுத்துணை கிடைக்கவில்லை. தனியாக பாடிக்கொண்டிருந்தார். ’உறவும் இல்லை, பகையும் இல்லை ஒன்றுமே இல்லை. உள்ளதெல்லாம் நீயே அல்லால் வேறு கதியில்லை இனி யாரும் துணையில்லை’ என்ற வரிகளைக் கேட்டபோது ஏற்கனவே எங்களுக்குள் பெருகியிருந்த துயரம் இன்னும் அதிகரித்தது.

சோர்வு படிந்த எங்கள் முகங்களைப் பார்த்ததும் மாமா முதலில் திகைப்புடன் ‘என்னங்கடா, என்னாச்சி?’ என்று கேட்டார். தொடர்ந்து ‘பரீட்சை சரியா எழுதலையா?’ என்று கேட்டார். ‘அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா’ என்று நடந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன்.

‘அட, கூறு கெட்ட பசங்களா. இதுக்காகவாடா மூஞ்சிய தூக்கி வச்சிருக்கீங்க? விட்டுத் தள்ளுங்கடா. சாய்ங்காலம் நீங்க வரும்போது உங்களுக்காக இங்க ஒரு பந்து காத்திருக்கும். போதுமா?’ என்றார்.

‘எப்படி மாமா?’ என்று தயக்கத்தோடு அவர் முகத்தைப் பார்த்தேன்.

‘மந்திரம் போட்டு வரவழைச்சிடுவேன். போதுமா? வேற கதை பேசலாம். உக்காருடா’ என்று என் தோளில் தட்டிக் கொடுத்தார் மாமா. எல்லாரையும் வட்டமாக உட்காரவைத்துவிட்டு மாமாதான் அன்று நிறையப் பேசினார். கதை சொன்னார். பாட்டு பாடினார். பன்னிரண்டு மணிக்குச் செல்லும் விழுப்புரம் ரயில் போன பிறகுதான் நாங்கள் அங்கிருந்து கலைந்து வீட்டுக்குச் சென்றோம்.

சாயங்காலம் ஐந்து மணிவாக்கில் மறுபடியும் புங்கை மரத்தடியில் சேர்ந்த போது மாமா எங்களுக்காகக் காத்திருந்தார். படியேறிச் சென்று நெம்புகோல் பலகைத்தட்டில் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு இறங்கி வந்து என்னிடம் கொடுத்தார். உள்ளே இருப்பது பெரியதொரு பந்து என்பதை அந்தப் பையின் வடிவத்தைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது. பிரித்துப் பார்த்தோம். கால்பந்து.

‘என்னடா சந்தோஷமா?’

எங்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. எங்கள் முகங்கள் மலர்ந்துவிட்டன. பேச்சே எழாமல் பந்தை கையாலேயே உருட்டிக்கொண்டிருந்தோம்.

‘உங்களுக்கு பந்து வாங்கித் தரேன்னு ஏற்கனவே நான் சொல்லியிருந்தேனே, அந்தப் பந்துதான்டா இது.’

‘எங்களுக்குத்தான் ஒரு விடுகதைக்குக்கூட சரியான பதிலே தெரியலையே.’

‘அப்ப தெரியலைன்னா என்னடா, இப்ப கேக்கறேன். சொல்றீங்களா?’

மாமா அப்படி கேட்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணமும் யோசிக்காமல் உடனே நாங்கள் ‘சரி மாமா’ என்றோம்.

மாமா ஒரு கணம் யோசித்துவிட்டு ‘அள்ளமுடியும், கிள்ளமுடியாது, அது என்ன?’ என்றார். அடுத்த கணமே எல்லோரும் ஒரே குரலில் ‘தண்ணீர்’ என்று சொல்லிக்கொண்டே குதித்தார்கள். ‘சரியான பதில். இனிமேல இந்தப் பந்து உங்க பந்து. போதுமா? போய் ஆடுங்கடா போங்க’ என்றபடி மாமா பந்தை எடுத்து மரத்தடியில் வீசினார். நாங்கள் எல்லோரும் ஓவென்று சத்தமிட்டபடி பந்தைத் தொடர்ந்து ஓடினோம்.

அந்தப் பந்துதான் எங்கள் விடுமுறைக்காலத்தை ஒளிமிக்கதாகவும் உல்லாசமானதாகவும் மாற்றியது. எங்கள் கூட்டணியில் இருந்தவர்களில் ஒருவரும் எந்த ஊருக்கும் சென்றுவரும் சூழலில் இல்லை. எந்த உறவினர் வீட்டுக்கும் செல்லவில்லை. ஒவ்வொரு பொழுதையும் பந்துதான் பொன்மயமானதாக்கி நெஞ்சை நிறைத்தது. இன்ப நினைவுகளுக்கு அளவே இல்லை.

ஒருநாள் மாமா நெம்புகோல் பலகையில் ஏறி நின்று துடுப்புகளுக்கிடையில் எண்ணெய்த்துளிகளை விட்டு சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். நாங்கள் இரண்டாவது நடைமேடையில் நின்றிருந்த சரக்கு ரயிலில் திறந்திருக்கும் கதவு வழியாக புகுந்து சென்று மறுபக்கம் நிழலில் விளையாடத் தொடங்கினோம்.

ஆட்டத்தின் வேகத்தில் சுந்தரம் வேகமாக உதைத்த பந்தை குமரவேல் துரத்திக்கொண்டு சென்றான். கூடவே ஓடிவந்த மனோகரன் இடையில் நுழைந்து பந்தை மேலும் விசையுடன் உதைத்தான். உருண்டுசென்ற பந்து சட்டென தரையிலிருந்து எம்பி பறந்து சென்றது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அது ரயிலில் இணைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டிக்குள் விழுந்துவிட்டது.

ஒருகணம் எல்லோரும் திகைத்து நின்றுவிட்டோம். என்ன செய்வது என்றே புரியவில்லை. அந்தப் பெட்டிக்கு அருகில் நின்று எக்கி எக்கிப் பார்த்தோம். எட்டாத உயரத்தில் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல்பக்கம் திறந்திருந்ததால் பக்கவாட்டுக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.

‘இவ்ளோ உயரமா இருக்குதே? எப்படிடா உள்ள போகறது?’

ஒரே கேள்வியை எல்லோரும் வேறுவேறு சொற்களில் கேட்டுக் குழப்பிக்கொண்டு நின்றோம்.

எங்கள் கூட்டத்தில் சுப்பிரமணி ஒருவன்தான் உயரமானவன். அவன் தோள்மீது ஏறி நின்றால் பெட்டிக்குள் இறங்கிவிடலாம் என்று சொன்னான் மனோகரன். உடனே சுப்பிரமணியைப் பெட்டிக்கு அருகில் நிறுத்தி நாங்கள் அனைவரும் அவன் தோள்வரை செல்லக்கூடிய படிக்கட்டுகளாக ஒருவர் பின்னால் ஒருவராக குனிந்து நின்றுகொண்டோம். மனோகரன் துணிச்சலோடு எங்கள் முதுகின் மீது கால்வைத்து ஏறிச் சென்று இறுதியாக சுப்பிரமணியனின் தோளில் கால்வைத்து பெட்டியின் விளிம்பைப் பற்றி உள்ளே குதித்துவிட்டான்.

அடுத்த கணமே பந்தை எடுத்து வெளியே வீசினான். பெட்டியின் விளிம்பைத் தொட்டு மேலேற நினைத்த தருணத்தில் கிறீச்சென்ற சத்தத்தோடு பெட்டி குலுங்கியது. நாங்கள் என்ன ஏது என்று புரியாமல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் திரும்பித்திரும்பிப் பார்த்தோம். அந்த அச்சத்தில் நாங்கள் அனைவருமே பெட்டியை விட்டு விலகிவிட்டோம். விளிம்பைப் பற்றிக்கொண்டிருந்த மனோகரன் தடுமாறி பெட்டிக்குள்ளேயே விழுந்துவிட்டான்.

அடுத்த கணத்தில் வண்டி மெல்ல மெல்ல ஒரு புழுவைப்போல நெளிந்து ஊர்ந்தது. அப்போதுதான் வண்டி நகரத் தொடங்கியதை நாங்கள் உணர்ந்தோம். எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டோம் என்பது அப்போதுதான் உறைத்தது. ‘மனோகரா, வெளியே வராத. உள்ளயே இரு. உள்ளயே இரு’ என்று ஒரு பக்கம் கத்தினோம். ‘காப்பாத்துங்க. காப்பாத்துங்க’ என்று இன்னொரு பக்கம் கத்தினோம். எங்கள் குரல் ரயில் எழுப்பிய சத்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை. ஒவ்வொரு பெட்டியாக ரயில் நகர்ந்தபடி இருந்தது.

பெட்டிக்கு மறுபக்கத்தில் இருந்து எங்களால் மாமாவைப் பார்க்கவும் முடியவில்லை. அழுகையிலும் அச்சத்திலும் என்ன செய்வது என்றும் புரியாமல் அந்த வண்டிக்குப் பின்னாலேயே ஓடினோம். எப்படியாவது மாமாவின் முகத்தைப் பார்த்துவிட மாட்டோமா என்று அலைமோதினோம்.

தற்செயலாக உயரம் குறைந்த பெட்டியொன்று கடந்தபோது மாமாவின் முகம் தெரிந்துவிட்டது. மாமா மாமா என்று கூட்டமாக நாங்கள் போட்ட சத்தத்தைக் கேட்டு அவரும் அக்கணத்தில் எங்களைப் பார்த்துவிட்டார். ஐயோ என்றபடி தலைமீது அவர் கைவைத்துக்கொள்வதை நான் பார்த்தேன். மறுகணமே ஒரு துடுப்பை இழுத்தும் இன்னொரு துடுப்பை அழுத்தியும் வண்டி தாராளமாகக் கடந்து செல்லலாம் என்பதற்காக ஏற்கனவே இறக்கியிருந்த கைகாட்டியை உயர்த்தி சிவப்புவிளக்கை ஒளிரச் செய்தார். பக்கவாட்டு இணைப்பிலிருந்து பிரதான இணைப்புக்கு மாறிச் செல்லும் முன்பாகவே சரக்கு ரயிலின் ஓட்டுநரும் அந்த மாற்றத்தைக் கவனித்துவிட்டதால் வண்டி நின்றுவிட்டது.

மாமாவும் இன்னும் சில ரயில்வே ஊழியர்களும் ஓடி வந்தார்கள். சுருக்கமாக விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட ஓர் ஊழியர் அவசரமாக பெட்டிக்குள் இறங்கி மனோகரனை வெளியே இறக்கிவிட்டு அவரும் வெளியே வந்தார்.

சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றதும் எங்கள் அனைவரையும் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அழைத்துச் சென்றார் ஓர் ஊழியர். ஸ்டேஷன் மாஸ்டர் எங்களுடைய பெயர், தெரு விவரங்களை விசாரித்தார். இறுதியாக இனி ஒரு போதும் புங்கை மரத்தைக் கடந்து இரண்டாவது ரயில் மேடையின் பக்கம் சென்று விளையாடக்கூடாது என்று எச்சரித்துவிட்டு அனுப்பிவைத்தார். பிறகு மாமாவை மட்டும் தனியாக அறைக்குள் அழைத்துச் சென்று ஏதோ பேசிவிட்டு அனுப்பிவைத்தார்.

அன்றைய நிகழ்ச்சியைப்பற்றி நாங்கள் ஒருவரிடமும் வாய் திறக்கவில்லை. சொல்லத் தொடங்கினால், முதலில் தடைபடப் போவது எங்கள் விளையாட்டுதான் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அதனால் அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்பதுபோல மறுநாள் வழக்கமாக புறப்படும் நேரத்தில் பந்தை எடுத்துக்கொண்டு புங்கை மரத்தடிக்கு வந்துவிட்டோம்.

‘எல்லாம் மாயைதானா, பேதை எண்ணம் யாவும் வீணா’ என்று பாடிக்கொண்டிருந்த மாமா எங்களைப் பார்த்ததும் பாட்டை நிறுத்திவிட்டு ‘வாங்கடா, யாருகிட்டயாவது மூச்சு விட்டீங்களாடா?’ என்று கேட்டார். நாங்கள் இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை அசைத்தோம். ‘நீங்களும் அதையே நெனச்சிட்டு இருக்கக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமா மறந்துடணும். புரியுதா? போய் சந்தோஷமா ஆடுங்க’ என்றார்.

மாமா அந்த ஊரில் இருந்த வரைக்கும் அவருடைய குரல் அந்த வட்டாரத்தில் எதிரொலித்தபடியே இருந்தது. எங்கு நின்றாலும் அவர் குரல் காற்றில் மிதந்துவரும். ஸ்டேஷன் பக்கமாகச் செல்லும் வண்டிக்காரர்கள், தயிர்க்காரிகள், சைக்கிளில் கீரைக்கட்டு சுமந்துசெல்பவர்கள். ஆடு வியாபாரிகள், பலகாரக்கூடை சுமந்து செல்பவர்கள் எல்லோருமே அவரைத் தேடி வந்து ஒரு வார்த்தை பேசிவிட்டுச் செல்வார்கள். அந்த உரையாடல்தான் ஒவ்வொரு நாளும் அவருக்குக் கிடைத்த பெரிய சத்துணவு.

புங்கைமரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது சாதாரணமான பிரஜையாகத் தோற்றமளிக்கும் மாமா நெம்புகோல் மேடையில் ஏறி நின்றுவிட்டால் அந்த ஸ்டேஷனுக்கு வந்து போகிற ரயில்களையெல்லாம் பொறுப்போடு கட்டி மேய்க்கிறவரே அவர்தான் என்று தோன்றும்.

ஸ்டேஷன்களில் நெம்புகோல் மேடையைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஓர் எண்ணம் எழுவதுண்டு. அங்கே இருப்பவையெல்லாம் இரண்டடி மூன்றடி நீளமுள்ள சாதாரணத் துடுப்புகள் மட்டுமே. ஆனால் அந்தத் துடுப்பிலிருந்து பீறிட்டுச் செல்லும் ஒரு சிறு விசைதான் ஆயிரம் அடி, இரண்டாயிரம் அடி நீளமுள்ள ஒரு ரயிலையே இயக்குகிறது.

0

பகிர:
nv-author-image

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *