Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்

பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்

பன்னீர்ப்பூக்கள்

ஆறாம் வகுப்பிலேயே நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்துவிட்டாலும் உண்மையான உயர்நிலை வகுப்பு என்பது ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் தொடங்கியது. ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் ஒருவர்கூட ஒன்பதாம் வகுப்புக்கு வரமாட்டார்கள் என்றும் எல்லாப் பாடங்களுக்கும் புதிய ஆசிரியர்களே வருவார்கள் என்றும் முதல் நாள் பிரார்த்தனையிலேயே சொல்லிவிட்டார்கள்.

ஒன்பதாம் வகுப்பில் மூன்று பிரிவுகள் இருந்தன. என் பெயர் ஆ பிரிவுக்குரிய பட்டியலில் இடம்பெற்றிருந்தது. நாங்கள் அனைவரும் வரிசையாக நடந்து சென்று எங்களுக்குரிய வகுப்பறையில் உட்கார்ந்தோம். ஒவ்வொரு பாடத்துக்கும் யார் யார் வரப்போகிறார்களோ என்று பதற்றமாக இருந்தது.

எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுத்த ராமசாமி சாரும் அதியமான் சாரும் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்கள். அவர்களைப்போன்ற அன்பான ஆசிரியர்கள் வரவேண்டும் என்று பிள்ளையாரிடம் மனத்துக்குள்ளேயே பிரார்த்தனை செய்தபடி இருந்தேன். ஐந்தாம் வகுப்பு வரை என்னோடு கோவிந்தையர் பள்ளியில் படித்த பல நண்பர்கள் எட்டு வரைக்கும் அங்கேயே படித்துவிட்டு உயர்நிலைப்பள்ளியில் புதிதாகச் சேர்ந்திருந்தார்கள். அவர்களையெல்லாம் பார்த்துப் பேசிய மகிழ்ச்சி எதுவும் மனத்தில் படியவில்லை. பதற்றம் மட்டுமே குடிகொண்டிருந்தது.

முதல் பாடவேளைக்கு வந்த ஆசிரியர் உயரமாக இருந்தார். நாங்கள் எழுந்துநின்று அவருக்கு வணக்கம் சொன்னோம். ‘வணக்கம் வணக்கம் . உக்காருங்க‘ என்றபடி அவர் மேசைக்கு அருகில் சென்று நின்றுகொண்டு எங்களைப் பார்த்தார். வெள்ளைவெளேரென்று வேட்டி கட்டியிருந்தார். சந்தன நிறத்தில் சட்டை. சுருள்சுருளான முடி. சிவந்த நிறம். நெற்றியில் நேர்க்கோடாக திருமண் வைத்திருந்தார். ‘நான் ராதாகிருஷ்ணன். உங்களுக்கு தமிழ் எடுக்கறேன்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். நாங்கள் ஒவ்வொருவராக எழுந்து எங்கள் பெயரையும் இதற்கு முன் படித்த பள்ளியின் பெயரையும் இணைத்துச் சொன்னோம். அனைவரும் சொல்லிமுடிக்கும் வரைக்கும் காத்திருந்துவிட்டு அவர் பாடம் எடுக்கத் தொடங்கினார்.

காலையில் நான்கு பாடவேளைகள். மாலையில் மூன்று பாடவேளைகள். தமிழ், தமிழ் துணைப்பாடம், ஆங்கிலம், ஆங்கிலம் துணைப்பாடம், கணக்கு, விஞ்ஞானம் ஆகிய பாடங்களை எடுக்கப்போகும் ஆசிரியர்கள் யார் யார் என்பது தெரிந்துவிட்டது. கடைசிப் பாடவேளை சரித்திரம், பூகோளம் பாடங்களுக்கு உரியது. அந்த ஆசிரியர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தோம்.

ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு அவர் வந்தார். மெலிந்த தோற்றம். கதர்வேட்டியும் கதர்ச்சட்டையும் அணிந்திருந்தார். சட்டையின் இடதுபக்கத்தில் இருந்த பைக்குள் ஒரு சின்னஞ்சிறு குறிப்பேடும் பேனாவும் இருந்தன. அடர்த்தியான தலைமுடி. ஒடுங்கிய முகம். பாரதியாரைப்போலவே முறுக்கு மீசை. எங்கள் வணக்கத்தை ஒரு புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு பதிலுக்கு வணக்கம் சொன்னார். பேசும் போதே தன்னிச்சையாக அவருடைய கைவிரல்கள் மீசைநுனியை முறுக்கிவிட்டபடி இருந்தன. மேசை மீது இருந்த சாக்பீஸை எடுத்துச் சென்று கரும்பலகையில் சரித்திரம் பூகோளம் என்று பெரிய எழுத்துகளால் எழுதி, அதற்குக் கீழே நீளமான ஒரு கோட்டை இழுத்தார்.

‘சரித்திரம். இதுதான் நான் உங்களுக்கு எடுக்க இருக்கிற பாடம். என் பெயர் சுப்பையா. நீங்க எல்லாரும் உங்க பேரைச் சொல்லுங்க.’

முதல் பாடவேளையிலிருந்தே இது எங்களுக்குப் பழகியிருந்ததால் நாங்கள் உடனே எழுந்து கடகடவென்று சொல்லத் தொடங்கினோம். எங்கள் வேகத்தைப் பார்த்து அவர் புன்னகையுடன் கையை உயர்த்தி ‘பொறுமை. பொறுமை. அவசரமில்லாம சொல்லுங்க. நாம என்ன ரயிலையா பிடிக்கப் போறோம்?’ என்றார்.

கடைசி மாணவன் சொல்லிமுடிக்கும் வரை மீசையை முறுக்கியபடி காத்திருந்தார் சுப்பையா சார். பிறகு கணீரென்ற குரலில் ‘பாதி பேருக்கு மேல கோவிந்தையர் பள்ளியிலேருந்து வந்திருக்கீங்கன்னு நெனைக்கறேன். கோவிந்தையர் பள்ளின்னு சொன்னவங்க எல்லாரும் ஒருதரம் எழுந்து நில்லுங்க’ என்றார்.

கோவிந்தையர் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டோம். ஒருவேளை வகுப்பைப் பிரித்து தனியாக உட்காரவைக்கப் போகிறாரோ என்று தோன்றியது. மெல்ல தயக்கத்துடன் எழுந்து நின்றோம். அவர் மாணவர்களை எண்ணிப் பார்த்து ‘இருபத்தஞ்சி’ என்று தனக்குள் சொன்னபடியே புருவத்தை உயர்த்தியபடி ‘சரி, உக்காருங்க’ என்றார். தொடர்ந்து ‘கோவிந்தையர் பள்ளின்னு உங்க பள்ளிக்கூடத்துக்குப் பேரு வச்சிருக்காங்களே, ஏன் அப்படி வச்சிருக்காங்க, யாருக்காவது தெரியுமா?’ என்று கேட்டார்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் கோவிந்தையர் பள்ளியில் எந்த ஆசிரியரும் அதை எங்களுக்கு எடுத்துச் சொன்ன நினைவு இல்லை. எல்லோரும் அமைதியாக அமர்ந்தோம். நான் மட்டும் ஏதோ ஒரு வேகத்தில் ‘ஜார்ஜ் ஸ்கூல்ங்கறதுதான் சார் அதனுடைய உண்மையான பெயர். இப்பதான் அதுக்கு கோவிந்தையர் பள்ளின்னு பேர மாத்தி வச்சிட்டாங்க’ என்று எழுந்து வேகமாகச் சொன்னேன்.

‘ஏன் அப்படி மாத்தினாங்க? யார் அந்த கோவிந்தையர்? அவர் பேரை வைக்கிற அளவுக்கு அவர் ஏன் முக்கியமானவர்?’

நானாகவே வலியச் சென்று வலையில் சிக்கிக்கொண்டேன் என்பது அக்கணத்தில் புரிந்துவிட்டது. மெளனமாக அவர் முன்னால் நிற்க எனக்கு கூச்சமாக இருந்தது. ஒருவரையொருவர் புருவத்தை உயர்த்தி தமக்குள்ளாகவே கேட்டபடியும் உதட்டைப் பிதுக்கி பதிலைப் பரிமாறிக்கொண்டபடியும் இருந்தார்கள். சைகையாலேயே என்னை உட்காரும்படி சொன்னார் சுப்பையா சார்.

‘சரி, கோவிந்தையர் யாரு, எந்த ஊரு, எந்த நாடு, அதுவாவது தெரியுமா?’ என்று சுப்பையா சார் உடனே அடுத்த கேள்வியைக் கேட்டார்.

யாருக்குமே அந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை. இரு பிரிவாக அமர்ந்திருந்த மாணவர்களுக்கு நடுவிலிருந்த இடைவெளியில் கடைசி வரிசை வரைக்கும் நடந்து சென்ற சுப்பையா சார் மீண்டும் வந்து மேசைக்கு அருகில் நின்றார்.

‘நாம இப்ப ஒரு கோயிலை பார்க்கறோம். அந்த கோயில் எந்தக் காலத்துல கட்டினது, எந்த ராஜா கட்டினாரு, எந்த சாமிக்காக கட்டினாருன்னு எல்லாக் கேள்விக்கும் பதில தெரிஞ்சி வச்சிக்கறோம். ஒரு அணைக்கட்ட நேருலயோ, புத்தகத்துலயோ பார்க்கறோம்னு வைங்க. உடனே அது யாரு கட்டினாங்க, எந்த காலத்துல கட்டினாங்க, எந்த ஆத்துக்குக் குறுக்க கட்டினாங்கன்னு எல்லா விவரங்களையும் தெரிஞ்சி வச்சிக்கறோம். இல்லையா? ஏன் அதையெல்லாம் தெரிஞ்சிக்கணும்? அதுதான் சரித்திரம். அதனால தெரிஞ்சிக்கறோம். இல்லையா?’

‘ஆமாம் சார்’

‘ஆனா, கோவில், அணைக்கட்டு மட்டும் சரித்திரம் இல்லை. ஊரு, பள்ளிக்கூடம், ஏரி, குளம் கூட சரித்திரம்தான். அந்த சரித்திரத்தையும் நாம தெரிஞ்சிக்கணும். ஒரு பள்ளிக்கூடத்துக்கு காந்திஜி பள்ளிக்கூடம், நேருஜி பள்ளிக்கூடம், நேதாஜி பள்ளிக்கூடம்னு தாராளமா பேரு வச்சிருக்கலாம். ஆனா அதயெல்லாம் விட்டுட்டு கோவிந்தையர் பள்ளின்னு ஏன் பேரு வைக்கணும்? அதுக்கு ஒரு காரணம் உண்டு. அதைத்தான் நாம தெரிஞ்சி வச்சிருக்கணும். அந்த பள்ளிக்கூடத்துல படிச்சிட்டு வரக்கூடிய மாணவர்கள் அதை நிச்சயமா தெரிஞ்சி வச்சிருக்கணும். அதுவும் ஒரு சரித்திரம். வளவனூருக்குன்னு இருக்கிற சரித்திரம். புரியுதா?’

நாங்கள் அவர் முகத்தையே மெளனமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

‘கோவிந்தையர்ங்கறவரு அந்தக் காலத்துல வளவனூருல வாழ்ந்த ஒரு எண்ணெய் வியாபாரி. ஆனா, பணம் சம்பாதிக்கறது மட்டுமில்லாம, ஊர் மக்களுக்கும் நன்மை செய்யணும்னு நெனச்ச வியாபாரி. பர்மாவுல அந்த காலத்துல கடலை எண்ணெய்க்கு ஒரு நல்ல மதிப்பு இருந்தது. நாம் எல்லாரும் இங்க கடலை எண்ணெய விளக்கு எரிக்க பயன்படுத்திட்டிருந்த சமயத்தில பர்மாகாரங்க சமையலுக்கு பயன்படுத்தினாங்க. அதனால வருஷம் முழுக்க அந்த நாட்டுல அந்த எண்ணெய்க்கான தேவை இருந்தது. அந்த காலத்துல சுலைமான் சாவாஜின்னு ஒரு கல்கத்தா வியாபாரிதான் பர்மாவுக்கு பீப்பாய் பீப்பாயா எண்ணெய ஏற்றுமதி செஞ்சிகிட்டிருந்தாரு. அவரு ஒருநாள் தனக்குத் தேவையான அளவு பீப்பாய்ல நிரப்பி எண்ணெய கொடுக்கிறவங்களுக்கு தகுந்த விலை கொடுக்கப்படும்னு பத்திரிகையில ஒரு விளம்பரம் கொடுத்தாரு. தற்செயலா அதைப் படிச்ச கோவிந்தையருக்கு அதுல ஈடுபடணும்ன்னு ஒரு எண்ணம் உருவாயிடுச்சி. புரியுதா?’

‘நல்லா புரியுது சார்.’

எல்லோரும் ஒரே குரலில் சொன்னபடி தலையசைத்தோம்.

‘வேர்க்கடலைக்காக அக்கம்பக்கம் கிராமங்கள்ல அலைஞ்சி பார்த்துட்டு கேரளா வரைக்கும் போய் வந்தாரு. கொண்டு வந்த கடலையை எல்லாம் செக்குல போட்டு ஆட்டினதுல நாலு பீப்பாய் எண்ணெய்தான் கிடைச்சிது. விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் அப்பதான் முதமுதலா ரயில் விட்டிருந்த நேரம். பாண்டிச்சேரியில ஒரு பெரிய துறைமுகம் இருந்தது. ரயில் வழியா எண்ணெய்ப் பீப்பாய்கள் பாண்டிச்சேரிக்குப் போய், அங்கேருந்து கப்பல் வழியா கல்கத்தாவுக்கு போய் சேர்ந்துடுச்சி. கோவிந்தையர் அனுப்பி வைச்ச எண்ணெயுடைய தரம் நல்லதா இருந்ததால, கல்கத்தா வியாபாரியும் விளம்பரத்துல சொன்ன பணத்தை கொடுத்துட்டாரு.’

‘ஏற்றுமதி மாதிரியா சார்?’ என்று நான் கேட்டேன்.

‘அதேதான். அந்த கல்கத்தா வியாபாரியுடைய தேவை அதிகமா இருந்தது. அதனால இந்த வளவனூருலயும் வளவனூர சுத்தி இருந்த சின்னச் சின்ன ஊருகள்லயும் இருந்த விவசாயிகள்கிட்ட பேசி வேர்க்கடலையைப் பயிரட வைச்சாரு. அதேபோல செக்கு ஆட்டறவங்க பல பேர வளவனூருக்கும் வரவழைச்சாரு. பீப்பாய்கள் செய்யறதுக்கான வாய்ப்பு தொடர்ச்சியா இருந்துட்டே இருந்ததால தச்சுத்தொழில் தெரிஞ்ச பலர் புதுசா ஊருக்குள்ள குடியேறினாங்க. கோவிந்தையர் பெரிய தொழில் முனைவரா மாறிட்டாரு. தன்னை நம்பி பல ஊருலேர்ந்து கிளம்பி வந்த குடும்பங்கள் வீடு கட்டி வாழறதுக்கு ஏற்பாடு செஞ்சி குடுத்தாரு. அப்புறம் அவுங்க பிள்ளைகள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் கட்டினாரு. அதுக்கு இங்க்லீஷ் அரசனான ஜார்ஜ் பேரயே வச்சாரு. நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிற வரைக்கும் அந்தப் பேருலதான் அந்த ஸ்கூல் நடந்தது. அதுக்கப்புறம்தான் அந்தப் பள்ளிக்கூடம் உருவாகறதுக்கே காரணமா இருந்த கோவிந்தையருடைய பெயர வைச்சாங்க. கோவிந்தையர்ங்கற பெயருக்குப் பின்னால இத்தனை பெரிய சரித்திரம் இருக்குது. புரியுதா? இந்த உலகத்துல இருக்கிற எல்லாத்துக்கும் ஒரு சரித்திரம் இருக்குது. அதையெல்லாம் தெரிஞ்சிக்கணும். அதுதான் பொது அறிவு. புத்தக அறிவு மட்டும் போதாது.’

ஒரு கதையைச் சொல்வதுபோல விவரித்துச் சொல்லும் விதம் என்னைப்போலவே எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவருடைய பாடவேளைக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் மிகப்பெரிய கால்பந்தாட்ட மைதானம் இருந்தது. அந்த அளவுக்கு பெரிய மைதானங்கள் அக்கம்பக்கத்தில் இருந்த எந்தப் பள்ளியிலும் இல்லை. ஆனால் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளிக்கூட எல்லையை வரையறுக்கமுடியாமல் ஒரு பெரிய வெட்டவெளியைப்போலக் காட்சியளித்தது. கல்வி அதிகாரிக்கு அவர் எழுதி அனுப்பிய கோரிக்கை மனுக்களுக்கு ஒரு பதிலும் வராதது அவருக்குள் ஆழ்ந்த வருத்தத்தை உருவாக்கியிருந்தது. ஆசிரியர்கள் சந்திப்பில் என்றோ ஒரு நாள் பேச்சு வந்தபோது, எல்லாவற்றையும் மனத்துயரத்துடன் சொல்லிவிட்டார் அவர். அப்போது கத்தாழையை நட்டு ஓர் உயிர்வேலியை நமக்கு நாமே உருவாக்கலாம் என்று சுப்பையா சார் சொன்ன ஆலோசனை எல்லோருக்கும் புதியதாக இருந்தது. உடனே அனைவரும் அந்தப் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துவிட்டனர்.

அடுத்த நாள் காலையில் கொடிவணக்கம் முடிந்த பிறகு சுப்பையா சார் உயிர்வேலி எழுப்பும் திட்டத்தைப்பற்றி மாணவர்களிடம் விளக்கினார். அன்றுமுதல் ஒன்பது, பத்து, பதினொன்று வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வாரத்துக்கு ஒருமுறை ஒருமணி நேரம் மைதானத்துக்கு வரவேண்டுமென்றும் குழிவெட்டி, கத்தாழைக்கன்றுகளை நட்டு, தண்ணீர் ஊற்றி பிழைக்க வைக்கும் வேலையில் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எல்லோரும் கைத்தட்டி தம் சம்மதத்தைத் தெரிவித்தனர்.

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு மாணவர்கள்தான் முதலில் வேலையைத் தொடங்கினார்கள். வேலி நேர்க்கோட்டில் அமையும் வகையில் அங்கங்கே சில குச்சிகளை நட்டு நூல் பிடித்து சுண்ணாம்புப் பொடி தூவி அடையாளப்படுத்தினர். மறுநாள் அடுத்த பிரிவு மாணவர்கள் அக்கோட்டின் மீது இரண்டு அடி இடைவெளியில் சீரான ஆழத்தில் குழிதோண்டினர். அடுத்த நாள் மற்றொரு பிரினர் அக்கம்பக்கம் கத்தாழைப்புதர்கள் தென்படும் தோட்டங்களுக்கும் குளக்கரைக்கும் சென்று புதருக்கருகில் கிளைவிட்டிருக்கும் இளங்கன்றுகளை மண்ணோடு அகழ்ந்து கூடைக்குள் அடுக்கி வைத்து எடுத்து வந்தனர். அந்த ஈரமண்ணின் நிறம் வாடுவதற்கு முன்னாலேயே குழிக்குள் வைத்து புதைத்து தண்ணீர் பாய்ச்சினர்.

குழியெடுக்கும் நேரத்திலும் சரி, கத்தாழைக்கன்றுகளை நடும்போதும் சரி, மாணவர்களோடு ஒரு மாணவனாக சுப்பையா சாரும் நின்றிருந்தார். ஒருநாளும் கட்டளையிடுபவராக தன்னை நினைத்துக்கொண்டு ஒதுங்கி நின்றதில்லை. அப்போதுதான் அனைவரிடமும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சுவாரசியமான கதைகளைச் சொன்னார். எளிதாக விடுவித்து பதில்கள் சொல்லும் வகையில் விடுகதைகள் சொன்னார். தொலைவில் மண்சாலையில் மிதிவண்டியில் நுங்கு குலைகளைக் கட்டிக்கொண்டு விற்பதற்காக அடுத்த ஊருக்குள் செல்லும் வியாபாரியை கைதட்டி அருகில் அழைத்து எல்லோருக்கும் நுங்கு வாங்கிக் கொடுத்தார். பல சமயங்களில் நாற்பது ஐம்பது வடைகளை ஒருசேர கடையிலிருந்து வரவழைத்து மாணவர்களுக்குக் கொடுத்தார்.

ஒருமுறை ‘யாராவது ஒரு பாட்டு பாடுங்கடா’ என்று சொன்னார் சுப்பையா சார். ஒருவனும் வாய் திறக்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மெளனமாக நின்றிருந்தனர். உடனே அவரே ஒருவனை அழைத்து ‘ஒரு பாட்டு பாடுடா’ என்றார். அவன் உடனே வெட்கத்துடன் ‘முழுசா தெரியாது சார். பாதி பாட்டுதான் தெரியும்’ என்றான். ‘தெரிஞ்சவரைக்கும் பாடு தம்பி’ என்று அவனைத் தூண்டிவிட்டார் சுப்பையா சார்.

அவன் மெதுவாக ‘அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்’ என்று பாடத் தொடங்கினான். முதலில் இரண்டு வரிகள் பாடும் வரைக்கும்தான் அவன் குரலில் தயக்கம் இருந்தது. பிறகு மெல்லமெல்ல உயர்ந்துகொண்டே சென்று உச்சத்தில் நிலைபெற்றது. தெரிந்தவரைக்கும் பாடி அவன் நிறுத்தியதும் சுப்பையா சார் அவனைப் பாராட்டும் விதமாக கைததட்டினார். உடனே நாங்களும் கைதட்டினோம்.

அடுத்து சுப்பையா சார் மீண்டும் ஒருவனை விரலால் சுட்டி ‘ம், நீ பாடு’ என்றார். அவன் சில நொடிகள் வெட்கத்தில் முகம் சிவந்து பிறகு தெளிந்து ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று தொடங்கினான். அவன் பாடி முடித்ததும் என் பக்கமாக விரலை நீட்டிவிட்டார். நான் ‘திருடாதே, பாப்பா திருடாதே’ பாட்டைப் பாடினேன். சுப்பையா சார் அன்று அனைவரையும் பாட வைத்துவிட்டார். அப்போது ஒருவரும் எதிர்பாராத வகையில் மனோகரன் ‘சார், நீங்க ஒரு பாட்டு பாடுங்க சார்’ என்று குரலெழுப்பினான்.

சுப்பையா சாரிடம் வசைபடப் போகிறான் என்று நாங்கள் நினைத்திருந்த வேளையில் சார் சிரித்துக்கொண்டே ‘நான் பாடறேன். ஆனா நீங்க யாரும் இந்த இடத்தைவிட்டு ஓடாம இங்கயே நிக்கணும். நிப்பிங்களாடா?’ என்று கேட்டார். ‘எல்லாரும் இங்கயே நிப்போம் சார். நீங்க பாடுங்க சார்’ என்றான் மனோகரன்.

‘பாலும் தேனும் பெருகி ஓடுது பரந்த சீமையிலே நாம பொறந்த சீமையில’ என்று பாடத் தொடங்கினார் சுப்பையா சார். உண்மையாகவே ஒரு வண்டிக்காரனைப்போல இடையிடையே அவர் மாட்டை அதட்டும் வகையில் எழுப்பிய ஹாய் ஹாய் சத்தம் எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. அப்போது சாரைப் பார்க்கும்போது, சார் மாதிரியே தோன்றவில்லை. எங்களோடு சேர்ந்து படிக்கும் மற்றொரு மாணவனைப்போலவே தோன்றினார்.

ஒரே மாதத்தில் உயிர்வேலி அமைக்கும் வேலை முடிந்தது. அடுத்த மாதம் முழுதும் ஒரு நாள் கூட விடாமல் முறை வைத்துக்கொண்டு நீர் ஊற்றினோம். மூன்றாவது மாதத்தில் ஒருசில கன்றுகளைத் தவிர, எல்லாமே பிழைத்து தலைநிமிர்ந்துவிட்டன. பச்சைத்துளிர்கள் அரும்பி தலைநீட்டின. அடுத்த மூன்று மாதங்களில் மழையாலும் இயற்கையான ஈரத்தாலும் கத்தாழையின் வளர்ச்சியில் எங்களால் வேலியைப் பார்க்கமுடிந்தது.

வகுப்பு வேறுபாடு இல்லாமல் எல்லா மாணவர்களும் சுப்பையா சாருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர் சொல்லும் வேலைகளைச் செய்வதைப் பார்த்ததாலோ என்னமோ, பள்ளிக்கூடத்தில் எந்தப் பொதுவேலையாக இருந்தாலும் சரி, தலைமையாசிரியர் அதை சுப்பையா சாரிடம் ஒப்படைக்கத் தொடங்கிவிட்டார். அவரும் அதை உள்ளார்ந்த ஈடுபாட்டோடு பல மடங்கு சிறப்பாகச் செய்து பழகிவிட்டார்.

அப்போது இந்தியா சுதந்திரமடைந்த வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தை சிறப்பாகக் கொண்டாடும்படி சுற்றோலை வந்தது. உடனே வழக்கம்போல தலைமையாசிரியர் அப்பொறுப்பை சுப்பையா சாரிடம் கொடுத்துவிட்டார்.

எங்கள் பள்ளி வளாகம் மிகப்பெரியது. ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட அறைகள். ஆய்வுக்கூடங்கள். தேர்வுக்கூடங்கள். அலுவலக அறைகள். கொடிவணக்கத்துக்கும் பிரார்த்தனைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருங்கே கூடி நிற்கும் வகையில் மிகப்பெரிய பரப்பளவைக்கொண்ட வெட்டவெளி. அதைத் தூய்மைப்படுத்தி பளிச்சிட வைப்பது எளிதான வேலையல்ல. ஆனால் சுப்பையா சார் எங்கள் அருகில் நின்று யோசனைகளை வகுத்துக் கொடுத்தால் போதும், எந்த வேலையையும் செய்துமுடிக்கும் உறுதி எங்களுக்கு இருந்தது.

தூய்மைப்பணியை முடித்து மூவண்ணக்கொடிகளை அங்கங்கே பறக்கவைத்தோம். பறக்கவைக்க போதிய வழியில்லாத இடங்களில் ஒட்டிவைத்தோம். எங்கள் பள்ளிவளாகத்தின் முகமே மாறிவிட்டது. வேலை முடிவடையும் தருணத்தில் சுப்பையா சார் ‘இந்த வெள்ளி விழா ஆண்டை யாருமே மறக்கமுடியாத வகையில் ஒரு வேலை செய்யலாமா?’ என்றொரு கேள்வியை எங்களிடம் கேட்டார்.

‘என்ன செய்யலாம் சார்?’ என்றபடி நான் அவரைப் பார்த்தேன்.

உடனடியாக அவர் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. ஒருகணம் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தார். பிறகு புன்னகைத்தபடி ‘அசோகர் என்னென்ன செய்தார் சொல்லு, பார்ப்போம்’ என்று என்னிடம் எதிர்க்கேள்வி கேட்டார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. சார் ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதபடி பேசுகிறார் என நினைத்து சற்றே குழப்பத்தில் மூழ்கினேன். ஆனாலும் அமைதியாக ‘அசோகர் நகரெங்கும் ஏரிகளை வெட்டினார். குளங்களை ஏற்படுத்தினார். நகரங்களை இணைக்கும் சாலைகளை அமைத்தார். சாலையோரங்களில் மரங்களை நட்டார்…..’ என்று வரிசையாக அடுக்கிக்கொண்டே சென்றேன். சட்டென்று ‘நிறுத்து. நிறுத்து’ என்று புன்னகை படிந்த முகத்துடன் என் தோளில் கைவைத்து அழுத்தினார் சார். நான் அவரை மேலும் குழப்பத்துடன் பார்த்தேன்.

‘அசோகர் கி.மு.காலத்துல நம்ம நாட்டுல வாழ்ந்த ஒரு அரசன். ஆனா இன்னைக்கும் அந்த அரசனைப் பத்திய பேச்சு வந்ததுமே அவன் மரம் வச்சதும் சாலை போட்டதும்தான் மக்களுடைய நினைவுக்கு வருது. பாடத்துலயும் அதுதான் இருக்குது. ஒரு மரம் நடறதுக்கு நம்ம தேசத்துல அவ்வளவு பெரிய முக்கியத்துவம் இருக்குது. அதைத்தான் நாம கவனிக்கணும்.’

நாங்கள் அவருடைய முகத்தையே கவனித்துக்கொண்டிருந்தோம்.

‘இந்த வெள்ளிவிழா சுதந்திரதினத்தை மரம் நட்டு மறக்கமுடியாத நாளா மாத்தணும்கறதுதான் நம்ம திட்டம். என்ன சொல்றீங்க?’

எங்களுக்கு அப்போதும் எதுவும் புரியவில்லை. ஆனால் உற்சாகமான அவருடைய குரலையும் வெளிச்சம் படர்ந்த அவருடைய முகத்தையும் பார்த்தபோது அவர் சொல்லும் திட்டத்தில் ஏதோ ஒரு முக்கியத்துவம் இருக்கக்கூடும் என்று தோன்றியது. உடனே ஒருமித்த குரலில் ‘சரி சார்’ என்று சொல்லிவிட்டோம். அன்று மாலையில் தலைமையாசிரியரைச் சந்தித்து அத்திட்டத்துக்கு ஒப்புதலையும் பெற்றுவிட்டார் சார்.

மறுநாள் ஒவ்வொரு வகுப்பறைக்கு முன்னாலும் இரு மரக்கன்றுகளை நடும் வகையில் குழியெடுப்பது என்று முடிவானது. தொலைவிலிருந்து பார்க்கும்போது எல்லாக் குழிகளும் எப்படி நேர்க்கோட்டில் அமையவேண்டும் என்பதை சுப்பையா சார் விளக்கி, அதற்குத் தகுந்த வகையில் பொருத்தமான இடங்களில் குழிக்கான இடங்களை முடிவுசெய்தார். அந்தந்த வகுப்பு மாணவர்களே தம் வகுப்பு வாசலில் குழியெடுத்தார்கள்.

வெள்ளிவிழா கொண்டாட்டத்துக்கு விழுப்புரத்திலிருந்து உயர் கல்வி அதிகாரி வந்து கொடியேற்றி உரையாற்றினார். தலைமையாசிரியர் அலுவலகத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டிருந்த குழிகளில் இரு தென்னங்கன்றுகளையும் இரு புங்கைமரக் கன்றுகளையும் நட்டு மரம் நடு விழாவைத் தொடங்கி வைத்தார் அவர். வகுப்பறையின் முன்னால் அந்தந்த வகுப்பாசிரியர்கள் இணைந்து கன்றுகளை நட்டனர். கொன்றை, அசோகம், நுணா, தூங்குமூஞ்சி, வேம்பு, புன்னை, பூவரசு என வகைக்கு ஒன்றாக கலவையாக நட்டனர். தண்ணீர் எடுத்துவந்து கன்றுகளுக்கு தண்ணீர் விடும் பொறுப்பை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் இரு மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒன்பது, பத்து, பதினொன்று மூன்று வகுப்புகளிலும் எங்களுக்கு சுப்பையா சாரே சரித்திரம் பூகோளம் பாடங்களை நடத்தும் ஆசிரியராக இருந்தார். அந்த மூன்று ஆண்டுகளிலும் நாங்கள் அறிந்துகொண்ட பல பொதுச்செய்திகளுக்கு அவரே எங்களுக்குச் சாளரமாக விளங்கினார்.

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. மூன்றுமுறை நாங்கள் மாதிரித்தேர்வுகளை எழுதினோம். இறுதி நாளன்று எல்லோரும் ஒரு நோட்டை எடுத்துச் சென்று எல்லா ஆசிரியர்களையும் சந்தித்தோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வாழ்த்துச் செய்தியை எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்கள். என் முறை வந்தபோது நான் சுப்பையா சாரிடம் என் நோட்டைக் கொடுத்தேன். அவர் ஒரு கணம் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு நோட்டில் ‘ஏழை பணக்காரன் வேறுபாடு இந்த உலகத்தில் இருக்கத்தான் வேண்டுமா? சிந்தித்துச் செயல்படு’ என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

இறுதித்தேர்வு முடிந்ததும் அந்தப் பள்ளியைவிட்டு வெளியேறியபோது இதயம் கனத்திருந்தது. நண்பர்களும் ஆசிரியர்களும் இல்லாத நாட்களின் வெறுமை அடுத்த நாளே தாக்கத் தொடங்கிவிட்டது. நல்ல வேளையாக, நான் காலையில் விறகு வெட்டிவர வேலங்காட்டுக்குச் சென்றுவிடுவேன். அங்கு செல்லாத நாட்களில் கடைக்குச் சென்று அப்பாவின் தையல் வேலைகளில் உதவி செய்வேன். மாலை வேளைகளில் நூலகத்துக்குச் சென்று படிப்பேன். எப்படியோ ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு விதமாகக் கழிந்து மறைந்தது.

ஒருநாள் நானும் எங்கள் பெரியம்மாவும் வேலங்காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்தேன். நல்ல கோடை வெயில். நடமாட்டமே இல்லாத அந்த நேரத்தில் யாரோ ஒருவன் ஏரிக்கு மறுபுறத்தில் இருந்து நடந்து வருவதைப் பார்த்தேன். கலியபெருமாள். வெயிலில் கண்கள் கூசியதால் யார் என்பதை ஊகிக்கமுடியவில்லை. நெருங்கி வந்து என் பெயரைச் சொல்லி அழைத்த பிறகுதான் அவனை என்னால் அடையாளம் கண்டுகொள்ளமுடிந்தது. என் வகுப்புத்தோழன். ‘என்னடா?’ என்றேன்.

‘இன்னைக்கு ரிசல்ட்டுடா. பள்ளிக்கூடத்துல ஒட்டியிருக்காங்களாம். பார்க்கறதுக்குத்தான் போயிட்டிருக்கேன், வரியா?’ என்று கேட்டான் அவன்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. இன்னும் தேவையான அளவுக்கு விறகு வெட்டி முடிக்கமுடியவில்லை. நான் குழப்பத்துடன் பெரியம்மாவைப் பார்த்தேன். ‘இருக்கறது போதும். எடுத்துட்டு போ. ஒங்கம்மா ஒன்னும் சொல்லமாட்டா’ என்றார். உடனே நான் வெட்டிவைத்த விறகுகளை மட்டும் கயிறால் கட்டி தலையில் வைத்துக்கொண்டு அவனோடு நடந்தேன்.

‘என்னடா, இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? பெரியம்மா எங்க?’ என்று கேட்டார் அம்மா. விவரம் என்ன என்பதை அம்மாவிடம் நான் பொறுமையாகச் சொன்னேன். ‘சரி, சரி, போயிட்டு வா’ என்று அம்மா அனுப்பிவைத்தார். நான் தோட்டத்துக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டு திரும்பி வந்து உடைமாற்றிக்கொண்டு வாசலுக்கு வந்தேன். நானும் கலியபெருமாளும் பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தோம்.

‘எங்கப்பா என்னை சென்னை லயோலா காலேஜ்ல பி.யு.சி. சேத்துவிடறேன்னு சொல்லியிருக்காருடா. இப்பவே ட்ரஸ், பெட்டி எல்லாம் வாங்கி தயாரா வச்சிட்டாரு. மெட்ராஸ் போயிட்டா ஊருக்கெல்லாம் அடிக்கடி வரமுடியாதுடா. படிச்சி முடிச்சிட்டுதான் வரமுடியும்.’

‘தங்கறதுக்கு என்னடா செய்வ?’

‘எங்க பெரியப்பா வீடு அங்கதான்டா இருக்குது. அங்க தங்கிக்குவேன். அவருதான்டா எல்லா ஏற்பாடும் செய்றாரு.’

தொடர்ந்து அவன் தன் எதிர்காலத் திட்டங்களைப்பற்றி சொல்லிக்கொண்டே வந்தான். நான் அமைதியாக அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டே நடந்தேன்.

பேசிக்கொண்டே சென்றதில் தொலைவு தெரியவில்லை. சீக்கிரமாகவே பள்ளியை அடைந்துவிட்டோம். வாசலில் நின்றிருந்த என் வகுப்பு மாணவர்கள் ஓடிவந்து என் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு முதுகில் தட்டினார்கள். ‘நீதான்டா ஃபர்ஸ்ட் மார்க். வெளுத்து வாங்கிட்ட. போ’ என்று தள்ளினார்கள். என் உடலெங்கும் சற்றே நடுக்கம் பரவியது. திடீரென தொண்டை வறண்டது. நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை பரவியது.

அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெரிய கரும்பலகையில் முடிவுத்தாட்களை ஒட்டியிருந்தார்கள். நாங்கள் அதை நோக்கி வேகமாக நடந்து சென்றோம். தேர்வெண்களுக்கு எதிரில் பெயரும் மதிப்பெண்களும் தட்டச்சு செய்யப்பட்டிருந்தன. பையிலிருந்து ஒரு தாளை எடுத்து பாடவாரியாக எடுத்திருக்கும் மதிப்பெண்களைக் குறித்துக்கொண்டேன். முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறோம் என்னும் மகிழ்ச்சியே மனத்தில் அரும்பவில்லை. அடுத்து என்ன என்னும் கேள்வியே நெஞ்சைக் குடைந்தது. பாதை தெரியாத இருளில் நின்றுகொண்டிருப்பதுபோல ஒரு தவிப்பு.

மற்றொரு கரும்பலகையில் பெரிய எழுத்துகளில் ஒரு குறிப்பை எழுதியிருந்தனர்.

‘வருகிற திங்கட்கிழமை முதல் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாணவர்கள் தம் பெற்றோர்களுடன் வந்து பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.’

கலியபெருமாள் வாய்விட்டுப் படித்தான். ‘ரொம்ப நல்லதா போச்சி. திங்கக்கெழமை சர்டிபிகேட் கெடைச்சா, எங்கப்பா என்னை அன்னைக்கே மெட்ராஸ்க்கு அழச்சிட்டுப் போயிடுவாரு’ என்று தெரிவித்தான். ‘போய் வாடா’ என்றபடி அவன் தோளில் தட்டினேன். ‘அப்பப்ப லெட்டர் போடு. மறந்துடாத, என்ன?’ என்றேன். ‘போனதும் முதல் லெட்டர் உனக்குத்தான்டா’ என்றான் கலியபெருமாள்.

அறிவிப்பின்படி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள என்னால் திங்கட்கிழமை செல்லமுடியவில்லை. அப்பா அன்றைக்கு கடைவேலையை விட்டு எங்கும் நகரமுடியாது என்று சொல்லிவிட்டார். இரு தினங்கள் கழித்து புதன் கிழமைதான் சென்றோம்.

தலைமையாசிரியர் அறைக்கு வெளியே எங்களுக்குப் பாடமெடுத்த பல ஆசிரியர்கள் நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் நான் வணக்கம் சொன்னேன். நான் முதல் மதிப்பெண் எடுத்திருப்பதை முன்னிட்டு எல்லோருமே வாழ்த்து சொன்னார்கள்.

சுப்பையா சார் அறைக்குள் உட்கார்ந்திருந்தார். அவர்தான் சான்றிதழ்களைச் சரிபார்த்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். வாசலில் நின்றிருந்த காவல்காரர் ஒவ்வொருவராகத்தான் உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார். உள்ளே சென்றவர்கள் வெளியே வந்த பிறகுதான் அடுத்த ஆள் செல்லமுடியும். நானும் அப்பாவும் வரிசையில் நின்றுகொண்டோம். .

சீக்கிரத்திலேயே எங்கள் முறை வந்தது. ‘வணக்கம் சார்’ என்று சொல்லிக்கொண்டே நான் உள்ளே சென்றேன். அப்பாவும் வணக்கம் சொன்னபடி பக்கத்தில் வந்து நின்றார். சுப்பையா சார் என்னைப் பார்த்து தலையசைத்தபடி சிரித்தார். ‘நீ ஃபர்ஸ்ட் மார்க் எடுத்திருக்கிறத நெனச்சி ரொம்ப பெருமையா இருக்குது. இதே மாதிரி எல்லா இடங்கள்லயும் ஃபர்ஸ்ட் எடுக்கணும். புரியுதா?’ என்றார். நான் மெளனமாகத் தலையசைத்தேன். அவர் எனக்குரிய சான்றிதழைத் தேடி எடுத்துப் பார்த்தார்.

‘அடடா, கணக்குல தொண்ணூத்தியெட்டுதான் வந்திருக்குதா? நூத்துக்கு நூறு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். ஸ்கூல் ரெக்கார்ட்ல உன் பேர் ஏறியிருக்கும்.’

சொல்லிக்கொண்டே என் பக்கமாக சான்றிதழைத் திருப்பி நான் கையெழுத்து போடவேண்டிய இடத்தை விரலால் சுட்டிக்காட்டினார். நான் கையெழுத்திட்டதும் அப்பாவின் பக்கம் திருப்பி அவர் கையெழுத்து போடவேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டினார். அதற்குப் பிறகு இன்னும் சில அலுவலக பதிவேடுகளில் சில இடங்களில் கையெழுத்து போடச் சொன்னார். எல்லாம் முடிந்த பிறகு சான்றிதழ்களை என்னிடம் கொடுத்தார்.

‘அடுத்து எங்க படிக்கப் போற? என்ன படிக்கப் போற? கணக்குலதான் நல்ல மார்க் இருக்குதே. பேசாம கணக்கு குரூப் எடுத்துப் படி.’

நான் அமைதியாக தலைகுனிந்து அவர் மேசையில் இருந்த பதிவேடுகளின் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என்னங்க, எந்தப் பதிலும் சொல்லாம இருக்கான் உங்க பையன்? நீங்க சொல்லுங்க. என்ன திட்டம் வச்சிருக்கீங்க?’ என்று அப்பாவைப் பார்த்துக் கேட்டார் சுப்பையா சார்.

‘அது வந்து…… வந்து…. படிச்சது போதும் சார். அதுக்கெல்லாம் வசதி இல்லை. இன்னும் நாலு புள்ளைங்க இருக்குது….. எல்லாருக்கும் ஏதாவது வழி பண்ணணும்….அதனால படிப்ப நிறுத்திட்டு கடையில வச்சி வேலை கத்துக் குடுக்கலாம்ன்னு இருக்கறேன்.’

சுப்பையா சார் அதிர்ச்சியடைந்தவராக நாற்காலியிலிருந்து எழுந்தார். ‘என்ன கடை வச்சிருக்கீங்க?’ என்றார்.

‘கடைத்தெருவுல தையக்கடை வச்சிருக்கேன்.’

சுப்பையா சார் எதுவும் பேசவில்லை. எங்கள் முகத்தைப் பார்க்காமலேயே விருட்டென்று எழுந்து அறையைவிட்டு வெளியே படியிறங்கி எங்கோ போய்விட்டார். அவர் போன வேகத்தைப் பார்த்ததுமே அவர் கோபமாகச் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. என் மனத்துக்குப் பிடித்த ஆசிரியரிடம் ஆசி பெற்று விடைபெறமுடியாமல் போயிற்றே என வருத்தமாக இருந்தது.

அறையை விட்டு வெளியே வந்தோம். வாசலில் நின்றிருந்த ஒரு பெரியவர் அப்பாவை பெயர் சொல்லி அழைத்து நிறுத்தினார். உடனே அப்பா அவரிடம் பேசத் தொடங்கினார். நான் படியிறங்கிச் சென்று அக்கம்பக்கத்தில் எங்காவது சுப்பையா சார் தென்படுகிறாரா என்று பார்த்தேன். எங்கும் காணவில்லை.

எதிர்வரிசையில்தான் எங்கள் வகுப்பறை இருந்தது. அதைப் பார்த்ததும் அருகில் செல்லவேண்டும் என்று தோன்றியது. நடந்து சென்றேன். நாங்கள் நட்டு நீரூற்றி வளர்த்த மரங்கள் என்னைவிட சற்றே உயரமாக வளர்ந்து இலைகளசைய நின்றிருந்தன. ஒருகணம் அம்மரத்தின் அருகில் சென்று தொட்டுப் பார்த்தேன்.

அப்பா என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் சத்தம் கேட்டது. பள்ளிக்கூடத்தை கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவருக்கு அருகில் சென்றேன். அவர் முன்னால் நடக்க, நான் பின்னால் போய்க்கொண்டிருந்தேன்.

வாசலிலிருந்து சிறிது தொலைவில் ஒரு புளியமரத்தடியில் சுப்பையா சார் நின்றிருந்தார். அவருடைய கையில் ஒரு சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. அவர் முகம் ஏதோ பதற்றத்தில் மூழ்கியிருப்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

சுப்பையா சாரைக் கண்டதும் அப்பா அந்த இடத்திலேயே திகைத்து நின்றுவிட்டார். அப்பாவிடம் பேசுவதற்குக் காத்திருப்பதுபோல அவர் மீது பார்வையைப் பதித்திருந்தார் சார். கடைசிமுறையாக புகையை இழுத்து ஊதிவிட்டு சிகரெட்டை கீழே போட்டு செருப்புக்காலால் மிதித்து நசுக்கிவிட்டு அப்பாவை நோக்கி நடந்துவந்தார்.

‘உங்ககிட்ட எப்படி பேசறதுன்னு தெரியலை. பணத்தை எப்படி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா படிக்கிற காலத்துல படிச்சாதான் படிப்புக்கும் மதிப்பு. படிக்கிறவனுக்கும் மதிப்பு. புரிஞ்சிகிட்டா சரி.’

அப்பாவிடம் பேசுவதுபோல சுப்பையா சார் மரத்தைப் பார்த்துச் சொன்னார். பிறகு பெருமூச்சுடன் இரண்டு அடி எடுத்து வைத்த பிறகு என் பக்கமாகத் திரும்பி ‘போடா. போய் படி. பிச்சை கூட எடுக்கலாம். தப்பில்லை. ஆனா படி’ என்று நிறுத்தாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் முதுகுப்பக்கத்தையே அப்பா சில கணங்கள் பேசாமல் பார்த்திருந்துவிட்டு அமைதியாக நடக்கத் தொடங்கினார். என்னிடம் திரும்பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நானும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தேன்.

அதற்குப் பிறகு என்னென்னவோ மாற்றங்கள் நடந்துவிட்டன. அப்பா கடைசி நேரத்தில் மனம் மாறி என்னைக் கடையிலேயே நிறுத்திவைக்கும் முயற்சியைக் கைவிட்டார். அம்மா தன் கம்மலை விற்று சேர்க்கைக்கட்டணத்தைச் செலுத்தி என்னைக் கல்லூரியில் சேர்த்துவிட்டாள்.

ஏதோ ஒரு வகையில் என் கல்வி தொடர்வதற்கு சுப்பையா சார் காரணமாக அமைந்துவிட்டார். அவரைச் சந்தித்து நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றியது. அவர் எதிர்பார்த்ததுபோல ஏதாவது ஒரு தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அந்த மதிப்பெண் பட்டியலோடு அவருக்கு முன்னால் சென்று நின்றால் அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைத்து, சற்றே தாமதப்படுத்தினேன்.

மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் புகுமுக வகுப்பில் முதல் தேர்வு நடைபெற்றது. எதிர்பார்த்ததுபோல நூற்றுக்கு நூறு பெற்றிருந்தேன். மதிப்பெண் பட்டியலோடு சுப்பையா சாரைச் சந்திக்க ஆவலோடு பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆசிரியர் அறைக்குள் நான் அறிந்த எல்லா ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். சுப்பையா சாரின் நாற்காலியில் வேறு யாரோ உட்கார்ந்திருந்தார்.

‘சுப்பையா சார் எங்க சார்?’ என்று தமிழ் ஐயாவிடம் கேட்டேன்.

‘உனக்குத் தெரியாதா? அவருக்கு திடீர்னு ட்ரான்ஸ்ஃபர் போட்டுட்டாங்கப்பா. அப்பவே அவர் கெளம்பிப் போயிட்டாரு.’

ஒருகணம் அதிர்ச்சியில் எனக்கு எந்தப் பேச்சும் எழவில்லை. உற்சாகமில்லாமல் எதைஎதையோ பேசிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

புகுமுக வகுப்பில் சுப்பையா சாரின் எதிர்பார்ப்புக்கு இணங்க கணக்குப்பாடத்தில் இருநூறுக்கு இருநூறு வாங்கினேன். தொடர்ந்து கணக்குப் பாடத்திலேயே இளநிலை பட்டப்படிப்பை முடித்தேன். தொலைபேசித் துறையில் பொறியாளராக வேலை கிடைத்து கர்நாடகத்தில் முப்பத்தெட்டு ஆண்டுகள் பணியாற்றினேன். பணிநிறைவுக்குப் பிறகு சில மாதங்கள் ஊரில் தங்கியிருக்கலாம் என நினைத்து வளவனூருக்கு வந்து வீட்டில் தங்கியிருந்தேன். அந்த நேரங்களில் காலையிலும் மாலையிலும் வீட்டிலிருந்து உயர்நிலைப்பள்ளி வரைக்கும் சென்று திரும்புவதே என் நடைப்பயிற்சியாக இருந்தது. பள்ளிக்கூட வாசலையும் அந்தப் புளியமரத்தையும் பார்க்கும்போதெல்லாம் சுப்பையா சாரின் நினைவில் அமிழ்ந்துவிடுவேன்.

இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி உயர்நிலைப்பள்ளியில் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்பள்ளியின் தலைமையாசிரியர் என் எழுத்துகளின் வாசகர். அந்த விழாவில் நான் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். என்னால் அவர் சொற்களைத் தட்டமுடியவில்லை. அதனால் உரையாற்றுவதற்குச் சென்றிருந்தேன்.

ஒவ்வொரு வகுப்புக்கு முன்னாலும் ஓங்கி உயர்ந்து நின்றிருந்த மரங்களிலிருந்து வீசிய காற்று இதமாக இருந்தது. அம்மரங்களுக்கு இடையில்தான் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அம்மரங்கள் அனைத்தும் எனக்குள் நிறைந்திருந்த சுப்பையா சாரின் நினைவுகளைப் பொங்கியெழச் செய்தன.

இந்திய விடுதலைக்கு ஒரு சரித்திரம் இருப்பதைப்போலவே இந்த மரங்களுக்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது என்று சொன்னபடி என் உரையைத் தொடங்கினேன். சரித்திர ஆசிரியராக இருந்த சுப்பையா சாரின் ஈடுபாடுகளைப்பற்றியும் அர்ப்பணிப்புணர்வைப்பற்றியும் அடுத்தடுத்து எடுத்துரைத்தேன். அவர் பாடமெடுக்கும் விதத்தை பல எடுத்துக்காட்டுகளோடு பகிர்ந்துகொண்டேன். இறுதியாக அவர் சொன்ன ஒரு சொல் என் வாழ்வில் ஏற்படுத்திய திருப்பத்தையும் சொல்லிவிட்டு என் உரையை முடித்துக்கொண்டேன்.

0

பகிர:
பாவண்ணன்

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.View Author posts

1 thought on “பன்னீர்ப்பூக்கள் #7 – ஒரு சொல்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *