Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

‘அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?’ என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். ‘எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த கழனிப்பானையில ஊத்திட்டு வா’ என்று என் பக்கம் திரும்பாமலேயே குண்டானிலிருந்த அரிசியைப் பார்த்தபடி சொன்னாள் அம்மா. எங்காவது கல் தென்படுகிறதா என அவள் கண்கள் தேடிக்கொண்டிருந்தன.

தண்ணீர்க்குண்டானைத் தூக்கிச் சென்று கழுநீர்ப்பானையில் ஊற்றிவிட்டு மறுபடியும் அம்மாவுக்கு அருகில் உட்கார்ந்தேன். அம்மாவாக பேச்சைத் தொடங்குவார் என அமைதியாக வெகுநேரம் காத்திருந்தேன். அம்மாவின் முகத்தின்மீது ஒரு கணமும் கழுவப்பட்டு வெண்மணிகளென பளிச்சிடும் அரிசியின் மீது ஒரு கணமுமாக மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பக்கத்தில் அமர்ந்திருப்பதையே கவனிக்காததுபோல அம்மா தன் வேலையிலேயே மூழ்கியிருந்தாள். ‘அந்த அண்ணன் கல்யாணத்த பத்தி சொல்லியிருந்தேனே, அதைப் பத்தி ஒன்னுமே சொல்லலையே நீ?’ என்று மெதுவாக பேச்சை மீண்டும் தொடங்கினேன்.

‘கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும், கெழவன தூக்கி மனையில வைன்னு சொல்ற கதையா இருக்குதுடா, உன் கதை’ என்று சலித்தபடி மீண்டும் அரிசியைக் கழுவுவதற்காக புதிதாக தண்ணீரை எடுத்து அரிசியில் ஊற்றினாள் அம்மா. ‘அவுங்கள்லாம் பெரிய இடம்டா ராசா. அந்த கூட்டத்துக்குள்ள நாம போயி நிக்கமுடியுமா, போய் படிக்கிற வேலையை பாருடா.’

அதற்குமேல் அம்மாவிடம் பேசமுடியாது என்று புரிந்துவிட்டது. அமைதியாக எழுந்துபோய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாசல் பக்கமாகச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் ஆங்கிலப்பாடத்தில் தேர்வு இருந்தது. பதில்களை மனப்பாடம் செய்யத் தொடங்கினேன்.

‘Sacrifice’ என்றொரு புதிய சொல் அந்த வாக்கியத்தில் இடம்பெற்று என்னைத் தவிக்கவைத்தது. எவ்வளவோ யோசித்துவிட்டேன். அதற்குரிய பொருளை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. கடைசி முயற்சியாக எழுந்து சென்று அகராதியை எடுத்துவந்து பொருளைக் கண்டுபிடித்தேன். தியாகம். அதற்குப் பிறகுதான் நிம்மதியாகக் கேள்வி பதில் வரிகளில் மனம் படிந்தது.

தரையில் விரித்துவைத்த அகராதியை அமைதியாகப் பார்த்தேன். நான் அடைந்திருந்த ஆங்கிலப்பயிற்சிக்கு அடித்தளம் இட்டவர் ராமகிருஷ்ணன் அண்ணன். அந்த அகராதிகூட அவர் கொடுத்த அன்புப்பரிசு.

அவருடைய திருமணத்துக்குச் செல்ல முடியாததைப்போன்ற துரதிருஷ்டம் வேறொன்றில்லை. திருமணத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பே எனக்கு இல்லை என்பது தெளிவாகப் புரிந்துவிட்டது. அண்ணன் எதிர்பார்த்திருப்பார் என்பது உண்மைதான். ஆனாலும் என் நெருக்கடிகளை அவரால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைத்து என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

ராமகிருஷ்ணன் அண்ணனை திருக்குறள் கழகக் கூட்டத்தில்தான் முதலில் பார்த்தேன். ராமகிருஷ்ணனின் மாமா வீட்டுத் திண்ணையில் தட்டிகளால் மறைத்து ஜோதி தட்டச்சு நிலையம் என்றொரு பயிற்சி நிலையம் அப்போது இயங்கிவந்தது. ராமகிருஷ்ணன் அங்கே இருப்பார். ஞாயிறு தினங்களில் பொழுது சாய்ந்த பிறகு அங்கே கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்திற்கு நானும் என்னைப் போன்ற சிறுவர்களும் திருக்குறள் ஒப்பிப்பதற்காகச் செல்வோம். பிழையில்லாமல் ஒப்பிப்பவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிப்பார்கள். அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

புன்னகை படிந்த முகம். அழகாக படிய வாரிய தலைமுடி. பளிச்சென உடுத்திய உடைகள். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் ராமகிருஷ்ணன் அண்ணன் தனித்துத் தெரிவார். திருக்குறள் கழகத்தூண்களில் ராமகிருஷ்ணனும் ஒருவர். ஆனால் எப்போதும் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பார். அல்லது கூட்டத்துக்கு வெளியே யாராவது நண்பர்களோடு உரையாடிக்கொண்டிருப்பார். ஆனால் அவருடைய கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும்.

ஒருமுறை அவர் கையிலிருப்பது என்ன புத்தகம் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அவருக்குப் பக்கத்தில் சென்று குனிந்து பார்த்தேன். புத்தகத்தின் தலைப்பை முழுசாகப் படிக்கமுடியாதபடி அவருடைய விரல்கள் அதன் மீது பதிந்திருந்தன. ‘To kill’ என்னும் தொடக்கச்சொற்கள் தெரிந்தன. அடுத்து ‘bird’ என்னும் இறுதிச்சொல்லும் தெரிந்தது. அவற்றைத் தனித்தனியே எழுத்து கூட்டி படித்துவிட்டேன். நடுவில் ஒரு சொல் இருந்தது அதைத்தான் முழுமையாகப் பார்க்கமுடியவில்லை. கழுத்தை பல கோணங்களில் வளைத்துவளைத்துப் பார்த்தும் அது தெரியவில்லை.

அதற்குள் என் செயலை அண்ணனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு அண்ணன் பார்த்துவிட்டு அவரிடம் சொல்லிவிட்டார். அண்ணன் உடனே திரும்பி என்னிடம் ‘என்னடா?’ என்று கேட்டார். ‘புத்தகத்துடைய பேர் சரியா தெரியலைண்ணே, அதான் பார்த்துட்டிருந்தேன்’ என்று தயக்கத்தோடு சொன்னேன்.

அவர் வியப்புடன் விழிகள் விரிய ‘இது இங்கிலீஷ் புஸ்தகம்டா’ என்றபடி தலைப்பை முழுமையாகப் படிக்க ஏதுவாக என் பக்கம் திருப்பினார். ‘நீ இங்கிலீஷ் படிப்பியா?’ என்று ஆச்சரியத்தோடு பார்த்தார். நான் ‘ம். படிப்பேன்ண்ணா’ என்றபடி தலையசைத்துக்கொண்டே அதுவரை தெரியாமலிருந்த சொல்லைப் பார்த்தேன். ‘Mocking’. நான் ஆர்வக்கோளாறில் அதை வேகமாக மோக்கிங் என்று படித்தேன். பிறகு முழுத்தலைப்பையும் சேர்த்து ’டு கில் மோக்கிங் பேர்ட்’ என்று சொன்னேன்.

அண்ணன் முகத்தில் புன்னகை படர்ந்தது. ‘என்ன, என்ன சொன்னே? இன்னொரு தரம் சொல்லு’ என்றபடி நெருங்கி வந்தார். எவ்விதமான தயக்கத்துக்கும் இடமில்லாமல் நான் ‘டு கில் மோக்கிங் பேர்ட்’ என்று மீண்டும் சொன்னேன்.

அண்ணன் என் தோள் மீது கைவைத்து ‘என்ன அர்த்தம்? புரியுதா?’ என்று கேட்டார்.

‘கில்னா கொலை செய்யறது. பேர்ட்னா பறவை. மோக்கிங்னா என்னன்னு தெரியலை. ஏதாவது பறவையை கொலை செய்யறத பத்திய புத்தகாமாண்ணா?’

‘அது மோக்கிங் இல்லை. மாக்கிங்னு படிக்கணும்’ என்று என் உச்சரிப்பைத் திருத்தினார் அண்ணன்.

‘ஸ்மோக்கிங்னு படிக்கற மாதிரின்னு நெனச்சிட்டு மோக்கிங்னு படிச்சிட்டேன்.’

அண்ணன் ஒருகணம் என்னை உற்றுப் பார்த்தார். ‘எழுத்துகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஒவ்வொரு இடத்துக்கும் தகுந்த மாதிரி உச்சரிப்பு மாறும். அதுதான் இங்கிலீஷ் மொழியுடைய தனித்தன்மை.’ என்றார். நான் மனத்துக்குள் மாக்கிங் மாக்கிங் என்று நாலைந்து முறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். பிறகு ‘அப்படின்னா என்ன அர்த்தம்ண்ணா?’ என்று கேட்டேன்.

‘ஒரே ஆள் தன்னுடைய குரலை மாத்தி விதவிதமான குரல்ல பேசிக் காட்டறது, சிரிச்சிக் காட்டறதைத்தான் பொதுவா மாக்கிங்னு சொல்வாங்க. அமெரிக்காவுல ஒரு புதுவிதமான பறவை இருக்குது. விதவிதமான குரல்ல அது சத்தம் போடும். அதனால அந்தப் பறவைக்கு மாக்கிங் பேர்ட்னு பேரு வச்சிட்டாங்க.’

எனக்கு ஓரளவு புரிந்ததுபோல இருந்தது. உடனே ‘அப்படின்னா, அந்தப் பறவையைக் கொலை செய்யறத பத்திய புத்தகமா இது?’ என்று கேட்டேன்.

அண்ணன் அதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்துவிட்டு என் முதுகில் தட்டிக்கொடுத்தார். ‘கொலை செய்யறது எப்படின்னு யாராவது புத்தகம் எழுதுவாங்களா? திருக்குறள் வாக்கியத்தைப்போல எல்லா மொழிகள்லயும் சில முக்கியமான வாக்கியங்கள் இருக்கும். அதுக்கெல்லாம் நேரிடையான அர்த்தத்தைவிட, மறைமுகமான அர்த்தங்கள் ஏராளமா இருக்கும். நீ பெரிய ஆளாவும்போது உனக்கு அது புரியும்.’

நான் அண்ணன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அண்ணன் உடனே பேச்சை மாற்றும் விதமாக ‘இங்க்லீஷ்லாம் படிப்பியா நீ?’ என்று கேட்டார். ‘ஓ. நல்லா படிப்பேனே’ என்று வேகமாக தலைசைத்தேன். உடனே அவர் அந்தப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைத் திருப்பி ‘இந்தா, இதைப் படிச்சிக் காட்டு பார்க்கலாம்’ என்று சொன்னார்.

அந்தப் பக்கத்தில் ஒருசில சொற்களே தெரிந்த சொற்களாக இருந்தன. மற்றவை எல்லாம் அதுவரை பார்த்தே இராதவை. எழுத்துகளைச் சேர்த்துச்சேர்த்து படிப்பதற்கு எங்கள் ராமசாமி சார் எங்களுக்கு ஒரு சூத்திரத்தைக் கற்றுக் கொடுத்திருந்தார். அந்த வழியில் எழுத்துகளைச் சேர்த்துச் சேர்த்துப் படித்தேன். நாலைந்து வரிகளைப் படிக்கும் வரைக்கும் காத்திருந்த அண்ணன் ‘போதும், போதும்’ என்று சொன்னபடி புத்தகத்தை மூடினார். பக்கத்தில் நின்றிருந்த அண்ணன்கள் என்னை விசித்திரமாகப் பார்த்தபடி நின்றார்கள்.

‘ஏதாவது அர்த்தம் புரியுதா?’ என்று கேட்டார் அண்ணன். நான் உதட்டைப் பிதுக்கி ‘இல்லை’ என்பதுபோல தலையை அசைத்தேன்.

‘Goodஐ குட்னு சொல்றமாதிரி Moodஐ முட்னு சொல்லலாம்ணு நினைச்சிட்டே போல. அப்படி சொல்லக்கூடாது. அது குருட்டுத்தனம். அத மூட்னு சொல்லணும். இப்படித்தான் சில இடங்கள்ல உச்சரிப்பு மாறிட்டே இருக்கும்.’

அவர் சொன்னது எனக்கு அதிசயமாக இருந்தது. ஆங்கில மொழியின் சிக்கல் எங்கே இருக்கிறது என்பதை அப்போது புரிந்துகொண்டேன். ‘இதையெல்லாம் எப்படி ஞாபகம் வச்சிக்கமுடியும்?’ என்று தயக்கத்தோடு கேட்டேன்.

‘படிச்சி படிச்சி பழக்கப்படுத்திக்கறதுதான் ஒரே வழி. வேற எந்த குறுக்குவழியும் இல்லை’ என்றார் அண்ணன்.

‘அர்த்தம்?’

‘அதுவும் சுலபம்தான். ஒரு நாளைக்கு ரெண்டு புது வார்த்தைகளையாவது தெரிஞ்சிக்கணும். அதுக்கு என்ன அர்த்தம்னு அகராதியை பார்த்து ஒரு நோட்டுல எழுதி வச்சிக்கணும். ஒவ்வொரு நாளும் அத எடுத்து மீண்டும் மீண்டும் படிச்சிட்டே இருக்கணும். திருக்குறள மனப்பாடம் செய்யறமாதிரிதான் எல்லாம். மனசிருந்தா எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்குது. புரியுதா?’

முழுமையாகப் புரியவில்லை என்றாலும் ‘புரியுதுண்ணே’ என்றபடி தலையசைத்தேன்.

‘என்னைக்காவது லீவு நாள்ல வீட்டுக்கு வா. கத்துக் குடுக்கறேன்’ என்று சொல்லிவிட்டு ‘சரி. உள்ள போ. உன் கூட்டாளிங்க தேட போறாங்க’ என்று என்னை நிகழ்ச்சிக்கூடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

அண்ணன் சொன்ன அகராதி என்னும் சொல் என் தலைக்குள் அழுத்தமாக உட்கார்ந்துவிட்டது. அது எப்படி இருக்கும், அதன் வழியாக ஒரு சொல்லுக்குரிய அர்த்தத்தை எப்படி தெரிந்துகொள்வது என்றெல்லாம் கேள்விகள் எழுந்து குடைந்தன. மனத்துக்குத் தோன்றியபடியெல்லாம் கற்பனை செய்துகொண்டிருந்தேன். பள்ளியில் எனக்கு நெருக்கமான ஒரே ஆசிரியர் ராமசாமி சார்தான். அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று முடிவுசெய்தபடி உறங்கச் சென்றேன்.

அடுத்தநாள் பள்ளியில் வகுப்பு முடிந்து புறப்படுவதற்குத் தயாராக இருந்த நேரத்தில் ராமசாமி சாருக்கு அருகில் சென்று நின்றேன். கைகளைக் கட்டிக்கொண்டு நான் நிற்பதைப் பார்த்ததும் அவர் என்னைப் பார்த்ததும் ‘என்னடா?’ என்று கேட்டார். ராமகிருஷ்ணன் அண்ணன் சொன்ன விவரங்களையெல்லாம் நான் அவரிடம் சொன்னேன். அவர் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பிறகு ‘இங்கிலீஷ்ல அத்துபடியாவணும்னு நெனைக்கறவங்களுக்கு அகராதி ரொம்ப ரொம்ப முக்கியமான புத்தகம்’ என்றார். தொடர்ந்து ‘அப்புறமா ஸ்டாஃப் ரூம் பக்கமா வா. அகராதி எப்படி இருக்கும்னு காட்டறேன், சரியா?’ என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார்.

அன்று நண்பகல் உணவு வேளை சமயத்திலேயே ராமசாமி சாரைப் பார்ப்பதற்காக ஆசிரியர்கள் அறைக்குள் சென்றேன். ராமசாமி சார் அப்போதுதான் கழுவி வந்த சாப்பாட்டு அடுக்கையும் தட்டையும் ஜன்னலோரமாக வெயில் படும் இடத்தில் உலரவைத்துவிட்டுத் திரும்பினார். என்னைப் பார்த்ததுமே ‘வா.வா. அகராதியைப் பார்க்கணுமா?. உள்ள வா’ என்று அழைத்தார்.

பக்கத்தில் இருந்த அலமாரியைத் திறந்து செந்நிற அட்டையைக் கொண்ட தடிமனான ஒரு புத்தகத்தை எடுத்து மேசையின் மீது வைத்தார் ராமசாமி சார். ‘பாத்துக்கோ, இதுதான் அகராதி’ என்றார்.

அப்புத்தகத்தின் பருமனையும் அளவையும் பார்த்து ஒருகணம் திகைத்து நின்றுவிட்டேன். பிறகு தயக்கத்தோடு பக்கங்களைப் புரட்டினேன். ஒருபக்கம் வரிசையாக ஆங்கிலச் சொற்கள். அதற்கு எதிர்ப்புறத்தில் அச்சொற்களுக்குரிய பொருள் தமிழில் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட ஒரு சொல்லை எப்படித் தேடுவது, எப்படி பொருளைக் கண்டுபிடிப்பது என்னும் ரகசியத்தை அவர் சொல்லிக் கொடுத்தார். உற்சாகத்தோடு நானே அந்த அகராதியைத் தொட்டுப் புரட்டி சில சொற்களைத் தேடி, அவற்றின் பொருளைப் படித்து மகிழ்ந்தேன். நமக்கே நமக்கென சொந்தமாக ஒரு அகராதி இருந்தால் எப்படி இருக்குமென்று கற்பனை செய்து பார்த்தேன்.

ஆவலோடு ‘இது என்ன விலை இருக்கும் சார்?’ என்று கேட்டேன். ‘சாதாரணமான விலைன்னு நெனச்சிடாதடா. எழுபத்தஞ்சி ரூபா. உனக்கு எந்த வார்த்தைக்காவது அர்த்தம் தெரிஞ்சிக்கணும்ன்னா, நான் இருக்கிற நேரத்துல இங்கயே வந்து பார்த்துக்கோ. சரியா?’ என்றார் ராமசாமி சார்.

நான் அன்றிரவே எங்கள் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் ஒரு பக்கத்தை வாய்விட்டுப் படித்தேன். ஒவ்வொரு சொல்லாகக் கண்கள் கடந்து சென்றன. பொருள் புரியாத சொற்களை ஒரு நோட்டில் எழுதிவைத்துக்கொண்டேன். ஐந்து சொற்கள் கிடைத்ததும் அதுவரை படித்த பகுதிக்கு அடையாளமிட்டு, அன்றைய வாசிப்பை முடித்துக்கொண்டேன். அடுத்த நாள் ராமசாமி சாரைப் பார்த்து அகராதியைப் பெற்று அச்சொற்களின் பொருளைக் குறித்துக்கொண்டு மனப்பாடம் செய்தேன்.

திருக்குறள் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது ராமகிருஷ்ணன் அண்ணன் வழக்கமான இடத்தில் உட்கார்ந்திருந்தார். நான் அவருக்கு அருகில் சென்று வணக்கம் சொன்னேன். என்னைப் பார்த்ததுமே அவர் ‘வீட்டுப்பக்கம் வான்னு சொன்னேனே, அப்புறம் ஏன் வரலை?’ என்று கேட்டார். அவர் எவ்வளவு எதிர்பார்த்திருப்பார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். சட்டென்று அடங்கிய குரலில் ‘வீட்டுல வேலை இருந்ததுண்ணே……’ என்று எதையோ இழுத்தபடி சொல்லி சமாளித்தேன். ‘சரி சரி, வர ஞாயித்துக்கெழமை வா’ என்றார் அண்ணன். அவர் கையில் அப்போதும் ஒரு புத்தகம் இருந்தது. வாய்விட்டு எழுத்துகளைக் கூட்டிப் படித்தேன். ‘Golden Notebook’. நோட்புக் என்பதற்குப் பொருள் உடனடியாகப் புரிந்துவிட்டது. கோல்டன் என்பதுதான் புரியவில்லை.

‘என்னடா, புரியுதா?’ என்று அண்ணன் கேட்டபோதுதான் அவர் என்னைக் கவனிப்பதை உணர்ந்தேன். ஒருவித கூச்சத்தில் நாக்கைக் கடித்தபடி சிரித்தேன். பிறகு எனக்குப் புரிந்ததையும் புரியாததையும் சொன்னேன்.

அவர் உடனே ‘Gold ங்கறதுக்குக்கூடவா அர்த்தம் தெரியலை?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

நான் அவரை நிமிர்ந்து பார்த்து மெதுவாக இல்லை என்பதுபோல தலையசைத்தேன். அவர் விழிகளில் வியப்பு படர்வதைப் பார்த்தேன். ‘Gold னு சொன்னா தங்கம்டா. நகையெல்லாம் செஞ்சி போட்டிருக்காங்களே, அந்த தங்கம். புரியுதா?’ என்றார் அவர்.

புரிந்துவிட்டதற்கு அடையாளமாக தலையை வேகமாக அசைத்தேன். பிறகு ‘Goldக்கு தங்கம்ங்கறது சரி. Goldenனு சொன்னா?’

‘Golden னா தங்கமானன்னு அர்த்தம். Golden boyனா தங்கமான பையன்னு அர்த்தம். Golden girlனா தங்கமான பொண்ணுன்னு அர்த்தம். ஆனா எல்லா சமயத்துலயும் அப்படி நேரிடையா ஒரு அர்த்தத்தை கொடுக்கமுடியாது. இப்ப golden eveningனா தங்கமான மாலைப்பொழுதுன்னு சொல்லக்கூடாது. முக்கியமான ஒரு மாலைப்பொழுதுன்னு அர்த்தம். Golden opportunityன்னு சொன்னா, அருமையான வாய்ப்புன்னு அர்த்தம். அப்படி இடத்துக்கு தகுந்த மாதிரி அர்த்தமும் மாறிமாறி வரும். அதையெல்லாம் புரிஞ்சிகிட்டு படிக்கணும்.’

அண்ணனால் தொடர்ந்து பேசமுடியவில்லை. கூடத்தில் நிகழ்ச்சி தொடங்குவதற்கான அடையாளம் தென்பட்டதால் ‘சரி சரி, ஆரம்பிக்கப் போறாங்க. உள்ள போ. ஞாயித்துக்கிழமை வா’ என்றார். நானும் அவசரமாக ஓடிச் சென்று பிற மாணவர்களோடு சேர்ந்து உட்கார்ந்துகொண்டேன்.

அடுத்த வாரமே அண்ணனைப் பார்க்க அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அண்ணன் அறைக்குள் உட்கார்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ‘வா வா’ என்று அழைத்து அவருக்கு பக்கத்திலேயே இருந்த ஸ்டூலில் உட்காரும்படி சொன்னார்.

நான் அப்போதுதான் அவருக்கு அருகில் இருந்த மேசையைப் பார்த்தேன். ஏராளமான புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுவரோரமாக இருந்த இரு உயரமான தாங்கிகளிலும் புத்தகங்கள் இருந்தன. ‘இது எல்லாம் நீங்க படிச்ச புஸ்தகங்களாண்ணே?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டேன். அண்ணன் ‘ம்’ என்றபடி புன்னகைத்தார். அவருடைய வழக்கமான புன்னகை. ‘ஒரு லைப்ரரி மாதிரி வச்சிருக்கீங்கண்ணே’ என்றேன்.

அண்ணன் மேசையிலிருந்து ஒரு பருமனான புத்தகத்தை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார். ‘பாரு, இதுதான் அகராதி’ என்றார். அப்புத்தகம் ராமசாமி சார் காட்டிய புத்தகத்தைப்போல இல்லை. அது வேறு விதமான இருந்தது. ஆனால் உள்ளடக்கம் ஒன்றுபோலவே இருந்தது. மெதுவாக பக்கங்களை அப்படியும் இப்படியுமாகப் புரட்டினேன். பேச்சோடு பேச்சாக ராமசாமி சார் வழியாக அகராதி பார்க்கும் விதத்தைக் கற்றுக்கொண்டதையும் சொன்னேன். என்னிடம் இருந்த நோட்டை அவரிடம் காட்டினேன். நான் அதுவரை தெரிந்துகொண்ட புதிய சொற்களும் அவற்றுக்குரிய பொருள்களும் அதில் இருந்தன.

‘எல்லாம் சரி. இதையெல்லாம் மனப்பாடம் பண்ணிட்டியா?’ என்று கேட்டார் அண்ணன். நான் ‘ம்’ என்றபடி உற்சாகத்தோடு தலையாட்டினேன். ‘கேட்டா சொல்றியான்னு பார்க்கறேன்’ என்றபடி ஒரு சொல்லைச் சொல்லிவிட்டு ‘இதுக்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்டார். நான் உடனே அதற்குரிய பொருளைச் சொன்னேன். இப்படியே ஐந்தாறு சொற்களைக் கேட்டுவிட்டு நிறைவுடன் தலையசைத்துக் கொண்டார். ‘வெரி குட்’ என்று வாய்விட்டுப் பாராட்டினார் அண்ணன்.

‘அகராதிக்காக நீ இனிமேல ஸ்கூல் வரைக்கும் தேடிட்டு போகவேணாம். இதோ, இந்த அகராதியை நீயே வச்சிக்கலாம்’ என்று சொல்லிவிட்டு மேசை மீதிருந்த அகராதியை என்னிடம் எடுத்துக் கொடுத்தார். என்னால் அதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சட்டென என் கண்கள் நிறைந்து தளும்பிவிட்டன. பேச்சு வராமல் தடுமாறினேன். அகராதியின் முதல் பக்கத்தில் என் பெயரை எழுதி கையெழுத்து போட்டு என்னிடம் கொடுத்தார் அண்ணன்.

என் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக அண்ணன் அருகில் இருந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த தாளில் தடித்த எழுத்துகளால் எழுதப்பட்ட ஒரு வாக்கியத்தைக் காட்டி ‘அது என்ன படிச்சி அர்த்தம் சொல்லு, பார்க்கலாம்’ என்றார். நான் அந்த எழுத்துகள் மீது பார்வையைப் படரவிட்டேன்.

FEAR NOT FOR THE FUTURE, WEEP NOT FOR THE PAST. நிறுத்தி நிறுத்தி படித்துவிட்டேன். FEAR, NOT, FOR, THE ஆகிய சொற்களுக்கு மட்டுமே எனக்குப் பொருள் தெரிந்திருந்தது. மற்றவை எதுவும் தெரியவில்லை. அண்ணன் நிறுத்தி நிதானமாக அந்த வாக்கியத்தின் பொருளைச் சொன்னார். எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொள்ளாதே. இறந்த காலத்தை நினைத்து கலக்கம் அடையாதே. எவ்வளவு அற்புதமான ஒரு வாக்கியம் என்று நினைத்துக்கொண்டேன். எனக்காகவே யாரோ சொன்னதுபோல இருந்தது அந்த வாக்கியம்.

அப்போதுதான் அறையில் நான்கு பக்கச் சுவர்களிலும் அதைப்போலவே எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு சுவரொட்டியையும் நெருங்கிச் சென்று விரலால் தொட்டுத்தொட்டுப் படித்தேன்.

‘HAVE MORE THAN YOU SHOW, SPEAK LESS THAN YOU KNOW’

‘LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE’

‘IT IS BETTER TO LOSE YOUR EGO TO THE ONE YOU LOVE
THAN TO LOSE THE ONE YOU LOVE TO YOUR EGO’

சொற்களைப் படிப்பதில் எனக்குச் சிக்கலே எழவில்லை. படித்துவிட்டேன். ஆனால் படிக்கப்படிக்கத்தான் நமக்கு எத்தனை சொற்களுக்கு பொருள் தெரியாமல் இருக்கிறது என்று தெரிந்தது. அர்த்தங்களையெல்லாம் கரைத்துக் குடித்துவிட வேண்டும் என்றொரு வேகம் எழுந்தது.

‘இங்கிலீஷ தெரிஞ்சிக்கணும்னா பாடப் புத்தகங்களை மட்டும் படிச்சா போதாது. படிக்கிறதுக்கு நல்ல நல்ல புத்தகங்கள் ஏராளமா இருக்குது. அதையெல்லாம் படிக்கணும். அப்பதான் புது புது வார்த்தைகளை நாம படிச்சி தெரிஞ்சிக்கலாம். சின்ன வயசு புள்ளைகள் படிக்கிறதுக்கு இங்க நெறய புத்தகங்கள் இருக்குது. எப்ப வேணும்ன்னாலும் நீ வந்து எடுத்தும் போயி படிச்சிட்டு கொண்டுவரலாம். புரியுதா?’

சொல்லிக்கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்து சென்று அருகில் இருந்த தாங்கியிலிருந்து FAIRY TALES என்றொரு புத்தகத்தை எடுத்துவந்து ‘இத படிச்சி பாரு’ என்று கொடுத்தார்.

நடுவில் ஏதோ ஒரு பக்கத்தை ஆர்வத்தோடு புரட்டினேன். ஏராளமான படங்கள் இருந்தன. எழுத்துகளும் பெரிதாக இருந்தன.

‘FAIRY TALESனு சொன்னா தேவதைக்கதைகள்னு அர்த்தம். நம்ம வாழ்க்கையில தேவதைகள் எப்படியெல்லாம் உதவியா இருக்குதுங்கறத புரியவைக்கறதுக்காக எழுதப்பட்ட கதைகள். ரொம்ப சுவாரசியமா இருக்கும். படி.’

நான் அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு புத்தகத்தோடு திரும்பிவிட்டேன். ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும் முன்பாக ஒரு பக்கம் படிக்கவேண்டும் என்றொரு விதியை நானாகவே வைத்துக்கொண்டு பின்பற்றினேன்.

ஒன்பதாம் வகுப்புக்கு வரும் வரைக்கும் அண்ணன் எனக்குப் படங்களோடு கூடிய புத்தகங்களையே படிப்பதற்குக் கொடுத்துவந்தார். பிறகுதான் படங்களற்ற புத்தகங்களைக் கொடுத்தார். அவர் ஊட்டிய உற்சாகத்தால் என் ஆர்வமும் விரிவடைந்தது. ஆங்கில மொழியின் மீது இயல்பாகவே ஒரு விருப்பம் பிறந்தது.

ராமகிருஷ்ணன் அண்ணன் வளவனூரில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்ற முதல் பட்டதாரி. திருவண்ணாமலை கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வார நாட்களில் திருவண்ணாமலையிலும் விடுமுறை நாட்களில் வளவனூரிலுமாக மாறிமாறி இருப்பார்.

இடநெருக்கடி காரணமாக ஜோதி தட்டச்சு நிலையத்திலிருந்து திருக்குறள் கழக நிகழ்ச்சிகள் கோவிந்தையர் பள்ளி வளாகத்தில் நடைபெறத் தொடங்கின. ராமகிருஷ்ணன் அண்ணன் அந்த இடத்திலும் பின்வரிசையில்தான் உட்கார்ந்திருப்பார்.

ஒருமுறை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் அண்ணன் அவருடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். எனக்கும் ஓர் அழைப்பிதழைக் கொடுத்தார். எல்லோரும் அவருக்கு வாழ்த்துகள் சொன்னார்கள். ‘எல்லா வாழ்த்துகளையும் இங்கயே சொல்லிட்டா எப்படி? கல்யாணத்துக்கு வந்து சொல்றதுக்கும் கொஞ்சம் வாழ்த்துகளை வச்சிக்குங்க’ என்று வழக்கமான புன்னகையோடு சொன்னார் அண்ணன்.

கடைசி வரை, கல்யாணத்துக்குச் செல்லவேண்டும் என்ற என் ஆசை நிறைவேறவே இல்லை. அம்மாவிடம் என் முறையீடுகள் எதுவும் பலிக்கவில்லை.

பையிலிருந்த திருமணப் பத்திரிகையை அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பத்திரிகையின் உறை அழகாக இருந்தது. ஒருபுறம் முகவரி எழுதுவதற்கான இடம் விடப்பட்டிருந்தது. மறுபுறத்தில் ஒரு ஜோடிப்புறாக்களின் படம். அதற்குக் கீழே மணமக்களின் பெயர்கள். ராமகிருஷ்ணன். செல்வகுமாரி. நான் அந்தப் புறாக்களின் படத்தையே வெகுநேரம் பார்த்தபடி இருந்தேன்.

ஏதோ ஒரு கணத்தில் அந்தப் படத்தையே ஓர் ஓவியமாக வரைந்து, திருமணப்பரிசாக அண்ணனுக்குக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அடுத்த கணமே வேலையில் இறங்கிவிட்டேன்.

என் புத்தக அடுக்கில் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட உதவக்கூடும் என்ற எண்ணத்தில் சில பழைய காலண்டர் படங்களை எடுத்துவைத்திருந்தேன். ஒருபுறம் படமிருந்தாலும் மறுபுறம் பால்போல வெள்ளையாகவும் கெட்டியாகவும் அந்தத் தாட்கள் இருந்தன. ஓவியம் வரைய அந்தத் தாள் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அவற்றில் ஒரு தாளை எடுத்து அளவாக நறுக்கிவைத்துக்கொண்டு பென்சிலை எடுத்தேன். எங்கிருந்து தொடங்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது சட்டென ஓர் எண்ணம் எழுந்தது. குளக்கரையைக் கொண்ட ஒரு விரிவான இயற்கைக்காட்சி. குளக்கரையை ஒட்டி விழுதுவிட்டிருக்கும் பெரிய ஆலமரம். அந்த நிழலில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடிப்புறா. அந்தக் கற்பனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மறுகணமே, அச்சித்திரத்தை நான் வரையத் தொடங்கிவிட்டேன். ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் ஓவியத்தில் முழுக்காட்சியும் உருப்பெற்றது.

அந்த ஓவியத்தை மடிப்பு குலையாமல் எடுத்துச் செல்ல தோதாக அதே காலண்டர்த்தாளில் ஒரு காகிதப்பையைச் செய்து, அதற்குள் அந்த ஓவியத்தை வைத்தேன். இரு வாரங்களுக்குப் பிறகு வந்த ஒரு விடுப்புநாளில் அந்தக் காகிதப்பையை எடுத்துக்கொண்டு அண்ணன் வீட்டுக்குச் சென்றேன்.

கதவைத் திறந்த அண்ணன் என்னைக் கண்டதும் ‘வாடா வா. திருக்குறள் கழகத்து ஆட்கள் எல்லாருமே கல்யாணத்துக்கு வந்திருந்தாங்களே, நீ ஏன் வரலை? ஒருவேளை தனியா வருவியோன்னு நெனச்சி உன்னை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன்’ என்றார். எனக்குத்தான் பதில் சொல்லத் தடுமாற்றமாக இருந்தது. ‘அது …. அது…. வந்து..’ என்று சரியாகச் சொல்லவராமல் சொற்களை இழுத்தேன்.

அதற்குள் ‘யாரு?’ என்று கேட்டபடி தோட்டத்திலிருந்து அண்ணி கேட்டுக்கொண்டே வரவும் அண்ணன் அறிமுகப்படுத்தவும் சரியாக இருந்தது. சரியான தருணத்தில் பேச்சு திசைமாறிவிட்டது. ‘ஓ… இந்த தம்பிதான் நீங்க சொன்ன சீடப்பிள்ளையா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் அண்ணி.

நான் அண்ணனிடம் காகிதப்பையைக் கொடுத்தேன். அவர் உள்ளே இருந்த ஓவியத்தை எடுத்து வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தபடியே இருந்தார். அண்ணியும் அவருடைய தோளை ஒட்டியபடி நின்றுகொண்டு பார்த்தார். ‘அருமையா இருக்குதே. யாரு தம்பி வரைஞ்சிது?’ என்று கேட்டார் அண்ணி.

‘நான்தான்’ என்று வெட்கத்தோடு சொன்னேன். ‘அற்புதம். அருமை’ என்று புகழ்ந்தார் அண்ணன். ‘பெரிய ஆர்ட்டிஸ்ட் மாதிரி வரைஞ்சிருக்கான்’ என்று பாராட்டினார் அண்ணி. ‘அவன் ஓவியம் வரையக்கூடிய ஆள்னு இதுவரைக்கும் எனக்கே தெரியாது. அவனுக்குள்ள பல திறமைகள் ஒளிஞ்சிட்டிருக்குதுபோல’ என்று சிரித்தார் அண்ணன். இருவருக்கும் அந்த ஓவியம் பிடித்திருப்பதைப் பார்த்தபிறகுதான், திருமணத்துக்கு நேரில் செல்ல முடியவில்லையே என்கிற வருத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பாகக் கடந்து பதினொன்றாம் வகுப்புக்கு வந்துவிட்டேன். அந்த நேரத்தில் ஆங்கில இலக்கணம் தொடர்பான சில நுட்பமான தகவல்களை எனக்குச் சொல்லிக் கொடுத்தார் அண்ணன். சொந்தமாக சில வாக்கியங்களை உருவாக்கி எழுத எனக்கு அப்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருந்தது.

நான் ஆங்கிலத்தைத் தமிழ் படிப்பதுபோல படிப்பதாக ஒருமுறை அண்ணி சொன்னார். ‘இருக்கட்டும் விடு. இப்ப அதை ஒரு குறையாக எடுத்துக்கவேணாம். எதிர்காலத்துல அவனே மாத்திக்குவான். இந்த சின்ன ஊருல இருந்துகிட்டு இவ்ளோ தூரம் இங்கிலீஷ் படிக்கறதே பெரிய விஷயம். இந்த நேரத்துல குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டிட்டிருந்தா, பயம்தான் வரும். இல்லைன்னா வெறுப்பு வரும். ரெண்டுமே ஆபத்து, இல்லையா?’ என்றார் அண்ணன்.

‘இங்கிலீஷ இங்கிலீஷ்காரன் மாதிரிதான் பேசணும். அதுதான் அந்த மொழிக்கு நாம செய்யற மரியாதை’ என்று உறுதியாகச் சொன்னார் அண்ணி. அண்ணன் அண்ணியையே ஒருகணம் அமைதியாகப் பார்த்தார். பிறகு அமைதியாக ‘சரி, அப்படின்னா நீயே அவனுக்கு ட்ரெய்னிங் கொடு’ என்றார். ‘அதுக்கென்ன, சொல்லிக் கொடுத்தா போச்சி’ என்று முன்வந்த அண்ணி மேசைமீது வைக்கப்பட்டிருந்த ஏதோ ஓர் ஆங்கிலப்புத்தகத்தை எடுத்தார். வேகமாகப் புரட்டி, கைக்கு வந்த ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டி, அதைப் படிக்குமாறு என்னிடம் சொன்னார். ஒரு பத்து வரி படித்த பிறகு நிறுத்தும்படி சைகை செய்தார். பிறகு அதே பத்து வரிகளை அவர் படித்துக் காட்டினார். வானொலியில் ஆங்கிலச்செய்திகள் படிப்பதுபோல இருந்தது.

‘இப்ப உனக்கு புரியுதா, என்ன வித்தியாசம்னு. இந்த மாதிரிதான் படிக்கணும். அதுக்கு நாக்கு நல்லா பழகணும். எந்தெந்த வார்த்தைகளைச் சேர்த்து படிக்கணும், எந்தெந்த வார்த்தைகளை பிரிச்சி படிக்கணும்கறதுக்கு ஒரு வரைமுறை இருக்குது. ஒரு நளினம் இருக்குது. அதுக்கேத்தாப்புல படிச்சாதான் இங்கிலீஷ் இங்கிலீஷா இருக்கும். புரியுதா?’

‘புரியுது’ என்பதற்கு அடையாளமாக நான் தலையை அசைத்தேன்.

‘நான் தமிழ்ல ஒரு வாக்கியம் சொல்றன். அதைத் தப்பு இல்லாம மனப்பாடமா சொல்லணும். நாக்கு பழகறதுக்கு அது ஒரு வழி. தமிழுக்கு நாக்கு பழகிடுச்சின்னா, இங்கிலீஷுக்கும் தானா பழகிடும்’ என்றார் அண்ணி.

‘சொல்லுங்கண்ணி’ என்பதுபோல நான் அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

‘கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை.’

என்னமோ விடுகதையைப்போல இருக்கிறதே என நினைத்து சற்றே குழப்பத்தில் மூழ்கியபோது என் கவனம் ஒருகணம் பிசகிவிட்டது. நினைவிலிருப்பதுவரை ஒருமுறை மனத்துக்குள்ளேயே சொல்லிப் பார்த்தேன். ஏதோ ஒரிடத்தில் தடுமாற, நிறுத்திவிட்டேன். என் தடுமாற்றத்தைப் பார்த்ததும் அண்ணி மற்றுமொரு முறை அந்த வாக்கியத்தைச் சொன்னார்,

மீண்டுமொரு முறை அண்ணியின் முன்னிலையில் சொல்ல முயற்சி செய்தேன். அப்போதும் அது தோல்வியிலேயே முடிந்தது. சிறிது நேர இடைவெளியில் மீண்டும் ஒருமுறை சொன்னேன். மூன்றாவது முறையாகச் சொன்னபோது சரியாகச் சொல்லிவிட்டேன்.

அண்ணி அடுத்து ‘யாரு தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை’ என்று சொன்னார். தீவிரமான பயிற்சிக்குப் பிறகு அந்த வாக்கியத்தையும் நான் சரியாகச் சொன்னேன்.

ஆங்கிலப்புத்தகத்தில் ஏற்கனவே எடுத்த பக்கத்தைப் புரட்டியெடுத்து மெதுவாக ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்திநிறுத்திப் படித்துக் காட்டினார் அண்ணி. நானும் அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு வாக்கியமாகச் சொல்லிப் பழகினேன்.

பள்ளியிறுதித்தேர்வில் நான் முதல் மதிப்பெண் பெற்றதைப் பாராட்டி அண்ணன் எனக்கு ’மோபி டிக்’ என்னும் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார். அண்ணி எனக்கு ‘பியூட்டி அன்ட் தி பீஸ்ட்’ புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.

அதுதான் நான் கடைசியாக அவர்களைப் பார்த்த தருணம். அதற்குப் பிறகு அவர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பதினொன்றாவது வகுப்பு முடிந்ததும் புகுமுக வகுப்பைப் படிக்க விழுப்புரம் கல்லூரியில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து பட்டப்படிப்புக்காக புதுச்சேரிக்குச் சென்றுவிட்டேன். அதற்குப் பிறகு வளவனூருக்கு வருவது குறைந்துவிட்டது. வந்தாலும் ஒருசில மணி நேரங்களிலேயே திரும்பிச் செல்லும்படியாகவே சூழல் இருந்தது.

அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அழகானதொரு ஓவியத்தோடு அவர்களை நேரில் பார்த்து வாழ்த்து சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஓவியம் வரைவதற்கான மனநிலை வாய்க்கவே இல்லை. அதனால் சந்திக்கச் செல்லும் பயணங்களும் தள்ளித்தள்ளிப் போயின.

எதிர்பாராதவிதமாக அடுத்து சில மாதங்களிலேயே அண்ணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அதிர்ச்சியானதொரு செய்தி கிடைத்தது. தேறி வந்ததும் பார்க்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அவருடைய வாழ்க்கை அங்கேயே முடிவடைந்துவிட்டது. அந்த இழப்பை என்னால் தாங்கவே இயலவில்லை. ஒரு திரைப்படத்தில் நிகழ்வதுபோல அடுத்தடுத்து இழப்புகள் ஏற்பட்டு அந்தக் குடும்பமே நிலைகுலைந்து சிதறிவிட்டது.

அப்படிப்பட்ட நேரத்தில் அண்ணியின் முகத்தைப் பார்க்க என் மனத்தில் துணிவில்லை. வளவனூருக்குச் சென்றிருந்தபோதும் அவருடைய வீட்டுப்பக்கம் செல்லவில்லை. அடுத்த சில மாதங்களிலேயே அண்ணியை அவருடைய குடும்பத்தார் அழைத்துச் சென்றுவிட்டனர் என்று செய்தி கிடைத்தது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அண்ணன் வீட்டினரே ஏற்றுக்கொள்ள, அண்ணிக்கு மறுமணம் செய்துவிட்டனர். எல்லாமே செவிவழிச்செய்திகளாகவே போய்விட்டன.

புதுச்சேரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் சில சிறுவர்களுக்கு நான் ஆங்கிலம் கற்பித்தேன். அப்போதெல்லாம் அண்ணன், அண்ணி நினைவுகள் எழாமல் ஒருநாளும் பாடங்களை நான் முடித்ததில்லை. சொல்லிக் கொடுப்பதில் நான் அவர்கள் காட்டிய வழியையே பின்பற்றினேன். அப்போதெல்லாம் என் மனத்துக்குள்ளேயே அண்ணனும் அண்ணியும் இருப்பதாக நினைத்துக்கொள்வேன். எனக்கு வேலை கிடைத்து ஊரைவிட்டு புறப்படவேண்டும் என்னும் சூழல் உருவானபோது, அண்ணன் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஆங்கில அகராதியை அக்கூட்டத்தில் வசதியில்லாத ஒரு சிறுவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன்.

அண்ணன் தன் வீட்டுச் சுவர்களில் எழுதிவைத்திருந்த ஆங்கில வாக்கியங்களும் அண்ணி மொழி பழகுவதற்காக சொல்லிக் காட்டிய வாக்கியங்களும் அடிக்கடி நினைவில் மிதந்துவரும். அப்போதெல்லாம் அவர்கள் முகங்களும் நெஞ்சிலெழும்.

இவையெல்லாம் நடந்துமுடிந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு ஒரு நண்பர் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்குச் சென்றிருந்தேன். பொழுதுபோக்குக்காக ராஜா திரையரங்கில் ஒருநாள் மாலை ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன்.

திரைப்படம் முடிந்ததும் அரங்கம் ஒளிமழையில் நிறைந்திருந்தது. வரிசைவரிசையாக மக்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். இடைப்பட்ட வரிசையில் சிக்கிக்கொண்டதால் நான் நின்றிருந்த வரிசை மெல்லமெல்ல நகர்ந்தது. கதவை நோக்கி நகர்ந்துசெல்லும் வரிசைகளில் மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

தற்செயலாக அவ்வரிசையில் நான் பார்த்த ஒரு முகம் எனக்குள் ஒருவித பரபரப்பை உருவாக்கியது. அச்சு அசலாக அப்படியே அண்ணியின் முகம். சந்தேகமே இல்லை. அண்ணியேதான். அதே முகம். அதே சாயல். அதே நெற்றி. அதே புன்னகை. எதிர்பாராத விதமாக என் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

என்னை மீறிய வேகத்தில் ‘அண்ணி அண்ணி’ என்று என் குரல் எழுந்துவிட்டது. கதவுக்கருகில் சென்ற கூட்டத்தினர் அனைவருமே என்னை ஒருகணம் திரும்பிப் பார்த்தனர். நான் எதிர்பார்த்த முகமும் என்னைத் திரும்பிப் பார்த்தது. ஒருகணம் திகைப்பு. மறுகணம் அமைதி. அடுத்த கணம் புன்னகையோடு அம்முகம் திரும்பிவிட்டது. கூட்டத்தோடு கூட்டமாக அவர் வெளியேறிவிட்டார்.

ஒரு வேகத்தில் அப்படி கூவிவிட்டேனே தவிர, அவர் நின்று ஒருவேளை பேச வந்திருந்தால் என்னால் பேசமுடிந்திருக்குமா என்று சொல்லத் தெரியவில்லை. இன்னொரு முறை அழைக்கும் எண்ணம் எழவே இல்லை. கதவுக்கு அருகில் நெருங்கியதும் அவரை கண்கள் அங்குமிங்கும் தேடின. எங்கும் இல்லை.

0

பகிர:
nv-author-image

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *