Skip to content
Home » பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

ஒரே ஒரு அடி

‘ஆகாஷவாணி. செய்திகள். வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி…’

எங்கோ கனவில் ஒலிப்பது போல தினந்தோறும் காலையில் ஏழே கால் மணிக்கு பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து அந்தக் குரல் எழுந்ததுமே தூக்கம் கலைந்துவிடும். ஆனாலும் கண்களைத் திறக்க மனமே வராது. கண்களை மூடிக்கொண்டு கரகரப்பான அந்த ரேடியோ குரலில் மூழ்கியபடியே போர்வைக்குள் சுருண்டிருப்பேன்.

அடுப்பிலிருந்து அம்மா தகரத்தால் சாம்பலை இழுக்கும் ட்ர்ர் ட்ர்ர் சத்தம் கேட்கும். பிறகு அவற்றை முறத்தில் வாரியெடுத்தபடியே ‘டேய் தூங்குமூஞ்சி. சின்னப் புள்ளைங்கதான் தூங்குதுங்கன்னா, உனக்கென்னடா கேடு? எழுந்திரு. எழுந்திரு. எழுந்து மூஞ்சிய கழுவிகினு வந்து படிக்கிற வேலையை பாரு. இன்னும் கொஞ்ச நேரம் போனா எட்டுமணி சங்கே ஊதிடும்’ என்று போடும் அதட்டல் கேட்கும். அதட்டியபடியே குப்பைக்குழியை நோக்கி வெளியே செல்வார் அம்மா.

அம்மாவின் குரல் ஒருபக்கம் காதில் விழுந்துகொண்டிருக்கும்போதே செய்திகளை வாசிக்கும் சரோஜ் நாராயணஸ்வாமியின் குரலும் மறுபக்கத்தில் காதில் விழுந்தபடி இருக்கும். நாடு முழுவதும் வங்கிகள் தேசிய உடைமை ஆக்கப்பட்டுவிட்டன என்றோ மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன் இயற்கையெய்தினார் என்றோ அவர் விரிவான செய்திகளைத் தொடங்குவதற்குத் தயாராகிற நேரத்தில் நான் பாதி கண்ணைத் திறந்து மெதுவாகக் கூரையைப் பார்ப்பேன்.

புகையும் கரியும் ஆண்டுக்கணக்கில் படிந்து கருத்துவிட்ட கீற்றுகளுக்கு இடையிலான சின்னச்சின்ன பொத்தல்கள் வழியாக நேர்க்கோடுகளாக விழும் வெண்ணிற வெளிச்சத்தைப் பார்ப்பது இனிய அனுபவம். சாம்பல் தூளும் தூசுகளும் பளபளவென மின்னிக்கொண்டே காற்றில் பறந்துபோவது அழகான காட்சி. மழைக்காலத்தில் அதே பொத்தல்கள் கருணையே இல்லாமல் தீராத துயரத்தை அளிக்கும். வான்வழி பொழிகிற தண்ணீரை வீட்டுக்குள் கொண்டுவரும். அப்போது அவசரம் அவசரமாக தண்ணீர் விழும் இடங்களிலெல்லாம் பாத்திரங்களை வைத்துவிட்டு சுவரோரமாக ஒதுங்கி விழித்திருக்க வைத்துவிடும்.

‘ஏன்டா, ஒருதரம் சொன்னா உறைக்காதா? மந்திரக்கோலால நாலு வச்சாதான் உறைக்குமா?’ என்று சற்றே கடுமை கூடிய குரல் ஒலித்ததுமே குப்பைக்குழிக்குச் சென்ற அம்மா திரும்பிவிட்டார் என்று புரிந்துவிடும். கண்களைக் கசக்கியபடியே மெதுவாக எழுந்துவிடுவேன். பாயைச் சுருட்டி மடித்துவைத்துவிட்டு அமைதியாக பின்கட்டுக்குச் செல்வேன். முகம் கழுவிவிட்டு கொட்டாங்கச்சியில் வைக்கப்பட்டிருந்த சாம்பலை எடுத்து பல்துலக்கிவிட்டுத் திரும்பிவந்து புத்தகத்தை எடுத்துப் பிரித்துவைத்துக்கொண்டு படிப்பேன்.

காதில் சரோஜ் நாராயணஸ்வாமியின் வசீகரமான குரல் கேட்டபடியே இருக்கும். அந்தக் குரல் மூளைக்குள் புகுந்து உற்சாகத்தைக் கொடுக்கும். என்னை அறியாமலேயே அதே குரலின் சாயலோடு புத்தகத்தில் இருக்கிற பாடத்தைப் படிப்பேன். தொடக்கத்தில் அம்மா ஒரு நொடி சந்தேகக்கண்ணோடு என் பக்கமாகத் திரும்பி நின்று நான் படிக்கும் வரிகளைக் காதுகொடுத்துக் கேட்பது வழக்கம். நான் புத்தகத்தைத்தான் படிக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு அமைதியாக என் போக்கில் விட்டுவிட்டார். அந்த அமைதி என் உற்சாகத்தை இரண்டு மூன்று மடங்காகப் பெருக்கிவிட்டது. சற்றே குரலை உயர்த்தி அதே தொனியில் படிக்கத் தொடங்கிவிட்டேன்.

செய்தி வாசிப்பாளரின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. அதுவே என் சொந்தக்குரலாக மாறிவிட்டது. எதை எடுத்துப் படித்தாலும் அந்தக் குரலில் படிக்கத் தொடங்கினேன். ஒரு சினிமா நோட்டீசைக் கூட நான் நிறுத்தி நிதானமாக அழுத்தம் திருத்தமான குரலில் படிக்கப் பழகிவிட்டேன்.

வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில் எம்.ஜி.ஆர்.மன்றம் இருந்தது. முதல் வேளையாக நானும் நண்பர்களும் அங்கு சென்று ’கன்னித்தீவு’ சித்திரக்கதைத் தொடரைப் படிப்போம். அதைப் படிக்காவிட்டால் எங்களுக்குத் தலையே வெடித்துவிடும். சில சமயங்களில்தான் நாங்கள் உள்ளே சென்றதுமே எங்களுக்கு அந்தத் தாள் கிடைக்கும். பல சமயங்களில் யாராவது ஒரு பெரியவர் கைகளில் சிக்கியிருக்கும். அவர் அந்தப் பக்கத்தை மறைத்துவைத்துக்கொண்டு படிப்பார். நாங்கள் அங்குமிங்கும் தேடி அலைமோதுவதைப் பார்த்து ரசித்துவிட்டு, பிறகு ‘இந்தாங்கடா, படிச்சிட்டு ஓடுங்க’ என்று கொடுப்பார்.

நாங்கள் அதை உடனே வாங்கி அனைவரும் படிப்போம். ‘டேய். எல்லாருக்கும் கேக்கற மாதிரி நீ சத்தம் போட்டு படிடா’ என்று நாகராஜனோ ராஜசேகரோ சொல்வான். நானும் உடனே ஆர்வத்துடன் செய்தி வாசிப்பாளருக்குரிய குரலில் ஏற்ற இறக்கங்களுடன் கன்னித்தீவு பகுதியைப் படிப்பேன். சில சமயங்களில் பத்திரிகையில் பெரிய எழுத்துகளில் அச்சாகியிருக்கும் ஒருசில வரிகளையும் படிப்பேன். பிறகு செய்தித்தாளை வைத்துவிட்டு உற்சாகத்தோடு சிரித்துக்கொண்டே பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடுவோம்.

ஒருமுறை வகுப்பில் ராமசாமி சார் முன்வரிசையில் இருந்த பையனிடம் புத்தகத்தில் ஒரு பக்கத்தைத் திறந்து கொடுத்து ‘நல்லா சத்தமா படிடா’ என்றார். அவன் புத்தகத்தை வாங்கிப் படித்தான். ஆனால் அவனுடைய கீச்சுக்குரல் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவனுக்குக் கேட்கவில்லை. ‘சார், ஒன்னுமே காதுல உழலை’ என்று சொன்னான். உடனே புத்தகம் அடுத்தவனின் கைக்கு மாறியது. அவனுடைய குரலும் எடுபடவில்லை. மீண்டும் புத்தகம் கைமாறியது. அந்தக் குரலிலும் அழுத்தம் இல்லை.

அந்த நேரத்தில் ராஜசேகர் நடுவரிசையிலிருந்து எழுந்து ‘சார், இவன் ரேடியோவுல செய்தி படிக்கிற மாதிரி அழகா திருத்தமா படிப்பான் சார்’ என்று என்னைச் சுட்டிக் காட்டினான். என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. ‘என்னடா, இப்படி செய்துவிட்டாய்?’ என்று கேட்பதுபோல திகைப்போடு நான் அவனைப் பார்த்தேன். அதற்குள் ‘இவனையா சொல்ற?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு ‘இந்தா, இந்த பக்கத்தை படி பார்ப்போம்’ என்று புத்தகத்தை வாங்கி என்னிடம் கொடுத்தார். நான் சற்றே தயக்கத்துடன் அதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் ‘சார்…. இவன்…. வந்து…’ என்று ஆரம்பித்து முழுமையாகச் சொல்லவராமல் இழுத்தேன். ‘சரி சரி. வந்து போயி எல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம். முதல்ல படி’ என்று சொன்னார்.

நான் எனக்குள் துணிச்சலைத் திரட்டிக்கொண்டு கணீரென்ற குரலில் முதல் வரியைப் படித்தேன். மந்திரம் போட்ட மாதிரி எங்கிருந்தோ அந்த வாசிப்பாளர் வந்து எனக்குள் புகுந்துகொண்டார். ஒவ்வொரு வரியாகப் படிக்கப் படிக்க, ராமசாமி சார் என்னை வியப்போடு பார்த்தபடி நின்றிருந்தார். வகுப்பிலிருந்த மாணவர்கள் அனைவரும் என்னை வியப்பு மண்டிய விழிகளோடு பார்த்தனர். அந்தப் பக்கம் முழுவதையும் படித்துமுடிக்கும் வரைக்கும் வகுப்பறையே அமைதியில் மூழ்கியிருந்தது.

வகுப்பில் இருந்த பிள்ளைகள் பக்கமாகத் திரும்பி ‘பார்த்தீங்களா, உங்க கூட படிக்கிற பையன்தான? அவன் எப்படி படிச்சான், கேட்டுதா? அந்த மாதிரி கணீர்னு படிச்சாதான் நாக்கு படியும். புரியுதா?’ என்றார். பிறகு என்னிடம் இருந்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு ‘வெரிகுட். நல்ல குரல் இருக்குதுடா உனக்கு. எதிர்காலத்துல பெரிய பேச்சாளனாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல’ என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். தொடர்ந்து ‘வீட்டுல ரேடியோ இருக்குதா, தெனமும் கேட்டு கேட்டு கத்துகிட்டியா?’ என்று கேட்டார். ‘எங்க வீட்டுல ரேடியோ இல்லை சார். பக்கத்து வீட்டு ரேடியோ நாள்முழுக்க ஓடிட்டே இருக்கும் சார். அதுல கேட்டு கத்துகிட்டேன்’ என்றேன். சார் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

பத்துநாள் கழித்து காலை நேரத்தில் வகுப்பறைக்குள் நண்பர்களோடு கதை பேசிக்கொண்டிருந்தபோது வாசலில் பெரிய வகுப்பில் படிக்கும் மாணவனொருவன் எட்டிப் பார்த்து ‘யாரு இங்க பாஸ்கரன்?’ என்று கேட்டான். எல்லோரும் உடனே அமைதியாகி என்னை முன்னால் தள்ளினார்கள். அறியாத முகம் என்பதால் நான் குழப்பத்தோடு அவனையே பார்த்தேன்.

‘ராமசாமி சார் உன்ன அவசரமா அழச்சிட்டு வரச் சொன்னாரு. வா. வா’ என்றான் அவன். ஒருகணம் எனக்கு எதுவும் புரியவில்லை. வகுப்பிலிருந்து வெளியேறி அவன் பின்னாலேயே சென்றேன். அவன் என்னை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றான்.

‘வணக்கம் சார்’ என்றபடி நான் அவருக்கு முன்னால் நின்றேன். என்னைப் பார்த்ததுமே ‘ஆ, வந்தியா? நல்லதா போச்சி. ப்ரேயர்ல செய்தி வாசிக்கிற பையன் இன்னைக்கு லீவ் போட்டுட்டானாம். என்ன செய்யறதுன்னு புரியாம ஒரே குழப்பமாய்டுச்சி. திடீர்னு உன் முகம் ஞாபகம் வந்த பிறகுதான் நிம்மதி வந்தது’ என்றார்.

ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்று புரியாமல் குழப்பத்துடன் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘முக்கியமான செய்திகளையெல்லாம் பசங்க தாள்ல எழுதிட்டானுங்க. அதை வாங்கி ஒருதரம் பார்த்து வச்சிக்கோ. இன்னைக்கு ப்ரேயர்ல நீதான் அதைப் படிக்கணும்.’

சாருடைய எண்ணம் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. உள்ளூர மகிழ்ச்சி பொங்கிப் பரவியது. ‘சரி சார்’ என்று உற்சாகத்தோடு தலையசைத்தேன். மேசை மீது வைக்கப்பட்டிருந்த தாளை எடுத்து எழுதப்பட்டிருந்த செய்திக்குறிப்புகளை ஒருமுறை வாசித்துப் பார்த்துக்கொண்டேன்.

எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரைக்கும் அறுநூறுக்கும் அதிகமான மாணவர்கள் படித்தனர். அனைவரும் கூடி நிறைந்திருக்கும் பிரார்த்தனை நேரத்தில் செய்திகளைப் படிக்கப் போகிறேன் என்னும் எண்ணமே என்னை வானத்தில் மிதந்துபோக வைத்தது. எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கவேண்டும், எந்த இடத்தில் நிறுத்திப் படிக்கவேண்டும் என்பதை வகுத்துக்கொள்ளும் வகையில் ஐந்தாறு முறை அக்குறிப்புகளைப் படித்துப் படித்து மனத்துக்குள்ளேயே பழகினேன்.

9.50 மணிக்கு பிரார்த்தனைக்கான மணியோசை எழுந்தது. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் மாணவர்கள் வரிசையாக வந்து கொடிக்கம்பத்தின் முன்னால் மூன்று பக்கங்களிலும் நிற்கத் தொடங்கினர். ‘திருத்தமா நிதானமா படி. பயப்படாதே. என்ன புரியுதா?’ என்று முதுகில் தட்டிக்கொடுத்து என்னை அனுப்பிவைத்த ராமசாமி சார் ஆசிரியர்கள் வரிசையில் சென்று நின்றார்.

கொடிக்கம்பத்தின் அருகில் மூன்று பெரிய வகுப்பு மாணவர்கள் நின்றிருந்தனர். தலைமையாசிரியர் கொடியேற்றும் சமயத்தில் ஒரு மாணவர் துணையாக நிற்பார். மற்ற இரு மாணவர்கள் தொடக்கத்தில் தாயின் மணிக்கொடி பாரீர் பாடலையும் இறுதியில் தேசியகீதமும் பாடுவார்கள். நான் அவர்களுக்கு அருகில் சென்று நின்றுகொண்டேன்.

எல்லா மாணவர்களும் வந்து நின்றபிறகு உடற்பயிற்சி ஆசிரியர் பிரார்த்தனை தொடங்கவிருப்பதன் அடையாளமாக விசிலை ஊதினார். உடனே சலசலப்பு அடங்கி அமைதி நிலவியது. பிறகு அட்டேன்ஷன் என்றும் ஸ்டேன்ட் அட் ஈஸ் என்றும் மாற்றிமாற்றி கட்டளைக்குரல் எழுப்பி அனைவரையும் ஓர் ஒழுங்குக்குள் கொண்டுவந்து நிறுத்தினார். அந்நேரத்தில் தலைமையாசிரியர் ஆசிரியர் பிரிவிலிருந்து நடந்துவந்து எங்களுக்கு அருகில் நின்றார்.

முதல் மாணவர் இராணுவப்படைவீரனைப்போல அடிவைத்து மிடுக்காக நடந்துசென்று கொடிக்கம்பத்தின் அருகில் நின்று கம்பத்தில் இருந்த கயிற்றின் முடிச்சை அகற்றி தலைமையாசிரியரிடம் கொடுத்தார். மடித்து சுருட்டி வைக்கப்பட்டிருந்த தேசியக்கொடியை கொஞ்சம் கொஞ்சமாக உச்சியை நோக்கி ஏற்றிய தலைமையாசிரியர் இறுதிக்கணத்தில் விசையுடன் கயிற்றைச் சொடுக்கி இழுத்ததும் மூவண்ணக்கொடி பிரிந்து பறக்கத் தொடங்கியது. அதே கணத்தில் அதற்குள் வைக்கப்பட்டிருந்த மலரிதழ்கள் மழைத்துளிகளென சிதறிப் பறந்துவிழுந்தன. மாணவர்களின் ஒருமித்த கைத்தட்டல் ஓசையால் பள்ளி வளாகமே அதிர்ந்தது. உடற்பயிற்சி ஆசிரியரின் விசில் சத்தம் எழுந்ததும் அது அடங்கியது. உடனே அவர் ‘சல்யூட்’ என்று கட்டளையிட்டதும் அனைவரும் வலது கையை உயர்த்தி வணங்கினர். அடுத்த விசில் சத்தம் எழுந்ததும் கையைத் தாழ்த்தினர்.

தலைமையாசிரியர் ஓங்கிய குரலில் ‘அன்புள்ள மாணவர்களே’ என்று உரையாற்றத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை முன்வைத்து இரண்டு நிமிடங்கள் உரையாற்றுவது அவர் வழக்கம். அன்று இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார் அவர். ஒவ்வொரு நாளும் பத்து மைல்களுக்கும் மேல் நடந்து பள்ளிக்கு வந்து பாடம் படித்த லால்பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கைச் சுருக்கத்தைச் சொன்னார்.

ஒருவர் பள்ளிக்கூடம் வராமல் படிப்பை நிறுத்த ஆயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் இடைநிற்றல் இல்லாமல் படிப்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும். அறிவு வளரும். அறிவின் வழியாக வாழ்க்கையே மாறும். கல்வி என்பது முன்னேற்றத்தை நோக்கி நாம் வைக்கும் ஒரே ஒரு அடி. அந்த அடிதான் நீங்கள் நாளைக்கு இமயமலைக்குச் செல்வதாக இருந்தாலும் உதவும். செஞ்சிக்கோட்டைக்குச் செல்வதாக இருந்தாலும் உதவியாக இருக்கும் என்று சொல்லிவிட்டு முடித்தார்

அதற்குப் பிறகு நான் என்னிடம் இருந்த குறிப்புத்தாளை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ’கென்னடியின் கனவை நனவாக்குவதற்காக நிலவுக்குச் செல்லவிருக்கும் விண்களத்தில் மனிதர்களை அனுப்பிவைக்க அமெரிக்க நாடு திட்டமிட்டிருக்கிறது’ என்று தொடங்கினேன். என் ஓங்கிய குரலில் படிந்திருந்த அழுத்தத்தால் மாணவர்களின் கவனமும் ஆசிரியர்களின் கவனமும் ஒரே நேரத்தில் என்மீது திரும்பியது. மொத்தம் பத்து செய்திக்குறிப்புகள். எந்த அவசரமும் இல்லாமல் ஒவ்வொரு சொல்லையும் தெளிவாக உச்சரித்து குறிப்பிட்ட நேரத்துக்குள்ளேயே செய்திக்குறிப்பைப் படித்துமுடித்தேன். தாளை மடித்து பைக்குள் வைத்தபடி தலைநிமிர்ந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக எழுந்த மாணவர்களுடைய கைத்தட்டல்கள் திகைப்பில் ஆழ்த்தின. எப்போதும் நிகழாதது அன்று நிகழ்ந்துவிட்டது. சற்றே அச்சத்தோடு அவசரமாக எனக்கு ஒன்றும் தெரியாது என்பதுபோல தலைமையாசிரியரையும் உடற்பயிற்சி ஆசிரியரையும் மாறிமாறிப் பார்த்தேன். அவர்கள் முகக்குறிப்பில் வித்தியாசமாக எதுவும் இல்லை என்பதை உணர்ந்த பிறகே மனம் ஆறுதல் அடைந்தது.

அமைதி திரும்பியதும் மாணவர்கள் தேசிய கீதம் பாடினர். பிறகு அமைதியாக வரிசையில் தத்தம் வகுப்பை நோக்கி நடந்து செல்லத் தொடங்கினர். நான் பின்வாங்கி நடக்கத் தொடங்கும் நேரத்தில் தலைமையாசிரியர் ‘இங்க வாடா’ என்பதுபோல என்னைப் பார்த்து கையை அசைத்தார். நான் வேகமாக அவருக்கு அருகில் சென்று கைகளைக் கட்டிக்கொண்டு நின்றேன்.

‘என்ன க்ளாஸ்டா நீ?’

‘செவந்த் பி செக்‌ஷன் சார்.’

‘யாரு க்ளாஸ் டீச்சர்?’

‘ராமசாமி சார்.’

‘ரேடியோவில டில்லி நியூஸ் படிக்கிற பொம்பள மாதிரியே படிக்கிறயே. அடிக்கடி நியூஸ் கேப்பியா?’

‘ஆமாம் சார்.’

‘பாடமெல்லாம் எப்படி படிக்கிற? நல்லா படிப்பியா?’

‘ம் சார்.’

‘க்ளாஸ்ல எத்தனாவது ரேங்க்?’

‘முதல் ரேங்க் சார்.’

அதற்குள் ராமசாமி சார் தான் நின்றிருந்த வரிசையிலிருந்து விலகி வேகமாக தலைமையாசிரியருக்கு வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தார். ‘வழக்கமா நியூஸ் படிக்கிற பையன் இன்னைக்கு வரலை சார். அவசரத்துக்கு இவன புடிச்சி ஏற்பாடு செய்யவேண்டியதா போச்சி’ என்றார்.

‘இருக்கட்டும் ராமசாமி. செவந்த் படிக்கிற பையன் மாதிரியே தெரியலை. நல்லா தைரியமா படிக்கிறான். உறுதியான குரல். தெளிவான உச்சரிப்பு. இவனுக்கும் ட்ரெய்னிங் கொடுங்க. புதுசுபுதுசா பசங்கள தயார் செய்யறது நல்லதுதான்.’

ராமசாமி சார் என்னை மகிழ்ச்சியோடு பார்த்தார். பிறகு ‘ஓடு. ஓடு. பசங்களோடு சேர்ந்துக்கோ’ என்றார். நான் ஒரே ஓட்டமாகத் தாவி ஓடி எங்கள் வகுப்புக்குரிய வரிசையில் சேர்ந்துகொண்டேன்.

நிலவுப்பயணம் பற்றிய செய்தி எனக்கு கிளர்ச்சியை ஊட்டியது. அன்று இரவு ஏழேகால் செய்தியில் நிலவுப்பயணம் பற்றி இன்னும் கூடுதலான தகவல்கள் வாசிக்கப்பட்டன. வானத்தில் தெரிந்த நிலாவை ஏக்கத்துடன் அடிக்கடி அண்ணாந்து பார்க்கத் தொடங்கினேன்.

அன்று இரவு அம்மா எங்களுக்கு திண்ணையில் நிலா வெளிச்சத்தில் சாப்பாடு பரிமாறினார். ‘அம்மா, நிலாவுல ஒரு ஆயா உட்கார்ந்துகினு வடை சுடுதுன்னு சொல்வியே, இனிமேல அது நடக்காது. அந்த ஆயாவுக்கு ஆபத்து வந்துட்டுது. வடை சுடறதுக்கு அந்த ஆயா வேற இடம் பார்த்துகிட்டு போவ வேண்டிதுதான்’ என்று நானாகவே பேச்சைத் தொடங்கினேன்.

சாம்பார் ஊற்றுவதை நிறுத்துவிட்டு அம்மா என்னை விசித்திரமாகப் பார்த்தார். ‘என்னாச்சிடா ஒனக்கு? ஏன் இப்படி உளர்ற?’ என்று கேட்டார்.

‘ஐயோ அம்மா. உனக்கு ஒன்னுமே புரியலை. அமெரிக்கா நாட்டுக்காரங்க விமானம் இன்னும் கொஞ்ச நாள்ல நிலாவுக்கு போவபோவுது. ஆளுங்களும் போறாங்களாம். அவுங்க போய் எறங்கிட்டா, அதுக்கப்புறம் அந்த ஆயா எப்படி இருக்கமுடியும்?’ நான் என்னுடைய கூற்றை தர்க்கபூர்வமாக அம்மாவுக்கு விளக்கிச் சொன்னேன்.

‘என் அறிவாளித் தங்கமே, மொதல்ல சாப்புடற வேலையை பாரு. ஒரு கதைக்கும் நாட்டுநடப்புக்கும் இருக்கிற வித்தியாசம் கூடவா உனக்கு புரியலை?’

‘அப்ப, உண்மையிலயே நிலாவுல ஆயா இல்லையா?’ என்று கேட்டுக்கொண்டே ஏக்கத்துடன் நிலவைப் பார்த்தேன். வெள்ளைநிற வட்டத்தில் படிந்திருந்த கரிய நிழலின் வளைவுகள் ஒரு ஆயா கால்நீட்டி உட்கார்ந்திருப்பதைப்போலத்தான் இருந்தது.

‘ஒரு ஆயா மட்டும் ஒரு கிரகத்துல தனியா எப்படிடா இருக்கமுடியும்? அதெல்லாம் சும்மா ஒரு கதைக்குச் சொல்ற விஷயம். அதைப்போய் உண்மைன்னு எடுத்துக்கலாமா?’

‘அப்ப வேற யாரு இருப்பாங்க?’

‘அங்க ஒரு ஈ, காக்கா கூட இருக்காதுடா.’

‘அதுவும் பூமி மாதிரி ஒரு கிரகம்தான? அப்ப ஏன் ஈ, காக்கா கூட இருக்காதுன்னு சொல்ற?’

‘காத்து, தண்ணி, வெளிச்சம் எல்லாம் இருந்தாதானடா ஒரு உயிர் வாழமுடியும்? அதெல்லாம் ஒரு இடத்துல இல்லைன்னா எப்படி வாழும்?’

‘நிலாவுல காத்து, தண்ணி, வெளிச்சம்லாம் உண்மையாவே இல்லையா?’

‘எல்லாத்தயும் ஏன்டா என்கிட்ட கேக்கற? வாய்தான் வழுதாவூரு வரைக்கும் இவ்ளோ நீளமா வளர்த்துவச்சிருக்கியே. போய் உங்க வாத்தியாருகிட்டயே கேளு.’

அன்று இரவு முழுக்க நிலாவைப்பற்றிய எண்ணங்களே தோன்றித்தோன்றி மறைந்தன. சரியான தூக்கம் இல்லை.

மறுநாள் காலையிலும் நானே செய்திகளைப் படிக்கவேண்டி இருந்தது. வழக்கமாகப் படிக்கும் மாணவர் அன்றும் வரவில்லை. அன்றைய செய்தியில் நிலவைப்பற்றிய செய்தி எதுவும் இல்லை.

ராமசாமி சார் வகுப்புக்கு வரும்வரை காத்திருந்து அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

‘பூமியத் தவிர வேற எந்தக் கிரகத்துலயும் காத்து, மழை, தண்ணி, வெளிச்சம் எதுவும் கிடையாது. அதுக்குத்தான் விஞ்ஞானிங்க ஆராய்ச்சி செய்யறாங்க. அந்த வசதியெல்லாம் இருக்கிற இடம் தெரிஞ்சா, அங்கயும் மனிதர்கள் சென்று குடியேறி வாழ்க்கையை நடத்தலாம்னு திட்டம் போடறாங்க.’

‘நிலாவுலதான் காத்து கூட இல்லைன்னு சொல்றீங்க. அப்புறம் இங்கேருந்து போற விஞ்ஞானிங்க மட்டும் எப்படி சார் மூச்சு விடுவாங்க?’

‘அதுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் வசதியோடதான் எல்லாரும் போவாங்க’

‘அமெரிக்கா மட்டும்தான் அந்த ஆராய்ச்சியை செய்யுதா சார்?’

‘ரஷ்யான்னு இன்னொரு நாடு இருக்குது. அவுங்க கூட விமானத்தை அனுப்பி ஆராய்ச்சி செய்யறாங்க. யாரு ஜெயிக்கறதுன்னு அவுங்களுக்குள்ள ஒரு போட்டி.’

‘இந்தியாவுல அந்த மாதிரிலாம் ஆராய்ச்சி இல்லையா சார்? இந்தியா விமானம் அங்க போவாதா?’

‘இந்தியாவா? இன்னும் அந்த வசதிலாம் நமக்கு வரலைடா. நமக்கு சுதந்திரம் கிடைச்சி இருபத்திரெண்டு வருஷம்தான் ஆவுது. உங்கள மாதிரியான பிள்ளைங்க நல்லா படிச்சி, விஞ்ஞானியா மாறி ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சா, எதிர்காலத்துல அப்படி போகறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்குது.’

கிட்டத்தட்ட எங்கள் உரையாடல் ஒரு முடிவுக்கு வரவிருந்த நேரத்தில் ‘பூமியிலிருந்து நிலா எவ்வளவு தூரத்துல இருக்குது சார்?’ என்று புதிதாக எழுந்த சந்தேகத்தை ஒரு கேள்வியாகக் கேட்டேன். ராமசாமி சார் புன்னகை மாறாத முகத்துடன் ‘பெரிய கேள்வியா கேட்கறியே. அதுக்கு முன்னால நான் உன்ன ஒரு கேள்வி கேக்கறேன். பதில் சொல்லு. சரியான பதில் சொல்லிட்டா, உன் கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கும்’ என்றார். நான் தயார் என்பதுபோல வேகமாக அவரைப் பார்த்து தலையசைத்தேன்.

‘நம்ம வளவனூருலேர்ந்து மேற்குப் பக்கத்துல இருக்கிற ஊரு விழுப்புரம். கிழக்குப் பக்கத்துல இருக்கிற ஊரு பாண்டிச்சேரி. ரெண்டு ஊருக்கும் இடையில எவ்வளவு தூரம்னு தெரியுமா?’

ரயில் பயணச்சீட்டிலும் கிலோமீட்டர் நடுகல்லிலும் பலமுறை படித்துப் படித்து நினைவில் பதிந்துவிட்ட தகவல் என்பதால் சற்றும் தாமதிக்காமல் ‘நாற்பது கிலோமீட்டர் சார்’ என்றேன். அவர் ஆச்சரியம் மின்னும் கண்களோடு ஒருகணம் என்னைப் பார்த்தார்.

‘அந்த மாதிரி ரெண்டு ஊருக்கு நடுவுல ஒரு ஆளு தொடர்ச்சியா ஆயிரம் தடவை போய்போய் வந்தா, அவன் பிரயாணம் செய்யற தூரம் எவ்வளவு இருக்கும்?’

‘நாற்பது பெருக்கல் ஆயிரம் நாற்பதாயிரம் கிலோமிட்டர் தூரம் இருக்கும்.’

‘அவனே பத்தாயிரம் தடவை போய்போய் வந்தா?’

அந்தக் கணக்கு விளையாட்டு உற்சாகமாக இருந்தது. ‘நாற்பது பெருக்கல் பத்தாயிரம் நாலுலட்சம் கிலோமீட்டர் தூரம் இருக்கும்.’

‘கரெக்ட். அதுதான் நிலாவுக்கும் பூமிக்கும் உள்ள தூரம்.’

‘ஐயோ!’

என் விரல்கள் தாமாகவே உயர்ந்து திறந்த வாயை மூடின. என்னைப்போலவே என்னைச் சுற்றியிருந்த நண்பர்களும் மலைத்துபோய் நிற்பதைப் பார்த்தேன்.

‘பார்க்கறதுக்கு பக்கத்துல இருக்கிறமாதிரி இருந்தாலும் பூமியிலேர்ந்து அவ்வளவு தூரத்துல இருக்குது நிலா’ என்று இரு கைகளையும் உயர்த்தினார் ராமசாமி சார்.

‘அப்படின்னா, பூமியிலிருந்து புறப்படற ராக்கெட் நிலாவுக்குப் போக எத்தனை மாதங்கள் புடிக்கும் சார்?’

‘மாதக்கணக்குலாம் தேவையில்லைடா. அது என்ன ரயிலா, பஸ்ஸா? இழு இழுன்னு இழுத்துகிட்டு போகும்னு நெனைச்சிட்டியா? ராக்கெட். விமானத்தைவிட வேகமா போகும். ஒரு வாரத்துல போய் சேர்ந்துடலாம்.’

‘அவ்ளோ சீக்கிரமாவா? ஆச்சரியமா இருக்குது சார். ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு தூரம் போகும் சார்?’

‘கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ள பறந்துட்டுதுன்னு சொல்வாங்களே, அந்த மாதிரி பறக்கிற வேகம் அந்த ராக்கெட்டுக்கு உண்டு. சாதாரணமா ஒரு மணி நேரத்துல ஏழாயிரம் எட்டாயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்துபோகும்.’

அக்கணமே என் மனம் கணக்கில் மூழ்கியது. நாலு லட்சத்தை எட்டாயிரத்தால் வகுத்துப் பார்த்தது. ஐம்பது மணி நேரம் என விடையைக் கண்டுபிடித்ததும் ஒரு வாரம் என்று சார் சொன்ன பதில் எப்படிச் சரியாகும் என்று சந்தேகம் வந்தது. அந்தக் கேள்வி என்னைக் குடைந்தபடியே இருந்தது. என்னால் பொறுமை காக்கமுடியவில்லை. ‘சார், கணக்குப்படி ஐம்பது மணி நேரம்னுதான் பதில் வருது. அப்புறம் ஏன் ஒரு வாரம் ஆகும்னு சொல்றீங்க? நடுவுல ரெஸ்ட் எடுக்குமா சார்’ என்று கேட்டேன்.

என் கேள்வியைக் கேட்டதும் சார் முகமெல்லாம் மலர்ந்துவிட்டது. மார்பில் கை வைத்துக்கொண்டு சிரித்தார். அவர் எதற்காகச் சிரிக்கிறார் என்கிற காரணம் புரியாமலேயே பக்கத்தில் இருந்த நண்பர்களும் சிரித்தார்கள். நான் அவர்களைத் திரும்பிப் பார்த்து முறைத்தேன்.

‘ஆகாயத்துல பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மாதிரி ராக்கெட்டுங்க ரெஸ்ட் எடுக்க கட்டி வச்சிருக்காங்கன்னு நெனச்சிட்டியா?’

நான் அமைதியாகவே நின்றிருந்தேன்.

‘நீ கேட்ட கேள்வியில ஒரு முக்கியமான பாய்ண்ட் இருக்குது. விளக்கமா சொன்னாதான் உனக்கு புரியும். மத்தவனுங்களும் கவனிச்சி கேளுங்கடா’ என்றபடி சார் விளக்கத் தொடங்கினார்.

‘இப்ப நாம ரோட்டுல வேகமா சைக்கிள் ஓட்டறோம்னு வை. அப்ப நாம என்ன மனசுக்குள்ள நெனச்சிக்கறோம் தெரியுமா? நாம வேகமா மிதிக்கறதால சைக்கிள் வேகமா ஓடுதுன்னு நெனைச்சிக்கறோம் இல்லையா? அதுதான் கிடையாது. நம்ம சுத்தி இங்க காத்து இருக்குது. அந்தக் காத்தும் நம்முடைய மிதிக்கிற வேகத்துக்கு உதவி செய்யுது. புரியுதா?’

புரிகிறது என்பதன் அடையாளமாக நான் தலையசைத்தேன்.

‘சாதாரண காத்தோட்டத்துல மிதிக்கிற வேகத்துக்கும் எதிர்க்காத்துல மிதிக்கிற வேகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அழுத்தி அழுத்தித்தான் மிதிக்கணும். அப்ப நாம போகிற தூரமும் குறைவா இருக்கும். இல்லையா?’

‘ஆமாம் சார்.’

‘காத்தே இல்லாத இடத்துலயும் அந்த மாதிரியான அழுத்தம் இன்னும் கூடுதலா தேவைப்படும். அப்ப அந்த தூரம் இன்னும் குறையும். புரியுதா?’

‘புரியுது சார்.’

‘பூமிக்கு மேல ஆகாயத்துல இருக்கிற காத்து மண்டலம் இருக்கிற பகுதி கொஞ்ச தூரத்துக்கு மட்டும்தான். அதுக்கு மேல காத்தே இல்லாத வெற்று மண்டலம். காத்து மண்டலத்துக்குள்ள எட்டாயிரம் கிலோமீட்டர் வேகத்துல போகிற ராக்கெட் காத்து இல்லாத மண்டலத்துக்குள்ள் மூவாயிரம் ரெண்டாயிரம் கிலோமீட்டர் வேகத்துலதான் போகமுடியும். புரியுதா? அதனாலதான் ஒரு வாரம்கற கணக்கு.’

அன்று முதல் கன்னித்தீவு கதை கூட எங்கள் பேச்சில் இரண்டாவது இடத்துக்குப் போய்விட்டது. நிலவுப் பயணத்தைப் பற்றித்தான் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் நான் கேட்கிற செய்தியும் படிக்கிற செய்தியும் பள்ளியில் வாசிக்கிற செய்தியும் நிலவுப்பயணம் பற்றிய செய்தியாகவே இருந்தது.

அந்தப் பெரிய வகுப்பு மாணவர் தொடர்ந்து இரண்டு வாரத்துக்கு மேல் பள்ளிக்கு வராததால் செய்திகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கே கிடைத்தது.

‘அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நிலவுக்கு அனுப்பும் மூன்று ஆய்வாளர்களின் பெயர்களையும் விண்வெளிக்கலம் புறப்படவிருக்கும் நாளையும் நேரத்தையும் அறிவித்தது.’

அந்தச் செய்தியை வாசித்தபோது அப்பட்டியலில் என் பெயரும் சேர்ந்திருப்பதுபோல நினைத்து நினைத்து மகிழ்ச்சியில் துள்ளியது. நீல் ஆம்ஸ்ட்ராங்க், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் வரிசையில் ரகசியமாக என் பெயரை எனக்கு நானே மெளனமாகச் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். பறக்கும் மனிதனைப்போல கைகளை நீட்டி விண்வெளியில் மேகங்களைக் கிழித்துக்கொண்டு பறப்பதுபோல கற்பனை விரிந்தது. என்னால் ஒரு இடத்தில் கூட ஓய்வாக நிற்கமுடியவில்லை. எப்போதும் பரபரப்பாகவே இருந்தது.

அன்று ராமசாமி சார் வகுப்பறைக்கு வந்ததும் கேட்பதற்கு ஏராளமான சந்தேகங்கள் தோன்றியபடி இருந்தன. ஆனால் வகுப்பறைக்குள் வரும்போது வழக்கமாகத் தென்படும் கலகலப்பு இல்லை. மெளனமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். யாருக்கும் அவரை நெருங்கிச் செல்ல துணிச்சல் வரவில்லை.

திடீரென்று என் பக்கமாகத் திரும்பிய சார் ‘உனக்கு முன்னால நியூஸ் படிச்சிட்டிருந்த பையன் தனபால் வீடு உங்க தெருவிலயா இருக்குது?’ என்று கேட்டார். நான் ‘இல்லை சார்’ என்று உதட்டைப் பிதுக்கினேன். உடனே எனக்குப் பக்கத்தில் இருந்த பையன்களிடம் ஒவ்வொருவனாக அதே கேள்வியைக் கேட்டார். எல்லோருமே ‘இல்லை’ என்று பதில் சொன்னார்கள். ‘ஹெட்மாஸ்டர் பஞ்சாயத்து போர்டு தெருன்னு உங்க தெரு பேரச் சொல்லித்தானடா விசாரிக்கச் சொன்னாரு’ என்று முணுமுணுத்துக்கொண்டே முகவாயைச் சொறியத் தொடங்கினார் சார்.

‘அந்த அண்ணன் எங்க தெருவுல இருக்குது சார்’ என்று எங்களுக்குப் பின்வரிசையில் அமர்ந்திருந்த பெருமாள் மெதுவாக எழுந்து நின்று சொன்னான். உடனே அவசரமாக எழுந்த ராமசாமி சார் அவனுக்குப் பக்கத்தில் வந்தார். ‘நீ எந்தத் தெரு?’ என்று அவசரமாகக் கேட்டார்.

‘பஞ்சாயத்து போர்டு தெருவுலேர்ந்து ஒரு மண் ரோடு பிரிஞ்சி ஒரு தோப்பு வழியா போவுது சார். நாங்க அந்தத் தெருவுலதான் இருக்கோம் சார். அது மாட்டாஸ்பத்திரி தெரு. அந்த அண்ணன் வீடும் அங்கதான் இருக்குது.’

‘அது இடுகாட்டுக்கு போற வழி இல்லையா?’

‘ஆமாம் சார். எங்க தெருவைத் தாண்டித்தான் இடுகாட்டுக்கு போகணும்.’

‘ஓ’ என்று ஒருகணம் தலையசைத்துக்கொண்டார் சார். பிறகு ‘தனபால் ஏன் ஸ்கூலுக்கு வரலைன்னு உனக்கு தெரியுமா?’ என்று கேட்டார்.

‘தெரியாது சார்.’

‘தெருவுல அவன பாக்கமாட்டியா?’

‘அந்த அண்ணன் யார் கூடவும் பேச மாட்டாரு சார். எனக்கு தெரியாது சார்.’

‘சாயங்காமலமா அவுங்க வீட்டுக்கு போய் அந்த பையன பார்த்து ஹெட்மாஸ்டர் வரச் சொன்னாருன்னு சொல்லிட்டு வரியா?’

‘சரி சார்.’

சார் மீண்டும் தன் நாற்காலியை நோக்கிச் சென்று உட்கார்ந்து சிறிது நேரம் பாடம் நடத்தினார். பாடவேளை முடிந்து புறப்படும் சமயத்தில் ‘டேய் பெருமாளு. நீ தனியா போய் விசாரிச்சா சரியான பதில் கிடைக்காதுடா. வீட்டு மணி அடிச்சதும் ஓடிடாத. உன் கூட நானும் வரேன். சேர்ந்தே போவலாம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

பள்ளிக்கூடம் விட்டதும் அவரும் எங்களோடு சேர்ந்துகொண்டார். அவர் தன்னுடைய மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டே வந்தார். மொத்தமாக நாங்கள் ஆறு பேர் அவரோடு சேர்ந்து நடந்தோம். படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுச் செல்பவர்களைப்பற்றி வருத்தத்தோடு ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தார். ஜூன் மாதம் பள்ளிக்கூடம் தொடங்கி பத்து நாட்கள் மட்டுமே வந்து நின்றுபோன ஒரு மாணவன், ஒன்பதாம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெற்ற நிலையிலும் பத்தாம் வகுப்பில் சேராமலேயே படிப்பை நிறுத்திவிட்ட ஒரு மாணவன், வேறொரு ஸ்கூலில் சேர இருப்பதாகச் சொல்லிவிட்டு புதிய ஸ்கூலுக்கும் செல்லாமல் பழைய ஸ்கூலுக்கும் வராமல் படிப்பின் பாதையிலிருந்து விலகிச் சென்ற மாணவன் என அவருக்கு அச்சமயத்தில் நினைவுக்கு வந்த பலருடைய கதைகளையெல்லாம் சொல்லிக்கொண்டே நடந்தார்.

நாங்கள் யாருமே எங்கள் வீட்டுக்குச் செல்லவில்லை. அவரோடு நடந்துசென்று தனபால் வீட்டுக்கு முன்னால் நின்றோம். வீடு பூட்டியிருந்தது. ஏறத்தாழ இரண்டு மணி நேரம் பொழுது சாயும் வரைக்கும் அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தோம். ஒருவரும் வரவில்லை. .’நீங்களாவது நேரத்துக்கு வீட்டுக்கு போங்கடா. நேரம் இருக்கும்போது என்ன விஷயம்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு வந்து நாளைக்கு சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு மிதிவண்டியில் ஏறிச் சென்றுவிட்டார் ராமசாமி சார்.

மறுநாள் காலையில் எழுந்ததும் ரேடியோ செய்தியைக் கேட்ட பரபரப்பில் ராமசாமி சார் சொன்னதெல்லாம் மறந்துவிட்டது. புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போதுதான் நினைவுக்கு வந்தது. உடனே பெருமாள் வீட்டுக்கு ஓடிச் சென்று அவனோடு தனபால் அண்ணன்னைப் பார்ப்பதற்காக ஓடினோம். அப்போதும் வீடு பூட்டியே இருந்தது. முதல்நாள் இரவு சாப்பாட்டு வேளைக்கு முன்பாக நாலைந்து முறைக்கு மேல் வந்து வந்து பார்த்ததாகவும் வீடு பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததாகவும் தெரிவித்தான் பெருமாள்.

பள்ளிக்குச் சென்றதும் ராமசாமி சாரைச் சந்தித்து விவரங்களைச் சொன்னோம். ராமசாமி சார் வருத்தத்தோடு நாக்கை த்ச் என்று பெருமூச்சுடன் சப்புக்கொட்டிக்கொண்டார். ‘மறக்காம ஒவ்வொரு நாளும் பார்த்துகிட்டே இருங்கடா. வீடு தெறந்திருந்து, ஆளும் கண்ணுல கெடைச்சான்னு வை, எங்கிட்ட அழச்சிகிட்டு வாங்க. புரியுதா?’ என்றார். ‘சரி சார்’ என்று தலையசைத்துக்கொண்டே வகுப்புக்குள் ஓடினோம்.

‘விண்வெளிக்கலத்துடன் புகைப்படக்கருவி ஒன்றை இணைத்து அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகவும் அது நிலவை படமெடுத்து உடனுக்குடன் பூமிக்கு அனுப்ப இருப்பதாகவும் அமெரிக்க ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.’

ஆய்வுநிலையச் செய்திகள் ஒவ்வொன்றையும் படிக்கும்போது நானே ஆய்வுநிலையத்தில் இருப்பதுபோல உணர்ந்தேன்.

‘இன்று விண்வெளிக்கலம் நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. அதன் பெயர் அப்போலா-11. இந்தப் பயணத்தில் கிடைக்கவிருக்கும் வெற்றி மனிதகுலத்துக்கே கிடைத்த வெற்றியாக இருக்கும்.’

‘மூன்று விமானிகளும் தத்தம் குடும்பத்தினரிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் ஆய்வுக்குழுவினரிடமிருந்தும் விடைபெற்று விண்வெளிக்கலத்துக்குள் ஏறி அமர்ந்தார்கள்.’

‘அப்போலோ விண்வெளிக்கலம் திட்டமிட்ட வேகத்தில் திட்டமிட்ட பாதையில் இலக்கை நோக்கிச் சரியாக பயணம் செய்துகொண்டிருக்கிறது.’

எல்லா இடங்களிலும் பரவலாக அந்தச் செய்தியே பேசுபொருளாக இருந்தது. இரவில் விண்வெளிக்கலத்தின் நினைவு வந்தால் தானாகவே கண்கள் உயர்ந்து வானத்தில் நிலவின் மீது படரும்.

‘நட்சத்திரம்லாம் தெரியற மாதிரி ராக்கெட் தெரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும். நாம எல்லாரும் வீட்டுல இருந்தே அழகா பார்த்து ரசிக்கலாம்.’

அதைக் கேட்டுக்கொண்டே வெளியே வந்த அம்மா என் தலையில் தட்டி ‘அந்த ராக்கெட் பின்னாலயே உன்னயும் கட்டிவிட்டுட்டா வழியெல்லாம் ரசிச்சிகிட்டே போகலாம்’ என்று ஒருமுறை என்னைப்போலவே பேசி எல்லோருக்கும் சிரிப்பு மூட்டினார்.

நிலவின் மனிதன் காலடி பதித்த செய்தியை நான்தான் பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனை நேரத்தில் படித்தேன்.

‘விண்வெளிக்கலம் வெற்றிகரமான வகையில் நிலவில் தரையிறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங் என்னும் விமானி விண்கலத்திலிருந்து இறங்கி முதன்முதலாக நிலவில் காலடி வைத்தார். அடுத்து சில நிமிடங்களில் ஆல்ட்ரின் இறங்கி நடந்தார். இருவரும் அமெரிக்கக் கொடியை நிலவின் தரையில் நட்டனர்.’

‘அறிவியல்துறையில் மனிதர்கள் படைத்திருக்கும் மகத்தான சாதனை இது என்று தேசமே போற்றுகிறது.’

‘பாரதப்பிரதமர் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகளுக்கும் நிலவில் கால் பதித்த விஞ்ஞானிகளுக்கும் தம் பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.’

‘முதன்முதலாக நிலவில் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் இன்று நாங்கள் எடுத்துவைத்திருக்கும் ஒரு சிறிய காலடி எதிர்காலத்தில் மனிதகுலம் அடையவிருக்கும் மகத்தான உயர்வுக்கெல்லாம் ஒரு தொடக்கம் என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.’

அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட படங்கள் அனைத்தும் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. உலர்ந்துபோன வறண்ட மணற்பரப்பாக நிலவின் தரையைப் பார்க்க திகைப்பாக இருந்தது. என் கற்பனைகள் எல்லாம் உடைந்து சிதறியதுபோல இருந்தது. காற்று அடைத்ததுபோல பருத்த ஆடைகளோடு கண்ணாடி முகமூடியுடன் கூடிய விமானிகளின் கோலம் விசித்திரமாக இருந்தது.

நிலவுப்பயணத்தின் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தபோதிலும் ராமசாமி சார் மட்டும் தனபாலைப்பற்றி விசாரிப்பதை நிறுத்தவே இல்லை. ‘பார்த்தீங்களாடா, பார்த்தீங்களாடா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். பெருமாளும் உதட்டைப் பிதுக்கி ஒவ்வொருநாளும் பதில் சொல்லிக்கொண்டே இருந்தான்.

ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு அனைவரும் கலைந்துசென்ற நேரத்தில் ராமசாமி சாரும் எங்களோடு சேர்ந்து வந்தார். பேசிக்கொண்டே நடந்து சென்றோம். சார் பேச ஆரம்பித்தாலேயே கதைகள் தானாகக் கொட்டத் தொடங்கிவிடும்.

வீட்டை நெருங்கும் சமயத்தில் ‘சார், தனபால் வீடு தெறந்திருக்குது’ என்று சத்தமாகச் சொன்னபடி தொலைவில் விரல்நீட்டிச் சுட்டிக் காட்டினான். திறந்திருந்த கதவுகளைப் பார்த்ததுமே ராமசாமி சாருக்கு முகம் மலர்ந்துவிட்டது. சார் வேகமாக நடந்து வீட்டுக்கு முன்னால் நின்று ‘தனபால், தனபால்’ என்று அழைத்தார். நாங்கள் பின்னாலேயே அமைதியாக நின்று எட்டி எட்டிப் பார்த்தோம். சில கணங்களில் தலைமுடியை உதறி கொண்டை போட்டபடி ‘யாரு?’ என்று கேட்டபடி ஒரு அம்மா வெளியே வந்தார். சாரைப் பார்த்ததும் தணிந்த குரலில் அச்சத்துடன் ‘யாருங்க வேணும்?’ என்று கேட்டார்.

‘நான் ஸ்கூல் டீச்சர்ம்மா. தனபால பார்க்கணும். நல்லா படிக்கிற பையன், திடீர்னு ஸ்கூலுக்கு வராததால என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு போகலாம்ன்னு நானே நேருல வந்தேன்.’

அந்த அம்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. சாரைச் சுற்றி நின்ற எங்களையெல்லாம் ஒருமுறை பார்த்தார். பிறகு சாரிடம் கண்கலங்க ‘தப்பா நினைச்சிக்காதீங்க ஐயா. அவன் இனிமேல ஸ்கூலுக்கு வரமாட்டான் சார். எங்க தலையில படிப்பு எழுதலை. நாங்கள்லாம் ஆடுமாடு மாடு மாதிரி வேலை செய்யப் பொறந்தவங்க’ என்றார்.

‘அப்படியெல்லாம் நீங்களா நெனச்சிக்காதீங்கம்மா. நீங்க மொதல்ல அவன கூப்புடுங்க. நான் பேசறேன் அவன்கிட்ட.’

‘அவன் இங்க இல்லைங்க ஐயா. விக்கிரவாண்டி பக்கத்துல ஒரு சூளையில கல் அறுக்கிற வேலையில இருக்கான். அவுங்கப்பா காயிலாவா கெடந்த சமயத்துல வாங்கன கடன் ரெண்டாயிரம் ரூபா. இப்ப ஐயாயிரமா வளந்து நிக்குது. அவரயும் காப்பாத்த முடியலை. கடனயும் அடைக்கமுடியலை. நடுவுல எத்தன நாள்தான் லோள்பட்டு லொங்கழிய முடியும், சொல்லுங்க. போன மாசம் ஊடு புகுந்து ஒரே சண்டை. புள்ளய அனுப்பு. நாலஞ்சி வருஷம் வேலை செஞ்சி கடன அடைக்கட்டும்னு இழுத்தும் போயிட்டாங்க…’

அந்த அம்மாவால் தொடர்ந்து பேசமுடியவில்லை. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இரண்டு கண்களும் சிவந்து கலங்கிவிட்டன. சிறிது நேரத்துக்குப் பிறகு முந்தானையை உயர்த்தி விழிகளைத் துடைத்தபடி கைகுவித்து வணங்கினார்.

‘போய் வாங்க ஐயா. புள்ளைங்க படிக்கணும்ன்னு நெனைக்கறீங்களே, உங்க மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும்.’

சார் பெருமூச்சோடு எதுவும் பேசாமல் மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு நடந்தார். சாரிடம் எப்படி உரையாடலைத் தொடங்குவது என்று தெரியாமல் குழப்பத்தோடு நாங்களும் அவரோடு நடந்தோம்.

0

பகிர:
nv-author-image

பாவண்ணன்

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று பல தளங்களில் இயங்கி வருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.View Author posts

1 thought on “பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி”

  1. heart wrenching – finishing. கதையாக சந்தோஷமாக படித்தால் கடைசியில் வருத்தம்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *