ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நாங்கள் ஆடிக்கொண்டிருந்த பேஸ் பால் விளையாட்டை ஒரு கட்டத்தில் நிறுத்திவைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒருமுறை சுப்பிரமணி பந்து வீசினான். மனோகரன் அடித்தான். எதிர்பாராமல் அந்தப் பந்து சிறிது தொலைவில் நடந்துபோய்க்கொண்டிருந்த ஓர் அக்காவின் இடுப்பில் இருந்த தண்ணீர்ப்பானையில் பட்டுத் தெறித்தது. அந்த வேகத்தில் பானை துண்டுதுண்டாக உடைந்துவிட, அவர் உடுத்தியிருந்த ஆடை முழுதும் தண்ணீரில் நனைந்துவிட்டது. அதை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அச்சத்தில் நாங்கள் உடல்நடுங்கச் சிலையாக நின்றுவிட்டோம்.
அந்த அக்கா ஆத்திரத்தோடு போட்ட கூச்சலால் அருகில் குடியிருப்பில் இருந்தவர்களெல்லாம் வந்துவிட்டனர். ஐந்தாறு பெண்கள் சேர்ந்து வந்து எங்களை ஏகவசனத்தில் திட்டத் தொடங்கினர்.
‘சரி சரி. விட்டுப் போம்மா. சின்ன பசங்கதான. வேணும்னா ஒடைச்சானுங்க? என்னமோ தெரியாம பந்து பட்டு உடைஞ்சிட்டுது.’
ஒரே ஒரு பெரியவர் மட்டும் எங்களுக்கு ஆதரவாகச் சொன்னார். ஆனால் அவருடைய சொல்லைக் காதுகொடுத்துக் கேட்பவர்கள் அங்கே ஒருவரும் இல்லை. எங்கள் உடல்நடுக்கம் நிற்கவே இல்லை. என்ன பேசுவது என்று கூடத் தெரியாமல் நாங்கள் நின்றிருந்தோம்.
எதிர்பாராமல் அங்கே வந்த பாய்ண்ட்மேன் காசி மாமாதான் அந்த மோதல் பெரிய அளவில் நீண்டுவிடாதபடி பக்குவமாகப் பேசி எங்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.
அதற்குள் எங்கள் வீட்டுக்குத் தகவல் போய்விட்டது. அந்த வாய்ச்சண்டையைப் பார்த்த யாரோ ஒரு தயிர்க்காரப் பெரியம்மா வீட்டுப் பக்கமாக வந்து தகவல் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
அன்றுமுதல் பேஸ்பால் ஆடுவதற்குச் செல்வதை நிறுத்தினோம். அதற்குப் பதிலாக எங்கள் வீட்டை ஒட்டியிருந்த வைக்கோல் போருக்கு அருகில் அமர்ந்து கதை பேசத் தொடங்கினோம்.
கதை என்பது பெரும்பாலும் பள்ளிக்கூடக் கதைகள். அல்லது சினிமாக்கதைகள். எப்போதோ பார்த்த சினிமாவாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியாகப் பிரித்து பிரித்து கண்முன்னால் நிகழ்வதுபோல தத்ரூபமாகச் சொல்லக்கூடியவன் பழனி. அவனைக் கதைசொல்ல வைத்துவிட்டு, நாங்கள் அனைவரும் அவனைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டு கேட்போம்.
கதைகள் இல்லாதபோது நினைவிலிருந்து சினிமாப்பாடல்களைப் பாடுவோம். ஒரு பாட்டை முழுமையாகத்தான் பாடவேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. நாங்கள் எல்லோருமே எம்.ஜி.ஆர். ரசிகர்கள். எம்.ஜி.ஆர். பாடல்களைப் பாடுவதில் தனிவிருப்பம் கொண்டவர்கள். அதோ அந்தப் பறவைபோல. கொடுத்ததெல்லாம் கொடுத்தான். நான் ஆணையிட்டால். தொட்டால் பூமலரும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும். கண்போன போக்கிலே கால் போகலாமா? ஒருவன் தொடங்கினால் போதும். அடுத்தவன் அவனைப் பின்தொடர்ந்து செல்வான். சலிப்பே இல்லாமல் பாடுவோம்.
‘திடீர்னு எம்.ஜி.ஆர். நம்ம முன்னால வந்து நின்னா எப்படிடா இருக்கும்?’ என்று ஒருநாள் கேட்டான் கஜேந்திரன்.
‘டேய், நீ என்ன லூசா? எம்.ஜி.ஆர். எதுக்குடா இந்த பட்டிக்காட்டுக்கு வரணும்?’
‘ஒரு பேச்சுக்குத்தான்டா கேக்கறேன். வரார்னு வச்சிக்குவோம். அப்ப எப்படி இருக்கும்?’
‘ஐயோ, ஊரே இங்க வந்து ஈ மொய்க்கிறமாதிரி மொச்சிக்கும். நமக்கு நிக்கவே இடம் கிடைக்காது.’
‘நான் போய் அவரு கிட்டயே நிற்பேன். பார்த்துகிட்டே இருக்க அதுதான் வசதி.’
“நான் ஆணையிட்டால்னு அவரு பாடின பாட்டை அவரு முன்னால பாடிக் காட்டுவேன்.’
‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் பாட்டுதான் அவருக்கு ரொம்ப புடிக்கும். நான் அதைப் பாடுவேன்.’
‘பாடறதெல்லாம் அப்புறம். முதல்ல ஒரே ஒருமுறை அவரை மெதுவா தொட்டு பாக்கணும்.’
‘நம்ம ஊருக்கு வந்தா நல்லாதான் இருக்கும். எல்லோரும் ஒன்னா நின்னு ஒரு போட்டோ புடிச்சி வீட்டுக்குள்ள மாட்டி வைக்கலாம்.’
‘போட்டோவ புடிச்சி என்னடா செய்யப்போறோம்? நாங்க படிக்கறதுக்கு ஏதாவது உதவி செய்யுங்கன்னு கேக்கலாம்.’
‘ஆசை தோசை அப்பளம் வடை. அவரு வந்து நின்னா, அவரு கூட நூறு பேரு வருவாங்க. நம்ம மாதிரி சின்ன பசங்களை கிட்டவே சேக்கமாட்டாங்க. எதுக்குடா இந்த வீண்கனவு?’
‘கனவுன்னே வச்சிக்குவோம். ஆனா பேசறதுக்கு ஜாலியா இருக்குதா, இல்லயா, அத சொல்லு.’
எப்படியோ ஒவ்வொரு நாளும் எங்கள் உரையாடலில் எப்படியாவது ஒருமுறையாவது எம்.ஜி.ஆர். பெயர் வந்துவிடும். குறைந்தபட்சம் அவர் பாடிய ஏதாவது ஒரு பாடல் வந்துவிடும். அதிலிருந்து மனம்போன போக்கில் பேசிக்கொண்டிருப்போம்.
நாங்கள் உரையாடும் இடமாக அந்த வைக்கோல்போரைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எங்கள் தெருவிலேயே எங்கள் பக்கத்துவீட்டில்தான் அப்போது ரேடியோ இருந்தது. மூன்று வால்வு ரேடியோ. அதிலிருந்து ஒலிக்கும் பாடலைக் கேட்கும்போது, அந்தப் பெட்டிக்குள்ளே யாரோ உட்கார்ந்து பாடுவதுபோல தோன்றும். அவ்வளவு துல்லியமாக இருக்கும். இலங்கை விவிதபாரதியில் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு தலைப்பில் மாறிமாறி பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டே இருப்பார்கள். எல்லாப் பாடல்களும் எங்களுக்கு மனப்பாடம். அந்தக் குரலோடு சேர்ந்து நாங்களும் பாடுவோம்.
பாடல்கள்மீது இயற்கையாகவே நாங்கள் கொண்டிருந்த ஆர்வம் இன்னும் கூடுதலாகப் பெருகியதற்கு எங்கள் பள்ளியில் நடந்துவந்த பொது அறிவு வகுப்பும் ஒரு காரணம். வாரத்துக்கு ஒருமுறை வரும் பொது அறிவு வகுப்பு கொண்டாட்டத்துக்கு உரிய நேரம். பாட்டு, பேச்சு, கதை என்று ஆனந்தமாகக் கழியும் அந்தப் பாடவேளைக்காக நாங்கள் ஒவ்வொரு வாரமும் காத்திருப்போம். எங்கள் பிரியத்துக்குரிய சுப்பையா சார்தான் அந்தப் பாடவேளைக்கு உரியவர்.
அந்த நேரத்தை அவர் இரு பகுதியாகப் பிரித்துக்கொள்வார். முதல் பகுதியில் குழந்தைகள் கலைக்களஞ்சியம் என்னும் புத்தகத்தைக் கொண்டுவந்து அறிமுகம் செய்வார். உலகத்தில் உள்ள எல்லாவற்றுக்கும் அந்தப் புத்தகத்தில் ஏதேனும் ஒரு சின்ன விளக்கத்தைப் பார்க்கலாம். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துவரிசைப்படி சில முக்கியமான பெயர்களும் அவற்றைப்பற்றிய சின்னஞ்சிறு கட்டுரைகளும் இருக்கும்.
முதலில் யாராவது ஒரு மாணவனைப் பெயர் சொல்லி அழைப்பார் சார். அருகில் சென்று நின்றதும் கலைக்களஞ்சியத்தை அவன் கையில் கொடுத்து ‘ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து படி’ என்பார். மூடியிருந்த புத்தகத்துக்குள் அவன் விரலை நுழைத்து மனம்போன போக்கில் வெட்கத்துடன் ஒரு பக்கத்தைத் திறப்பான். ’நிலா’ என்றோ ‘பச்சோந்தி’ என்றோ அங்கிருக்கும் கட்டுரையின் தலைப்பை உரத்த குரலில் தெரிவிப்பான். தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும் பகுதியையும் படிப்பான். அதற்குப் பிறகு அதையொட்டி சுப்பையா சார் இன்னும் விரிவான தகவல்களைச் சொல்வார். இப்படி நாலைந்து பேரை அழைத்து, அவர்கள் படிக்கும் சொற்களுக்கு விளக்கம் கொடுப்பார்.
அடுத்த பகுதியில் நாங்கள் ஆர்வத்தோடு காத்திருந்த விருப்பப்பாடல் நேரம் தொடங்கும். ஒவ்வொருவரும் எழுந்து நின்று அவரவருக்குப் பிடித்த பாடலை வாய்விட்டுப் பாடவேண்டும். முழுசாகப் பாடவேண்டும் என்றோ, ராகத்தோடு பாடவேண்டும் என்றோ, எவ்விதமான கட்டாயமும் இல்லை. பக்திப்பாடலைத்தான் பாடவேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை. ஏதேனும் நாட்டுப்புறப்பாடலாகவும் இருக்கலாம். சினிமாப்பாடலாகவும் இருக்கலாம். எதுவானாலும் நாலு வரி தைரியமாகப் பாடவேண்டும். தெரியாது என்று ஒருவன்கூடச் சொல்லக்கூடாது என்பதுதான் நிபந்தனை. சொல்லிச்சொல்லி சுப்பையா சார் அனைவரையும் பாட வைத்துவிடுவார். எங்கள் பாடல் ஆர்வத்துக்கு அந்த வகுப்பு நல்ல வடிகாலாக அமைந்துவிட்டது.
மனோகரன் எப்போதும் சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களில் மிதப்பவன். சுந்தரம் டி.எம்.எஸ். பாடல்களை மட்டும்தான் பாடுவான். நான் சிதம்பரம் ஜெயராமன் குரலைக் கேட்டாலே உருகிவிடக் கூடியவன். பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பல பாடல்கள் பழனிக்கு மனப்பாடமாகவே தெரியும். இப்படி எல்லோருமே அந்தப் பாடவேளையில் பாடுவதற்கு பொருத்தமான பாட்டைத் தேர்ந்தெடுத்து தேவையான பயிற்சியோடு காத்திருப்போம்.
ஏழெட்டு வாரங்களில் பொது அறிவு வகுப்பு எங்கள் பிரியத்துக்குரிய வகுப்பாக மாறிவிட்டது. பல பாடல் வரிகள் எங்கள் நெஞ்சில் மிதந்தலையைத் தொடங்கின.
ஒருநாள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போதே அன்றைய பொது அறிவு வகுப்பில் பாடக்கூடிய பாடல்களைப்பற்றிய பேச்சு தொடங்கிவிட்டது. ‘இன்னைக்கு எந்த பாட்டுடா பாடப் போற?’ என்று ராஜசேகர் மனோகரனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான். அவன் உடனே அப்போதே பாடத் தயராக இருப்பவனைப்போல ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்று உற்சாகமாகப் பதில் சொன்னான்.
‘நீ?’ என்று பக்கத்தில் நடந்துவந்த பழனியிடம் திரும்பிக் கேட்டான் ராஜசேகர்.
‘காலங்களில் அவள் வசந்தம்’ என்றான் பழனி
அதைத்தொடர்ந்து ஒவ்வொருவரும் அடுத்தடுத்து பதில் சொல்லத் தொடங்கினார்கள்.
‘போனால் போகட்டும் போடா…’
‘உள்ளத்தில் நல்ல உள்ளம்…’
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…’
‘கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாகுமா…’
‘அதோ அந்தப் பறவைபோல…’
எல்லோரும் சொல்லிமுடிக்கும் வரை காத்திருந்த ராஜசேகர் ‘பாடுங்க. பாடுங்க. அந்த மாதிரி பாட்டுலாம் நமக்கு சரிப்பட்டு வராது. நான் புதுதினுசா ஒரு பாட்டு பாடப் போறேன்’ என்றான்.
‘அது என்ன புது தினுசு பாட்டு?’
‘ஏதாவது டப்பாங்குத்து பாட்டா?’
‘இல்லை இல்லை. இது வேற. நான் ஒரு முட்டாளுங்க. சந்திரபாபு பாட்டு.’
‘உனக்கு எப்படிடா கிடைச்சது அந்தப் பாட்டு?’
‘எங்க வீட்டுக்குப் பக்கத்தூட்டு அண்ணன் கட்டுகட்டா நிறைய சினிமா பாட்டுப்புஸ்தம் வச்சிருக்காரு. அதைப் பார்த்து எழுதி வச்சிகிட்டு நானே பாடி பாடி கத்துகிட்டேன்.’
பள்ளிக்கூடம் சென்று சேரும் வரைக்கும் பாடல்கள்தான் எங்கள் பேச்சின் மையமாக இருந்தது. அதிலிருந்து இம்மி கூட பிசகவில்லை.
மதிய உணவு இடைவேளையிலும் யாரோ அந்தப் பேச்சைத் தொடங்கிவிட்டார்கள். அந்தக் கணமே சினிமாப்பாடல்கள் பேச்சில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. அங்கிருந்து சினிமாக்கள் பக்கமும் சினிமா நடிகர்கள் பக்கமும் தானாகவே மெல்ல மெல்ல நகர்ந்துசென்றது. வகுப்பு தொடங்குவதற்கு அடையாளமான மணி அடிப்பதைக் கேட்ட பிறகுதான் அது ஓய்ந்தது.
உடற்பயிற்சி, நூலக வாசிப்பு, பொது அறிவு போன்ற சிறப்பு வகுப்புகள் எல்லாமே கடைசிப் பாடவேளைப் பிரிவில் இடம்பெறுவதுதான் வழக்கம். நாங்கள் அதற்காகத்தான் தவமாய்த் தவமிருந்து காத்திருந்தோம். வழக்கம்போல கலைக்களஞ்சியம் புத்தகத்தோடு சுப்பையா சார் வந்து சேர்ந்தார்.
முன்வரிசையில் உட்கார்ந்திருந்த குமாரசாமியின் பக்கம் விரலை நீட்டி ‘நீ வா’ என்று அழைத்து, அவனிடம் கலைக்களஞ்சியம் புத்தகத்தைக் கொடுத்தார் சார். அவன் வகுப்பு மாணவர்களையெல்லாம் ஒரு வெற்றிப் புன்னகையுடன் ஒரு சுற்று பார்த்துவிட்டு ஆட்காட்டி விரலாலேயே ஒரு பக்கத்தைத் தள்ளித் திறந்தான். நைட்டிங்கேல் அம்மையார் என்று சொல்லிவிட்டு அவரைப்பற்றிய குறிப்பைச் சத்தமாகப் படித்தான். அதைத் தொடர்ந்து சுப்பையா சார் அந்த அம்மையாரின் வாழ்க்கையை இன்னும் விரிவாக எடுத்துரைத்தார். தொடக்கத்தில் அவர் ஓர் எளிய மருத்துவத்தாதி. நாளடைவில் பெரிய சேவையாளராக வளர்ந்தார். இங்கிலாந்துக்கும் ரஷ்யாவுக்கும் நடைபெற்ற போரில் காயமடைந்த போர்வீரர்களுக்கு இரவு பகல் பார்க்காமல் கட்டு போட்டு, மருத்துவம் பார்த்து, ஆறுதல் சொல்லி உயிர்பிழைக்கவைத்தார்.
குமாரசாமியைத் தொடர்ந்து இன்னும் நான்கு பேர் நான்கு புதிய சொற்களைப் படித்தனர். அவர்கள் படித்த குறிப்புகளை இன்னும் விரிவான விதத்தில் எடுத்துரைத்தார் சுப்பையா சார்.
அடுத்து நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த விருப்பப்பாடல் நேரம் வந்தது. அவருடைய அறிவிப்புக்காகக் காத்திருந்தோம்.
‘நீங்க எல்லாரும் எதுக்காக காத்திருக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்’ என்று ஒரு சின்ன இடைவெளிவிட்டு புன்னகைத்தார் சார். உடனே முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவன் ‘விருப்பப்பாடல்’ என்று ஓங்கிய குரலில் அவசரமாகச் சொன்னான். அதை மறுப்பதுபோல சார் புன்னகைத்தபடி தலையசைத்தார்.
‘ஏழெட்டு வாரமா ஏராளமான பாடல்கள் பாடிட்டோம். அதனால இன்னைக்கு விருப்பமான பாட்டுக்குப் பதிலா விருப்பமான தலைவர்களைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்.’
வகுப்பின் போக்கு சட்டென்று திசைமாறிச் சென்றுவிட்டதை நம்பமுடியாமல் ஒருகணம் நாங்கள் ஏமாற்றத்தில் திகைத்து உறைந்துவிட்டோம். அமைதியாக அவர் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தோம். அந்த அமைதியைப் பார்த்து சார் சற்றே குழம்பிவிட்டார்.
‘என்னடா, தலைவர்கள் பற்றி சொல்லத் தெரியுமா, தெரியாதா? இல்லை, சினிமாப் பாட்டுதான் வேணுமா?’
சாரின் முடிவுக்கு மறுப்பைத் தெரிவிக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. முதலில் பலவீனமாகத் தொடங்கினாலும் பிறகு ‘சொல்றோம் சார்’ என்று அழுத்தமாக ஓங்கிய குரலில் சொன்னோம்.
‘ம். நல்லது’ என்று சார் புன்னகைத்தார். பிறகு அவருடைய கண்கள் வகுப்பையே ஒரு வட்டமடித்துவிட்டு என் மீது நிலைகுத்தி நின்றன. ‘நீ சொல்லுடா. உனக்கு விருப்பமான தலைவர் யார், ஏன் பிடிக்கும், எல்லாத்தயும் சொல்லு’ என்றார்.
நான் உடனே எழுந்து நின்றேன். இப்படி முதல் ஆளாக என்னை எழுந்து நிற்கவைப்பார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருகணம் யாரைப்பற்றிச் சொல்லலாம் என்று தடுமாறினேன். மறுகணமே ஒரு மாதம் முன்பு நடைபெற்ற பேச்சுப்போட்டிக்காக தயாரித்து வைத்திருந்த குறிப்புகள் நினைவுக்கு வந்துவிட்டன. அதனால் பதற்றமின்றி ‘மகாத்மா காந்தியடிகள்’ என்றேன்.
சுப்பையா சார் உடனே என்னைப் பார்த்து ‘ம், ஏன் பிடிக்கும், அதைச் சொல்லு’ என்றார். ‘காந்தியடிகள் அகிம்சை வழியில் இந்திய நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார். ஒற்றுமைக்காகவும் சுகாதாரமான வாழ்க்கைக்காகவும் பாடுபட்டார்’ என்று நினைவிலிருந்த எல்லாத் தகவல்களையும் வரிசையாகச் சொல்லிமுடித்துவிட்டு அவர் முகத்தைப் பார்த்தேன். அதைக் கேட்டு சுப்பையா சாருடைய முகம் மலர்ந்தது. முதல் ஆளாக கைத்தட்டி என்னை நெருங்கி வந்து முதுகில் தட்டிக்கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வகுப்பு மாணவர்கள் அனைவருமே கைத்தட்டினர்.
சுப்பையா சாருடைய பார்வை ஒவ்வொருவர்மீதும் படிந்து படிந்து தாவியது. இரண்டாவது வரிசையில் சுவரோரமாக உட்கார்ந்திருந்த சேகரை விரல் நீட்டி எழுப்பினார். ‘இப்ப நீ சொல்லு, உனக்குப் பிடித்த தலைவர் யார்?’ என்றார்.
‘சார், எனக்கும் காந்திதான் ரொம்ப புடிக்கும்’
‘அவன்தான் அவரைப்பத்தி சொல்லிட்டானே. நீ வேற யாரைப்பற்றியாவது சொல்லு.’
‘வேணாம் சார். காந்தியைப் பத்தியே சொல்றேன் சார். எனக்கு வேற தலைவர்களைப் பத்தி தெரியாது சார்.’
அவன் கெஞ்சுவதுபோலக் கேட்டான். ‘சரி, சொல்லு’ என்று சார் உடனே ஒப்புக்கொண்டார்.
சேகர் காந்தியடிகளைப்பற்றி தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொன்னான். கூடுதலாக தன்னுடைய தாத்தா இளைஞனாக இருந்தபோது கடலூருக்கு வந்திருந்த காந்தியடிகளை மிதிவண்டியிலேயே சென்று பார்த்துவிட்டு வந்த நிகழ்ச்சியையும் சொல்லிவிட்டு, ‘எங்க தாத்தா அந்த சைக்கிளை இன்னும் வச்சிருக்காரு சார்’ என்றான். அவனையும் கைத்தட்டி பாராட்டினார் சார். தொடர்ந்து ‘ஒருநாள் உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போடா. நான் உங்க தாத்தாவை பார்க்கணும்’ என்றார். அவனும் மகிழ்ச்சியோடு தலையாட்டினான்.
‘அடுத்து யார் சொல்றீங்க?’ என்றபடி வகுப்பையே பார்த்தார் சுப்பையா சார். வகுப்பில் அமைதி நிலவியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அதனால் கடைசி வரிசையில் இருந்த ராமலிங்கத்தின் பக்கம் விரல்நீட்டினார். அவனும் “காந்தி’ என்று எதையோ சொல்லத் தொடங்கினான். சார் அவனை அக்கணமே தடுத்து ‘போதும். போதும். எல்லாருமே காந்தி பத்தி பேசினா என்னடா அர்த்தம்? மற்ற தலைவர்களைப் பத்தி சொல்லுங்க’ என்றார்.
ராமலிங்கம் தயக்கத்துடன் ‘பேர் மட்டும் சொல்லட்டுமா சார்?’ என்று கேட்டான். கண நேர அமைதிக்குப் பிறகு ‘சரி, சொல்லு. ஆனா அடுத்த வாரம் அவரைப் பற்றி தெரிஞ்சிகிட்டு வரணும். புரிதா?’ என்றார். அவன் தலையாட்டிக்கொண்டே ‘பண்டிதர் ஜவகர்லால் நேரு’ என்று சொல்லிவிட்டு அமர்ந்தான்.
அவனுக்குப் பக்கத்திலேயே ராஜகுமார் அமர்ந்திருந்தான். அவன் எழுந்து ‘சர்தார் வல்லபாய் படேல்’ என்றான். அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்தவன் ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ என்றான்.
அதுவரை அழுத்திக்கொண்டிருந்த மனத்தடை சட்டென்று வகுப்பிலிருந்து விலகிவிட்டதைப்போல இருந்தது. சுப்பையா சார் கேட்காமலேயே ஒவ்வொருவரும் தன்னிச்சையாக எழுந்து நின்று ஆர்வத்தோடு சொல்லத் தொடங்கினர்.
‘இராஜாஜி.’
‘பாபு ராஜேந்திரபிரசாத்.’
‘காமராஜர்.’
‘பெரியார்.’
‘அம்பேத்கர்.’
‘அண்ணாதுரை.’
‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை.’
மாணவர்களுடைய உற்சாகத்தைப் பார்த்துவிட்டு, ஒரு கட்டத்தில் அந்தத் தலைவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி சுப்பையா சாரே சின்னச்சின்ன கதை மாதிரி சொல்லத் தொடங்கினார். அவர்களுடைய தியாகங்களைக் கேட்கும்போதே மனம் கரைந்தது. நம் நாடு எவ்வளவு அற்புதமான நாடு என்று பெருமையாக நினைக்கவைத்தது.
மூன்று வார காலத்துக்கு எங்கள் பொது அறிவு வகுப்பு தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களால் நிறைந்து கழிந்தது. அடுத்து பாரதியார் பாடல்களில் விருப்பமான பாடல் என்று தொடங்கினார். அதைத் தொடர்ந்து பாரதிதாசன் பாடல்களுக்குச் சென்றார். பாடல் வரிசை முடிந்ததுமே விருப்பமான நகரங்கள் வரிசையைத் தொடங்கினார்.
ஒரு வகுப்பில் ஒருவரும் எதிர்பாராத விதமாக ‘உங்களுக்குப் பிடிச்ச யாராச்சும் ஒருத்தவங்கள பத்தி சொல்லுங்க’ என்றார். அப்படி பொதுவாகக் கேட்டதும் சிலர் குழப்பத்தில் மூழ்கினர். ‘பிடிச்சவங்கன்னு சொன்னா, பிடிச்ச நடிகரைச் சொல்லலாமா சார்?’ என்று ஒருவன் சந்தேகம் எழுப்பினான். ‘பிடிச்சவங்கன்னு சொன்ன பிறகு நீங்க யாரை வேணும்னாலும் சொல்லலாம்’ என்று தெளிவுபடுத்தினார் சார்.
மறுகணமே இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தவன் எழுந்து ‘எம்.ஜி.ஆர்’ என்றான். அவனைத் தொடர்ந்து அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவனும் எழுந்து ‘எம்.ஜி.ஆர்.’ என்றான். அடுத்தடுத்து ஆறேழு பேர்களுக்கு மேல் எழுந்து நின்று ‘எம்.ஜி.ஆர்.’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார்கள்.
சார் எதுவும் பேசாமல் அமைதியாக அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.
சில கணங்கள் நீடித்த அமைதியை அடுத்து, முதல் வரிசையிலிருந்து ஒருவன் எழுந்து “சிவாஜி’ என்றான். தொடர்ந்து நான்காவது வரிசையிலிருந்து ஒருவன் ‘சிவாஜி’ என்றான். அடுத்து ‘எம்.ஜி.ஆர்’, ‘சிவாஜி’ என்று குரல்கள் விட்டுவிட்டு ஒலித்தன.
அப்போது நான் மெதுவாக எழுந்து நின்றேன். நான் எம்.ஜி.ஆர்.. என்று சொல்லக்கூடும் என்று எல்லோரும் என்னை ஆவலோடு பார்த்தார்கள். ஆனால் அந்தக் குரல்களின் விசையிலிருந்து மாறுபட்டு நான் மெல்லிய குரலில் ‘எங்க அம்மாதான் எனக்கு பிடிச்சமானவர் சார்’ என்றேன்.
சுப்பையா என்னை நோக்கி வேகமாக வந்து நின்றார். அவருடைய கண்கள் என்னைக் கனிவோடு பார்த்தன. ‘ஏன் உங்க அம்மாவைப் பிடிக்கும்’ என்றார்.
‘எங்க அப்பா படிக்கத் தெரியாதவர். கடைத்தெருவுல தையல் கடை வச்சிருக்கார். நானு, தம்பி, தங்கச்சின்னு நாங்க மொத்தம் நாலு பேரு. எங்க அம்மாதான் எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க. எங்களுக்கு கதையெல்லாம் சொல்வாங்க. எனக்கு அவரை ரொம்ப புடிக்கும்.’
சுப்பையா சார் என் தோளைத் தொட்டு தட்டிக் கொடுத்தார். ‘அடுத்து யார் சொல்லப் போறீங்க’ என்பதுபோல அவர் பார்வை மற்றவர்கள் மீது திரும்பியது. என் பதில் பிற மாணவர்களின் பதில் சொல்லும் போக்கையே மாற்றிவிட்டது.
‘அப்பா.’
‘தாத்தா.’
‘பெரியப்பா.’
‘ஆயா.’
ஒவ்வொருவராக தம் குடும்பத்தில் இருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டிச் சொல்லத் தொடங்கினர்.
அப்போது திடீரென பழனி எழுந்து ‘எனக்கு பாஸ்கரனை ரொம்ப புடிக்கும் சார்’ என்றான்.
அவன் யாரோ தன் குடும்பத்தில் இருக்கும் ஒருவரைப்பற்றிச் சொல்வதாக நினைத்துக்கொண்டு சுப்பையா சார் ‘யார் அந்த பாஸ்கரன்?’ என்று கேட்டார். அவன் உடனே நான் உட்கார்ந்திருக்கும் திசையைச் சுட்டிக்காட்டி ‘என் நண்பன் பாஸ்கரன்’ என்றான். எனக்கு அதைக் கேட்டு உடல் சிலிர்த்தது.
சுப்பையா சார் அவனையும் என்னையும் மாறிமாறி ஒருமுறை பார்த்துக்கொண்டார். பிறகு மெதுவாக ‘ஏன் அவனை பிடிக்கும்?’ என்று கேட்டார். ‘அவன் ரொம்ப நல்லவன் சார். நல்லா நட்போடு எல்லோர்கிட்டயும் பழகுவான். யாருக்காவது கணக்குப் பாடத்துல சந்தேகம்னு அவன்கிட்ட கேட்டா, அழகா வாத்தியார் மாதிரியே விளக்கமா சொல்வான். நல்லா படம் வரைவான். நல்லா கதை சொல்வான்’ என்று ஒவ்வொரு வாக்கியமாக நிறுத்தி நிறுத்திச் சொன்னான். சுப்பையா சார் அவனுடைய தோளிலும் தட்டிக் கொடுத்தார். ‘இப்படித்தான் பசங்க ஒருத்தருக்கு ஒருத்தன் அன்பா நெருக்கமா பழகணும்’ என்றார்.
அன்று பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது ‘என்னடா திடீர்னு என் பெயர சொல்லிட்ட? ஒரு நிமிஷம் எனக்கு ரொம்ப கூச்சமாய்ட்டுது’ என்று சொன்னேன். ‘சொல்லணும்னு தோணிச்சி. சொன்னேன்’ என்று சாதாரணமாக பதில் சொன்னான் அவன். பிறகு ‘எம்.ஜி.ஆர்., சிவாஜின்னு சொல்ற ஆளுங்கள்லாம் நேர்லயா போய் பார்த்துட்டு வந்தாங்க? எல்லாரும் சினிமாவுல பாக்கற ஆளுங்கதான? நாமதானடா தெனந்தெனமும் நேருல பார்த்துக்கிற ஆளுங்க? அப்ப நாமதான நம்ம பத்தி சொல்லிக்கணும்’ என்று விளக்கம் கொடுத்தான்.
ஒருநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் சந்தித்து ஒன்றாகச் சேர்ந்து பள்ளிக்கூடத்துக்கு நடந்துசென்றோம். வழியில் கன்னித்தீவு படிப்பதற்காக எம்.ஜி.ஆர். மன்றத்துக்குள் நுழைந்தோம். அன்று மன்றத்தில் பத்து பதினைந்து பேர்களுக்கு மேல் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவரும் செய்தித்தாளைப் பார்க்கவில்லை. அது பெஞ்ச் மேலேயே மடிந்து கிடந்தது. நாங்கள் உடனே அதை எடுத்து கன்னித்தீவைப் படித்துமுடித்தோம். புறப்படும் சமயத்தில் அவர்கள் உரையாடலில் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். என்று பெயர் அடிபடுவதைக் கேட்டுவிட்டு ஒருகணம் நின்று காதுகொடுத்துக் கேட்டோம். எம்.ஜி.ஆர். வளவனூருக்கு வரப்போகிறார் என்னும் செய்தி மட்டும் அரைகுறையாகப் புரிந்தது. அதற்கு மேல் ஆவலைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அந்த அண்ணகளிடமே கேட்டோம்.
‘பாண்டிச்சேரியில கட்சிக்காரங்க வீட்டு கல்யாணத்துல கலந்துக்கறதுக்காக எம்.ஜி.ஆர். மெட்ராஸ்லேர்ந்து வராரு. செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம்னு பல இடங்கள்ல கட்சிக்கூட்டம் வச்சிருக்காங்க. நம்ம வளவனூருலயும் ஒரு கூட்டம்ன்னு கணக்குல சேர்த்தாச்சி. நம்ம தலைவர் நேருல பார்த்து சொல்லிட்டு வந்துட்டாரு.’
எங்களுக்கு அவரை நம்புவதா, வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. ‘எம்.ஜி.ஆர். உண்மையாவே நம்ம ஊருக்கு வராறாண்ணே?’ என்று கேட்டேன்.
‘வருவார். சிரிப்பார். கையை அசைப்பார். பேசுவார். போதுமா? அதோ பாரு, தட்டி எழுத ஏற்பாடு நடக்குது.’
அவர் சுட்டிக் காட்டிய திசையைப் பார்த்தேன். ஆளுயரத் தட்டியின் மீது ஒருபக்கம் வெள்ளையான விளம்பரத் தாட்களை ஒட்டிக்கொண்டிருந்தனர்.
‘எந்த இடத்துலண்ணே கூட்டம்?’
‘நம்ம சத்திரத்துக்குப் பக்கத்துல. திரெளபதை அம்மன் கோவில் திடல்ல.’
‘என்னைக்குண்ணே?’
‘இன்னும் பத்து நாள்தான் தம்பி. வர ஞாயித்துக்கெழம இல்லாத அடுத்த ஞாயித்துக்கெழமை.’
எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக நாங்கள் கண்ட கனவு இவ்வளவு விரைவில் நிறைவேறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எங்கள் நெஞ்சில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நாங்கள் வேகமாகப் பள்ளிக்குச் சென்று முடிந்தவரை செய்தியை வேகவேகமாகப் பரப்பினோம். நாங்கள் மாலையில் பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பும் நேரத்தில் ஊருக்குள் பல இடங்களில் உயரமான பெரிய தட்டிகள் நிற்கவைக்கப்பட்டிருந்தன. சின்னச்சின்ன விளம்பரத்தட்டிகள் தந்திக்கம்பங்களிலும் விளக்குக்கம்பங்களிலும் எட்டாத உயரத்தில் கட்டப்பட்டு தொங்கின. எம்.ஜி.ஆர். என்னும் எழுத்துகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதல் பாதி கருவண்ணத்திலும் மறு பாதி சிவப்பு வண்ணத்திலுமாக எழுதப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் வெவ்வேறு அளவுகளில் எம்.ஜி.ஆர். படம்.
பத்து நாட்கள் என்று தெளிவாகத் தெரிந்தபிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டு கழிவதுபோல இருந்தது. பொழுதே மெதுவாகப் பிறந்து, மெதுவாக நகர்ந்து, மெதுவாக மறைவதுபோல இருந்தது.
திரெளபதை அம்மன் கோவில் திடலைச் சரிப்படுத்தும் வேலை அடுத்த நாளிலிருந்தே தொடங்கியது. நாங்கள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது அந்த வழியாக வந்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துக்கொண்டோம்.
ஒருநாள் புல்லையெல்லாம் செதுக்கி சுத்தமாக்கினார்கள். அடுத்த நாள் மாட்டு வண்டியில் மண்ணைக் கொண்டுவந்து கொட்டி திடல் முழுதும் நிரப்பி அழகாக்கினார்கள். பிறகு கம்பங்கள் எழுந்தன. தோரணங்கள் தொங்கின. யாரோ ஒருவர் தெருவோரத்தில் நின்று எம்.ஜி.ஆர். படம் ஒட்டப்பட்ட சின்னச்சின்ன நோட்டீஸ்களை வழியில் போகிறவர்களுக்கெல்லாம் கொடுத்தபடி இருந்தார். வண்ணத்தட்டிகள் வந்தன.
இன்னும் நான்கு நாட்களே உள்ளன என்ற நிலையில் ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்பி திடல் பக்கமாக ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது என்னால் நடக்கவே முடியவில்லை. உடலே பாரமானதுபோல இருந்தது. கண்களில் நெருப்பு பட்டதுபோல எரிந்தது.
வீட்டுக்கு வந்ததும் புத்தகப்பையை சுவரோரமாக வைத்துவிட்டு அப்படியே சுருண்டு படுத்துவிட்டேன். நெடுநேரம் கழித்து தண்ணீர்க்குடத்துடன் வீட்டுக்கு வந்த அம்மா ‘எப்படா வந்த? பொழுது சாயற நேரத்துல ஏன் படுத்துட்டிருக்கே? என்ன செய்யுது?’ என்று கேட்டுக்கொண்டே பின்கட்டுக்குச் சென்று தண்ணீரை ஊற்றிவிட்டுத் திரும்பினார். பதில் சொல்ல எனக்குத் தெம்பில்லை. அம்மா அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் குடத்துடன் வெளியே சென்றுவிட்டார். தண்ணீர் எடுக்கிற வேலை முடிந்த பிறகுதான் எனக்குப் பக்கத்தில் வந்தார். ‘என்னாச்சிடா? என்ன இந்த நேரத்துல தூக்கம்? எழுந்து மூஞ்சிய கழுவு. போ’ என்று சொல்லிக்கொண்டே என்னைத் தொட்டுப் பார்த்தார். அடுத்த கணமே உடல்சூட்டை உணர்ந்தவராக ‘என்னாச்சிடா? ஏன் உடம்பு இப்படி கொதிக்குது?’ என்றார். பேசுவதற்கு எனக்கு தெம்பே இல்லை. “தெரியலைம்மா, சாயங்காலத்துலேர்ந்து இப்படித்தான் இருக்குது’ என்றேன்.
‘சரி, எழுந்து துணிய மாத்து. நான் அந்த நர்ஸம்மா வீடு வரைக்கும் போய் ஏதாவது மாத்திரை வாங்கிட்டு வரேன்.’
அம்மா அவசரமாக வெளியே சென்றார். நான் புத்தகப்பையை ஓரமாக வைத்துவிட்டு துணிமாற்றிக்கொண்டு வந்து மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டேன். தம்பிகளும் தங்கையும் சுற்றி வந்து நின்றுகொண்டனர். ‘என்னண்ணே செய்யுது?’ என்றாள் தங்கை. ‘காய்ச்சல்’ என்றேன். உதடுகள் உலர்ந்துவிட்டன. நாக்கை நீட்டி எச்சிலால் ஈரப்படுத்திக்கொண்டேன்.
‘அப்ப, உனக்கு இன்னைக்கு கஞ்சிதான் சாப்பாடு.’
‘இல்லை. இல்லை. ரொட்டிதான் கொடுப்பாங்க.’
‘ஆ, ரொட்டியா?’
‘அண்ணே, அப்பா ரொட்டி வாங்கிவந்து கொடுத்தா, எனக்கும் கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கறியா? ரொட்டி சாப்பிட ஆசையா இருக்குது.’
நான் “ம்’ என்று தலையசைத்தேன். உடனே தம்பிகளும் ‘எனக்கும் கூட கொஞ்சம் கொடுண்ணே. மறக்காதண்ணே’ என்று நெருங்கினார்கள். நான் எல்லோருக்கும் சரி என்றேன்.
அம்மா ஒரு பொட்டலத்தில் மாத்திரைகள் வாங்கி வந்து மாடத்தில் வைத்தார். மீண்டும் என் நெற்றியில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தார். ‘சாப்ட்ட பிறகுதான் மாத்திரையை போட்டுக்கணுமாம். கொஞ்ச நேரம் அப்படியே சாஞ்சிப் படு. தோ, ஒரு மணி நேரத்துல சோறு வடிச்சிடுவேன்’ என்று சொல்லிவிட்டு அடுப்பங்கரைக்குச் சென்றார்.
இரவு உணவுக்குப் பிறகு மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டேன். கொஞ்சம் கூட தூக்கம் வரவில்லை. அம்மா அம்மா என்று பிதற்றிக்கொண்டே படுத்திருந்தேன். விடிந்தபிறகு கூட காய்ச்சல் குறையவில்லை.
‘பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேணாம். பத்து மணிக்கு மேல டாக்டர்கிட்ட அழச்சிட்டு போறேன்’ என்று சொன்னார் அப்பா. தம்பிகளையும் தங்கையையும் பள்ளிக்கு அனுப்பும் வேலைகளில் மூழ்கியிருந்தார் அம்மா.
வழக்கமாக நான் பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் சுந்தரமும் குமரவேலும் வந்து வாசலில் நின்று பெயர் சொல்லி அழைத்தார்கள். அம்மா வெளியே சென்று அவர்களுக்கு தகவல் சொன்னார். அவர்கள் உடனே உள்ளே வந்து என்னைப் பார்த்தனர். அவர்களிடம் பேசுவதற்கு எனக்குத் தெம்பே இல்லை. கண்களைக்கூட திறக்கமுடியவில்லை. மூடிக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது.
அதே நேரத்தில் மனோகரன், சுப்பிரமணி, கஜேந்திரன், பரசுராமன், பழனி எல்லோரும் வந்துவிட்டனர். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.
ஒருபக்கம் பள்ளிக்குச் செல்லமுடியவில்லையே என்கிற ஏக்கம். இன்னொரு பக்கத்தில் என் மனம் கவர்ந்த எம்.ஜி.ஆர். ஊருக்கு வரும் நேரத்தில் இப்படிப் படுத்துக் கிடக்கும்படியான சூழல் வந்துவிட்டதே என்கிற துக்கம்.
காலையில் அம்மா நொய்க்கஞ்சி வைத்துக் கொடுத்தார். அதைப் பருகிய பிறகு அப்பா மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் சோதித்துப் பார்த்துவிட்டு ஊசி போட்டு மருந்து கொடுத்து அனுப்பினார். வீட்டுக்குத் திரும்பியதும் நான் மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டேன்.
அன்று முழுதும் மாத்திரை, மருந்து என கொடுப்பதையெல்லாம் விழுங்கிக்கொண்டிருந்தேன். காய்ச்சல் கொஞ்சம் கூட குறையவில்லை. அப்படியே இருந்தது.
மறுநாள் வீட்டுக்கு வந்த தயிர்க்கார அம்மாவிடம் என் விஷயத்தைச் சொல்லி வருத்தப்பட்டார். ‘மருந்து சாப்ட்டும் காய்ச்சல் கொறையலைன்னா…… அது என்ன காய்ச்சல்? எங்க இருக்கான் தம்பி?’ என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார். அவர் குரலை மட்டுமே என்னால் கேட்கமுடிந்தது. கண்களைத் திறக்கமுடியவில்லை.
சுருண்டு படுத்திருந்த என்னைத் தொட்டுப் பார்த்தார் தயிர்க்கார அம்மா. பிறகு முகத்தைத் திருப்பிப் பார்த்தார். ‘இங்க என்ன கழுத்துல? கொப்புளம் மாதிரி இருக்குது?’ என்று அம்மாவிடம் கேட்டார். பிறகு என்னிடம் ‘தம்பி, எழுந்து ஒரு நிமிஷம் சட்டையைக் கழட்டு’ என்றார். நான் எந்திரம்போல அவர் சொன்னதைச் செய்தேன். என் முதுகை நன்றாக ஆராய்ந்து பார்த்துவிட்டு ‘ஐயோ, மாரியாத்தா தாயே, இப்படி ஒரு சோதனையா?’ என்று பெருமூச்சு விட்டபடி அம்மாவைப் பார்த்தார்.
‘என்னக்கா சொல்றீங்க? ஒன்னும் புரியலையே’
‘புள்ளைக்கு மாரியாத்தா வந்திருக்குது. முதுவுல, கழுத்துல எல்லாம் இப்படி இருக்குதே, நீ பார்க்கலையா?’
அம்மா அப்போதுதான் திகைப்போடு என் உடலைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் இடிந்துபோய் சுவரோடு சரிந்து உட்கார்ந்தார்.
‘கவலைப்படாத. எல்லாம் சரியாய்டும். போய் ஆத்தாள நெனச்சிகிட்டு மஞ்சத்துணியில ஒரு ரூபா முடிஞ்சி வை. அப்புறம் வேப்பிலையை பறிச்சி வந்து படுக்கிற இடத்துல பரப்பி வை. இதெல்லாம் மருந்து மாத்திரைக்கு அடங்காது. ஆகாரம்லாம் ஒன்னும் வேணாம். வெறும் இளநீர், மோர் போதும். எப்ப கேட்டாலும் அது மட்டும் கொடு. ரெண்டு மூனு நாள்ல தானா எறங்கிடும். அதுக்கப்புறம் தலைக்கு தண்ணி விட்டா போதும்.’
அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டதும் நண்பர்கள் எல்லோரும் கூட்டமாக வீட்டுக்கு வந்தார்கள். வீட்டு வாசலில் வேப்பிலைக்கொத்து செருகியிருப்பதைப் பார்த்துவிட்டு திகைத்து அம்மாவிடம் விசாரித்தார்கள். அனைவரும் வாசலில் நின்றபடி சத்தமான குரலில் பள்ளிக்கூட விவரங்களைச் சொன்னார்கள்.
அடுத்தநாள் சனிக்கிழமை. விடுமுறை என்பதால் காலையிலேயே எல்லோரும் வந்துவிட்டனர். அவர்களைப் பார்த்த பிறகுதான் எனக்குச் சற்றே உற்சாகமாக இருந்தது. நான் கதவுக்கு உட்பக்கமாக சுவரில் சாய்ந்திருந்தேன். அவர்கள் கதவுக்கு வெளியே வட்டம் கட்டி உட்கார்ந்திருந்தனர். அம்மா ஒன்றும் சொல்லவில்லை.
‘நம்ம ஊரத் தேடி எம்.ஜி.ஆர். வர நேரத்துல உனக்கு இப்படி ஆகும்னு நெனச்சிக் கூட பார்க்கலைடா. பாவம். இனிமே நாம அவர எப்ப பார்க்க போறோமோ?’
எனக்கும் உள்ளூர வருத்தம் இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ‘என்னால பாக்கமுடியலைன்னா என்னடா? நீங்க போய் பார்த்துட்டு வந்து சினிமாக்கதை மாதிரி சொல்லுங்க’ என்றேன்.
தொடர்ந்து இளநீர் பருகிக்கொண்டே இருந்ததால் உடல்வெப்பம் பெருமளவில் குறைந்திருந்தது. சற்றே உற்சாகமாகப் பேசுவதற்கு அது வசதியாக இருந்தது. அன்று சாயங்காலம் வரைக்கும் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். பிறகுதான் புறப்பட்டுச் சென்றனர்.
அடுத்தநாள் ஞாயிறு. காய்ச்சல் இல்லை. அம்மாவிடம் ‘குளிக்கட்டுமா?’ என்று கேட்டேன். அம்மா முதுகைப் பார்த்துவிட்டு “இன்னும் கொஞ்சம் காயணும் தம்பி. அவசரப் படாதடா. இன்னும் ரெண்டு மூனு நாள் போவட்டும்’ என்றார்.
‘அப்ப ஸ்கூல்?’
‘பரவாயில்லை. லீவுன்னு பசங்ககிட்ட சொல்லியனுப்பு.’
வழக்கமாக பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் நண்பர்கள் அனைவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர். திரெளபதை அம்மன் திடலில் ஸ்பீக்கர் கட்டு ஒலிபரப்பிய பாடல்கள் வீடு வரை கேட்டன. நாங்கள் எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல். அச்சம் என்பது மடமையடா. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். ஒருதாய் மக்கள் நாமென்போம். தாயில்லாமல் நால் இல்லை. தூங்காதே தம்பி தூங்காதே. ஒவ்வொரு பாட்டையும் கேட்கக்கேட்க எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கிடையிலும் ஒரு குரல் ஒலித்தது.
‘இன்று மாலை நான்கு மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்க வருக வருக என்று வரவேற்கிறோம்.’
‘இன்னும் ஒரு வாரம் கழிச்சி வந்தா நல்லா இருந்திருக்கும். எனக்குத்தான் கொடுத்து வைக்கலை. த்ச். நீங்களாவது போய் பார்த்துட்டு வாங்கடா.’
சொல்லக்கூடாது என்று நினைத்தாலும் என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
‘பார்த்தா நாம எல்லோரும் ஒன்னா பாக்கணும். இல்லைன்னா பாக்கவே கூடாது. அதான் எங்க முடிவு’ என்றான் மனோகரன்.
எனக்கு அதைக் கேட்டதும் திகைப்பாக இருந்தது. உடனே கையை உயர்த்தி அசைத்து ‘அப்படியெல்லாம் செய்யாதீங்கடா. இது பொன்னான வாய்ப்பு. பேசாம போய் பாருங்க’ என்றேன். ‘சரி சரி. நீ அமைதியா உக்காந்து நாங்க சொல்றத காது கொடுத்து கேள். அது போதும்’ என்றான் குமரவேல். அப்போது ‘நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’ ஒலித்தது.
மதிய உணவு நேரம். அம்மா எனக்காக ஒரு இளநீரை உடைத்து செம்பில் நிறைத்துக் கொண்டுவந்து கொடுத்தார். ‘கஞ்சி இருக்குது. பொட்டுக்கடலை சட்டினி இருக்குது. ஆளுக்கு ஒரு வாய் குடிக்கிறீங்களாடா? ‘ என்று நண்பர்களிடம் கேட்டார். ‘வேணாம்மா. வீட்டுக்கு போய்ட்டு சாயங்காலமா வரோம்மா’ என்று ஒவ்வொருவராக எழுந்து சென்றார்கள்.
என்னை அறியாமல் எப்படியோ தூங்கி விழித்தபோது நேரம் என்ன என்று கூட தெரியவில்லை. பொழுது சற்றே சாய்ந்திருந்தது. கதவுக்கு வெளியே பழனி மட்டும் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். நான் கண்களைக் கசக்கியபடியே அவசரமாக ‘எப்படா வந்த? எழுப்பியிருக்கலாமே’ என்றேன். ‘அசந்து தூங்கிட்டிருந்தே. எழுப்ப மனசு வரலை. அதான் இப்படியே உக்காந்து படிக்க ஆரம்பிச்சேன்’ என்றான் பழனி.
‘மத்தவனுங்க எங்க?’
‘தெரியலையே. வரேன்னுதான் சொன்னாங்க. ஒருத்தனயும் காணோம்’
‘ஒரு நிமிஷம்’ என்றபடி பின்கட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்தேன்.
‘சத்திரத்துல கூட்டம் எப்படி இருக்குது?’
‘எம்.ஜி.ஆர. பாக்க வர கூட்டத்த பத்தி சொல்ல என்ன இருக்குது? எள்ளு போட்டா எள்ளு விழ இடமில்லை. நூறு பேரு நிக்கக்கூடிய இடத்துல ஆயிரம் பேரு நிக்கறாங்க. அக்கம்பக்கம் பட்டிதொட்டியிலேர்ந்துலாம் ஜனங்க வந்து ஜேஜேன்னு நிக்குது. போலீசே ஒரு நூறு போலீஸ்காரங்க நிக்கறாங்க.’
அறிவிப்பும் பாடல்களும் மாறிமாறி ஒலித்தபடி இருந்தன. ஒரு மாதத்துக்கு முன்பு வளவனூர் டாக்கீஸில் குடியிருந்த கோயில் படத்தைத் திரையிட்டிருந்தனர். அந்தப் படத்துக்குப் பிறகு நாங்கள் வேறெந்தப் படத்தையும் பார்க்கவில்லை. எங்கள் பேச்சு அந்தப் படத்தை முன்வைத்து தொடங்கியதும், உற்சாகமாக அதைப்பற்றிப் பேசினோம். பொழுது போனதே தெரியவில்லை.
ஆறு மணி இருக்கும். திடல் இருக்கும் திசையில் பாட்டுச்சத்தமும் பேச்சுச்சத்தமும் சட்டென்று நின்று ’மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வாழ்க’ என்னும் வாழ்த்தொலி முழக்கம் எழுந்தது. ஒவ்வொரு சொல்லும் பக்கத்திலிருந்து சொல்வதுபோல கேட்டது. எம்.ஜி.ஆர். வந்துவிட்டார் என்பதை உணர்ந்துகொண்டேன்.
நான் அவசரமாக பழனியைப் பார்த்தேன். ‘பழனி, நான் சொல்றத கேளு. எழுந்து ஓட்டமா ஓடிப் போய் அவர பர்த்துட்டு வாடா’ என்றேன். ‘அதெல்லாம் ஒன்னும் வேணாம். இங்கயே மைக் சத்தம் நல்லா கேக்குது. எம்.ஜி.ஆர். பேச்ச ரெண்டு பேரும் இங்கேர்ந்தே கேக்கலாம்’ என்று அதட்டி என்னைப் பேசவிடாமல் தடுத்தான் பழனி. அடுத்து சில நிமிடங்களில் எம்.ஜி.ஆரின் வெண்கலக்குரல் ஒலிக்கத் தொடங்கியது.
0
சிறப்பு. பள்ளிப் பருவத்தில் எம்ஜிஆர் ஐ பார்த்தது, அவரது கட்சிக் கூட்டங்களுக்கு சென்று வந்தது, தேர்தல் பொதுக்கூட்டங்களில் நண்பர்களுடன் கலந்து கொண்டது அனைத்தும் நிழலாடுகிறது. எளிமையான நடை. அண்ணா, கலைஞரின் சிறப்புக் கூட்டங்களுக்கு(கட்டணம் கொடுத்து சொற்பொழிவைக் கேட்பது. 50 காசுகள் அல்லது ஒரு ருபாய் தான் கட்டணம். அவை நிறைந்த பிறகு, வெளியிலிருந்து சொற்பொழிவைக் கேட்பது கட்டணமின்றி). எங்கள் பள்ளிக்கு (உமாமகேசுவர உயர்நிலைப்பள்ளி, கரந்தை, தஞ்சாவூர்) நாவலர் நெடுஞ்செழியன் சொற்பொழிவாற்ற வந்துள்ளார். அறுபதாண்டுகள் பின்னோக்கிச் செல்லுதல் சிறந்த ஓர் அனுபவம் தான். பகிர்ந்து கொள்ளத்தன் நண்பர்களை இழந்து நிற்றல் வேதனை தான்.