சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம் தேவையில்லை. பாடல்வரிகளை தப்பில்லாமல் பாடினால் போதும். நாலைந்து முறை அடுத்தடுத்து கேட்டால், எல்லாப் பாட்டும் மனப்பாடமாகிவிடும். வரிகளை மறந்துபோனால்கூடப் பரவாயில்லை. ராகத்தின் போக்கை மட்டும் அடிப்படையாகக்கொண்டு இழுத்து இழுத்து சமாளித்துவிடலாம்.
சின்னதாகவோ பெரியதாகவோ, எல்லோருடைய வீடுகளிலும் ரேடியோ இருந்த காலம் அது. திரைகானம், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, இலங்கை ஒலிபரப்பு வர்த்தக சேவையின் பாடல்களுடன் கூடிய நிகழ்ச்சிகள் எதையும் விட்டுவைக்கமாட்டோம். எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கேட்போம். எல்லாமே எங்கள் செவிக்குரிய விருந்து.
ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக கிடைக்கும் சின்னஞ்சிறு இடைவெளிக்காக ஒவ்வொரு நாளும் காத்திருப்போம். முதல்நாள் ரேடியோவில் கேட்ட பாடல் வரிகள் ஒவ்வொன்றும் எங்கள் நெஞ்சை முட்டிக்கொண்டிருக்கும். இடைவெளி கிடைத்ததுமே அந்தப் பாடல் வரிகளையும் பாடகரின் திறமையையும் குறித்துப் பேசத் தொடங்கிவிடுவோம். ஒவ்வொரு பாட்டையும் பாராட்டி ஆராய்ச்சி செய்வதுதான் எங்களுடைய மிகமுக்கியமான பொழுதுபோக்கு. பாடலின் வரிகள், பாடகரின் பெயர், படத்தின் பெயர், கவிஞரின் பெயர் எல்லாவற்றையும் சிலர் விரல்நுனியில் தெரிந்துவைத்திருப்பார்கள். அந்த விவரங்களைச் சொல்லும்போது அவர்கள் முகங்களில் ஒரு மிடுக்கு நிறைந்திருக்கும்.
எங்கள் நட்புவட்டத்தில் மனோகரனே மிகப்பெரிய பாடகன். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அப்படியே துல்லியமாக பிசிறில்லாமல் பாடும் ஆற்றல் கொண்டவன். ’பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ பாட்டை அவன் பாடினால், அந்த வழியாக எதிர்பாராமல் நடந்துசெல்பவர்கள் கூட ஒருகணம் நின்று பாட்டை முழுமையாகக் கேட்டுவிட்டுத்தான் செல்வார்கள். அவன் பாடல் எங்கள் சுப்பையா சாருக்கு மிகவும் பிடிக்கும். பழனிக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் நன்றாகப் பாடவரும். எனக்கு டி.எம்.எஸ்.சின் குரலில் பாடுவதற்குப் பிடிக்கும். ஆனால், அவரைப்போல கணீரென்ற குரலும் மிகவேகமாக உச்ச ஸ்தாயிக்குத் தாவிச் செல்லும் லாவகமும் எனக்குக் கிடையவே கிடையாது. சட்டென்று கீச்சுக்குரலாக மாறிவிடும். அந்த மாற்றம் என் கட்டுப்பாட்டிலேயே இருக்காது. தொடக்கத்தில் அதைச் சரிப்படுத்திக்கொள்ள நிறைய முயற்சிகள் செய்தேன். ஒரு கட்டத்தில் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது புரிந்துவிட்டது. அதனால் அந்த முயற்சியை கைவிட்டு வந்தவரைக்கும் பாடுவோம் என்கிற மனநிலையை அடைந்துவிட்டேன். பாடும் பாடல்களின் வரிகளில் தடுமாற்றமோ பிழையோ ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன்.
குறிப்பிட்ட பாடவேளையில் பாடம் நடத்துகிற ஆசிரியர் பாடத்தை விரைவாக முடித்துவிடும் சமயங்களில் எஞ்சியிருக்கும் நேரத்தில் ‘யாராவது ஒரு பாட்டு பாடுங்கடா’ என்று சொல்வார். நாங்கள் அப்படிப்பட்ட வாய்ப்புக்காகவே காத்திருப்போம். உடனே எல்லோரும் திரும்பி மனோகரனின் முகத்தைப் பார்ப்பார்கள். ஆசிரியர் உடனே ஒன்றும் புரியாமல் ‘எதுக்குடா எல்லாரும் அவனைப் பார்க்கறீங்க?’ என்று கேட்பார். எல்லா மாணவர்களும் ஒரே குரலில் ‘அவன் ரொம்ப நல்லா பாடுவான் சார்’ என்று சொல்வார்கள். உடனே அவன் ஒரு பாட்டைத் தொடங்கிவிடுவான். அவனையடுத்து ஒவ்வொருவராகப் பாடுவார்கள். நானும் பாடுவேன்.
பாடுவதற்கு எனக்கு மிகவும் பிடித்தமான இடம் குளியலறை. அதை அறை என்று சொல்லமுடியாது. நான்கு புறங்களிலும் ஆளுயரத்துக்கு கீற்றுகளையும் மூங்கில்கழிகளையும் நிறுத்தி உருவாக்கப்பட்ட ஒரு சின்ன சதுரம். ஒரு மூலையில் தொட்டி. அதற்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டே துணிதுவைக்க ஏற்பாடு செய்யப்பட்ட கல்மேடை. இரண்டுக்கும் நடுவில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பூசிய இடத்தில் நின்றுகொண்டுதான் குளிக்கவேண்டும். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் அதற்காகவே வெட்டப்பட்ட சின்ன கால்வாய் வழியாக வளைந்துவளைந்து சென்று வேலியோரமாக நின்றிருக்கும் வாழைமரத்துக்கும் கனகாம்பரச் செடிகளுக்கும் பாயும். நீல வானமும் பறக்கும் பறவைகளும் அசையும் மரக்கிளைகளும் அங்கிருந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வகுப்பறையைப்போலவே குளியலறையும் ஓர் உற்சாகமான இடம்.
அடுத்தடுத்து நான்கு செம்பு தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டதுமே ஒரு குளுமையும் உற்சாகமும் உடலெங்கும் பரவியெழும். அதற்கு ஈடு இணையே இல்லை. அத்தருணத்தில் நெஞ்சிலிருந்து பாட்டு பீறிட்டுக் கிளம்பும். ‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ’ பாட்டையோ ‘அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்’ பாடலையோ பாடத் தொடங்கிவிடுவேன். பாடப்பாட என் உற்சாகம் இரண்டு மடங்காகிவிடும். பாடல்கள் அந்த அளவோடு நிற்காது. என் கட்டுப்பாட்டை மீறி போய்க்கொண்டே இருக்கும். அப்போது அசரீரி போல ’தொட்டித்தண்ணி எல்லாத்தயும் காலி பண்ணி வச்சிடாதடா. சாயங்காமல் வரைக்கும் எல்லாருக்கும் வேணும்’ என்று ஓங்கியெழும் அம்மாவின் குரல் எழும். எல்லாம் ஒரே நொடியில் அடங்கிவிடும்.
ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது வழக்கம்போல ஏதோ ஒரு பாட்டைப் பாடிக்கொண்டே வந்தேன். வேலிப்படலைத் தாண்டி, கதவைத் தாண்டி உள்ளே வந்து பையை இறக்கிவைக்கும்போதுதான் கூடத்தில் சுவரோரமாக அம்மாவுக்கு அருகில் இன்னொருவர் உட்கார்ந்து பேசுவதைக் கவனித்தேன். உடனே பாடுவதை நிறுத்திவிட்டு அமைதிப்புறாவைப்போல நடந்தேன். புத்தகப்பையை தோளிலிருந்து வேகமாக விலக்கி சுவரில் அதற்கெனவே அடிக்கப்பட்டிருந்த ஆணியில் தலைகுனிந்தபடி மாட்டினேன்.
ஒருமுறை திரும்பி அவரை மறுபடியும் பார்த்தேன். பார்த்ததுமே அவருடைய முகம் நினைவுக்கு வந்துவிட்டது. வண்டிக்கார சித்தப்பாவின் மனைவி. பத்து நாட்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி அவர்களுடைய வீடு இருந்தது. அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வீட்டில் நான்கு வால்வு கொண்ட பெரிய ரேடியோ உண்டு. பாட்டு கேட்டபடி உரலில் நெல் குத்திக்கொண்டோ அல்லது கல் எந்திரத்தில் மாவு அரைத்துக்கொண்டோ இருப்பார்..
‘இவன்தான்மா பெரியவன். ஐஸ்கூல்ல படிக்கிறான்’ என்று அம்மா என்னைப்பற்றி அவரிடம் சொன்னார்.
‘இங்க வா. என்ன படிக்கிற நீ?’ என்று அவர் உடனே என்னை அழைத்தார். நான் வெட்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அழகான முகம். பார்ப்பதற்கு டீச்சர் போல இருந்தார்.
‘உன்னத்தான கேக்கறா. வெக்கப்படாம பேசுடா. உனக்கு சித்தி முறை. வண்டிக்கார சித்தப்பா வீடுடா, தெரியலை?’ என்று அம்மா என்னைத் தூண்டினார். நான் மெதுவாக பார்வையை உயர்த்தி ‘தெரியும்’ என்பதற்கு அடையாளமாக தலையை அசைத்தேன். பிறகு அமைதியாக ஏழு என்பதற்கு அடையாளமாக ஏழு விரல்களைக் காட்டினேன்.
உடனே என்னை அம்மா செல்லமாக அதட்டினார். ‘ஐய, ஆளப் பாரு. மத்த நேரத்துல புதுமோளம் மாதிரி தொணதொணன்னு பேசுவ, இப்ப என்ன ஆச்சி? வாய்ல என்ன முத்தா வச்சிருக்க? வாயைத் திறந்து பதில் சொல்லுடா’. நான் உடனே தொண்டையைச் செருமியபடி ‘ஏழாவது’ என்றேன்.
‘ஒரு வார்த்தை பதில் சொல்ல தம்பிக்கு இத்தனை நேரமா? பாட்டு மட்டும்தான் சத்தமா வேகமா பாடுவியா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் அந்தச் சித்தி.
அதைக் கேட்டு ஒருகணம் நான் திகைத்து நின்றுவிட்டேன். இவர் எப்படி நான் பாடியதைக் கேட்டார் என்று குழப்பமாக இருந்தது. ஒருவேளை என்னைப்பற்றி முழு தகவலையும் அம்மா அவரிடம் கொட்டியிருப்பாரோ என்று சந்தேகம் வந்தது. அந்தச் சங்கடத்தோடும் வெட்கத்தோடும் நான் அம்மாவின் பக்கம் திரும்பினேன்.
‘என்னைப் பார்த்து எதுக்குடா மொறைக்குற தம்பி? நான் எதயும் சொல்லலை. நீதான் ஒவ்வொரு நாளும் குளிக்கிற சமயத்துல ஊருக்கே கேக்கற மாதிரி கச்சேரி வைக்கறியே. அது ஒன்னு போதாதா? இங்க வந்து பத்து நாளுக்குள்ள உன்ன பத்தி முழுசா தெரிஞ்சிகிச்சாம். தெனமும் உன் பாட்டக் கேக்குதாம். இன்னைக்கு நேருலயே பார்த்து கேக்கணும்னுதான் ஆளு ஊட்டத் தேடி வந்திருக்குது’ என்று அம்மா சிரித்தார். எனக்கு வெட்கமாக இருந்தது. ‘போம்மா’ என்று தலையைச் சிடுக்கென திருப்பி அழகு காட்டி தோட்டத்துப் பக்கமாகச் செல்லத் தொடங்கினேன். ‘இரு, இரு தம்பி. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்’ என்று என் கையைப் பற்றினார் சித்தி.
‘என்ன பார்க்கிற? தெனமும் டி.எம்.எஸ். பாட்டா வெளுத்து வாங்கற? உனக்கு அவர புடிக்குமா?’
அவர் படிப்பைப்பற்றி எதுவும் கேட்காமல் டி.எம்.எஸ். பற்றிக் கேட்டதும் அக்கணமே அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘ஆமாம்’ என்று மகிழ்ச்சியாக பதில் சொன்னேன். அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் சட்டென மறைந்துவிட பேசவேண்டும் என்கிற எண்ணம் உருவாகிவிட்டது.
‘வேற யார் பாடினா பிடிக்கும்?’
‘சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன் பாட்டுங்க எல்லாமே பிடிக்கும். ஆனா டி.எம்.எஸ். பாட்டுதான் ரொம்ப ரொம்ப புடிக்கும்.’
‘காலையில ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணில் தெரிகிறதுன்னு ஒரு பாட்டு பாடினியே? அது எந்தப் படத்துல வருது, தெரியுமா?’
‘பச்சைவிளக்கு.’
‘படம் பார்த்தியா? எங்க பார்த்த?’
‘எங்க ஊருலதான். சரவணன் டாக்கீஸ்ல. நானும் அம்மாவும் பார்த்தோம்.’
‘ஓ. எனக்கும் அந்தப் பாட்டு ரொம்ப புடிக்கும். அது சிவாஜி படமாச்சே? உனக்கு புடிக்குமா?’
‘நான் எல்லாப் படங்களையும் பார்ப்பேன். எல்லாமே எனக்குப் புடிக்கும்.’
‘அப்பாடி, உன் மனசு ரொம்ப தாராளம்டா. எல்லாம் சரி, என்னைப் புடிக்குமா?’
சித்தி வாய்விட்டுச் சிரித்தாள். அப்போது அவள் மிகுந்த அழகுடன் இருப்பதுபோல இருந்தது. சித்தியோடு உரையாடுவது எனக்கு கொஞ்சம்கொஞ்சமாகப் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அவர் தொடர்ந்து கேள்வி கேட்டபடி இருக்கவேண்டும் என்று தோன்றியது.
சித்தி என் கையைப் பிடித்து ‘இங்க வா’ என தன்னை நோக்கி இழுத்தார். ஆச்சரியத்தோடு ‘என்ன உன் கை இப்படி முருங்கைக்காய் மாதிரி மெலுசா இருக்குது?’ சரியா சாப்டறதில்லையா?’ என்று கேட்டார்.
நான் வெட்கத்துடன் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தபடி நின்றேன். ‘அதெல்லாம் வேளாவேளைக்கு சரியா சாப்படறான். சரியா உடம்புல ஒட்டமாட்டுது. அததுக்கும் ஒரு நேரம் வரணுமில்ல?’ என்று எனக்குப் பதிலாக அம்மா பதில் சொன்னார்.
கைரேகை சாஸ்திரம் பார்ப்பவரைப்போல சித்தி என் கையைப் பிரித்து உள்ளங்கையில் அழுத்தினார். வலது கை, இடது கை என இரு கைகளையும் பிரித்து உள்ளங்கைகளை மாறிமாறி அழுத்தினார். பஞ்சு மாதிரி அழுந்தியது. பிறகு திரும்பி ‘அக்கா, உன் மகன் பெரிய ஆபீஸராத்தான் வேலைக்கி போவான்’ என்றார்.
‘என்னம்மா சொல்ற நீ? உனக்கு கைரேகை சாஸ்திரம் கூட தெரியுமா?’ என்று கேட்டார் அம்மா.
‘ஐய, அதெல்லாம் ஒன்னும் தெரியாதுக்கா. உடலுழைப்புதான் வாழ்க்கைன்னு இருக்கிறவங்க கை ரொம்ப உறுதியா இரும்பு மாதிரி இருக்கும். எங்க ஊட்டுக்காரு கை அப்படித்தான் காப்புகாய்ச்சி இருக்கும். மேசை நாற்காலி போட்டு ஃபேன் கீழ உக்காந்து வேலை செய்யறவங்க கை அப்படி இருக்காது. பஞ்சு மாதிரி ரொம்ப மென்மையா இருக்கும். ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சிருக்கேன்க்கா.’
அதைக் கேட்டதும் அம்மாவின் முகம் மலர்ந்துவிட்டது. ‘எதுவா வாழ்ந்தா என்னம்மா? பணம் காசிக்கு கஷ்டப்படாம வாழ்ந்தா சரிதான்’ என்று சிரித்தபடி அப்பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டு எழுந்தார். ஒரு நிமிடம் அறைக்குள் சென்று எள்ளுருண்டைகள் அடைக்கப்பட்ட பாட்டிலை எடுத்துவந்து என்னிடம் இரு உருண்டைகளையும் சித்தியிடம் இரு உருண்டைகளையும் கொடுத்தார்.
‘எனக்கு எதுக்குக்கா? அவன்கிட்டயே கொடுங்க’ என்று சித்தி மறுத்தார்.
‘இன்னைக்கு நீ இருக்கியேன்னு அடக்க ஒடுக்கமா இருக்கறான். இல்லைன்னா உருண்டை எங்க உருண்டை எங்கன்னு ஆயிரம் தரம் கேட்டிருப்பான். அவனுக்காகத்தான் இத செஞ்சி வச்சிருக்கேன். சாப்ட்டு பார்த்துட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லு?’
அதற்குப் பிறகு சித்தி மறுக்கவில்லை. உருண்டையைக் கடித்துத் தின்னத் தொடங்கிவிட்டார். உருண்டையின் சுவை காரணமாக ஒருவரும் அப்போது பேசவில்லை. உண்டு முடித்து, தண்ணீர் அருந்திய பிறகு ‘உனக்கு அமைதியான நதியினிலே ஓடும் பாட்டு தெரியுமா?’ என்று கேட்டார். ‘ம். தெரியுமே’ என்று நான் தலையை அசைத்தேன். உடனே சித்தி என் தோளைப் பற்றி அன்போடு அழுத்திவிட்டு ‘ஒரு தரம் எனக்காக பாடிக் காட்டிறியா?’ என்று ஆசையாகக் கேட்டார்.
நான் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். ‘ஏன்டா என் மூஞ்சிய பார்க்கிற? தெரிஞ்சா பாடு’ என்று சிரித்தார். திரும்பி சித்தியின் முகத்தையும் பார்த்தேன். அவருடைய கண்களில் படிந்திருந்த ஆவலைப் பார்க்கப்பார்க்க எனக்குள் சிறகுகள் முளைத்ததுபோல இருந்தது.
சற்றே செருமி தொண்டையைச் சரிப்படுத்தியபடி அந்தப் பாட்டை ஒருமுறை மனத்துக்குள் வேகவேகமாக சொல்லிப் பார்த்துக்கொண்டேன். பாடிவிட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. உடனே ‘அமைதியான நதியினிலே’ என்று தொடங்கினேன். உண்மையிலேயே அந்த நேரத்தில் தோட்டக்கதவு வழியாக இதமான காற்று உள்ளே நுழைந்து அலைந்து வாசல் கதவு வழியே வெளியேறியது. அந்தக் காற்றின் வரவு எல்லோருக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்தது.
பாடி முடிக்கும் வரை சித்தி சிலைபோல உட்கார்ந்திருந்தாள். கொஞ்சம் கூட அவர் உடலில் அசைவில்லை. முகம் மட்டும் கனிந்து சிவந்து வந்தது. நீண்ட பின்னலை முன்னால் இழுத்து பின்னல் முடிச்சுகளுக்குள் விரலை நுழைப்பதும் விடுவிப்பதுமாக இருந்தார். ஒரே நேரத்தில் பரபரப்பாக இருப்பதுபோலவும் எவ்விதப் பரபரப்பும் இன்றி அடங்கியிருப்பதுபோலவும் இருந்தார்.
பாடல் முடிந்ததும் ‘ரொம்ப நல்லா பாடறியே. குரல் இன்னும் கொஞ்சம் ஒத்துழைச்சா உண்மையாவே டி.எம்.எஸ். மாதிரியே இருக்கும். அது சரி, இந்தப் பாட்டுங்களயெல்லாம் எப்படி மனப்பாடம் பண்றே?’ என்று கேட்டார் சித்தி.
‘மனப்பாடம்லாம் செய்யறதில்லை சித்தி. சும்மா நாலைஞ்சி தரம் திருப்பித்திருப்பி கேட்டா மனசுல பதிஞ்சிடும்.’
சித்தி என் தோளைத் தட்டியபடி எழுந்தார். ‘என்கிட்ட ஒரு பெரிய பட்டியலே இருக்குது. உனக்கு அப்புறமா சொல்றேன். ஒரொரு நாளும் ஒரு பாட்ட எனக்காக பாடிக் காட்டணும், சரியா?’ என்றார். சம்மதத்துக்கு அடையாளமாக நான் தலையசைத்தேன். தொடர்ந்து ‘உனக்கும் இங்க்லீஷ்ல ஏதாவது சந்தேகம் இருந்தா புத்தகத்தை எடுத்துட்டு வா. உனக்கு சொல்லித் தரேன், சரியா?’ என்றார் சித்தி. பிறகு அம்மாவின் பக்கம் திரும்பி ‘நான் வரேங்க்கா. தோசைக்கு அரிசி உளுந்து ஊற வச்சிருக்கேன். போய் அரைக்கணும்’ என்றார்.
‘சரிம்மா மோகனா. அப்பப்ப வந்து போம்மா. பேச்சுத்துணைக்கு ஆளில்லைன்னு தனியா இருக்காத’ என்றபடி அம்மாவும் தலையசைத்தார்.
சித்தி வெளியே புறப்பட்டுச் சென்றதும் ‘சித்திக்கு இங்க்லீஷ்லாம் எப்படிம்மா தெரியும்? சொல்லிக் குடுக்கறேன்னு சொல்றாங்க’ என்று சந்தேகமாகக் கேட்டேன்.
‘எஸெல்சி படிச்ச பொண்ணுடா அது. அஞ்சி பொண்ணுங்க இருக்கிற ஊடு. எப்படியாச்சிம் ஒரு உருப்படி வெளிய போனா போதும்ன்னு அதும் அப்பன்காரன் இந்த வண்டிக்காரனுக்கு கட்டிவச்சி அனுப்பிட்டான். கையெழுத்து கூட போடத் தெரியாதவனுக்கு இப்படி ஒருத்தி. கடவுள் போடற கணக்கு எப்படி இருக்குது பாரு.’
ஆற்றாமை படிந்த குரலில் அம்மா எதையோ சொல்லத் தொடங்கி, முணுமுணுத்தபடி முடிக்காமல் அப்படியே நிறுத்திவிட்டார். என்ன என்று அவரை மேற்கொண்டு கேட்க இயலாதபடி அன்பழகனும் சேகரும் வாசலில் நின்று பெயர்சொல்லி அழைப்பது கேட்டது. உடனே நான் பந்தை எடுத்துக்கொண்டு ஓடி அவர்களோடு சேர்ந்துகொண்டேன்.
அடுத்தநாள் மாலையில் ஆங்கிலப் புத்தகத்தோடு நான் சித்தி வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன். என்னைப் பார்த்ததும் ‘வாங்க டி.எம்.எஸ். உள்ள வாங்க’ என்று சிரித்துக்கொண்டே வரவேற்றார் சித்தி. நான் கூச்சத்தோடு உள்ளே சென்று பெஞ்ச் மீது ஓரமாக உட்கார்ந்தேன். அந்த பெஞ்ச் மீது சுவரையொட்டி ஒன்றன்மீது ஒன்றாக இருபதுக்கும் மேற்பட்ட மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன.
நான் புத்தகத்தைப் பிரித்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடத்தை சித்தியிடம் காட்டினேன். சித்தி அந்தப் பக்கத்தைப் பிரித்து பாடத்தின் தலைப்பை வேகமாகப் படித்தார். பிறகு உள்ளே சென்று ஒரு கிண்ணத்தில் நான் சாப்பிடுவதற்கு அவித்துவைத்த கடலையைக் கொண்டு வந்து கொடுத்தார். ‘வேணாம் சித்தி. நான் இப்பதான் எள்ளுருண்டை சாப்ட்டுட்டு வந்தேன்’ என்றேன். ‘பரவாயில்லைடா. அது ஒரு மூலையில இருக்கட்டும். இது ஒரு மூலையில இருக்கட்டும். முதமுதல்ல கொடுக்கறேன். வேணாம்ன்னு சொல்லாத. எடுத்துக்கோ’ என்று புன்னகைத்தபடி எனக்குப் பக்கத்தில் வைத்தார். பிறகு புத்தகத்தைப் பிரித்து பாடத்தை மெளனமாக தனக்குள் ஒருமுறை படிக்கத் தொடங்கினார்.
சித்தி அந்தப் பாடத்தை எனக்காக ஒவ்வொரு சொல்லாகப் பிரித்துப் பிரித்து படித்துக் காட்டி பொருள் சொல்லிக்கொண்டே சென்றார். ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளைச் சொல்லி முடிக்கும்போதே, அவர் சொல்லாமலேயே அந்த வாக்கியத்தின் பொருள் புரிந்துவிடுவதை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. அவருக்குப் பொருள் தெரியாத சொல்லே அந்தப் பாடத்தில் இல்லை. ஒரு முக்கியமான புதிய சொல் எதிர்ப்படும் சமயத்தில், அந்தப் புதிய சொல்லைக் கொண்டு புதிதாக பலவிதமான வாக்கியங்களை உருவாக்கி அவற்றுக்குரிய அர்த்தங்களைச் சொன்னார். அவர் வாக்கியங்களை உருவாக்கும் விதம் ஆச்சரியமாக இருந்தது. அவர் நடத்தும் விதமோ எல்லாவற்றையும் கரைத்துக் குடித்ததுபோல இருந்தது.
பாடம் முடிந்ததும் ‘நீங்க டீச்சரா போயிருக்கலாம் சித்தி. அவ்ளோ அழகா நடத்தறீங்க’ என்று சொல்லிவிட்டேன். அதைக் கேட்டு சித்தியின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை படர்ந்து மறைந்தது. விழியோரத்தில் ஒரு துளி கண்ணீர் தேங்கியது. உடனே அதைப் புடைவை முந்தானையின் நுனியால் துடைத்துக்கொண்டார். ‘நடக்கறது எதுவும் நம்ம கையில இல்லைடா தம்பி. என்ன நடக்குதோ, அதை ஏத்துகினு திரும்பிப் பாக்காம போய் சீக்கிரமா வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சிடணும்’ என்றார். அவர் கசப்புடன் புன்னகைத்துக்கொள்வதை மீண்டும் பார்த்தேன்.
‘அது சரி, நீ நேத்து ராத்திரி நீங்கள் கேட்டவை ப்ரோக்ராம் கேட்டியா?’ என்று பேச்சைத் திசைதிருப்பினார் சித்தி. பாடல்கள் என்றதுமே எனக்கும் உற்சாகம் பிறந்துவிட்டது. ‘ம். கேட்டேன் சித்தி. நல்ல நல்ல பாட்டுங்க போட்டாங்க. ஏன் நீங்க கேக்கலையா?’ என்று கேட்டேன். சித்தி இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை அசைத்தார். ‘ஒங்க சித்தப்பா தூங்கற நேரம்டா அது. அந்த நேரத்துல ரேடியோவ எப்படி வைக்கமுடியும், சொல்லு. பகல்ல வைக்கிற பாட்டுதான் நமக்கு, ராத்திரியில வைக்கிற பாட்டு நமக்கு இல்லைன்னு நெனச்சிக்கவேண்டிதுதான்’ என்றார். பிறகு ‘சரி, நீ சொல்லு, என்னென்ன பாட்டு போட்டாங்க?’ என்று கேட்டார்.
நான் ஒவ்வொரு பாட்டாக யோசித்து யோசித்து சொல்லத் தொடங்கினேன்.
‘நம்ம டி.எம்.எஸ். பாட்டுதான் சித்தி முதல் பாட்டு. அந்த நாள் ஞாபகம் வந்ததே பாட்டு. உயர்ந்த மனிதன் படத்துல வருமே, அந்தப் பாட்டு. பேச்சு. கோபம். சிரிப்பு. பாட்டு. ஒரே ஆளா இவ்வளவயும் செய்யறாருன்னு ஆச்சரியமா இருந்தது. நல்ல பாட்டு.’
‘அப்புறம்?’
‘அடுத்து உடனே ஒரு சோகமான பாட்டு போட்டுட்டாங்க. துலாபாரத்துல பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்குது பன்னீரிலே. அந்தப் பாட்ட கேக்கும்போதே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது சித்தி.’
‘த்ச். ஆறுதல் அடையறதுக்குக் கூட மனசுக்குக் கஷ்டமான பாட்டைக் கேக்கறதுக்கு எழுதிப் போட்டு கேக்கறாங்கன்னா, அவுங்க அதைவிட பெரிய கஷ்டங்கள்ல வாழறவங்களா இருக்கும்’ என்று நாக்கு சப்புக்கொட்டிக்கொண்டார் சித்தி. பிறகு ‘அடுத்து என்ன, அத சொல்லு’ என்றார்.
‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. தில்லானா மோகனாம்பாள்.’
‘அப்புறம்?’
‘மறுபடியும் டி.எம்.எஸ். பாட்டு. நான் யார் நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவன் யார் யார். குடியிருந்த கோவில். எம்.ஜி.ஆர். பாட்டு.’
‘அது சரி, சுசிலா பாட்டு ஒன்னுதான் போட்டாங்களா?’
‘இல்லை. இல்லை. இன்னொன்னு கூட போட்டாங்க சித்தி. ஒரு நிமிஷம் இருங்க. ஞாபகப்படுத்தி சொல்றேன்’ என்றபடி யோசனையில் மூழ்கினேன். சில கணங்களில் அந்தப் பாட்டு நினைவுக்கு வந்துவிட்டது. ‘கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழின்னு ஒரு பாட்டு சித்தி. சாமி படம். திருமால் பெருமை’ என்றேன்.
முழுமையான பட்டியலை நினைவுகூர்ந்து ஒவ்வொன்றாக சித்திக்குச் சொன்னேன். திடீரென சித்தி ‘அது போகட்டும். நீங்கள் கேட்டவையில கேக்கறமாதிரி இப்ப நான் ஒரு பாட்ட கேக்கறேன். நீ எனக்காக பாடறியா?’ என்று கேட்டார். சித்தியின் அந்தக் கோரிக்கை எனக்கு விசித்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ‘என்ன பாட்டு சித்தி?’ என்று வெட்கத்துடன் கேட்டேன். ‘ஐ, அதுக்குள்ள வெக்கத்த பாரேன்’ என்று சொன்னபோது சித்திக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ‘உனக்கு உள்ளத்தில் நல்ல உள்ளம் தெரியுமா? அதைப் பாடறியா?’ என்று கேட்டார். நான் மெதுவாக மனசுக்குள் அந்தப் பாட்டைச் சொல்லிப் பார்த்தேன். இரண்டு வரிகளுக்கு மேல் நினைவுக்கு வரவில்லை. ‘முழு பாட்டு தெரியாது சித்தி’ என்று உதட்டைப் பிதுக்கினேன். ஒரு கணம் யோசனையில் மூழ்கியதைத் தொடர்ந்து சித்தி ‘சரி, ஒருவன் மனது ஒன்பதடா பாட்டு தெரியுமா?’ என்று கேட்டார்.
‘தர்மம் தலைகாக்கும் பாட்டுதான? ஓ, அது தெரியும். எம்.ஜி.ஆர்.படத்துப் பாட்டு இல்லையா? ஸ்கூல்ல கூட நான் பல தடவை பாடியிருக்கேன்.’
‘சரி, அதைப் பாடு.’
நான் ஒருமுறை நெஞ்சுக்குள்ளேயே வரிகளை வேகவேகமாகச் சொல்லிப் பார்த்தேன். அந்த நேரத்தில் சித்தி ‘முழுசா பாடணும்னு இல்லை. உனக்கு எந்த அளவுக்கு தெரியுமோ, அந்த அளவுக்கு பாடு, போதும்’ என்றார். அது சற்றே என் தயக்கத்தைப் போக்கியது. தொண்டையைச் செருமி சரிப்படுத்திக்கொண்டு ஒருவன் மனது ஒன்பதடா என்று பாடத் தொடங்கினேன். மூச்சை நிறுத்தி கீழ் ஸ்தாயிலேயே பாடும்போது ஒன்றிரண்டு முறை இடறி கீச்சுக்குரலாக மாறினாலும் வரிகளுக்கு நடுவிலேயே சமாளித்து மெல்ல மெல்ல லயத்துடன் சேர்ந்து பாடினேன். முதலில் அஞ்சியதுபோல வரிகள் எதுவும் மறக்கவில்லை. எல்லா வரிகளுமே தன் போக்கில் வந்து விழுந்தன. ’தாயின் பெருமை மறக்கின்றான் தன்னல சேற்றில் விழுகின்றான்’ என்ற வரியைப் பாடும்போது என்னை அறியாமலேயே விழிகளின் நீர்த்துளிகள் திரண்டு விழுந்தன. எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது. சித்தியைப் பார்த்து புன்னகைத்தபடி விரலாலேயே தொட்டு துடைத்தபடி பாடி முடித்தேன்.
‘எங்க பாதியிலயே நிறுத்திடுவியோன்னு பயந்துகிட்டிருந்தேன். நல்ல வேளை, முழுசாவே பாடிட்ட’ என்று திருப்தியோடு புன்னகைத்தார் சித்தி. அவரும் தன் கண்களின் ஓரமாகத் திரண்டிருந்த துளிகளைத் தொட்டுத் துடைத்துக்கொண்டார். ‘இனிமே, நீதான் எனக்கு நீங்கள் கேட்டவை ரேடியோ. நைட் ப்ரோக்ராம்ல என்னால கேக்கமுடியாத பாட்டயெல்லாம் நீ கேட்டு வந்து பாடணும், சரியா?’ என்றார். ‘சரி’ என்று நானும் தலையசைத்துவிட்டுப் புறப்பட்டேன்.
அடுத்தநாள் காலையில் குளிக்கும்போது சித்திக்காக பாடிய தர்மம் தலைகாக்கும் பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாட்டைப் பாடியபடி ஆனந்தமாகக் குளித்தேன். சித்தி காதுகொடுத்துக் கேட்கிற நிலையில் இருந்தால் இன்னொரு முறை கேட்கட்டும் என்ற எண்ணமே அவ்வாறு பாடத் தூண்டியது.
அன்று மாலை ஆங்கிலப் பாடம் படிப்பதற்காக சித்தி வீட்டுக்குச் சென்றபோது ‘என்னடா, ரேடியோவுல மறு ஒளிபரப்புன்னு போடறாங்களே, அந்த மாதிரி நீயும் மறு ஒளிபரப்பு செய்றியா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நான் வெட்கத்துடன் தலைகுனிந்துகொண்டேன்.
ஒவ்வொரு நாளும் சித்திக்காக நீங்கள் கேட்டவை பாடலைப் பாடிக் காட்டுவதும் அடுத்தநாள் முழுக்க அதையே பாடிக்கொண்டிருப்பதும் வழக்கமாகிவிட்டது. சிற்சில சமயங்களில் பள்ளியில் பாடும் தருணங்கள் ஏற்படும்போதுகூட, அந்தப் பாட்டையே பாடி பரவசம் கொண்டேன். சித்திக்காக பாடத் தொடங்கிய இரண்டு மூன்று மாதங்களில் ஏராளமான புதிய பாடல்களை நான் கற்றுக்கொண்டேன். மீண்டும் மீண்டும் பாடிப் பழகியதால், இதற்குமுன் இடையிடையே தன் போக்கில் எழும் கீச்சுக்குரலின் அளவும் இடைவெளியும் குறையத் தொடங்கின.
ஒருநாள் இரவு. சாப்பாட்டுக்குப் பிறகு நானும் அம்மாவும் அப்பாவுக்காகக் காத்திருந்தோம். அவர் இன்னும் வீட்டுக்குத் திரும்பவில்லை. ‘அம்மா, நீங்கள் கேட்டவை கேக்கலாமாம்மா?’ என்றபடி நான் ரேடியோவைத் திருப்பினேன்.
அது நீங்கள் கேட்டவை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பான நேரம். ஏதோ ஒரு நாடகம் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. நான் பரபரப்பாக அது முடிவடைவதற்காக ஆவலோடு காத்திருந்தேன்.
அந்தக் காத்திருப்பு தாங்கவில்லை. உடனே ‘அம்மா, நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒரு பந்தயம் வச்சிக்கலாமா?’ என்று கேட்டேன். ‘பந்தயமா? என்ன பந்தயம்? ஒன் முதுவுல ரெண்டு குடுத்தா பந்தயம் கிந்தயம்லாம் தானா அடங்கிடும்’ என்றார் அம்மா. ‘ஐயோ, நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்ற?’ என்றபடி அவரை நெருங்கிச் சென்று உட்கார்ந்தேன். ‘இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்கள் கேட்டவை ஆரம்பிக்கப்போவுது. எந்தப் பாட்டு முதல் பாட்டா வரும், சொல்லு பார்ப்போம். அதுதான் பந்தயம்’ என்று கேட்டேன். ‘அது எப்படிடா, அவன் போடாம நமக்கு எப்படித் தெரியும்?’ என்று சலிப்போடு சொன்னார் அம்மா.
‘அதுதாம்மா பந்தயம். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பாட்டுதான் முதல் பாட்டா வரப்போவுதுன்னு நான் சொல்றேன். நீ என்ன சொல்ற?’
‘அது எப்படி அவ்ளோ உறுதியா சொல்லமுடியும்?’
‘அதுதாம்மா பந்தயம் சொல்லும்மா.’
‘அந்தப் பாட்டு வராது. வேற பாட்டுதான் போடுவான்.’
‘அப்ப சரி. இப்ப நீ சொல்றமாதிரி அந்தப் பாட்டு வரலைன்னா, நான் உனக்கு ஒரு முறுக்கு வாங்கித் தரேன். ஒருவேளை நான் சொல்றமாதிரி வந்துட்டுதுன்னா, நீ எனக்கு முறுக்கு வாங்கித் தரணும். அதுதான் பந்தயம், என்ன சொல்ற?’
‘அதெல்லாம் அந்தப் பாட்டு வராது. நீ சொல்றமாதிரி போடணும்னு அவனுக்கு என்ன சட்டமா, சொல்லு. அவன் இஷ்டத்துக்குத்தான் போடுவான்.’
‘சரி, போட்டா எனக்கு முறுக்கு. போடலைன்னா உனக்கு முறுக்கு. என்ன சொல்ற, பந்தயத்துக்குத் தயாரா?’
‘மொத்தத்துல உனக்கு பாட்ட காரணம் காட்டி செலவு வைக்கணும், அதான உன் திட்டம்?’
‘ஐயோ, ஐயோ, செலவுலாம் இல்லைம்மா. வேணும்ன்னா ஒன்னு செய்யலாம். முறுக்கு வேணாம். கடலை உருண்டையையே பந்தயமா வச்சிக்கலாம். அதுக்காக எங்கயும் போகவேணாம், செலவும் செய்யவேணாம், வீட்டுக்குள்ள இருக்கற உருண்டையே போதும், சரிதானா?’
‘அப்பவும் தின்னறதுலயே குறியா இரு. சரி, பார்ப்போம்.’
அப்போதுதான் நாடகம் முடிந்ததன் அடையாளமான இசைக்கோவை ரேடியோவில் ஒலித்தது. அதையடுத்து புதிய நிகழ்ச்சியாக நீங்கள் கேட்டவை ஒலிபரப்பாகத் தொடங்கவிருப்பதன் குறிப்பாக மற்றொரு இசைத்துண்டு ஒலித்தது. அது முடிந்த கணமே அறிவிப்பாளர் வந்துவிட்டார். அதுவரை ஆவலோடு காத்திருந்த நிகழ்ச்சி தொடங்கியது.
அறிவிப்பாளர் வழக்கம்போல முதல் பாடலைப்பற்றிய விவரத்தைச் சொல்லித் தொடங்காமல் இந்த முதல் பாடலை விரும்பியிருக்கும் நேயர்கள் என்ற குறிப்பை மட்டும் கூறிவிட்டு, சுவாரசியத்தைத் தக்கவைக்கும் பொருட்டு பெயர்ப்பட்டியலைப் படிக்கத் தொடங்கிவிட்டார். கன்னியாகுமரியிலிருந்து விழுப்புரம் வரைக்கும் ஏராளமான பகுதிகளில் வாழும் நேயர்களின் பெயர்களெல்லாம் சொல்லப்பட்டன.
ஒரு வழியாக நேயர்களின் பட்டியலைப் படித்துமுடித்த அறிவிப்பாளர் ஒரு கணம் இடைவெளிவிட்டு பாடலின் விவரத்தை அறிவித்தார். நான் நம்பிய அதே ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ பாட்டு. அதைக் கேட்டு எனக்கு வானத்தில் பறப்பதுபோல இருந்தது. உடனே அம்மாவைப் பார்த்து ‘ம், எடு எடு. எள்ளுருண்டையை எடு. பார்த்தியா, நான் சொன்னதுதான் நடந்தது’ என்றேன். ‘உனக்கு எப்படிடா முதல்லயே தெரிஞ்சது? பேப்பர்ல போட்டிருந்தாங்களா?’ என்று சந்தேகக்கண்ணோடு பார்த்தார். ‘ஆசை தோசை அப்பளம் வடை. உனக்கு அதையெல்லாம் பேப்பர்ல போடுவானா? எடு எடு. முதல்ல எள்ளுருண்டையை எடு’ என்றேன். அம்மா இன்னும் சந்தேகக்கண் விலகாதவராகவே ஓர் உருண்டையை எடுத்து என்னிடம் கொடுத்தார். நான் அதை ரசித்துக்கொண்டே இடைவிடாமல் குதிரைக்குளம்படி கேட்கும் அந்தப் பாட்டையும் ரசித்தேன்.
அடுத்த பாட்டைத் தொடங்கும் நேரத்தில் அப்பா வந்துவிட்டார். ‘ஏன்டா இன்னும் தூங்கலையா?’ என்று கேட்டபடியே உள்ளே சென்று கடைச்சாவியை வைத்துவிட்டு தோட்டத்துக்குச் சென்றார். அம்மா அவருக்குச் சாப்பாடு எடுத்துவைப்பதற்காக எழுந்து சென்றார்.
அடுத்த பாட்டு தொடங்கிவிட்டது. சிவந்த மண் திரைப்படத்திலிருந்து ’பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்’. கொஞ்சம் நீளமான பாடல். அதன் இறுதிப்பகுதியில் சாட்டையடிகளும் பெண்ணின் கூக்குரலும் மாறிமாறி வந்தன. கேட்பவர்களிடம் ஒருவித பதற்றத்தையும் திகைப்பையும் உருவாக்கும் ஒலியமைப்பு. அதிலேயே நாங்கள் மூழ்கியிருந்தோம்.
ஒரு வழியாக அப்பாடல் முடிவடையும் நேரத்தில் நான் அடுத்த பாடலைப்பற்றிய யோசனையில் மூழ்கினேன். பாடல் முடிந்த பிறகும் அடியும் குரலும் முடியாமல் தொடர்வதை நான் அப்போதுதான் உணர்ந்து குழப்பத்துடன் திரும்பி அம்மாவைப் பார்த்தேன்.
அம்மாவும் திகைத்து அந்தச் சத்தம் வரும் திசையில் திரும்பினார். சந்தேகமே இல்லை. அது மோகனா சித்தியின் கூக்குரல். இன்னொரு பக்கத்தில் சித்தப்பாவின் கர்ஜிக்கும் குரல்.
அப்பா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தார். அம்மா குழப்பத்தோடு அப்பாவையும் அந்தக் குரல் வந்த திசையையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார். பிறகு தயக்கத்துடன் ‘பாவம். புதுப் பொண்ணு. எதுக்கு அந்த தம்பி இப்படி போட்டு அடிக்குதோ, தெரியலையே. ஒரு எட்டு போய் பார்த்து கேட்டுட்டு வரியா?’ என்று அப்பாவிடம் கேட்டார். அப்பா ஒருகணம் ஒன்றும் பேசாமல் இருந்தார். பிறகு ஒரு பெருமூச்சுடன் ‘என்னன்னு போய் கேக்கறது? புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும், நடுவுல கேக்கறதுக்கு நீ யாருன்னு என்ன திருப்பிக் கேட்டான்னா, நம்ம மூஞ்சிய எங்க வச்சிக்கறது?’ என்று சொல்லிவிட்டு மீண்டும் சோற்றில் கைவைத்து பிசையத் தொடங்கினார். அம்மா மட்டும் ஒருவித இயலாமையுடன் சித்தியின் குரல் வந்த திசையைப் பார்த்தபடி இருந்தார். எனக்கு பாடலைக் கேட்கும் ஆர்வமே போய்விட்டது. என்னென்ன பாடல்கள் என்று நாளைக்கு நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என ரேடியோவை நிறுத்திவிட்டு படுத்துக்கொண்டேன்.
அடுத்தநாள் காலையில் எழுந்திருக்கும்போதே சித்தியைப்பற்றிய நினைவு வந்துவிட்டது. வழக்கமான உற்சாகமே இல்லை. தெருக்குழாயிலிருந்து தண்ணீர் பிடித்துக்கொண்டு தவலையைச் சுமந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சித்தி வீட்டில் அவர் முகம் தெரிகிறதா என பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தபடி வந்தேன். ஆறேழு நடை தவலைத்தண்ணீரோடு வந்த போதும், சித்தியின் முகத்தை ஒருமுறை கூட பார்க்க இயலவில்லை. ஒருவேளை காலையிலேயே ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
குளிப்பதற்காக தொட்டிக்கு அருகில் நிற்கும்போது சித்தியின் ஞாபகம்தான் வந்தது. நீங்கள் கேட்டவையில் ஒலிபரப்பாகும் பாடல்களை தனக்காகப் பாடவேண்டும் என்று கேட்டுக்கொண்ட சித்தியின் குரல் காதில் ஒலித்தபடி இருந்தது. மனத்தை உறுதிப்படுத்திக்கொண்டு ஒருமுறை ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ பாட்டை ஓங்கிய குரலில் தொடங்கினேன். ஒரே ஒரு வரியைத்தான் பாட முடிந்தது. அடுத்த வரியை ஆரம்பிக்க முடியவில்லை. என்னையறியாமல் துயரத்தில் தொண்டை அடைத்தது. தானாகப் பொங்கிய அழுகையை நிறுத்தமுடியவில்லை. எதையோ சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டேன்.
பள்ளியில் ஏதோ பாடங்களுக்காக காதுகொடுத்துக் கேட்கும் சூழலில் சித்தியின் நினைவு வராமல் இருந்தது. ஆனால் பள்ளி முடிந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய சமயத்தில் சித்தியைப்பற்றிய நினைவு வந்துவிட்டது. ஒருவித அச்சத்துடனேயே வீட்டுக்கு வந்தேன்.
வீட்டுக்குள் கூடத்தில் அம்மா ஒருபக்கச் சுவரிலும் சித்தி எதிர்ப்பக்க சுவரிலும் சாய்ந்தவாக்கில் அமர்ந்திருந்தனர். சித்தியைப் பார்த்ததும் என் அச்சம் விலகினாலும், அவர் முகத்தில் படிந்திருந்த கண்ணீர்க்கோடுகளைப் பார்த்து மனம் ஒருவித துயரத்தில் மூழ்கியது. சித்தி என்னைப் பார்த்ததும் முந்தானையால் முகத்தைத் துடைத்துவிட்டு ஒளியிழந்த ஒரு சிரிப்பை உதிர்த்தார். நெற்றி ஓரமாக வீங்கிப் புடைத்திருந்தது. கன்னத்திலும் வீக்கம்.
‘என்னடா, காலையில குளிக்காமயே ஸ்கூலுக்குப் போயிட்டியா?’ என்று உதடுகளில் ஒரு புன்னகையை தேக்கிவைத்துக்கொண்டு கேட்டார். எனக்கு எதுவும் புரியவில்லை. குழப்பத்துடன் அவரைப் பார்த்தபடி ‘இல்லயே, குளிச்சிட்டுத்தான போனேன்’ என்றேன். சித்தி உடனே ‘அப்படியா, டி.எம்.எஸ்.பாட்டு கேக்கலையே, அதனாலதான் எனக்கு ஒரு சந்தேகம் வந்திச்சி’ என்றார். அதற்குப் பிறகுதான் அவருடைய பேச்சின் போக்கு புரிந்தது. நான் வருத்தம் படர்ந்த ஒரு சிரிப்புடன் சித்தியின் முகத்தைப் பார்த்துவிட்டு புத்தகப்பையை ஆணியில் மாட்டிவிட்டுத் திரும்பினேன். ‘சரிக்கா, நான் வரேன்’ என்று அம்மாவிடம் விடைபெற்றபடி சித்தி எழுந்தார். அப்படியே என் பக்கம் திரும்பி ‘விளக்கு வச்சதும் புஸ்தகம் எடுத்துட்டு வாடா. மறந்துடாத’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
நான் அம்மா ஏதேனும் சொல்லக்கூடும் என்று அவர் முகத்தையே பார்த்தபடி சுற்றிச்சுற்றி வந்தேன். வழக்கமாக எள்ளுருண்ட கைமாறியதும் எழுந்து வெளியே சென்றுவிடும் பழக்கமுடைய நான், வீட்டுக்குள்ளேயே வளையவளைய வந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை காக்க இயலாமல் ‘சித்திக்கு என்னாச்சிம்மா?’ என்று கேட்டேன். அதைக் கேட்டு அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. எதிர்பாராதவிதமாக ‘ஏன், முக்கியமா நீ அந்தக் கதையைத் தெரிஞ்சிக்கணுமா?’ என்று அம்மா கோபமுடன் பதில் சொன்னார். நான் அதற்கு மேல் அங்கே நிற்கவே இல்லை. வீட்டைவிட்டு வெளியேறி நண்பர்களுடன் விளையாடச் சென்றுவிட்டேன்.
இருட்டிய பிறகு கைகால்களைக் கழுவிக்கொண்டு ஆங்கிலப் புத்தகத்தோடு சித்தி வீட்டுக்குச் சென்றேன். ‘வாடா வாடா’ என்றார் சித்தி. அவர் குரலில் வழக்கமான உற்சாகம் இருந்ததா, இல்லையா என்பதை என்னால் பிரித்தறிய முடியவில்லை. எவ்விதமான சந்தேகமும் எழாத வகையில் பாடத்தைத் தெளிவாக சொல்லிக் கொடுத்தார் சித்தி. பாடம் முடிந்ததும் நான் புறப்படுவதற்காக எழுந்தேன். அவர் உடனே ‘என்னடா, நீ பாட்டுக்கு கெளம்பிட்ட? நீங்கள் கேட்டவையில என்னென்ன பாட்டு போட்டாங்க, சொல்லமாட்டியா?’ என்று கேட்டார். அக்கணமே அவர் பழைய சித்தியாக என் முன்னால் நிற்பதுபோல இருந்தது. எதையும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அப்போது முடிவு செய்துகொண்டேன். இரண்டு பாடல்களை மட்டுமே நான் கேட்டிருந்தபோதும் எஞ்சிய பாடல்களின் விவரங்களை நண்பர்களிடம் விசாரித்துத் தெரிந்துவைத்திருந்தேன். அந்தத் தகவலின் அடிப்படையில் நானே கேட்டதுபோல பாடல்களைப்பற்றி அவருக்குச் சொன்னேன்.
சித்தி ‘அம்மாகிட்ட பந்தயம்லாம் வச்சி ஜெயிச்சிருக்க. பெரிய ஆள்தான் நீ. சரி, ஒருதரம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பாட்ட பாடு’ என்றார். அன்று இருந்த மனநிலையில் அந்த உற்சாகமான பாடலைப் பாடவே முடியவில்லை. ஆயினும் அதைக் காட்டிக்கொள்ளாமல் பாடினேன். பாடி முடிக்கும் வரை அவர் அமைதியாகவே இருந்தார். பிறகு மெதுவாக ‘உனக்கு மயக்கம் எனது தாயகம் பாட்டு தெரியுமா? பழைய பாட்டு’ என்று கேட்டார். நான் அந்தப் பாட்டை ரேடியோவில் கேட்ட ஞாபகம் இருந்தது. ஒரே சோகமயமாக இருந்ததால், அந்தப் பாட்டை நான் ஊன்றிக் கவனிக்கவில்லை.
‘தெரியாது சித்தி.’
‘பரவாயில்லை விடு. தெரிஞ்சா பாட சொல்லலாம்னு சும்மாதான் கேட்டேன்.’
‘என் ஃப்ரெண்ட்ஸ்ங்கள்ல பல பேரு பாட்டு புஸ்தகம் வச்சிருக்கிற பையன்ங்கதான் சித்தி. யாருகிட்டயாது அந்தப் பாட்டு கிடைக்கும். ரெண்டுமூனு நாள்ல தேடி கண்டுபுடிச்சி கத்துகிட்டு பாடறேன் சித்தி.’
‘தேடி அலையறதெல்லாம் வேணாம். எனக்கே அந்தப் பாட்டு தெரியும். பாடறேன். வேணும்ன்னா எழுதிக்கோ. அது ஆம்பளை குரல் பாட்டு. ஒருதரம் அத கேட்டா தேவலைன்னு தோணிச்சி. அதான் கேட்டேன்.’
‘பாடுங்க சித்தி. நான் எழுதிக்கறேன்’
நான் உடனே என் நோட்டைத் திறந்து ஒரு புதிய பக்கத்தைப் புரட்டினேன். சித்தி அமைதியான குரலில் எங்கோ சுவரில் பார்வையைப் பதித்தபடி ’மயக்கம் எனது தாயகம்’ என்று பாடத் தொடங்கினார். நான் வேகமாக ஒவ்வொரு வரியையும் குறிக்கத் தொடங்கினேன்.
வழக்கமாக திரைப்படப் பாடலைப் பாடுவதுபோல சித்தியின் குரல் அப்போது இல்லை. நெஞ்சின் ஆழத்திலிருந்து சொந்தமான வரிகளைப் பாடுவதுபோலப் பாடினார். நான் அவரைத் தடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் குனிந்த தலை நிமிராமல் எழுதுவதிலேயே குறியாக இருந்தேன். இரண்டு மூன்று நிமிடங்கள். எனக்கு அது பாட்டு போலவே தெரியவில்லை. எதிரில் நிற்கும் யாரோ ஒருவரிடம் முறையிடுவதுபோல இருந்தது. நானே எனக்குப் பகையானேன். என் நாடகத்தில் நான் திரையானேன். தேனே உனக்குப் புரியாது. அந்தத் தெய்வம் வராமல் விளங்காது. அவர் பாடப்பாட உண்மையிலேயே தேம்புகிறாரோ என்று உள்ளூர என் மனம் நடுங்கியது.
அவருக்குப் பொருத்தமான ஒரு பாட்டை அவருக்கு முன்னாலேயே யாரோ எழுதிவைத்துவிட்டதுபோல தோன்றியது. சித்தியின் கைகளைப்பற்றி ‘தைரியமாக இருங்கள் சித்தி’ என்று சொல்லவேண்டும் போல இருந்தது. ஆனாலும் ஓர் இயந்திரத்தின் வேகத்துடன் அவர் பாடும் வரியின் ஒவ்வொரு சொல்லையும் வேகவேகமாக எழுதிக்கொண்டே சென்றேன். விதியும் மதியும் வேறம்மா என இறுதிப்பகுதியை நெருங்கியபோது சித்தியின் குரலில் துக்கத்தை மீறிய ஒரு தெளிவை என்னால் உணரமுடிந்தது. மதியில் வந்தவள் நீயம்மா என் வழிமறைத்தாள் விதியம்மா. தன் தோல்வியை தானே ஆழமாக ஆய்வுசெய்து ஒரு முடிவை அறிவிப்பதுபோல இருந்தது.
பாடி முடித்த பிறகு சித்தியின் முகத்தில் ஒரு தெளிவு படர்ந்திருப்பதைப் பார்த்தேன். பழைய சிரிப்பு கூட வந்துவிட்டது போலத் தெரிந்தது. ஒரு கணம் சிரித்துக்கொண்டே ‘பொம்பள பாடவேண்டிய பாட்டு. சினிமாவுல ஒரு ஆம்பளைக்கு பொருத்தி கதை எழுதிட்டாங்க’ என்றார். நான் அதை அரைகுறையாகத்தான் காதில் வாங்கினேன். அடுத்தநாள் மாலையில் சித்தியின் முன்னால் அந்தப் பாட்டைப் பாடிக் காட்டவேண்டும் என்பதிலேயே என் மனம் மூழ்கியிருந்தது. ‘முழுசா எழுதிகிட்டேன் சித்தி. நாளைக்குள்ள ப்ராக்டிஸ் பண்ணிட்டு பாடிக் காட்டறேன்’ என்றேன். சித்தி பதில் எதுவும் சொல்லவில்லை. என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். அவ்வளவுதான்.
அன்று இரவும் சித்தியின் வீட்டிலிருந்து ஒரே கூச்சல். அங்குமிங்கும் ஓடும் சத்தம். அடிக்கும் சத்தம். வசைபடும் சத்தம். அழும் சத்தம். எல்லாமே ஒரு கட்டத்துக்குப் பிறகு ஓய்ந்துவிட உலகம் அமைதியில் மூழ்கியது. நானும் உறக்கத்தில் மூழ்கிவிட்டேன்.
அடுத்தநாள் காலையில் எழுந்திருக்கும்போதே சித்தியின் வீட்டிலிருந்து யாரோ கூச்சலிடும் சத்தம் கேட்டது. சித்தியின் குரலில்லை. வேறு குரல். அம்மா திடுக்கிட்டு எழுந்து அவசரமாக அப்பாவை எழுப்பினார். ‘போய் பாரு. ராத்திரியிலிருந்து என்ன நடக்குதுன்னு தெரியலை. பாவம் அந்தப் பொண்ணு’ என்றார். அப்பா அவசரமாக பாயைச் சுருட்டி வைத்துவிட்டு எழுந்து சித்தி வீட்டின் பக்கமாகச் சென்றார். நானும் பின்னாலேயே எழுந்து ஓடினேன்.
அதற்குள் அவர் வீட்டின் முன்னால் ஏராளமானோர் சேர்ந்துவிட்டனர். வீட்டில் சித்தப்பா இல்லை. இரவு நடந்த சண்டையில் சித்தியின் தலையில் கடுமையாக அடிபட்டுவிட்டது. அந்த மயக்கத்தில் அவர் சுருண்டு விழுந்துவிட்டார். அதைப் பார்த்து அச்சம் கொண்ட சித்தப்பா கதவைச் சாத்திக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். அவர் போன இடம் தெரியவில்லை. காலையில் சாணமள்ள வந்த பெரியம்மாதான் ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார். அனைவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று சித்தியை வெளியே தூக்கி வந்து கிடத்தியிருந்தனர். சித்தியின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து முகத்தையே மூடியிருந்தது.
ஒரு பெரியவர் மூக்கின் அருகில் விரலை வைத்துப் பார்த்தார். ‘மூச்சு இருக்குதுப்பா, ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனா காப்பாத்தலாம்’ என்றார். உடனே அப்பாவும் இன்னும் இரண்டு மூன்று பேர்களும் கால்பக்கம் ஒருவர் கைப்பக்கம் ஒருவர் தலைப்பக்கம் ஒருவர் என தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள்.
எனக்கு பள்ளிக்குச் செல்லவே மனமில்லை. ஆனால் அன்று முக்கியமான ஒரு மாதாந்திரத் தேர்வு இருந்தது. வேறு வழியில்லாமல் புறப்பட்டுச் சென்றேன்.
மாலையில் வீடு திரும்பியதும் அம்மாவிடம் ‘சித்திக்கு எப்படிம்மா இருக்குது?’ என்றுதான் கேட்டேன். ‘யாரு செஞ்ச புண்ணியமோ, உயிருக்கு ஆபத்து இல்லை. பொழைச்சிட்டா’ என்றார் அம்மா. ‘கிளி மாதிரி பொண்ண வளர்த்து பூனை மாதிரி ஒருத்தவனுக்கா கட்டிக் கொடுப்பாங்க? முட்டாள் ஜனங்களுக்கு மூளையே இல்லை’ என்று முணுமுணுத்துக்கொண்டார்.
‘நாம போய் சித்திய பார்த்துட்டு வரலாமாம்மா?’
‘இல்லைப்பா, இப்ப யாரயும் உள்ள உடமாட்டாங்களாம். இன்னும் நாலு நாள் போன பிறகுதான் உடுவாங்களாம்.’
நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் சித்தியை நினைத்துக்கொண்டே இருந்தேன். அவருடைய வாழ்க்கையில் இப்படி நிகழும் என நான் நினைக்கவே இல்லை.
மனோகரனின் உதவியோடு பாடிப்பாடி பயிற்சி செய்து, மயக்கம் எனது தாயகம் பாடலை சிறப்பாகப் பாடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றேன். ஐந்து நிமிடம் தனிமையில் கிடைத்தால் போதும். சித்திக்கு அதைப் பாடிக் காட்டிவிடலாம் என்ற எண்ணமே நெஞ்சில் முழுக்கமுழுக்க நிறைந்திருந்தது.
நான்கு நாட்களுக்குப் பிறகு நானும் அம்மாவும் ஆஸ்பத்திரிக்குச் சென்று சித்தியைப் பார்த்தோம். சித்தி பலவீனமாக என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் தலையிலும் தோளிலும் பெரிய கட்டு போட்டிருந்தார்கள். பாவமாக இருந்தது. அவருடைய பெற்றோரும் தங்கைகளும் அவரைச் சுற்றி நின்றிருந்தார்கள்.
சித்தி என்னை அருகில் அழைத்தார். நான் போய் நின்றதும் ‘ஸ்கூலுக்கு ஒழுங்கா போறியா? இங்லீஷ்லாம் சரியா படிக்கிறியா?’ என்று மெதுவாகக் கேட்டார். நான் எல்லாவற்றுக்கும் ‘ம்’ என்பதுபோல தலையாட்டினேன். பிறகு நானாகவே அடங்கிய குரலில் ‘மயக்கம் எனது தாயகம் பாட்ட கத்துகிட்டேன் சித்தி. நீங்க வீட்டுக்கு வந்ததும் பாடிக்காட்டறேன், சரியா?’ என்றேன். அதைக் கேட்டு சித்தியின் முகம் மலர்ந்தது. சரி என்பதுபோல கண்களாலும் புன்னகையாலும் சைகை காட்டினார்.
ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து திரும்பியதும் அம்மாவோடு ஆஸ்பத்திரிக்கு ஒரு நடை சென்று சித்தியைப் பார்த்துவிட்டுத் திரும்புவது வழக்கமாகிவிட்டது. ஒரு வாரம் அப்படியே ஓடியது. அடுத்த நாள் பள்ளியை விட்டு வந்ததும் வழக்கம்போல எள்ளுருண்டையைச் சாப்பிட்ட பிறகு ‘வாம்மா, ஆஸ்பத்திரிக்கு போயிட்டு சித்திய பார்த்துட்டு வரலாம்?’ என்று அம்மாவை அழைத்தேன். ‘சித்தி இல்லைடா. அவுங்க அம்மா அப்பா காலையிலயே அவுங்க ஊருக்கு வண்டி வச்சி அழச்சிட்டு போயிட்டாங்கடா’ என்றார் அம்மா.
இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சித்தியைப் பார்க்கமுடியாதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவர் முன்னால் பாடிக் காட்டுவதற்காக மிகவும் ஆசையாக பயிற்சி செய்த பாட்டை யார் முன்னால் பாடுவது என்று தெரியவில்லை. என்னால் அந்தத் துக்கத்தைத் தாங்கவே முடியவில்லை.
வழக்கம்போல நாங்கள் மாலை நேரத்தில் விளையாடும் ஸ்டேஷன் திடலுக்குச் சென்று தனிமையில் ஒரு நாவல் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டேன். சித்தியின் சிரித்த முகம் மீண்டும் மீண்டும் என் முன்னால் நிழலாடுவதைப்போல இருந்தது. ஒரு கணத்தில் என்னைப்போலவே அவரும் ஒரு மரத்தடியில் எனக்கு எதிரில் வேர்மீது அமர்ந்திருப்பதுபோல தோன்றியது. அந்தக் கற்பனையையே உண்மையென நம்பி நான் அவருக்காக ‘மயக்கம் எனது தாயகம்’ பாடலைப் பாடத் தொடங்கினேன்.
0
உருக்கமான எழுத்தில் விளக்கமான சுயசரிதை!