காலையில் பத்து மணிக்குத் தொடங்கும் எங்கள் பள்ளிக்கூடம் மாலை நான்கரை மணிக்கு முடிவடையும். அதன் அடையாளமாக தலைமையாசிரியர் அறையின் வாசலையொட்டி இருக்கும் தூணுக்கு மேலே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் தண்டவாளத்துண்டில் கம்பங்கதிர் மாதிரி நீண்டிருக்கும் இன்னொரு இரும்புக்குச்சியால் அடித்து எழுப்பப்படும் நீண்ட ‘டண்டண்டண்’ மணியோசை எழுந்து வரும். அதைப்போன்ற இனிமை மிகுந்த ஓசை இந்த உலகத்திலேயே இல்லை என்ற எண்ணம் தோன்றாத நாளே இல்லை.
ஆசிரியர் வெளியேறும்வரை காத்திருந்து பைகளைத் தூக்கிக்கொண்டு பெரும்பாலான மாணவர்கள் பள்ளியின் முன்வாசலை நோக்கி ஓடுவார்கள். ஆறேழு பேரைக் கொண்ட எங்கள் குழு மட்டும் புத்தகப்பைகளோடு பள்ளிக்குப் பின்னால் இருக்கக்கூடிய புளியந்தோப்புக்குச் செல்வோம்.
எங்களைப்போலவே ஏ பிரிவிருந்தும் சி பிரிவிலிருந்தும் கிளம்பி வரும் நண்பர் குழுக்கள் தோப்புக்கு வந்துவிடும். எட்டாம் வகுப்பு வரைக்கும் நாங்கள் எல்லோரும் ஒரே பிரிவில்தான் படித்துவந்தோம். ஒன்பதாவது வகுப்புக்கு வந்ததும் யாரோ ஒருவர் செய்த சதியின் காரணமாக வெவ்வேறு பிரிவுகளுக்கு நாங்கள் பிரிந்து சிதறிவிட்டோம்.
எங்கள் பள்ளியை ஒட்டியிருந்த புளியந்தோப்பு, பள்ளிக்குப் பின்னால் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தைப்போலவே நீளமும் அகலமும் கொண்டது. ஆனால் அது எங்கள் பள்ளிக்குச் சொந்தமானதல்ல. மடத்தார் வீடு என்று பொதுவாக அழைக்கப்படும் குடும்பத்துக்குச் சொந்தமானது. குறைந்தது நூறு மரங்களைக் கொண்ட மாபெரும் தோப்பு அது.
எப்போதும் குளுகுளுவென நிழல் படர்ந்திருக்கும் அந்த இடம் இடைவேளை நேரங்களில் விற்பனைக்கூடமாக இருக்கும். சைக்கிளில் ஐஸ் பெட்டியைக் கட்டிக்கொண்டு வரும் அண்ணன்மார்களும் கூடைகளில் அவித்த கிழங்குகளும் வறுத்த வேர்க்கடலையையும் பழவகைகளையும் எடுத்துவரும் ஆயாமார்களும் சினிமா பாட்டுப்புத்தகங்களை வாய் அகலமான ஒரு பையில் கட்டுகட்டாக எடுத்துவந்து ஒரு சமுக்காளத்தை விரித்து வைத்து விற்கும் பெரியவர்களும் வந்து நிறைந்திருப்பார்கள். ஒரே கோலாகலமாக இருக்கும். ஆனால் மாலைப்பிரிவின் இடைவேளை நேரம் முடிவடைந்ததும் அவர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள். சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்ட பிறகு அந்த இடம் அழகான விளையாட்டு மைதானமாக மாறிவிடும். எங்களைப்போலவே பல குழுக்கள் தனித்தனியாக அணி பிரிந்து சடுகுடு விளையாடுவார்கள். கால்பந்து, கூடைப்பந்து என விளையாடுபவர்களும் உண்டு.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் எங்கள் ஆட்டம் நடக்கும். அதற்குப் பிறகு பைகளை எடுத்துக்கொண்டு நாங்கள் புறப்படுவோம். பெரும்பாலானவர்கள் முன்வாசல் வழியாகவே வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்கள் எல்லோரும் ஊருக்குள் வெவ்வேறு வீதிகளில் வசிப்பவர்கள். பஞ்சாயத்து போர்டு தெரு, பிள்ளையார் கோவில் தெரு, திரெளபதை அம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களைச் சேர்ந்த எங்கள் குழுவில் ஏழு பேர் இருந்தோம். வீடு வரைக்கும் கதை பேசிக்கொண்டே செல்லும் வசதிக்காக நாங்கள் எப்போதும் ஒன்றாகவே செல்வோம்.
புளியந்தோப்பு வழியாகவே சென்று பிரதான சாலையைத் தொடக்கூடிய ஓர் ஊடுபாதை இருந்தது. கைகால்களில் புழுதி படிந்த கோலத்தோடு நாங்கள் அந்த ஒற்றையடிப்பாதையில் பேசிக்கொண்டே நடந்துசெல்வோம்.
ஒருவன் சட்டென தாழ்வான ஒரு கிளையைப் பற்றிக்கொண்டு முன்னும் பின்னும் ஊஞ்சலாடுவான். இன்னொருவன் மேலே ஏறிக் குதிப்பான். மற்றொருவன் கண்ணில் தென்படும் புளியம்பழத்தைப் பறித்துக்கொண்டு சிரிப்பான். ‘என்னப் பாருங்கடா டேய்’ என்று சொல்லிக்கொண்டே தண்டவாளத்தின் மீது நடப்பது போலவே நீண்டிருக்கும் கிளைமீது ஏழுட்டு அடிகள் நடந்து காட்டிவிட்டு குதிப்பான் பிறிதொருவன்.
ஊடுபாதை முடியும் இடத்தில் தோப்பையொட்டி மடத்தார் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு கோயில் இருந்தது. அதன் பெயர் நடராஜர் கோயில். உண்மையில் அந்த இடம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் நடராஜசுவாமி என்னும் துறவியொருவர் ஜீவசமாதி அடைந்த இடம். அவர் வழிவந்த குடும்பத்தினர் அந்தத் துறவியின்மீது கொண்ட பக்தியின் காரணமாக, அந்தச் சமாதியின் மீது சிவலிங்கத்தை நிறுவி கோவிலையும் எழுப்பி வழிபட்டனர். கூடத்தில் வலதுபக்கமாக ஒரு பெரிய மேடை இருந்தது. அதன்மீது நடராஜருக்கு ஒரு தனி சன்னதியை எழுப்பியிருந்தனர். மக்கள் வாய்வழக்கில் அது நடராஜர் கோவில் என்றே நிலைத்துவிட்டது.
உடலெல்லாம் பட்டைபட்டையாக திருநீறு பூசியிருக்கும் சாமியார் ஒருவர் அந்தக் கோவிலில் எல்லா வேலைகளையும் செய்வார். அவருடைய உண்மைப்பெயர் யாருக்குமே தெரியாது. ‘நமசிவாயம்’ என்று சொல்லாமல் அவரால் ஒரு வேலையையும் செய்யமுடியாது. அவருக்கு எல்லாமே நமசிவாயம்தான். கையை ஊன்றிக்கொண்டு உட்கார்ந்தால் நமசிவாயம் என்பார். தூணைப் பிடித்துக்கொண்டு எழுந்து நின்றால் நமசிவாயம் என்று சொல்வார். படிகளில் இறங்கும்போதும் நமசிவாயம். குடத்தில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு நடக்கும்போதும் நமசிவாயம். சிரிக்கும்போதும் நமசிவாயம். சிந்தனை வசப்பட்ட போதும் நமசிவாயம். ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது நமசிவாயம் என்று சொல்லிவிடுவார். அதனால் நமசிவாயம் சாமியார் என்னும் பெயர் தானாகவே அமைந்துவிட்டது. நாங்கள் மட்டும் அவரை தாத்தா என்றுதான் அழைத்துவந்தோம்.
ஒருநாள் நாங்கள் ஊடுபாதை வழியாக தோப்பைவிட்டு வெளியே வந்த சமயத்தில் தாத்தா பாடும் குரல் கேட்டது. ‘பொன்னார் மேனியனே புலித்தோலை’ என்று ராகம் போட்டு பாடிக்கொண்டிருந்தார். நாங்கள் முதலில் அந்தப் பாடலை ஏதோ சினிமாவில் இடம்பெற்ற பாடலாக இருக்கும் என நினைத்துவிட்டோம். ஊன்றிக் கவனித்த பிறகு ராஜசேகர் நிச்சயமாக அது சினிமாப்பாட்டு இல்லையென்றும் ஏதோ பக்திப்பாட்டு என்றும் தெளிவுபடுத்தினான்.
எங்கள் புத்தகப்பைகளை கோவில் வாசலிலேயே தூணோரமாக வைத்துவிட்டு, எங்கள் புழுதிக்கோலம் நீங்கும் வகையில் கைகால்முகம் கழுவிக்கொள்வதற்காக தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் சென்றோம்.
செவ்வக வடிவத்தில் உள்ள அத்தொட்டி மிகவும் புதுமையான வடிவத்தில் இருந்தது. நான்கு பக்கங்களிலும் சீரான இடைவெளியில் ஒரு மாம்பழத்தை வைத்து மூடும் அளவுக்கு சின்னச்சின்ன குழிகள் உருவாக்கப்பட்டிருந்தன. மழைக்காலத்தில் எல்லாக் குழிகளிலும் தண்ணீர் தாமாகவே மழைநீர் நிறைந்துவிடும். மழை இல்லாத நாட்களில் தாத்தாவே தினமும் காலையில் ஊற்றி நிரப்பிவைப்பார். அந்தத் தோப்பைச் சுற்றிப் பறந்து திரியும் குருவிகளுக்கும் புறாக்களுக்கும் காக்கைகளுக்கும் அதுதான் குடிநீர். பல சமயங்களில் நாய்களும் பூனைகளும் குடித்துவிட்டுச் செல்லும். அப்படி ஒரு தொட்டி எங்கள் ஊரில் வேறு எந்த இடத்திலும் கிடையாது.
ராஜசேகர் ‘டேய், அங்க இருக்காருடா தாத்தா’ என்று விரலால் ஒருபக்கம் சுட்டிக்காட்டினான். நாங்கள் உடனே அத்திசையில் திரும்பிப் பார்த்தோம். தாத்தா நந்தியாவட்டை மரத்தில் பூத்திருந்த பூக்களைப் பறித்து ஒரு சின்ன பிரம்புக்கூடையில் நிரப்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த பிறகு பதற்றமில்லாமல் குறுநகையோடு முகம் கழுவத் தொடங்கினோம்.
‘என்னடா பசங்களா, ஆடி முடிச்சிட்டீங்களா?’
‘ம்…தாத்தா.’
நாங்களும் அவருக்கு உதவியாக நந்தியாவட்டை மலர்களைப் பறித்து கூடைக்குள் போட்டோம். ‘நல்லா பூத்து மலர்ந்திருக்கிறத மட்டும் பறிங்கடா. மொக்குங்கள அப்படியே விட்டுடுங்க’ என்றார் தாத்தா. ‘சரிங்க தாத்தா’ என்றபடி ஆளுக்கொரு கை நிறைய பறித்து அவருடைய கூடையில் நிரப்பினோம்.
தாத்தா கருவறைக்குள் சென்று சிவலிங்கத்தைச் சுற்றி பூக்களைக் கொஞ்சம்கொஞ்சமாக அள்ளி அழகாக அடுக்கினார். லிங்கத்தின் உச்சியில் காலையில் வைக்கப்பட்டிருந்த செம்பருத்திப்பூவை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மூன்று நந்தியாவட்டை பூக்களை வைத்தார். எஞ்சியதை எடுத்து வந்து நடராஜரின் பாதங்களைச் சுற்றி அடுக்கினார்.
‘நல்ல புத்தியைக் குடு நமசிவாயமேன்னு ஆழமா மனசுக்குள்ள நெனச்சிக்குங்கடா’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் கருவறைக்குச் சென்று தட்டில் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்தார் தாத்தா. பிறகு கைகுவித்து வணங்கிய நிலையில் ’தோடுடைய செவியன்’ என்று ராகமாக பாடத் தொடங்கினார். நாங்களும் மனமுருக வேண்டியபடி தட்டில் எரியும் சுடரையே பார்த்தபடி இருந்தோம். அந்தச் சுடருடன் தட்டை ஏந்தி வந்து எங்கள் முன்னால் ஒரு நிமிடம் நின்றார். நாங்கள் அச்சுடரைத் தொட்டு வணங்கினோம். பாட்டு தன் போக்கில் தொடர்ந்துகொண்டிருக்க தாத்தா தட்டுடன் கருவறைக்கு மீண்டும் சென்றார்.
சில கணங்களுக்குப் பிறகு தாத்தா திருநீறு நிறைந்த தட்டோடு வந்தார். ’மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ என்று புதியதொரு தாளக்கட்டு கொண்ட பாட்டைப் பாடிக்கொண்டே ஒவ்வொருவருக்கும் தன் பெருவிரலால் திருநீறு பூசிவிட்டார்.
அவர் பாடுவது எல்லாம் ஒரே பாட்டின் வெவ்வேறு பகுதிகளா அல்லது வெவ்வேறு பாடல்களா என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏற்ற இறக்கங்களுடன் அவர் பாடும் விதமும் தாளக்கட்டும் நன்றாகவே இருந்தன. அவர் எந்தப் பாட்டைப் பாடினாலும் எங்களுக்கு அது ரசிப்பதற்குரியதாகவே இருந்தது.
எல்லோருக்கும் பூசியதை அடுத்து தம் மூன்று விரல்களும் திருநீறு மீது படிய நன்றாக அழுத்தி எடுத்து தன் நெற்றியிலும் பூசிக்கொண்டார் தாத்தா. பிறகு தன் கழுத்து, மார்பு தோள்கள் என எல்லா இடங்களிலும் அடுத்தடுத்து பூசிக்கொண்டார். ஏற்கனவே அந்த இடங்களிலெல்லாம் பூசைக்கோடுகள் இருந்தன. அந்தக் கோடுகள் மீதே இன்னொருமுறை பூசிக்கொண்டார்.
அப்போது முதல் பாட்டு முடிந்துவிட்டது. ’வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு’ என உடனே இன்னொரு பாட்டைத் தொடங்கினார் தாத்தா. பாடிக்கொண்டே கருவறைக்குள் சென்று திருநீறு தட்டை வைத்துவிட்டு சிறிய கூடையொன்றை எடுத்துவந்தார். அதில் கொய்யாப்பழங்கள் இருந்தன.
‘என்னடா பசங்களா, நமசிவாயத்துகிட்ட நல்லா வேண்டிகிட்டீங்களா?’ என்று கேட்டபடி எங்களுக்குப் பக்கத்தில் வந்தார். எல்லோரும் ‘ம் தாத்தா’ என்று சத்தமாக பதில் சொன்னபடி தலையை அசைத்தோம்.
வரிசையில் நான்தான் முதலில் நின்றிருந்தேன். ‘என்ன வேணும்ன்னு வேண்டிகிட்ட நீ?’ என்று கேட்டபடி என்னிடம் இரண்டு கொய்யாப்பழங்களைக் கொடுத்தார். நான் அவற்றைப் பெற்றுக்கொண்டபடி ‘நல்ல படிப்பு வேணும்ன்னு வேண்டிகிட்டேன் ஐயா’ என்றேன். ‘நமசிவாயம்’ என்று அடுத்து நின்றிருந்தவனிடம் சென்றார் தாத்தா.
எனக்குப் பக்கத்தில் ராஜசேகர் நின்றிருந்தான். அவன் தானாகவே முன்வந்து ‘நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போகணும்னு வேண்டிகிட்டேன் ஐயா’ என்று புன்னகையோடு சொன்னான். ‘நமசிவாயம்’ என்றபடி அவனுக்கு இரு பழங்களை எடுத்துக் கொடுத்தார் தாத்தா.
மூன்றாவதாக நின்றிருந்தவன் ‘எங்க அம்மா அப்பா தம்பி தங்கச்சிங்க பசியில்லாம வாழணும். அதுக்குத் தகுந்த மாதிரியான படிப்பும் வேலையும் வேணும்ன்னு வேண்டிகிட்டேன் ஐயா’ என்றான். ‘நமசிவாயம்’ என்றபடி இரண்டு பழங்களை எடுத்து அவனுடைய கைகளில் வைத்தார் தாத்தா.
ஒவ்வொருவராக நின்றுநின்று அவர்கள் சொல்வதையெல்லாம் பொறுமையோடு கேட்டுவிட்டு கொய்யாப்பழங்களைக் கொடுத்தார் தாத்தா.
‘வேண்டிக்கறதோடு நின்னுடக்கூடாதுடா. குறிக்கோளோடு பாடுபடணும். அப்பதான் நீங்க கேட்டது எல்லாத்தையும் அந்த நமசிவாயன் கொடுப்பான். புரியுதா?’
ஆசி வழங்குவதுபோல கையை உயர்த்திச் சொன்னபடி பழக்கூடையைக் கருவறைக்குள் வைத்துவிட்டுத் திரும்பினார் தாத்தா. பிறகு நமசிவாயம் என்று சொல்லிக்கொண்டே ஒரு தூணோரமாக சாய்ந்து உட்கார்ந்தார். அடுத்த நொடியே தன்னிச்சையாக கண்களை மூடி ’பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு’ என்று தொடங்கிவிட்டார். அது முடிந்ததும் எங்கே இன்னொரு பாட்டைத் தொடங்கிவிடுவாரோ என நான் நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. கண்களைத் திறந்து எங்களைப் பார்த்து புன்னகைத்தார்.
எங்கள் கைகளில் கொய்யாப்பழங்களைப் பார்த்துவிட்டு ‘ஏன் இன்னும் சாப்பிடாம வச்சிருக்கீங்க? சாப்பிடுங்க’ என்றார். ‘நீங்க பாடிட்டே இருந்தீங்களா, அதனாலதான்….’ என்று இழுத்தான் ராஜசேகர். ‘ஐயோ, நான் ஒரு பித்துக்குளி. சித்தம்போக்கு சிவன் போக்குன்னு பாடிகினே இருந்துட்டன். சரி சரி, சாப்புடுங்க’ என்றார் தாத்தா.
முதல் துண்டிலேயே கொய்யாப்பழத்தின் சுவை தெரிந்துவிட்டது. நாக்கு முழுக்க அதன் இனிமை பரவியது. ‘பழம் ரொம்ப அருமையா இருக்கு தாத்தா? எங்க வாங்கினீங்க?’ என்று கேட்டேன்.
‘இல்லைப்பா இல்லை. வாங்கினதில்லை’ என்று தலையசைத்தார் தாத்தா. ‘கெங்கராம்பாளையத்துலேர்ந்து யாரோ ஒரு வண்டிக்காரரு வந்தாரு. அவுங்க தோட்டத்துல விளைஞ்சதுன்னு சொன்னாரு. வண்டி முழுக்க மூட்டைமூட்டையா வச்சிருந்தாரு. முதல் விளைச்சல், விக்கறதுக்கு எடுத்துட்டு போறோம்னு சொன்னாரு. பூசை செய்யச்சொல்லி திருநீறு வாங்கி பூசிகினு போனாரு. அவருதான் இந்தக் கூடையை குடுத்தாரு.’
‘ரொம்ப ருசியா இருக்குது தாத்தா’
‘அப்படியா?’ என்றபடி எழுந்து சென்று கருவறைக்குள் இருந்த பழக்கூடையை எடுத்து வந்தார். ‘இந்தாங்க. ஆளுக்கு இன்னொன்னு எடுத்துக்குங்க’ என்று எங்கள் முன்னால் வைத்துவிட்டார்.
அவர் சொல்வதற்குக் காத்திருந்த மாதிரி எல்லோரும் வேகவேகமாக ஆளுக்கொரு பழத்தை எடுத்துவிட்டோம். கடைசியாக நான் எடுத்தபிறகு கூடையில் ஒரே ஒரு பழம்தான் எஞ்சியிருந்தது. திகைப்போடு சற்றே பின்வாங்கினேன். ஒருவேளை அவர் தன் இரவு உணவுக்காக எடுத்துவைத்திருந்த பழங்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது. குழப்பத்தில் ‘தாத்தா…. உங்களுக்கு…. ராத்திரி சாப்பாட்டுக்கு……’ என்று முழுமையாகச் சொல்லத் தெரியாமல் தடுமாறினேன். ‘அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாத. உங்களமாதிரி வரவங்களுக்கு குடுக்கறதுக்காகத்தான் வச்சிருந்தேன். நீ சாப்புடு ராஜா’ என்றார் தாத்தா. அதற்குப் பிறகுதான் எனக்குத் தெம்பு வந்தது. பழத்தைக் கடித்துச் சாப்பிட்டேன்.
சாப்பிடும்போது தாத்தா எங்களுக்கு ஒரு கதை சொன்னார். கதை முடிந்ததும் நாங்கள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
ஒவ்வொரு நாளும் இது எங்களுக்குப் பழகிவிட்டது. கொய்யாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், சுண்டல் என தினமும் எதையாவது பிரசாதமாகக் கொடுப்பார் தாத்தா. அவர் பாடும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அதை வாங்கிச் சாப்பிட்டால்தான் அன்றைய பொழுது நிறைவுற்றதுபோல நினைக்கும் அளவுக்கு எங்கள் நெருக்கம் அமைந்துவிட்டது.
ஒருமுறை பிரசாதமெல்லாம் சாப்பிட்டபிறகு ‘வாங்கடா, உங்களுக்கு ஒரு அதிசயத்தைக் காட்டப் போறேன்’ என்று சொல்லிக்கொண்டே தாத்தா எங்களை கோவிலுக்குப் பின்னால் அழைத்துச் சென்றார். நாங்களும் ஆர்வத்தோடு அவரைத் தொடர்ந்து நடந்துசென்றோம்.
ஒரு மரத்தடியில் கீற்றுகளை இழுத்து மூடிவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். புன்னகைத்தபடியே கீற்றுகளை விலக்கினார். சுட்டு கனிந்த பனம்பழங்கள். உடனே கண்கள் பளபளக்க ‘ஐ, பனம்பழம். எங்க கெடைச்சது தாத்தா?’ என்று துள்ளினான் ராஜசேகர்.
‘ஓடைப் பக்கமா போயிருந்தேன். யாரோ ஒருத்தர் சைக்கிள்ல வச்சி எடுத்தும் போயிட்டிருந்தாரு. என்ன பார்த்ததுமே நிறுத்தி சுட்டு சாப்புடுங்க சாமின்னு இந்தக் குலையை கொடுத்துட்டு போனாரு. மதியம் வரைக்கும் இங்கதான் கெடந்தது. அப்புறமாதான் உங்க ஞாபகம் வந்தது. உடனே சுட்டு வச்சேன்.’
திரும்பி வந்து பழங்களின் மீது படிந்திருந்த சாம்பல் போக நன்றாகக் கழுவினோம். கரும்பைக் கடிப்பதுபோல கடித்து இழுத்தோம். தோலோடு ஒட்டிவந்த பழத்தைச் சுவைக்கும்போது ருசியாக இருந்தது. எந்தப் பழத்துக்கும் இல்லாத இனிப்பை எங்கள் மனம் பனம்பழத்தில் உணர்ந்தது.
ஒருமுறை நாங்கள் கோவில் பக்கம் வரும் நேரத்தில் தாத்தாவின் குரல் கேட்டது. வழக்கம்போல ஏதோ பாடுகிறார் என்றுதான் தோன்றியது. ’புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி வழுவாதிருக்க வரம்தரவேண்டும் இவ்வையகத்தே’ என்ற வரியை மட்டுமே அவர் திரும்பத்திரும்பச் சொல்கிறார் என்பதைத் தாமதமாகவே மனம் உள்வாங்கியது. தொட்டிக்குப் பக்கத்தில் வந்த பிறகுதான் அவர் தரையில் படிய உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படிக்கும் காட்சி தெரிந்தது. ஏதோ ஒரு பாட்டை மனப்பாடம் செய்கிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.
எங்கள் பேச்சுச்சத்தத்தைக் கேட்டதுமே தாத்தா பாடுவதை நிறுத்திவிட்டு எங்கள் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். வழக்கம்போல கைகால்முகம் கழுவிக்கொண்டு நாங்கள் அவரை நெருங்கிச் சென்றோம்.
‘பாடுங்க தாத்தா. ஏன் நிறுத்திட்டீங்க?’ என்று கேட்டேன். ‘சும்மா தனியா இருக்கமேன்னு படிச்சிட்டிருந்தேன்’ என்று புன்னகைத்தார் தாத்தா.
அவருக்கு முன்னால் புத்தகத்தைப் பிரித்து வைத்துப் படிப்பதற்கு இசைவாக மரத்தாலான ஒரு தாங்கி இருந்தது. அதன்மீது அந்தப் புத்தகம் இருந்தது.
‘என்ன புத்தகம் தாத்தா அது?’
‘தேவாரம். உனக்குத் தெரியுமா?
‘எங்க பாடத்துல வந்திருக்குது தாத்தா. ஒரே ஒரு பாட்டு எங்க ராதாகிருஷ்ணன் ஐயா நடத்தனாரு. மாசில் வீணையும் மாலை மதியமும்னு தொடங்குமே அந்தப் பாட்டு. எங்களுக்கு அது மனப்பாடச் செய்யுளா இருந்தது.’
‘அப்படியா? அழகான பாட்டாச்சே அது. உனக்குத் தெரியுமா?’
‘ம் தாத்தா.’
‘ஆகா. ரொம்ப நல்லதா போச்சி. எங்கே ஒருதரம் சொல்லு பார்ப்போம்.’
அவர் சட்டென அப்படிக் கேட்கக்கூடும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஆனால், தாத்தா ‘சொல்லு சொல்லு’ என்று தூண்டவே, தொண்டையைச் சரிப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு வரியாகச் சொன்னேன்.
தாத்தாவுக்கு முகம் மலர்ந்துவிட்டது. ‘நல்லா சொல்றடா தம்பி. பாட்டா பாடினா உன் குரலுக்கு இன்னும் நல்லா இருக்கும். வேறு ஏதாவது பாட்டு தெரியுமா?’ என்று கேட்டார். ‘தெரியாது’ என்பதன் அடையாளமாக உதட்டைப் பிதுக்கியபடி தலையாட்டினேன்.
‘படி. படி. படிச்சி நீயா தெரிஞ்சிக்க. அது சரி, தேவாரத்தை பத்தி வேற என்ன சொன்னாரு உங்க ஐயா?’
‘தேவாரம்னு சொன்னா தேவ + ஆரம்னு அர்த்தம். தேவாரம்னு சொன்னா கடவுளுக்குச் சூட்டப்பட்ட மாலைன்னு அர்த்தம். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர்னு மூணு மகான்கள் கோவில்கோவிலா நடந்தே போய் தனித்தனியா பாடிய பாடல்களைத் தொகுத்துத்தான் தேவாரம் உருவாக்கப்பட்டிருக்குது.’
‘வாத்தியார் சொல்லிக் கொடுத்ததை மறக்காம வச்சிருக்கியே. நல்லது. நல்லது. அப்படித்தான் இருக்கணும்’ என்று சொன்னார். பிறகு எங்கள் குழுவில் இருந்த மற்றவர்களைப் பார்த்து ‘உங்கள்ல யாருக்காவது தேவாரப்பாட்டு ஏதாவது தெரியுமா?’ என்று கேட்டார். ‘எங்களுக்கும் மாசில் வீணையும் மட்டும்தான் தெரியும்’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் அதே பாட்டின் வரிகளையே ஒப்பித்தனர்.
‘சரி, இப்ப நான் ஒரு பாட்டு சொல்றேன். கேக்கறீங்களா?’
‘சரி தாத்தா.’
‘கேட்டா மட்டும் போதாது. வீட்டுக்குப் போய் எழுதி வச்சிகிட்டு தெனமும் எடுத்து படிக்கணும். இந்த பாட்டுங்கள்லாம் மந்திரம் மாதிரி. சொல்லிகிட்டே இருக்கணும். அப்பதான் நாக்கு பழகும். புரியுதா?’
நாங்கள் வகுப்பில் ஆசிரியர் கேள்விக்குத் தலையசைப்பதுபோல தலையசைத்தோம்.
தாத்தா ஒருகணம் விழிமூடி ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்’ என்று ஒவ்வொரு சொல்லாக ஒரு பாட்டைப் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை பாடினார். முழுப்பாடலையும் பாடி முடித்த பிறகுதான் அவருடைய கண்கள் திறந்தன.
தாத்தாவுடைய குரல் ஏறக்குறைய எங்கள் ராதாகிருஷ்ணன் ஐயாவின் குரலைப்போலவே இருந்தது. அதே கணீர். அதே ஏற்ற இறக்கம். சாமியாராக மாறாமல் இருந்திருந்தால் அவர் நிச்சயம் எந்தப் பள்ளிக்கூடத்திலாவது ஆசிரியர் வேலைக்குச் சென்றிருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்.
அந்த நேரத்தில் தாத்தாவிடம் ‘நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க தாத்தா?’ என்றொரு கேள்வியைக் கேட்டான் ராஜசேகர். ஏன் இப்படி துடுக்குத்தனமாக கேட்டான் என்பது புரியாமல் நான் சங்கடத்தோடு ராஜசேகரின் முகத்தைப் பார்த்தேன். அவன் எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக தொடர்ந்து உற்சாகத்தோடு ‘வாத்தியாரு வேலைக்கு படிச்சிருந்தீங்கன்னா, எங்க பள்ளிக்கூடத்துலயே நீங்க ஒரு வாத்தியாரா சேர்ந்திருக்கலாம்’ என்று சொன்னான்.
அவன் கேள்விகளைக் கேட்டு முடித்ததும் தாத்தா கடகடவென்று சிரித்துவிட்டார். அந்தச் சிரிப்பின் பொருள் புரியாமல் நாங்கள் குழப்பத்துடன் அவர் முகத்தையே பார்த்தோம்.
‘நான் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை’ என்று சொல்லிவிட்டு புன்னகையோடு இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார்.
அவர் சொற்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. விளையாட்டுக்காக எங்களிடம் பொய் சொல்கிறாரோ என்று தோன்றியது. ‘தாத்தா, உண்மையாவா சொல்றீங்க?’ என்று சந்தேகத்தோடு கேட்டேன்.
‘உண்மையாதான்டா சொல்றேன். மழைக்குக் கூட நான் பள்ளிக்கூடத்துப் பக்கம ஒதுங்கி நின்னதில்லை.’
‘ஏன்?’
‘அந்தக் காலத்துல எங்க ஊருல பள்ளிக்கூடமே இல்லை. படின்னு சொல்றதுக்கும் ஆள் கிடையாது. படிக்காதன்னு சொல்றதுக்கும் ஆள் கிடையாது.’
நான் ஆச்சரியத்தோடு அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். ‘இந்த புஸ்தகம்லாம் படிக்கிறீங்களே, அது எப்படி? பாட்டுலாம் மனப்பாடமா சொல்றீங்களே, அது எப்படி?’ என்று மூலையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைச் சுட்டிக்காட்டியபடி கேட்டேன்.
‘அதைச் சொல்றியா?’ என்று கேட்டபடி திரும்பி தன் புத்தகங்களையெல்லாம் பார்த்தார். பிறகு ஒரு பெருமூச்சுடன் ‘விளக்கமா சொல்றேன். அப்பதான் உங்களுக்குப் புரியும்’ என்றார்.
‘எங்க வீட்டுல எங்க அம்மா அப்பாவுக்கு பன்னெண்டு பிள்ளைங்க. நான் பன்னெண்டாவது பையன். வேட்டவலத்துக்குப் பக்கத்துல ஒரு சின்ன கிராமம் எங்க சொந்த ஊரு. எங்க ஊரு படிப்பு வாசனையே இல்லாத ஒரு பழைய காலத்து ஊரு. எல்லாரும் கூலி வேலை செஞ்சி கஞ்சி குடிச்சிட்டிருந்த குடும்பம். எனக்கு பதினேழு பதினெட்டு வயசு இருக்கும். எங்க அம்மா காலராவுல செத்துட்டாங்க. அந்தத் துக்கம் தாங்காம எங்க அப்பாவும் ஒரு பத்துநாள் இடைவெளியில செத்துட்டாரு. என் மனசுல ஏதோ ஒரு பாரம். அந்த ஊருல இனிமே இருக்கறதுல எந்த அர்த்தமும் இல்லைன்னு தோணிடுச்சி. உடனே வீட்டைவிட்டு கெளம்பிட்டேன். நடந்தே திருவண்ணாமலைக்கு போய் சேர்ந்தேன். அங்க அடிவாரத்துல ஒரு சாமியாரு இருந்தாரு. அவருகிட்ட போய் சேர்ந்தேன்.’
‘உங்க வீட்டுல யாருமே உங்களைத் தேடி வரலையா?’ என்று அதிர்ச்சியோடு அவரைக் கேட்டேன். ‘நான் எங்க போறேன்னு தெரிஞ்சிருந்தாதான என்னைத் தேடி வருவாங்க. நான்தான் யாருக்கும் சொல்லாம கொள்ளாம வந்த ஆளாச்சே. அந்த உறவு அத்தோடு முடிஞ்சி போச்சி’ என்று அமைதியாக பதில் சொன்னார் தாத்தா.
‘அந்தப் பெரிய சாமியாருக்கு என்னை ரொம்ப புடிச்சி போச்சி. அவர் கூடவே என்னை வச்சிகிட்டாரு. அவருதான் மணல்ல எழுத வச்சி ஆனா, ஆவன்னாவிலேருந்து ஒரொரு எழுத்தா சொல்லிக் கொடுத்தாரு. படிக்க ஆரம்பிச்ச பிறகு தேவாரம், திருவாசகம், பெரிய புராணம்னு எல்லாத்தயும் சொல்லிக் குடுத்தாரு. அவருகிட்ட எல்லா புஸ்தகமும் இருந்தது. ஒரு நாள் இல்லை. ரெண்டு நாள் இல்லை. பதினஞ்சி வருஷம் அவரோடவே இருந்து எல்லாத்தயும் கத்துகிட்டேன்.’
அவர் சொல்வதைக் கேட்கக்கேட்க எனக்குள் ஏற்பட்ட திகைப்பு அடங்கவே இல்லை. ‘இந்த புஸ்தகங்கள்ல இருக்கிற எல்லாப் பாட்டுங்களும் உங்களுக்குத் தெரியுமா தாத்தா?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
‘அந்த அளவுக்கு நான் பெரிய ஞானி இல்லையே’ என்று தாத்தா வாய்விட்டுச் சிரித்தார். ‘தேவாரத்துல எட்டாயிரம் பாட்டு இருக்குது. திருவாசகத்துல ஒரு அறுநூத்தி அம்பது பாட்டு இருக்குது. எல்லாத்தயும் படிச்சிருக்கேன். பல முறை படிச்சிருக்கேன். எங்க பெரிய சாமி சொல்லச்சொல்ல காதார கேட்டிருக்கேன். ஆனா மனப்பாடமா தெரிஞ்சது கொஞ்சம்தான். தேவாரத்துல ஒரு ஐநூறு, திருவாசகத்துல ஒரு எரநூறு. அவ்வளவுதான். அதுக்கு மேல தெரியாது. அந்த அளவுக்குத்தான் என் அறிவு. ஆனா எங்க பெரிய சாமியாருக்கு எல்லாமே தெரியும். அவரு பெரிய ஞானி.’
அவர் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கேட்கும்போதே மலைப்பாக இருந்தது. தாத்தா மீது நாங்கள் கொண்டிருந்த மதிப்பு பெருகியது.
‘நீங்க ஏன் அவரை விட்டு பிரிஞ்சி வந்தீங்க?’
‘நான் எதையும் திட்டமிட்டு செய்யலைடா. எல்லாமே தானா ஏதோ விதிப்படி நடக்குது’ என்றார் தாத்தா. ‘த்ச்’ என்று ஒருமுறை நாக்கு சப்புக் கொட்டிவிட்டு ஒரு கணம் அமைதியாக இருந்தார். பிறகு பெருமூச்சுடன் மீண்டும் சொல்லத் தொடங்கினார்.
‘திடீர்னு தூக்கத்துலயே ஒருநாள் அவரு உயிரு பிரிஞ்சிட்டுது. வாழற காலமெல்லாம் நமசிவாயம் நமசிவாயம்னு சொல்லிட்டே இருந்த என் தெய்வம் கடைசியில நமசிவாயனோடு போய் கலந்துட்டுது.’
‘அப்புறம்?’
‘அதுக்கப்புறம் திருவண்ணாமலையில இருக்கறத என் மனசு ஏத்துக்கலை. அவரு குடுத்த புஸ்தகங்கள மட்டும் மூட்டை கட்டி எடுத்துகிட்டு மதுரை, தென்காசி, திருநெல்வேலின்னு பல ஊருங்கள்ல பல வருஷங்கள் அலைஞ்சேன். கேரளா பக்கம் ரெண்டு மூணு வருஷம் போயிருந்தேன். எப்படியோ கடைசியா இந்த ஊருக்கு வந்தன். இதுதான் நாம இருக்கவேண்டிய ஊருன்னு ஒரு உள்ளுணர்ச்சி சொல்லிச்சி. அப்படியே தங்கிட்டேன். இன்னைய தேதி வரைக்கும் வாழ்க்கை நல்லபடியாதான் போயிட்டிருக்குது. அந்த நமசிவாயன் புண்ணியத்துல ஒரு குறையும் இல்லை.’
‘கடைசிவரைக்கும் உங்க சொந்த ஊருக்குப் போகவே இல்லையா?’
என் கேள்வியைக் கேட்டு தாத்தா ஒருகணம் பெருமூச்சு விட்டார். பிறகு ‘ம்ஹூம்’ என்று தலையாட்டினார்.
தாத்தாவின் சொந்த வாழ்க்கைக்கதை எங்களைத் திகைக்க வைத்துவிட்டது. அவர் புன்னகைத்தபடியே ஒவ்வொரு நாளும் நடமாடுவதைப் பார்த்தால் என்னமோ ஆனந்தத்தில் பிறந்து ஆனந்தத்திலேயே வளர்ந்தவர் என்கிற எண்ணமே தோன்றும். அப்படிப்பட்டவருடைய வாழ்க்கையில் இவ்வளவு துயரங்களா என்று நினைத்தபோது, பேச்சே எழவில்லை. அவர் சொன்னதைக் கேட்ட பிறகு அப்படியே ஊமைகளைப்போல உறைந்துவிட்டோம்.
தாத்தா சட்டென ஒரு புன்னகையோடு எழுந்தார். ‘சரி சரி. சொந்தக் கதைகளை இதோடு நிறுத்திக்குவோம். வாங்கடா, சாமி கும்பிடலாம். வாங்க’ என்று சொல்லிக்கொண்டே கருவறைக்குள் சென்றார். நாங்கள் அவருக்குப் பின்னாலேயே சென்று அமைதியாக சிவபெருமானை வணங்கினோம். பூசைக்குப் பிறகு தாத்தா எங்களுக்கு நாவல் பழங்கள் கொடுத்தார்.
உற்சாகமுடன் கூடிய விளையாட்டும் தாத்தா சொல்லும் பாட்டுகளும் கதைகளுமாக எங்கள் மாலைப் பொழுதுகள் ஒவ்வொரு நாளும் கலகலப்பாகக் கழிந்தன. அப்படிப்பட்ட இனிமையான சூழல் திடீரென ஒருநாள் தலைகீழாக மாறிவிட்டது.
எங்கள் அப்பாவுடைய உடல்நலம் திடீரென குன்றியது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற உள்ளூர் மருத்துவம் பயனளிக்கவில்லை. எங்களுடைய இரு பெரியப்பாக்களும் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே எங்கள் அத்தை இருந்தார். அத்தையின் பராமரிப்பில் சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அப்பாவைச் சேர்த்துவிட்டனர். குணமடைய பல நாட்கள் பிடிக்கும் என்பதால் பெரியப்பாக்கள் திரும்பி வந்துவிட்டனர்.
அப்பா எப்போது திரும்பி வருவார் என்று தெரியாத குழப்பமான சூழலில் குடும்பத்தில் இருள் சூழ்ந்தது. குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதற்கு அம்மா மிகவும் துன்பமுற்றார். அவருடைய துன்பத்தைப் பார்த்துப்பார்த்து என் மனம் அமைதியில்லாமல் தவித்தது. ஏதோ ஒரு பாரத்தை யாரோ தலைமீது வைத்துவிட்டதைப்போல இருந்தது.
படித்தேன். தேர்வு எழுதினேன். நல்ல மதிப்பெண்களையே பெற்றேன். அதிலெல்லாம் எந்தக் குறையும் இல்லை. அவை அனைத்தும் தன் போக்கில் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் தினசரி நடவடிக்கைகளில் கொஞ்சம்கொஞ்சமாக என் உற்சாகம் மங்கிக்கொண்டே போனது. முதலில் உரையாடலில் ஆர்வம் குறைந்தது. பிறகு பாடல்கள், கதைகள் மீதிருந்த ஆர்வம் குறைந்தது. யாராவது ஏதாவது கேட்டால் ‘த்ச்’ என்று செய்துவிட்டு தலையசைக்கத்தான் தோன்றியதே தவிர, பதில் சொல்லத் தோன்றவில்லை. சடுகுடு விளையாட்டிலும் ஈடுபட இயலவில்லை. பேருக்குத்தான் ஏதோ ஒரு அணியில் இருந்தேனே தவிர, தீவிரமாக விளையாட முடியவில்லை. சடங்குபோல கூட்டத்தோடு கூட்டமாக நின்றேன். நடந்தேன். ஓடினேன். அவ்வளவுதான். எப்போதும் ஏதோ ஒரு யோசனை ஒரு பாறையைப்போல என் மூளையை அடைத்துக்கொண்டிருந்தது.
ஒருநாள் விளையாடுவதிலும் ஆர்வம் குறைந்துவிட்டது. நண்பர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, ‘நான் கெளம்பறேன்டா’ என்று தெரிவித்துவிட்டு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். என்னை அறியாமலேயே தனியாகவே ஊடுபாதை வழியாக நடந்து கோவிலுக்கு வந்து சேர்ந்தேன்.
என்னைப் பார்த்ததும் தாத்தா ‘என்னடா தனியா வந்திருக்க? உன் கூட்டாளிங்க வரலையா?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.
‘அவுங்கள்லாம் விளையாடறாங்க தாத்தா.’
‘நீ விளையாடலையா?’
‘ஒரே தலைவலி தாத்தா. அதனால வந்துட்டேன்.’
தாத்தா அதற்குப் பிறகு ஒன்றும் கேட்கவில்லை. கருவறைக்குள் சென்று எனக்காக ஒரு சாத்துக்குடி கொண்டுவந்து கொடுத்தார். நான் அதைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.
அந்த வாரத்தில் அடுத்தடுத்து மூன்று நாட்கள் நான் தனியாகவே கோவிலுக்கு வந்து நின்றேன். ஒவ்வொரு நாளும் ஒரு காரணம் சொன்னேன். அவர் கொடுக்கும் பழத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்.
நான்காவது நாள் தாத்தா பொறுமையிழந்தவரைப்போல ‘என்ன நீ, தெனமும் தலைவலி, கண்ணுவலி, காதுவலின்னு என்னென்னமோ காரணத்த சொல்லிட்டு திரியறே? அந்த அளவுக்கு தலையில என்னத்த தூக்கிவச்சிகினு திரியற?’ என்று அதட்டலாகக் கேட்டார்.
‘ஒன்னுமில்லை தாத்தா’ என்ற பதிலோடு அங்கிருந்து புறப்பட நான் முயற்சி செய்தேன். ஆனால் தாத்தாவின் கனிவான பார்வையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. ‘சொல்லு தம்பி, எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு’ என்று ஆதரவாகப் பேசியபடி எனக்குப் பக்கத்தில் வந்தார்.
‘பரீட்சையில மார்க் குறைவா வாங்கியிருக்கியா?’
‘ம்ஹூம்.’
‘எதையாவது தொலைச்சிட்டியா?’
‘ம்ஹூம்.’
‘பசங்க கூட சேர்ந்து ஏதாவது தப்பு பண்ணிட்டியா?’
‘இல்ல தாத்தா.’
‘அப்புறம் என்ன? பசிக்குதா?’
‘இல்ல தாத்தா.’
‘வேற என்னடா காரணம்? எதுக்காக உலகத்தையே வெறுத்த மாதிரி எப்ப பார்த்தாலும் ம்னு இருக்க?’
‘ஒன்னுமில்ல தாத்தா.’
‘என்னால எதையும் கண்டுபுடிக்க முடியாதுன்னு நெனைக்காதடா. ஒரு காலத்துல நானும் இப்படித்தான் ம்னு இருந்தேன். திடீர்னு ஒருநாள் கெளம்பிப் போய் இப்படி ஆயிட்டேன். உனக்கும் அந்த மாதிரி ஒரு நிலைமை வந்துடக்கூடாது. சொல்லு, என்ன நடந்திச்சி? சொல்லு.’
அவர் அழுத்தமாகக் கேட்கக்கேட்க எனக்குள் இருந்த உறுதி குலைந்து அழத் தொடங்கினேன். தேம்பித்தேம்பி அழுதேன். என் அழுகையை வெகுநேரம் தாத்தா பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகு என்னை நெருங்கி தன் தோளிலிருந்த துண்டால் என் கண்ணீரைத் துடைத்தார். பிறகு ‘சரி, இங்க வா’ என்று சொல்லிக்கொண்டே தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றார். ஒரு தூணுக்கு அருகில் என்னை உட்காரவைத்துவிட்டு அவரும் பக்கத்தில் அமர்ந்தார்.
நான் எங்கள் வீட்டுக்கதை மொத்தத்தையும் அவரிடம் சொல்லிமுடித்தேன். குறுக்கே எதுவும் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் தாத்தா.
‘இதுக்காடா கப்பல் கவுந்துட்ட மாதிரி கவலைப்பட்ட? எல்லாம் சரியாகும். விடுடா. அந்த நமசிவாயம் எல்லாத்தயும் நேராக்கிடுவான். நம்பிக்கையோடு இரு.’
தாத்தா என் தோளைத் தொட்டு ஆதரவோடு தட்டிக் கொடுத்தார். ‘இதைவிட மோசமான நிலையில இருந்தவங்கள எல்லாம் அந்த நமசிவாயம் காப்பாத்தி கரை சேர்த்திருக்கான். உங்க அப்பா நல்லபடியா வீட்டுக்குத் திரும்பி வருவாரு. மனதைரியத்த மட்டும் ஒருநாளும் இழந்துடக்கூடாது. புரியுதா?’ என்றார்.
அவர் சொல்லைக் கேட்டு என் மனத்தை அழுத்திக்கொண்டிருந்த பாரமெல்லாம் கரைந்து காணாமல் போய்விட்டது போல இருந்தது. அவரை ஏறிட்டு ‘ம்’ என்று தலையசைத்தேன்.
‘மன உறுதிங்கறது ஒரு துடுப்பு மாதிரி. எப்பேற்பட்ட காத்து, மழை, புயலா இருந்தாலும் துடுப்பு சரியா இருந்தா கட்டுமரத்தை கரைக்குக் கொண்டுவந்துடலாம். உலகத்துல எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனா மன உறுதியை மட்டும் இழக்கவே கூடாது.’
அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. எப்படி என்று புரியாமலேயே ஒரு புள்ளியில் சிக்கிக்கொண்ட மனம் அக்கணத்தில் சட்டென விடுதலை பெற்று பறக்கத் தொடங்கியது.
தாத்தாவின் கண்களைப் பார்த்தபோது கற்பூரச்சுடர் போல இருந்தது. அவரைப் பார்த்து மீண்டும் ‘ம்’ என்று தலையசைத்தேன். ‘தலையை ஆட்டாதடா. வாயைத் தெறந்து சொல்லு’ என்று என் கன்னத்தில் தட்டினார் தாத்தா. அதைக் கேட்டதும் என்னை அறியாமல் என் முகத்தில் சிரிப்பு படர்ந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்போதுதான் நான் சிரித்தேன்.
தாத்தா கருவறைக்குள் சென்று கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டினார். சிவலிங்கத்தின் மீது ஒரு பெரிய மல்லிகைச்சரம் தொங்கியது. அதைச் சுற்றி செம்பருத்திப்பூக்கள் அடுக்கப்பட்டிருந்தன. நான் சுடரைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். பிறகு தாத்தா திருநீறுத் தட்டை எடுத்து எனக்கு திருநீறு பூசிவிட்டார்.
வழக்கத்துக்கு மாறாக தாத்தா அன்றைக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்தார். அதைப் பார்த்த மலைப்புடன் ‘தாத்தா, எதுக்கு இவ்வளவு?’ என்று கேட்டேன். ‘எடுத்தும் போ தம்பி. வீட்டுல அம்மா, தம்பிங்க, தங்கச்சிங்களுக்கெல்லாம் குடு. நீயும் சாப்பிடு’ என்று புன்னகைத்தபடி சொன்னார்.
‘பசங்களுக்கு….?’
‘அவுங்களுக்கு தனியா வச்சிருக்கேன். கவலைப்படாத.’
புத்தகப்பைக்குள் வாழைப்பழச்சீப்பை வைத்துவிட்டு, புறப்படத் தயாரானேன். ‘சொன்னதெல்லாம் ஞாபகத்துல இருக்கட்டும். எந்தக் காரணத்துக்காகவும் மன உறுதியை மட்டும் இழந்துடக்கூடாது, புரியுதா?’ என்று ஏற்கனவே சொன்னதை மீண்டும் நினைவூட்டினார் தாத்தா. எனக்குப் பக்கத்தில் வந்து கலைந்திருந்த என் தலைமுடியைச் சீராக்கியபடி தட்டிக் கொடுத்தார். ‘சரி, தாத்தா’ என்றபடி நான் புறப்பட்டேன்.
பிரதான சாலையைத் தொட்டபடி தோப்பின் மதில் நின்றிருந்தது. திறந்துவைக்கப்பட்டிருந்த இரும்புக்கதவு வரைக்கும் சென்ற பிறகு ஒருமுறை தாத்தாவைத் திரும்பிப் பார்த்தேன். தாத்தா என்னை வழியனுப்பிய இடத்திலேயே இன்னும் நின்றிருந்தார். நான் அவரைப் பார்ப்பதைக் கவனித்ததும் கையை உயர்த்தி அசைத்தபடி ஏதோ வார்த்தைகளைச் சொன்னபடி தலையையும் அசைப்பதைப் பார்த்தேன். அவர் சொற்கள் காதில் விழாதபோதும் ‘தைரியமா போ’ என்றுதான் சொல்லியிருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டேன். நானும் உற்சாகத்துடன் விடைபெறுவதற்கு அடையாளமாக கையை உயர்த்தி அசைத்துவிட்டு இரும்புக்கதவைக் கடந்து வெளியே நடக்கத் தொடங்கினேன்.
மதிலை ஒட்டியிருந்த பச்சைப்பசேலென வளர்ந்திருந்த புல்லுக்கு நடுவில் தும்பைச்செடிகள் நின்றிருந்தன. அவல் துணுக்குகள் இறைபட்டதுபோல ஆங்காங்கே பூத்திருந்த அதன் பூக்கள் அழகாக இருந்தன. அவற்றைப் பார்த்தபடி சாலையோரமாக நடந்துகொண்டே இருந்தேன். வாழைப்பழச்சீப்பைப் பார்த்ததும் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று யோசித்தபடி நடந்தேன்.
தொலைவில் ஒரு மின்கம்பத்துக்கு அருகில் ஒரு கூட்டம் நின்றிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் பேச்சுச்சத்தமாக இருந்தது. என்ன என்று புரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆவலோடு அந்த இடத்தை நோக்கி வேகமாக நடந்தேன்.
கும்பலை நெருங்கிய பிறகுதான் மின்கம்பியில் சிக்கிக்கொண்ட ஒரு புறா தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பதையும் அச்சத்தில் அது குர்குர் என்று வாய்ஓயாமல் சத்தம் எழுப்புவதையும் பார்த்தேன். பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது.
புளியந்தோப்பைச் சுற்றி எப்போதும் ஏராளமான புறாக்கள் பறந்துகொண்டிருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஒருமுறை எங்கள் ராதாகிருஷ்ணன் ஐயா ஒரு பாட்டுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். அப்போது வகுப்பறைக்குப் பின்னால் இருக்கும் ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு புறா ‘குர்ர்ர் குர்ர்ர்’ என்று சீரான இடைவெளியில் சத்தமெழுப்பியபடி இருந்தது. அதைக் கவனித்த ஐயா ‘இந்த வகுப்புக்கு சம்பந்தமே இல்லாத ஒரு உயிர் வெளியே உக்காந்து பாடத்தை கவனிக்குது பாருங்க’ என்று புறாவைச் சுட்டிக்காட்டி நகைச்சுவையாகப் பேசினார். அந்த நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பழைய நினைவுகள் வந்து சென்றன.
ஒரு பக்கம் மின்கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் புறாவைப் பார்த்தபடியும் இன்னொருபக்கம் அக்கம்பக்கத்தில் நின்றிருந்தவர்களின் உரையாடல்களைக் கேட்டபடியும் நின்றிருந்தேன்.
‘அங்க எப்படி மாட்டிச்சி அந்தப் புறா?’
‘எல்லாப் புறாவையும்போல அதுவும் கூட்டத்தோடு கூட்டமா பறந்து வந்து உக்காந்தது. வேடிக்கை பார்த்தது. சத்தம் போட்டுது. எல்லாம் எழுந்து பறக்க ஆரம்பிச்சபோது அதுவும் பறந்துபோகப் பார்த்தது. ஆனா அதுக்குள்ள அதனுடைய கால் கம்பியில மாட்டிகிச்சி.’
‘அதுமட்டும் எப்படி மாட்டிச்சி?’
‘யாரோ வீட்டுல வச்சி வளர்க்கிற புறான்னு நெனைக்கறேன். அதும் கால்ல கட்டியிருக்கிற நூலைப் பார்த்தா அப்படித்தான் தோணுது. பறக்கற ஆசையில எப்படியோ நூலை அறுத்துகிட்டு இது வெளியே வந்துட்டுது.’
‘ஐயோ பாவம்.’
‘அங்க இங்க அலைஞ்சிட்டு ஏதாவது ஒரு மரத்துல உக்காந்திருக்கும். அப்புறம் அங்க இருந்த இன்னொரு கூட்டம் பறக்கறத பார்த்து இதுவும் ஜோடி சேர்ந்து பறந்துவந்திருக்கும். எல்லாம் இந்தக் கம்பிமேல உக்காந்தபோது இதுவும் உக்காந்திருக்கும். அப்படி இப்படி கம்பி மேல நடக்கிற வேகத்துல அதுக்குத் தெரியாமலேயே கால்ல இருந்த நூலு கம்பியில சுத்தி சுத்தி படுமுடிச்சாயிட்டுது. ஆடி முடிச்சதும் எல்லாப் புறாவும் பறந்துபோயிடுச்சி. இந்தப் புறாவால மட்டும் முடியலை. தடுமாறி புடிமானம் இல்லாம தலைகீழா தொங்கிட்டிருக்குது.’
‘நம்மால காப்பாத்த முடியாதா?’
‘அந்தரத்துல தொங்குது. எப்படி முடியும், சொல்லுங்க. வேற ஏதாவது மரமா இருந்தாலும் பரவாயில்லை. இது கரண்ட் கம்பம். தைரியமா யாரால கிட்ட போகமுடியும்? டிப்பார்ட்மென்ட் லைன்மேன்ங்க யாராவது வந்தா நல்லா இருக்கும்.’
‘நீங்க சொல்றதுதான் சரி. அவுங்கதான் கரென்ட்ட நிறுத்திட்டு புறாவைக் காப்பாத்திவிடுவாங்க.’
‘மடத்தார் கடையிலேர்ந்து மொதலாளியே போன் போட்டு கரன்ட் ஆபீஸ்க்கு தகவல சொல்லியிருக்காராம். கரன்ட்ட நிறுத்திட்டாங்க. எந்த நேரத்துலயும் அவுங்க வரலாம்.’
புறாவின் குரலில் இருந்த வேகம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. ஏதோ ஒரு விதத்தில் அது தன் நம்பிக்கையை இழந்துவிட்டதோ என்று தோன்றியது. பார்க்கப்பார்க்க பாவமாக இருந்தது. ‘எப்படியாவது அந்தப் புறாவைக் காப்பாற்று நமசிவாயமே’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். சம்பந்தமே இல்லாமல் மாசில் வீணையும் மாலை மதியமும் வரிகள் நெஞ்சில் படர்ந்தன.
சீருடை அணிந்த இரண்டு பேர் சைக்கிளில் வேகமாக வந்து இறங்கினார்கள். ‘நவுறுங்கப்பா, நவுறுங்கப்பா’ என்றபடி கூட்டத்தினரை விலக்கிக்கொண்டு கம்பத்துக்கு அருகில் சென்றனர். கம்பியில் ஒரு காலுடன் பிணைத்த நூல் சிக்கிக்கொண்டிருக்க அந்தரத்தில் இறகுகளை அடித்தபடி பரிதாபமாக ஊசலாடும் புறாவைப் பார்த்தார்கள்.
‘நல்ல காலம். ரொம்ப தூரம் போகலை. கம்பத்துக்கு பக்கத்துலயே மாட்டிகிட்டிருக்குது. ரொம்ப தூரம் போயிருந்தா நமக்கும் ஆபத்து. அதுக்கும் ஆபத்து.’
உயரமாக இருந்த ஊழியர் குள்ளமாக இருந்த மற்றொரு ஊழியரிடம் சொல்லிவிட்டு கம்பத்துக்கு அருகில் சென்றார். நாலே எட்டில் கம்பத்தில் ஏறி உச்சியை அடைந்துவிட்டார்.
திடீரென அங்கே அமைதி நிலவியது. எல்லோருடைய பார்வையும் ஊசலாடிக்கொண்டிருக்கும் அந்தப் புறாவின் மீதே பதிந்திருந்தது. கம்பத்தில் இருந்தபடியே கையை நீட்டி அந்தப் புறாவைத் தொடுவதற்கு ஊழியர் முயற்சி செய்தார். எப்படி உடலை வளைத்து கையை நீட்டினாலும் புறாவை அவரால் தொடமுடியவில்லை. அவர் விரலுக்கும் அந்த நூலுக்கும் அரையடி இடைவெளி இருந்தது. கீழேயிருந்து பார்க்கும்போது ஏதோ திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியைப் பார்ப்பதுபோல இருந்தது.
கம்பத்தில் இருந்த ஊழியர் அமைதியாக புறாவைப்போலவே ‘குர்ர் குர்ர்’ என்று ஒலியெழுப்பியபடி அதன் நம்பிக்கையைப் பெறுவதற்கு முயற்சி செய்தார். தன்னை நோக்கி வா வா என்பதற்கு அடையாளமாக விரலை அசைத்து சைகை செய்தார்.
அச்சம் மண்டிய அந்தப் புறாவின் கண்கள் அவரைப் பார்த்தன. வா வா என்று சொல்வதையும் கைநீட்டி சைகை செய்வதையும் அவர் நிறுத்தவே இல்லை.
எதிர்பாராத ஒரு கணத்தில் அந்தப் புறா சட்டென விசைகொண்டு தொங்கிய நிலையிலிருந்து பறக்க முயற்சி செய்தது. அந்த அசைவில் அந்தப் புறாவின் இறகை அவருடைய விரல்கள் சட்டென பற்றிவிட்டன. அந்த இறகை மெல்லமெல்ல ஒரு பூவை இழுப்பதுபோல தன்னை நோக்கி இழுத்தார் ஊழியர். இறகையும் அதற்குப் பிறகு கழுத்தையும் அதையடுத்து ஒரு காலையும் பிடித்துவிட்டார். காலைத் தொட்டதும் முழுப் புறாவும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. கொஞ்சம்கொஞ்சமாக சுண்டிச்சுண்டி கம்பியில் சிக்கிக்கொண்ட கயிறின் முடிச்சு தன்னை நோக்கி நகர்ந்துவரும்படி செய்தார்.
புறாவை முழுக்கமுழுக்க தன் காதுகளை ஒட்டியபடி தோள்மீது அமரவைத்துக்கொண்டார் ஊழியர். அது ஒரு குழந்தையைப்போல அவர் கழுத்தோடு உடலைச் சுருட்டி ஒண்டிக்கொண்டது. இனிமேல் அது நகராது என்ற நம்பிக்கை பிறந்ததும் அந்த ஊழியர் மெதுவாக தன் சட்டைப்பைக்குள் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அந்த முடிச்சை வெட்டி விடுதலை செய்தார்.
அக்கணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக கீழே கூடியிருந்த கூட்டம் ஓவென்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். நானும் கைதட்டினேன். நானே என் கையால் அந்தக் கயிற்றை அறுத்து விடுதலை செய்ததுபோல இருந்தது.
கழுத்தோடு ஒண்டியிருக்கும் புறாவோடு மெல்லமெல்ல கம்பத்திலிருந்து இறங்கினார் ஊழியர். பிறகு அப்புறாவை தன் நெஞ்சோடு அணைத்து ‘பயப்படாதடி பயப்படாதடி’ என்று முத்தம் கொடுத்துக் கொஞ்சினார். அருகில் நின்றிருந்த மற்றொரு ஊழியர் அந்தப் புறாவை நெருங்கிச் சென்று அதன் காலுடன் சுற்றியிருந்த கயிற்றை முழுமையாகக் கத்தரித்து விலக்கி விடுவித்தார். பிறகு அந்தப் புறாவை எடுத்துச் சென்று தன்னுடைய சைக்கிள் இருக்கை மீது அமர வைத்தார்.
அந்தப் புறா திருதிருவென முதலில் விழித்து முன்னிருக்கையிலிருந்து பின்னிருக்கைக்கும் பிறகு முன்னிருக்கைக்குமாக நடுக்கத்துடன் மாறிமாறி நடந்து பார்த்தது. இறகுகளை அசைத்து உடலை சிலிர்த்துக்கொண்டது. பிறகு அச்சம் நீங்கியதுபோல வேகமாக வானத்தை நோக்கிப் பறந்து சென்றது. ‘ம். போங்க. போங்க’ என்று கூட்டத்தினரைக் கலைந்துபோகச் செய்தார்கள் ஊழியர்கள்.
அந்தப் புறா பறந்துபோன திசையைப் பார்த்தபடி நான் நடக்கத் தொடங்கினேன். வீட்டுக்குச் சென்றதும் புறா விடுதலை பெற்ற கதையை தம்பிகளிடமும் தங்கைகளிடமும் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எப்படித் தொடங்கி எப்படி விவரிக்கவேண்டும் என்ற கற்பனையில் மனம் மிதக்கத் தொடங்கியது.
0