ராஜீவ் காந்தி 1991 மே 21ஆம் தேதி திருப்பெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்ததாகப் பேரறிவாளன் 1991 சூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் உள்ளிட்ட 42 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இது சென்னை தடா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தடா நீதிமன்ற நீதிபதி நவநீதம் 1998 சனவரி 28ஆம் தேதி 42 பேரில் 26 பேருக்குத் தூக்கு தண்டனை அளித்து மற்றவர்களை விடுவித்தார். ஒரே நேரத்தில் 26 பேருக்குத் தூக்கா என மனித உரிமையாளர்கள் அதிர்ச்சியுற்றனர். நவநீதம் நீதிபதியா, மரண வியாபாரியா என்ற கேள்வி எழுந்தது. அவர்களுக்கு நீதி கேட்க தமிழ்நாட்டின் எந்தத் தேர்தல் கட்சியும் அணியமாக இல்லை.
தடா சட்டத்தின்படி, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்ல முடியாது. நேராக உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நல்ல வழக்குரைஞர்களை வைத்து வாதாட பெரும் நிதி தேவைப்பட்டது.
அப்போது ஐயா பழ. நெடுமாறன், தோழர் தியாகு, தோழர் பெ. மணியரசன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் முதலியோரையும் மார்க்சிய லெனினியக் கட்சியையும் சேர்த்து ‘26 பேர் உயிர் காப்புக் குழு’ என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வழக்கு நிதி வேண்டி தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு வேன் பரப்புரைப் பயணம் நடைபெற்றது.
அந்தப் பயணத்தில் கலந்து கொண்டவன் என்ற வகையில், அந்தப் பயண நிகழ்வுகள் என் நெஞ்சில் இன்றும் நினைவில் உள்ளன. அன்றைக்கிருந்த அரசியல் நெருக்கடிகளை மீறி நடைபெற்ற அந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நாங்களே எதிர்பாராத வண்ணம் தமிழர்கள் 26 தமிழர் உயிர் காக்க பணத்தை வாரி வழங்கினர். ஒரு பெண்மணி தங்கத் தாலியையே கழற்றி உண்டியலில் போட்டார்.
இந்த முயற்சியில் மறைந்த மாணவர் நகலக உரிமையாளரும் தமிழ்ச் சான்றோர் பேரவை தலைவருமான நா. அருணாசலத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. 26 தமிழர் உயிர் காப்புக் குழு சார்பில் சென்னை காமராசர் அரங்கத்தில் பெரும் கூட்டம் நடைபெற்றது. கடின உழைப்பில் ரூபாய் 26 இலட்சம் நிதி திரட்டப்பட்டது.
வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் 1999 மே 11ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனையும், மூவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. மற்ற 19 பேரை விடுதலை செய்தது. 22 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றியது ‘26 தமிழர் காப்புக் குழு’.
இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க செய்தி உள்ளது. உச்ச நீதிமன்றம் கூறியது, இராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப் படை தமிழர்கள் மீது அத்துமீறலில் ஈடுபட்டது (இந்திய அமைதிப் படையின் அட்டூழியத்தை இந்திய உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொள்கிறது பாருங்கள்). அதற்குப் பழிவாங்கவே விடுதலைப் புலிகள் இராஜீவ் காந்தியைக் கொன்றனர். புலிகளைப் பொறுத்த வரை, இராஜீவைக் கொன்று இந்தியாவில் பயங்கரவாதம் ஏற்படுத்தும் நோக்கமேதும் அவர்களுக்கு இல்லை. எனவே இராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதச் செயலில்லை என உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொண்டது. அப்படியானால், தடா போன்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்ததே தவறு என்றுதானே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடக்காதது கெடுவாய்ப்பே!
தூக்கு பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் அடிப்படையில் அன்றைய திமுக அரசிடம் தண்டனைக் குறைப்பு கோரினர். திமுக அரசு 2000 ஏப்ரல் 25ஆம் தேதி நளினியை மட்டும் விடுவித்து விட்டு, பேரறிவாளன் உள்ளிட்ட மற்ற மூவரையும் தூக்கிலிட முடிவெடுத்தது. பார்க்கப் போனால், கலைஞர் அரசு தனக்குள்ள இறைமை அதிகாரத்தைப் பயன்படுத்தி அன்றைக்கே நால்வரையும் தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதற்குப் பிறகு பேரறிவாளன் இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?
ஆனால் நளினி தண்டனைக் குறைப்பைக் கூட பொறுக்க மாட்டாத ஜெ. ஜெயலலிதா கலைஞரைக் கடுமையாகத் தாக்கினார். திமுக மீண்டும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை வளர்த்து விடுகிறது என்றார். இதற்கு அனுமதிக்கும் சோனியா காந்திக்கு பதி பக்தி இல்லையா? என்றார். அவர் பத்தினியா? என்றார். அப்பட்டமான பதவி சுகத்துக்காக நால்வரும் சாக வேண்டும் என நினைத்தார் ஜெயலலிதா.
அடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 72இன்படி அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) அரசிடம் தண்டனைக் குறைப்பு கோரினர். ஐமுகூ அமைச்சரவையில் திமுகவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர்களின் கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போட்டிருந்தது ஐமுகூ அரசு. கடைசியாக இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களை 2011 ஆகத்து 12ஆம் தேதி நிராகரித்து, மூவரையும் தூக்கிலிட முடிவெடுத்தார். அவர்களைத் தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது, அந்தத் தேதி 2011 செப்டம்பர் 9.
இந்தச் செய்தி தமிழ்நாட்டை உலுக்கியது. அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகிய மூன்று பெண் வழக்குரைஞர்கள் மூவரின் தூக்கு தண்டனையை நீக்கக் கோரி சாகும் வரையிலான பட்டினிப் போர் தொடங்கினர்.
தமிழர்களின் போராட்டங்களுக்கு நடுவில், அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உறுப்பு 161இன்படி மூவரின் தண்டனையைக் குறைக்க தமக்கு அதிகாரமில்லை என்றும், ஒன்றிய அரசு உறுப்பு 72இன்படி தண்டனைக் குறைப்பை நிராகரித்த பிறகு, மாநில அரசுக்கு அந்த அதிகாரம் கிடையாது என்றும் சட்டமன்றத்தில் 2011 ஆகத்து 28ஆம் தேதி காலை கூறினார்.
மூவரையும் தூக்குக் கயிறு நெருங்கிக் கொண்டிருப்பது கண்டு வெகுண்டெழுந்தார் காஞ்சி மக்கள் மன்றத்தின் செங்கொடி என்னும் வீர மங்கை. ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசிய அதே நாள் மாலை 05.30 மணிக்குக் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூவரின் தூக்குக்கு எதிராகத் தீக்குளித்தார்.
மூவரின் தூக்கு தண்டனையைக் குறைக்க தனக்கு அதிகாரமில்லை எனக் கூறிய அதே ஜெயலலிதா செங்கொடி உயிரீகம் செய்த அடுத்த நாளே, அதாவது 2011 ஆகத்து 29ஆம் தேதி தனது முடிவை மாற்றிக் கொண்டார். குடியரசுத் தலைவர் மூவரின் தூக்குத் தண்டனையை உடனடியாகக் குறைக்க வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழ்நாட்டில் போராட்டம் வலுத்துச் சென்ற நிலையில், மூவரின் தூக்கை நிறுத்தி வைக்கக் கோரி உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றது. உயர் நீதிமன்றமும் மூவர் தூக்கை எட்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டது. தமிழ்நாடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
காங்கிரஸ் சும்மா இருக்குமா? தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி கொலைகாரர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைறுகின்றன. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பது சரியில்லை எனத் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும் இந்தக் கோரிக்கையை ஏற்று மூவரின் தூக்கு தண்டனைக் குறைப்பு வழக்கை 2012 மே 1ஆம் தேதி எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை நன்கு விசாரித்த உச்ச நீதிமன்றம், மூவரின் கருணை மனுக்கள் தொடர்பாக முடிவெடுக்க இந்திய ஒன்றிய அரசு தேவைக்கு அதிகமான காலத்தை எடுத்துக் கொண்டு விட்டது. இது நீதிக்கு எதிரானது. எனவே மூவரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக 2014 பிப்ரவரி 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பால் சினமுற்றார் ராகுல் காந்தி. எப்படியும் இந்த மூவரின் உயிரையும் காவு வாங்க முடிவெடுத்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அதே மன்றத்தில் சீராய்வு மனு பதிவு செய்தார். அது பின்னர் நிராகரிக்கப்பட்டது தனிச் செய்தி.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அடுத்த நாள், அதாவது 2014 பிப்ரவரி 19ஆம் தேதி ஜெயலலிதா சட்டமன்றத்தில் பேசினார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435இன்படி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்வேன் எனக் கூறினார். இதற்கான ஏற்பிசைவை ஒன்றிய அரசு 3 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அப்படி 3 நாள்களுக்குள் ஒன்றிய அரசிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால், நானே குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432ஐப் பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்வேன் என்று அறிவித்தார். இதற்குத் தமிழ்நாடு அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றார். மாநில அரசின் அமைச்சரவை முடிவுகளை ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடும் வழக்கம் கொண்ட ஒன்றிய அரசுக்கு ஜெயலலிதா 3 நாள் கெடு விதித்தது நியாயமானதே.
காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு நியாயமாகத் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு 3 நாள்களுக்குள் பதில் சொல்லியிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்நாடு அரசிடம் இன்னும் சில நாள்கள் கால அவகாசமாவது கேட்டிருக்க வேண்டும். ஆனால் எழுவரையும் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் கட்சியல்லவா காங்கிரஸ்? தமிழ்நாடு அரசின் கோரிக்கையை எதிர்த்து 2014 பிப்ரவரி 24ஆம் தேதி உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசின் முடிவை நிறுத்தி வைத்தது.
தமிழர் எழுவர் அமைப்பு, ஏழு தமிழர் விடுதலைக் குழு போன்ற பல தமிழ் அமைப்புகள் எழுவர் விடுதலை கேட்டுத் தொடர்ந்து போராடின.
இத்தனைக்கும் நடுவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை 2018 செப்டம்பர் 09ஆம் தேதி எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது.
ஆளுனர் புரோகித் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டார். அவர் பதவிக் காலம் முடியும் வரை எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்தினார்.
அடுத்து வந்த ஆளுனர் ஆர். என். ரவியும் புரோகித்தின் வழித்தடத்தைப் பின்பற்றினார். மோடி, அமித்ஷா கட்டளையை ஏற்று, எழுவரின் விடுதலையை முடக்கி வைத்தார். தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டதாகக் கூறினார்.
எழுவரையும் விடுவிக்க எடப்பாடி போட்ட தீர்மானம் பாராட்டுக்குரியது என்றாலும், அவர் ஆளுனர்களின் இந்தக் கொட்டங்களை அமைதியாக வேடிக்கை பார்த்தார். அவர்களின் அடாவடித்னத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ஆளுனர்களின் சட்ட அத்துமீறலை எதிர்த்து நீதிப் போராட்டம் நடத்தினார் பேரறிவாளன். தீர்மானத்துக்கு இசைவளிப்பதில் ஆளுனரின் காலத் தாழ்வும், தீர்மானத்தை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததும் சட்ட மீறல் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஆளுனரின் அத்துமீறலை எதிர்த்தும், உறுப்பு 161இன்படி தமிழ்நாடு அரசுக்குள்ள இறைமையை எடுத்துக் கூறியும் சிறப்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
மோடி அரசோ ஆளுனரின் முடிவுக்கு ஆதரவாக ஈவிரக்கமின்றி வாதிட்டது.
இறுதியாக 2022 மே 18ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல முக்கியச் செய்திகள் அந்தத் தீர்ப்பில் அடங்கியுள்ளன :
* தமிழ்நாடு அமைச்சரவை முழுக்க ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது.
* தமிழ்நாடு அமைச்சரவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்ய எடுத்த முடிவைத் தெரிவிக்க ஆளுனர் தேவைக்கு அதிகமான காலத்தை எடுத்துக் கொண்டது தவறு.
* தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுனர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசமைப்புச் சட்ட விதி மீறல்.
* ஓர் அமைச்சரவையின் விடுதலை முடிவை ஆளுனர் தாமதப்படுத்தினால், அந்த முடிவை உறுப்பு 142 அடிப்படையில் உச்ச நீதிமன்றமே எடுக்கலாம்.
ஆக, பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை வழங்கியது. பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம்மாளும் நடத்திய நீண்ட காலப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது.
அதேபோது, உச்ச நீதிமன்றம் ஆளுனரைக் கண்டித்ததை வைத்து, இது ஏதோ மாநில சுயாட்சிக்குக் கிடைத்த வெற்றி என்பது போல், பலரும் பேசுகின்றனர், எழுதுகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி, தமிழ்நாடு அரசுக்குள்ள இறைமை குறித்தான தீர்ப்பு மட்டுமே இது. ஆனால் இது தமிழ் நாடு அரசு இயற்றும் சட்ட முன்வடிவுகளுக்குத் தடைபோடும் ஆளுனரின் அதிகாரங்களுக்கு முடிவு கட்டாது. அதற்கு நீண்ட நெடிய போராட்ட அரசியல் தேவை!
//உச்ச நீதிமன்றம் கூறியது, இராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப் படை தமிழர்கள் மீது அத்துமீறலில் ஈடுபட்டது (இந்திய அமைதிப் படையின் அட்டூழியத்தை இந்திய உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொள்கிறது பாருங்கள்). அதற்குப் பழிவாங்கவே விடுதலைப் புலிகள் இராஜீவ் காந்தியைக் கொன்றனர். புலிகளைப் பொறுத்த வரை, இராஜீவைக் கொன்று இந்தியாவில் பயங்கரவாதம் ஏற்படுத்தும் நோக்கமேதும் அவர்களுக்கு இல்லை. எனவே இராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதச் செயலில்லை என உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொண்டது.//
எந்த அடிப்படையில் நலங்கிள்ளி இதனை எழுதுகிறார்? நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டினால் நன்றாக இருக்கும்.
நீதிபதி ஜெயின் அவர்களால் நிராகரிக்கப்பட்ட ஆதாரத்தை வைத்து கொண்டு பாகுபாடின்றி அனைத்து தமிழக, ஒன்றிய முதலான கட்சிகளும் எவ்வாறு அரசியல் செய்தன என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.நன்று