Skip to content
Home » மாபெரும் கனவு

மாபெரும் கனவு

பொன்னியின் செல்வன்

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைக்காவியமாக்குவது தமிழ் திரையுலகின் 70 ஆண்டு கனவு!

மூன்று நான்கு தலைமுறையாக லட்சோபலட்சம் வாசகர்கள் திரும்பத் திரும்பப் படித்து ரசித்து பிரமித்து வியந்த பொன்னியின் செல்வனை படமாக்கிட முயன்றவர்கள் எத்தனை பேர்!

கோலிவுட்டின் ஜாம்பவான்கள் எஸ்.எஸ். வாசன், எம்.ஜி.ஆர்., பீம்சிங், கமலஹாசன் எனப் பலரும் முயற்சித்து முடியாமல் போன அந்தப் பிரமாண்ட சரித்திரம்… இன்று நிஜத்தில் உருவாகி உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது. இயக்குநர் மணிரத்னம் சாதித்து விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் தமிழில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சரித்திரப் படம்.

முதலில் நிஜத்தைச் சொல்லவேண்டுமென்றால் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கான நடிகர்கள் தேர்வு, நாவலைப் படித்தவர்களுக்கு லேசான சோர்வைத் தந்தது என்பதே உண்மை.

வந்தியத்தேவனாக கார்த்தியா? அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியா? குந்தவையாக த்ரிஷாவா? இவையெல்லாம் எப்படிப்பட்ட கேரக்டர்கள்? இவர்கள் அக்கதாபாத்திரத்தில் தேறி விடுவார்களா? நாவலின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பார்களா? என்று சந்தேகம் ஏற்பட்டது நிஜம்.

ஆனால், ‘நான் சிறப்பான நடிகர்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று நிரூபித்திருக்கிறார் மணிரத்னம். படம் பார்க்கும்போது எந்த நடிகர்களையும் குறை சொல்ல முடியவில்லை. அவரவர்க்குக் கொடுத்த பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். கதையோட்டத்துக்கு உறுதுணையாக உழைத்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். விக்ரம், ஐஸ்வர்யா பச்சன், கார்த்தி, திரிஷா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் ஆகியோரை வஞ்சம் இல்லாமல் நிச்சயம் பாராட்டலாம்.

படத்துக்கு மிகப் பெரிய பக்கபலம் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும், ரவிவர்மனின் ஒளிப்பதிவும், கலை இயக்குநர் தோட்டா தரணியின் பிரமாண்ட செட்கள் என்று தயங்காமல் சொல்லலாம். மூவருமே தங்களது நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்துப் படத்தை மற்றொரு பரிமாணத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இது சிறந்த இந்திய சினிமா என்று நிரூபித்திருக்கிறார்கள்.

சரி, படத்தின் கதை என்ன?

சோழ சாம்ராஜ்ஜியம் தனது மகோன்னத நிலையை அடைவதற்குச் சற்று முந்தைய காலகட்டம்.

கி.பி. 980வாக்கில் சோழ சாம்ராஜ்யம் குமரி முனையிலிருந்து வடபெண்ணைக் கரை வரை பரவியிருந்தது. சுந்தர சோழர் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் பராந்தகச் சோழன் அந்த நாட்டை ஆண்டு வருகிறார்.

சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இரண்டாவதாக குந்தவை. மூன்றாவது மகன் அருள்மொழி வர்மன். இந்த அருள்மொழிவர்மன்தான் பின்னாளில் வரலாற்றில் ராஜராஜசோழன் எனப் புகழ்பெற்றிருந்த மன்னன்.

இக்கதை நடக்கும் காலத்தில் சோழதேசத்தின் விண்ணில் ஒரு தூமகேது அதாவது ஒரு வால் நட்சத்திரம் தோன்றுகிறது. வால் நட்சத்திரம் அவ்வாறு தோன்றுவது அபசகுனம்! அப்படித் தோன்றினால் ராஜவம்சத்தில் ஓர் உயிரைப் பலி கொள்ளும் என்பது நம்பிக்கை.

சுந்தரசோழ சக்கரவர்த்தி அப்போது நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார். பட்டம் சூட்டிய மூத்த இளவரசன் ஆதித்த கரிகாலன் வடதிசைப் படையின் அதிபதியாக வடக்கே போர் நடத்திக் கொண்டிருந்தான். தென்திசைப் படையின் மாதண்ட நாயகனாக அருள்மொழி வர்மன் இலங்கைக்குச் சென்று போர் புரிந்துகொண்டிருந்தான்.

இத்தருணத்தில் சுந்தர சோழருக்கும் அவருடைய மகன்களுக்கும் எதிராக மிகப் பெரிய சதி உருவாகிறது. சுந்தரசோழரின் பெரிய தந்தையான கண்டாராதித்த சோழனின் மகன் மதுராந்தகன் சோழ சிம்மாசனத்தின் மீது ஆசை கொள்கிறான். சோழ ராஜ்யத்தில் செல்வாக்கு பெற்றிருந்த அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையரும் சிறிய பழுவேட்டரையரும் கூடவே இன்னும் சில சிற்றரசர்களும் சேர்ந்து மதுராந்தகனை அரியணை ஏற்ற ரகசிய திட்டம் தீட்டுகிறார்கள்.

மற்றொரு புறம் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை வெட்டிக் கொன்ற ஆதித்த கரிகாலனைப் பழிவாங்க பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி பாண்டிய தேசத்து ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சோழ வம்சத்தையே கருவறுக்கச் சதி செய்கிறாள்.

இந்தச் சதித்திட்டத்தை அறிந்து கொள்ளும் இளவரசி குந்தவை, சோழநாடு இப்படிப்பட்ட தாயாதிச் சண்டையாலும் உள்நாட்டுப் போர்களாலும் சிதைந்து போகாமல் இருக்கத் திட்டமிடுகிறாள். அவளுக்குத் துணையாக வந்து சேருகிறான் வந்தியத்தேவன். படத்தின் முதன்மை நாயகன் என்றால் அது வந்தியத்தேவன் தான். ஆதித்தகரிகாலன் கொடுத்தனுப்பிய ஓலையோடு சோழதேசம் பயணிக்கும் வந்தியத்தேவன் பாதையில்தான் பொன்னியின் செல்வன் கதை பயணிக்கிறது.

2500 பக்கங்கள், 5 பாகங்கள் கொண்ட ஒரு நாவலை இரண்டு பாகமாகப் படம் எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம். நாவல் படித்தவர்களை அவர்கள் கற்பனை செய்திருக்கும் அளவில் திருப்திப்படுத்த வேண்டும். நாவல் படிக்காதவர்களுக்கு கதையைச் சுருக்கமாகப் புரியும்படியாகத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். மிகச் சிரமமான இந்தக் காரியத்தை 90 சதவிகிதம் அளவில் கவனமாகச் செய்திருக்கிறார் மணிரத்னம்.

பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில், படம் தொடங்கி அடுத்தடுத்து படபடவென்று கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே செல்வதால் கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது சற்றுச் சிரமமாகத்தான் இருக்கிறது. படம் தொடங்கிய உடனே வரும் போர்க்காட்சிகள் எல்லாம் நாவலில் இல்லை. ஆனால் ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்த இந்த அதிரடி எல்லாம் தேவையாகத்தானே இருக்கிறது! ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவனுக்கு ஒரு போர்க்களம். அருள்மொழிவர்மனுக்கு ஒரு போர்க்களம் என்று சிஜி அதகளம்.

கதையைச் சுருக்கவேண்டிய கட்டாயத்தில் சில காட்சிகள் அந்தரத்தில் தொங்குகின்றன. நாவலில் சில காட்சிகள் மாற்றப்பட்டு, சில காட்சிகள் தூக்கப்பட்டு சில காட்சிகள் ரசிகர்களைக் குழப்பவும் செய்யலாம். உதாரணத்துக்கு பூங்குழலி அறிமுகக் காட்சி. நாவலில் மிக முக்கிய கதாபாத்திரமான பூங்குழலிக்கு அறிமுகக் காட்சி என்று எதுவுமே இல்லாமல் திடீரென்று படகில் வந்தியத்தேவனுடன் காண்பிக்கும்போது. அவள் யார், எப்படி வந்தியத்தேவனுக்கு அறிமுகமானாள் என்றெல்லாம் கேள்வி எழும்.

அதுபோலவே படத்தில் இரவில் நடப்பதாக வரும் காட்சிகளெல்லாம் இருள் மயமாகவே எடுத்திருப்பதால், அதுவும்… படத்துக்கு மிக முக்கியமான கடம்பூர் சதித்திட்டம், வீரபாண்டியன் தலை வெட்டப்படுவது போன்ற முக்கியக்காட்சிகளில் சலிப்பும் எரிச்சலும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

குறையைப் போலவே நிறைவான காட்சிகளும் உள்ளன. படத்தில் நந்தினியும் குந்தவையும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியும், ஆதித்தகரிகாலன் நந்தினி குறித்துச் சொல்லும் பிளாஷ்பேக் காட்சிகளும் அதில் விக்ரமின் நடிப்பும் அசத்தல் ரகம். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யா பச்சனைத் தவிர வேறு யாரையும் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை. நந்தினியாக ஜொலிக்கிறார். வந்தியத்தேவனாக வரும் கார்த்திக் குறும்புக்கார இளைஞனாக பொருந்திப் போகிறார். இடைவேளைக்குப் பின்னர் அறிமுகமாகும் அருள்மொழி வர்மனாகிய ஜெயம் ரவியும் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பால் கவர்கிறார். படத்தின் டைட்டில் நாயகனான இவர்மீதுதான் முதல் பாகம் முடிவடைகிறது.

அடுத்து முக்கியமாகச் சொல்லவேண்டியது வசனம். படத்தில் பெரும்பாலான காட்சிகளில் கல்கி அவர்களின் எழுத்தே கையாளப்பட்டிருக்கிறது. தவிர குறும்புக்காரனும் பெண்களைக் கண்டால் அசடு வழியும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு ஜெயமோகன் எழுதியுள்ள நகைச்சுவை வசனங்கள் மிகவும் ரசிக்கவைக்கின்றன.

நாவல் படித்தவர்கள் முதல் பாகம் கிளைமாக்ஸ் இங்குதான் முடியும் என்று நிச்சயித்திருப்பார்கள். அதுபோலவே முடிந்தாலும் அங்கு கடைசியாக வைத்திருக்கும் டிவிஸ்ட், மணிரத்னத்தின் ‘நச்’ முத்திரை!

மொத்தத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் படம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. படத்தைக் குறித்து நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

குடும்பத்தின் மூன்று தலைமுறையினரும் தயங்காமல் மொத்தமாகச் சென்று படம் பார்க்கலாம்.

0

பகிர:
உமா சம்பத்

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *