‘முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் அருமை’ என்று எந்தப் படமாவது இதற்கு முன்னர் சொல்லப்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
பொன்னியின் செல்வன் 2 படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து உற்சாகமாக வெளி வரும் ரசிகர்கள் பெரும்பாலானோர் இப்படித்தான் சொல்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின்போது கதை புரியவில்லை; நிதானம் இல்லை; நாவலில் உள்ளது போல இல்லை; நிறையக் கதாபாத்திர அறிமுகங்கள்; பெரும்பாலான கதாபாத்திரத்திற்கு அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லை என்றெல்லாம் சொல்லப்பட்ட குறைகள் எதையும் இந்த இரண்டாம் பாகத்தில் சொல்ல முடியவில்லை என்பது முதல் காரணம்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்க்காதவர்கள்கூட இந்த இரண்டாம் பாகம் பார்த்தால் முழுக் கதையையும் புரிந்துகொள்ளலாம். திரைக்கதை அத்தனை தெளிவாக விரிகிறது என்பது இரண்டாவது.
ஓர் அழகான கவிதை போல ஆதித்த கரிகாலன் – நந்தினி இளவயதுக் காதலுடன் பிளாஷ்பேக்கில் தொடங்குகிறது படம். அந்தச் சிறு வயது நந்தினியும் ஆதித்த கரிகாலனும் நடிப்பால் தோற்றத்தால் நம் மனதைக் கொள்ளைகொள்கிறார்கள்.
முதல் பாகத்தில் கடலில் விழுந்த பொன்னியின் செல்வனை ஊமை ராணி காப்பாற்றுகிறாள். ஆனால் சோழதேசத்திலோ இளவரசன் கடலில் மூழ்கி மாண்டு விட்டான் என்று செய்தி பரவி நாடே கொந்தளிக்கிறது.
இச்சமயத்தில் மதுராந்தகன் காலாமுகர்கள் துணையுடன் சோழ மணிமுடியைக் கைப்பற்ற நினைக்கிறான். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியோ பாண்டிய ஆபத்துதவிகளுடன் சதிசெய்கிறாள். பௌர்ணமி தினத்தன்று சுந்தர சோழன், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் மூவரையும் ஒரே சமயத்தில் கொன்றுவிடத் திட்டம் தீட்டுகிறாள். தன்னிடமுள்ள பாண்டிய வாளால், தானே ஆதித்த கரிகாலன் தலையைக் கொய்வதாகப் பாண்டிய ஒற்றன் ரவிதாசனிடம் சூளுரைக்கிறாள்.
இந்தச் சூழ்ச்சியெல்லாம் தெரிந்திருந்தும்கூட நந்தினியின் அழைப்பின் பேரில் அவளைச் சந்திப்பதற்காகக் கடம்பூர் அரண்மனைக்குச் செல்கிறான் ஆதித்த கரிகாலன்.
சுந்தரசோழனைக் காக்கத் தஞ்சைக்குச் செல்கிறாள் ஊமை ராணி; ஆதித்த கரிகாலனுக்கு நந்தினியால் ஆபத்து நேராமல் காக்க கடம்பூர் செல்கிறான் வந்தியத்தேவன்; பொன்னியின் செல்வனுக்குத் துணையாக நிற்கிறாள் குந்தவை.
உண்மையில் நந்தினி யார்? ஊமை ராணி யார்? பாண்டியர்களின் சதி நிறைவேறியதா? சோழ சாம்ராஜ்ஜியத்தின் மணிமுடி யாருக்குச் சொந்தமானது? இந்த அத்தனை கேள்விகளுக்குமான விடைகளைப் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் சொல்லிச் செல்கிறது.
படத்தின் அத்தனை நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை நூறு சதவிகிதம் உள்வாங்கிக் கொண்டு பாராட்டும்படி நடித்திருக்கிறார்கள். அதுவும் ஆதித்த கரிகாலனும், நந்தினியும் தனியே சந்தித்துப் பேசும் காட்சி, படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். அக்காட்சியில் விக்ரமும் ஐஸ்வர்யா பச்சனும் தங்களது நடிப்பால் நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள். அக்காட்சியின் ஒளிப்பதிவும், ரஹ்மானின் பின்னணி இசையும் பிரமாதம்.
கடம்பூர் அரண்மனையில் பழுவேட்டரையர்களுடனும் மற்ற குறுநில மன்னர்களுடன் ஆதித்த கரிகாலன் நக்கலும் நையாண்டியும் கோபமும் குத்தலுமாகப் பேசும் காட்சியில் விக்ரம் துவம்சம் செய்திருக்கிறார்.
படத்தின் மற்றொரு கவித்துவமான காட்சி என்று வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் காதல் காட்சியைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். காதல் காட்சிகளில் மணிரத்னம் ஜொலிப்பார்தானே.
பொன்னியின் செல்வன் நாவல் படித்த ரசிகர்களுக்கு ஓர் எச்சரிக்கை. திரைக்கதைக்கு ஏற்றவாறு நாவலின் கதையில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். எல்லாம் படத்துக்குப் பொருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் கிளைமாக்ஸில் சேந்தன் அமுதன் குறித்த பெரிய டிவிஸ்ட் ஒன்று கல்கியின் கதையில் உண்டு. படத்தில் அது இல்லாமல் போனதில் நாவலின் வாசகர்களுக்குச் சற்று ஏமாற்றம்தான்.
இந்த இரண்டாம் பாகத்திலும் போற்றப்படவேண்டியவர்கள், பாராட்டப்பட வேண்டியவர்கள் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஆர்ட் டைரக்டர் தோட்ட தரணி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவர்களின் உழைப்பு நம்மை சோழ உலகத்தில் இருப்பதாகவே உணரவைக்கிறது. படத்தின் இத்தனை அழகான லொகேஷன்களை எப்படித்தான் தேடிப் பிடித்தார்களோ!
ஜெயமோகனின் நறுக்குத் தெறித்த வசனங்கள் படம் நெடுகிலும் காட்சியைப் பலப்படுத்தி ரசிக்கவைத்தது.
இந்த இரண்டாம் பாகத்திலும் இயக்குநர் மணிரத்தினம் பிரமாண்ட வெற்றியை அணிவார் என்பது நிச்சயம்.
இந்திய சினிமாவின் பெருமை எனப் பொன்னியின் செல்வன் 2ஐயும் தயங்காமல் சொல்லலாம்.
0