ஒருமுறை கீழேயிருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள். தொடர்ந்து பேசுவோம் .
இவருக்கு குமார் என்ற பெயர் பொருத்தமாக இருக்குமா? சரி, குமாரைப் பார்த்ததிலிருந்து எனக்கும் அவரைப் போன்றதொரு கட்டுமஸ்தான உடலைப் பெற வேண்டுமென்று தோன்றுகிறது. எனக்கு நீங்கள் என்ன ஆலோசனைகளைத் தருவீர்கள்?
அ ) உடலிடம் பேசுவது : அன்பான உடலே, என்னை நீ தூக்கிச் சுமப்பதன் அவஸ்தை புரிகிறது. உனக்காகவும், எனக்காகவும் நல்லதொரு முடிவை எடுத்திருக்கிறேன். உன்னிடம் ஒரு படத்தைக் காட்டுகிறேன். அதைப் பார்த்தபிறகு தயவுசெய்து அந்தப் படத்திலிருக்கும் குமாரைப் போல உன்னை நீ மாற்றிக்கொள்ள முடியுமா?
ஆ) உடற்பயிற்சி செய்வது : ஊரில் விசாரித்து நல்லதொரு உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது.
இந்த இரண்டில் கட்டாயம் இரண்டாவது ஆலோசனையைத்தான் எனக்குப் பரிந்துரை செய்வீர்கள் இல்லையா? ஏன் முதலாவது வேலைக்கு ஆகாது என்பதற்கான காரணம் மிக எளிது. என்னதான் விடிய விடியப் பேசினாலும் உடலுக்கு நான் சொல்லவருவது புரியாது. அதனால் உடலுக்கு புரியும் விதத்தில் அறிவுறுத்துவது என்ற உங்கள் ஆலோசனையை மனதார ஏற்கிறேன்.
ஒரு நிரலாக்க மொழியை எதற்காகப் பயில வேண்டும் என்பதற்கான காரணமும் கிட்டத்தட்ட அதேதான். கணினிக்கு நீங்கள் பேசுவது புரியாது, இரண்டையும், மூன்றையும் வகுத்தால் என்ன கிடைக்கும் என்று கேட்டால் நிச்சயம் இயந்திரத்திடமிருந்து பதில் வராது. என்ன செய்யலாம்? அதற்குப் புரியும் வகையில் நிரலாக்க மொழியில் சொல்வோம்.
பைத்தான் : ஓர் எளிய அறிமுகம்
கணினி ஓர் இயந்திரம், அவ்வளவே. அதனிடம் வேலை வாங்க ஏதாவதொரு நிரலாக்க மொழியைப் பயிலத் தொடங்கலாம்.. இன்றைக்கு உலகளவில் மிகப் பிரபலமாக இருப்பது பைத்தான். அது ஏன் பிரபலமாக இருக்கிறது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு.
1) கற்பதற்கு மிக எளிமையானது
நிரலாக்க மொழிகளில், கற்பதற்கு எளிமையாக இருக்கும் இலக்கணத்தைக் கொண்டது பைத்தான். இதன் காரணமாக சுய கற்றலின் மூலமாக மட்டும் ஒருவர் இதில் விற்பன்னராக முடியும்.
2) உருவாக்கச் சுதந்திரம் (Free and Open Source)
பைத்தான் மற்றும் அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட நிரல்களோடு சேர்த்து இணையத்தில் கட்டணமின்றிக் கிடைக்கிறது . அதாவது நீங்கள் விரும்பிய உணவு மட்டுமின்றி, அதைச் சமைக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கட்டணமின்றிப் பரிமாறும் ஓர் உணவகம் அமைவது போல.
3) கட்டுப்பாடற்ற நுழைவுத்தன்மை (Cross Platform Language)
பைத்தானில் உருவாக்கம் பெற்ற நிரல்கள் எந்தவிதத் திருத்தமும் இன்றி அல்லது சிறிய திருத்தத்திற்கு உட்பட்டு அனைத்து இயங்குதளங்களிலும் (Operating System), கணினி உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களிலும் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் இயங்க முடியும்.
4) இணையத்திற்கான நிரல் மொழி (Internet Programming)
இணையம் எங்கும் விரவி கிடக்கும் தரவுகளைத் தொகுத்து, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கும் செயல்முறையை இலகுவாக்கித் தருகிறது பைத்தான். உதாரணத்திற்கு இரவு பத்து பணிக்கு மேல் யூடியூபில் நீங்கள் எதைக் காண விரும்புவீர்கள் என்பதை, உங்கள் கடந்தகாலத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யும் ஒரு புத்திசாலி நிரலை நீங்கள் பைத்தானைக் கொண்டு உருவாக்கலாம்.
1991 ஆம் ஆண்டு, கியூடோ வோன் ரோஸம் (Guido Van Rossum) என்பவரால் பைத்தான் உருவாக்கப்பட்டது. பிபிசியின் பிரபலமான ‘Monty Python’s Flying Circus’ என்ற நிகழ்ச்சியால் உந்தப்பட்டு தான் உருவாக்கிய நிரலாக்க மொழிக்கு பைத்தான் என்று பெயரிட்டார்.
0
என் கணினியில் பைத்தானை எப்படி நிறுவுவது?
1) https://www.python.org/downloads/windows/ என்ற வலைத்தள முகவரிக்கு செல்லுங்கள்.
இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது சமீபத்திய பைத்தான் பதிப்பாக இருப்பது 3.11.2. அதைத் தேர்வுசெய்து உங்கள் கணினியில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். எந்தவொரு மென்பொருளையும் கணினியில் நிறுவும் அதே வழிமுறைதான் பைத்தானுக்கும்.
2) நீங்கள் தரவிறக்கிய .exe பைலை சொடுக்கவும். படத்தின் கீழே தெரிவது போல, அந்த இரண்டு சிறிய பெட்டி வடிவங்களும் நீலநிற டிக் செய்யப்பட்டு இருக்கின்றனவா என்பதை மட்டும் உறுதிசெய்த பிறகு, Install Now சொடுக்குங்கள்.
3) அவ்வளவுதான். பைத்தான் உங்கள் கணினிக்குள் வந்துகொண்டிருக்கிறது.
4) வாழ்த்துகள். பைத்தான் வெற்றிகரமாக நிறுவப்பட்டுவிட்டது.
0
பைத்தான் சரியாகத்தான் நிறுவப்பட்டு இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்க ஒரு வழி இருக்கிறது.
1) Windows Key + R விசைபலகையில் தேர்வு செய்யுங்கள்.
2) படத்தில் இருப்பதுப் போல cmd என்ற கட்டளையை உள்ளீடு செய்து ஓகே செய்யுங்கள்.
3) புதிதாகத் தோன்றும் கருப்புநிற திரையில் Python என்று உள்ளீடு செய்ததும், அதன் பதிப்பைப் பார்க்க முடிந்தால் பைத்தான் மிகச் சரியாக நிறுவப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.
அடுத்தது என்ன?
உலகிற்கு வந்தனம் சொல்வதுதான். வழக்கம் போல Start Menuவில் இருந்து நிறுவப்பட்ட பைத்தானை தேர்ந்தெடுத்து
>>>print(“Hello World”)
என்று சொல்லுங்கள்.
(தொடரும்)