Skip to content
Home » மலைப்பாம்பு மொழி #5 – இந்திரனுக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?

மலைப்பாம்பு மொழி #5 – இந்திரனுக்கும், சந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?

பைத்தான்

போனவாரம் கேட்கப்பட்ட 2 கேள்விகள் நினைவிருக்கிறதா மக்களே?

முதலாவது, a மற்றும் bஐ வைத்து எண்கணித செயல்பாடுகளை(Arithmetic Operations) மேற்கொள்வது. இந்நிரலை இப்போதைக்கு ஊடாடும் முறையில் முயன்று பார்ப்போம். ஸ்டார்ட் மெனுவில் இருந்து பைத்தான் IDLEஐ கவனமாகத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

இந்த நிரல் வரிகளிலிருந்து நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியதைப் பட்டியலிட்டுள்ளேன்.

1) கூட்டல், கழித்தலைக் குறிக்கச் சிறுவயதிலிருந்து நாம் பயன்படுத்தும் அதே +, – தான் பைத்தானுக்கும், மாற்றமேதுமில்லை.

2) ஆனால், பெருக்கவும் வகுக்கவும் கணினியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அடையாளங்களான *, /ஐ தான் பைத்தானிலும் பயன்படுத்த வேண்டும்.

3) தமிழ்நாட்டில் எந்த உணவகத்துக்குச் சென்று பரோட்டா கேட்டாலும் தாமதமின்றிக் கிடைக்கிறது. அதன் தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, சுடச்சுடப் பரிமாறப்படுகிறது. ஒரு நிரலாக்க மொழியை உருவாக்குபவர்களும் கூட, உணவக முதலாளியைப் போல நிரலாளர்களுக்கு அதிகம் பயன்பட இருப்பதை முன்கூட்டியே உருவாக்கி வைத்துவிடுகிறார்கள்.

ஏன்?

– இதனால் ஒரு நிரலாளரின் நேரம் மிச்சமாகிறது.
– ஒவ்வொன்றையும் ஆதியிலிருந்து உருவாக்கவேண்டிய பளு நிரலாளருக்கு இல்லை
– இதன்மூலம் எளிதாகவும், வேகமாகவும் நிரலாக்க மொழியைப் பயில முடிகிறது.

ஒரு நிரலாக்க மொழி எந்த அளவுக்கு முன் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை (predefined functions/ மு.வ.செ) வழங்குகிறதோ, அந்த அளவுக்கு நிரலாளரின் வேலை குறைகிறது. பைத்தானை பொறுத்தவரையில் இதற்குப் பஞ்சமில்லை, வாரி வழங்குகிறது.

அந்த வகையில் மேலே உள்ள நிரலில் print() என்ற மு.வ.செ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் நோக்கம் என்ன? இரண்டைக் குறிப்பிடலாம்.

1) பயனர்களோடு தொடர்புகொள்ளப் பயன்படும் வாசகங்களை print()ல் எழுதலாம். ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஏடிஎம் இயந்திரம், “உங்கள் கணக்கில் போதுமான பணம் இல்லை”, “தயவுசெய்து காத்திருக்கவும்” போன்ற மனித-இயந்திர தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையானவற்றை உங்கள் நிரலில் எழுத print() தேவைப்படுகிறது.

2) நிரலில் கணக்கிடப்படும் மதிப்பைப் பயனர்களுக்குக் காட்சிப்படுத்த உதவுகிறது.

இப்போது நாம் மேலே எழுதியிருக்கும் நிரலை மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு வாருங்கள், தொடர்வோம்.

0

பயனர் மற்றும் நிரலாளர் என்று இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறேன். என்ன வேறுபாடு? இரண்டும் வெவ்வேறு ஆட்களா?

ஒரு நிரலை எழுதும்போது நீங்கள் நிரலாளர், அதை பிழையாக்கி அதன் வெளியீட்டை(Output) பயன்படுத்திப் பார்க்கும்பொழுது நீங்கள் பயனர். ‘மீசை இருந்தா இந்திரன், இல்லேன்னா சந்திரன்’ கதைதான். நிரல் எழுத ஆரம்பித்ததிலிருந்து தொடர்ச்சியாக அதைப் பயனரின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகுவது ஒரு நல்ல பயிற்சி. காரணம், ஒரு நிரலாக்க மொழியை முழுவதுமாக பயின்றபிறகு, யாரோ ஒரு பயனருக்குத்தானே நீங்க நிரல் எழுத இருக்கிறீர்கள், ஆக அவரது பங்கையும் சேர்த்து நீங்களே பார்க்கிறீர்கள்(உங்களது நிரல் பயனரைச் சென்றடைவது வரைக்கும்).

ஒரு நிரலாக்க மொழியில் எதெல்லாம் மு.வ.செ என்று எப்படிக் கண்டுபிடிப்பது? மிக எளிது. நிரலில் எங்கெல்லாம் ஒரு பதத்தைத் தொடர்ந்து () வருகிறதோ, அதெல்லாம் மு.வ.செ. ஒரு நிரலுக்குத் தேவைப்படும் பிரத்தியேகமான செயல்பாடுகளை, பிடித்தமான பெயர்களில் சொந்தமாக நாமே உருவாக்கமுடியும் என்ற தகவலையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ளுங்கள்.

இப்போது போனவாரம் கேட்கப்பட்ட a மற்றும் b தங்களது மதிப்பைப் பரிமாறிக்கொள்ளும் இரண்டாவது கேள்விக்கு வருவோம்.

இது என்னடா புது வம்பாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? மதிப்புகள் முறையாகப் பரிமாறிக் கொள்ளப்படவில்லை கவனித்தீர்களா? ஏன்?

>>a=b

இதன்மூலம் bன் மதிப்பான 10ஐ aவிறகு ஒதுக்குகிறீர்கள். இப்போது a மற்றும் bயின் மதிப்பு முறையே 10,10.

>>b=a

இப்போது aவின் மதிப்பான 10ஐ bக்கு ஒதுக்குகிறீர்கள். இப்போதும் a மற்றும் bயின் மதிப்பு முறையே 10,10.

ஆக வேலை நடக்கவில்லை. என்ன செய்யலாம்? புதிதாக cஐ கொண்டுவருவோம்.

ஆனால் இது ஏனோ சரியான வழிமுறைபோல தெரியவில்லைதான்? நேர்காணலில் நிறுவனங்களும் கூட இதை விரும்புவதில்லை. அதனால் அடுத்த வழியைப் பார்ப்போம்.

தனித்தனியாக எழுதியபோது வராத எதிர்பார்த்த முடிவு, சேர்த்து எழுதும்போது மட்டும் எப்படிச் சாத்தியப்படுகிறது?
யோசித்து உங்களது விடையை 9789855667 என்ற வாட்சப் எண்ணுக்கு எழுதி அனுப்புங்கள்.

0

ஊடாடும் முறையிலேயே ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருக்கிறோமே, எப்போதுதான் ஸ்க்ரிப்ட் முறைக்குச் செல்வது என்பவர்களுக்காக.

ஊடாடும் முறையில், மேல் இடது மூலையில் காணப்படும் File மெனுவை தேர்ந்தெடுங்கள். அதிலிருந்து New File என்ற வாய்ப்புக்குள் சென்றால், ஸ்க்ரிப்ட் முறை உங்களை அன்போடு வரவேற்கும்.

கிட்டத்தட்ட Notepad மாதிரியான வடிவத்தில் தான் இருக்கும். இதில் ஒரு முழுமையான பைத்தான் நிரலை எந்த தொந்தரவும் இல்லாமல் முழுமையாகத் தட்டச்சு செய்ய முடியும். அப்படி செய்ததை .py என்ற நீட்டிப்போடு (extension) சேர்த்து உங்கள் கணினியில் விருப்பப்பட்ட இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு வேர்ட் பைலில் தட்டச்சு செய்து சேமித்து வைப்பீர்களே, கிட்டத்தட்ட அதே மாதிரி தான். ஒரு பைத்தான் பைலின் பெயர் எடுத்துக்காட்டுக்கு இப்படி இருக்கலாம் myfirstprogram.py, புள்ளிக்கு இடதுபக்கமாக இருப்பது நிரலுக்கு நீங்கள் விரும்பியளிக்கும் பெயர், உங்கள் விருப்பம். புள்ளிக்கு வலதுபக்கமாக இருப்பது அனைத்து பைத்தான் பைலுக்கும் உண்டான கட்டாய நீட்டிப்பு, அதில் நாம் கைவைக்க இயலாது.

இப்போது இன்னொரு மு.வ.செக்கு ஒரு ஹாய் சொல்வோம். “ஆய்” input(). எங்கெல்லாம் பயனரிடமிருந்து ஒரு மதிப்பைப் பெற்று, அதை உங்கள் நிரலில் பயன்படுத்தவேண்டிய சூழல் வருகிறதோ அங்கெல்லாம் input() பயன்படும்.

உதாரணத்திற்குப் பயனரின் வயதைக் கண்டறிய வேண்டும். அவரது பிறந்த வருடம் தெரியாமல் எப்படி சாத்தியம்? முதலில் அதை input()ஐ பயன்படுத்தி பயனரிடமிருந்து பெற்றுக்கொண்டு, பிறகு அவரது வயதைக் கண்டறிவோம்.

அதற்கு முன்பாக input() பற்றி இன்னொன்று. பயனர் எந்த தரவை உள்ளீடு செய்தாலும் சரி input() அதை எழுத்துக்களாக மட்டும் தான் பாவிக்கும்.

வருடம், சம்பளம், சதவீதம், புள்ளிவிவரம் என எதைக் கொடுத்தாலும் சரி input()ஐ பொறுத்தவரையில், அவை எழுத்துக்கள்.

இப்போது நமக்கு ஒரு சிக்கல் எழுகிறது தானே? எழுத்துக்களாக புரிந்துகொள்ளப்படும் வருடத்தை வைத்து எப்படி வயதைக் கண்டறிவது? கவலையை விடுங்கள். நிரலில் எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது.

int() என்பது integerஐ குறிக்கிறது. அதாவது input() மூலம் பெறப்பட்டதை(எழுத்துக்களாக), ஒரு முழு எண்ணாக மாற்றி அதை ageக்கு ஒதுக்கியிருக்கிறோம். ஸ்க்ரிப்ட் முறையில் எழுதியதை உங்களுக்கு விருப்பப்பட்ட இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்களது நிரலைப் பயனராக இருந்து இயக்கியும் கூட பார்த்துவிடலாம்.

சேமித்தபிறகு உங்களது கணினியில் F5ஐ கண்டுபிடித்து அழுத்தவும்.

அவ்வளவுதான். வெற்றிகரமான உங்களது முதல் நிரல் எழுதப்பட்டுவிட்டது. ஆனால் குறைந்தது ஒரு பத்து நிரல்களையாவது இன்று ஸ்க்ரிப்ட் முறையில் எழுதிப் பார்த்துவிடுவது நல்லது.

ஒரு சினிமா டிக்கெட்டை பதிவு செய்யப் பயனரிடமிருந்து என்னென்ன தகவல்கள் தேவைப்படும்? அவற்றைப்பெற்று உங்களது நிரலின் மூலம் அவருக்கு ஒரு டிக்கெட்டை பதிவுசெய்து தாருங்களேன், பாவம்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *