Skip to content
Home » எலிசபெத் ராணி (1926-2022)

எலிசபெத் ராணி (1926-2022)

ராணி எலிசபெத்

1940ஆம் வருடம், அக்டோபர் மாதம். பிரிட்டன் மீது ஹிட்லரின் விமானப் படைகள் தினமும் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த நேரம். அமெரிக்காவிற்கு அனுப்பபட்டுக் கொண்டிருந்த பிரிட்டனின் குழந்தைகளுக்கு 14 வயதே நிரம்பிய எலிசபெத்தும் அவரது சகோதரி மார்கரெட்டும் வானொலியில் உரையாற்றினார்கள்.

தங்களது பெற்றோரரையும், சொந்த நாட்டையும் விட்டுப் பிரிந்து சென்றாலும், பாதுகாப்பாக இருக்கப்போகும் அந்தக் குழந்தைகளுக்குத் தைரியம் ஊட்டும் வகையில், அப்போது போரின் முழுத் தாக்கத்தையும் பெற்றுக் கொண்டிருந்த லண்டனில் இருந்து 14 வயது எலிசபெத் பேசினார். அதை வாசிக்கும் போதெல்லாம் அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் வராமல் இருப்பதில்லை.

2020 ஏப்ரல் மாதம். கொரோனா தொற்றின் வேகத்தால் உலகம் முழுவதுமாக அடைபட்டுக்கொண்டிருந்த நேரம். அடுத்து என்ன நடக்கும் என்று தெளிவில்லாமல் இருந்த நேரத்தில், ராணி எலிசபெத் தன்னுடைய நாட்டு மக்களிடம் பேசினார். ‘நாம் இன்னமும் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தாலும், நல்ல நாட்கள் வரத்தான் போகிறது. நமது நண்பர்களுடன் மீண்டும் சேரத்தான் போகிறோம்; நமது குடும்பங்களுடன் திரும்பவும் சேருவோம்; மீண்டும் நாம் சந்திப்போம்.’

அப்படித்தான் நடந்தது. அவர் ராணியாக முடிசூட்டப்பட்டு 70 வருடங்கள் முடிந்த 2022ஆம் வருடம் பெரும் கொண்டாட்டங்களிடையே தன்னுடைய நாட்டு மக்களை அவர் சந்தித்தார்.

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று (9 செப்டெம்பர் 2022) மரணம் எய்தினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவர் தன்னுடைய ஆட்சியில் பதினைந்தாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்கும் லிஸ் டிரஸ்சுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிரித்தானிய அரசு சட்ட சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாக இருந்தாலும், வரலாற்றின் பெரும்பாலான காலத்தில் அங்கே ஓர் அரசப் பரம்பரை இருந்து வந்திருக்கிறது. ஆனால் அங்கு அரசர்களும் (அரசிகளும்) கிட்டத்தட்ட 800 வருடங்களாகத் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்.

இன்றைய நவீன உலகில், பிரித்தானிய அரசர்களுக்கும் அரசிகளுக்கும் கிட்டத்தட்ட எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் வெறுமனே அலங்காரத்திற்கு மட்டுமே தங்களது பதவிகளை வகிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களது நாட்டு மக்களுக்கு எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உலகில் மாறாத ஒன்றாக, வரலாற்றின் தொடர்ச்சியாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.

0

1952இல் ராணி எலிசபெத்திற்குப் பட்டம் சூட்டப்பட்ட நிகழ்வுதான் தொலைக்காட்சியில் முதல் முறையாக நேரலையாகக் காட்டப்பட்ட அரச நிகழ்ச்சி. அதை உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கானோர் கண்டனர். அப்போது எலிசபெத்துக்கு வயது 26. அப்போது பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், ஒரு குழந்தைக்குப் பட்டம் கட்டப்படுவதாகக் குறை கூறினார். ஆனால் சில நாட்களிலேயே அவர் புதிய ராணியின் பெரிய ஆதரவாளராக மாறிவிட்டார்.

பிரித்தானிய அரசியாக இருந்தாலும் அவர் மக்கள் அரசாங்கத்தின் அனுமதி இன்றி எதையும் செய்துவிட முடியாது. அரசி எனும் வகையில் அவர் ஆங்கிலேய திருச்சபையின் தலைவராகவும் இருக்கிறார். ஆனாலும் அவரால் ஒரு பேராயரின் நியமனத்தைக்கூடத் தடை செய்ய முடியாது.

அவர் பட்டம் சூட்டிக் கொண்டபோது, ‘சூரியன் மறையாத’ பிரித்தானிய அரசின் அஸ்தமனம் நடந்து கொண்டிருந்தது. பேரரசின் பல நாடுகள் விடுதலை பெற்றுவிட்டன. அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் புதிய வல்லரசுகளாக நிலைபெற்று விட்டன. மாறிவிட்ட உலகில் பிரிட்டனின் புதிய இடம் என்ன என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இது அதுவரை உலகை ஆண்டுகொண்டிருந்த பிரித்தானிய ஆளும் வர்க்கத்திற்கும், பேரரசின் அளவில்லாத வளத்தின் பயனை அனுபவித்துக் கொண்டிருந்த மக்களுக்கும் பெரும் சவாலாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் மாறாத ஒன்றாக இருந்தது பிரித்தானிய அரசக் குடும்பம் மட்டுமே. இந்த வழக்கம் ஒரு மரபாக இன்றுவரை நீடித்து நிற்பதற்குக் காரணம் ராணி எலிசபெத்.

எழுபது வருடங்கள் என்பது பெரும் காலகட்டம். மாற்றம் அரசக் குடும்பத்திற்கும் வந்தது. 1982இல் அவரது முதல் மகனான சார்லஸ் டயானாவைத் திருமணம் முடித்தார். இந்தத் திருமணம் அரசக் குடும்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டிப் பார்த்தது. பத்திரிகைகள் ராணியின் மீது மிகுந்த மரியாதையுடன் இருந்தாலும் அவரது மகன்களும் மகள்களும் அதே மரியாதையைப் பெறவில்லை.

இளவரசர் சார்லஸின் திருமணத்திற்கு வெளியிலான விளையாட்டுகள், 80களின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் அரசக் குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘பயங்கரமான ஆண்டு’ (Annus Horribilis) என்று ராணி 1992ஆம் ஆண்டைக் குறிப்பிட்டார். இரண்டு இளவரசர்களும் தங்களது மனைவியரைப் பிரிந்தனர். அவரது மகள் விவகாரத்தைப் பெற்றார். அதே வருடம் ராணிக்குப் பிரியமான வின்ட்சர் கோட்டை தீ விபத்தில் பாதிப்படைந்தது.

குழந்தைகளின் திருமணங்கள் தோல்வியை அடைந்தாலும், ராணியின் திருமணம் மற்ற திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இருந்தது. அவர் 73 வருடங்களை அவரது கணவருடன் கழித்தார்.

கிரேக்க நாட்டு இளவரசரான பிலிப்புடனான இளம் எலிசபெத்தின் காதல் மற்ற குடும்பத்தினரின் ஆதரவைப் பெறவில்லை. ஆனால் எலிசபெத் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்தார். அவர்களது காதலும் இறுதி வரை மாறவில்லை. ராணிக்கு இரண்டடி பின்னர் வரவேண்டிய பொறுப்பில் இருந்த அவரது கணவர் பிலிப், எப்போதும் காதலுடன் எலிசபெத்தைப் பார்ப்பதும், அவரது பின்னர் நடப்பதும் பெரிதாகப் பேசப்பட்டது. 2020இல் பிலிப் மரணமடைந்தபோது, இறுதிச் சடங்கில் ராணி எலிசபெத் தனியாக அமர்ந்திருந்த புகைப்படம், பிரிட்டனில் மட்டுமல்லாது, உலகெங்கும் காதலனின், பிரிவின் துயரை அனுபவிக்கும் பெண்ணின் புகைப்படமாகஅனைவராலும் பார்க்கப்பட்டது.

அப்படியென்றால், ராணி எலிசபெத்தின் உள்ளே இருக்கும் பெண் யார்? ராணி என்ற பதவியை மிகவும் திறமையாகக் கையாண்டதன் காரணமாக, அவர் தனது வாழ்நாள் முழுவதும் தன்னுடைய உண்மையான முகத்தை வெளியில் காண்பிக்கவே இல்லை. மிகவும் திறமையான ராணியாக இருப்பதற்காக அவர் செய்த தியாகம் என்று சொல்லலாம். அப்படி இருந்ததன்மூலமே, நவீன உலகில் எந்தச் செல்வாக்கும் இல்லாத ஒன்றை அவரால் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறையிடம் கொண்டு செல்ல முடிந்தது.

ராணி தன் வாழ்நாளில் நேர்முகங்கள் கொடுத்ததில்லை. புத்தகங்கள் எழுதவில்லை. சில தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வுகளில் வந்திருக்கிறார். மற்றபடி, ராணி என்ற முகமூடி கொண்டே நாம் அவரைப் பார்த்திருக்கிறோம். அவரது மகன்களும் மகள்களும் எடுத்துக்கொண்ட சுதந்தரத்தை அவர் எப்போதும் தனதாக்கிக் கொள்ளவில்லை. அதனாலேயே நாம் அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றி மிகவும் குறைவாகவே கேள்வி படுகிறோம்.

சிறுவயதில் இரண்டு தாதிகளால் வளர்க்கப்பட்டார். தனிப்பட்ட ஆசிரியை மூலமாகக் கல்வி போதிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த 1939ஆம் வருடம் தன்னுடைய 13வது வயதில் அவர் பிலிப்பைச் சந்தித்தார். அப்போது பிலிப்பிற்கு வயது 19. அப்போது அவரது தோழி ஒருத்திக்கு எழுதிய கடிதத்திலிருந்து அவர் காதலில் விழுந்தது நமக்குத் தெரிய வருகிறது. பிலிப்பின் மரணம் வரை தொடர்ந்த காதல் அது. அதைத் தாண்டி ராணியின் அந்தரங்க வாழ்க்கைபற்றி வெகு குறைவாகவே அறிகிறோம்.

மக்களிடையே பிரபலமாக இருந்த இளவரசி டயானா 1997இல் விபத்தில் மரணமடைந்த காலத்தில் மட்டுமே ராணி எலிசபெத்தின் மீதான மரியாதை பிரித்தானிய மக்களிடையே குறைந்தது எனலாம். ஆனாலும், விரைவிலேயே ராணி அதை மீட்டெடுத்துக்கொண்டார். அவரது பட்டமேற்பின் 50ஆம் வருட விழா 2002இல் ‘மக்களின் திருவிழாவாக’ நாடெங்கும் கொண்டாடப்பட்டது.

ராணியாக இருந்தாலும், ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அரசக் குடும்பத்தின் வருமானத்தின் மீது வரி கட்ட சம்மதித்தார். பல்வேறு வாக்கெடுப்புகளை வாழ்நாள் முழுவதும் சந்தித்துக் கொண்டே இருந்தார். இங்கே, ராணி என்பதன் காரணமாக அவர் எதையும் ஆளவில்லை என்பதையும் நினைவுறுத்தி கொள்ள வேண்டும். அவரது அதிகாரம், மரியாதை என்பது பிரிட்டனின் எழுதப்படாத சட்ட சாசனத்தின் வழியாகவே பெறப்படுகிறது. இதை அவர் ஆழமாக உணர்ந்ததாலேயே தன்னை மக்களின் அரசியாக நிலைநிறுத்திக்கொண்டார்.

அவரால் வெளிப்படையாக இருக்கமுடியவில்லை என்றாலும் தன்னால் முடிந்த அளவிற்குத் தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளைக் குறிப்பால் உணர்த்திக்கொண்டுதான் இருந்தார். 1945இல் அரசக் குடும்பத்தில் இருந்து ராணுவச் சேவை செய்த முதல் பெண்ணாக, ராணுவ வாகனங்களை இயக்கும் வேலையில் சேர்ந்தார்.

பல வருடங்களுக்குப் பின், 2003இல் சவூதி அரசர் அப்துல்லா, ராணியைப் பார்க்க வந்தபோது, ராணி அவரைத் தன்னுடைய கோட்டையைச் சுற்றி பார்க்க அழைத்தார். அரசரும் சம்மதிக்கவே, அரச வாகனத்தில் ராணி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டு, அரசர் அப்துல்லாவைக் கோட்டையைச் சுற்றி அழைத்துச் சென்றார். சவூதியில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்படுவதில்லை என்பதால், அரசருக்குத் தன்னுடைய நிலைப்பாட்டைக் காட்டுவதற்கே ராணி வாகனத்தை ஓட்டினார் என்று சொல்லப்படுகிறது.

மேலும், அரச உரிமையில் பெண் குழந்தைகளுக்கும் சம உரிமை உண்டு என்பதைப் புதிய விதியாகக் கொண்டுவந்தார். பிரிட்டனின் ‘உமன் இன்ஸ்டிடியூட்’டின் நூறாவது ஆண்டு விழாவில் அவரது உரை பெண்கள் உரிமை குறித்த முக்கியமான உரையாகக் கருதப்படுகிறது.

ராணி எலிசபெத்தின் வாழ்வு நமக்கு இன்னமும் புதிராகவே இருக்கிறது. எலிசபெத் என்ற பெண் ஒரு மர்மமாகவே நீடிக்கிறார். அவரது கதை நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஒரு திரைக்கதை போலவே தோன்றுகிறது. ஆங்கங்கே நமக்குத் தெரியும் சிறிய வெளிச்சத்தில் அந்தப் பெண் மிகவும் துள்ளலுடனும் சோகத்துடனும் காதலுடனும் தெரிகிறார். ஆனால் பிரிட்டனுக்கும் இன்னமும் 14 நாடுகளுக்கும் அரசியாக வேண்டியிருந்த நிர்பந்தத்தில், அவர் தனது சாதாரண வாழ்வைத் தியாகம் செய்துவிட்டதாகவே உணரவேண்டி இருக்கிறது.

வரும் நாட்களில் அவரைப் பலரும் நினைவுகூர்வார்கள். ஆனால் 70 வருடங்களாக அவர் நிறைவு செய்த அந்தப் பாத்திரம், இனி எவர் வந்தாலும் நிறைவடையாததாகவே இருக்கும்.

0

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *