Skip to content
Home » சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’

சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’

சாமானியர்களின் போர்

ஒரு கொத்துக் கறிவேப்பிலை கொசுறாகப் பெறுவதற்கே நூறு ரூபாய்க்குக் காய்கறி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டும் எப்படி இத்தனை சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன? இதற்கான விடை எளிமையானது. ஏதேனும் இலவசமாகக் கிடைக்கிறது என்றால் அங்கே விற்பனை செய்யப்படும் பொருள் நீங்கள்தான்.

‘உன்னைக் கொடு, இலவசம் தருவேன்’ என்பதே இணையத்தின் பாலிசி. நமது பொருள் வாங்கும் திறன் தொடங்கி வரும் தேர்தலில் யாருக்கு வாக்கு செலுத்த இருக்கிறோம் என்பது வரை அமேசானும் அரசாங்கமும் நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய நகர்வுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘என்ன அநியாயம் இது? சதா கண்காணிப்பு வளையத்திற்குள் எப்படி இருப்பது? தனியுரிமை என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா? எல்லாவற்றுக்கும் காரணம் இந்த செல்போனும் அதன் தொழில்நுட்பமும்தான். இனி அதை ஒருபோதும்…’ திருக்குறளின் எண்ணிக்கைக்கு நிகராக நீங்களும் நானும் இதையெல்லாம் முயன்று பார்த்துத் தோற்றவர்கள் என்பதால் நிதானமாக யோசிப்போம்.

ஓர் அரசாங்கம் எந்தத் தொழில்நுட்பத்தைக்கொண்டு தன் குடிகளைக் கண்காணிக்கிறதோ அதே தொழில்நுட்பத்தை ஒரு சாமானியனும் பயன்படுத்தமுடியும் அல்லவா? அவ்வாறு பயன்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கும்?

1) ராணுவ இரகசியங்கள் வெளியிடப்படலாம்
2) போர்க்குற்றங்கள் அம்பலப்படுத்தப்படலாம்
3) எல்லாவற்றுக்கும் மேலாக ‘கண்காணிக்கப்படுகிறோம்’ எனும் உணர்வை அரசாங்கங்களுக்கு ஏற்படுத்தலாம்

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் வெறும் யூகங்கள் அல்ல. இப்படியெல்லாம்கூடச் செய்யமுடியும் என்பதற்கான சாத்தியங்கள் மட்டுமல்ல. அனைத்தும் ஏற்கெனவே நடத்திக் காட்டப்பட்டவை.

தொழில்நுட்ப நாணயத்தின் இன்னொரு பக்கத்தைக் கொண்டு சாமானியர்கள் சாம்ராஜ்ஜியங்களைப் பரிதவிக்க விட்டிருக்கிறார்கள். எங்களை ஒன்றும் செய்யமுடியாது, எங்களிடம்தான் எல்லா அதிகாரமும் இருக்கிறது. நாங்கள் அசைக்கமுடியாத இரும்புக் கோட்டை என்று கருதியிருந்த பலரைப் பதைபதைக்கச் செய்திருக்கிறார்கள். யார் அவர்கள்? எப்படி இதைச் சாதித்தார்கள்? இதை அரசாங்கங்கள் எவ்வாறு எதிர்கொண்டன? எத்தகைய மாற்றங்களை இவை ஏற்படுத்தின? அனைத்தையும் பார்க்கப்போகிறோம்.

0

ஒரு செய்திக் குறிப்பிலிருந்து ஆரம்பிப்போம்.

ஜூலை 12, 2007. இராக்கின் புதிய பாக்தாத் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஏ.கே.47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு சுற்றித்திரிந்த பன்னிரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்தனர்.

வாசிக்கவும் கடந்து செல்லவும் எளிமையான செய்தி எனினும் காலம் இதன் ஆயுளை ஏதோவொரு காரணத்திற்காக இன்னமும் நீட்டித்து வைத்திருக்கிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இருவர் ராய்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நாற்பது வயதான சையது மா. ஓட்டுநரான இவருக்கு மூன்று குழந்தைகள். மற்றவர் நமீர் நூர் எல்தீன். இருபத்து இரண்டு வயதே ஆன இவர் ராய்டர்ஸின் மிகச் சிறந்த புகைப்படக்காரர் எனப் பெயர் பெற்றவர். போராட்டக்காரர்கள் சரி, இவர்கள் எதற்காகக் கொல்லப்பட்டார்கள்? செய்தியாளர்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்?

இதே கேள்வியைத்தான் தாக்குதல் நடந்து ஒரு மாதம் கழித்து, ராய்டர்ஸ் நிறுவனம் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்திக் கேட்டது. தாக்குதலின் போது படமாக்கப்பட்ட காணொளியை வெளியிடக் கோரியது. ஆனால் அமெரிக்க ராணுவத்தின் டெம்ப்ளேட் பதில் இவ்வாறாக இருந்தது. ‘எங்கள் நாட்டின் போர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் எந்த விதிமீறலும் இல்லை’.

என்ன நடந்தது? (அமெரிக்க ராணுவத்தின் பார்வை):

இரண்டு அபாச்சி ஹெலிகாப்டர்கள் புதிய பாக்தாத் பகுதியைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன.

‘ரோஜர்! இங்கே பத்து, பன்னிரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களில் நான்கு பேரிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. இலக்கு மிகச் சரியாக இருக்கிறது. உங்கள் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்.’

‘சரி. தாக்குங்கள்.’

‘ரோஜர்! இங்கே ஒரு வாகனம் போராளிகளுக்கு ஆதரவாக வந்து நிற்கிறது. உள்ளே நான்கைந்து பேர் ஆயுதங்களோடு இருக்கலாம். தாக்குதல் நடத்த அனுமதி தாருங்கள்.’

‘சரி. தாக்குங்கள்.’

போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது, ஆயுதமேந்தித் திரிந்தால் ராணுவம் வேடிக்கையா பார்க்க முடியும்? சரியான நடவடிக்கை தானே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

இது நடந்து மூன்று வருடங்கள் கழித்து, அதாவது ஏப்ரல் 5, 2010 அன்று அமெரிக்காவின் தேசியப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு காணொளி திரையிடப்படுகிறது.

காணொளி

சர்வதேச சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கிய, போர்க்குற்றங்களின் கோர முகத்தை முதன்முதலில் வெளிக்காட்டிய, அமெரிக்காவின் உறக்கத்தைத் தாற்காலிகமாகத் தொந்தரவு செய்த அந்தக் காணொளி, மூன்று வருடங்களுக்கு முன்பு போரில் உயிரிழந்த தங்களது செய்தியாளர்களுக்காக ராய்டர்ஸ் நிறுவனம் கேட்டு மறுக்கப்பட்ட அதே காணொளி. தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்ட்டரில் இருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் ராணுவ வீரர்களுக்கு இடையேயான உரையாடல் துல்லியமாகப் பதிவாகி இருந்தது.

என்ன நடந்தது? (புதுப்பிக்கப்பட்டது)

‘ரோஜர்! இங்கே பத்து, பனிரெண்டு பேர் இருக்கிறார்கள்.’

உண்மைதான். காணொளியில் அவர்கள் மிக இயல்பாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

‘அவர்களில் நான்கு பேரிடம் ஆயுதங்கள் இருக்கின்றன.’

பதிவான காட்சிகளில் ராய்டர்ஸ் நிறுவன புகைப்படக்காரர் நமீர் நூர் எல்தீன் தனது படக்கருவியோடு நடந்து வந்து கொண்டிருக்கிறார். அங்கிருந்தவர்களில் வேறு எவரிடமும் எந்தவொரு ஆயுதமும் இல்லை.

‘இலக்கு மிகச் சரியாக இருக்கிறது. உங்கள் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்.’

இதில் எந்த பொய்யும் இல்லை. நடந்ததை ராணுவம் அப்படியே சொல்லியிருக்கிறது.

‘ரோஜர்! இங்கே ஒரு வாகனம் போராளிகளுக்கு ஆதரவாக வந்து நிற்கிறது. உள்ளே நான்கைந்து பேர் ஆயுதங்களோடு இருக்கலாம். தாக்குதல் நடத்த அனுமதி தாருங்கள்.’

குண்டடிப்பட்டு சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த ராய்டர்ஸ் ஓட்டுநர் சையது உள்ளிட்டவர்களை மீட்க வந்த வாகனம் அது. அதன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

‘ரோஜர்! தாக்குதலில் ஒரு குழந்தைக்கு வயிற்றில் பலத்த காயம்.’

‘அதற்கென்ன செய்ய முடியும்? போர்க்களத்திற்குக் குழந்தைகளைக் கொண்டுவந்தது அவர்களது தவறு. குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.’

இரண்டே சாத்தியங்கள்தான். ஒன்று, புகைப்படக் கருவி ஒரு ராணுவ வீரரின் கண்களுக்கு ஏ.கே 47 ரகத் துப்பாக்கியாகத் தெரிந்திருக்கிறது. இரண்டாவது, அப்பாவிகள் எனத் தெரிந்தும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டில் எது நடந்திருக்கும் என்பதை எழுதி ஒரு வரியை வீணடிக்க விரும்பவில்லை.

போர்க்குற்றங்கள் குறித்த கேள்விகள் எல்லாம் எதிர்கொண்டு சலித்தவை. இப்போது பிரச்னை, பரம ராணுவ ரகசியமாக வைத்திருந்த அந்த காணொளி வெளியே வந்தது எப்படி என்பதுதான்.

நிற்க. இறந்துபோன நமீரின் வயதில், அவன் கொல்லப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து, அதே இராக்கில் ஒருவன் அமெரிக்க ராணுவத்தில் புலனாய்வு ஆய்வாளராக பணியில் சேர்கிறான். அதிகம் பேச பிடிக்காது. இண்ட்ரோவெர்ட். ஒரு வாரம் முழுவதும், நாளொன்றுக்கு பதினான்கு மணிநேர வேலை. விடுமுறை, ஓய்வு என்றெல்லாம் தனியாக எதுவும் கிடையாது. கிடைக்கும் நேரத்தில் வீடியோ கேம் விளையாடிக்கொள்ளலாம், இசை ஆல்பம் கேட்கலாம், கார்கள் துரத்திக்கொள்ளும் காட்சிகள் ஏதேனும் இருந்தால் போட்டுப்பார்க்கலாம்.

ராணுவ வேலைக்கு வந்தவனுக்கு, முதல் இரண்டு மாதங்கள் இப்படித்தான் இருந்தது. கூடவே சகிக்க முடியாத அளவிற்குப் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள். எந்த அளவிற்கு என்றால், அலுவலகத்திற்குள் நுழைய ஒவ்வொருவருக்கும் ஐந்து இலக்க ரகசிய குறியீட்டு எண் அவசியம். ஆனால் நடைமுறையில் அதற்கெல்லாம் அவசியமே இல்லை. கதவு தட்டப்பட்டால், திறக்கப்படும். ஒரு சாதாரண ராணுவ வீரன்கூட அங்கிருக்கும் உயர்மட்ட கணினியைத் திறந்து, சேமிப்பில் இருக்கும் ரகசியங்களைப் பார்க்க முடியும். இவற்றையெல்லாம் தேசியப் பாதுகாப்பு அதிகாரியிடம் கொண்டு சென்றபோது அவர் யோசித்து நிதானமாக ஒரு பதிலை தந்தார். ‘இப்போது அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல’.

அவ்விடத்திற்கு அவன் பழகிய பிறகு, ஒவ்வொரு கணினியாக ஊடுருவ ஆரம்பித்தான். உச்சபட்ச ரகசியங்கள் என ஓர் அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் அனைத்தையும் பார்வையிடவும் வாசிக்கவும் ஆரம்பித்தான். தோண்டத் தோண்ட மேலும் தொந்தரவிற்கு ஆளானான். ராணுவத்தில் சேர்ந்ததற்காக வருந்தினான். எந்த நாட்டிற்காகப் போரிடத் துணிந்தானோ அதே நாட்டின் மீது இப்போது வெறுப்பும் கொண்டான்.

உயர்மட்ட கணினிகளில் ஊடுருவி அதன் ரகசியங்களைப் பார்ப்பது அவன் அன்றாடங்களில் ஒன்றாகிப் போனது. ராய்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் கொல்லப்பட்ட அந்தக் காணொளியை அவன் வந்தடைந்தது இப்படித்தான்.

நிராயுதபாணியாக நின்று சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது தனது நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்திக் கொல்கிறது. அந்தக் காணொளி இப்போது அவன் கைகளில்.

அவன் என்ன செய்ய வேண்டும்?

தன் வேலைக்கும் நாட்டுக்கும் உண்மையானவனாக இருந்து ரகசியம் காக்க வேண்டுமா? அல்லது துணிந்து உண்மையை உலகறியச் செய்ய வேண்டுமா?

என்ன செய்தான் பிராட்லி மேனிங்?

(தொடரும்)

 

பகிர:
ரிஷிகேஷ் ராகவேந்திரன்

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

3 thoughts on “சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’”

  1. மிகவும் அருமை. அடுத்த கட்டுரைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

  2. I like Mr.Rishikesh Ragavenderan article. Lines are really impressive and his message worth to understand current situation of our life.
    Keep it up ! Waiting for your next part.

  3. அருமையான கட்டுரை. புதிய தகவல்கள். சிறந்த மொழிநடை.
    தொடரட்டும் உங்கள் நற்பணி.
    முனைவர். தயாநிதி,
    கோவை.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *