‘ஏழாயிரம் பக்கங்களை நகலெடுக்க வேண்டும்!’
‘அவ்வளவுதானே? நடக்கும் தூரத்தில்தான் கடை. ஒருநாளில் வேலையை முடித்துவிடலாம்.’
‘இல்லை, இரண்டு தகவல்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் ‘உயர் ரகசியம்’ எனும் அரசாங்க முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. தோராயமாக பதினான்காயிரம் முத்திரைகள், அனைத்தையும் முதலில் வெட்டியெடுக்க வேண்டும். காரணம் , இவை நகல் எடுக்கப்படுவது வெளியே தெரிந்தால், வாழ்வின் மிச்சத்தை ஏதாவது ஒரு அமெரிக்கச் சிறையில் தான் கழிக்க வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாமல் இப்போது நாம் இருப்பது 1969ல்.’
‘சுத்தம்.’
இப்படியே எத்தனை நாளைக்குத்தான் ஒவ்வொரு பக்கமாக வெட்டிக்கொண்டிருப்பது என்று யோசித்து ஒரு பேப்பர் கட்டரை விலைக்கு வாங்கினார் டேனியல் எல்ஸ்பெர்க். ராண்ட் கார்ப்பரேஷன் எனும் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தில் ராணுவ ஆய்வாளராகப் பணியிலிருந்த டேனியலுக்கு ஒரே ஆதரவு டோனி ரூசோதான். மற்றுமொரு ஆய்வாளரான அவருக்கு மட்டும்தான் இந்த நகலெடுக்கும் விவகாரம் தெரியும்.
முதலில் ஒரு பக்கத்துக்கு இரண்டு என்று நகல் எடுத்துப் பார்த்தார்கள். ம்ஹும், வேலைக்கு ஆகவில்லை. பைண்டிங்கை ஒட்டிய எழுத்துகள் வாசிக்கவே முடியாத அளவிற்கு மங்கிப் போயிருந்தன. சரி, இன்னொருவரையும் துணைக்கு அழைப்போம் என்று முடிவானது. விளம்பர நிறுவனம் நடத்திவந்த டோனியின் நண்பர்தான் உடனே நினைவுக்கு வந்தார். இவர்களை இணைத்தது போருக்கு எதிரான ஒரு மனநிலை. அவர் பயன்படுத்தி வந்த இயந்திரத்திலும் நகல் எடுக்கப்பட்டது.
இந்த மூவர் கூட்டணி மட்டுமல்லாமல், டேனியலின் இரண்டாவது மனைவி, மற்றும் அவரது முதல் மனைவிக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் என, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இரவு பகல் பாராமல் உழைத்து, இன்றைய இந்திய மதிப்பில் பதினைந்து லட்ச ரூபாய் செலவு செய்து ஏழாயிரம் பக்கங்களை நகலெடுத்துக் கட்டிவைத்தார்கள். நகல் எடுத்த கோப்புகளை அடுக்கி வைத்தபோது, அது ஆறடி மனிதனைக் காட்டிலும், இரண்டடி கூடுதலாக இருந்தது.
அப்படி என்ன ரகசியம் இருந்தது அந்தக் கோப்புகளில்?
0
1969ஆம் வருடம் ஹார்வர்டில், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார் டேனியல் எல்ஸ்பெர்க். அவர் பணி நிமித்தம் நிறையப் போர் ஆவணங்களைப் படிக்க வேண்டியிருந்தது. ஆரம்ப காலகட்டங்களில், போரை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது பற்றிக்கூட அவர் சிந்தித்துப் பார்த்ததில்லை.
ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்ற துறைகளில் ஆய்வுசெய்வது, ஆலோசனைகள் வழங்குவது என்று தனக்கு வழங்கப்பட்டிருந்த வேலையை மட்டும் செய்துகொண்டிருந்தார். ஆனால், ஒரு போரை நேரடியாகப் பார்க்காமல், சாதக பாதகங்களை அலசாமல் என்ன ஆலோசனை சொல்லிவிட முடியும்?
அப்போது வியட்நாம் போர் நடந்துகொண்டிருந்தது, அதைக் கவனித்து ஆலோசனைகள் வழங்கிட, வெள்ளை மாளிகையால் வியட்நாமிற்கு அனுப்பப்படுகிறார் டேனியல் எல்ஸ்பெர்க் . அப்போது அவர் முனைவர் பட்டம் பெற்று மூன்றாண்டுகள் முடிந்திருந்தன.
ராணுவ வீரன் போலச் சண்டையிட வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் தெற்கு வியட்நாமில் போரைக் கண்காணிக்க ஜீப்பில் சென்றபோதெல்லாம் கையோடு ஒரு துப்பாக்கியையும் டேனியல் கொண்டுசெல்வது வழக்கம். அந்த காலகட்டங்களில், களத்திலிருந்த பல அதிகாரிகளைச் சந்தித்து பேட்டி எடுக்கிறார். ராணுவம் மற்றும் அதிகார வர்க்கத்தின் சொற்களுக்கும் , உண்மைக்கும் நிறைய இடைவெளி இருப்பது தெரிகிறது.
நிஜத்தில், அமெரிக்காவின் ஆதரவு இருந்த போதிலும், தெற்கு வியட்நாமின் பெரும்பகுதி வியட்காங்கின் கைகளுக்குச் சென்றுகொண்டிருந்தது. வியட்காங் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தெற்கு வியட்நாம் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகக் களத்திலிருந்த அமெரிக்கப் படைகளோடு 1954 தொடங்கி கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வடக்கு வியட்நாமின் ஆதரவுடன் ஓயாது போரிட்ட கம்யூனிச கெரில்லா இயக்கம்தான், வியட்காங்.
களத்தில் நிலைமை வேறாக இருந்தாலும், என்றாவது ஒருநாள் இந்தப் போர் முடிவடையும் என்ற நம்பிக்கையுடன்தான் டேனியல் இருந்தார். ஆனால், 1967ஆம் ஆண்டின் முதல் நாளே தான் கொண்டிருந்த நம்பிக்கை தவறு என்பதைக் கொஞ்சம் அழுத்தமாகவே உணர்ந்தார்.
மூன்று ராணுவ வீரர்களுடன் வழக்கம் போல ரோந்திலிருந்த நேரம். தங்களுக்குப் பின்பாக துப்பாக்கி சுடும் சப்தம். சுட்டது மூன்று வியட்நாமியர்கள், அமெரிக்க ராணுவத்தால் சத்தம் வந்த திசையை நோக்கி வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது. யாருமற்ற திசையில் திருப்பிச் சுட்டு என்ன பயன்? சுட்டவர்கள் எங்கே? சுட்ட சத்தம் ஓய்வதற்குள், அவர்கள் பக்கத்திலிருந்த காட்டின் வலதுபுறத்தில் மறைந்துகொண்டார்கள். மீண்டும் தாக்குதல், இம்முறை இடதுபுறமிருந்து. வலது, இடது என வியட்காங் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல் மிகச் சரியாக சிக்-சாக் வடிவிலிருந்தது. டேனியலுக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை, ஆச்சரியம்தான்.
முடிப்பதற்குச் சாத்தியமே இல்லாத பணிகள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசும்போதெல்லாம் ஏற்பட்ட ஏமாற்றங்கள் என வியட்நாமில் இருந்த அடுத்த சில மாதங்கள், போர் குறித்த அவரது புரிதலை நிறையவே மாற்றி இருந்தது. எதிரிகள் பலம் பொருந்தியவர்கள். அமெரிக்காவால் இந்தப் போரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்தார்.
இரண்டாண்டுகள் பெற்ற அனுபவத்தோடு அவர் தனது நாட்டுக்குத் திரும்பியதும், இந்த அமைப்புக்கு உள்ளாகவே இருந்து, இந்தப் போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று முடிவெடுக்கிறார்.
வியட்நாம் போர், அதில் பிரெஞ்சு மற்றும் ஜப்பானின் பங்கு, அமெரிக்கா தன்னை இணைத்துக்கொண்டது ஆகியவை குறித்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ளப் பென்டகன் முடிவு செய்கிறது. மிக ஆர்வமாக அதில் தன்னை இணைத்துக்கொள்கிறார் டேனியல். காரணம் ஒன்றுதான். போரின் முதல் நாளிலிருந்தே, ரகசியமாக அமெரிக்கா சேமித்து வைத்திருக்கும் ஆவணங்களை நேரடியாகப் பார்வையிடலாம் அல்லவா?
அவர் நினைத்தது நடந்தது. ஏழாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கிடைத்தன. அனைத்தையும் வாசித்தார். போர் குறித்தும், அதில் அமெரிக்காவின் பங்கு குறித்தும் அவரது பார்வை முழுவதுமாக மாறியது.
சில அடிப்படைகளை அவர் நன்கு புரிந்துகொண்டார்.
அ) வியட்நாம் போரை அமெரிக்கா கட்டுப்படுத்தவில்லை. மாறாக, அதைத் தூண்டி விட்டிருக்கிறது.
ஆ) 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்தப் போர், பிராந்தியங்களுக்கு இடையே நடந்த தொடர் மோதல் அல்ல. மாறாக புவிசார் அரசியலின் பேரரசாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முனைப்பில், வியட்நாம் குடிகளின் நன்மைக்காக என்ற போர்வையில், அமெரிக்காவின் ஊக்குவிப்பில் நடத்தப்பட்ட போர்.
1940களில் வியட்நாமைத் தனது காலனி ஆதிக்கத்தின்கீழ் பிரெஞ்சு வைத்திருந்தது. அப்போதிருந்தே அமெரிக்கா அதன் மேற்கத்தியக் கூட்டாளிக்கு நிதி உதவி முதல் ராணுவ உதவி வரை வழங்கி வந்தது. பலமுறை வியட்நாமின் விடுதலைக்காக அதன் அதிபர் ஹோ சி மின் வேண்டுகோள் வைத்தும், பெரும்பான்மை மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மேற்கத்தியக் காலனியாதிக்கம் ஒன்றையே தொடர்ந்து ஊக்குவித்தது அமெரிக்கா. ட்ரூமன், ஜான்சன், நிக்சன் என்று அதிபர்கள் மாறினாலும், வியட்நாம் போர் குறித்த அவர்களது கொள்கைகள் மாறவே இல்லை.
வியட்நாமில் நடந்தது முழுமையான உள்நாட்டுப் போர் என்றும் சொல்லிவிட முடியாது. அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் ஒன்றை எடுத்தால், மற்றவை சரிவது போல, உலகநாடுகள் வரிசையாகக் கம்யூனிசக் கொள்கைக்குப் பின்னால் போவதைத் தடுக்க ஒரு போர் தேவைப்பட்டது. எந்நாளும் முடிவுக்கு வராத ஒரு போர். அதற்கு விதை போட்டு, தண்ணீர் ஊற்றி, காயாமல் பார்த்துக்கொண்டது அமெரிக்கா. டேனியல் எல்ஸ்பெர்கின் வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தப் போரின்மூலம் அமெரிக்கா வியட்நாமுக்குச் செய்தது குற்றம் என்றே கருதப்படவேண்டும்.
0
ஆவணங்கள் அனைத்தும் கவனமாக நகல் எடுக்கப்பட்டுவிட்டன. அதை வெளியிடுவதற்கு முன்பு போருக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள் இணைந்து ஹேவர்போர்ட் கல்லூரியில் ஓர் அமைதி மாநாடு நடத்தினர். அதில் டேனியில் பங்குகொள்கிறார். அவரைப் போலவே ஸ்டான்போர்ட், ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் படித்த ரென்டி கெல்லர் மாநாட்டின் இரண்டாம் நாளில் உரை நிகழ்த்துகிறார்.
‘சான் பிரான்சிஸ்கோவில் இயங்கிவரும் போர் எதிர்ப்பாளர்கள் அமைப்பில், கடைசி ஆண் உறுப்பினர் நான்தான். என்னுடைய மற்ற நண்பர்கள் அனைவரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மிக விரைவில் நானும் அவர்களோடு சிறையில் இணைய இருக்கிறேன்.’
அவர் இதைச் சொன்னபோது ஒரு கணம் தயங்கிய கூட்டம், பிறகு அவரை கைதட்டிக் கௌரவித்தது. இதில் பெரிதாக எந்தவொரு நாடக தருணமும் இல்லை. ஆனால் டேனியல் எல்ஸ்பெர்க் பிறகு இந்த உரையைப்பற்றி எழுதும்போது, ‘என் தலை கோடாரியால் பிளக்கப்பட்டு , இதயம் உடைந்து திறந்தது’ என்கிறார். அந்த நிகழ்விலிருந்து அவர் வெளியே வந்ததும் அவருக்கு ஆற்ற ஒரு கடமை மட்டுமே எஞ்சியிருந்தது. ‘எந்த எல்லைக்கும் செல்ல தயார். அது வாழ்நாள் முழுவதும் சிறை என்றாலும் சரி, இந்த போர் நிறுத்தப்பட வேண்டும்.’
ரகசிய ஆவணங்களை வெளியிட அவரிடம் இரண்டு திட்டங்கள் இருந்தன.
திட்டம் ஒன்று:
அமெரிக்க செனட்டர்கள்மூலம் வெளியிடுவது.
ஒன்றிரண்டு பேரைச் சந்தித்தும் பெரிதாக எந்த நம்பிக்கையும் இல்லை. அடுத்த அதிபர் வேட்பாளர் என அப்போது எதிர்பார்க்கப்பட்ட செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்னைச் சந்தித்தார். கோப்புகளின் ஒரு பகுதியை வாசித்துப் பார்த்த ஜார்ஜ், ‘இதை நிச்சயம் நான் வெளியிடுவேன்’ என்று உறுதியளித்தார். ஒரு வாரம் கழித்து, ‘மன்னிக்கவும். இதை என்னால் வெளியிட இயலாது. என்னுடைய அதிபர் கனவு இதனால் பாதிக்கக்கூடும்’ என்று பின்வாங்கினார்.
அடுத்தது என்ன?
திட்டம் இரண்டு:
பத்திரிக்கைகளில் கசிய விடுவது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் எஞ்சிய நாளை சிறையில்தான் கழிக்க வேண்டியிருக்கும் என்பது தெரிந்தே, வேறு வழியில்லாமல் இதைத் தேர்ந்தெடுக்கிறார் டேனியல். சில வருடங்களுக்கு முன்பு சோதனை அடிப்படையில் ஆவணங்களை நியூ யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பியிருந்தார்.
அந்த வகையில் அரசியல் செய்தியாளர் நீல் சீஹனுடன் ஏற்கெனவே பழக்கம் இருந்தது. அவரை அணுகி பென்டகன் பேப்பர்ஸ் ஆவணங்களின் ஒரு பகுதியை அவருக்கு அளித்தார். ஆவணங்கள் குறித்து இன்னும் தங்களது செய்தி ஆசிரியர்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதே நியூ யார்க் டைம்ஸின் தரப்பாக இருந்தது. இதனிடையே ராண்ட் நிறுவனத்தில் இருந்து, தனது ராணுவ ஆய்வாளர் பதவியையும் ராஜினாமா செய்திருந்தார் டேனியல்.
ஜூலை 13, 1971. பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக முப்பதாண்டு வரலாற்றை விரிவாகப் பதிவு செய்திருந்தது நியூ யார்க் டைம்ஸ். உடனடியாக உளவு சட்டத்தின் மூலம் தனது எதிர்வினையை ஆற்றிய வெள்ளை மாளிகை, நியூ யார்க் டைம்ஸை முடக்கப் பார்த்தது.
அரசு எந்தத் திசையில் செல்லும் என்பதை முன்பே உணர்ந்திருந்த டேனியல், ஆவணங்களின் மற்றுமொரு நகலை வாஷிங்டன் போஸ்டுக்குத் தந்திருந்தார். தொடர்ச்சங்கிலி போல, அரசாங்கம் ஒரு பத்திரிகையை முடக்கினால், நின்ற இடத்திலிருந்து தொடர மற்றொரு பத்திரிகையிடம் ஒரு நகல் இருந்தது.
கிட்டத்தட்ட ஆறு பத்திரிகைகளுக்கு ஆவண நகலை அனுப்பியிருந்தார். ரகசியங்கள் வெளியிடப்படுவதை என்ன செய்தும் தடுக்க முடியாமல் திணறியது வெள்ளை மாளிகை. உலகின் உயர்மட்ட அரசு ராணுவ ரகசியங்கள் மலிவாகப் பத்திரிகைகளில் காணக் கிடைத்தன.
இதைச் செய்தது டேனியல் எல்ஸ்பெர்க்தான் என்பதைக் கண்டுபிடிக்க அதிக நாட்கள் பிடிக்கவில்லை. காரணம் அவர் உள்பட மொத்தமே மூன்று அதிகாரிகள்தான் அந்த ஆவணங்களைக் கையாள அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
மேலும் டேனியல் இது தொடர்பாகச் சந்தித்த செனட்டர்களும் அந்தத் தகவல்களைப் பத்திரிகைகளிடம் தெரிவித்தார்கள். நிக்சன் அரசுக்கு இது மிகப்பெரிய தோல்வி. எந்த ஊடகம் ரகசியங்களை வெளியிட்டதோ, அதே பத்திரிகைகளில் டேனியல் அசிங்கமாகச் சித்தரிக்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை விரும்பியது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ஒரு பேரரசு மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பாதது.
உளவியல் மருத்துவரின் அலுவலகத்தில் சட்ட விரோதமாகச் சென்று டேனியலின் அந்தரங்கங்களை வெளியிட முயன்றார்கள். மற்ற நாடுகளுடனான தொடர்பு, ரகசிய உளவாளி என்றெல்லாம் ஜோடிக்கப் பார்த்தார்கள். போதை மருந்து முதல் குண்டர்கள் வரை எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.
இதன் உச்சமாக, டேனியல் வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி வில்லியம் பர்னைச் சந்தித்த நிக்சனின் உதவியாளர் அவருக்கு எஃப்பிஐ இயக்குநர் பதிவியை தரக்கூட அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். எதற்கும் அசைந்து கொடுக்காத நீதிபதி அதை மறுத்ததோடு மட்டுமல்லாமல், தான் விலை பேசப்பட்டதையும் பொதுவில் வைத்தார்.
நிக்சன் அரசின் இந்த மோசமான செயல்பாடுகள் அனைத்தும் டேனியலுக்கு ஆதரவாகத் திரும்பியது. மக்கள் ஆதரவும் இருந்ததால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 115 வருடங்கள் சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். நிக்சனின் ஆட்சியும், வியட்நாம் போரும் முடிவுக்கு வரத் தொடங்கின.
நாற்பது ஆண்டுகள் கழிகின்றன.
இராக் போர் ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக விர்ஜீனியா ராணுவச் சிறையிலிருந்த பிராட்லி மேனிங்கிற்கு (செல்சியா மேனிங் ) ஆதரவாக ஒரு மக்கள் போராட்டம் நடக்கிறது. அதில் 79 வயது முதியவராகக் கலந்துகொண்டு கைதாகிறார் டேனியல் எல்ஸ்பெர்க். இன்றும் அவர் போர்க் குற்றங்களுக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான போராளி.
பிராட்லி மேனிங், டேனியல் எல்ஸ்பெர்க் இவர்கள் இருவரும் ஒரு பேரரசை அசைத்துப் பார்த்தவர்கள் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதன் ஊடாக அவர்கள் ‘தனியொரு மனிதனாக என்ன செய்துவிட முடியும்?’ என்ற கேள்விக்கு அழுத்தமாக ஒரு பதிலை வரலாற்றில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்குமான வேறுபாடு என்று அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தைச் சொல்லலாம். டேனியலுக்கு தொழில்நுட்பத்தின் துணை இல்லை. ஆனால் பிராட்லிக்கு அது இருந்தது.
அரசுக்கு எதிராகச் சாமானியர்கள் தொடுக்கும் போரில் தொழில்நுட்பத்தின் பங்கு என்ன? அப்படி என்ன தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்?
(தொடரும்)