Skip to content
Home » சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது

சாமானியர்களின் போர் #4 – ராஜா காது கழுதை காது

க்ரிப்டோக்ராபி

‘ஒரு ஊரில் ஒரு ராஜாவாக’ வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா? நாள் முழுவதும் தலையில் ஒரு பெரிய கிரீடத்தை வேறு சுமந்தாக வேண்டும். தனது அறையில் உறங்கச் செல்வதற்கு முன்பு, சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, தனது கிரீடத்தை மெல்லக் கழட்டி வைக்கிறார் ராஜா. அந்தக் காட்சியை அவரது அறையில் மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த திருடனுக்குப் பேரதிர்ச்சி. ஏனென்றால் ‘ராஜா காது கழுதை காது’, அதாவது ராஜாவுக்கு கழுதையின் காதுகள்.

இதை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டுமென்ற தவிப்பில் தனது மனைவியிடம் மட்டும் சத்தியம் வாங்கிக்கொண்டு பகிர்ந்துகொள்கிறான். அவள் சத்தியவதி அல்லவா? மனிதர்களிடம் சொன்னால்தானே சிக்கல், யாருமில்லாத தருணத்தில் சாலையோரத்திலிருந்த ஒரு தாவரத்திடம் தனது பாரத்தை இறக்கி வைக்கிறாள்.

இது நடந்து ஒரு வாரத்தில் ராஜாவுக்குப் பிறந்தநாள். மத்தளம் கொட்டப்படுகிறது. முதல் அடியில் மத்தளம் ‘ராஜா’ என்கிறது. இரண்டாம் அடியில் ‘காது’ என்கிறது. என்னடா இது மத்தளம் பேசுகிறதே என்ற ஆச்சரியத்தில் தொடர்ந்து அடித்த அடியில் ‘ராஜா காது கழுதை காது, ராஜா காது கழுதை காது’ என்று மூவர் மட்டுமே அறிந்த ரகசியத்தை ஊரறியச் செய்கிறது மத்தளம்.
நேற்றுதான் மத்தளத்தைப் பராமரிப்பதன் ஓர் அங்கமாக, சாலையோரச் செடியைப் பிடுங்கி அரைத்து அதன் மீது தடவியிருந்தார்கள். ராஜாவின் கெட்ட நேரேமோ என்னவோ, அந்தச் செடி அவரது காது ரகசியத்தைத் திருடனின் மனைவியிடமிருந்து பெற்றிருந்தது.

ரகசியம் எப்படிப் பரவுகிறது என்பதை வேடிக்கையாகச் சொல்லும் கதை இது. இந்த காலத்திலும் கூட ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு முன்பு நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது, இல்லையா? குறிப்பாக இணைய உலகில். நமக்கே இப்படியென்றால் ராணுவங்கள் தங்களுக்கு இடையே எப்படி ரகசியங்களைப் பரிமாறிக்கொள்கின்றன? இரண்டு நாடுகள் கோப்புகளை எப்படிக் கைமாற்றிக்கொள்கின்றன? இணையத்தின் ஓட்டைகளுக்குள் நுழைந்து திருடக் காத்திருக்கும் ஹேக்கர்களிடமிருந்து அவை எப்படித் தங்களைக் காத்துக்கொள்கின்றன? போர் ரகசியங்களை வெளிட இருக்கும் ஒரு சாமானியனைக் காப்பாற்றத் தொழில்நுட்பம் உதவுகிறதா? அதுவும் பேரரசு முதல் ஃபேக் ஐடி வரை அனைவருக்கும் இருப்பது ஒரே தொழில்நுட்பம்தானே?

0

‘ஜாஇராதுகாதைழுகதுகா2232’.

மேலே இருக்கும் வாக்கியத்தை இன்னொருமுறை வாசியுங்கள். ஏதாவது புரிகிறதா? வாய்ப்பில்லை ராஜா என்கிறீர்களா? சரி வாருங்கள் அதன் அர்த்தத்தைப் பார்ப்போம்.

சேகரும் குணாவும் ஓர் ரகசியத்தை இணையம் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறார்கள். பிரச்னை என்னவென்றால், பரம ரகசியமான அவ்விஷயம் வேறு யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது. அதை அனுப்பும் வழியில் இடைமறித்து யாராவது அந்தத் தகவலைப் படித்துவிட்டால் சோலி முடிந்தது. என்ன செய்யலாம்? தொழில்நுட்பம் க்ரிப்டோக்ராபி என்னும் பதிலைத் தருகிறது.

முதலில், அனுப்பப்பட இருக்கும் அந்த ரகசியம் குறியாக்கம் செய்யப்படவேண்டும். நம் வசதிக்காக அதை மந்திரச்சொல் என்று வைத்துக்கொள்வோம். மந்திரச்சொல் பயணிக்கும் வழியில் ஊடுருவி, மூன்றாம் நபர் யாராவது அதை வாசிக்க முற்பட்டாலும் அது என்ன என்பது புரியவே கூடாது. கிட்டத்தட்ட மேலே நீங்கள் வாசித்த ‘ஜாராதுகாதைழுகதுகா2232’ போல. இந்த மந்திரச்சொல்லை சேகருக்கு அனுப்பி வைக்கிறான் குணா. மறுமுனையில் அதைப் பெற்றுக்கொண்ட சேகர் நிச்சயம் தலையைச் சொறிந்திருப்பான்.

அது புரிய வேண்டுமானால் மறைகுறியாக்கம் செய்யப்படவேண்டும். அதாவது மந்திரச்சொல் தனது பழைய நிலைக்குத் திரும்பவைக்கும் செயல்முறை. மந்திரச்சொல்லை அனுப்புவதற்கு முன்பே அதைத் திறப்பதற்கு உண்டான சாவியையும் குணா சேகரிடம் சேர்த்திருந்தான்.

மந்திரச்சொல்: ‘ஜாஇராதுகாதைழுகதுகா2232’

சாவி: கடைசியில் இருக்கும் நான்கு எண்களின் அடிப்படையில் எழுத்துகளை வார்த்தைகளாகப் பிரித்து, அவற்றைத் திருப்பி எழுதினால் ரகசியம் வெளிப்படும்.

வாருங்கள், குணா சேகருக்கு அப்படி என்ன ரகசியத்தை அனுப்பினான் என்று பார்ப்போம். முதலில் வரும் எண் 2. ஆகவே இரண்டு எழுத்துகளை எடுத்து ஒரே வார்த்தையாக்குவோம். ‘ஜாஇரா’ என்று வருகிறது இல்லையா? அடுத்துவரும் 2,3,2 என்ற எண்களின் அடிப்படையாகக் கொண்டால் நமக்குக் கிடைக்கும் வார்த்தைகள் முறையே ‘துகா’, ‘தைழுக’, ‘துகா’ ஆகும். கிடைத்த வார்த்தைகளைச் சேர்த்து ஒரே வாக்கியமாக மாற்றுவோம்.

‘ஜாஇரா துகா தைழுக துகா’

அவ்வளவுதான் கிட்டத்தட்ட ரகசியத்தை நெருங்கி விட்டோம். சாவியின் இறுதிப் பகுதியைக் கவனியுங்கள். ஒவ்வொரு வார்த்தையின் எழுத்துக்களும் திருப்பி எழுதப்பட வேண்டும். இதோ அந்த இரகசியம்,

‘இராஜா காது கழுதை காது’.

ஐயோ! இதற்காகவா இவ்வளவு அக்கப்போர்? க்ரிப்டோக்ராபியின் ஆரம்பக்காலம் இப்படித்தான் இருந்திருக்கிறது. ஒரு புரிதலுக்காக குறியாக்கதிற்கும் மறைகுறியாக்கத்திற்கும் எளிமையான ஒரு எடுத்துக்காட்டு சொல்லப்பட்டது. உண்மையில் இந்தச் செயல்பாடுகளுக்கு மிகக் கடினமான கணித சூத்திரங்கள், அல்காரிதங்கள் பயன்படுத்தப்படும்.

இந்த முறையில் ஒரு சிக்கல் இருப்பதைக் கவனித்தீர்களா? குணாவும், சேகரும் ஒரே சாவியைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஒருவேளை அந்தச் சாவியை யாராவது ஒருவர் கைப்பற்றினால் ரகசியம் வெளிப்பட்டுவிடும்தானே?

அடுத்தது, முன்பே அறிமுகமான இருவர் தங்களுக்குள் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் ரகசியம் என்பது தெரிந்தவர்களுக்கு இடையே மட்டும் பகிர்ந்துகொள்ளும் ஒன்றா என்ன? தெரியாத இரண்டு பேர் எப்படித் தங்களுக்குள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வது?

க்ரிப்டோக்ராபியின் அடுத்தகட்ட வளர்ச்சி இங்கே தொடங்குகிறது. இம்முறை குணாவுக்கும் சேகருக்கும் முன்பின் பழக்கமில்லை. ஆனால் குணா சேகருக்கு ஒரு பெட்டியை அனுப்புகிறான் என்று வைத்துக்கொள்வோம்.

பெட்டிக்குப் பூட்டு ஒன்றுதான், ஆனால் அதற்கு இரண்டு சாவிகள். ஒரு பூட்டுக்கு இரண்டு சாவிகள் எதற்காக?

முதல் சாவி இடது பக்கமாக மட்டுமே திரும்பக்கூடியது. இரண்டாம் சாவியால் வலது பக்கமாக மட்டுமே திரும்ப முடியும். இதனால் பெட்டியை முதல் சாவியைக் கொண்டு குணா பூட்டினால் (இடது பக்கமாக), இரண்டாம் சாவியைக் கொண்டு சேகர் அதை மீண்டும் திறக்க இயலும் (வலது பக்கமாக). எளிமையாக இப்படிச் சொல்லலாம், இரண்டு சாவிகளைக் கொண்டும் பூட்ட முடியும். ஆனால் முதல் சாவி பூட்டியதை, இரண்டாம் சாவியால் மட்டுமே திறக்க இயலும். மொத்தத்தில் முதல் சாவியை வைத்திருக்கும் எவரும் ரகசியத்தை மந்திரச்சொல்லாக மாற்ற முடியும், அதனால் முதல் சாவியைப் பொதுவில் பகிர்ந்துகொண்டாலும் தவறில்லை.

இதனை அடிப்படையாகக்கொண்டு இணையதளங்கள் எப்படித் தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன என்பதைப் பார்ப்போம். உங்கள் பிரவுசரைத் திறந்து அமேசான் இணையத்தளத்திற்குச் செல்கிறீர்கள். உண்மையில் என்ன நடக்கிறது?

அ) கோரிக்கை வைக்கப்பட்டதும் அது அமேசான் இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அன்னபூரணா என்ற பெயரில் நம் ஊரில் எத்தனை உணவகங்கள் இருக்கின்றன? அவற்றில் போலிகளும் இருக்கலாம் அல்லவா? அதேபோல அமேசான் போன்ற வடிவமைப்பிலேயே இயங்கி உங்கள் பணத்தைத் திருடும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் போலி இணையத்தளங்களுக்கு உங்கள் கோரிக்கை அனுப்பப்பட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் அடுத்த படி.

ஆ) கோரிக்கை ஏற்கப்பட்டதும் அமேசான், ‘நான்தான் முதல் தர அசல் அமேசான்’ என்பதை நிரூபிக்க உங்களுக்கு ஒரு சான்றிதழை அனுப்பிவைக்கிறது. அதில் முதல் சாவியையும் இணைத்து அனுப்புகிறது. உங்களுக்கு மட்டுமல்ல, கோரிக்கை வைக்கும் எவருக்கும் அமேசான் முதல் சாவியைத் தருகிறது.
என்னதான் அமேசானாகவே இருந்தாலும், அவர்கள் அனுப்பியது நிஜ சான்றிதழ்தானா என்பதை உங்கள் கணினி சரிபார்க்கிறது.

இ) சான்றிதழ் உண்மைதான் என்பது உறுதியானதும், ஒரு புதிய சாவியை உருவாக்கி, அதை அமேசான் அனுப்பிய முதல் சாவியைக்கொண்டு (இடதுபக்கம் திரும்பும் சாவி) குறியாக்கம் செய்து, அதை அமேசானுக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.

ஈ) புதிய சாவியைப் பெற்றுக்கொண்ட அமேசான் தன்னிடம் இருக்கும் இரண்டாவது சாவியைக்கொண்டு அதை மறைகுறியாக்கம் செய்கிறது.

நீங்கள் (குணா) அனுப்பிய பெட்டியை அமேசானால் (சேகர்) மட்டுமே திறக்க முடிகிறது.

ஆக ஒட்டுமொத்த இணைய உலகில் உங்களுக்கும், அமேசானுக்கும் மட்டும் தெரிந்த ஒரு தாற்காலிக ரகசிய பாதையில் தரவு, பணப் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக நிகழ்கின்றன. இவை யாவும் பிரவுசரில் அமேசான் இணையத்தள முகவரியை அடித்து எண்டர் தட்டிய கணப்பொழுதில் தானியங்கி முறையில் நடந்து முடிந்திருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு முறைகளிலும் பாதுகாப்பு என்பது புழங்கும் தரவுகளுக்கு மட்டும்தான். அதில் ஈடுபடுபவர்கள் வெளிப்படையாக தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்களும் அமேசானும் என்ன பரிமாறிக்கொண்டீர்கள் என்பது ரகசியமாக இருக்கிறது. ஆனால் அதில் ஈடுபட்ட இருதரப்புகளும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தத் தொழில்நுட்பத்தில் எந்த வாய்ப்பும் இல்லை.

ஒரு வல்லரசை எதிர்த்துப் போரிடும் சாமானியன் ஆவணங்களை மறைத்து மட்டும் என்ன பலன்? அவன் தன்னையும் மறைத்துக்கொள்ள வேண்டுமில்லையா, ஒரு அநாமதேயனாக. அதற்கு நாம் டைனிங் க்ரிப்டோக்ராபர்ஸ் பற்றித் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

மூன்று பேர் ஓர் உணவகத்திற்குச் செல்கிறார்கள். உணவருந்தியதும் அதற்கு உண்டான கட்டணம் கடைசி வரைக்கும் வராமலேயே இருக்கிறது. இப்போது கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதா, இல்லையா என்பதை நேரடியாக ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளாமல், ஒரு விளையாட்டின் மூலம் முடிவை எட்ட விரும்புகிறார்கள். இறுதியில் ஆம், இல்லை என்பதுதான் தெரியவருமே ஒழிய, யார் கட்டணத்தைச் செலுத்தியது என்பது தெரியாது. இன்று இணையத்தில் ஒருவர் தனது அடையாளங்களை முழுமையாக மறைத்துக்கொண்டு அநாமதேயனாக இருக்க முடிவதற்கான விதை இந்த விளையாட்டில்தான் ஊன்றப்பட்டது.

விளையாட்டின் விதிகள் மிக எளிமையானது. மூன்று பேரும் மேஜைக்கு முன்பு வட்டமாக அமர்ந்துக்கொள்வது. ஜோடிகளாகப் பிரிந்து நாணயத்தைச் சுழற்றி வரும் முடிவைக் குறித்துக்கொள்வது. எக்காரணம் கொண்டும் ஒரு ஜோடியின் முடிவு, விளையாடாமல் அமர்ந்திருக்கும் மூன்றாவது நபருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது.

முதல் சுற்று: ரஜினி , கமல்
இரண்டாம் சுற்று: கமல், கார்த்தி
மூன்றாம் சுற்று: கார்த்தி, ரஜினி

ஆக விளையாட்டின் முடிவில் ஒவ்வொருவரிடமும் இரண்டு முடிவுகள் இருக்கும். அவர்கள் அவற்றைத் தனித்தனியாக அறிவிக்க வேண்டும். ஒருவரிடம் இருக்கும் இரண்டு முடிவுகளும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், கட்டை விரலை உயர்த்திக்காட்ட வேண்டும். மாறாக இரண்டு முடிவுகளும் வெவ்வேறாக இருக்குமாயின், கட்டைவிரலைக் கீழ்நோக்கிக் காட்டவேண்டும்.
இதில் மிக முக்கியமான திருப்பம் ஒன்றிருக்கிறது. அந்த மூவரில் எவர் ஒருவர் கட்டணத்தைச் செலுத்தினாரோ, அவர் தனது முடிவை மாற்றிச் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு, கட்டணத்தைச் செலுத்தியது ரஜினிதான் என்றால், அவர் தன்னிடம் இருக்கும் இரண்டு முடிவுகளும் ஒன்றாகவே இருந்தாலும்கூட, எண்ணிக்கையின்போது தனது கட்டைவிரலைக் கீழ்நோக்கியே காட்டவேண்டும். கட்டை விரலை உயர்த்தியவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் அல்லது இரட்டைப்படை எண் என்றால், கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது. ஒருவேளை எண்ணிக்கை ஒற்றைப்படையிலிருந்தால், கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை.

இந்த விளையாட்டின் அழகே ஆம்/இல்லை என்ற இரு நிலைகளில் ஏதாவது ஒன்றுதான் முடிவாக இருக்கமுடியும். இதன்மூலம் அந்த மூவரும் தங்களது அடையாளங்களை மறைத்துக்கொள்ள முடிகிறது. இணையத்தில் அநாமதேயம் சாத்தியப்படுகிறது.

ஆவணங்களை மறைத்தாயிற்று, ஆட்களும் கூட அநாமதேயர்கள். ஆனால் என் இருப்பிடம்? சென்னை அமைந்தகரையிலிருந்து இயங்குகிறேன் என்ற ஒரு விவரம் போதாதா என்னை நெருங்க?

போரைத் தொடங்குவதற்கு முன்பு சாமானியன் தன் இருப்பிடத்தை எப்படி மறைத்துக்கொள்வது?

ஆன்மிக வழிகாட்டி, குடும்ப வழிகாட்டி தெரியும். வெங்காய வழிகாட்டியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

(தொடரும்)

பகிர:
ரிஷிகேஷ் ராகவேந்திரன்

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *