Skip to content
Home » சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

சாமானியர்களின் போர் #5 – அநாமதேயம்

அநாமதேயம்

இணையத்தில் உங்களது அடையாளம் என்ன? காட்டுப்பூச்சி தொடங்கி கம்மாளப்பட்டி கட்டப்பா வரை, சமூக ஊடகங்களில் நாம் கொண்டிருக்கும் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை. அவற்றை நமது அடையாளமாகச் சுட்டிக்காட்ட முடியாது. இணையத்தைப் பொறுத்தமட்டில், தகவல் பரிமாற்றம் நிகழ்வது ஐபி முகவரியின் அடிப்படையில் மட்டுமே. இணையத்தோடு இணையும் பொழுது, உங்கள் கணினிக்கு என்றே பிரத்தியேக ஒரு ஐபி முகவரி, இணையச் சேவை வழங்கும் நிறுவனத்தால் ஒதுக்கப்படும். கோடிக்கணக்கான கணினிகளில் உங்களுடையதைத் தனியாகப் பிரித்தறிய முடிகிறது என்றால், அது இந்த ஐபி முகவரியின் அடிப்படையில்தான்.

ஒரு கடிதப் போக்குவரத்தைப் போலத்தான் இணையத்திலும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஒரு கடிதத்தில் என்னவெல்லாம் இடம் பெற்றிருக்கும்?

அ) எங்கிருந்து, யாருக்கு அனுப்பப்படுகிறது?
ஆ) கடிதத்தின் உள்ளடக்கம்.

இதை அப்படியே இணையத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். ‘காந்தி என்பவர் யார்?’ என்னும் கேள்வியைக் கூகுளிடம் கேட்கிறீர்கள். ஒரு ஊருக்குச் செல்ல பல்வேறு வழிகள் இருப்பதைப் போலவே, கணினி நெட்வொர்க்கில் உங்களது கணினியையும் கூகுளையும் இணைக்கப் பல வழிகள் இருக்கும். அதில் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்து, அவ்வழியே சின்னச் சின்ன துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட உங்களது கேள்வி கூகுளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வேலையைச் செய்வது ரூட்டர் எனும் வன்பொருள் சாதனம். அனுப்பப்படும் கேள்வியின் ஒவ்வொரு துண்டிலும் இரண்டு பிரிவுகள் இருக்கும்.

அ) எங்கிருந்து வருகிறது? யாருக்கு அனுப்பப்பட வேண்டும்?
ஆ) கேள்வியின் ஒரு பகுதி

இதனால் ஒருவரது ஐபி முகவரி, இருப்பிடம் சார்ந்த தகவல்கள் போன்றவற்றை வெளிப்படையாக வைத்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஹேக்கர் யாராவது இதை இடையில் மறித்துப் படித்தால், குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும் காரணத்தால் கேள்வி வேண்டுமானால் விளங்காமல் இருக்கலாம். ஆனால் எங்கிருந்து, யாரால், யாருக்கு அனுப்பப்படுகிறது என்னும் விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஆக, இணையத்தில் ஒருவர் அநாமதேயத்தை அடைய விரும்புகிறார் என்றால், தகவல் பரிமாற்றத்தின் அத்தனை அங்கங்களும் மறைக்கப்பட வேண்டும். அது எப்படிச் சாத்தியம்?

சென்னையில் இருக்கும் ரஜினி, பரமக்குடியில் வசிக்கும் கமலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். பொதுவாகக் கடிதத்திற்கு ஓர் உரை, ஒரு முகவரிதான் இருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, மூன்று வெவ்வேறு முகவரிகள் எழுதப்பட்ட உரைகளுக்கு உள்ளே வைக்கப்பட்டு அந்தக் கடிதம் அஞ்சல் செய்யப்படுகிறது. முதல் உரையில் எழுதப்பட்டு இருக்கும் முகவரியை நோக்கி கடிதம் புறப்படுகிறது.

அ) திருச்சியில் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட கார்த்தி அதைப் பிரித்து, இரண்டாவது உரையில் எழுதப்பட்டு இருக்கும் முகவரிக்கு அதை அஞ்சல் செய்கிறார்.

ஆ) சேலத்தில் இரண்டாவது உரையைப் பிரித்த சரவணன், மூன்றாவது முகவரிக்குக் கடிதத்தை அனுப்பி வைக்கிறார்.

இ) மூன்றாவது உரையைக் கோவையில் பிரித்த சிவகுமார், கடிதத்தின் சரியான பெறுநராகிய கமலுக்கு அதை அனுப்பி வைக்கிறார்.

சென்னையிலிருந்து பரமக்குடிக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு கடிதம், எதற்காகத் திருச்சி-சேலம்-கோவை என்று ஊர் ஊராகச் சுற்றுகிறது? இதனால் என்ன பலன்?
இந்தச் செயல்முறையில் சரவணனுக்கும் சிவகுமாருக்கும் கடிதத்தை யார் (ரஜினி) அனுப்பியது என்று தெரியாது, இல்லையா? கிட்டத்தட்ட இணையத்தில் அநாமதேயம் இப்படித்தான் சாத்தியப்படுகிறது.

தி ஆனியன் ரூட்டர் (சுருக்கமாக டார்) 2002ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல் படை ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. அடிப்படையில் டார் என்பது ஒரு கணினி நெட்வொர்க். ஆரம்பத்தில் இதை அமெரிக்கா உருவாக்கி இருந்தாலும், பிறகு இதைத் தனியுரிமை தன்னார்வலர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இது எப்படி இயங்குகிறது?

உலகம் முழுக்க இருக்கும் தன்னார்வலர்கள் தங்களது கணினியை டார் நெட்வொர்க்கோடு இணைத்துக்கொள்கின்றனர். கிட்டத்தட்ட 2000 முதல் 6500 கணினிகள் வரை இந்த நெட்வொர்க்கில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதன்மூலம் நமது அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அநாமதேயம் சாத்தியப்படுகிறது.

எப்படி? டார் என்னும் பிரவுசரைத் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம், அதில் உங்களது அனைத்து இணைய நடவடிக்கைகளும், மேலே சொன்ன டார் நெட்வொர்க்கின் மூலம் மேற்கொள்ளப்படும். டார் நெட்வொர்க்கைப் பயன்படுத்த அதே பெயரில் ஒரு பிரவுசரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள்.

உங்களது ஐபி முகவரி 192.168.42.232 என்று வைத்துக்கொள்வோம். டார் பிரவுசரை திறந்து அதன் நெட்வொர்க்கை பயன்படுத்தத் தொடங்கியதும் ஐபி முகவரி எப்படி மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

இப்போது உங்கள் முகம் டார் நெட்வொர்க்கின் புதிய ஐபியைக் கொண்டு கவசமிட்டுக்கொள்கிறது .

மாற்று ஐபியுடன் டார் நெட்வொர்க்கில் நுழைந்து, ‘காந்தி என்பவர் யார்?’ என்று கூகுளிடம் கேட்கிறீர்கள். அக்கேள்வி நெட்வொர்க்கின் முதல் தன்னார்வலரின் கணினிக்கு (திருச்சி கார்த்தி) அனுப்பப்படுகிறது. அதைப் பெற்றுக்கொண்ட கார்த்தி, அதை அடுத்த தன்னார்வலருக்கு (சேலம் சரவணன்) அனுப்பி வைக்கிறார்.

கார்த்தியால் செய்ய முடிந்ததெல்லாம் அவ்வளவுதான். கேள்வியைப் பிரித்துப்படிக்க இயலாது, மீறிப் படித்தாலும் விளங்காது. காரணம் அது மறையாக்கம் செய்யப்பட்டு இருக்கும். ஐபி முகவரியை வைத்து கண்டுபிடிக்கலாம் என்றால் அதுவும் மாற்றப்பட்டுவிட்டது. வேறு வழியில்லாமல் தங்களுக்கு வந்ததை அப்படியே அடுத்த ஆளுக்கு அனுப்பி வைக்கிறார்கள் கார்த்தியும் சரவணனும்.

ரஜினி அனுப்பிய கடிதம் கமலை வந்தடைவதற்கு முன்பு, மூன்று பேரின் கரங்களைத் தாண்டி வர வேண்டும் என்பதுதான் விதி. நீங்கள் கேட்ட கேள்வி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயங்கும் தன்னார்வலர்களின் மூன்று கணினிகளைத் தாண்டிய பிறகே கூகுளை வந்தடையும். இதன்மூலம் அந்தக் கேள்வியைக் கேட்டது யாரென்று ஒருவர் கூகுளின் சட்டையைப் பிடித்தால், அது மூன்றாவது தன்னார்வலரைத்தான் கை காட்டுமே ஒழிய, உங்களுக்குப் பாதகமில்லை.

ஒவ்வொரு தன்னார்வலராகக் கேள்வி பயணிக்கும்போது, அதன் மறையாக்கத்தில் ஓர் அடுக்கு கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. மொத்தத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கேள்வி இணையப் பாதையில் பயணிக்கிறது. சிவகுமாரைப் பொறுத்தவரையில் கடிதத்தை அனுப்பியது சரவணன்; சரவணனுக்கு கார்த்தி. உண்மையில் அதை அனுப்பிய ரஜினி தனது அனைத்து அடையாளங்களையும் மறைத்து தூரத்தில் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு அடுக்காக உரித்து உரித்து உள்ளே சென்றாலும், எதையும் கண்டடைய முடியாமல் இருப்பதனால் தான் இதன் பெயர், ஆனியன் ரூட்டிங். இணையத்தில் இப்படித்தான் டார் நெட்வொர்க்கின் மூலம் அநாமதேயம் சாத்தியப்படுகிறது.

இந்தியாவில் டார் பயன்படுத்துவது சட்ட விரோதமா? சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக மட்டும்தான் அது பயன்படுத்தப்படுகிறதா?
இல்லை என்பதுதான் இரண்டுக்குமான ஒரே பதில்.

கூகுளும், பேஸ்புக்கும் சதா உங்கள் நடவடிக்கைகளைப் பின்தொடர்ந்து அது தொடர்பான வணிக விளம்பரங்களை உங்களுக்குக் காட்டி வெறுப்படைய செய்கின்றனவா? நீங்கள் ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளர் என்று வைத்துக்கொள்வோம். உங்களையும், சேகரித்த ஆவணங்களையும் மறைத்துக்கொண்டு இணையத்தில் உலவ வேண்டிய கட்டாயம் இருக்கிறதா?. இதற்கெல்லாம் டார் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

ஆவணங்களின் மறையாக்கமும், ஆட்களின் அநாமதேயமும் சாத்தியப்பட்டு விட்டது. வேரென்ன? போர் ! ஆமாம் போர்!.

0

தொழில்நுட்ப வசதியைப் பலரும் தங்களது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டார்கள். மிகச் சிலர் மட்டுமே தனியுரிமை பற்றியும், அநாமதேயம் பற்றியும் தொடர்ந்து சிந்தித்து, ஓர் இலக்கை நிர்ணயித்து இயக்கமாகச் செயலாற்றி வந்தார்கள். அவற்றில் மிக முக்கியமானது சைபர்பங்க்ஸ் என்னும் மின் இயக்கம்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இயக்கத்தின் நோக்கம் மிக எளிமையானது. இணையத்தில் ஒருவரது தனியுரிமையை உறுதி செய்வது, அதற்கு உண்டான தொழில்நுட்பத்தை உருவாக்குவது. 1992இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், இன்று நாம் கொண்டாடும் பல தொழில்நுட்பங்களுக்கான விதையை ஊன்றியது.

டார் பிரவுசரை உருவாக்கிய ஜேகப் ஆப்பெல்பாம், டொரண்ட் பைல்களை பகிரவும், தரவிறக்கம் செய்யவும் பயன்படும் பிட் டொரண்ட் செயலியை உருவாக்கிய பிராம் கோஹேன், பிட்காயினை உருவாக்கியவர் என்று சொல்லப்படும் சடோஷி நகமோடோ போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

சாமானியர்களின் போரில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்காற்றியதற்குக் காரணம் மேலும் மூன்று பேர். முதலில் வருபவர் டிம் மே, டிஜிட்டல் கரன்சிக்கான யோசனையை 1990களின் ஆரம்பத்திலேயே பேசியவர் என்பதால் பிட்காயினின் தந்தை என்றும் இவரை அழைக்கிறார்கள்.

ஒரு வெள்ளைச் சுவரைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் யார் வேண்டுமானாலும் எதையும் எழுதலாம். புகார் சொல்லலாம், தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பதிவு செய்யலாம், அதிகாரத்தைக் கேள்வி கேட்கலாம், அரசுக்கு எதிரான ரகசியங்களை அம்பலப்படுத்தலாம். ஆனால் எழுதியது யாரென்று தெரியாது.

டிம் மே 1993ல், இந்தச் சுவரின் மின் வடிவமாகத்தான் ப்ளாக்நெட் என்னும் இணையத் தகவல் சந்தையை உருவாக்கினார். தங்களிடம் இருக்கும் தகவல்களை ஒருவர் அதில் விற்கலாம், தேவை இருப்போர் அதை வாங்கலாம். பங்குதாரர்களின் விவரங்கள் மறைக்கப்படும். நினைத்தபடியே அரசு ரகசியங்கள், ஆப்பிரிக்க நாட்டுத் தூதர்களை சிஐஏ இலக்காகக் கொண்டு செயல்பட்டது உள்ளிட்டவை அங்கே விற்பனைக்கு வந்தன. டிஜிட்டல் கரன்சி போன்றவை இல்லாத காலகட்டத்தில், தகவல்களைப் பெறப் பணம் செலுத்துவது, ஒருவகையில் அதைப் பெறுபவரது விவரங்களை வெளியிடுவதற்கான சூழலை ஏற்படுத்தியது. இதை ப்ளாக்நெட்டின் சறுக்கல் என்றுகூடச் சொல்லலாம்.

இரண்டாவதாக வருபவர் ஜானி யங். இவர் 1996இல் ‘க்ரிப்டோ மீ’ என்ற இணையத்தளத்தை உருவாக்கினார். இது இன்றும் செயல்பாட்டில் உள்ளது. அரசாங்கம் மறைக்க விரும்புவதை இந்தத் தளம் வெளியிடும். உதாரணத்திற்கு, ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததாகக் கூறப்படும் சிஐஏ ஆய்வாளர் யார் என்பதை க்ரிப்டோ மீ வெளியிட்டது. மேலும் பொது மக்களிடமிருந்தும் ரகசியங்களைப் பெற்று அம்பலப்படுத்தியது. பிரச்னை என்னவென்றால், ரகசிய ஆவணங்களை அனுப்புபவர்களைக் காக்க ‘க்ரிப்டோ மீ’ பெரிய அளவிற்கு முனைப்புக் காட்டுவதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்களில் நிகழ்ந்த தவறுகளிலிருந்து பாடம் கற்ற மூன்றாமவர், புதிதாக ஒன்றை உருவாக்குகிறார். அது உலகம் முழுக்க இருக்கும் பல அரசாங்கங்களுக்குக் கொடிய கனவாக மாறியது.

யார் அவர்? என்ன உருவாக்கினார்?

(தொடரும்)

பகிர:
ரிஷிகேஷ் ராகவேந்திரன்

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *