Skip to content
Home » சாமானியர்களின் போர் #6 – மெண்டக்ஸ்

சாமானியர்களின் போர் #6 – மெண்டக்ஸ்

ஹேக்கிங் உலகம்

ஒரு நல்ல பெயர் தேவைப்படுகிறது, மிக அவசரம். சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட ஒரு கதை அவனது நினைவிற்கு வந்தது.

அது ஒரு தந்தையின் கதை. அவருக்கு 50 மகள்கள். அவர்கள் அனைவரையும் அவரது சகோதரனின் மகன்களுக்கே திருமணம் முடிக்கவேண்டிய நிர்ப்பந்தம். கையறு நிலையிலிருந்த தந்தை தனது மகள்களிடம் ஒரு சத்தியத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்கிறார். அதன்படி 50 பேரும் தங்களது கணவர்களைத் திருமணத்தின் முதல் நாள் இரவில் கொலை செய்ய வேண்டும். 49 பேர் தந்தைக்குச் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினர், ஒருவளைத் தவிர.

கன்னித்தன்மைக்கு எந்தப் பாதகமும் வராது என்று தனக்கு உறுதியளித்த கணவனைக் கொல்லாமல் விடுகிறாள் ஒருத்தி. தந்தைக்குச் செய்துகொடுத்த சத்தியத்தை மீறுகிறாள். அவளை நோக்கி தந்தை உரக்கச் சொன்ன சொல்தான் ‘மெண்டக்ஸ்’. இதற்கு லத்தீனில் பொய்யர் என்று பொருள்.

16 வயதில் ஹேக்கிங் உலகில் நுழைந்த அவன், தனது நிஜ அடையாளங்களை மறைத்துக்கொண்டு தன்னை ‘மெண்டக்ஸ்’ என்று அறிவித்துக்கொண்டான். அவ்வுலகைப் பொறுத்தவரையில் ஊர், பெயர் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. என்ன மாதிரியான ரகசியங்களை இதுவரைக்கும் வெளியிட்டு இருக்கிறீர்கள்? உங்கள் கட்டுப்பாட்டில் எத்தனை அரசு கணினிகள் இருக்கின்றன என்பதை வைத்துத்தான் நீங்கள் ஒரு ஹேக்கரா, இல்லையா என்பதுகூட மதிப்பீடு செய்யப்படும். ஆஸ்திரேலியாவில் பல பிரபல ஹேக்கர்களுக்கு இடையே தன்னையும் ஓராளாகக் காட்டிக்கொள்ள மெண்டக்ஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துகொண்டிருந்தான்.

ஆஸ்திரேலிய பதின் பருவ ஹேக்கர்களுக்கு இடையே, எண்பதுகளின் இறுதியில் ‘மினர்வா’ என்ற ஒரு மந்திரச்சொல் புழக்கத்திலிருந்தது. மினர்வா என்பது மூன்று மெயின்ப்ரேம் கணினிகளின் கூட்டு அமைப்பு. அன்று ஒரு ஹேக்கரால் மினர்வாவை ஊடுருவ முடிந்தால், அவர் ஹேக்கிங் உலகின் சக்கரவர்த்தி. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. காரணம் அது ஆஸ்திரேலிய அரசால் நிர்வகித்து வரப்பட்டது.

வெளிநாட்டுத் தொலைத்தொடர்பு ஆணையம் (சுருக்கமாக ஒடிசி) என்ற பெயரில், சிட்னியில் செயல்பட்டு வந்த ஓர் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து மினர்வா இயங்கிவந்தது. அதற்கென்றே தனியாக ப்ரிமோஸ் என்ற இயங்குதளம் வேறு. அதில் விற்பன்னராக இருக்கும் ஒருவரால் மட்டுமே மினர்வாவை ஊடுருவ முடியும் என்ற சூழல்.

ஏற்கெனவே ‘போர்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஹேக்கர் அதைச் செய்துக் காட்டி, கடவுளுக்கு நிகரான அந்தஸ்தில் உலா வந்துகொண்டிருந்தார். தன்னை நிரூபிக்க ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தான் மெண்டக்ஸ். தொழில்நுட்ப ரீதியாக மினர்வாவை ஊடுருவுவது கடினம் என்பது சரி. ஆனால் வேறு ஏதாவது ஒரு வழி இல்லாமலா இருக்கும்?

மெண்டக்ஸிடம் ஒரு நல்ல டேப் ரிக்கார்டரும் ஆழ்ந்த குரலும் இருந்தன.  ஓர் அலுவலகத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதை முதலில் போலியாக உருவாக்க வேண்டும். மெல்பேர்னின் புறநகர்ப் பகுதியான எமரால்டில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கும் மெண்டக்ஸ், அலுவலகத்துக்கு எங்கே போவான் பாவம்.

என்ன செய்யலாம்? வீட்டிலிருப்பதை வைத்தே சமாளிக்க வேண்டியதுதான்.

அலுவலகச் சூழலில் கேட்கும் சன்னமான பேச்சுக்குரல்களுக்கு என்ன செய்வது?
தொலைக்காட்சியில் செய்தி சேனலை ஓடவிட்டு ஒலியைக் குறைக்கலாம்.

மனித சப்தத்திற்குச் சரி, இயந்திர சப்தத்தை எப்படி உருவாக்குவது?
ஒரு ஐந்நூறு பக்க ஆவணத்தை பிரிண்டரில் அச்சிடலாம்.

தட்டச்சு?
அதற்கு தானே கணினி கீபோர்ட் இருக்கிறது.

எதற்கும் இருக்கட்டுமென்று கேள்வியை ஒரு குரலிலும், அதற்கு உண்டான பதிலை வேறொரு குரலிலும் தனக்குத் தானே பேசிப் பார்த்துக்கொண்டான். பல ஒத்திகைகளுக்குப் பிறகு, தனது டேப் ரிக்கார்டரில் பதினைந்து நிமிடங்களுக்கு ஓர் அலுவலக அமைப்பு ஏற்படுத்தும் ஒலியைக் கவனமாகப் பதிவு செய்துகொண்டான். சக ஹேக்கர்களிடமிருந்து நாடு முழுவதும் இருக்கும் மினர்வா பயனாளிகளின் பட்டியலை ஏற்கெனவே பெற்றிருந்தான் மெண்டக்ஸ்.

ஒரு நல்ல நாளில், மினர்வாவின் பயனர்களை ஒவ்வொருவராகத் தொலைப்பேசியில் அழைத்தான் . சில முயற்சிகளுக்குப் பிறகு, அழைப்பு ஒருவரோடு இணைக்கப்படுகிறது. பின்னணியில் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்யப்பட்ட அலுவலக ஒலி.

மெண்டக்ஸ் உறுதியான குரலில் ‘வணக்கம். நான் ஜான் கெல்லர். சிட்னி ஒடிசியில் ஆப்பரேட்டராக பணியில் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் கணினியின் ஹார்ட் டிஸ்க் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டது. நல்லவேளை நாங்கள் எந்தத் தரவுகளையும் இழக்கவில்லை. இருப்பினும் உங்கள் தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவே அழைத்தேன்’ என்கிறான்.

மறுமுனையில் பேசியவர் பதட்டத்துடன் தனது கடவுச்சொல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

நன்றி சொல்லி இணைப்பைத் துண்டித்தான் மெண்டக்ஸ். கிடைத்த பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் உள்ளீடு செய்து பார்த்தபோது, எந்தத் தடையும் இல்லாமல் மினர்வா கணினிக்குள் ஊடுருவ முடிந்தது. தன்னைவிட வயதில், அனுபவத்தில் மூத்த ஹேக்கர்கள் தொழில்நுட்பத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டுச் செய்ததை, சோஷியல் இன்ஜினியரிங் மூலம் மிக எளிதாகச் செய்து முடித்திருந்தான். தன் வாழ்நாளின் முதல் குறிப்பிடத்தக்க ஹேக்கிங் முயற்சி, அதுவும் மகத்தான வெற்றி. மினர்வாவிற்குள் இருந்த எதையும் அவன் அழிக்கவில்லை, திருடவில்லை. அதற்குள் இருக்கிறோம் என்ற உணர்வுதான் அந்த வயதில் அவனுக்குப் பெரிதாக இருந்தது.

கிட்டத்தட்ட நம் ஊரில் இன்னமும் புழக்கத்தில் இருக்கும் ‘கார்டு மேலே பதினார் நம்பர்’ போன்றதொரு திருட்டுதான் இதுவும். ஆனால் அதைச் செய்து முடித்திருந்தபோது மேலும் பல கதவுகள் திறந்தன.

0

தனது வீட்டைவிட்டு வெளியேறும்போது மெண்டக்ஸின் அம்மா கிறிஸ்டினிக்கு வயது 17. அவர் வரைந்த ஓவியங்களை விற்று, அந்தப் பணத்தை வைத்து ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வரைபடம், ஒரு கூடாரம் போன்றவற்றை விலைக்கு வாங்கினார். அவர் பிறந்து வளர்ந்த குயின்ஸ்லாந்திலிருந்து கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து சிட்னிக்கு வந்து சேர்ந்தார். அங்கே தன்னை ஒரு எதிர் கலாசார சமூகத்தில் இணைத்துக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவில் அப்போது பரவலாக வியட்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. அது போன்றதொரு ஆர்ப்பாட்டத்தில்தான் ஒரு கலகக்கார இளைஞனை கிறிஸ்டின் சந்தித்தார் . அவன்மீது காதல் வயப்பட்டார். 1971ஆம் ஆண்டு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இது நடந்து ஒரு வருடத்திற்கு உள்ளாகவே தங்களுக்கு இடையேயான உறவை அவர்கள் முடித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் தனது முதல் பிறந்த நாளுக்கு முன்பே, தந்தையைப் பிரிந்துவிடுகிறான் மெண்டக்ஸ்.

மெண்டக்ஸுக்கு இப்போது வயது இரண்டு. தனது சக ஓவியர் ஒருவரை கிறிஸ்டின் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகான அவர்களது நாட்கள் கொந்தளிப்பானவை. காரணம் அவர்கள் போஹிமியன் கலாசாரம் என்ற வழக்கத்திற்கு மாறான ஒரு வாழ்க்கை முறையைப் பின்பற்றினர், கிட்டத்தட்ட ஹிப்பிக்கள் போல. ஒரே இடத்தில் தங்காமல் நகரம், நகரமாகப் பயணித்துச் செல்வது, போருக்கு எதிராக, அணு ஆயுதங்களுக்கு எதிராக நாடகங்கள் இயற்றுவது, ஓவியங்கள் வரைவது என அவர்களது நாட்கள் சென்று கொண்டிருந்தன. சிறுவன் மெண்டக்ஸ் தன்னைச்சுற்றி எப்போதும் நாடகக் கலைஞர்கள் சூழ இருந்தான். சமயங்களில் அவன் பள்ளிக்கூடம் செல்லும் நிகழ்வுகூட நடந்தது.

மெண்டக்ஸுக்கு இப்போது வயது ஒன்பது. என்னதான் அவனுடைய மாற்றாந்தந்தை நாடகத்தை இயற்றி நடிக்கும் ஆற்றலைப் பெற்றவர் என்றாலும், நல்லவராக  இருந்தபோதிலும், மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தின் காரணத்தால் கிறிஸ்டின் அவரைப் பிரிந்தார்.

மூன்றாவது முறையாக அமெச்சூர் இசைக் கலைஞன் ஒருவனோடு ஒரு மோசமான உறவிற்குள் நுழைந்தார் கிறிஸ்டின். அந்தப் புதிய உறவு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குடும்பத்தைத் துன்புறுத்தியது. அம்மாவின் மூன்றாவது புதிய உறவைக் குறித்து வர்ணிக்கையில், ‘அவன் வன்முறையில் ஈடுபடும் ஒரு கொடூரமான மனநோயாளி’ என்கிறான் மெண்டக்ஸ்.

அவனிடமிருந்து தப்பிக்க அம்மாவும் மகனும் மீண்டும் நகரம், நகரமாகப் பயணித்து ஓடி ஒளிந்தார்கள். அவனும் அவர்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் துரத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தினான். ஆஸ்திரேலியக் கண்டத்தின் இரண்டு பக்கங்களிலும் மாறி மாறி தங்களது அடையாளங்களை மறைத்து ஓடி ஒளிந்தவர்கள், இறுதியாக மெல்பேர்ன் நகரின் ஒதுக்குபுறமான எமரால்டில் வசிக்கத் தொடங்கி இருந்தார்கள். இதுவரைக்கும் மெண்டக்ஸ் கிட்டத்தட்ட 37 பள்ளிக்கூடங்கள் மாறி இருந்தான்.

கணினியை மட்டும் தங்களது துணையாகக் கொண்டவர்களின் குழந்தைப் பருவம் மோசமானதாகத்தான் இருக்கும் என்பது மீண்டுமொருமுறை மெண்டக்ஸின் மூலம் உறுதியாகிறது.

0

1989ஆம் ஆண்டு மெல்பேர்ன் ஹேக்கர்கள் மற்றுமொரு சிறப்பான சம்பவத்தைச் செய்தார்கள். அன்று நாசாவின் இணையத்தளத்தைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. காரணம் அதில் ‘உங்கள் கணினி அதிகாரப்பூர்வமாக ஹேக் செய்யப்பட்டிருக்கிறது’ என்று இருந்தது.

வோர்ம் என்பது ஒருவகை கணினி வைரஸ். கணினியில் ஒரு சாதாரண பைல் போல நுழைந்து, தன்னைத்தானே பெருக்கிக்கொண்டு பலநூறு பைல்களாக மாறி, மற்ற கணினிகளுக்கும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனால் கணினியின் சேமிப்பிடம் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, எதையுமே சேமிக்க இயலாத சூழல் ஏற்பட்டுவிடும்.

அன்று நாசா அப்படியோர் தாக்குதலைத்தான் எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஹேக்கர்கள் தாங்கள் பரப்பிய வைரஸிற்கு அம்சமாக ‘அணுவாயுத கொலைகாரர்களுக்கு எதிரான வோர்ம்’ என ஒரு பெயரையும் வைத்திருந்தார்கள். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் பட்டியலில் மெண்டக்ஸின் பெயரும் அடிபட்டது, ஆனால் நிரூபிக்கப்படவில்லை.

அதன்பிறகு ஆஸ்திரேலிய ஹேக்கிங் உலகில் ஓர் இளவரசனாகச் சிம்மாசனமிட்டு அமர்ந்தான் மெண்டக்ஸ். மெண்டக்ஸின் இயற்பெயர் என்ன? ஒருமுறைக் கூடவா அவன் வெளிச்சத்திற்கு வரவில்லை?

(தொடரும்)

பகிர:
nv-author-image

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *