உங்களுக்கு முன்பிருக்கும் ஓர் ஓவியத்தைக் கவனியுங்கள். என்ன தெரிகிறது? ஓவியத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள். அல்லது அதன் கருப்பொருள். பிறகு வண்ணங்கள். தேர்ச்சி பெற்ற விழிகள் என்றால் ஓவியத்திலுள்ள குறியீடுகள் புரியத் தொடங்கும். அவ்வளவுதான், இல்லையா? இப்போது சொல்லுங்கள், அந்த ஓவியத்தில் ஏதேனும் குறைபாடு உங்கள் கண்களுக்குத் தெரிந்ததா?
இல்லை என்பீர்கள். ஆனால் நிச்சயம் அதில் குறைபாடு இருக்கும். எனில், அதை நீங்கள் கவனிக்காதது ஏன்? உங்களுக்கும் ஒரு ஹேக்கருக்கும் இடையே இருக்கும் வித்தியாசமாக இதைத்தான் சொல்கிறான் மெண்டக்ஸ், குறைகளைக் கண்டறியும் பார்வை ஒரு சாதாரண நபரைவிட ஹேக்கருக்கு மிக அதிகம்.
தொழில்நுட்பத்தின் குறைபாடுகளைக் கண்டறிந்து, அதன் வழியாக ஊடுருவி, ஒரு கட்டத்தில் உலகின் ஒட்டுமொத்த இணையத் தொடர்பையும் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் ஹேக்கரின் ஒரே இலக்கு. அதை அடைவது சாத்தியம்தான். உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களை நாங்கள் ஊடுருவியது இப்படித்தான். 20,000 தொலைப்பேசி இணைப்புகளை அணைத்துவைக்க வேண்டுமா? அல்லது நல்லதொரு மதிய வேளையில் நியூ யார்க் வாசிகளுக்கு இலவசமாகத் தொலைப்பேசி சேவையை வழங்க வேண்டுமா? அதுவும் எந்தவொரு காரணமும் இல்லாமல்? கவலையை விடுங்கள், நாங்கள் சிறப்பாகச் செய்து தருகிறோம்.
நாங்களா? மெண்டக்ஸ் சரி. மற்றவர்கள் யார்?
0
சர்வதேச நாசக்காரர்கள் என்று பொருள் தரும் பெயரில் ஒரு மின்னிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. கணினி சாதனங்களின் அறிமுகம், ஹேக்கிங், தொலைப்பேசி இணைப்புகளை ஊடுருவுதல் போன்றவைதான் அவ்விதழின் உள்ளடக்கம். அதை உருவாக்கி வெளியிட்டோர் மெண்டக்ஸ் மற்றும் அவனது ஹேக்கிங் உலக நண்பர்களான ப்ரைம் சஸ்பெக்ட், ட்ராக்ஸ் இருவரும். இரவு பகலாக உழைத்து அதை வெளியிட்ட காரணத்தினாலோ என்னவோ, அதன் சந்தாதாரர்களாக அவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர்.
ஹேக்கர்களில் சிலர் விளம்பரப் பிரியர்களாக இருப்பார்கள், குறிப்பிட்ட ஹேக்கிங்கை செய்து முடித்தது நானே என்று வெளியே தெரியவேண்டும் என்று விரும்புவார்கள். தங்கள் அறிவுக்கான புகழ் வெளிச்சத்தைப் பெற வேண்டுமென்று நினைப்பார்கள். பீனிக்ஸ் என்ற ஹேக்கர் நேரடியாக நியூ யார்க் டைம்ஸ் செய்தியாளரைத் தொடர்புகொண்ட சம்பவமும்கூட நிகழ்ந்திருக்கிறது.
இதற்கு நேர்மாறாக, மெண்டக்ஸ் மற்றும் அவனது நண்பர்கள் தங்களது அடையாளங்களை இணைய வெளியில் எங்கேயும் விட்டுவைப்பது கிடையாது. இவர்கள் ஹேக் செய்யும் கணினிகளில் அப்படியொரு சம்பவம் நடந்திருப்பது கூட சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாது. தாங்கள் சென்று வந்ததற்கான அனைத்துத் தடயங்களையும் அழித்திருப்பார்கள். இவர்களைப் பொறுத்தமட்டில், அதிகாரப் பீடங்களை எதிர்த்து ரகசியமாகப் போரிடும் இளம் சுதந்திர வீரர்கள் அவர்கள். அல்லது இரவு நேரங்களில் மட்டும் உலா வந்து, தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் பேய்கள்.
நண்பர்கள் மூவரும் மெல்போர்ன் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து இயங்கிவந்த போதிலும், பெரும்பாலும் நேரில் சந்திப்பதைப் பாதுகாப்பு கருதித் தவிர்த்து வந்தார்கள். 1990இல் நண்பர்களோடு உரையாடுவதற்கென்றே ஒரு மின் அறிவிப்புப் பலகையை உருவாக்கினான் மெண்டக்ஸ். அதற்கு அவன் வைத்த பெயர் ‘அழகான சித்தப்பிரமை’. அதன் மூலமாக மட்டும் தங்களது அன்றாட ஹேக்கிங் செயல்பாடுகளையும் சாதனைகளையும் பகிர்ந்துகொண்டு இருந்தனர். இதைச் செய்தபோது அவனுக்கு வயது 19. மின் உலகில் மட்டும் உரையாடிக்கொண்டிருந்த போதும் அவர்களுக்கு இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது.
ட்ராக்ஸின் குடும்பம் மிகச் சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்திருந்தது. வறுமையான சூழலிலிருந்து வந்த அவனிடம், இன்னமும் ஜெர்மானிய உச்சரிப்பு எஞ்சியிருந்தது. இதனால் புதிய இடத்தில் ஒரு சங்கடத்தையும், அந்நியத் தன்மையையும் அவன் உணர்ந்தான்.
மற்றொரு நண்பனான ப்ரைம் சஸ்பெக்ட் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவன். எட்டு வயதில் தந்தையை இழந்தவனின் உலகம், தனது படுக்கையறையிலிருந்த கணினிக்கு முன்பாக அமர்ந்தபோது மட்டும் விரிந்தது. தனது அறைக்கு வெளியே இருந்த மற்றொரு உலகில் அவனது அம்மா, கணவனை இழந்த சோகத்தில் இரண்டு குழந்தைகளோடு கசப்பிலும், கோபத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஏதோவொரு வகையில் சமுதாயத்தோடு பொருந்தாமல் இருந்த தன்மைதான் இவர்கள் மூவரையும் நண்பர்களாக்கியது. சாமானியர்களின் தனியுரிமையை உறுதிசெய்ய ஆரம்பிக்கப்பட்ட சைபர்பங்க்ஸ் இயக்கத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டனர்.
பெருநிறுவனங்கள் மட்டுமே தனியுரிமை குறித்தும், தரவுகளைப் பாதுகாப்பாக இணையத்தில் பரிமாற்றம் செய்வது குறித்தும் பேசிக்கொண்டிருந்த காலத்தில், அதைச் சாமானியனுக்கும் சாத்தியப்படுத்துவது குறித்து இவர்கள் மூவரும் சிந்திக்கத் தொடங்கினர். காரணம், தரவுகளை மறையாக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் க்ரிப்டோக்ராபி தொழில்நுட்பத்தை, அரசாங்கம் தவிர வேறு யாராவது பயன்படுத்தினால் அது சட்டவிரோதம் என்று சொல்லும் சூழல்கூட நிலவியது.
ஒருவேளை இது தொடர்ந்திருந்தால் ஒரு அரசு எதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று நினைக்கிறதோ, அதை மட்டுமே வடிகட்டி தன் குடிகளுக்கு வழங்கியிருக்கும். இதை மீறுவதில் மெண்டக்ஸ் மிகத் தீவிரமாக இருந்தான். அவன் இணையத்தில் ஓர் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டான், அதில் சாமானியர்கள் தங்களது உரிமைகளின் மீதான முழு அதிகாரத்தையும் கொண்டிருக்க வேண்டுமென விரும்பினான். அதை எப்படி உருவாக்குவது என்ற கேள்வியே அவனது மனத்தைப் பெருமளவில் ஆக்கிரமித்திருந்தது. மெண்டக்ஸின் வளர்ச்சியில் சைபர்பங்க்ஸ் இயக்கத்திற்கு ஒரு பெரும்பங்கு இருக்கிறது.
மெண்டக்ஸுக்கு இருபது வயது இருக்கையில் நண்பர்களோடு சேர்ந்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நெட்வொர்க் தகவல் மையத்தை (சுருக்கமாக என்ஐசி) ஊடுருவத் திட்டமிட்டான். அதுவரை ஹேக்கிங் உலகில் எவரும் செய்யத் துணியாத ஒரு செயலது. காரணம், மோத இருப்பது உலகின் வல்லரசு நாட்டின் ராணுவத்தோடு.
என்ஐசி அப்போது மிக முக்கியமான இரண்டு வேலைகளைச் செய்து வந்தது. ஒன்று, இணையத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு உண்டான நெறிமுறைகளை உருவாக்குவது. இதைப் பின்பற்றி மட்டுமே ஒரு கணினி மற்றொரு கணினியோடு தொடர்புகொள்ள இயலும். இரண்டு, டொமைன் பெயர்களை ஒதுக்குவது. பிரவுசரில் ஒரு இணையதள முகவரியை உள்ளீடு செய்ததும், ஆங்கில எழுத்துகளில் இருக்கும் அந்த முகவரி, எண்களால் ஆன ஐபி முகவரியாக மாற்றப்பட வேண்டும் (ஐபி முகவரியின் அடிப்படையில் மட்டும்தான் இணையத்தில் தகவல் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை ஏற்கெனவே பார்த்தோம்). இந்தச் செயல்முறையைக் கட்டுப்படுத்தும் இடத்தில் என்ஐசி இருந்தது. அதை ஒருவர் வசப்படுத்தினால், கிட்டத்தட்ட இணையத்தை ஆளும் சக்தியைப் பெற்றவராக ஆகலாம். ஏன், இணைய உலகிலிருந்து தாற்காலிகமாக அமெரிக்காவை மறைய வைப்பதுகூடச் சாத்தியம்தான்.
அந்தச் சக்தியை மெண்டக்ஸும், ப்ரைம் சஸ்பெக்ட்டும் ஒரு நள்ளிரவில் பெற்றனர். அதற்குண்டான முயற்சிகளைப் பல மாதங்களாக அவர்கள் செய்து வந்தனர். இதன்மூலம் அமெரிக்க ராணுவம் தங்கள் பயன்பாட்டுக்காக மட்டும் உருவாக்கியிருந்த மில்நெட் என்னும் நெட்வொர்க்கையும் அவர்களால் தொட முடிந்தது. உலகம் அஞ்சி நடுங்கும் ஒரு வல்லரசின் ராணுவ ரகசியங்கள், சமீபத்தில் 20 வயதை எட்டிய இரண்டு ஆஸ்திரேலிய ஹேக்கர்களின் கணினிகளில் விரிந்தன.
ஒரு வேடிக்கையாகத்தான் அவர்கள் இதை ஆரம்பித்தார்கள், முடிவில் ஒரு அதிகார கோட்டையை உடைத்து உள்ளே நுழைந்து இருந்தார்கள். மனித உரிமை போராளிகள், செய்தியாளர்கள், எதிர்க்கட்சிகள், சமூக நல விரும்பிகள் எனப் பலருக்கு எது மறுக்கப்பட்டதோ, அந்த ரகசியங்கள் இப்போது அவர்களின் கைகளில். சில்லறை கிடைக்கும்போதெல்லாம் அண்ணாச்சி கடைக்கு ஓடும் சிறுவர்களைப் போல, என்ஐசிக்குள் சென்றுவந்தார்கள் மெண்டக்ஸும் அவனது நண்பனும். இதில் மெண்டக்ஸ் கண்டறிந்த ஓர் உண்மை அவனை மிகவும் தொந்தரவிற்கு உள்ளாக்கியது.
தன்னிடமிருந்த கணினிகளை ஊடுருவிப் பார்ப்பதன் மூலம், ஹேக்கிங்கை ஒரு பயிற்சியாகத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது அமெரிக்க ராணுவம். தங்களுக்கு இடையே அவர்கள் செய்து வந்ததை, கட்டாயம் தங்களைத் தாண்டியும் செய்வார்கள் என்று உறுதியாக நம்பினான் மெண்டக்ஸ். இதற்குத் துணையாக இருந்த ஹேக்கர்களின் மீது அவனுக்குக் கோபம் இருந்தது.
அவனைப் பொறுத்தவரையில், ஹேக்கர்கள் என்பவர்கள் கலகக்காரர்கள். அவர்கள் அதிகாரத்திற்கு எதிராக நிற்க வேண்டியவர்கள். சைபர்பங்க்ஸ் இயக்கத்தில் அவனோடு ஒன்றாகப் பாடம் படித்தவர்கள் பின்னாட்களில் அந்த அறிவை முதலீடாகக் கொண்டு, சன் மைக்ரோசிஸ்டம் போன்ற பெரு நிறுவனங்களில் சேர்ந்தார்கள், பே பால் போன்ற செயலியை உருவாக்கினார்கள், பெரும் பணம் படைத்தார்கள். ஆனால் மெண்டக்ஸின் பாதை வேறு, பயணம் வேறு.
நொடிக்கு 40,000 கடவுச்சொற்களை உற்பத்தி செய்து, அதன்மூலம் அசல் கடவுச்சொல்லைக் கணிக்கும் சைக்கோபண்ட் என்ற செயலியை உருவாக்கியிருந்தான் மெண்டக்ஸ். கனடாவைச் சேர்ந்த நார்டெல் என்ற நிறுவனம், தொலைத்தொடர்பு சாதனங்களை உருவாக்கி விற்பனை செய்வதற்குப் பெயர் போனது. உருவாக்கப்பட்ட செயலியைக் கொண்டு மெண்டக்ஸ் குழுவினர் அந்நிறுவனத்தை ஹேக் செய்திருந்த நேரம், ‘போலீஸ் தூங்குகிறதா?’ என்று அவர்கள் நாட்டிலும் யாரோ கேட்டிருப்பார்கள் போல. மறுமுனையில் ஆஸ்திரேலிய கணினி குற்றப்பிரிவு போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கியிருந்தனர். ஹேக்கர்கள் குறித்த இந்த வழக்கிற்கு அவர்கள் வைத்த பெயர், ஆபரேஷன் வெதர்.
தங்களது ஹேக்கிங் சாதனைகளை இப்போது தொலைப்பேசி மூலமாகவும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளத் தொடங்கியிருந்தனர் நண்பர்கள் மூவரும். அன்று நள்ளிரவு தாண்டியும் நீண்ட அவர்களது உரையாடலின் மையம், ஒருவேளை ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் நம்மை நோட்டமிடத் தொடங்கியிருக்கலாம் என்பதே. மெண்டக்ஸ் தனது நண்பர்களை எச்சரித்தான். உரையாடல் முடிந்ததும் இணைப்பிலிருந்த மூவரும் ஒவ்வொருவராக வெளியேறினர்; மௌன சாட்சியாக அதுவரை அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய பெடரல் போலீசைத் தவிர.
கணினிக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சிய நேரம் மிகக் குறைவு என்பதனால், காதல்-மனைவி-ஆண் குழந்தை என்ற அளவில் மட்டுமே மெண்டக்ஸின் குடும்ப வாழ்க்கை அமைந்திருந்தது. அதுவும்கூட நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அப்போது அவன் மனைவியையும், மகனையும் பிரிந்திருந்த நேரம், உளரீதியாக மிகவும் பாதித்திருந்தான். பல நாட்கள் உறக்கமில்லை, உணவில்லை.
29 அக்டோபர் 1991, இரவு 11:30. மெண்டக்ஸின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. வெளியே ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ். ஏற்கெனவே அவனது நண்பர்களின் வீடுகளும் போலீசாரால் சோதனை செய்யப்பட்டு இருந்தன. ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான் மெண்டக்ஸ். கிட்டத்தட்ட 63 பைகளில் அவனது வீட்டிலிருந்து கணினி உள்ளிட்ட சாதனங்களைக் கைப்பற்றியது போலீஸ். ஆனால் அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
ஹேக்கிங் குறித்த தெளிவான சட்டங்கள் இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து, அதாவது 1994இல்தான் அவர்கள் மீதான வழக்கு விவரங்கள் மின்னஞ்சல் செய்யப்பட்டன. இது நடந்து மேலும் இரண்டாண்டுகள் கழித்தே வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்தக் காலகட்டங்களில் மூவரின் வாழ்வும் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளானது. உளச்சிக்கல், போதை எனத் தடம் மாறினர். ஒரு கட்டத்தில் மெண்டக்ஸுக்கு எதிராகவே திரும்பினான் ப்ரைம் சஸ்பெக்ட். இறுதியாக 2100 டாலர்களைத் தண்டத் தொகை விதித்து, நீதிபதியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டான் மெண்டக்ஸ்.
இப்போது மெண்டக்ஸுக்கு செய்ய வேலை இல்லை. தனது தாயுடனும், தனக்குப் பிறந்த மகனுடனும் செய்வதறியாது அல்லாடிக் கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் மீண்டும் தனது கணினி பாதைக்கே திரும்பினான். 1997இல் ரப்பர்ஹூஸ் என்னும் ஒரு மென்பொருளை உருவாக்கினான். இதன்மூலம் மறையாக்கம் செய்யப்பட்ட தரவுகள் இணையப்பாதையில் வெளிப்படையாக அனுப்பப்படுவதற்குப் பதிலாக, அவற்றிற்குச் சம்பந்தமே இல்லாத பல்வேறு போலி ஆவணங்களின் அடுக்குகளுக்கு இடையே மறைக்கப்பட்டு அனுப்பப்படும். இதனால் ஒரு ரகசியம் சென்றடைய வேண்டிய இடத்திற்கு மிகச் சரியாக அனுப்பப்படுகிறது. மற்றவர்களுக்கு அதே ரகசியம் அடைய முடியாத ஓரிடத்தில் ஒளிந்திருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் அரசு தரும் அச்சுறுத்தல்களுக்கு, தண்டனைகளுக்குப் பயப்படாமல் துணிச்சலுடன் ஒரு சாமானியன் பேச முன் வருவான் என்பதைத் தீர்க்கமாக நம்பினான் மெண்டக்ஸ்.
இவ்வளவு நடந்த பிறகும் மெண்டக்ஸின் நிஜப்பெயர் என்ன என்பது வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?
பிற்காலத்தில் உலகின் மிகப் பிரபலமான மனிதன் என்றும், உலகின் மிக ஆபத்தான மனிதன் என்றும் வர்ணிக்கப்பட்ட ஜூலியன் அசாஞ்சேதான் இந்த மெண்டக்ஸ். தனது தண்டனைக்குப் பிறகு அவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான்.
(தொடரும்)