நீங்கள் கணிதமும் குவாண்டம் மெக்கானிக்ஸும் கற்றிருக்கிறீர்களா? ஆம் எனில் உங்களுக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுவரை செய்த ஹேக்கிங் குற்றங்களுக்காக நீதிமன்றம் அவரை எச்சரித்து விடுதலை செய்தபிறகு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு இலக்கின்றி அலைந்தார் அவர். ஒருவழியாக 2003இல் ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான, மதச்சார்பற்ற கல்வி நிறுவனம் என்று பெயர் பெற்ற மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் படிப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.
முதலில் பல்கலைக்கழகம் மனநலம் பாதிக்கப்பட்ட வெளி நோயாளிகளுக்கான தங்குமிடமாகத்தான் அவருக்குத் தோன்றியது. காரணம், அங்கிருந்த கட்டமைப்பு மற்றும் ஒழுங்கு. அங்கிருந்தவர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் கண்காணிப்புக்கு உள்ளாக வேண்டியிருந்தது.
வயதில், அறிவில், அனுபவத்தில் என்று எப்படிப் பார்த்தாலும் அசாஞ்சேவால் சக மாணவர்களோடு பொருந்திப்போக முடியவில்லை. கல்வி நிறுவனங்கள் கற்றுத்தர இயலாத பலவற்றைத் தனது விருப்பத்தாலும், பரீட்சார்த்த முயற்சிகளாலும் சுயமாக கற்றிருந்த போதிலும், அங்கே நன்றாகப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும் அவரிடம் ஆழமாக இருந்தது.
0
உங்கள் வலது கையை வெற்றுக் கண்களால் பார்ப்பதற்கும், ஒரு நுண்ணோக்கியின் துணைகொண்டு பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடுதான் குவாண்டம் மெக்கானிக்ஸ் படிப்பின் அடிப்படை. ஒரு பொருளை உருவாக்கும் துகள்களின் தன்மை குறித்துப் பயில்வது. இதை ஆழ கற்கும் பட்சத்தில், தெளிவாகச் சிந்திப்பதற்கு உண்டான பயிற்சியை அது ஒருவருக்கு வழங்குகிறது.
காரணம், எது வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவதில்லையோ, அதை நோக்கியே உங்களது ஒட்டுமொத்த கவனமும் செலுத்தப்படுகிறது. ஏனோ அசாஞ்சேவுக்கு இந்தப் படிப்பின்மீது மிதமிஞ்சிய ஆர்வமிருந்தது. அதில் அர்த்தமற்ற கேள்விகளுக்கு இடமில்லை. பரிசோதனை செய்து நிறுவப்பட்டதை மட்டுமே பதில்களாக முன்வைக்க முடியும். இணையம் சார்ந்த அவரது எதிர்காலத் திட்டங்களுக்கு இந்தப் படிப்பு நிச்சயம் செயல் வடிவம் தரும் என உறுதியாக நம்பினார்.
அசாஞ்சேவிடம் அப்போது ஓர் உருவகம் இருந்தது. அதன்படி தகவல்கள் திரவமாகவும், அதைச் சுமந்து செல்ல ஒரு குழாயும், பெறவேண்டிய நீதியை நோக்கி நிறுவப்பட்டிருந்தது. மக்களிடையே, சமுதாயங்களுக்கிடையே பதிக்கப்பட்டிருந்த அக்குழாயின் மூலமாகத் தகவல்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தன.
இப்போது அவை நீதியைச் சென்றடைய வேண்டும். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? இடையில் தடைப்பட்டு நிற்கக் காரணங்களா இல்லை? ஒன்றல்ல இரண்டல்ல, தகவல்கள் தங்களின் பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பு, பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது.
அந்தக் குழாயை உருவாக்கியது யார்? அதற்கான செலவை ஏற்றது யார்? இப்போது யார் அதைப் பராமரிக்கிறார்கள்? தகவல்கள் எங்காவது தடைப்பட்டு நிற்கின்றனவா? அல்லது யாராவது அதைத் தடுத்து நிறுத்துகிறார்களா? தகவல்கள் பாய்ந்து செல்வதற்கு ஊடகங்கள் எந்த அளவிற்குத் துணை நிற்கின்றன அல்லது தடையாக இருக்கின்றன? இப்படி எத்தனையோ கேள்விகள் தோன்றின.
இதில் ஒரு சாமானியனாக தன்னுடைய பங்கு என்ன என்று யோசித்தார் அசாஞ்சே. குழாயில் தகவல்கள் எங்காவது அடைபட்டிருந்தால், அதைச் சரி செய்யலாம். இந்தச் செயல்முறையைக் கண்காணிக்க, தகவல்கள் சரியான திசையில்தான் பாய்ந்து செல்கின்றனவா என்பதை உறுதிசெய்ய, நிறைய தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கலாம். தங்களிடம் இருக்கும் ரகசியங்களை, தண்டனை குறித்த எந்தவித அச்சமுமின்றி, மக்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைக்கும் வகையில் ஓர் அமைப்பை உருவாக்கலாம். அதன்மூலம் பெறவேண்டிய நீதியைக் கேட்டுப்பெறலாம்.
இந்த ஒப்புமையை அப்படியே இணையத்திற்குப் பொருத்திப் பார்த்தார் அசாஞ்சே. குழாய் என்பது இணையப் பாதை. திரவம் என்பது ரகசிய ஆவணங்கள். ஆக, தான் செய்ய வேண்டியது என்ன என்பது தீர்க்கமாகத் தெரிந்தது.
அக்டோபர் 2006இல் விக்கிலீக்ஸ் பிறந்தது.
0
தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் விக்கிலீக்ஸ் என்பது ஒரு சாதாரண இணையதளம் மட்டும்தான். விக்கி எனத் தொடங்கும் எதுவும் மக்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. விக்கிப்பீடியா ஒரு நல்ல உதாரணம். விக்கிலீக்சுக்கு மக்கள் எப்படித் தங்கள் பங்களிப்பை வழங்க முடியும்?
உங்களிடம் ஒரு ரகசியம் இருக்கிறது. ‘இன்றிரவு அனைவரும் தூங்கிய பிறகு தோட்டத்திற்கு வரவும், தீபாவளி பரிசு காத்திருக்கிறது’ போன்றவை ரகசியங்களின் கணக்கில் வராது. எதை வெளியிட்டால் ஒருவரது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படுமோ அதுவே ரகசியம். அது ஓர் அரசின் செயல்திட்டமாக இருக்கலாம் அல்லது வல்லரசு நாட்டின் போர்க் குற்றங்களாக இருக்கலாம்.
நீதியை வேண்டி நிற்பவர்களுக்கு ஒரு ரகசியம் துணை நிற்கும் என்றால், அது அம்பலப்படுத்தப்படவேண்டும். நீங்களோ ஒரு சாமானியர். அந்த ரகசியத்தை எப்படி வெளியிடுவது என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் யாரும் நம்பும்படியாக இல்லை. பணபலம், அதிகார பலம், கட்சி அல்லது சாதி பின்னணி என்று எதுவும் உங்களைக் காப்பாற்ற வராது. நீங்கள் என்ன செய்யலாம்?
விக்கிலீக்ஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருப்பது போல, பிற்காலங்களில் விக்கீலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் அனைத்தும் அசாஞ்சே மற்றும் அவரது குழுவினர் பல்வேறு நாடுகளின் அரசாங்கக் கணினிகளுக்குள் ஊடுருவிக் கைப்பற்றியவை மட்டும் அல்ல. நம்மைப் போன்ற சாமானியர்கள் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்குச் சென்று சமர்ப்பித்தவைதான் பெரும்பாலானவை.
பிரவுசரில் wikileaks.org என்ற முகவரியை உள்ளீடு செய்ததும், அதன் முகப்புப் பக்கத்தில் இருக்கும் இணைப்பைப் பயன்படுத்தி, மிக எளிமையாக யாராலும் ரகசிய ஆவணங்களை சமர்ப்பிக்கமுடியும். ஒருவேளை மாட்டிக்கொண்டால்? அதற்கு வாய்ப்புகள் இல்லை.
ரகசிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் இணையப் பக்கத்தை மட்டும், நாம் பொதுவாகப் பயன்படுத்தும் கூகுள் க்ரோம், மொசில்லா ஃபயர்பாக்ஸ் போன்ற பிரவுசர்களில் திறக்க இயலாது. காரணம் மிக எளிமையானது. ஒருவேளை இந்தச் செயலிகளில் திறக்கும் வாய்ப்பு இருந்தால், சமர்ப்பித்தது யார் என்று கண்டுபிடிக்க ஓர் அரசாங்கத்திற்கு அரைநாள் போதும்.
ஆகவேதான் பிரேத்தியேகப் பக்கம், பிரேத்தியேக பிரவுசர். உதாரணத்திற்கு, ஆவணங்களைச் சமர்ப்பிக்க இப்போது விக்கிலீக்ஸ் தளத்தில் இருக்கும் சுட்டி பின்வருமாறு இருக்கிறது.
http://ibfckmpsmylhbfovflajicjgldsqpc75k5w454irzwlh7qifgglncbad.onion
சுட்டியின் கடைசிப் பகுதியைக் கவனித்தால் தெரியும், ‘.onion’ என்று முடிவதால் இதை டார் பிரவுசரில் மட்டுமே திறக்கமுடியும். இதனால் ஒரு போலி ஐபி முகவரி தரப்பட்டு உங்களது அடையாளம் மறைக்கப்படும். மேலும், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மறையாக்கம் செய்யப்பட்டு இணையப் பாதையில் பாதுகாப்பாக விக்கீலீக்ஸ் சர்வருக்கு அனுப்பப்பட்டு, சேமிக்கப்படும்.
இணையதளத்தை உருவாக்கிய ஜூலியன் அசாஞ்சே நினைத்தாலும்கூட, ஆவணங்களை அனுப்பியவர் யார் என்று கண்டுபிடிப்பது கடினம். மறுமுனையில் ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட அவர்கள், அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதை உலகறியச் செய்கிறார்கள்.
0
உலகின் பழமையான, மிகப்பெரிய ஹேக்கர்கள் குழுவுக்கு அவர்கள் வைத்துக்கொண்ட பெயர் குழப்பமான கணினிச் சங்கம். டிசம்பர் 2007இல் அவர்கள் நடத்திய வருடாந்திர மாநாட்டில் அசாஞ்சேவும் ஜெர்மனைச் சேர்ந்த ப்ரோக்ராமர் டேனியல் டோம்சிட்பெர்க்கும் (Daniel Domsitberg) சந்தித்துக் கொள்கின்றனர்.
உலகின் பல்வேறு ஹேக்கர்கள் குழுவைத் தொடர்புகொண்டு, விக்கீலீக்சுக்கு நிதி திரட்டியது முதல் அதன் சர்வரை வைக்கச் சிறந்த நாடு எது என்று தீர்மானித்தது வரை ஆரம்பக்காலக் கட்டுமானத்தில் அசாஞ்சேவிற்கு நிகராக, டோம்சிட்பெர்க்கின் பங்களிப்பும் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரையில், விக்கிலீக்ஸ் என்பது ஓர் இணையதளம் மட்டுமல்ல, அது பத்திரிகைத் துறையைச் சார்ந்த, பெரும் பாய்ச்சலை நிகழ்த்தவிருக்கும் ஒரு ஊடகம்.
ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவாக நிற்கும் உலக நாடுகளில் முதன்மையானவை பெல்ஜியமும் ஸ்வீடனும். ஆவணங்களைக் கசிய விடுபவர்களின் சொர்க்கம் என்று சொல்லத்தக்க வகையில், புலனாய்வுச் செய்தியாளர்களைக் காக்கும் வலுவான சட்டங்களைப் பின்பற்றி வந்தது ஸ்வீடன்.
ஆடியோ வீடியோ பைல்களையும், மென்பொருட்களையும் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ள அனுமதிக்கும் ‘தி பைரேட் பே’ என்ற இணையதளம் ஸ்வீடனிலிருந்து இயங்குவது குறிப்பிடத்தக்கது. அசாஞ்சேவும், டோம்சிட்பெர்க்கும் விக்கீலீக்ஸின் சர்வரை ஸ்வீடனில் வைக்க முடிவெடுத்தனர்.
டார் பிரவுசரை உருவாக்கிய ஜேகப் ஆப்பெல்பாம், டேனியல் டோம்சிட்பெர்க் ஆகியோர் அசாஞ்சேவுடன் இணைந்து ஒரு குழுவாக விக்கீலீக்சுக்காக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உழைக்கத் தொடங்கினர். தங்களது திட்டத்தைப் பத்திரிக்கைகளுக்கும்கூட வெளிப்படையாகவே தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை.
நீதி வேண்டி உண்மையைப் பகிரும் சாமானியனைக் காக்க, இணையத்தில் ஓர் அமைப்பு எனும் அசாஞ்சேவின் நீண்டநாள் கனவு பின்னரே நிஜமானது. உலகின் எந்த மூலையிலிருந்து தங்களுக்கான முதல் ரகசிய ஆவணம் வந்து சேரும் என்று காத்திருந்தது ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருந்தது.
(தொடரும்)

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.
Very informative and detailed one. Appreciate your efforts ,Rishi.
Keep Tamil Rocking..