Skip to content
Home » சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்

சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்

அமெரிக்கப் பத்திரிகை மன்றத்தில் அசாஞ்சே

பெரும்பான்மை அமெரிக்கர்கள் விக்கிலீக்சைக் கேள்விப்பட்டிராத காலம் ஒன்றிருந்தது. இத்தனைக்கும் ஆரம்பிக்கப்பட்ட முதல் நான்கு ஆண்டுகளில் பல ரகசிய ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிட்டிருந்தது.

2008 அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்ட சாரா பாலினின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஹேக் செய்து வெளியிட்டது. உலகின் மிக மோசமான தீவிரவாத தாக்குதல்களில் ஒன்றான இரட்டை கோபுர இடிப்பின்போது, அமெரிக்க அரசு அதிகாரிகளின் 5,70,000 பேஜர் குறுஞ்செய்திகளை வெளிக்கொண்டு வந்தது. கென்யாவின் அரசியல் சூழல் மற்றும் அந்நாட்டின் ஊழல் குறித்த ஆவணங்களை வெளியிட்டது. இவற்றையெல்லாம் குறிப்பிடத்தக்கக் கசிவுகள் என்று பட்டியலிடலாம்.

இருப்பினும் அமெரிக்கர்களின் கவனம் பெரிய அளவிற்கு விக்கிலீக்ஸ் பக்கம் திரும்பவில்லை. இந்தத் தருணத்தில்தான் பிராட்லி மேனிங் (செல்சியா மேனிங்) அனுப்பிவைத்த காணொளி விக்கிலீக்ஸ் கைகளுக்குக் கிடைக்கிறது.

0

மார்ச் 2010இல் ஐஸ்லாந்து நாட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அசாஞ்சே மற்றும் அவரது குழுவினர் குடியேறினர். பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவான சட்டங்கள் அந்நாட்டில் வலுவாக இருந்தது அசாஞ்சேவை மிகவும் ஈர்த்தது. இத்தனை கணினிகளும், கேமராக்களும் எதற்காக என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க, வீட்டின் உரிமையாளரிடம் தாங்கள் செய்தியாளர்கள் என்றும், எரிமலை குறித்து செய்தி சேகரிக்க வந்திருப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். உண்மையில் அவர்கள் பிராட்லி மேனிங் அனுப்பியிருந்த காணொளியை, வெளியிடத்தக்க ஒன்றாக மாற்றும் வேலையைத்தான் இரவு பகலாகச் செய்து வந்தார்கள்.

அசாஞ்சே பல நாட்களாகக் குளிக்காமல் கணினி முன்பாக அமர்ந்திருந்தார். அந்த நிலையிலேயே அவருக்கு முடி திருத்தமும் செய்யப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் குழுவினருக்கு சாக்லேட்தான் சாப்பாடாக இருந்தது. இப்படி உழைக்கும் அளவுக்கு அந்தக் காணொளி முக்கியமானதா என்றால், ஆம். காரணம் ஒட்டுமொத்த அமெரிக்காவும், உலகமும் தங்களை நோக்கித் திரும்பவைக்கும் வல்லமை இந்தக் காணொளிக்கு இருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.

பலநூறு முறை குழுவினரால் பார்க்கப்பட்டு, தேவையற்ற ஒலிகளை நீக்கி, அதை அனுப்பி வைத்தவரின் விவரங்கள் எங்கேயும் வெளியாக வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தபின், 18 நிமிடங்களுக்கு ஓடும் அதன் இறுதிப் பதிப்பு தயாரானது. ஆங்கில நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல்லின் மேற்கோள் ஒன்றும் காணொளியின் தொடக்கத்தில் சேர்க்கப்பட்டது. ‘பொய்களை உண்மையானதாகவும், கொலைகளை மரியாதைக்குரிய ஒன்றாகவும், தூய காற்றை திடத்தன்மையாக பொய்த்தோற்றம் கொள்ளவைக்கும் வகையில் அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்பதே அந்த மேற்கோள்.

சரி, காணொளியின் உண்மைத்தன்மையை எப்படி உறுதிசெய்து கொள்வது? அசாஞ்சே குழுவிலிருந்து இரண்டு பேர் பாக்தாத் நோக்கிப் புறப்பட்டனர். ஜூலை 12, 2007 அன்று அமெரிக்க ராணுவத்தால் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அந்தக் குழந்தைகளைக் கண்டறிந்து, அன்று நடந்ததையும், காணொளியையும் ஒப்பிட்டு அதன் உண்மைத்தன்மையை உறுதிசெய்து கொள்வதுதான் அசாஞ்சேவால் அனுப்பப்பட்ட அந்த இருவரின் நோக்கம்.

ஏப்ரல் 10, 2010 அன்று வாஷிங்டனில் இருக்கும் தேசியப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் காணொளியை வெளியிட முடிவு செய்தனர். பல யோசனைகளுக்குப் பிறகு காணொளிக்கு ‘தி கொலாட்ரல் மர்டர்’ என்று பெயரிடப்பட்டது. ஐஸ்லாந்திலிருந்து வாஷிங்டனுக்கு அசாஞ்சே புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம், திட்டமிட்டபடி காணொளியை வெளியிட இடையில் ஒரு நாள் மட்டும் எஞ்சியிருந்தது. பாக்தாத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட அசாஞ்சேவின் குழுவினர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

‘அன்று காலை தனது குழந்தைகளைப் பள்ளியில் விட வேனில் சென்று கொண்டிருந்தார், அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ராய்டர்ஸ் நிறுவன புகைப்படக்காரர் நமீர் நூர் எல்தீனை பார்த்ததும், அவரை காப்பாற்ற முயன்ற போது, அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி அவரது வேனை அழித்தது. நல்லவேளை குழந்தைகள் காயங்களோடு தப்பித்துக் கொண்டனர்’. அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் சாரம் இதுதான். இதன்மூலம் காணொளியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டது. உலகம் முழுக்க இந்த காணொளியைக் காண வேண்டுமென்கிற விருப்பத்தோடு, அமெரிக்காவுக்கு விமானம் ஏறினார் அசாஞ்சே.

0

அமெரிக்கப் பத்திரிகை மன்றத்தில் திருத்தப்பட்ட 18 நிமிட காணொளியும், அதன் முழு வடிவமும் திரையிடப்பட்டன. அதிர்ச்சியும் குழப்பமும் அங்கே நிலவியது. தங்கள் நாட்டின் பக்கம் நின்று சில செய்தியாளர்கள் தர்க்கம் செய்தனர். அசாஞ்சேவின் கணக்குப்படி, முக்கிய ஊடகங்கள் அனைத்தும் அச்செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தன. குறிப்பாக ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழ் 2007ஆம் ஆண்டு இதில் சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் விசாரிக்கப்பட்டு, எந்தத் தண்டனையுமின்றி வெளியே வந்ததைக் குறிப்பிட்டு எழுதின. யூடியுபில் அந்த காணொளி பதிவேற்றப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்வையிட்டனர்.

அதில் காட்டப்பட்ட 12 கொலைகளுக்கு நிகராக, இரண்டு ராணுவ வீரர்கள் தங்களுக்குள் பயன்படுத்திய வார்த்தைகள்தான் மக்களைக் கூடுதல் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாக்தாத் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்ட்டரில் இருந்து, வேனை நோக்கி குண்டுக் காயங்களுடன் ஊர்ந்துகொண்டிருந்த ராய்டர்ஸ் புகைப்படக்காரரைக் குறிவைத்து ஒரு ராணுவவீரர் இப்படிச் சொல்கிறார், ‘நீ செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுதான். ஆயுதத்தைக் கையில் எடு’. இதன் அர்த்தம் என்ன, ‘ஆயுதத்தை ஏந்து, உன்னை நான் கொல்ல வேண்டும்’ என்பதைத் தவிர. கொல்லப்பட்டவர்களைப் பார்த்து இன்னொரு ராணுவவீரர் சொன்னது இது, ‘முறை தவறிப் பிறந்தவர்களின் பிணங்கள்’.

ஈராக் போரில் ராணுவ வீரர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் உருவாக்கியிருந்த ஒரு ரகசிய கையேட்டைக் கைப்பற்றி, அதையும் 2008இல் வெளியிட்டிருந்தது விக்கிலீக்ஸ். அதன்படி காயம்பட்ட ஒருவர், அவர் தீவிரவாதியாகவே இருந்தாலும், அச்சுறுத்தல் ஏதும் இல்லாதபட்சத்தில், அவர் தாக்கப்படக்கூடாது என்பதுதான் விதி. ஆனால் இந்த இரண்டு ராணுவ வீரர்களும் அதைத் தெரிந்தே மீறி இருக்கிறார்கள். அவர்களை விசாரித்த மேலிடம், அவர்களுக்கு எந்தவித தண்டனையும் எச்சரிக்கையும் இன்றி விடுவித்தது.

காரணம், போர் என்பது வெற்றி தோல்வி மட்டுமல்ல, நியாய அநியாயம் மட்டுமல்ல, நட்பு பகை மட்டுமல்ல, போர் என்பது அழித்தொழித்தலின் திளைப்பும்தான்.

காணொளி வெளியான சில மணி நேரங்களிலேயே அதன் உண்மைத்தன்மையை ராய்டர்சுக்கு உறுதி செய்தது அமெரிக்க அரசாங்கம். ஈராக் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தங்கள் அரசிடம் உடனடியாக இது குறித்து ஒரு விசாரணையைத் தொடங்கும்படி கேட்டுக்கொண்டது. அதன் தலைவர் ‘இதன்மூலம் அமெரிக்கப் படைகள் ஈராக் மக்களின் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் மேற்கொண்ட தாக்குதல்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது’ என்றார். அல் ஜசீரா, பலியான நூர் எல்தீனின் சகோதரரிடம் பேட்டி எடுத்தது. அதில் ‘ஈராக்கிற்கு அமெரிக்கா பெற்றுத் தருவதாகச் சொன்ன சுதந்திரமும், ஜனநாயகமும் இதுதானா?’ என்று அவர் எழுப்பிய கேள்விக்கு அநேகமாக எவரிடமும் பதில் இல்லை.

இந்தக் காணொளிக்கு எதிர்வினையாக அமெரிக்க அரசாங்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதன் சுருக்கம் இது. ‘அன்று போரில் ஈடுபட்ட ராணுவக் குழு, அரசு உருவாக்கிய விதிகளை கடைப்பிடித்தே தாக்குதல் நடத்தியது. கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள் இருவரும் தாங்கள் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் அவர்கள் ஆயுதமேந்திய போராளிகளோடு நெருக்கமாக இருந்த காரணத்தால், கிளர்ச்சியாளர்களின் மீது நடத்திய தாக்குதலில் தவறுதலாகக் கொல்லப்பட்டார்கள்’.

அறிக்கையோடு சேர்த்து சில புகைப்படங்களும் இணைக்கப்பட்டன. அதில் இறந்தவர்களுக்கு அருகிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் துப்பாக்கிகளும் கையெறிக் குண்டுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த அறிக்கையில் இருக்கும் முரண்கள் சில :

1) வானில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்ட்டருக்கும், ராய்டர்ஸ் செய்தியாளர்களுக்கும் தோராயமாக ஒரு மைல் தூரம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் எப்படி தங்களது அடையாளத்தை அவ்வளவு தூரத்திற்குக் காட்ட இயலும்?

2) கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஏன் காணொளியின் எந்த இடத்திலும் பதிவாகவில்லை?

3) பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஈராக் போரில் கொல்லப்பட்ட 139 செய்தியாளர்களும், சொல்லி வைத்தது போல தங்களது அடையாளத்தை வெளிக்காட்டத் தவறியவர்கள் தானா?

0

சரி, காணொளி வெளியாகிவிட்டது. இப்போது என்ன உலகெங்கிலும் கண்டறியப்பட்ட போர்க் குற்றங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டு விட்டனவா? போர்கள் நிறுத்தப்பட்ட அறிவிப்புகள் வெளியாகிவிட்டதா? நல்லவர்கள் பறக்கவிட்ட வெள்ளைப் புறாக்கள் வானில் தெரிகிறதா? விக்கிலீக்ஸ் இந்தக் காணொளியை வெளியிட்டதால் என்ன நிகழ்ந்து விட்டது இப்போது? நியாயமான கேள்விதான்.

எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த ஆவணங்களின் அடிப்படையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.

முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர்கள் இரண்டு பேர் தாமாகவே முன்வந்து மன்னிப்புக் கோரினார்கள். ஈதன் மெக்கோர்ட், ஜான் ஸ்டீபர் என்ற இரு ராணுவ வீரர்களும் காணொளி படமாக்கப்பட்ட நாள்கள் உட்பட 14 மாதங்களாக பாக்தாத் போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கவனிக்க, இவர்கள் ஹெலிகாப்ட்டரில் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள் அல்லர்.

விக்கிலீக்ஸ் அந்தக் காணொளியை வெளியிட்ட சில நாட்களுக்கு உள்ளாகவே, அவர்கள் இருவரும் இணைந்து ஒரு கடிதத்தைத் தாக்குதலில் மடிந்தவர்களின் குடும்பத்தினருக்கு எழுதி வெளியிட்டார்கள்.

கடிதத்தின் சுருக்கம்:

‘தாக்குதலுக்கு உள்ளான வேனிலிருந்து, உங்களது மகனையும் மகளையும் மீட்டு, முதலுதவி செய்யத் தூக்கிக்கொண்டு ஓடியவர் ஈதன் மெக்கோர்ட். அத்தருணத்தில் அவருக்கு அமெரிக்காவில் இருக்கும் தனது குழந்தைகளின் முகங்களே நினைவுக்கு வந்தன. குறிப்பிட்ட அந்த நாளில் ஜான் ஸ்டீபர் களத்தில் இல்லையென்றாலும், இதுபோன்ற பல தாக்குதல்களைப் பணியிலிருந்த காலங்களில் அவர் நேரில் பார்த்தவர்.

இழந்ததை ஒருபோதும் திரும்பப்பெற இயலாது என்பதை அறிவோம். இருப்பினும் நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்க விரும்புகிறோம். உங்களுக்கும், உங்கள் நாட்டு மக்களுக்கும் நாங்கள் செய்ததை, எங்களைப் போன்ற ராணுவ வீரர்கள் இன்னமும் செய்துகொண்டிருப்பதை அமெரிக்க மக்களுக்கு உணர்த்த எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட காணொளியில் காட்டப்பட்டது குறிப்பிட்ட ஒரு நாளின் பாதிப்பு அல்ல, ஈராக் போரின் அனைத்து நாட்களுமே கடந்த ஓராண்டாக இப்படித்தான் கழிகின்றன. இதுதான் அமெரிக்கா தலைமையேற்று நடத்தும் ஈராக் போரின் தன்மை.

உங்கள் அன்புக்குரியவர்களின் காயங்களிலும் மரணங்களிலும் எங்களது பங்கு என்ன என்பதை உணர்ந்து, அதை மனதார ஒப்புக்கொள்கிறோம். கடவுளின் பெயரால், நாட்டின் பெயரால் ராணுவ வீரர்கள் பயிற்சி எடுத்துக்கொள்வது இதுபோன்ற தாக்குதல்களை நிகழ்த்தவே என்பதை இதன்மூலம் சக அமெரிக்கர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களை மட்டுமல்ல, பலத்த காயங்களோடும், உளவியல் ரீதியாக நிறைய தொந்தரவுகளுக்கு ஆட்பட்டு நாடு திரும்பும் எண்ணற்ற படைவீரர்களையும் கூட அமெரிக்க அரசு புறக்கணித்திருக்கிறது. எங்களது மன்னிப்பை, துக்கத்தை, அக்கறையை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்’.

0

அமெரிக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தி, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் உள்நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று விரும்பியவர்களும், அவர்களது இஸ்ரேலியக் கூட்டாளிகளும் இரான் மீது போர் தொடுக்க எண்ணியிருந்த நேரம்.

பாரசீக வளைகுடாவுக்கு அருகில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. சில பிரிட்டிஷ் கப்பற்படை வீரர்களையும், அமெரிக்கக் கப்பல்களையும் ஈரான் சிறைபிடித்தது. இது அப்போது நிலவிவந்த எல்லைப் பிரச்சனையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த ஒரு ரகசிய ஆவணம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அதன்படி, ஈரானிய அல்லது சிரிய எல்லையை அமெரிக்கப் படைகள் கடக்க விரும்பினால், அதற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அல்லது அமெரிக்கப் பாதுகாப்புச் செயலரிடம் ஒப்புதல் பெறவேண்டும்.

இந்த நடைமுறையில் ஒரு விதிவிலக்கு உண்டு. ஒருவேளை அமெரிக்கப் படைகள் சதாம் ஹுசைன் அரசைச் சேர்ந்தவர்களையோ, தீவிரவாதிகளையோ பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில், ஒப்புதல் எதுவும் தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லுவதென்றால், தேவைப்படும்போதெல்லாம் அமெரிக்கப் படைகள் எல்லைத்தாண்டும். மீறி யாராவது கேள்விகேட்டால், சொல்வதற்கு ஒரு பதில் தயாராக இருக்கிறது, ‘நாங்கள் தீவிரவாதிகளைத் தேடி வந்தோம்’.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணத்தைச் சுட்டிக்காட்டி, தி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் எரிக் ஷ்மிட்டை தொடர்புகொண்டு, நிலைமையைச் சொல்கிறார் அசாஞ்சே. இதை அடிப்படையாகக் கொண்டு டைம்ஸ் வெளியிட்ட செய்தி அப்போது மிக முக்கியமான ஆவணமாகிறது.

இதன்பிறகு இரான் அரசு வலுவாக எதிர்வினையாற்றியது. ‘ஈராக்கில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கப் படைகள் எந்தக் காரணங்களைக் கொண்டும் ஈரானின் எல்லைக்குள் நுழையக்கூடாது. மீறும் பட்சத்தில் அது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகக் கருதப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஈரானின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிரான நடவடிக்கைகளுக்குத் தக்க பதிலடி தரப்படும்’.

இதன்பின்னர் போரில் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை வெளியிட்ட அமெரிக்கா, அதில் சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கி, ஈரானுடனான பதட்டத்தைக் குறைத்துக்கொண்டது.

அப்படியென்றால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு ரகசிய ஆவணத்தால் நிகழவேண்டிய ஒரு போர் தடுக்கப்பட்டதா என்றால், அப்படியெல்லாம் இல்லை. ஆனால் சர்வ நிச்சயமாக, வல்லரசு நாடொன்று தனது ராணுவம் பின்பற்றவேண்டிய போர் நடைமுறைகளை உருவாக்குவதற்கு முன்பு, அதைப் பலமுறை திருத்தி எழுதியிருக்கும். மிகப்பெரிய மாற்றம் இல்லைதான், ஆனால் மாறியவை எல்லாமும் இப்படித்தானே தொடங்கியிருக்கிறது.

0

ஒரு காணொளிக்கே இப்படியென்றால், பிராட்லி மேனிங் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்குக் கசியவிட்ட 2,60,000 ஆவணங்களில் இன்னும் என்னவெல்லாம் இருக்கும்?

(தொடரும்)

பகிர:
nv-author-image

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

1 thought on “சாமானியர்களின் போர் #9 – குற்றமும் எதிர்வினையும்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *