இம்முறை பத்திரிக்கைகளின் உதவியை நாட முடிவு செய்திருந்தார் ஜூலியன் அசாஞ்சே. வெளியாக இருக்கும் கசிவுகள் முதற்பக்கச் செய்திகளாக இடம்பெறும் பட்சத்தில், அதன் வீச்சு பன்மடங்காகும் என்பதே அவரது கணக்கு. இதற்காக அவர் தி நியூ யார்க் டைம்ஸ், கார்டியன், ஸ்பீகல் போன்ற பத்திரிக்கைகளைத் தொடர்பு கொண்டார்.
ஈராக்கிலிருந்த அமெரிக்க வீரர்கள் தங்கள் கண் முன் நிகழ்ந்ததை, ரகசிய அறிக்கைகளாக எழுதி அதை பெண்டகன் டேட்டாபேசில் சேமித்து வைத்திருந்தனர். யார் அந்தப் போரை முன்னின்று நிகழ்த்தினார்களோ, அந்நாட்டு ராணுவ வீரர்களின் நேரடிக் கள சாட்சியங்கள் அவை. ஒருவகையில் ஒப்புதல் வாக்குமூலங்கள். அப்படிச் சேமித்ததில் கிட்டத்தட்ட 3,91,832 கள அறிக்கைகளை 22 அக்டோபர் 2010 அன்று வெளியிட்டது விக்கிலீக்ஸ். இவை ஆறு ஆண்டுகளில் (ஜனவரி 2004 முதல் டிசம்பர் 2009 வரை) அமெரிக்க வீரர்கள் களத்தில் கண்டு ஆவணப்படுத்தியவை. ஏற்கெனவே திட்டமிட்டபடி பத்திரிக்கைகளும் இவற்றை விரிவாகப் பதிவு செய்தன.
அப்படி என்ன அமெரிக்க வீரர்கள் களத்தில் கண்டார்கள்?
0
ஈராக் போரில் ஒருநாள்.
நவம்பர் 23, 2006
காலை 7:00 மணி
பாக்தாத்தில் ஷியா பிரிவினர் பரவலாக வசிக்கும் பகுதிகளில், அதே பிரிவைச் சார்ந்த மஹ்தி (அ) ஜெய்ஷ் அல் மஹ்தி என்று அழைக்கப்படும் ராணுவத்தினர் பரவலாகக் குழுமியிருந்தனர். அவர்களை ஈராக் அரசு அலுவலர்கள் அல் ஹுரிரியா என்னும் மாவட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றனர். அங்கே அவர்கள் மாபெரும் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
மதியம் 1:13
ஈராக் உள்துறை அமைச்சகமும் மஹ்தி ராணுவத்தினரும் இணைந்து சன்னி பிரிவினர் பரவலாக வசிக்கும் பகுதிகளைத் தாக்க இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
மதியம் 2:00
சன்னி கிளர்ச்சியாளர்கள் தங்களைக் காத்துக்கொள்ள பாக்தாத்தில் ஒரு சாலைத்தடுப்பை ஏற்படுத்தினர். இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களோடு அவர்களும் தாக்குதலுக்குத் தயாராக இருந்தனர்.
மதியம் 3:00
பாக்தாத்தின் பரபரப்பான நகரம், சந்தை, சதுக்கம் என ஆறு வெவ்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் கார் குண்டுகள் வெடித்தன. படுகாயமடைந்த 257 பேரில், உயிரிழந்த 215 பேரில் பெரும்பான்மையினர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஈராக் போர் ஆரம்பித்ததிலிருந்து நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவே முதன்மையானது.
இதைத் தொடர்ந்து ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல் சதர் தனது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி சொன்னதன் உண்மையான பொருள், உடனடியாக இதற்குப் பழிவாங்க வேண்டுமென்பதே. இதன் எதிர்வினையாக ஈராக் முழுக்க இருக்கும் மஹ்தி ராணுவத்தினர் அவசரமாக பாக்தாத்திற்கு வர உத்தரவிடப்பட்டனர். இரவுக்குள் சன்னி பிரிவினரைத் திருப்பித் தாக்கித் தாக்குதலுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
பெயர் தெரியாத ஆயுதங்களோடு பாக்தாத்தின் சதர் நகருக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் அணிவகுத்து வந்தன. கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் விநியோகிக்கப்பட்டன.
மாலை 5:26
சன்னி பிரிவினர் வசிக்கும் பகுதிகளை நோக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 14 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
மாலை 5:30
மஹ்தி ராணுவத்தினரும் போலீஸ் உடையிலிருந்த அவர்களது ஆதரவாளர்களும் சன்னி மசூதியைத் தாக்கினர்.
மாலை 6:30
போலியான ஒரு சோதனைச்சாவடியை உருவாக்கி போராட்டக்காரர்கள் பொதுமக்களைக் கடத்திச் சென்றனர்.
இரவு 8:55
ஷியா பிரிவினர் தங்களை பத்து வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து சன்னி பிரிவினரின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இரவு 10:10
ஈராக் ராணுவம் அமைத்திருந்த சோதனைச் சாவடிக்கு அருகே, 300 கிளர்ச்சியாளர்கள் குழுமி இருந்தனர். அவர்களைக் கண்டதும் ஈராக் ராணுவம் சோதனைச் சாவடியை விட்டுப் பின்வாங்கியது. கிளர்ச்சியாளர்கள் அல் ஷுலா பகுதியைத் தாக்கத் திட்டமிட்டனர்.
இரவு 10:35
ஈராக் போலீஸ் வாகனத்தை ஏவுதளமாக மாற்றி, சன்னி பிரிவினர் பரவலாக வசிக்கும் அதாமியா பகுதியின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் மஹ்தி ராணுவத்தினர்.
24 மணிநேரத்தில் இதுபோல 360 அறிக்கைகளை அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
இதிலிருந்து அடிப்படையாக நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன.
- குறிப்பிட்ட இந்த நாளில் அமெரிக்க ராணுவம் நடந்ததை எல்லாம் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டு இருந்ததா? எனில் எதற்காக அவர்கள் மூன்றாண்டுகளாக ஈராக்கில் முகாமிட்டு இருக்கிறார்கள்?
- ஈராக்கில் எப்போதும் சன்னி, ஷியா பிரிவினர் இடையே இப்படித்தான் போர் நிகழ்ந்த வண்ணம் இருந்ததா?
- ஈராக்கில் நடந்தது உள்நாட்டுப் போரா?
0
தீர்க்கதரிசி முகமது 632ஆம் ஆண்டு மறைந்தபிறகு, அடுத்தவர் யார் என்ற கேள்விக்குத் தெளிவான பதிலில்லை. முகமதின் நம்பகமான நண்பர் அபுபக்கரை ஒரு தரப்பும், அவரது (முகமது) மருமகனான அலியை மற்றொரு தரப்பும் முன்மொழிந்தனர். இறுதியில் அபுபக்கர் தலைமையேற்றார். இருப்பினும் இரு தரப்புக்குமான பூசல் தொடர்ந்தபடியே இருந்தது. அபுபக்கரைத் தொடர்ந்து தலைமையேற்ற இருவர் கொல்லப்பட்டனர். நான்காவதாக அலி தலைமையேற்றார். முதலில் அலியும், பிறகு அவரது இரு மகன்களான ஹசனும் ஹுசைனும் கொல்லப்பட்டனர்.
இதில் அலியின் தரப்பைப் பின்பற்றுபவர்கள் ஷியா என்றும், அபுபக்கரின் தரப்பைப் பின்பற்றுபவர்கள் சன்னி என்றும் அறியப்படுகிறார்கள். மொத்த முஸ்லீம் மக்கள் தொகையில் தோராயமாக 85 சதவீதம் சன்னி பிரிவையும், 15 சதவீதம் ஷியா பிரிவையும் பின்பற்றுகிறார்கள். உலகின் பல்வேறு முஸ்லீம் நாடுகளில் சன்னி பிரிவினரும் ஈராக், ஈரான் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் ஷியா பிரிவினரும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இருதரப்புக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும் பாக்தாத்தில் அவர்கள் எண்ணிக்கையில் சமமாகவே வாழ்ந்த காலமும் இருந்திருக்கிறது. இதே நிலைமை ஈராக்கின் பல நகரங்களிலும்கூடச் சாத்தியப்பட்டிருக்கிறது.
0
2003இல் ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது. அதன் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்கப் படைகள் மீது பெரிய அளவிற்கு எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. அவ்வாண்டின் இறுதியில் தாக்குதல்கள் மெல்லத் தொடங்கப்பட்டு பிறகு பரவலாக்கப்பட்டன. முதலில் தாக்குதலைத் தொடங்கியவர்கள் சன்னி பிரிவினர்தான் என்றும் அப்போதைய ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் சன்னி பிரிவைச் சார்ந்தவர் என்பதால், அவர் ஆட்சியில் பலனடைந்தவர்கள் முதலில் ஆயுதமேந்தி இருக்கலாமென்றும் ஒரு கணிப்பு முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்கப் படைகள் சன்னி பிரிவினரைச் சமாளிக்க ஆயத்தமாவதற்குள் முக்தாதா அல் சதர் தலைமையில் ஷியா பிரிவைச் சேர்ந்த மஹ்தி ராணுவத்தினர் தாக்குதல்களுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டனர். பாக்தாத் மட்டுமல்ல, ஈராக்கின் பல்வேறு நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திணறியது அமெரிக்கா. ஏப்ரல் 2004 வாக்கில், அமெரிக்கப் படைகளோடு நேரடியாகவே போரில் ஈடுபடத் தொடங்கியது மஹ்தி ராணுவம். ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தனிமைப்படுத்தப்பட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதைச் சமாளிக்க அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஜான் நெக்ரோபோன்ட் என்பவரை ஈராக்கின் முதல் அமெரிக்கத் தூதராக நியமிக்கிறார். அதற்கு ஒரு பிரேத்தியேகக் காரணம் இருக்கிறது. எண்பதுகளில் அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன், உள்நாட்டுப் போர் மற்றும் கம்யூனிசப் புரட்சிகள் போன்ற காரணங்களுக்காக மத்திய அமெரிக்காவின் மீது படையெடுத்தார். அதன் உறுப்பு நாடான ஹோண்டுராசிற்கு ஜான் நெக்ரோபோன்ட் தான் தூதர்.
ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், மரண படைகளை அணிதிரட்டி அதன்மூலம் எதிரிகளின் உள்கட்டமைப்பைப் பயங்கரவாதத்தின் மூலம் அழிப்பதற்கும் பெயர் போனவர். அவர் உருவாக்கிய மரணப் படைகள் மத்திய அமெரிக்காவில் மட்டும் 2,00,000 பேரைக் கொன்றொழித்தது. இந்த உத்தமரைத்தான் ஜார்ஜ் புஷ் மே 2004இல் ஈராக்கில் பணியமர்த்தினார். தனக்கு உதவியாக மத்திய அமெரிக்காவில் கொலைகள் புரிந்த, ஓய்வுபெற்ற கர்னல் ஜேம்ஸ் ஸ்டீலைத் துணைக்கு வைத்துக்கொண்டார் ஈராக்கின் புதிய அமெரிக்கத் தூதர்.
அவர்கள் பணியிலிருந்த அடுத்த இரண்டு ஆண்டுகளும் ஈராக்கில் மதவாத உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது, எதிர்க் கிளர்ச்சியின் மூலம் அதை அமெரிக்கா ஊக்குவித்தது. யாரும் எவரையும் கொல்லலாம் என்னும் சூழல் நிலவியது. இதனால் ஒரே பகுதியில் வசித்துவந்த சன்னி, ஷியா பிரிவினர் தங்களுக்கென தனி வசிப்பிடங்களை உருவாக்கிக்கொண்டனர்.
ஆயுதங்களைத் தேடுகிறோம், ஈராக் மக்களுக்கு விடுதலை வாங்கி தருகிறோம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தாலும், டிசம்பர் 2006இல் சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டதும் அமெரிக்காவின் வேலை அநேகமாக முடிந்துவிட்டது. இருப்பினும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அங்கேயே தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த அவர்களுக்கு ஓர் உள்நாட்டுப் போர் தேவைப்பட்டது. அதற்குண்டான வேலையை ஜார்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்டவர்கள் சிறப்பாகச் செய்தனர். விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களின் மூலம் இதுவே நிரூபணம் ஆகிறது.
மதவாதம் ஏற்படுத்தித்தந்த இடைவெளியில் வல்லாதிக்கம் நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டது.
0
ஈராக் போரின் பல நாட்கள்…
தீவிரவாதிகளுக்கு உதவும் அரசு அமைப்புகள் சாதாரண போலீஸ்காரர்களில் தொடங்கி, உயர் பொறுப்பில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் வரை, அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு மஹ்தி ராணுவத்திற்கு உதவினர். கூடுதலாக அவர்கள் பொதுமக்களையும் (2006 முதல் 2009 வரை) கொன்று குவித்தார்கள்.
ஆகஸ்ட் 4, 2006
பக்தத்தில் ஷியா பிரிவினர் வசிக்கும் மாவட்டத்தின் தலைவர், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனது கட்டுமான தொழிலாளர்களிடம், ஒவ்வொரு 300 மீட்டருக்கும் ஒரு இடைவெளி விட்டு சாலையமைக்க உத்தரவிட்டார். அதில் மஹ்தி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டை நிரப்பினர். அதன் மீது பணியாளர்கள் தார் வைத்து மறைத்தனர். அமெரிக்கப் படைகள் அவ்வழியாக ரோந்து வரும்போது, ரிமோட் மூலமாகக் குண்டுகள் வெடிக்க வைக்கப்படும்.
ஜூலை 2008
அமெரிக்க மற்றும் ஈராக் படைகள் கூட்டாக இருக்கும் காவல் நிலையத்தைத் தாக்க, மஹ்தி ராணுவ கமாண்டர் ஒருவரோடு சேர்ந்து திட்டம் தீட்டியதாக காசிம் என்ற போலீஸ் கர்னல் கைது செய்யப்பட்டார்.
அல் கயிதாவின் பங்கு
அமெரிக்காவுக்கும் மஹ்தி ராணுவத்திற்கும் பொது எதிரியான அல் காயிதா அழையா விருந்தாளியாகத் தன்னை ஈராக் போரில் இணைத்துக்கொண்டது. குழந்தைகளுக்கான உணவு கேன்களிலும், தொட்டில்களிலும் வெடி பொருட்களை மறைத்து ஈராக்கிற்குள் கொண்டுவர முயன்றது அல் காயிதா.
அமெரிக்கப் படையின் ரோந்து பணிகளில், கையெறி குண்டுகள் இறைச்சிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நவம்பர் 3, 2007
அமெரிக்கப் படைகளை அணுகிய ஈராக்கிய பெண், தனது குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட அந்த ஆவணம் இப்படி முடிகிறது, ‘குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது’.
ஜூன் 24, 2004
2004இல் இருந்து அல் காயிதா வெளிநாட்டவரை மட்டுமே குறிவைத்துத் தாக்கியது. அமெரிக்க ராணுவ ஒப்பந்ததாரர் ஒருவருக்காக வேலை செய்துகொண்டிருந்த தென் கொரிய நாட்டை சேர்ந்த கிம் சன் என்பவரைக் கடத்தி, தென் கொரியப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேறாவிட்டால் உங்கள் நாட்டவர் கொல்லப்படுவர் என்று எச்சரித்தது. மறுமுனையிலிருந்து எந்தவொரு பதிலும் இல்லாததால், 33 வயதேயான கடத்தப்பட்டவர் கொல்லப்பட்டு, அவரது உடலில் வெடிகுண்டுகள் நிரப்பி சாலையில் வீசப்பட்டது.
தங்களுக்குச் சாதகமாக எதுவும் நிகழாத போது, அமெரிக்கப் படைகளுக்கு உதவும் ஈராக்கியர்களையும் கொல்லத் தொடங்கியது அல் காயிதா.
ஜனவரி 2005
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஈராக்கிய உடல், பாக்தாத்தில் உள்ள யார்மூக் மருத்துவமனைக்கு எதிரே வீசப்பட்டது. தூக்கிலேற்றிக் கொல்லப்பட்ட மற்றுமொரு உடலில் ‘தேர்தலைத் தவிர்’ என்று எழுதப்பட்டு இருந்தது.
ஜனவரி 2006
ஒரு பள்ளியின் காவலாளியை வலுக்கட்டாயமாக மண்டியிடவைத்து, அவரை ‘கடவுள் பெரியவர், கடவுள் நல்லவர்’ என்ற கோஷங்களுக்கு இடையே கழுத்தறுத்துக் கொலை செய்தனர். தங்களது பிரசாரத்திற்காகவும், மற்றவர்களை அச்சுறுவதற்காகவும் அந்தக் கொலை தீவிரவாதிகளால் படமெடுக்கப்பட்டது.
போரின் ஒவ்வொரு நாளிலும் ஓர் உடலைக் கண்டெடுக்க வேண்டிய நிலையிலிருந்தனர் அமெரிக்க ராணுவத்தினர். அதுவும் ஒரு உடலைப் பார்த்ததும் உடனடியாகப் போய் தொட்டுத் தூக்கிவிட முடியாது. பெரும்பாலும் இறந்த உடல்களில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு இருக்கும். அது தெரியாமல் போனால், உடலைத் தொடுபவர்களும் சேர்ந்து பலியாக வேண்டியதுதான்.
மே 2009
11 வயது முதல் 16 வயதேயான சிறுவர்களை நடமாடும் வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தது அல் கயிதா. இந்தத் திட்டத்திற்கு அவர்கள் வைத்த பெயர் சொர்க்கச் சிறுவர்கள். ஒரு முக்கியமற்ற பொருளைக் குழந்தைகளிடம் தருவார்கள், தீவிரவாதிகள் சொல்லும் இடத்தில் அதை வைக்க வேண்டும். தாங்கள் சுமந்து செல்வது ஒரு வெடிகுண்டு என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. பெரும்பாலான நேரங்களில் அந்தப் பொருள் குழந்தைகளின் கைகளில் இருக்கும்போதே, ரிமோட்டின் உதவியுடன் வெடிக்க வைக்கப்படும்.
இதுபோன்ற கணிக்க இயலாத தாக்குதல்களால் அமெரிக்க வீரர்கள் பயத்திலிருந்தனர். எனவே அவர்களது துப்பாக்கிகளிலிருந்து மிகத் தாமதமாக வெளியேற வேண்டிய குண்டுகள், மிக விரைவிலேயே வெளிவரத் தொடங்கின. இதை உறுதிப்படுத்தும் விதமாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் ஒரே தாக்குதலுக்கு மூன்று வெவ்வேறு விதமான அறிக்கைகள் எழுதப்பட்டு இருக்கின்றன.
- அவன் எதையோ தனக்குப் பின்னால் மறைக்கிறான்.
- கொல்லப்பட்டவன் மறைத்தது ஒரு நெகிழியை.
- கொல்லப்பட்டவனுக்குக் கண்ணில் கோளாறு, அவனால் சரியாகப் பார்க்க முடியாது.
ஈராக் போரில் சிரியாவும் தன்னால் முடிந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் ஆவணங்களின் அடிப்படையில் அறியமுடிகிறது.
உதாரணத்திற்கு ஜூலை 11, 2007 – ஒரு மெர்சிடிஸ் பேருந்து சிரியாவிலிருந்து ஈராக் நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைச் சோதனையிட்டபோது அதில் தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் 260 பெல்ட்டுகள், 120 துப்பாக்கி பெட்டிகள், 200 கிலோ அளவிற்கு வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. மேலும் சிரிய எல்லையிலிருந்து நிறைய தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்த ஆயத்தமானபோது கைது செய்யப்பட்டனர்.
0
ஈராக் போரில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர்?
ஈராக்கில் அமெரிக்கப் படைகளை முன்னின்று வழிநடத்திய ராணுவ ஜெனரல் டோனி பிராங்க்ஸ் ஒரு தருணத்தில் சொன்னது மிகப் பிரபலம், ‘உயிரற்ற உடல்களை நாங்கள் எண்ணுவதில்லை’. இதை தங்களது முகப்பு பக்கத்தில் வைத்து ஓர் இணையத்தளம் (https://www.iraqbodycount.org/) செயல்பட்டு வருகிறது. அதன் பிரதான நோக்கமே ஈராக்கில் அமெரிக்கா போரைத் தொடங்கிய 2003இல் இருந்து, இன்றுவரை இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையைத் தினந்தோறும் ஆவணப்படுத்துவதுதான்.
அதன்படி ஈராக் போரில் தோராயமாக 2,00,000 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். 5000 வீரர்கள் வரை அமெரிக்கத் தரப்பு இழந்திருக்கிறது.
0
ஈராக் போரில் நீங்கள் யார் பக்கம் வேண்டுமென்றாலும் நிற்கலாம். ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்த ஆவணங்கள் உங்கள் தரப்பை ஒருமுறை மறுபரிசீலனை செய்யவைக்கும். போர் என்பது இருதரப்புகள் மட்டுமல்ல என்பதை உணர்த்தும். மதமும் அரசியலும் சேர்ந்தால் நிகழும் விளைவு ஒன்று மட்டும்தான் என்பதை மீண்டுமொருமுறை உறுதி செய்யும்.
மதமும் அரசியலும் இணைந்து ஆடும் ஆட்டத்தில் பந்தயக்காரர்கள் மட்டுமல்ல, மௌன சாட்சியாக அமர்ந்திருக்கும் அதன் பார்வையாளர்களும் சேர்ந்தே பலியாகிறார்கள்.
(தொடரும்)