17 ஜூன் 2007.
பக்திகா விமானத் தாக்குதல்.
கடந்த ஞாயிறன்று பக்திகா மாகாணத்தின் ஜர்குன் ஷா மாவட்டத்தில், ஆப்கன் மற்றும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் பல போராளிகளும், 7 பொது மக்களும் கொல்லப்பட்டனர். மேலும் 2 போராளிகள் கைது செய்யப்பட்டனர். அல் காயிதாவைச் சேர்ந்த ராணுவத் தளபதி ஒருவர், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைத் தனது மறைவிடமாகப் பயன்படுத்தி வந்தார். அங்கே ஒரு மசூதியும் மதரசாவும் இருப்பது பெறப்பட்ட நம்பகமான தகவலின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.
அவ்விடத்தில் நாள் முழுவதும் அல் காயிதா போராளிகள் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்தே கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின. அதில் எதிர்பாராத விதமாக 7 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். வழிபாட்டுத் தளங்களையும், குழந்தைகளையும், அப்பாவி பொதுமக்களையும் போராளிகள் எப்படி ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் உறுதியாகிறது.
போராளிகளின் கோழைத்தனத்தால் பறிபோன அப்பாவி உயிர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம்.
தாக்குதலுக்குப் பிறகு இப்படியொரு ஒரு செய்தியைத் தயாரித்து வெளியிட்டது அமெரிக்க ராணுவம்.
மூன்று வருடங்கள் கழிகின்றன.
2004 முதல் 2010 வரை ஆப்கன் போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்க வீரர்கள் களத்திலிருந்து ஆவணப்படுத்திய 91,000 ரகசிய அறிக்கைகளை 25 ஜூலை 2010 அன்று வெளியிட்டது விக்கிலீக்ஸ். அதில் ஏழு குழந்தைகள் பலியான விவகாரம் இவ்வாறு இடம்பெற்றிருந்தது.
நாள்: 2007-06-17 21:00:00
வகை: நட்பு நடவடிக்கை
தலைப்பு: 172100Z டாஸ்க் போர்ஸ் 373 புறநிலை பாதை
சுருக்கம்:
குறிப்பு: டாஸ்க் போர்ஸ் 373 மற்றும் ஹிமார்ஸ் குறித்த பின்வரும் தகவல்கள் ரகசியமானவை. அவை வெளியே கசிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
பணி: அபு லேத் அல் லிபி என்பவரை உயிருடனோ பிணமாகவோ பிடிக்கத் தாக்குதலை முன்னெடுத்தது டாஸ்க் போர்ஸ்.
இலக்கு: அல் காயிதாவின் மூத்த ராணுவத் தளபதியும், லிபிய இஸ்லாமியப் போராட்டக் குழுவின் தலைவருமான அபு லேத் அல் லிபி, பாகிஸ்தானின் மீர் அலி பகுதியைச் சேர்ந்தவர். வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் போராளிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருபவர்.
தாக்குதலின் விளைவு: 6 எதிரிகளும், 7 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க ராணுவம் வெளியிட்ட செய்திக்கும், விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்த ஆவணத்திற்கும் இடையில்தான் எத்தனை வேறுபாடுகள். ஒரே நிகழ்விற்கு மாறுபட்ட சாட்சியங்கள். இத்தனைக்கும் இவ்விரண்டையும் தயாரித்தது அமெரிக்க ராணுவம்தான். பிறகு ஏன் இவ்வளவு முரண்பாடுகள்? காரணம் எளிமையானது. முதலில் வெளியிடப்பட்ட செய்தி, அமெரிக்கா எதை நம்ப விரும்பியதோ அதை உலகிற்குச் சொன்னது. இரண்டாவதாக வெளியான விக்கிலீக்ஸ் ஆவணங்கள், எது நடந்ததோ அதை உலகிற்குச் சொன்னது. என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
அ) நடத்தப்பட்டது விமானத் தாக்குதல் அல்ல. மாறாகச் சக்திவாய்ந்த, பாரபட்சமில்லாமல் தாக்கும் ஒரு புதிய ஏவுகணை அன்று பரிசோதிக்கப்பட்டது. ராணுவ வாகனத்தின் பின்புறமிருந்து கிட்டத்தட்ட 40 மைல் தூரத்திற்குப் பாய்ந்துசென்று தாக்கும் ஹிமார்ஸ் என்ற ஏவுகணைதான் அன்று தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டது.
ஆ) தாக்குதலை முன்னின்று நடத்தியவர்கள் ஆப்கன் மற்றும் அமெரிக்கக் கூட்டுப்படையினர் அல்லர். அதை நடத்தி முடித்தது டாஸ்க் போர்ஸ் 373 என்ற அமெரிக்க நிழற்படை. ஏற்கெனவே அமெரிக்க ராணுவம்தான் களத்தில் இருக்கிறதே? பிறகு இவர்கள் எதற்காக?
போரில் வானளாவிய அதிகாரம் கொண்டவர்கள் இந்த நிழற்படையினர். எந்த அளவுக்கு என்றால், அவர்களுக்கு ஒரு பட்டியல் வழங்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒருவர் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அவரைக் கொல்வதா அல்லது கைது செய்வதா என்பதை நிழற்படையினரே முடிவு செய்துகொள்ளலாம். யாரையும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை, எவருடைய ஆணைக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. பட்டியலில் இருக்கும் அனைவரையும் கொல்வது ஒன்றுதான் அவர்களுக்குத் தரப்பட்ட தலையாய பணி. எல்லா விதங்களிலும் போர் சட்ட விதிகளை இவர்கள் மீறியிருப்பது விக்கிலீக்ஸ் டாஸ்க் போர்ஸ் குறித்து வெளியிட்ட 84 அறிக்கைகளின் மூலம் உறுதி செய்துகொள்ள முடிகிறது.
இ) அமெரிக்க ராணுவம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தது போலத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் மோசமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. அவர்களின் பட்டியலில் அல் காயிதா ராணுவத் தளபதியின் பெயரும் இருந்தது, அவ்வளவுதான்.
ஈ) அவரைக் கொல்ல நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து அவர் தப்பித்தார்.
ஈராக் மீது படையெடுக்க அமெரிக்கா சொன்ன காரணமாவது ஓரளவிற்கு நம்பும்படியாக இருந்தது. ஆனால் ஆப்கனிஸ்தான் மீது போர் தொடுக்க என்ன காரணம் இருக்க முடியும்? சரி 9/11 தான் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் தாக்குதல் நடத்தியவர்கள் ஆப்கனிஸ்தானைச் சேர்ந்தவர்களா?
அவர்கள் எகிப்து மற்றும் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள், ஜெர்மனியின் ஹாம்பர்கில் வசித்தவர்கள், புளோரிடாவில் பயிற்சி பெற்றவர்கள், அமெரிக்காவின் மினசோட்டாவில் விமானம் ஓட்ட கற்றவர்கள். பிறகு எதற்காக ஆப்கனிஸ்தான்? ஒரே காரணம்தான், அல் காயிதாவின் தலைவர் ஒசாமா பின்லேடனின் தலைநகரமாக இருந்தது அந்நாடு. சவுதி அரேபியாவில் பிறந்து வளர்ந்து ஒசாமா, எதற்காக ஆப்கனுக்குள் மறைந்து வாழ வேண்டும்?
0
1950களில் இருந்தே அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பிடித்தமான நாடு ஆப்கனிஸ்தான். ஆசியாவுக்குள் நுழைய ஆப்கன்தான் சோவியத்துக்கு நுழைவாயில். உள்கட்டமைப்பை மேம்படுத்த, ராணுவத்தைப் பலப்படுத்த என்றெல்லாம் காரணங்கள் சொல்லி இரண்டு வல்லரசு நாடுகளும் தாராளமாகவே ஆப்கானுக்கு நிதியுதவி செய்தன.
எழுபதுகளில் ஆப்கன் தலைவராக இருந்த தாவூத் கானின் சொற்றொடர் ஒன்று மிகப் பிரபலம். ‘அமெரிக்க சிகரெட்டை சோவியத் தீக்குச்சிகளால் பற்ற வைக்கும் போது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்’. அவரது அணுகுமுறை இருநாடுகளிடையே பனிப் போரைத் தூண்டுவதாக இருந்தது. இருப்பினும் அவர் சோவியத்திடம்தான் அதிகம் நெருக்கம் காட்டினார். இது மறுமுனையிலிருந்த அமெரிக்காவைப் பதட்டப்படுத்தியது. 1978இல் தாவூத்தின் அரசாங்கம் புரட்சியால் அகற்றப்பட்டு, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அரசு நிறுவப்பட்டது. நூர் முகமது தராகி தலைமையில் ஜனநாயக குடியரசு நாடாக உருவெடுத்தது ஆப்கானிஸ்தன்.
பெண்ணுரிமை, கல்வி, விவசாயம், பொருளாதாரம் என்றெல்லாம் பேசினாலும் புதிய அரசாங்கம் பெருமளவில் அடக்குமுறையைக் கையிலெடுத்தது. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள், சமயங்களில் கொல்லப்பட்டார்கள். இதைச் சகித்துக்கொள்ள முடியாமல் அரசுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கமாக தங்களை அறிவித்துக் கொண்டார்கள் முஜாஹிதீன்கள். ஊசி கிடைத்தாலே ஊடுருவும் அமெரிக்காவுக்கு இப்போது உலக்கை அளவுக்கு இடம் கிடைத்திருக்கிறது, அதைப் பயன்படுத்திக்கொண்டு முஜாஹிதீன்களோடு கைகோர்த்துக் கொண்டது அமெரிக்கா. அவர்களுக்கு நிதி உதவியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது. அதை நேரடியாக அல்லாமல் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மூலம் செய்தது.
1979இல் புதிய அரசாங்கமும் புரட்சியால் அகற்றப்பட்டு, அதன் பிரதமர் நூர் முகமது தராகி ஆப்கான் கம்யூனிச இயக்கத்தவர்களால் கொலை செய்யப்பட்டார். காத்திருந்த சோவியத் யூனியன் ஆப்கன் மீது படையெடுத்தது. மறுபக்கம் முஜாஹீதீன்களுக்கு ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருந்தது அமெரிக்கா.
1980 வாக்கில் ஆப்கனின் பெரும்பாலான கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றியிருந்தது முஜாஹிதீன். ஸ்டிங்கர்ஸ் எனப்படும் தோளிலிருந்து ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. இதை 1987இல் பெருமளவுக்குப் பயன்படுத்திய முஜாஹிதீன்கள் சோவியத்தின் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினர்.
இதே காலகட்டங்களில்தான் ஆப்கனில் போரிட விரும்பும் வெளிநாட்டு இஸ்லாமிய இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பாகிஸ்தானில் பயிற்சி அளித்து வந்தார் ஒருவர். தனது செல்வங்களை எல்லாம் அளித்து முஜாஹிதீன்களுக்கு உதவி செய்து வந்தார். அவர் 1988இல் அல் காயிதா என்ற சன்னி இஸ்லாமியத் தீவிரவாத இயக்கத்தை ஆரம்பித்த ஒசாமா பின்லேடன்.
இனி இங்கிருந்து செய்ய ஒன்றுமில்லை என்பதை உணர்ந்த சோவியத் தனது வீரர்களைத் திரும்ப அழைக்கத் தொடங்கியது. பிப்ரவரி 1989இல் கடைசி சோவியத் வீரரும் ஆப்கானை நீங்கினார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நடைபெற்ற போரில் 15,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
இன்னமும் அமெரிக்காவிடமிருந்து நிதியுதவியையும் ஆயுதங்களையும் பெற்றுவந்த முஜாஹிதீன்கள் அப்போதைய நஜிபுல்லாஹ் தலைமையிலான ஆப்கன் அரசை எதிர்த்துப் போரிட்டு வந்தனர். அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பாலான ஆப்கன் மாகாணங்கள் இருந்தன.
1990இல் ஆப்கானின் அரசியலமைப்பு எழுதப்பட்டு அதிகாரப்பூர்வ இஸ்லாமிய நாடானது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நஜிபுல்லா தாக்குப் பிடிக்க இயலாமல் ராஜினாமா செய்தார்.
முஜாஹிதீன்களுக்கு ஆட்சியில் பங்கு தர ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒப்பந்தம் நிறைவேறியது. இருப்பினும் அவர்களில் ஒரு சாரார் போராளிகளாகவே இருக்க விரும்பினர். அவர்களுக்கும் போராளிகளாக இருந்து ஆட்சியாளர்களாக ஆனவர்களுக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. அது உள்நாட்டுப் போராக விரிந்தது.
1994இல் தாலிபான் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட முதல் நான்கு ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு நிரந்தர வசிப்பிடமாக மாறியது ஆப்கான்.
செப்டெம்பர் 2001இல் அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தியது அல் காயிதா.
அமெரிக்கா ஆப்கான் மீது படையெடுத்தது.
0
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, தாலிபான் தீவிரவாத அமைப்பைக் கட்டமைக்கவும், அவர்களை ஆப்கனுக்குள் ஊடுருவ வைக்கவும் பெரிய அளவிற்குத் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குக் கூட்டாளியாகவும், அதன் எதிரிக்கு நண்பனாகவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பு செயல்பட்டது விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களின் மூலம் தெளிவாகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆப்கனுக்கு வெளியே, தாலிபான்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உடந்தையாக இருப்பது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான்.
போருக்கு நடுவே கிளர்ச்சியாளர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு, ஐஎஸ்ஐ சார்பாக அதன் தூதர்கள் கலந்துகொண்டு சில உத்தரவுகளையும் பிறப்பித்த கதையும் கூட ஆவணங்களில் வெளியாகி இருக்கிறது. உதாரணத்திற்கு ஆகஸ்ட் 21, 2008 தேதியிட்ட அறிக்கையில் ‘ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த கர்னல் முகமது யூசுப், மௌலவி இஸ்ஸத்துல்லாஹ் என்ற தாலிபானிடம், ஆப்கான் பிரதமர் ஹமீது கர்சாய் படுகொலை செய்யப்படுவதை உறுதிசெய்யும்படி உத்தரவிட்டார்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைமை தளபதியாக இருந்த ஹமீத் குல் குறித்து, வெளியிடப்பட்ட ஆவணங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது பணிக் காலத்திற்குப் பின்பு கிட்டத்தட்ட தாலிபான்களுக்கு ஒரு பிரசாரகர் போலவே மேற்கத்திய ஊடகங்களில் தோன்றி அவர் வாதிட்டார். சில ஆவணங்களில் தாலிபான்களின் தலைவர் என்றுகூடக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஜனவரி 14, 2008.
காபூலுக்கும் ஜலலாபாத்திற்கும் இடையேயான நெடுஞ்சாலையில் ஐநா சபை ஊழியர்களைக் கடத்த திட்டம் வகுத்துத் தந்ததோடு மட்டுமல்லாமல் அதை ஒருங்கிணைக்கவும் செய்தார் ஹமீது குல். தொடர்ந்து தாலிபான்களுக்கு ஆயுத உதவி அளித்து வந்தார்.
0
ஒரு போர், அதைத் தொடர்ந்து ஒரு அமைதி என்றெல்லாம் ஆப்கான் மக்களை முன்வைத்து எழுத முடியாது. சோவியத், அமெரிக்கா, தாலிபான்கள் என்று அவர்களும் மாறி மாறி நிறையப் பார்த்துவிட்டார்கள். போர் என்பது ஆப்கனில் அன்றாடம். ‘நீதிக்காக அல்ல, பழிதீர்க்க’ என்றே ஆப்கன் போரைப் புரிந்துகொள்ள முடியும்.
(தொடரும்)