Skip to content
Home » சாமானியர்களின் போர் #12 – செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

சாமானியர்களின் போர் #12 – செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

செய்திகள் வாசிப்பது அமெரிக்கத் தூதரகம்

திருமணங்களில் பெண் வேடமிட்டு சிறுவர்கள் நடனமாடுவது ஆப்கனிஸ்தானின் மரபுகளில் ஒன்று. சில சமயங்களில் நிகழ்வுக்குப் பிறகு அச்சிறுவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்படுவதும் உண்டு. போதாக்குறைக்கு அப்போது அந்நாட்டின் மீது சகல மீறல்களையும் அனுமதிக்கும் ஒரு போர் வேறு அமெரிக்காவால் தொடுக்கப்பட்டிருந்தது. யார் துப்பாக்கிகளோடும் பீரங்கிகளோடும் தங்களது நாட்டிற்குள் சண்டையிட வந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு முன்பும் நடனமாட வேண்டிய நிர்ப்பந்தம் அச்சிறுவர்களுக்கு.

டைன்கார்ப் இன்டர்நேஷனல் என்ற அமெரிக்கத் தனியார் ராணுவ ஒப்பந்ததார நிறுவனமும் ஆப்கன் போரில் ஈடுபட்டிருந்தது. ஆப்கன் போலீஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சியளிப்பதே அந்நிறுவனத்தின் பிரதான பணி. எந்நேரமும் பயிற்சியளித்துக் கொண்டே இருக்கமுடியாது அல்லவா? அன்று டைன்கார்ப் நிறுவனத்திலிருந்து ஒருவர் ஓய்வு பெறுகிறார். அதன் பொருட்டும், தாங்கள் பயிற்றுவிக்கும் ஆப்கன் போலீஸ் அதிகாரிகளை மகிழ்விக்கவும், டைகார்ப் சார்பில் ஒரு விருந்து ஏற்பாடாகிறது.

நடனமில்லாமல் ஒரு விருந்தா? அதற்காகப் பெண்களையா அழைத்து வர முடியும்? அதுவும் ஆப்கனில். என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறார்கள் நடனச் சிறுவர்கள், அவர்களை அழைத்து வாருங்கள். அன்றைய நிகழ்வு, அதில் பயன்படுத்தப்பட்ட போதை வஸ்துக்கள் என எல்லாவற்றிற்கும் ஆப்கன் போலீஸ் அதிகாரிகள் தங்களது முழு ஒத்துழைப்பையும் நல்கினர். மேலும் அன்றைய நடனம் டைன்கார்ப் நிறுவனத்தால் படம் பிடிக்கப்பட்டது. இது நடந்தது 2009இல்.

இதனை ஒரு பத்திரிக்கையாளர் ஆவணமாக்கியதைத் தொடர்ந்து, ஆப்கன் உள்துறை அமைச்சகத்திலிருந்து ஹனிஃப் ஆத்மார் அமெரிக்கத் தூதரகத்தின் உதவியை நாடினார். உடனடியாக இந்த விவகாரத்தை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். ஆனால் டைகார்ப் நிறுவனத்திற்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கைகளும் எடுக்க இயலாது என்ற நிலைப்பாட்டையே அமெரிக்க அதிகாரிகள் கொண்டிருந்தனர்.

இதையடுத்து அன்றைய நடன ஏற்பாட்டிற்கு உடந்தையாக இருந்த 2 ஆப்கன் போலீஸ் அதிகாரிகளும் 9 ஆப்கானியர்களும் கைது செய்யப்பட்டனர். அதற்கான காரணம் என்று ஆத்மார் தரப்பு சொன்னது இதைத்தான். ‘குழந்தைகளிடமிருந்து சேவையை வாங்கிய குற்றத்திற்காக’ இந்தக் கைது.

0

வடக்கு நைஜீரியாவின் கானோ நகரில் பெரிய அளவுக்கு மூளைக்காய்ச்சல் நோய் பரவிக்கொண்டிருந்த காலம். 1996இல் நோய்க்கு உண்டான மருந்துகளை மக்களிடையே பரிசோதனை செய்து பார்த்துக்கொண்டிருந்தது உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான பைசர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த தருணத்தில் பைசர் நிறுவனத்தைச் சார்ந்த மருத்துவர்கள் 200 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களில் பாதிப் பேருக்கு ட்ரோவன் (Trovan) என்ற மருந்தையும், மீதிப் பேருக்கு செஃப்ட்ரியாக்சோன் (Ceftriaxone) என்ற மருந்தையும் பரிசோதனை அடிப்படையில் பரிந்துரை செய்தனர். இதில் செஃப்ட்ரியாக்சோன் ஏற்கெனவே அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறந்த முடிவுகளைக் கொடுத்திருந்தது.

இந்தப் பரிசோதனையில் ட்ரோவன் மருந்தை எடுத்துக்கொண்ட 5 குழந்தைகளும், செஃப்ட்ரியாக்சோன் மருந்தை எடுத்துக்கொண்ட 6 குழந்தைகளும் உயிரிழந்தனர். பைசரை பொருத்தமட்டில் இந்தக் குழந்தைகள் மூளைக்காயச்சலால் இறந்தார்களே ஒழியே, அவர்கள் பரிந்துரைத்த மருந்துகளால் அல்ல.

ஆனால் இந்நிகழ்விற்குப் பிறகு பெற்றோர்கள் தரப்பிலிருந்து நிறையப் பிரச்சனைகள் எழுந்தன. அவர்களிடம் தங்களது குழந்தைகளின்மீது செலுத்தப்பட இருப்பது சோதனை அடிப்படையில் இருக்கும் ஒரு மருந்து என்பதை பைசர் சொல்லாமல் மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ட்ரோவன் பெரியவர்களுக்குத் தரப்படும் ஒரு மருந்தாகவே ஐரோப்பாவில் உரிமம் பெறப்பட்டு, பிறகு கல்லீரல் நச்சுத்தன்மை ஏற்படுகிறது என்ற காரணத்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

நைஜீரியா அரசின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பைசர் நிறுவனம் 75 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் செலுத்த முன்வந்தது.

நியாயமான நடவடிக்கைகள்தான் இல்லையா? ஒரு தவறு நிகழ்கிறது, அதைச் சரிசெய்ய ஒரு பெருநிறுவனம் தங்களால் ஆனதைச் செய்கிறது. பிறகு வேறென்ன? முடிந்தது என்று நீங்கள் கிளம்பிப் போனதற்கு பிறகே, நிஜ நாடகங்கள் நிகழத் தொடங்குகின்றன.

நைஜீரிய அட்டர்னி ஜெனரல் மைக்கேல் ஆண்டோகா குறித்தும், அவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக செய்த ஊழல்கள் குறித்தும் ஊடகங்கள் திடீரென செய்தி வெளியிடத் தொடங்கின. அது அவரது பிம்பத்தைக் குலைப்பதாக இருந்தது. அவருக்கேகூட இப்போது எதற்கு இப்படியெல்லாம் நடக்கிறது என்று அதிர்ச்சி.

9 ஏப்ரல் 2009 அன்று பைசர் நிறுவன மேலாளர் என்ரிகோ லிகெரி, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளோடு ஒரு சந்திப்பை நிகழ்த்துகிறார். அதன்படி, ‘பைசர் நிறுவனம் பல புலனாய்வாளர்களைச் சமீபத்தில் வேலைக்கு அமர்த்தி இருக்கிறது. அவர்கள் மைக்கேல் ஆண்டோகா இதுவரை செய்த ஊழல்களை எல்லாம் மிக விரைவாகத் தோண்டியெடுத்து, ஊடகங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய விடுவார்கள். இந்த நடவடிக்கைகளின் மூலம் அவரை செயலாற்றாமல் வைத்திருக்க முடியும்’.

பைசர் என்பது ஒரு மருந்து நிறுவனம்தானே? அவர்கள் ஆம்புலன்சைதானே வாங்க வேண்டும்? எதற்காக புலனாய்வாளர்களை விலைக்கு வாங்குகிறார்கள்? ஒரு பெருநிறுவனம் அது ஆரம்பிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே களத்தில் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை, சமயங்களில் ஓர் அரசியல் கட்சி செய்ய வேண்டியதையும் செய்தாக வேண்டும்.

சர்ச்சைக்கு உள்ளான ட்ரோவன் மருந்து குறித்து வெளியுலகிற்குச் சொன்னது முதல் 75 மில்லியன் டாலர்கள் அபராதம்வரை பைசருக்குப் பெரிய தலைவலியாக இருந்தது மைக்கேல் ஆண்டோகாதான். அவரது ஊழல்களைத் தோண்டியெடுத்து, அதன்மூலம் அவரை மக்களுக்கு எதிராக நிறுத்தி, அவரைச் செயலிழக்க வைப்பதுதான் பைசரின் திட்டம். காரணம் 75 மில்லியன் டாலர்களை இழக்கத் தயாராக இல்லை பைசர்.

0

மேலேயிருக்கும் இரண்டு நிகழ்வுகளுக்குமான ஒரே மையப்புள்ளி, அமெரிக்கத் தூதரகம். இவ்விரண்டும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்கத் தூதரக ரகசிய ஆவணங்களில் இருப்பவை. 28 நவம்பர் 2010 தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகக் கிட்டத்தட்ட 2,50,000 ஆவணங்களை பத்திரிக்கைகளின் துணையோடு வெளியிட்டது விக்கிலீக்ஸ்.

தொலைக்காட்சியில் சிறுவயதில் இரவு எட்டுமணி செய்திகள் பார்த்திருப்பீர்கள்தானே? அதன் முடிவில் 2 நிமிடங்களுக்கு மட்டும் ஒன்றோடொன்று தொடர்பில்லாத உலகச் செய்திகளைக் காட்டுவார்கள். இனி இக்கட்டுரையில் நீங்கள் வாசிக்க இருப்பதும் அதுபோன்ற உலக செய்திகளைத்தான். ஆனால் அவற்றுக்கு இடையே அமெரிக்கத் தூதரகம் என்ற ஒரு தொடர்பு இருக்கிறது.

0

‘மின் தேவைகளுக்காக’ என்ற காரணத்தைச் சொல்லியே ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வந்தது. இதன் ஆபத்தைத் தெரிந்துகொண்ட சவுதி அரேபியா, இஸ்ரேல், ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கச் சொல்லி அமெரிக்காவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. குறிப்பாக சவுதி அரேபியாவின் மூத்த தலைவர் அரசர் அப்துல்லா ‘பாம்பின் தலையை வெட்டி எறியுங்கள்’ என்று ஈரான் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவிடம் வலியுறுத்தினார்.

மேலும் ஈரான் 19 பிஎம் 25 ரக ஏவுகணைகளைத் தென் கொரியாவிடமிருந்து வாங்கியிருப்பதும், அதன்மூலம் ரஷ்யா, மேற்கு ஐரோப்பாவின் மீது தாக்குதல் நடத்த முடியும் என்பதும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வந்தது.

ஈரான் மட்டுமல்லாது பாகிஸ்தானும் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எப்போதும் அமெரிக்காவுக்கு இருந்து வந்தது. இதனால் பாகிஸ்தான் ஆராய்ச்சி உலையிலிருந்து அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அந்நாட்டிலிருந்தே அகற்ற அமெரிக்கா முயற்சி செய்தது. காரணம், ஒருவேளை யுரேனியத்தைக் கொண்டு அணு ஆயுதங்கள் தயாரிப்பில் பாகிஸ்தான் ஈடுபடலாம் என்பதுதான்.

0

மிதமிஞ்சிய கண்காணிப்பின் காரணமாக கூகுள் சேவைகளைப் பயன்படுத்தாமல் போனவர்களைத் தெரியும், ஆனால் கூகுள் நிறுவனமே ஒரு நாட்டிலிருந்து தங்களது சேவைகளைத் திரும்பப்பெற்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது நடந்தது சீனாவில்.

சீன சைபர் தீவிரவாதிகளால் கூகுள் நிறுவனக் கணினிகள் தொடர்ந்து ஊடுருவப்பட்டன. இதனைத் தொடர்ந்து மார்ச் 2010இல் சீனாவிலிருந்து தனது அனைத்து சேவைகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டது கூகுள். சீன ஹேக்கர்கள் அமெரிக்கக் கணினிகள் தொடங்கி, தலாய் லாமாவின் தனிப்பட்ட கணினி வரை ஊடுருவியிருப்பது விக்கிலீக்ஸ் மூலம் வெளியுலகிற்குத் தெரியவந்தது.

0

உளவு பார்க்கப்படுவதிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்களாலும்கூடத் தப்பமுடியவில்லை. அவர்களின் கடன் அட்டை எண்கள், டிஎன்ஏ , கைவிரல் ரேகைகள், கருவிழி ஸ்கேன் உள்ளிட்டவற்றைத் திரட்டுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி முன் தொடங்கி சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் இதற்கு இலக்காகினர். உளவுபார்க்க உத்தரவிட்டதாகச் சொல்லப்படுபவர் அப்போது ஒரு மாநிலத்தின் செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன்.

0

ஆப்கானின் துணை ஜனாதிபதியாக இருந்த அகமது ஜியா மசூத், ஒரு பயணமாக ஐக்கிய அரபு நாடுகள் சென்றார். பயணமென்றால் பணம் செலவாகும் இல்லையா? அதிகமில்லை, 52 மில்லியன் டாலர்களைத்தான் பணமாகக் கையில் வைத்திருந்தார். அமெரிக்கத் தூதரகமும் எந்தக் கேள்வியும் இல்லாமல் அப்பணத்தை வைத்துக்கொள்ள அகமதுவை அனுமதித்தது.

0

அமெரிக்க ராணுவச் சிறையான குவாண்டானமோ விரிகுடாவை மூட ஜனவரி 2009 வாக்கில் உத்தரவிட்டார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா. அங்கேயிருக்கும் கைதிகளை என்ன செய்வது என்பதுதான் பிரச்சனை. பண்டமாற்று முறைப்படி சிறையை காலிசெய்ய முடிவெடுக்கப்பட்டது.

கைதிகளைப் பெற்றுக்கொள்ளத் தென்கிழக்கு ஐரோப்பாவின் சிறிய நாடான ஸ்லோவேனியாவுக்கு ‘நீங்கள் கைதிகளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்க அதிபர் உங்கள் நாட்டுக்கு வருகை தருவார்’ என்ற வித்தியாசமான ஒரு சலுகை வழங்கப்பட்டது.

மத்திய பசிபிக் பெருங்கடலின் தீவு நாடான கிரிபாட்டிக்கு மில்லியன் டாலர்கள் வரை ஊக்கத்தொகை வழங்கத் தயாராக இருந்தது அமெரிக்க அரசு. நிபந்தனை ஒன்றுதான், அந்நாடு சீன இஸ்லாமியக் கைதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஐரோப்பாவில் முக்கியத்துவம் பெற பெல்ஜியதிற்கு இருக்கும் எளிமையான, செலவும் இல்லாத ஒரே வழி கைதிகளைப் பெற்றுக்கொள்வதுதான் என்றுகூட அமெரிக்க அதிகாரிகளால் பேரம் பேசப்பட்டது.

0

அதிகாரிகளுக்கு முன்பாக பணிந்துவிட்டு, அவர் போனதும் புனைபெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உண்டு இல்லையா? இதேபோன்று அமெரிக்கத் தூதரக ஆவணங்களிலும்கூட சில எடுத்துக்காட்டுகள் உண்டு. வடகொரியச் சர்வாதிகாரி இரண்டாம் கிம் ஜங், ‘மந்தமான பழைய ஆள்’ என்று ஓரிடத்தில் குறிப்பிடப்படுகிறார்.

உங்களுக்குப் பிடிக்காத இந்திய/தமிழக அரசியல்வாதியின் புனைபெயரை, விக்கிலீக்ஸ் வெளியிட்ட தூதரக ஆவணங்களில் தேடிப்பார்ப்பது என்ற முடிவை, தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள்.

சரி, உலகின் பல்வேறு நாடுகளின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் கொண்டிருப்பது உண்மையானால், அதில் இந்தியா பற்றி ஏதும் இல்லாமலா போய்விடும்?

(தொடரும்)

பகிர:
ரிஷிகேஷ் ராகவேந்திரன்

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *