Skip to content
Home » சாமானியர்களின் போர் #13 – விக்கிலீக்சில் இந்தியா

சாமானியர்களின் போர் #13 – விக்கிலீக்சில் இந்தியா

விக்கிலீக்சில் இந்தியா

மாற்றம் ஒன்றே மாறாதது. இதைவிடத் தட்டையாக ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிக்க இயலாது இல்லையா? கட்சிகள், அதன் தலைவர்கள், அவர்கள் போட்டியிடும் தேர்தல்கள், அதன்மூலம் வகிக்கும் பதவிகள் என அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவைதான். ஆனால் இந்தியத் தேர்தல் களங்களில் பயன்படுத்தப்படும் சில கோஷங்கள், வாக்குறுதிகள் மட்டும் என்றென்றும் மாறாத இயல்பைக் கொண்டிருப்பவை.

உங்கள் வயது ஒரு பொருட்டே அல்ல, சக்திமான் தொடங்கி ஹாரி பாட்டர் வரைக்கும் மாறாத தேர்தல் வாக்குறுதி ஒன்றுண்டு. உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவரின் ஒலிபெருக்கி குரலில் இதை வாசியுங்கள்,‘சுவிஸ் வங்கியில் சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டுவரப்படும்’.

தலைவர் இப்படி மேடையில் முழங்கிய ஒன்றிரண்டு நாட்களில், சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியல் ஒன்று வைரல் ஆகும். குறுஞ்செய்தி காலந்தொடங்கி வாட்சப் வரைக்கும் வகை தொகையில்லாமல் பரவிய ஒரு தகவலென்று இந்தப் பட்டியலைச் சொல்லலாம். சரி ‘தகவலின்’படி, அந்தப் பட்டியலை வெளியிட்டது யார்? வேறு யார்? விக்கிலீக்ஸ்தான்.

அதிர்ச்சி தகவல்: சற்றுமுன்பு இந்தியாவில் கறுப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியலை வெளியிட்டது விக்கிலீக்ஸ். அதிலிருந்து முதல் 30 பேரின் விவரங்களை மட்டும் இங்கே தருகிறோம். அடைப்புக்குறிக்குள் பணம் கோடிகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

1) அசாதுதீன் ஓவைசி (568000)
2) மொய்தான் பாவா (7800)
3) யு டி காதர் (158000)
4) சித்தராமையா (82000)
5) சோனியா காந்தி (155040)

உண்மையில் விக்கிலீக்ஸ் இதைப் போன்றதொரு பட்டியலை வெளியிட்டதா என்ன? நிச்சயம் இல்லை. இது பொழுதுபோகாத யாரோவொரு ‘உண்மைத் தொண்டன்’ உருவாக்கி வெளியிட்டது. இந்தியாவில் விக்கிலீக்ஸ் பெயரால் பரவும் இது போன்ற தகவல்களுக்கு, அந்த இணையதளத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலிருந்தே ஆகஸ்ட் 5, 2011 அன்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகப் பரவிவரும் பட்டியல் போலியானது என்றும், அம்மாதிரியான தகவல்கள் ஒருபோதும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியாகவில்லை என்றும் தனது ட்வீட்டில் தெளிவாகக் குறிப்பிட்டது.

0

மகாராஷ்டிரா பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ப்ரீத்தி காந்தியின் சார்பில் ஒரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. கட்சியின் சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டியில், ‘மோடி ஊழலுக்கு எதிரானவர் என்பது தெரிந்ததால்தான், அமெரிக்காவே அவரைப் பார்த்து அஞ்சுகிறது’ என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அதில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவின் புகைப்படமும், அவரது கையெழுத்தும் இடம்பெற்றிருந்தது. மோடி ஆதரவாளர்களும் பாஜகவினரும் பெருமளவுக்கு அப்போது அதை மக்களிடம் கொண்டுசென்றனர்.

2014இல் விக்கிலீக்ஸ் இவ்விவகாரம் குறித்த தெளிவை அளித்தது. அவர்கள் வெளியிட்ட அமெரிக்கத் தூதரக ரகசிய அறிக்கைகளிலிருந்து இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டி தங்களது விளக்கத்தை வெளியிட்டனர். அதன்படி 2006 வாக்கில் குஜராத் காங்கிரஸ் தலைவராக இருந்த மனோகர்சிங் ஜடேஜா, அமெரிக்கத் தூதரக அதிகாரி மைக்கேல் ஓவனிடம் ‘நரேந்திர மோடி ஊழலுக்கு அப்பாற்பட்டவராக மக்களால் பார்க்கப்படுகிறார்’ என்ற தனது கருத்தைப் பதிவு செய்தார்.

இது பாஜக ஆதரவாளர்களால் திரிக்கப்பட்டு மோடி ஊழலற்றவர் என்று ஜூலியன் அசாஞ்சே சொன்னதாகப் பிற்காலத்தில் மக்களிடையே பரப்பப்பட்டது. குஜராத் காங்கிரஸ் தலைவருக்கும், அமெரிக்கத் தூதருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை, பரவிவரும் போலி செய்திக்கான மூலமாக முன்வைத்தது விக்கிலீக்ஸ்.

மேலும் 2006இல் அமெரிக்க மூத்த தூதரக அதிகாரி ஒருவர் நரேந்திர மோடியை ‘நம்பிக்கையற்றவர். அனைவரையும் உள்ளடக்கிய ஒருமித்த தன்மையை உருவாக்குவதைக் காட்டிலும், பயம் மற்றும் மிரட்டல் மூலம் ஆட்சி செய்பவர்’ என்று வர்ணித்ததையும் இத்தருணத்தில் மீண்டும் சுட்டிக்காட்டியது விக்கிலீக்ஸ்.

அமெரிக்கத் தூதரக பார்வையில் மும்பை தாக்குதல்

அமெரிக்கத் தூதரக ஆவணங்களில் மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பதட்டங்கள், அந்நாடுகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தெளிவாகப் பதிவாகி உள்ளன. அதன்படி மும்பை தாக்குதலுக்குப் பிறகு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியா போருக்குத் தயாராக இருப்பதாக நேரடியாகவே அச்சுறுத்தினார். பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அஷ்ஃபாக் பர்வேஸ் கயானியும், சர்தாரியும் அமெரிக்கத் தூதரோடு பேசுகையில், ‘ஒருவேளை இந்தியா போரைத் தொடங்கினால், நாங்கள் திருப்பி தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று தெரிவித்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு முன்பே தெரிந்திருந்தது என்றும், இன்னும் சொல்லப்போனால் தாக்குதலை அங்கீகரித்து அனுப்பி வைத்ததே ஐ.எஸ்.ஐதான் என்றும் உறுதியாக நம்பியது. பாகிஸ்தான் பிரதமர் சையத் யூசுப் ராசா கினியைக் காட்டிலும் அதிகமான, ஆனால் ராணுவ ஜெனரல் கயானியை காட்டிலும் குறைவான அதிகாரத்தைக் கொண்டிருந்தார் அதிபர் சர்தாரி. மும்பை தாக்குதல் விஷயத்தைக் கையாள்வதில் அதிபருக்கும், ராணுவ ஜெனரலுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருந்ததை அமெரிக்க ஆவணங்களின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

அப்போதைய கடினமான சூழலைச் சமாளிக்க ஐ.எஸ்.ஐயின் தலைவர் ஷுஜா பூஷாவை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் திட்டத்திலிருந்தார் சர்தாரி. ஆனால் இதற்கு உடனடியாக தடை விதித்த கயானி அமெரிக்காவிடம் ‘ஷுஜா புஷா போன்ற ஒரு மூத்த ஐஎஸ்ஐ தலைவரை உடனடியாக அனுப்புவது இந்தியாவுக்குப் பெரிய அளவுக்குச் சாதகமாகவும், தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஆகவே இந்தியாவிடமிருந்து போதுமான ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்ததற்குப் பிறகு பார்ப்போம்’ என்று தட்டிக் கழித்தார். இறுதிவரைக்கும் ஷுஜா புஷா இந்தியாவிற்கு வரவில்லை.

பாகிஸ்தான் சட்ட அமலாக்க அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய 124 பேரைக் கைதுசெய்தது இந்த விவகாரத்தை ஓரளவுக்கு அப்போது அமைதியடையச் செய்தது.

லஷ்கர் இ தொய்பாவை விட ஆபத்தான இந்து குழுக்களும், ராகுல் காந்தி பற்றிய அமெரிக்கப் பார்வையும்

ஜூலை 2009இல் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரோடு ஒரு மதிய உணவை ஏற்பாடு செய்தார் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். அதில் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். அதில் அவர் அடுத்து வரவிருக்கும் தேர்தல்கள், தனது வியூகங்கள், கிராமப்புற வாக்காளர்களைக் கவர்வது எனப் பல தகவல்களை அமெரிக்கத் தூதரோடு பகிர்ந்து கொண்டார்.

உரையாடலுக்கு இடையே பாகிஸ்தானிலிருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவை பற்றிய அமெரிக்கத் தூதரின் கேள்விக்கு ராகுல் பின்வருமாறு பதிலளித்தார்.

‘இந்தியாவுக்கு லஷ்கர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது உண்மைதான், இந்திய இஸ்லாமியப் பழங்குடி சமூகங்களில் சில லஷ்கருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. ஆனால் அதைவிட ஆபத்தான தீவிர இந்து குழுக்கள் இந்தியாவில் வளர்ந்து வருகின்றன. அவர்கள் நாட்டில் மதப் பதட்டங்களையும், இஸ்லாமியச் சமுதாயத்தோடு அரசியல் மோதல்களையும் திட்டமிட்டே தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர். உள்நாட்டிலேயே வளர்ந்துவரும் இந்தக் குழுக்கள், பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் தீவிரவாதத் தாக்குதல் போன்றவைதான். மிகுந்த கவலை அளிப்பதாகவும், உடனடி கவனம் தரவேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது’.

ராகுல் காந்தி இப்படிப் பேசியிருப்பது இன்றிலிருந்து 13 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தபோதிலும், இன்றைய சூழலுக்கும்கூட மிகக் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அரசியலுக்கு வந்த புதிதில் ராகுல் குறித்த அமெரிக்காவின் பார்வை அப்படியொன்றும் ஆரோக்கியமானதாக இல்லை. 2007இல் ராகுலைச் சந்தித்த ஓர் அமெரிக்க அதிகாரி அவர் குறித்து ‘ஒரு வெற்று உடையாகத்தான் பரவலாகப் பார்க்கப்படுகிறார். மன உறுதிப்பாடு, கருத்துக்களில் ஆழம், அறிவாற்றல் மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, தன்னை தகுதியின் அடிப்படையில் நிராகரித்தவர்கள் செய்தது தவறு என்று அவர் (ராகுல்) நிரூபிக்க வேண்டும். அசுத்தமான, இரக்கமற்ற இந்திய அரசியல் வியாபாரத்தில் அவர் தனது கைகளை அழுக்காக்கிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று எழுதினார்.

ஆனால் இந்தப் பார்வை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவே பெரிய அளவுக்கு மாறியது. மற்றொரு அமெரிக்கத் தூதரக அதிகாரி ‘ஒரு பழுத்த அரசியல்வாதியைப் போல, தான் நினைப்பதைத் துல்லியமாகவும், தெளிவாகவும் சொல்லமுடிகிற தனது திறமையை நிரூபித்தார். இது அவர் தெளிவற்றவர் என்னும் பிம்பத்தைப் பொய்யாக்குவது போலிருந்தது’ என்று ராகுல் காந்தி குறித்து தங்களது ஆவணங்களில் குறிப்பிட்டார்.

மற்றொரு தூதரக ஆவணத்தில் ‘கடந்த காலங்களில் மழுப்பலானவராக இருந்தபோதிலும் இப்போது உறுதியானவராகவும், அமெரிக்க அரசோடு ஒரு நல்லுறவை விரும்புபவராகவும் தெரிகிறார்’ என்று ராகுல் குறித்துப் பதிவாகியிருந்தது.

காஷ்மீர் கைதிகளைச் சித்திரவதை செய்த இந்தியா

செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (சுருக்கமாக ஐ.சி.ஆர்.சி), 2005இல் அமெரிக்க அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து இந்தியா, காஷ்மீரில் அடைபட்டிருக்கும் கைதிகளைச் சித்திரவதை செய்வதாகத் தெரிவித்தனர். மின்சாரத்தைப் பாய்ச்சுவது, பாலியல் ரீதியாக அவமதிப்பது என பல்வேறு தாக்குதல்களுக்குக் கைதிகள் ஆளாகி இருப்பதாக ஐ.சி.ஆர்.சி இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டியது.

விக்கிலீக்ஸ் இந்த ஆவணங்களை வெளியிட்டபோது, அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சங்கடத்தை உண்டாக்கியது. காரணம் ஐ.சி.ஆர்.சி இந்த நிகழ்விலும்கூட தங்களது வழக்கப்படி ஊடகங்களைத் தவிர்த்தே வந்தது. ஆகையால் ஆவணங்கள் வெளியாவதற்கு முன்புவரை இந்தச் சித்திரவதை விவகாரம் ரகசியமாகத்தான் வைக்கப்பட்டிருந்தது.

ஏப்ரல் 2005 தேதியிட்ட அறிக்கையில் தொடர்ந்து இந்தியா காஷ்மீர் கைதிகளை மோசமாக நடத்துவதும், இதனால் ஐ.சி.ஆர்.சி இந்தியா மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் பதிவாகி இருந்தது.

2002 முதல் 2004 வரை ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளில் அமைந்திருக்கும் 177 சிறைகளுக்கு நேரடியாகச் சென்றது ஐ.சி.ஆர்.சி. அதில் 1491 கைதிகளைச் சந்தித்து அவர்களில் 1296 பேரை தனித்தனியாகப் பேட்டி எடுத்தது. கைதிகளில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிவினைவாதிகள் மற்றும் இஸ்லாமியப் போராளிகளாக இருந்தனர்.

கொடூரமாக நடத்தப்பட்டதாக 852 நிகழ்வுகளும், 171 பேர் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் ஐ.சி.ஆர்.சியிடம் தெரிவித்தனர். மின்சாரம் பாய்ச்சியது, தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டது, தொடைகளுக்கு இடையே ஒரு கம்பியைச் சொருகி அதன்மீது சிறை பணியாளர் ஏறி அமர்ந்ததால் தொடை நரம்புகள் நொறுங்கியது, 180 டிகிரிக்கு கால்களை வளைத்துத் துன்புறுத்தியது, தண்ணீரைப் பீய்ச்சியது, பாலியல் துன்புறுத்தல் என பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆட்பட்டதாக 681 பேர் தெரிவித்தனர்.

இந்தியப் பாதுகாப்புப் படையின் அனைத்துப் பிரிவினரும் இந்த சித்திரவதையில், தங்களது அதிகாரிகளுக்கு முன்பாகவே ஈடுபட்டதாக அமெரிக்காவிடம் தெரிவித்தது ஐ.சி.ஆர்.சி.

0

விக்கிலீக்ஸ் வெளியிட்ட லட்சக்கணக்கான ஆவணங்களின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. அன்றாட தேவைக்கே மக்களை அல்லாட வைக்கும் நாடு தொடங்கி வல்லரசு வரை; உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் தொடங்கி சர்வாதிகாரம் வரை; போர் என்று வந்துவிட்டால் அதன் இலக்கணம் ஒன்றுதான். முகம் ஒன்றுதான்.

(தொடரும்)

பகிர:
ரிஷிகேஷ் ராகவேந்திரன்

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *