ஒரு வழக்கறிஞராகத்தான் ஸ்டெல்லா மோரிஸ் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அறிமுகமானார். பிறகு அவர்களுக்கு இடையேயான அந்த உறவு 2015 முதல் காதலாக மாறியது. அதன் சான்றாக இரண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். இனியும் காலம் தாழ்த்த முடியாது என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டது.
அன்று திருமண உடையில் வந்திறங்கினார் ஸ்டெல்லா மோரிஸ். அங்கிருந்தவர்கள் ஸ்டெல்லாவுக்கும் அசாஞ்சேவுக்கும் தங்களது வாழ்த்துகளை உரக்கத் தெரிவித்தனர். அங்கே வித்தியாசமாகத் தெரிந்தது ஒன்றுதான். திருமணம் நடந்த இடம் தேவாலயமோ மண்டபமோ அல்ல; மாறாக அசாஞ்சேவை மணமுடிக்க ஸ்டெல்லா வந்திறங்கிய இடம் லண்டன் பெல்மார்ஷ் சிறைச்சாலை. 2019 முதல் அங்கேதான் அடைக்கப்பட்டிருந்தார் 50 வயதான ஜூலியன் அசாஞ்சே.
சாட்சிகள் உள்பட மொத்தம் 6 பேர் மட்டும் கலந்துகொண்ட அத்திருமணம் மார்ச் 2022இல் சிறைக்கு உள்ளேயே நடந்து முடிந்தது. 38 வயதான ஸ்டெல்லாவைப் பொறுத்தவரையில் அவரது கணவர் உலகின் மிக அற்புதமான மனிதர். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல்.
அசாஞ்சே எதற்காக, எப்போது கைது செய்யப்பட்டார்?
0
விக்கிலீக்ஸ் உச்சத்திலிருந்தது, அசாஞ்சேவுக்கு சோதனைகள் தொடங்கியது இரண்டும் 2010ஆம் ஆண்டில்தான். அசாஞ்சேவின் தொழில்நுட்ப அறிவை அவர் எதிரிகள்கூடச் சந்தேகிக்க மாட்டார்கள். ஆனால் அவரது சமூகத் திறன்கள் பலரால் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. ஒருவகையில் அவர் முடக்கப்படுவதற்குக் காரணமாகக்கூட அவை அமைந்துவிட்டன.
விக்கிலீக்ஸ் இணையதளத்தை ஆரம்பக் காலங்களில் கட்டமைத்தவரும் அதன் செய்தி தொடர்பாளராக இருந்தவருமான ஜெர்மனியைச் சேர்ந்த டேனியல் டோம்சைட் பெர்க், அசாஞ்சேவை வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார். ‘அசாஞ்சேவின் அறியாமையின் காரணமாக விக்கிலீக்ஸ் இடிந்து விழும்’ என்றும் எழுதினார்.
அமெரிக்க விமானங்களில் பயணிக்கக் கூடாதவர்கள் என்று அந்நாட்டு அரசு தயாரித்த ரகசியப் பட்டியல் ஒன்று விக்கிலீக்ஸ் குழுவுக்கு 2010 வாக்கில் கிடைத்தது. இதை ஒருவேளை பொதுவில் வைத்தால், அதை அனுப்பி வைத்தவர்கள் சிக்கலுக்கு உள்ளாவார்கள் என்று நினைத்த டேனியல் டோம்சைட் பெர்க், விக்கிலீக்ஸ் சர்வரில் இருந்து அப்பட்டியலை முழுவதுமாக அழித்தார். காரியத்தை முடித்த கையோடு அசாஞ்சேவோடு இருந்த உறவை முறித்துக்கொண்டு அங்கிருந்து விலகி தனியாக openleaks.org என்றொரு இணையதளத்தைத் தொடங்கினார். கிட்டத்தட்ட விக்கிலீக்ஸ் போலவே இயங்கும் மற்றுமொரு இணையதளம் அது. இவ்விலகலை இரண்டு ஆளுமைகளுக்கு இடையேயான மோதலாகப் பார்த்தன பத்திரிக்கைகள்.
விக்கிலீக்ஸ் பரபரப்பாக ஆவணங்களைக் கசிய விட்டுக்கொண்டிருந்த காலங்களில் அசாஞ்சேவைச் சந்தித்த செய்தியாளர்கள் பலரும் அவரது இயல்பற்ற நடவடிக்கைகளையும் பெண்களைச் சீண்டும் கருத்துக்களையும், ஆணாதிக்க மனோபாவத்தையும் குறிப்பிட்டு நிறையவே எழுதி இருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2010இல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார் அசாஞ்சே. அவரது சறுக்கல் அன்றிலிருந்து தொடங்கியது.
அமெரிக்கப் போர் ஆவணங்கள் வரிசையாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுக்கொண்டிருந்த காலம். ஒரு கருத்தரங்கில் பேசச் சிறப்பு விருந்தினராக ஸ்வீடனுக்கு அழைக்கப்பட்டார் அசாஞ்சே. கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்த பெண், செலவுகளைக் குறைக்க அசாஞ்சே தனது வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்னும் யோசனையை முன்வைக்கிறார். அவரது வீட்டில் ஒரேயொரு படுக்கையறை மட்டுமிருந்தது. மேலுமொரு பெண் கருத்தரங்கில் அசாஞ்சேவுக்குத் தொழில்நுட்ப உதவிகள் செய்த வகையில் அறிமுகமானார்.
கருத்தரங்கிற்குப் பிறகு இவ்விரு பெண்களும் அசாஞ்சே தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தனர். ஸ்வீடன் அரசு அசாஞ்சேவை நாடுகடத்த முடிவெடுத்தது. ஆனால் இதைக் கடுமையாக மறுத்த அசாஞ்சே தரப்பு, ‘இது அசாஞ்சேவை இழிவு படுத்துவதற்காகவும், உலக சக்திகள் ஒன்றிணைந்து அவரை வாய் மூடச் செய்யும் அரசியல் சதி’ என்று எதிர்வினையாற்றியது.
தனக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை மீறி இங்கிலாந்திற்கு விமானம் ஏறினார் அசாஞ்சே. அங்கே லண்டன் ஈக்வடார் தூதரகத்தில் கிட்டத்தட்ட ஓர் அகதியாகப் புகலிடம் வேண்டினார். அதன்படி 7 ஆண்டுகள் தூதரகத்தில் ஈக்வடார் குடிமகனாக இருந்தார். மறுபுறம் உளவு சட்டத்தின் அடிப்படையில் தங்கள் நாட்டு ராணுவ, தூதரக ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அசாஞ்சேவை நாடு கடத்தத் திட்டமிட்டது அமெரிக்கா.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களின் காரணமாக பல்வேறு உயிர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்னும் வாதத்தை அமெரிக்கா முன்வைத்தது. மனித உரிமை மீறல்களை உலகறிய செய்தவன், அதனால் பாதிக்கப்பட்டவன் என்னும் தனது பதில் வாதத்தால் அமெரிக்காவின் நாடுகடத்தும் திட்டத்தை ஒத்திவைத்தபடியே இருக்கிறார் அசாஞ்சே.
எனில் அசாஞ்சேவின் கைதுக்குப் பிறகு விக்கிலீக்சின் நிலை என்ன?
0
2010 தொடங்கி 2017 வரை விக்கிலீக்சின் செய்தி தொடர்பாளராக இருந்த ஐஸ்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டின் ஹ்ராஃப்ன்சன் அதன் தலைமை செய்தி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அசாஞ்சே இல்லாத போதும்கூட 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் உலகம் மீண்டுமொருமுறை விக்கிலீக்சை நோக்கித் திரும்பியது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. அமெரிக்காவில் ஆதிக் குடிகளுக்கே முன்னுரிமை என்னும் கோஷத்தை முன்வைத்தார் டிரம்ப்.
அக்டோபர் 2016இல் ஹிலாரியின் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்திய ஜான் பொடெஸ்டா என்பவரது கணக்கிலிருந்து 30,000 மின்னஞ்சல்களைத் தங்களது இணையதளத்தில் கசியவிட்டது விக்கிலீக்ஸ். இது ஹிலாரிக்கு பெரும் தலைவலியாகவும், பின்னடைவாகவும் அமைந்தது. காரணம் 2000 தொடங்கி 2016 வரை ஹிலாரி கிளிண்டன் சம்பந்தப்பட்ட அனைத்தும் கிட்டத்தட்ட பொதுவெளியில் வைக்கப்பட்டது.
ஒருபோதும் வெளிவரப்போவதில்லை என்று ஹிலாரி வேடிக்கையாகப் பயன்படுத்திய வார்த்தைகள் தொடங்கி முன்னாள் அமெரிக்க அதிபரும் அவரது கணவருமான கிளிண்டன் பெயரில் இயங்கிவரும் அமைப்புக்கு நிதி கோரியது வரை, அமெரிக்க அரசியலை அவர் புரிந்து கொண்டிருந்தது தொடங்கி அதிபர் தேர்தலுக்கான அவரது திட்டங்கள் வரை, வெளியான மின்னஞ்சல்களில் பதிவாகி இருந்தது.
ஹிலாரியின் செய்தி தொடர்பாளரான க்ளென் கேப்லின், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிடுவதன் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவைப் பெற்றுத் தருவது ஒன்றே விக்கிலீக்ஸின் நோக்கம். ஹிலாரி கிளிண்டனின் தரப்பைச் சேதப்படுத்துவது ஒன்றே அசாஞ்சேவின் விருப்பம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. வெளியான மின்னஞ்சல்களின் உண்மைத்தன்மையை ஒருபோதும் நாங்கள் ஆராயப் போவதில்லை. காரணம் இதில் ரஷ்யாவின் தவறான தகவல் பிரசாரம் இருப்பதும் தெரியவருகிறது’ என்றார்.
ஜான் பொடெஸ்டாவின் மின்னஞ்சல் கணக்கை ஊடுருவி அதைத் திருடியது ரஷ்யாதான் என்னும் வாதம் ஹிலாரி தரப்பால் வலுவாக முன்வைக்கப்பட்டது. மேலும் ரஷ்யா தாங்கள் திருடியதை விக்கிலீக்ஸுக்கு அனுப்பி வைத்தது என்றும் சொன்னது. 2016 அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரியை காட்டிலும், டிரம்ப் வெல்ல வேண்டுமென்பதே ரஷ்யாவின் விருப்பமாக இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.
அதற்காக ரஷ்யா விக்கிலீக்சை பயன்படுத்திக்கொண்டதாக ஒரு யூகம் முன்வைக்கப்பட்டது. அதை ரஷ்ய அதிபர் புதின் வரைக்கும் கூடக் கொண்டு சென்றார்கள் . அவர் ஒரே வரியில் ரஷ்யாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்களைச் சொல்பவர்களை நோக்கி ‘ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று முடித்துக்கொண்டார்.
தேர்தல் களத்தின் மறு தரப்பிலிருந்த டிரம்புக்கு இந்த மின்னஞ்சல் விவகாரம் பெரிய அளவுக்கு உதவியது. இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையேயான ட்விட்டர் போரில் டிரம்ப் முந்தினார். ‘இந்தத் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது விக்கிலீக்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்களின் மூலம் தெளிவாகிறது. அமெரிக்காவைச் சுதந்திர நாடாக ஆக்குவதா அல்லது பெரிய நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதா என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் முடிவு செய்ய வேண்டும். தான் செய்த குற்றங்களை மறைக்க 33,000 மின்னஞ்சல்களை அழித்ததுடன், தனது அலைபேசியையும் சுத்தியலைக் கொண்டு உடைத்திருக்கிறார் ஹிலாரி’ என்று ட்விட்டரில் எழுதித் தள்ளினார் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே தலையிட்டு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஓர் இணையதளத்தால் முடிந்திருக்கிறது. இத்தனைக்கும், அந்தத் தளத்தை ஆரம்பித்தவர் சிறையில் இருந்திருக்கிறார். ஒரு சாமானியரால் இப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் எனும்போது ஒரு வல்லரசு நாட்டால் என்னவெல்லாம் முடியும்? தன்னிடமிருக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த இணையதளத்தை அமெரிக்காவால் முடக்க முடியாதா எனும் கேள்வி எழுலாம்.
முடியாது என்பதே பதில். இதை அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளது.
0
PRQ.se என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இணையச் சேவை வழங்கும் நிறுவனம்தான் wikileaks.org என்ற இணையதளத்திற்கான ஆவண சேமிக்குமிடத்தை (hosting) வழங்கிவந்தது. அதை முடக்கவேண்டும் என்று போலியான கோரிக்கைகள் தொடர்ந்து உலகெங்கிலும் இருந்து அனுப்பப்பட்டு வந்தன. இதைச் சேவை மறுப்பு தாக்குதல் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இதன்மூலம் ஒரு இணையதளத்தைச் செயலாற்ற விடாமல் முடக்க முடியும். இதிலிருந்து தப்பிக்கத் தனது முகவரியை wikileaks.ch என்று மாற்றினார் அசாஞ்சே.
உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில், அதாவது 507 வெவ்வேறு இடங்களில் தனது இணையதளத்தை நகலெடுத்து வைத்திருந்தது விக்கிலீக்ஸ். இதனால் அமெரிக்க அரசு ஒரு முகவரியைத் தடைசெய்த சிறிது நேரத்தில் மற்றொன்று இயங்க ஆரம்பிக்கும். ஆகவே முழுமையாக விக்கிலீக்சைத் தடைசெய்வது என்பது சாத்தியமற்ற ஒன்று. பழைய முகவரியில் விக்கிலீக்சைத் தேடுபவர்களைக்கூடத் தாமாகவே புதிய முகவரிக்கு வழிமாற்றி வரவேற்கும் அந்த இணையதளம். ஆக இணையத்தைப் பொறுத்தமட்டில் ஒரு தகவல் பதிவேற்றப்பட்டால் அது சாகாவரம் அடைந்துவிடும்.
0
ஜூலை 2022இல் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பாட்டீல், அசாஞ்சேவை நாடு கடத்தும் அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கைக்கு அனுமதி அளித்துள்ளார். கூடவே இதற்கு எதிராக அசாஞ்சே மேல் முறையீடு செய்வதற்கான இறுதி வாய்ப்பும் தரப்பட்டிருக்கிறது. ஒருவேளை அதுவும் நிராகரிக்கப்பட்டால் அசாஞ்சே அமெரிக்காவில் 175 ஆண்டுகள் சிறையில் கழிக்கும் நிலை வரலாம்.
உலகெங்கிலும் உள்ள 1800 பத்திரிகையாளர்கள் அசாஞ்சேவை நாடு கடத்தக் கூடாது என்று இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதே கோரிக்கையை வலியுறுத்தித் தயாரிக்கப்பட்ட மனுவிற்குத் தேவைப்படும் ஒரு மில்லியன் கையெழுத்தில், ஏற்னவே உலகம் முழுக்க 7.5 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 2021க்கு பிறகு விக்கிலீக்ஸ் புதிதாக எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை. ஓராண்டிற்கும் மேலாக இணையதளத்தில் மின்னஞ்சல் மற்றும் அரட்டை சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. விக்கிலீக்ஸ் அதன் அந்திமத்தை நெருங்கிவிட்டதாகப் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.
ஆனால் 2006இல் தொடங்கிய அதன் பயணம் இன்று வரைக்கும்கூட அசாத்தியமானது. முன்னுதாரணம் இல்லாத ஒன்றை வரலாற்றில் அவர்கள் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். தனது அம்மாவின் மூன்றாவது மனநோயாளி கணவனுக்காகப் பயந்து ஊர் ஊராக ஓடியொளிந்து கணினிக்குள் தஞ்சம் புகுந்ததில் தொடங்கி, ஒரு வல்லரசு நாட்டின் போர்க் குற்றங்களை உலகின் முன் வைத்தால் இன்னது நடக்குமென்று தெரிந்தே வெளியிட்டது வரை, ஒரு சாமானியன் களத்தில் இறங்கிச் செய்யக்கூடியதன் உச்சத்தை உலகிற்குச் சொல்லியிருக்கிறார் ஜூலியன் அஞ்சே.
அசாஞ்சே சிறையிலேயே கொல்லப்படலாம் என்று ட்விட்டரில் ஜூலை 2021இல் எச்சரித்தார் ஒருவர்.
யார் அவர்?
(தொடரும்)