ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார் என்பதை வேறு எப்படியும் சுவாரசியமாக எழுதிவிட முடியாது இல்லையா? வேண்டுமானால் பெயர், காலம், இடம் போன்றவற்றைச் சேர்த்து இப்படிச் சொல்லலாம். ஐந்தாம் நூற்றாண்டில் ரோம் நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த தனது பண்ணையில் வசித்து வந்தார் சின்சினாடஸ்.
சாதாரண விவசாயி என்று சொல்லிவிட முடியாது. நாலு பேருக்கு நல்லது சொல்லும் விவசாயி. ஒரு சமயம் அந்த நால்வரில் ஒருவராக ரோம் மன்னரும் இருந்தார். காரணம் அப்போது ரோம் இத்தாலியப் பழங்குடிகளால் ஆபத்துக்கு உள்ளாகி இருந்தது. ஒரு விவசாயியாக இருந்துகொண்டு போர்ப் படைகளுக்கு ஆணையிட முடியாதுதானே, அதனால் சின்சினாடஸ் ரோமின் புதிய மன்னராக முடி சூட்டப்பட்டார்.
அன்றிலிருந்து 16 நாட்களில் இத்தாலியப் பழங்குடிகளை வென்று, அதற்கான கொண்டாட்டங்களில் பங்கெடுத்து, எதிர்த்து நிற்க எவருமே இல்லாதபோதும் கூட ‘நான் என் கடமையைத்தானே செஞ்சேன்’ என்று சொல்லி அரசப் பதவியைத் துறந்து தனது பண்ணைக்கு மீண்டும் திரும்பினார். ரோம் வரலாற்றில் 16 நாட்கள் மட்டுமே நீடித்தது சின்சினாடஸுடைய ஆட்சி.
சமீபத்தில் (செப்டெம்பர் 2022) தனது பதவியிலிருந்து விடைபெற்ற போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து பிரதமராகக் கலந்துகொண்ட கடைசி சந்திப்பில் சின்சினாடஸ் போல தானும் இனி எளிய வாழ்வுக்குத் திரும்ப இருப்பதாகப் பேசியிருந்தார்.
0
9/11க்கு பிறகு அமெரிக்கா தன்னைக் காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தது. ஒரு பக்கம் பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பெயரில் ஈராக், ஆப்கன் மீது போர் தொடுத்தது. மறுபக்கம் தேச பாதுகாப்பிற்காக என்று சொல்லி தனது சொந்த நாட்டு மக்களையே ஒட்டுக்கேட்கத் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்துக்கு (சுருக்கமாக என்.எஸ்.ஏ) உத்தரவிட்டது.
இது தொடர்பாக 2001இல் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன்படி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா தனது நாட்டு மக்களின் தொலைப்பேசி உரையாடல்கள், மின்னஞ்சல் தொடர்புகள் உள்ளிட்டவற்றை யாருடைய அனுமதியும் இன்றி தொடர்ந்து கண்காணித்தது தெரியவந்தது.
அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான கிளென் கிரீன்வால்ட் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து தனது இணையதளத்தில் வெளியிட முடிவுசெய்தார். அமெரிக்காவின் ஒட்டுக்கேட்பு விவகாரம் இவரது எழுத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடைந்தது.
1 டிசம்பர் 2012 அன்று கிளென்னிற்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதில் ‘மக்களின் தகவல் தொடர்பு எந்த அளவிற்குப் பாதுகாப்பாக நிகழ்கிறது என்பது எனக்கு மிகவும் முக்கியம். அதுகுறித்து உங்களிடம் பேச வேண்டியிருக்கிறது. நீங்கள் பிஜிபியை உங்கள் கணினியில் உள்ளீடு செய்திருக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டு இருந்தது, அனுப்பியவர் பெயர் சின்சினாடஸ் என்றிருந்தது.
கிளென் இதுபோல புனைபெயர்களில் வரும் பல மின்னஞ்சல்களைப் பார்த்தவர். ஏனென்றால் முக்கிய ஊடகங்கள் பேசத் தயங்கும், மறுக்கும் விஷயங்களைத்தான் கிளென் தனது இணையதளத்தில் செய்திகளாக வெளியிடுவார். அதற்கு எதிர்வினையாக ஏதேதோ பெயரைச் சுமந்துகொண்டு மின்னஞ்சல்கள் வரும். ‘என்னிடத்தில் பல ரகசியங்கள் இருக்கின்றன’ போன்றவைதான் அவற்றில் பெரும்பாலானவை. அதுபோன்ற ஒரு மின்னஞ்சல்தான் சின்சினாடஸ் என்ற பெயரில் யாரோ அனுப்பியதும் என்று அதைக் கண்டுகொள்ளாமல் விட்டார் கிளென். மேலும் அவருக்கு பிஜிபி போன்ற தொழில்நுட்பம் குறித்தெல்லாம் பெரிய அறிமுகமில்லை.
0
பிஜிபி என்பது என்ன?
Pretty Good Privacy என்பதன் சுருக்கம் தான் பிஜிபி. இருவர் தங்களுக்கு இடையேயான மின்னஞ்சல் பரிமாற்றத்தைப் பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு உதவும் ஒரு தொழில்நுட்பம்.
மின்னஞ்சலில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகள் என்னென்ன? அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் உங்கள் நண்பருக்கு ஒரு தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. உங்களது நண்பரின் பெயர், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பெயர், சொல்லவேண்டிய தகவல் போன்றவை உங்கள் வசம் தயாராக இருக்கின்றன. இப்போது அந்தத் தகவலை எப்படி நண்பரிடம் கொண்டு சேர்ப்பது?
நீங்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு உங்களிடம் இருக்கும் விவரங்களைத் தெரிவிக்கலாம். அவர் மூலமாக உங்கள் நண்பர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சொல்லப்பட்டு, அத்தகவல் உங்கள் நண்பரைச் சென்றடையும். தகவல் பரிமாற்றத்தில் அனுப்புநர், பெறுநர் தவிர்த்து வேறு சிலரும் இதில் ஈடுபடுகிறார்கள் இல்லையா? ‘இருட்டியதும் அந்த இருநூறு ரூபாயை எடுத்துக்கொண்டு பின்பக்கமாக வரவும்’ என்ற தகவலை எதற்காக நீங்கள் ஊருக்கே சொல்லவேண்டும்? மின்னஞ்சல் அனுப்புவதிலிருந்த பெருங்குறையாக இதனைச் சுட்டிக்காட்ட முடியும்.
பிஜிபி இந்தப் பாதுகாப்பு குறைபாட்டைத்தான் சரிசெய்ய முயல்கிறது. எப்படி? இந்தத் தகவல் பரிமாற்றத்தில் கூடுதலாக இன்னொரு விவரத்தை அது கோருகிறது. என்ன விவரம்? அந்த அடுக்ககத்தில் உங்கள் நண்பர் வசிக்கும் வீட்டு எண். இதைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளுவதன் மூலம் எவரும் (நீங்கள் உட்பட) தாங்கள் அனுப்ப விரும்பும் தகவலைப் பாதுகாப்பாக உங்கள் நண்பரிடம் நேரடியாகச் சேர்க்க முடியும்.
மின்னஞ்சல் முகவரி மற்றும் பிஜிபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் நண்பருக்கென உருவாக்கப்பட்ட சீரற்ற எண்களை (Public Key) பொதுவில் வைப்பதன் மூலம், அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் கவசமிடப்பட்டு யாரும் ஊடுருவிப் படிக்க முடியாமல், அப்படியே படித்தாலும் புரியாத வகையில் பாதுகாப்பாக அனுப்பப்படும்.
இப்போது அடுத்த சிக்கல், தகவலை அனுப்பியது நீங்கள்தான் என்பதை நண்பர் எப்படி உறுதி செய்துகொள்வார்? ஆளாளுக்கு இருநூறு ரூபாய் கேட்டால் அவர் எங்கே போவார் பாவம். உங்களது மின்னஞ்சலும், உருவாக்கப்பட்ட சீரற்ற எண்களும் ‘அந்த இருநூறு ரூபாய்’ நீங்கள் தான் என்பதை உங்கள் நண்பருக்கு உறுதிப்படுத்தும்.
0
எழுத்தாளர் கிளென்னை மீண்டும் தொடர்புகொண்ட அந்த நபர் அவரது கணினியில் பிஜிபி உள்ளீடு செய்யப்பட்டுவிட்டதா என்பதைக் கேட்டு எழுதியிருந்தார். தான் பலமுறை முயன்று பார்த்தும் முடியாமல் போனதையும், தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை நாடி இருப்பதாகவும் கிளென் பதில் மின்னஞ்சல் அனுப்பினார். அடுத்த மின்னஞ்சலில் பிஜிபியை உள்ளீடு செய்வதற்கு உதவும் வழிகாட்டியை அனுப்பி வைத்தார் அந்த மர்ம நபர்.
இதனிடையே கிளென் அப்போது வசித்துவந்த ரியோ டி ஜெனிரோவிலிருந்து அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. அங்கே அவர் பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பெயரில் அரசாங்கம் நிகழ்த்தும் சிவில் உரிமை மீறல்கள் குறித்து ஒரு கருத்தரங்கில் பேசுவதாகத் திட்டம். அமெரிக்கா சென்று இறங்கியதும் அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்து லாரா போய்ட்ராஸ் என்ற ஆவணப்பட இயக்குநரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.
லாரா போய்ட்ராஸ் தனது ஆவணப் படங்களின் மூலம் எதற்கும் அஞ்சாமல் சமூகக் கொடுமைகளை வெளிப்படுத்தி வருபவர். ஈராக் போரில் அமெரிக்கா கட்டவிழ்த்த வன்முறை, ஏமன் நாட்டிற்குப் பயணப்பட்டு ஒசாமா பின்லேடனின் மெய்க்காப்பாளர் மற்றும் அவரது கார் ஓட்டுநரை நேரடியாகச் சந்தித்தது, மக்களின் மீதான என்.எஸ்.ஏவின் கண்காணிப்பு உள்ளிட்டவற்றைத் துணிச்சலாக ஆவணப்படுத்திப் படமெடுத்தவர் லாரா போய்ட்ராஸ். இதற்காக அமெரிக்க விமான நிலையங்களில் பலமுறை அவர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.
அவரது படக்கருவி, மடிக்கணினி, நோட்டு புத்தங்கள் போன்றவை பிடுங்கப்பட்டு அதிலிருந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து மிரட்டல்களுக்கு ஆட்படுவதால் வெளியே செல்வதைக்கூடத் தவிர்த்து வந்தார். தனது படங்களை எந்தவொரு செய்தி நிறுவனத்தின் பின்புலமும் இல்லாமல், எவரின் துணையும் இல்லாமல் ஒற்றை ஆளாக, ஒரு கேமாராவின் துணைகொண்டு ஆவணப்படுத்தியவர்.
அவரே சந்திக்கவேண்டும் என்று கேட்டதும் மறுக்காமல் ஒப்புக்கொண்டார் கிளென். சந்திப்புக்கு ஒரே நிபந்தனைதான், கிளென் தனது செல்போனை ஒன்று தனது அறையிலேயே வைத்து வரவேண்டும், அல்லது சந்திப்பின்போது செல்போன் பேட்டரியைக் கழட்டி வைக்கவேண்டும்.
பொதுவாக ரகசிய சந்திப்புகளில் செல்போனை அணைத்து வைக்கும்படிதானே கோருவார்கள். இது என்ன புதிதாக பேட்டரியை கழட்டச் சொல்வது? என்.எஸ்.ஏ தன்னிடமிருக்கும் அதிநவீன மென்பொருட்களை வைத்து, அணைத்து வைக்கப்பட்டிருக்கும் செல்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றை இயங்கச்செய்து அதன் மூலமாகவும் ஒட்டுக்கேட்க முடியும். அதனால்தான் இந்த ஏற்பாடு.
மறுநாளே அவர்களது சந்திப்பு கிளென் தங்கியிருந்த ஹோட்டலில் நடந்தது. இரண்டு மூன்றுமுறை தாங்கள் அமர்ந்திருந்த மேஜையை மாற்றி, சுற்றி யாரும் தங்களைக் கண்காணிக்கவில்லை என்பதையும், செல்போன் பேட்டரிகள் கழட்டப்பட்டிருப்பதையும் உறுதி செய்துகொண்ட பிறகு சன்னமான குரலில் தனக்கு ஒரு மர்ம நபர் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி வருவதாக கிளென்னிடம் தெரிவித்தார் லாரா போய்ட்ராஸ்.
0
ஒடிஆர் (off the record) என்னும் அரட்டை செயலி, அதில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை மறையாக்கம் செய்து அதன் பாதுகாப்பை உறுதிசெய்ய வல்லது. கிளென்னும் லாராவும் அந்தச் செயலியில் இணைந்து 15 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்திருந்த மர்ம நபரும் அவர்களோடு இணைந்து கொண்டார்.
‘உங்கள் இருவரையும் நேரில் சந்தித்துப் பேசவேண்டும். இது மக்களின் பாதுகாப்பு பற்றியது. உங்களிருவரால் உடனடியாக ஹாங்காங்கிற்கு வர இயலுமா? நாம் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதை அங்கே வைத்து முடிவெடுப்போம்’.
மறுமுனையில் இருப்பவர் யாரென்று தெரியாது. ஒருவேளை எதிரிகள் யாராவது ஆசை வார்த்தைகள் சொல்லி ஏமாற்றலாம். எதை நம்பி ஹாங்காங் வரை செல்வது?
கிளென் உடனடியாக ஒப்புக்கொண்டார். கூடவே தனது சந்தேகத்தையும் நேரடியாகவே மூன்றாம் நபரிடம் கேட்டார். ‘இந்தப் பயணம் எதற்காக? ஒருவேளை உங்களிடம் ஆவணங்கள் ஏதாவது இருந்தால் அதில் சில மாதிரிகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்’. அவர் கேட்டதுதான் தாமதம். 25 ரகசிய ஆவணங்கள் கிளென்னின் மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்தது.
ஹாங்காங்கில் இருந்துகொண்டு கிளென்னையும் லாராவையும் இயக்குவது யார்? அவர் அனுப்பிவைத்த 25 ஆவணங்களில் அப்படி என்னதான் இருந்தது?
(தொடரும்)