வட கரோலினாவில் பிறந்து மேரிலாந்து மாநிலத்தில் வளர்ந்தார் எட்வர்ட் ஸ்நோடன். அப்பாவுக்குக் கடலோரக் காவற்படையில் பணி, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அவர் அந்த வேலையிலிருந்தார். நடுத்தர குடும்பம், கலகக்காரர்களின் வழக்கப்படி ஸ்நோடன் மேல்நிலை பள்ளிப்படிப்பை முடிக்காமல் பாதியிலேயே கைவிட்டார்.
பெரும்பாலான அமெரிக்கர்களைப் போலவே 9/11 தாக்குதலுக்குப் பிறகு, அதிக தேசபக்தி கொண்டவராக மாறினார் ஸ்நோடன். 2004இல் தனது இருபதாவது வயதில் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து தன்னை ஈராக் போரில் ஈடுபடுத்திக் கொண்டார். ‘ஈராக் மக்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்று தருவதற்கான போர்’ என்று அமெரிக்கர்களுக்கு முதலில் சொல்லப்பட்டதை மனமார நம்பினார் ஸ்நோடன்.
ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, போர்ப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தபோதே உண்மை புரிந்தது. ஈராக் மக்களுக்கான சுதந்திரத்தைப் பற்றியல்லாமல், அரேபியர்களை அதிகமாகக் கொல்வது எப்படி என்பதைச் சுற்றியே பேச்சும் பயிற்சியும் அமைந்தன. இரண்டு கால்களிலும் ஏற்பட்ட பலத்த காயங்களின் காரணமாக ராணுவத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஸ்நோடனுக்கு. ஈராக் போரின் உண்மையான நோக்கத்தை நேரில் கண்டதால், மிகுந்த ஏமாற்றத்துடன் ராணுவத்திலிருந்து வெளியேறினார் ஸ்நோடன்.
பள்ளிப்படிப்பை முடிக்காதவர் எனினும், தொழில்நுட்பத்தின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக அதில் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டேயிருந்தார். ஓர் அரசு வேலையில் எப்படியாவது இணைந்து விட வேண்டுமென்பதே ஸ்நோடனின் விருப்பமாக இருந்தது. அதன் காரணமாக மேரிலாந்து பல்கலைக்கழகத்தில், மொழியின் மேம்பட்ட ஆய்வு மையத்தில் பாதுகாப்புத் துறையில் பணியில் இணைந்தார், ஒரு பல்கலைக்கழகத்தில் அவருக்கென்ன வேலை என்ற கேள்வி எழலாம், என்.எஸ்.ஏ ரகசியமாக அங்கே இயங்கிவந்தது.
அந்தக் காலகட்டங்களில் அரசுத் துறைகளில் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை மிக அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக சி.ஐ.ஏவில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப நிபுணராக 2005இல் பணியில் சேர்ந்தார் ஸ்நோடன். திறமையின் காரணமாக அடுத்த ஆண்டே அவரது பணி நிரந்தரம் செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகள் ஜெனிவாவில் உயர் தொழில்நுட்ப மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணராக அந்நாடு முழுவதும் சுற்றி அலைந்து, தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களைச் சரிசெய்து வந்தார்.
உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளின் கணினிகளை ஊடுருவிப் பார்க்கும் வாய்ப்பு அமைந்ததால், பல ரகசியங்களை ஸ்நோடனால் அறிந்துகொள்ள முடிந்தது. ஒருமுறை அமெரிக்கர்களின் பணப் பரிவர்த்தனைகளை ரகசியமாகத் தெரிந்துகொள்வதற்காக சுவிஸ் வங்கி அதிகாரி ஒருவரை சி.ஐ.ஏ தொடர்பு கொண்டது.
அவரோடு நெருங்கிப் பழகுவதற்காக மது விருந்தும் கூட நடத்தப்பட்டது. அது முடிந்த பின்னர் தனது வீட்டிற்குத் திரும்பிய வங்கி அதிகாரியை வழியில் அமெரிக்க போலீஸ் மது அருந்திவிட்டு கார் ஒட்டிய குற்றத்திற்காகக் கைது செய்தனர். விருந்தில் அவரோடு பங்கேற்ற சி.ஐ.ஏ அதிகாரி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய முடியுமா என்று இயன்றவரை முயன்று பார்த்துவிட்டு, பிறகு கழன்று கொண்டார். தனது தேவைக்காகச் சாமானியர்களை மட்டுமல்ல, உயர் பொறுப்பில் இருப்பவர்களையும் சி.ஐ.ஏ எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்று ஸ்நோடன் நேரில் கண்டுணர்ந்த நாட்கள் அவை.
அமெரிக்க அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கணினிகளின் பாதுகாப்பு குறைபாட்டை ஸ்நோடன் பலமுறை எடுத்துச் சொல்லியும் அது மேலதிகாரிகளால் உதாசீனம் செய்யப்பட்டது. ‘இது உன் வேலை அல்ல. இதுபோன்ற முடிவுகளுக்கு வருவதற்கு உண்டான போதுமான தகவல்கள் உன்னிடம் இல்லை, இதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படத் தேவையில்லை’ என எரிச்சலூட்டும் பதில்கள் விதவிதமாக வந்ததே ஒழியே, மேல் மட்டத்திலிருக்கும் யாரும் ஸ்நோடனின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதெல்லாம் சேர்ந்து ஒருவித வெறுப்பு மனநிலையிலிருந்தார் ஸ்நோடன். 2009 வாக்கில் சி.ஐ.ஏவை விட்டு விலகுவது என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அம்முடிவைத் தாற்காலிகமாக ஒத்திவைக்கச் செய்தவை, அப்போது நடந்த அமெரிக்கத் தேர்தலும் அதில் ஒபாமா பெற்ற வெற்றியும்தான். காரணம் அவரது பதவியேற்பின் போது பயங்கரவாதத்தின் மீதான போர்என்ற பெயரில் நிகழ்த்தப்படும் தேசியப் பாதுகாப்பின் அதிகப்படியான துஷ்பிரயோகங்களைக் குறைப்பேன் என்று உறுதியளித்திருந்தார்.
ஒபாமாவின் வார்த்தைகளைத் தனது இறுதி நம்பிக்கையாகக் கொண்டிருந்தார் ஸ்நோடன். ஆனால் அதுவும் மிக விரைவிலேயே நொறுங்கிப்போனது. ஒபாமா, ஏற்கெனவே நடந்த கொண்டிருந்த அத்துமீறல்களைத் தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல், அதை இன்னும் விரிவாக்கினார்.
ஸ்நோடனைப் பொருத்தவரையில் தலைவன் என்பவன் முதலில் செயலாற்றி மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பவனே அன்றி, மற்றவர்கள் செயலாற்றக் காத்திருப்பவன் அல்ல. இனி எந்தவொரு தலைவனுக்காகவும் காத்திருக்கப் போவதில்லை என்பதில் தீர்க்கமாக இருந்தார் ஸ்நோடன். மேலும் அவருக்கு முதலில் சி.ஐ.ஏவைப் பற்றிய ரகசியத் தகவல்களைக் கசிய விடுவதா, அல்லது என்.எஸ்.ஏவைப் பற்றிய ரகசியங்களை பொதுவில் வைப்பதா என்றொரு குழப்பம் இருந்தது.
ஒருவேளை சி.ஐ.ஏ அம்பலப்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் ரகசிய முகவர்களும் தகவல் தருபவர்களும்தான். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் தனி மனிதர்கள் பிரச்னைக்கு உள்ளாவார்கள், அவர்களைக் கைகாட்டிவிட்டு அரசாங்கம் தான் செய்யவேண்டியதைத் தொடர்ந்து செய்யும். இதுவே என்.எஸ்.ஏவின குட்டு வெளிப்பட்டால், முறைகேடான ஓர் அமைப்பின் அட்டூழியங்கள் வெளிப்படும், அரசின் கோரமுகம் அதன் குடிமக்களுக்குத் தெரியவரும். ஸ்நோடன், இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தார்.
2010இல் ஸ்நோடன் மீண்டும் என்.எஸ்.ஏவிற்கு திரும்பினார். அவரை ஜப்பானில் பணியமர்த்தினார்கள்.
0
கார்டியன் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் ஈவனும் ஸ்நோடனை நேரில் சந்தித்துப் பேசினார். ஸ்நோடனின் குழந்தைப் பருவம், அவரது பணி சார்ந்த தகவல்கள், தொழில்நுட்பத்தின் மீதிருந்த ஆர்வம் எனச் சகலத்தையும் அவரோடு நேரடியாக விவாதிக்க முடிந்தது. ஆனால் தன்னையே பணையம் வைத்து, எதிர்கொள்ள இருக்கும் விளைவுகளைத் தெளிவாக அறிந்திருந்தும், எதற்காக இப்படி தகவல்களைக் கசியவிட முன்வர வேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் திருப்தியான ஒரு பதிலை ஸ்நோடனிடமிருந்து கேட்டுப்பெற முடியவில்லை.
பல்வேறு சந்திப்புகளுக்குப் பிறகு ஒருநாள் ஸ்நோடன் அதை கிளென்னுக்கு புரியவைத்தார்.’ஒருவர் எதை நம்பிக் கொண்டிருக்கிறார் என்பதை வைத்து மட்டும் அவரது உண்மையான மதிப்பை அளவிட முடியாது, மாறாக அந்த நம்பிக்கைகளைப் பாதுகாக்க அவர் என்ன செய்கிறார் என்பதே முதன்மையானது. நீங்கள் நம்பும் ஒன்றுக்காகச் செயலாற்றாமல் இருப்பீர்களேயானால், ஒருவேளை நீங்கள் ஒரு பொய்யான மனிதராக இருக்கக்கூடும்’ என்றார் ஸ்நோடன்.
கிரேக்கப் புராணங்களின் மீதும் ஸ்நோடனுக்கு விருப்பம் இருந்தது. சந்திப்புகளின் போது தன்னிடம் தாக்கம் செலுத்திய புத்தகமாக அவர் ஜோசப் காம்ப்பெல்லின் ‘ஆயிரம் முகங்கள் கொண்ட நாயகனை’ குறிப்பிட்டார். மேலும் சிறுவயதில் ஸ்நோடன் விளையாடிய வீடியோ கேம்களில் இருந்து ‘ஒரு சாமானியனுக்கு அதிகாரம் மிக்கவர்களிடமிருந்து அநீதிகள் இழைக்கப்படும். அவன் முன்பு எப்போதுமே இரண்டு வாய்ப்புகள் இருக்கும். ஒன்று சக்தி வாய்ந்தவர்களுக்குப் பயந்து ஓடுவது, இரண்டாவது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்குப் போரிடுவது. நாயகன் எப்போதும் இரண்டாவது வாய்ப்பையே தேர்ந்தெடுப்பான்’ என்ற பாடத்தைத் தான் ஒருபோதும் கற்கத் தவறியதில்லை என்று கிளென்னிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
0
ஜப்பானில் பணியிலிருந்த ஸ்நோடன், 2011இல் மேரிலாந்திற்கு 2,00,000 டாலர்கள் வருடச் சம்பளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அமெரிக்காவின் அனைத்து பெரிய தனியார் நிறுவனங்களிடமும் கைகோர்த்த என்.எஸ்.ஏ, மக்களின் தனியுரிமைகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டது. ஒரு கட்டத்தில் என்.எஸ்.ஏவிற்கு தெரியாமல் அமெரிக்காவில் எவருமே ஒரு மின்னணுப் பரிவர்த்தனையிலும் ஈடுபட முடியாது என்னும் சூழல் நிலவ தொடங்கியது. இனியும் பொறுத்து பயனில்லை என்பதை உணர்ந்து தீர்க்கமாக முடிவெடுத்தார் ஸ்நோடன்.
உலகத்தின் முன்பு எந்த மாதிரியான ஆவணங்களை வைக்கவேண்டும் என்பதை முடிவுசெய்து முதலில் அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினார், அரசுத்துறை கணினிகளிலிருந்து தேவையானவற்றைத் தரவிறக்கம் செய்துகொண்டார்.அவர் அப்போது வகித்துவந்த பதவியிலிருந்து சில ஆவணங்களை அணுக முடியாத நிலையிருந்தது. அதனால் தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு ஹவாய் தீவில் இயங்கிவரும் பூஸ் ஆலன் ஹாமில்ட்டன் என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த தனியார் பாதுகாப்பு ஒப்பந்ததார நிறுவனத்திடம் வேலைக்காக விண்ணப்பித்தார்.
2013இல் முன்னாள் அரசுத்துறை அதிகாரிகள் அதிகம் பணியிலிருந்த அந்நிறுவனத்தில் ஸ்நோடனும் இணைந்தார். அவரது கணக்குப்படி, என்.எஸ்.ஏ ஆடிய ஆட்டங்களின் சாட்சியமாக நிறைய ஆவணங்கள் அந்நிறுவனத்தில் குவிந்து கிடந்தன, மக்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டார் ஸ்நோடன்.
மே 2013, வலிப்பு நோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக என்று சொல்லி இரண்டு வாரங்கள் விடுப்பு எடுத்து, அதுவரை தான் சேகரித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் நான்கு லேப்டாப்களுடன் ஹாங்காங்கிற்கு விமானம் ஏறினார் ஸ்நோடன்.
0
ஸ்நோடனிடம் ‘ஒருவேளை நீங்கள் அமெரிக்காவிடம் மாட்டிக்கொண்டால்?’ என்று கேட்டார் கிளென்.
ஸ்நோடன் ‘உளவுச் சட்டத்தை நான் மீறியதாகச் சொல்வார்கள். கடுமையான குற்றங்களைச் செய்தவனாகவும், அமெரிக்காவின் எதிரியாகவும் பார்க்கப்படுவேன். எனது கடந்த காலங்களில் நிகழ்ந்தவற்றைத் தோண்டியெடுத்து, தேவைப்பட்டால் அதை ஊதி, பெரிதாக்கி, மாற்றம் செய்து இவன் தேச பாதுகாப்புக்கு எதிரானவன் என்றும் அவர்கள் சொல்லக்கூடும். சிறைக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை, ஒருவேளை எனது செயல்களுக்கு எதிர்வினையாக அது நடக்குமானால், இந்த அரசாங்கம் எனக்கு எதிராகச் செய்யவிருக்கும் எதையும் சகித்துக்கொண்டு என்னால் சிறையில் வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஒருபோதும் எனக்குத் தெரிந்ததை உலகிற்குச் சொல்லாமல் என்னால் உயிர்வாழ முடியாது’ என்று பதிலளித்தார்.
தான் சேகரித்த ஆவணங்கள் வெறுமனே இணையத்தில் கசிவதை விரும்பவில்லை ஸ்நோடன். அதற்காகவே பத்திரிக்கையாளர்களை ஹாங்காங் வரைக்கும் வரவழைத்திருந்தார். முதல் ஒருவாரத்திற்கு ஸ்நோடனின் அடையாளங்களை மறைத்து கட்டுரைகளை எழுதி வெளியிட முடிவு செய்தனர்.
ஜூன் 6, 2013. ‘தினமும் மில்லியன் கணக்கில் வெரிசோன் வாடிக்கையாளர்களின் தொலைப்பேசி பதிவுகளை என்.எஸ்.ஏ சேகரிக்கிறது’ என்ற தலைப்புச் செய்தியோடு வெளிவந்தது தி கார்டியன்.
அமெரிக்கா கொந்தளித்தது.
(தொடரும்)