Skip to content
Home » சாமானியர்களின் போர் #18 – என் பெயர் எட்வர்ட் ஸ்நோடன்

சாமானியர்களின் போர் #18 – என் பெயர் எட்வர்ட் ஸ்நோடன்

எட்வர்ட் ஸ்நோடன்

கார்டியனில் வெளியான கட்டுரை மிகப்பெரும் தாக்கத்தை அமெரிக்க மக்களிடையே ஏற்படுத்தியது. சி.என்.என், என்.பி.சி போன்ற பல தொலைக்காட்சி சேனல்களும் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விவாதப் பொருளாக்கின. கட்டுரையை எழுதி வெளியிட்ட கிளென், ஹாங்காங்கில் இருந்தபடியே அனைத்து சேனல்களுக்கும் பேட்டியளித்தார். இருப்பினும் இதற்கெல்லாம் காரணகர்த்தா யார் என்பது மட்டும் அப்போது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா எப்போதும் போலத் தனது ‘சந்தைக்கு போகணும், ஆத்தா…’ ரக பாடல்களையே இம்முறையும் ஒலிபரப்பியது. வெளியான செய்திக்கு எதிர்வினையாக ‘தேசத்தைத் தீவிரவாதிகளிடமிருந்து காக்கவும், பாதுகாப்பான ஒரு வாழ்விடத்தை மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்காகவும்’ என இரண்டு பதில்களை முன்வைத்தது வெள்ளை மாளிகை. பெயர் சொல்ல விரும்பாத அமெரிக்க செனட்டர் ஒருவர் வெரிசோனிடமிருந்து மட்டுமல்லாமல், முதன்மையான அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்தும் ஆவணங்களை அரசு கேட்டுப் பெற்றிருந்ததை ஒப்புக்கொண்டார்.

ஸ்நோடன் தனது அறையிலிருந்த தொலைக்காட்சியின் மூலம் நடந்தவற்றை உடனுக்குடன் தெரிந்துகொண்டார். அவரைச் சந்திக்கச் சென்ற கிளென்னிடம் அவர் கேட்ட முதல் கேள்வி ‘அடுத்தது என்ன?’

0

சொந்த நாட்டு மக்களின் ரகசியங்களை ஊடுருவிப் பார்ப்பதைக் குறிக்க ‘ப்ரிஸம்’ என்ற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தியது என்.எஸ்.ஏ. அதன் செயல்பாடுகளை விளக்க ஒரு பவர்பாயிண்ட் ஃபைலையும் உருவாக்கியிருந்தது.

அதன்படி மைக்ரோசாப்ட், கூகுள், யாகூ, பேஸ்புக், யூடியூப், ஸ்கைப் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவே மக்களின் தகவல்கள் பெறப்பட்டன. இங்கே தகவல்கள் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? ‘அடுத்த வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ்’ என்பதுதான் நம்மைப் பொருத்தவரை தகவல். ஆனால் என்.எஸ்.ஏவிற்கு?

மின்னஞ்சல், குரல்வழி மற்றும் காணொளி அரட்டை, காணொளிகள், புகைப்படங்கள், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுகள், பரிமாறிக் கொள்ளப்படும் கோப்புகள், வீடியோ கான்பரன்சிங், சமூக வலைத்தள கணக்கு விவரங்கள் போன்றவைதான் என்.எஸ்.ஏவிற்கு தகவல்கள். இணையத்தின் மூலம் சதா ஒருவரின் பின்னங்கழுத்தில் மூச்சுவிடும் தொலைவுக்கு, கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கரையும் பின்தொடர்ந்திருந்தது என்.எஸ்.ஏ.

தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு சேர்ந்து ஒட்டுக்கேட்பில் ஈடுபட்டதற்கும், ‘ப்ரிஸம்’ திட்டத்திற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. இந்தத் திட்டத்தின் மூலம் தன்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும், அதன் குடிகளையும் சேர்த்தே வேவு பார்த்திருக்கிறது அமெரிக்கா. பேஸ்புக்கை, ஸ்கைப்பை, யூடியூபை அமெரிக்கர்கள் மட்டுமா பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்? உங்கள் பாஸுக்குத் தெரியாமல் வேறொரு நிறுவனத்திற்கு வாய்ப்பு வேண்டி விண்ணப்பித்ததும், முன்னாள் காதலிக்கு அனுப்பிய ‘ஹாய்’ மெசேஜை அழித்ததும் யாருக்கும் தெரியாது என்றா நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

7 ஜூன் 2013. ‘ப்ரிஸம்’ குறித்த கட்டுரையை அம்பலப்படுத்தியது கார்டியன். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சொல்லிவைத்தது போல ஒற்றைக்குரலில் தகவல்களைத் தாங்கள் எவரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை என்று மறுத்தன.

ஒருநாளோடு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த விவகாரம், அடுத்தடுத்த தொடர் செய்திகளால் மேலும் முக்கியத்துவம் பெற்றது.

மறுபக்கம் அமெரிக்கா தனது தேடலைத் தொடங்கியது.

0

கிளென் குழுவினர் ஹாங்காங்கிற்கு வந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தன. அவர்களை அவசரமாகத் தனது அறைக்கு அழைத்தார் ஸ்நோடன். இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்புச் சாதனமொன்றைத் தனது நீண்டநாள் தோழி வசிக்கும் ஹவாய் வீட்டில் முன்பு ஒருமுறை நிறுவியிருந்தார் ஸ்நோடன். அவரைத் தேடி என்.எஸ்.ஏவை சேர்ந்த இருவர் அந்த வீட்டுக்கு வந்து சென்றிருப்பது அந்தச் சாதனத்தின் மூலம் தெரியவந்தது.

கார்டியன் வெளியிட்ட கட்டுரைகளுக்குப் பின்னிருப்பது யாரென்பதை என்.எஸ்.ஏ கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தார் ஸ்நோடன். ஆனால் கிளென் அதை நம்பவில்லை. முறையான எந்தத் தகவலும் தெரிவிக்காமல் நீண்டநாள் விடுப்பில் இருப்போரைத் தேடிவரும் வழக்கமான ஒரு நடைமுறைதான் என்று ஸ்நோடனைச் சமாதானப்படுத்த முயன்றார்.

அரசு, எஃப்.பி.ஐ, ஊடகங்கள் என இவற்றில் ஏதோவொன்று ஸ்நோடனை கண்டறிந்து உலகிற்குச் சொல்வதைக் காட்டிலும், அவர் தாமாகவே முன்வந்து தன்னை அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமென்பதே திட்டமாக இருந்தது. ‘ப்ரிஸம்’ கட்டுரைக்குப் பிறகு, நவம்பர் 2012இல் ஜனாதிபதி ஒபாமா கையொப்பமிட்ட ஓர் உயர்மட்ட ரகசியத் தலைமை கட்டளையை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் உலகெங்கிலும் தொடர்ச்சியாக சைபர் தாக்குதல்களுக்குத் தயாராகுமாறு பெண்டகன் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது பதிவாகி இருந்தது.

அதன்பிறகு ஒரு நாளைக்கு என்.எஸ்.ஏ எத்தனை அமெரிக்கர்களை உளவு பார்க்கிறது என்பதன் புள்ளிவிவரங்களைக் கொண்டிருந்த ‘எல்லையற்ற தகவல் தருபவர்’ எனப் பொருள்தரும் ஒரு போல்டரை முன்வைத்து மற்றுமொரு கட்டுரையும் வெளியிடப்பட்டது.

இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோதே, மறுபக்கம் லாரா தனது ஆவணப்பட வேலைகளை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தார். அதில் ஸ்நோடன் தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்டு ஏன், எதற்காக, எப்படி என்பதிலிருந்து தொடங்கி தனது குழந்தைப்பருவம் முதல் எதிர்காலம் வரைக்கும் விரிவாகவே பேசியிருந்தார். ஈவனும் கிளென்னும் சேர்ந்து ஸ்நோடனை அறிமுகப்படுத்தி பத்திரிக்கைகளுக்கு ஒரு கட்டுரையைத் தயார் செய்தனர். விடிந்தால் என்.எஸ்.ஏவின் அடாவடிகளைப் போட்டு உடைத்த அந்த மர்ம நபர் யாரென்பது உலகிற்குத் தெரியவரும்.

9 ஜூன் 2013. அமெரிக்கர்கள் எட்வர்ட் ஸ்நோடனை அறிந்துகொண்டனர். பிராட்லி (செல்சியா) மேனிங்கிற்காக, ஜூலியன் அசாஞ்சேவிற்காகக் குரல் கொடுத்த டேனியல் எல்ஸ்பெர்க் இம்முறை ஸ்நோடனுக்காகவும் பேசினார். ‘எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்டிருக்கும் என்.எஸ்.ஏ குறித்த இந்த ஆவணங்கள் அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகமுக்கிய ஆவண கசிவுகளில் ஒன்று, 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பெண்டகன் பேப்பர்ஸை விடவும் முக்கியத்துவம் பெற்றவை இவை’ என கார்டியனில் எழுதினார் டானியல் எல்ஸ்பெர்க்.

0

கிளென்னின் நீண்டநாள் வாசகர் ஒருவர் ஹாங்காங்கில் இருந்தார். அவர் ஸ்நோடனுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்ய முன்வந்தார். காரணம், அப்போது அமெரிக்காவின் ஒரே தேவையாக இருந்தவர் ஸ்நோடன். என்ன விலைக் கொடுத்தாலாவது அவரைப் பிடித்துத் தண்டித்தாக வேண்டும். இப்படியே ஒவ்வொருவராக ஆவணங்களைக் கசிய விட்டுக்கொண்டே இருந்தால், அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்ற கவலை அமெரிக்காவுக்கு.

கிளென் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவரது வாசகரால் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு வழக்கறிஞர்கள் வந்து சேர்ந்தனர். ஆனால் ஹோட்டலுக்கு உள்ளே கூட நுழைய முடியாத அளவுக்கு அங்கே ஊடகங்கள் கூட்டமாகக் காத்திருந்தன. அவை கிளென்னின் மூலம் எப்படியாவது ஸ்நோடனை ஹாங்காங்கில் கண்டுபிடித்து, அவரது ஒரு புகைப்படத்தையாவது தங்களது பத்திரிக்கைகளில், சேனல்களில் வெளியிட்டு விடவேண்டுமென்ற முனைப்பில் கேமராவோடு தயாராக இருந்தன.

உலகெங்கிலும் வைரலாகிக் கொண்டிருந்த ஆவணப்படத்தை இயக்கிய லாரா, ஸ்நோடன் தங்கியிருந்த அதே ஹோட்டலில்தான் இருந்தார். எந்த நேரத்திலும் ஸ்நோடன் செய்தியாளர்களின் கண்களில் சிக்கலாம் என்ற சூழல் அப்போது நிலவிவந்தது. அவரோ எப்படியாவது தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து தப்பித்துவிட வேண்டுமென்கிற தவிப்பிலிருந்தார்.

கிளென் ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர்கள் ஸ்நோடனிடம் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். இப்போது பிரச்னையே, கழுகு போல வட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஊடகங்களின் கண்களிலிருந்து தப்புவது எப்படி என்பதுதான். ஸ்நோடன் தனது உருவத்தை மாற்றுவதற்கு உண்டான செயல்களில் இறங்கினார்.

இப்போது கிளென் தன்னோடு இருக்கும் இரண்டு வழக்கறிஞர்களையும் ஸ்நோடன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதேநேரம் செய்தியாளர்கள் அவர்களைக் கண்டுபிடித்துப் பின்தொடர்ந்து போனால் முடிந்தது கதை.

தனக்காக ஹோட்டல் அடித்தளத்தில் காத்திருக்கும் ஊடகங்களைச் சந்திப்பது, அதன்மூலம் அவர்களது கவனத்தை அரைமணி நேரம் கவர்ந்து இரண்டு வழக்கறிஞர்களையும் தப்பவைப்பது என்று ஒரு முடிவுக்கு வந்தார் கிளென். திட்டமிட்டபடி அவர்கள் தப்பித்துச் சென்று மிகச்சரியாக ஸ்நோடனை சந்தித்து, அவரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தனது பேட்டியை முடித்துக்கொண்டு முதல் வேலையாக வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்டார் கிளென், ‘ஸ்நோடன் பாதுகாப்பாக இருக்கிறார், இப்போதைக்குத் தொலைப்பேசியில் வேறு எதுவும் சொல்ல முடியாது’ என்று அவர்கள் முடித்துக்கொண்டனர். அவர்களது திட்டப்படி அமெரிக்காவிடமிருந்து அவரைக் காக்க ஐநாவிடம் உதவிக் கோரப்படும், அல்லது பாதுகாப்பான ஓரிடத்தில் அவர் தங்கவைக்கப்படுவார்.

கிளென் தன் அறைக்குத் திரும்பி ஸ்நோடனுடன் வழக்கமாகத் தொடர்புகொள்ளும் செயலியில் காத்துக்கொண்டிருந்தார், சிலமணி நேரங்களில் ஸ்நோடன் அதில் இணைந்தார். அவரிடமிருந்து ‘நான் நலமாக ஓரிடத்தில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறேன். இங்கே இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப்போகிறேன் என்பதும், இவ்விடம் எவ்வளவு பாதுகாப்பானது என்பதும் தெரியாது. இணையத்தில் நிறைய நேரம் செலவிடமுடியாத சூழல், ஆகவே பிறகு சந்திப்போம்’ என்று தகவல் வந்தது.

0

தொடர்ந்து அமெரிக்கத் தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் கிளென். ஆனால் அதன் செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் தொனியே, ஸ்நோடனின் அடையாளம் வெளிப்பட்ட பிறகு தலைகீழாக மாறியிருந்தது. அவர்கள் அமெரிக்க அரசுக்குத் தங்களது விசுவாசத்தைக் காட்டும் விதத்தில் கேள்விகள் கேட்டார்கள்.

மேலும் ஹாங்காங்கில் இருந்து செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்று அவருக்குத் தோன்றவே, தான் முன்பு வசித்துவந்த ரியோ டி ஜெனிரியோவுக்கே விமானம் ஏறினார். தப்பித் தவறியும் கூட அமெரிக்காப் பக்கம் சென்றுவிடக் கூடாதென்று துபாய் வழியாகத் தனது ஊருக்குப் பயணமானார் கிளென். அவருக்கு வந்த வேலை முடிந்துவிட்டது, ஸ்நோடனுக்கு இனிதான் ஆரம்பமே.

விக்கிலீக்ஸ் தலைவலியே இன்னும் முடிந்தபாடு இல்லை அமெரிக்காவுக்கு, இதில் ஸ்நோடன் வேறு. என்ன செய்தது அமெரிக்கா? அதற்கு எப்படி எதிர்வினையாற்றினார் ஸ்நோடன்?

(தொடரும்)

பகிர:
ரிஷிகேஷ் ராகவேந்திரன்

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *