Skip to content
Home » சாமானியர்களின் போர் #19 – உளவு பார்க்கும் கலை

சாமானியர்களின் போர் #19 – உளவு பார்க்கும் கலை

உளவு பார்க்கும் கலை

அரசு நிறுவனமாக இருந்தபோதிலும் அதிகளவில் தனியார் துறையோடு கூட்டு வைத்தே தனது காரியங்களை நிறைவேற்றி வந்தது என்.எஸ்.ஏ. அதில் முழுநேரமாக 30,000 பேரும், தனியார் நிறுவனங்களிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் மேலும் 60,000 பேரும் வேலை செய்துவந்தார்கள். ஸ்நோடனுமே ஆரம்பக் காலங்களில் டெல் நிறுவனத்தின் சார்பாகத்தான் என்.எஸ்.ஏவோடு இணைந்திருந்தார்.

அமெரிக்கத் தேசிய புலனாய்வுக்கு என ஒதுக்கப்படும் நிதியில் 70 சதவீதம் என்.எஸ்.ஏவுக்கு உதவும் தனியார் நிறுவனங்களுக்காகத்தான் செலவிடப்பட்டது. அவற்றில் உலகின் மிகப்பெரிய இணைய மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பெரும்பாலான தகவல்தொடர்பு தரவுகளைக் கையாளும் நிறுவனங்களும் அடங்கும். என்.எஸ்.ஏவில் மிக ரகசியமாக இயங்கிவந்த முக்கிய ஆதாரங்களின் செயல்பாட்டு அலகுதான் (சுருக்கமாக எஸ்.எஸ்.ஓ) தனியார் பெருநிறுவனங்களோடு கொண்டிருந்த நட்பை நிர்வகித்து வந்தது. அதன்மூலம் பிளார்னே, ஃபேர்வியூ, ஓக்ஸ்டார், ஸ்டார்ம்ப்ரூ என நான்கு திட்டங்களை முன்னெடுத்தது எஸ்.எஸ்.ஓ.

பிளார்னே

ஏடி&டி நிறுவனத்தோடு நீண்டகால உறவைப் பேணுவதுதான் இத்திட்டத்தின் பிரதான நோக்கம். அதன்மூலம் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் மற்றும் உலகம் முழுக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க் சாதனங்கள் போன்றவற்றை ஊடுருவி தரவுகளைப் பெறமுடியும். பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, வெனிசுலா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் உள்ளிட்டவையே இந்தத் திட்டத்தின் இலக்கு.

ஃபேர்வியூ

பிளார்னே போலவே குறிப்பிட்ட ஒரு தொலைத்தொடர்பு பெருநிறுவனத்தோடுதான் ஃபேர்வியூவும் இயங்கிவந்தது. பெயர் தெரியாத அந்த நிறுவனத்திடமிருந்து 75% தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் அதுதொடர்பான தரவுகளைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டிருந்தது என்.எஸ்.ஏ. இந்தத் திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் மட்டும் உலகம் முழுக்க 20 கோடி தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டிருந்தது என்.எஸ்.ஏ.

ஓக்ஸ்டார்

என்.எஸ்.ஏ ஆவணங்களில் சில்வர்சிஃபிர் என்ற குறியீட்டு சொல்மூலம் குறிப்பிடப்பட்டு இருக்கும் மற்றுமொரு தனியார் நிறுவனத்தோடு இணைந்து, பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளின் தகவல் தொடர்புகளை ஊடுருவுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஓக்ஸ்டார்.

ஸ்டார்ம்ப்ரூ

மற்ற திட்டங்களிலிருந்து ஸ்டார்ம்ப்ரூ சிறிது மாறுபட்டது. இந்தத் திட்டம் எந்தவொரு தனியார் நிறுவனத்தோடும் கூட்டுச் சேராது. மாறாக அமெரிக்கர்களின் இணைய மற்றும் தொலைப்பேசி அழைப்புகளைச் சேகரித்து, எப்.பி.ஐ இந்தத் திட்டத்திற்கு வழங்கும்.

0

பயனர்களின் தரவுகளை என்.எஸ்.ஏவோடு பகிர்ந்துகொண்ட குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தன கூகுளும் பேஸ்புக்கும். முறையான வாரண்ட் வைத்திருந்த காரணத்தால்தான் அவை பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று சாதித்தன. ஆனால் அந்நிறுவனங்கள் சொல்வது பொய்யெனப் பல்வேறு காரணங்களால் நிரூபணம் ஆனது. முதலில் யாகூ நிறுவனம் நீதிமன்றத்தில் ‘என்.எஸ்.ஏ தங்களை ப்ரிஸம் திட்டத்தில் சேரச்சொல்லி வற்புறுத்தியது’ என்று சொன்னது புயலைக் கிளப்பியது.

இரண்டாவதாக என்.எஸ்.ஏவின் பணி நிலையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்து செய்தி வெளியிட்டது வாஷிங்டன் போஸ்ட். அதன்படி உலகின் எந்தவொரு இணைய நிறுவனத்தின் கணினியையும் என்.எஸ்.ஏவால் அதன் பணியாளர்களுக்குக்கூடத் தெரியாமல் ஊடுருவி தங்களுக்குத் தேவையான தரவுகளைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இறுதியாக என்.எஸ்.ஏவோடு கைகோர்த்த நிறுவனங்கள் தப்பிக்கப் பயன்படுத்திய வார்த்தைகளே அவர்களுக்கு எதிராகத் திரும்பின. பேஸ்புக் தன்னைக் காத்துக்கொள்ள ‘நேரடி தொடர்பு எதுவும் வழங்கப்படவில்லை’ என்றது. அப்படியென்றால் ‘மறைமுக தொடர்பு வழங்கப்பட்டதா?’ என்ற கேள்வி எழுந்தது. கூகுள் ஒருபடி மேலே போய் ‘நாங்கள் என்.எஸ்.ஏவுக்காக எந்தவொரு பின் வாசலையும் உருவாக்கவில்லை’ என்று வாதிட்டது.

இதிலிருந்து ஒரு விஷயம் இணையவாசிகளுக்குத் தெளிவாகியது. என்.எஸ்.ஏவுக்குத் தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தகவல் தெரிவிக்காமல், சமயங்களில் அவர்களுக்குத் தெரியாமலேகூடத் தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு அந்நிறுவனங்கள் எந்தவொரு மறுப்பையும், எதிர்ப்பையும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. எல்லாம் தேசப்பற்று, தேசப்பாதுகாப்பு போன்ற சொற்களால் மூடி மறைக்கப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தனது தேசத்திற்கு உண்மையாக இருந்த குடிமக்கள் தான், அவர்களது தனியுரிமை காற்றில் விடப்பட்டது.

0

மைக்ரோசாப்ட் நிறுவனத்தோடு இருந்த நட்பை விரிவாகத் தனது ஆவணங்களில் பதிவு செய்திருந்தது என்.எஸ்.ஏ. விண்டோஸ் இயங்குதளம் மட்டுமல்லாமல் ஸ்கைப், ஸ்கைட்ரைவ், அவுட்லுக் டாட்காம் என பல்வேறு இணையச் சேவைகளையும் வழங்கிவந்தது அந்நிறுவனம்.

ஸ்கைட்ரைவ் கிளவுட் சேமிப்பைச் சாத்தியமாக்குகிறது. அதன்மூலம் பயனர்கள் தங்களது கோப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து, உலகின் இணைய வசதி இருக்கும் எந்தவொரு கணினியிலிருந்தும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். உலகம் முழுக்க ஸ்கைட்ரைவுக்கு 250 மில்லியன் பயனர்கள் இருக்கிறார்கள். முக்கியமானதென்றும், ரகசியமென்றும் கருதுவதை மக்கள் உடனடியாக க்ளவுடில் சேமித்து வைக்கிறார்கள், அதன் பாதுகாப்பு கருதி.

மேலும் மைக்ரோசாப்ட் தனது பயனர்களுக்கு ‘க்ளவுடில் உங்கள் தனிப்பட்ட தரவுகளை யார் அணுகலாம் அல்லது அணுகக்கூடாது என்பது குறித்த முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்கே வழங்குகிறோம்’ என்று உறுதியளித்தது. இதை நம்பி பலரும் தங்களது தனிப்பட்ட தரவுகளை அதில் பதிவேற்றினர். ஆனால் மைக்ரோசாப்ட் இந்தத் தரவுகளை எளிதாக ஊடுருவிப் பார்ப்பதற்காக மாதக் கணக்கில் அமெரிக்க அரசோடு இணைந்து பணியாற்றியதை விரிவாகத் தனது ஆவணங்களில் பதிவு செய்திருந்தது என்.எஸ்.ஏ.

இணைய அடிப்படையிலான தொலைப்பேசி மற்றும் அரட்டை சேவை நிறுவனமான ஸ்கைப்பை 2011இல் விலைக்கு வாங்கியது மைக்ரோசாப்ட். அப்போது அந்தச் சேவைக்கு 663 மில்லியன் பயனர்கள் இருந்தனர். ஒரு கையில் ‘உங்கள் தனியுரிமை மற்றும் உங்களது தனிப்பட்ட தரவுகள், இணையப் போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு உள்ளடக்கத்தின் ரகசியத்தன்மையை நாங்கள் மதிக்கிறோம்’ என்று சத்தியம் செய்துகொண்டே, மறுகையில் சுடச்சுடப் பயனர்களின் அத்தனைத் தரவுகளையும் அரசாங்கத்தோடு பகிர்ந்துகொண்டது ஸ்கைப்.

2012இல் தனது மின்னஞ்சல் போர்டலை மேம்படுத்த முடிவெடுத்தது மைக்ரோசாப்ட், இதனால் அவுட்லுக் மற்றும் ஹாட்மெயில் இணைக்கப்பட்டு ஒரே கணக்காக நிர்வகிக்கப்படும். இந்தத் திட்டம் குறித்து பயனர்களுக்கு விளக்கிய அந்நிறுவனம் இனி அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் அனைத்தும் மறையாக்கம் செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அறிவித்தது. மறையாக்கம் செய்யப்பட்ட மின்னஞ்சல்களை ஊடுருவிப் படிக்க இயலாது இல்லையா? அப்படியே படித்தாலும் ஒன்றும் விளங்காது. என்.எஸ்.ஏவுக்கு கை நடுங்க ஆரம்பித்தது.

கொஞ்ச நாளைக்குத்தான் இந்தச் சிக்கல். பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாததாகச் சொல்லப்பட்டுவந்த மறையாக்கத்தை இல்லாமலாக்கி, அதன்மூலம் என்.எஸ்.ஏவுக்கு உதவுவதற்கு உண்டான வழிமுறைகளை உருவாக்கியது மைக்ரோசாப்ட்.

முதன்மை மின்னஞ்சலுக்கு மாற்றுப்பெயர் வைக்கும் ஒரு வசதியை அப்போது வழங்கிக்கொண்டிருந்தது அவுட்லுக். உதாரணத்துக்கு manikandan@outlook.com என்ற முகவரியோடு mk@outlook.com என்ற முகவரியையும் இணைத்துக்கொள்ளலாம். நிறுவனங்களுக்குப் பெரிதும் உதவும் ஒரு வசதி இது. ஒருவேளை இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கினால் தாங்கள் நினைக்கும்படி மின்னஞ்சல் கணக்குகளில் ஊடுருவ முடியாத ‘வருத்தத்தை’ மைக்ரோசாப்ட்டோடு பகிர்ந்துகொண்டது என்.எஸ்.ஏ. அந்தக் குறையையும் தாயுள்ளதோடு நிவர்த்தி செய்து தந்தது மைக்ரோசாப்ட்.

0

அனுமதியின்றி ஒருவரது கணினிக்குள் நுழைந்து அதைத் தொடர்ந்து கண்காணிப்புக்கு உள்ளாக்குவதற்கு என்றே உருவாக்கப்படுவது மால்வேர் எனப்படும் கணினி வைரஸ். தனியார் நிறுவனங்களோடு சேர்ந்து வேவு பார்த்தது போதாதென்று, மால்வேர்களை உருவாக்கி அதைக் கிட்டத்தட்ட உலகெங்கிலும் உள்ள ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான கணினிகளுக்கு அனுப்பி, அதன்மூலம் அந்தக் கணினிகளின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசம் கொண்டுவந்தது என்.எஸ்.ஏ.

இப்படி ஒரு தாக்குதல் தங்கள் கணினியின் மீது ஏவப்பட்டிருப்பது சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கேகூடப் பெரும்பாலான சமயங்களில் தெரியாது. ‘குவாண்டம் இன்சர்ஷன்’ என்ற பெயர்கொண்ட அந்த மால்வேர், இணையத்தோடு இணைக்கப்படாத கணினிகளையும் தாக்கும் வல்லமை கொண்டது.

இதன்மூலம் கணினியில் தட்டச்சு செய்யப்படும் அனைத்தும், அதாவது விசைப்பலகையில் அழுத்தப்படும் ஒவ்வொரு எழுத்தும் நகலெடுக்கப்பட்டு என்.எஸ்.ஏவுக்கு அனுப்பப்படும்.

0

உலக நாடுகளை வேவு பார்க்க அவற்றை மூன்று அடுக்குகளாகப் பிரித்துக்கொண்டது என்.எஸ்.ஏ. முதல் அடுக்கில் அமெரிக்காவின் இந்த வேவு திட்டத்தின் கூட்டுக்காரர்களாகவே இயங்கிவந்த நட்புநாடுகள் இடம்பெற்றன. அவற்றைக் குறிக்க ஐந்து கண்கள் குழு என்ற சொல்லைப் பயன்படுத்தியது என்.எஸ்.ஏ.

அமெரிக்கா தவிர்த்து மற்ற நான்கு கண்களாக ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இருந்தன. முதல் அடுக்கிலிருந்த இந்த நாடுகள் அமெரிக்காவோடு இணைந்து வேவு பார்த்தன. குறிப்பிட்ட நாடுகளிடமிருந்து வேண்டுகோள் வந்தால் மட்டும் அவற்றின் மீதும் தனது வேவு கணைகளை ஏவும் என்.எஸ்.ஏ.

இரண்டாவது அடுக்கிலிருந்த நாடுகளில் குறிப்பிட்ட கண்காணிப்பு திட்டங்களுக்காக மட்டும் தேவை அடிப்படையில் ஒட்டுக் கேட்கப்பட்டது. இந்த அடுக்கில் இஸ்ரேல், ஜெர்மனி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றிருந்தன. மூன்றாவது அடுக்கில் உள்ள நாடுகளுக்கு என்.எஸ்.ஏவின் இந்தத் திட்டம் குறித்த எந்தவொரு அறிமுகமும் இருக்காது, ஒருவேளை தெரிந்திருந்தாலும் தங்கள் நாடுகளை வேவு பார்க்க அவர்கள் அனுமதிப்பதில்லை. சீனா, ரஷ்யா, ஈரான், வெனிசுலா, சிரியா உள்ளிட்ட நாடுகள் பட்டியலிலிருந்தன.

உலக நாடுகளை வேவு பார்ப்பதன் மூலம் இரண்டு விதமான தரவுகளைச் சேகரிக்கிறது என்.எஸ்.ஏ. ஒன்று உள்ளடக்கம், மற்றொன்று மெட்டா டேட்டா. ‘வணக்கம் ஐயா, இன்று நான் நிம்மதியாகவும் மன மகிழ்வோடும் இருக்கிறேன். மேற்கூறிய காரணங்களால் இன்று என்னால் பணிக்கு வர இயலாது. தயவுசெய்து விடுப்பு தந்து உதவவும்’ என்று நீங்கள் அனுப்பும் இந்த மின்னஞ்சல் தான் உள்ளடக்கம்.

‘காலை 7:30 மணிக்கு, குமார் தனது ஜிமெயில் கணக்கிலிருந்து தனது மேலாளர் ராஜா என்பவருக்கு விடுப்பு வேண்டி விண்ணப்பம் என்ற பொருளில் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். சேலத்துக்கும் தர்மபுரிக்கும் இடையே தீவட்டிப்பட்டி என்ற இடத்திலிருந்து குமார் தனது ரெட்மி 8A திறன்பேசியைப் பயன்படுத்தி அனுப்பிய மின்னஞ்சலை, சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே சாம்சங் கேலக்சியில் ராஜா திறந்து படித்தார்’ என்பதே மெட்டா டேட்டா.

மெட்டா டேட்டாவில் உள்ளடக்கம் இருக்காது, ஆனால் உள்ளடக்கம் குறித்த அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றிருக்கும். ஸ்நோடன் என்.எஸ்.ஏ ஆவணங்களை வெளியிட்டதும், அதை எதிர்கொள்ள ‘உள்ளடக்கங்களா திருடப்பட்டுவிட்டது? வெறும் மெட்டா டேட்டா தானே சேகரிக்கப்பட்டு இருக்கிறது? ஓர் அரசாங்கம் தனது பாதுகாப்புக்காக இதைக் கூடவா செய்யக்கூடாது?’ என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. மேம்போக்காகப் பார்த்தால் நியாயமான கேள்வியாகத்தான் தோன்றும். ஆனால் உள்ளடக்கத்தை விடவும் மெட்டா டேட்டா ஏன் மோசமானது என்பதற்குப் பத்திரிக்கையாளர் கிளென் முன்வைக்கும் ஓர் உதாரணம் நமக்கு உதவும்.

ஒரு ஆடியோ பைலை திறந்து அதில் பதிவாகி இருக்கும் தொலைப்பேசி உரையாடலைக் கேட்கிறீர்கள். அதில் ஒரு பெண் தன் வீட்டுக்குத் தொலைவிலிருக்கும் மருத்துவமனையைத் தொலைப்பேசியில் அழைத்து, கருக்கலைப்பு செய்வதற்கு உண்டான நடைமுறையைக் கேட்டறிகிறார். இந்த உள்ளடக்கத்தின் மூலம் நமக்குத் தெரியவருவது ஒரு செய்தி, அவ்வளவுதான். ஆனால் இந்த உள்ளடக்கத்தின் மெட்டா டேட்டாவில் ‘அந்த பெண்ணின் அடையாளம், அவரது தொலைப்பேசி எண், முகவரி, மருத்துவமனையின் முகவரி மற்றும் மருத்துவரின் அடையாளம், தொலைப்பேசி அழைப்பின் கால அளவு’ என உள்ளடக்கம் தவிர்த்து சகலமும் பதிவாகியிருக்கும்.

யார்? யாருக்கு? எப்போது? எங்கிருந்து? நேரம்? இவ்வளவு போதும் ஒரு அரசாங்கத்துக்கு. இதைவிடவும் ஓர் உள்ளடக்கம் உங்களைப்பற்றி பெரிதாக எதையும் சொல்லிவிடப்போவதில்லை.

0

என்.எஸ்.ஏ சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால், உலக நாடுகளை ஒளிந்திருந்து பார்ப்பதன் நோக்கம் தேசப் பாதுகாப்பு மட்டுமல்ல என்பது புரியும். அவர்களது பிரதான நோக்கம் அந்நாடுகளின் பொருளாதாரத்தை ஆய்வு செய்வது, முடிந்தால் அதைச் சேதப்படுத்துவது.

உள்நாட்டுப் போர் எங்காவது நிகழ்ந்தால் தன் நாட்டு மக்களை அங்கே பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரிப்பது போலவே, பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சீன நெட்வொர்க் சாதனங்களையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது அமெரிக்கா. இதன் பொருள் ஒருவேளை அமெரிக்கர்கள் சீன சாதனங்களைப் பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களது தரவுகள் திருடப்படும் என்பதுதான்.

இதே காரணங்களுக்காக 2012இல் சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களான ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ மீது குற்றம் சாட்டியது அமெரிக்கா. தங்களது நாட்டின் தொலைத்தொடர்பு சட்டங்களை இந்நிறுவனங்கள் மீறிவிட்டதாகவும் சொல்லியது. நவம்பர் 2013இல் ‘அமெரிக்க-சீன உறவைச் சிக்கலாக்க விரும்பவில்லை’ என்று சொல்லி அந்நாட்டில் தங்களது வியாபாரத்தை நிறுத்திக்கொண்டது ஹுவாய்.

‘நான் தான் இந்த வீட்டுக்குத் தலைவன். அவ என்ன இல்லைன்னு சொல்றது? இப்போ நான் சொல்றேன். ஒன்னுமில்லை போ’ என்று பிச்சை கேட்பவரை விரட்டும் சினிமா காமெடியைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஜூன் 2010 தேதியிட்ட என்.எஸ்.ஏ ஆவணம்தான் அந்த வீட்டுத் தலைவன். அமெரிக்காவில் தயாராகும் நெட்வொர்க் சாதனங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் கைகளுக்குக் கிடைப்பதற்கு முன்பாக, அவை வேறொரு இடத்திற்கும் செல்ல வேண்டியிருந்தது.

மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சாதனங்களை வரவழைத்து, அதன் பேக்கிங்கை உடைத்து, கண்காணிப்புக்குத் தேவையான அனைத்தையும் அதில் உள்ளீடு செய்து, யாருக்கும் சந்தேகம் வராமல் மீண்டும் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தைப் போலவே பேக் செய்து அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும் வேலையை முழுநேர கடமையாகவே தொடர்ந்து செய்துகொண்டிருந்தது என்.எஸ்.ஏ. இதன்மூலம் அமெரிக்க நெட்வொர்க் சாதனங்களை பயன்படுத்தும் உலக நாடுகள் அனைத்தையும் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நிறுத்தி நிதானமாக வேவுபார்க்க முடிந்தது என்.எஸ்.ஏவால்.

கோட்சூட் அணிந்து கம்பீரமாக கேமரா முன்பு நின்றுகொண்டு ‘சீன தயாரிப்புகளைத் தவிர்ப்பீர். அது தேச பாதுகாப்புக்கு எதிரானது’ என்று முழங்குவது, அப்படியே குடவுனுக்கு திரும்பி கோட்சூட்டை கழட்டி ஆணியில் மாட்டிவிட்டு, தனது சொந்த நாட்டுத் தயாரிப்புகளிலேயே வேவு பார்ப்பதற்கு உண்டான பின் வாசல் கதவுகளை உருவாக்குவது எனச் சிறப்பாகத் தொண்டாற்றி வந்தது என்.எஸ்.ஏ. உலக மக்கள் உளவு பார்க்கப்படுவது அல்ல இங்கே சிக்கல், யார் அதைச் செய்வது என்பதில்தான் போட்டியே இருக்கிறது.

சீனத் தயாரிப்புகளைத் தவிர்க்கச் சொல்வதற்கு மிக முக்கியக் காரணம் அவர்களது சந்தையை அமெரிக்காவில் இல்லாமல் செய்து அதன்மூலம் சீனத்தின் பொருளாதாரத்தைச் சிதைப்பது. இன்னொன்றும் இருக்கிறது, ஒருவேளை நியூ ஜெர்சியில் வசிக்கும் அமெரிக்கர் ஒருவர் சீன நெட்வொர்க் சாதனத்தை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினால், என்.எஸ்.ஏவால் அவரை எப்படி வேவுபார்க்க முடியும், பாவம்.

0

ஹாங்காங்கில் இருந்துகொண்டு இந்த ரகசியங்களையெல்லாம் வெளியிட்டிருக்கிறார். அப்படியென்றால் ஸ்நோடன் நிச்சயம் ஒரு சீன உளவாளிதான், மேலும் இதில் ரஷ்யாவின் பங்கும் நிச்சயம் இருக்கிறது என்றும் வாதிட்டது அமெரிக்கா.

இது உண்மையா? எட்வர்ட் ஸ்நோடன் ஓர் உளவாளியா?

(தொடரும்)

பகிர:
ரிஷிகேஷ் ராகவேந்திரன்

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *