Skip to content
Home » சாமானியர்களின் போர் #20 – எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

சாமானியர்களின் போர் #20 – எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

எட்வர்ட் ஸ்நோடனுக்கு என்ன நடந்தது?

ஸ்நோடனுக்கு ஆதரவாகக் களத்தில் நின்றவர்கள் ஐஸ்லாந்து தொடங்கி இந்தியா வரை உலகின் பல்வேறு நாடுகளுடன் தொடர்பில் இருந்தனர். மிகப்பெரும் ஜனநாயகமாகத் தங்களைக் காட்டிக்கொண்ட நாடுகளும் கூட அமெரிக்க அரசாங்கத்துக்கு அஞ்சி ஸ்நோடனுக்குப் புகலிடம் தர மறுத்தன. தனிப்பட்ட முறையில் ஸ்நோடனுக்குத் தங்களது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தபோதும் இந்நாடுகள் பொதுவில் செயல்பட மறுத்தன.

காரணம், ஸ்நோடன் உளவு சட்டத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வந்தார். ஏற்கெனவே டேனியல் எல்ஸ்பெர்க், பிராட்லி (செல்சியா) மேனிங், ஜூலியன் அசாஞ்சே உள்ளிட்டவர்களின் மீது சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் இப்போது ஸ்நோடனின் மீதும் சுமத்தப்பட்டன. கூடுதலாக அரசியல் குற்றம் செய்தவராகவும் அவர் கருதப்பட்டார்.

பத்திரிகையாளரும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் அப்போதைய ஆசிரியருமான சாரா ஹாரிசன் தாமாகவே உதவ முன்வந்தார். அவர் ஸ்நோடனைச் சந்திக்க உடனடியாக ஹாங்காங் கிளம்பினார். அசாஞ்சே தரப்பிலிருந்து யார் உதவுவதையும் விரும்பவில்லை ஸ்நோடன். காரணம், அதுபோன்ற நிகழ்வுகள் அசாஞ்சேவுக்குச் சாதகமான ஒன்றாகத்தான் அமையும் என்று கருதினார்.

பிராட்லி (செல்சியா) மேனிங் போலவே தன்னையும் உலகம் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்காக வேலை செய்தவன் என்று புரிந்துகொள்ளக்கூடும் என்றும் அஞ்சினார். எழுத்து வடிவில் ஒருமுறை அசாஞ்சேவுடன் உரையாடிய பிறகு அவரது எண்ணம் இன்னும் வலுப்பெற்றது. அசாஞ்சேவோடு இவ்விவகாரத்தில் இணையும் பட்சத்தில், தனது நோக்கம் தவறாக வரலாற்றில் நினைவு கோரப்படும் என்று நினைத்தார்.

ஆனால் மறுமுனையில் சாரா விடுவதாக இல்லை. தொடர்ந்து ஸ்நோடனைக் காப்பாற்ற தன்னால் முடிந்ததைச் செய்துகொண்டே இருந்தார். சாரா விக்கிலீக்சில் இருந்தபோதிலும் சுதந்திரமாக இயங்கினார். அசாஞ்சே போன்ற ஆளுமையோடு இணைந்து பணியாற்றக்கூடிய சூழ்நிலையிலும்கூட மாற்றுக் கருத்துகளைத் தைரியமாக முன்வைக்கும் தன்மை அவரிடம் இருந்தது. இதையெல்லாம் மீண்டுமொருமுறை விசாரித்து உறுதிசெய்துகொண்ட ஆவணப்பட இயக்குநர் லாரா, ஸ்நோடனிடம் சாராவைப்பற்றி நல்லவிதமாக எடுத்துக்கூறினார்.

முதல் சந்திப்பிலேயே ஸ்நோடனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நடந்துகொண்டார் சாரா. அவர் ஒரு வழக்கறிஞராக இல்லாதபோதும்கூட, சட்ட நுணுக்கங்கள் பலவற்றையும் அறிந்து வைத்திருந்தார். ஈக்வடாரில் புகலிடம் பெறுவதற்கு உண்டான தொடர்புகளை உருவாக்கி வைத்திருந்தார். அதன்மூலம் ஈக்வடாருக்கு உள்ளே நுழைவதற்காக அவசரகால நுழைவுச்சீட்டு ஒன்றையும் ஸ்நோடனின் பெயரில் பதிவு செய்து அவரிடம் தந்தார்.

ஹாங்காங் விமான நிலையத்துக்கு ஒரு வேனில் ரகசியமாகக் கிளம்பினர், ஸ்நோடனின் சட்ட ஆலோசகராக அவர் கூடவே பயணிக்கத் தயாரானார் சாரா.

0

தப்பித் தவறியும்கூட அமெரிக்கா மீது பறந்துவிடக் கூடாது என்பதற்காக மாஸ்கோ வழியாக ஈக்வடாரை அடைய முடிவு செய்தார்கள்.

ஸ்நோடன் நேரடியாகவே ‘எதற்காக என்னை நீங்கள் இப்படிப் பாதுகாக்க வேண்டும் ?’ என்று சாராவிடம் கேட்டார்.

அதற்கு சாரா பொறுமையாக ‘நான் உங்களைப் பாதுகாக்கவில்லை. யாரும் உங்களை அப்படிச் செய்துவிடவும் முடியாது. ஈக்வடாரை அடையும் வரைக்கும் தேவையில்லாமல் எவரும் உங்கள் வழியில் குறுக்கிட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்யவே உங்களோடு பயணிக்கிறேன். மேலும் நீங்கள் உயிரோடிருப்பதைக் கண்ட ஒரு சாட்சியமாவது இருக்க வேண்டாமா?’ என்றார்.

விக்கிலீக்ஸ் குறித்துத் தன்னிடம் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்த்து அதற்குச் சொல்லவேண்டிய பதில்களைத் தயாராக வைத்திருந்தார் ஸ்நோடன். ஆனால் அது குறித்து எந்தவொரு உரையாடலையும் முன்னெடுக்கவில்லை சாரா. அவரது கவனம் முழுவதும் ஸ்நோடனைக் காப்பாற்றுவதிலேயே இருந்தது. இதனால் சாராவை முழுவதும் நம்பத் தொடங்கினார் ஸ்நோடன்.

விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தார் ஸ்நோடன். முகத்தைப் போதுமான அளவுக்கு மறைக்க ஒரு தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்தார். பக்கவாட்டில் இருப்பவர்கள் எவரும் ஸ்நோடனை அடையாளம் கண்டுவிடாத வகையில் அவரை மறைத்து அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார் சாரா.

மாஸ்கோ ஷெரெமெட்டியோ சர்வதேச விமான நிலையத்தில் ஜூன் 23, 2013 அன்று வந்திறங்கினர். அடுத்த விமானத்துக்காகக் கிட்டத்தட்ட இருபது மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல். சிஐஏவில் பணியிலிருந்தபோது விமானநிலைய பரிசோதனைகளில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்த போதுமான பயிற்சி ஸ்நோடனுக்கு வழங்கப்பட்டு இருந்தது. உடை, பாவனை, சுமந்துகொண்டிருக்கும் பையில் உள்ள பொருட்கள் குறித்த கவனம், உலகின் மிகச் சலிப்பான ஒரு மனிதனைப் போல வரிசையில் நிற்பது, யாரும் நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையில்லாத ஒரு முகம் என எடுத்துக்கொண்ட பயிற்சிகளிலிருந்து இப்போது எதை முயன்று பார்த்தாலும் வேலைக்கு ஆகாது. காரணம், ஸ்நோடனது முகமும் பெயரும் நொடிக்கொருமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

மெல்ல நகர்ந்த வரிசையில் ஸ்நோடனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார் சாரா. ஒவ்வொரு பாஸ்போர்ட்டும் எவ்வளவு மணித்துளிகளில் பரிசோதனை செய்யப்பட்டு உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்தனர் இருவரும். ஸ்நோடன் தனது பாஸ்போர்ட்டை தந்தார். வழக்கத்தை விடவும் அதிக நேரம் எடுத்துக்கொண்டார் தடுப்புக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த அதிகாரி. தனது தொலைப்பேசியில் யாரையோ அழைத்து ரஷ்ய மொழியில் முணுமுணுத்தார்.

கோட்சூட் அணிந்திருந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் ‘உங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு சின்னச் சிக்கல். தயவுசெய்து எங்களோடு வர இயலுமா?’ என்று ஸ்நோடனை அணுகினர். ஒருகணம் கூடத் தாமதிக்காத சாரா, ‘நான் அவரது சட்ட ஆலோசகர். அவர் எங்கே அழைத்துச் செல்லப்படுவதாக இருந்தாலும் நானும் கூட வருவது கட்டாயம். ஏனென்றால்…’ என்று அதிகாரிகளிடம் வாதித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் ‘தாராளமாக’ என்று முடித்துக்கொண்டார்கள்.

விமான நிலையத்துக்கு உள்ளாகவே இருந்த ஒரு சந்திப்பு அறையில் அவர்கள் காக்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் கோட்சூட் அணிந்த ஆறு அதிகாரிகள் அங்கே வந்தனர். அவர்களின் சிகை அலங்காரத்தை வைத்து அவர்கள் எப்.எஸ்.பியைச் சார்ந்தவர்கள் என்று கணித்தார் ஸ்நோடன். அமெரிக்காவுக்கு எப்.பி.ஐ என்றால், ரஷ்யாவுக்கு எப்.எஸ்.பி. உளவு பார்ப்பது, விசாரிப்பது மட்டுமன்றி அவர்களால் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும்.

அவர்களில் வயது மூத்தவராகத் தோன்றிய ஒருவர் முதலில் அமர்ந்தார். ஸ்நோடனையும், சாராவையும் ஒரு மெல்லிய புன்னகையோடு அமரும்படி சைகை செய்தார். நடந்துகொண்ட விதத்திலிருந்து அவர் ஒரு அனுபவம் வாய்ந்த அதிகாரி என்பது புரிந்தது. தொண்டையைக் கனைத்தபடி அவர் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

இப்படிப் பேசத் தொடங்குவதைச் சி.ஐ.ஏ பயிற்சிகளில் ‘கோல்ட் பிட்ச்’ என்று அழைக்கிறார்கள். இப்படிப் பேசுவதன் மூலம் எதிராளிக்கு அவர்கள் ஒரு சலுகையைத் தர விரும்புகிறார்கள். அச்சலுகை பணமாக, விடுதலையாக, உடனடியாக ஒருவருக்குப் பயன்படும் ஏதாவது ஒன்றாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் அதைப் பெற வேண்டுமானால் எதிராளி அந்த அரசுக்கு வேண்டியதை/கேட்பதைத் தரவேண்டும்.

ரஷ்ய அதிகாரி அப்படித் தொடங்கியதுமே ஸ்நோடன் அவரது பேச்சை இடைமறித்தார். ஒருவேளை அப்படிச் செய்யாமல் போனால் ‘சலுகையைப் பெறத் தயார்’ என அரசு தரப்பில் புரிந்துகொள்ளப்படும். ஸ்நோடன் அந்த அதிகாரியிடம் பொறுமையாக ‘நீங்கள் யாரென்பதும், செய்துகொண்டிருப்பது என்னவென்றும் தெளிவாகப் புரிகிறது. எந்தவொரு உளவு அமைப்போடும் என்னால் ஒத்துழைக்க முடியாது. எனது பையை நீங்கள் சோதனையிட விரும்பினால் தாராளமாகச் செய்துகொள்ளலாம். அதில் உங்களுக்கு உதவும் வகையில் ஒன்றுமில்லை. நான் மரியாதை குறைவாக நடந்துகொள்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். அதே சமயத்தில் உங்களுக்கு என்னால் உதவ முடியாது’ என்று தீர்க்கமாகப் பேசினார்.

அந்த அதிகாரியின் முகம் மாறியது. அவரும் பொறுமையாக ‘ஒருபோதும் நீங்கள் சொன்னதைச் செய்ய விரும்பவில்லை. எங்களை நம்புங்கள். உங்களுக்கு உதவு விரும்புகிறோம்’ என்றார்.

இம்முறை அந்த அதிகாரியை சாரா இடைமறித்தார். ‘உங்கள் உதவிக்கு நன்றி. நாங்கள் அடுத்து ஒரு விமானத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.’

‘நீங்கள் யார்? ஸ்நோடனது வழக்கறிஞரா?’

‘இல்லை. அவரது சட்ட ஆலோசகர்.’

‘அப்படியென்றால் நீங்கள் ரஷ்யாவில் இருப்பதற்காக இங்கே வரவில்லையா? எனில் நீங்கள் எங்கே செல்ல இருக்கிறீர்கள்?’

‘ஈக்வடார்.’

‘மன்னிக்கவும். நீங்கள் விரும்பும் நாடுகளுக்கு உங்களால் இனி பயணிக்க முடியாது. காரணம், அமெரிக்க அரசு உங்களது பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டது’ என்றார் அந்த மூத்த அதிகாரி.

முதலில் அதை நம்பவில்லை ஸ்நோடனும், சாராவும். சாரா தனது லேப்டாப்பில் அதை உறுதிசெய்த பிறகே நம்பினார்கள். ஸ்நோடனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அமெரிக்கா இப்படிச் செய்யும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஹாங்காங்கிலிருந்து கிளம்புவதற்கு முன்பு ஈக்வட்டாருக்குள் செல்ல எடுத்த நுழைவுச்சீட்டைக் காட்டியும் பலனில்லை.

இறுதியாக அந்த அதிகாரி ‘உங்களைப் போல இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஒருவருக்கு, உதவத் தயாராக இருக்கும் ஒரு நண்பனும் இல்லாமல் போனால், நிலைமை இன்னும் மோசமாகும்’ என்று பேசிப்பார்த்தார். மேலும் அவர் ‘எங்களுக்கு உதவக்கூடிய, அது எவ்வளவு சிறிய உபரி தகவலாக இருந்தாலும் சரி, எங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா?’ என்றும் நேரடியாகவே கேட்டார்.

எங்களைப் பார்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும் என்ற பொருளில் காட்டமாகப் பதிலளித்தார் ஸ்நோடன்.

அதிகாரி ‘உங்கள் முடிவுக்காக நீங்கள் வருந்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.

அன்றிலிருந்து நாற்பது நாட்கள் அதே விமான நிலையத்தில் வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டனர். ஸ்நோடன் கிட்டத்தட்ட இருபத்தி ஏழு நாடுகளுக்குத் தனக்குப் புகலிடம் வழங்க வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் அவற்றில் ஒரு நாடுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை.

இதனால் உலகம் முழுக்க ஸ்நோடன் ரஷ்ய விமான நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்டிருப்பது பரவியது. இது ரஷ்யாவுக்குத் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்தது. சதா சர்வகாலமும் தங்கள் விமான நிலையத்திற்கு வெளியே ஊடகங்கள் நூற்றுக்கணக்கில் குவிவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆகஸ்ட் 1ஆம் தேதி ஸ்நோடனுக்குத் தாற்காலிகப் புகலிடம் அளித்தது ரஷ்யா. 2009ஆம் ஆண்டிலிருந்து அவர் காதலித்து வந்த லிண்ட்சே மில்ஸ், அக்டோபர் 2014 வாக்கில் ரஷ்யாவுக்குச் சென்று ஸ்நோடனோடு சேர்ந்து வசிக்கத் தொடங்கினார். இந்த இணை 2017இல் திருமணம் செய்துகொண்டார்கள்.

0

2020ஆம் ஆண்டு தனக்கு ரஷ்ய குடியுரிமை வேண்டி விண்ணப்பித்தார் ஸ்நோடன். உக்ரைன் போருக்குத் தயாராகிக்கொண்டிருந்த தருணத்தில், ஸ்நோடனோடு சேர்த்து பத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கி உத்தரவிட்டார் புதின்.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் சேர்த்து இரட்டை குடியுரிமைக்காக இப்போது முயற்சி செய்துகொண்டிருக்கிறார் எட்வர்ட் ஸ்நோடன்.

0

ஸ்நோடன் வெளியிட்ட ஆவணங்களின் மூலம் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றனவா?

மக்களின் தகவல்கள் திருடப்படுவதும், தொடர்ந்து அவர்கள் கண்காணிப்புக்கு உள்ளாவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஸ்நோடன் ஆவணங்களை வெளியிட்ட பிறகு அது இன்னமும் கூட அதிகரித்திருக்கிறது. முன்பு தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் நடந்தது, இப்போது வணிகத்தின் பெயரால் நடக்கிறது.

பிறகு எதற்காக ஒருவர் தன் அரசுப் பணியைத் துறக்க வேண்டும்? நாடு நாடாக ஓடியொளிந்து தன் சொந்த நாட்டைவிட்டு வேறொரு நாட்டில் குடியுரிமை பெற வேண்டும்? எந்த மாற்றமும் நிகழாத ஒன்றிற்காகவா இத்தனையும்?

எட்வர்ட் ஸ்நோடன் ஊடகங்களோடு பேசிய தருணங்களின் மூலம் ஒரு விஷயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. என்.எஸ்.ஏ ஆவணங்களை வெளியிடுவதனால் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதைக் காட்டிலும், குறைந்தபட்சம் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதையாவது மக்கள் அறிந்திருக்கவேண்டும் என்பதில்தான் அவர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார். அந்த வகையில் ஸ்நோடன் தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

இனி மக்களது தனியுரிமையைப் பாதுகாக்க ஓர் அரசாங்கம் இறங்கிவரும் என்றெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. நம் வீட்டிலிருக்கும் நகைகளை, நமது சொத்துகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நடைமுறைகள் உருவாக்கப்பட்டு, பொறுப்பு நம்மிடமே கொடுக்கப்பட்டுவிட்டது அல்லவா? அது இனி இணையத்தில் விரவிக்கிடக்கும் உங்கள் தரவுகளும் பொருந்தும். அதன் பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பு.

0

டேனியல் எல்ஸ்பெர்க், பிராட்லி (செல்சியா) மேனிங், எட்வர்ட் ஸ்நோடன் இவர்கள் மூவரைக் காட்டிலும் ஜூலியன் அசாஞ்சே ஓரிடத்தில் பெரியளவுக்கு மாறுபடுகிறார். மூவரும் தங்கள் கவனத்துக்கு வந்த ஒன்றை, தங்கள் மனசாட்சியைத் தொந்தரவு செய்ததை, ஓர் அரசாங்கம் முன்னின்று நிகழ்த்திய அத்துமீறல்களைத் துணிந்து உலகறிய செய்தனர். அதற்குரிய தண்டனையை முதலில் அனுபவித்தாலும் பிறகு சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினர்.

ஆனால் அசாஞ்சேவைப் பொறுத்தவரையில் அவர் புதியதொரு தொழில்நுட்பத்தை, அதுவரை அதிக அறிமுகமில்லாத ஒரு பத்திரிகை மாதிரியை உருவாக்கினார். அதன்மூலம் உங்களையும் என்னையும்போல எந்தவொரு சாமானியரும் துணிந்து தங்களது அடையாளங்களை முழுமையாக மறைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக உண்மையை உலகறியச் செய்யமுடியும்.

அவ்வாறு செய்வதற்கான ஒரு கூட்டு அமைப்பை அசாஞ்சே உருவாக்கியிருக்கிறார். அவர் இல்லாமல் போனாலும்கூட அவர் இணையதளம் செயல்படும். அவர்களுக்கு நாம் அளிக்கும் தகவல் அதிநவீன தொழில்நுட்பத்தின் துணைகொண்டு பாதுகாக்கப்படும். ஒருவகையில் இது ஓர் ஆரம்பம்.

ஒருவேளை இதனால்தான் மற்ற மூவரையும் மன்னிக்க முன்வந்த அமெரிக்க அரசாங்கம், அசாஞ்சேவை இன்னமும் பழிதீர்க்க காத்திருக்கிறதோ என்னவோ! எந்த நேரமும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற பயத்தோடுதான் அசாஞ்சே இன்னமும் இங்கிலாந்து சிறையில் தனது நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.

0

நீதி வேண்டி மக்களின் பக்கம் நின்று, ஓர் அரசு அமைப்புக்கு எதிராக எழுந்து நிற்பதைக் காட்டிலும் ஒரு சாமானியனுக்கு வேறென்ன சாகசம் இருக்க முடியும்? அதை இவர்கள் நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

(தொடரும்)

பகிர:
ரிஷிகேஷ் ராகவேந்திரன்

ரிஷிகேஷ் ராகவேந்திரன்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். தொழில்நுட்பத் துறை சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர். இவர் எழுதிய ‘தமிழ் ராக்கர்ஸ் தோற்றமும் மறைவும்‘ என்னும் மின்னூல் பரவலான கவனத்தைப் பெற்றது. ரூபியா ரிஷி என்ற பெயரில் புனைவுகள் எழுதி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *