Skip to content
Home » சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’

சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’

காதல் கல்யாணமா செய்கிறாய்?

எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடலாம் என்று எண்ணக்கூடிய தோற்றம். மெல்லிய குரலில்தான் பேசுகிறார். ஆனால் அவரிடமிருந்து புறப்பட்டு வரும் சொற்களின் வலிமையும் அந்த வலிமைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வலிகளும் அவர் ஆளுமையைப் பன்மடங்கு உயர்த்துகின்றன. ‘தமிழ்நாடு மிகத் தீவிரமாக ஒரு போரை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது’ என்கிறார் கவுசல்யா. ‘நம்மையெல்லாம் சீரழித்துக்கொண்டிருக்கும் சாதி ஒழியவேண்டும். சாதியில்லாத சமூகம் அமையவேண்டும்.’

உருவமற்றது, தொட்டுணரமுடியாதது என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சாதியின் கோர முகத்தை மிக அருகிலிருந்து கண்டவர் அவர். சாதி என்னவெல்லாம் செய்யும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவரும்கூட. அவர் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு தினம் 13 மார்ச் 2016.

தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பின்னலாடை தொழிலுக்குப் பெயர் பெற்ற நகரம் திருப்பூர். திருப்பூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது உடுமலைப்பேட்டை. அம்மாவட்டத்திலேயே மிகப் பெரிய நகராட்சி இதுவே. 13 மார்ச் அன்று தனது கணவர் சங்கருடன் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்தார் கவுசல்யா.

திடீரென்று சுற்றி வளைத்த ஒரு கும்பல் இருவரையும் மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கியது. ரத்த வெள்ளத்தில் தரையில் சாய்ந்த சங்கர் அங்கேயே இறந்துபோனார். நீலச் சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் நிலைக்குத்திய கண்களுமாகக் கிடந்தது அவர் உடல். வெட்டுக் காயங்களோடு நினைவிழந்து விழுந்த கவுசல்யாவைச் சிலர் இழுத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். பட்டப்பகலில், சுட்டெரிக்கும் வெய்யிலில், பரப்பரப்பான மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.

காதலும் வன்முறையும்

சங்கர் செய்த குற்றம் சாதி மாறிக் காதலித்தது. 21 வயது சங்கர் பள்ளர் சாதியைச்  சேர்ந்த ஒரு தலித். உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள குமரிலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். மெக்கானிகல் பொறியியல் படிப்பு படித்தவர். அவருடைய தவறு 19 வயது கல்லூரி மாணவி கவுசல்யாமீது காதல் வயப்பட்டதுதான். கவுசல்யா திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியைச் சேர்ந்தவர். மணியக்காரர் சாதியைச் சேர்ந்தவர். ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்டப் பிரிவுகளில் ஒன்றான அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். சாதிய அடுக்கில் கவுசல்யா மேல்நிலையிலும் சங்கர் கீழ்நிலையிலும் இருந்ததுதான் பிரச்னைக்கான வேர்.

11 ஜூலை 2015 அன்று இருவரும் கவுசல்யாவின் ஊரான பழனியிலுள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். தங்கள் காதல் திருமணமாக மலர்ந்ததில் இருவருக்கும் மகிழ்ச்சிதான் என்றாலும் தேவதைக் கதைகளில் வருவதுபோல் மகிழ்ச்சியாக இருவரும் சேர்ந்து வாழ்வது கடினம் என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர். சாதியின் எல்லைக்கோட்டைக் கடந்து காதலிப்பது குற்றமென்றால் திருமணம் செய்துகொள்வது கொடுங்குற்றம் என்பதை இருவரும் உணர்ந்திருந்தனர்.

மாலை மாற்றிக்கொண்ட கையோடு இருவரும் 20 கிமீ தள்ளியுள்ள மடத்துக்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்து, ‘எங்களுக்குப் பாதுகாப்பு அளியுங்கள்’ என்று எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தனர். திருமணம் என்பது ஒரு பாதுகாப்பு வளையமல்ல என்பதை இருவரும் உணர்ந்திருந்தனர் என்பதால்தான் காவல் துறையிடம் சென்று உதவி கேட்கவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

நடந்து முடிந்துவிட்டது. இனி எதுவும் செய்வதற்கில்லை. இருவரும் எக்கேடாவது கெட்டுத் தொலையட்டும் என்று கவுசல்யாவின் பெற்றோர் இருந்திருக்கலாம்தான். ஆனால் இயலவில்லை. கவுசல்யாவின் திருமணத்தை ஒரு களங்கமாகவே அவர்கள் கண்டிருக்கிறார்கள். அந்தக் களங்கத்தைத் தன் மகளே துடைத்து அழித்துச் சுத்தம் செய்யவேண்டும் என்றும் கருதியிருக்கின்றனர்.

‘என் அம்மா, பாட்டி, இரு அத்தைகள் அனைவரும் காவல் நிலையத்துக்கு வந்தனர். பட்டியல் சாதியைச் சேர்ந்த சங்கரோடு சேர்ந்து வாழ்வதென்பது சாத்தியமே இல்லை. நீ செய்துகொண்ட திருமணம் செல்லவே செல்லாது. எங்களோடு வந்துவிடு என்று அழைத்தனர். நான் சங்கரோடுதான் வாழ்வேன். உன்னோடு வரமாட்டேன் என்று அவர்களுக்குச் சொன்னேன்’ என்கிறார் கவுசல்யா. அப்படியானால் எங்கள் உடைமைகள் எல்லாவற்றையும் திருப்பிக்கொடு என்று கவுசல்யாவிடம் அவர் அம்மா கோபத்தோடு கேட்க, அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி ஒப்படைத்திருக்கிறார் கவுசல்யா. ‘அம்மா என் செருப்பை எடுத்து அதை வாயில் வைத்துக் கடித்து வீசியெறிந்தார்’ என்று அன்றைய நிகழ்வின் பயங்கரத்தைப் பின்னர் நீதிமன்றத்தில் பதிவு செய்தார் கவுசல்யா.

குமரிலிங்கத்தில் சங்கர் குடியிருந்த ஒற்றை அறை கொண்ட ஓட்டு வீட்டுக்குக் குடிபெயர்ந்த கவுசல்யா தன் வாழ்வின் புதிய பக்கமொன்றைத் திருப்பினார். ஆனால் கவுசல்யாவின் பெற்றோர் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. தன் மகளின் ‘பெருங்குற்றத்தை‘ அமைதியாகக் கடந்து செல்ல அவர்களால் முடியவில்லை. கவுசல்யாவைத் தொடர்ந்து அவர்கள் அச்சுறுத்தி வந்தனர்.

இன்னொரு பக்கம் கல்வியா, குடும்ப வாழ்வா எனும் தவிர்க்கவியலாத கேள்வியையும் கவுசல்யா எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சங்கராவது தொடர்ந்து படிக்கட்டும் என்று தனது கல்லூரிப் படிப்பைக் கைவிட்டார். சங்கர் அங்கிருந்து 28 கிமீ தள்ளி பொள்ளாச்சியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்புப் படித்துக்கொண்டிருந்தார். முன்னதாக, 2003ஆம் ஆண்டு பாலிடெக்னிக் படிப்பை அவர் முடித்திருந்தார்.

விரைவில் ஒரு பொறியியலாளராக வெளியில் வந்தார் சங்கர். அவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி. அந்த வகையில் ஒரு முன்னுதாரணமாக அவர் குடும்பத்துக்கு வெளியிலும் பார்க்கப்பட்டிருக்கிறார். இதை அவர் சசோதரர் விக்னேஸ்வரனும் உறுதி செய்கிறார். ‘சங்கர் மெக்கானிக்கல் எஞ்சினியராகத் தேர்ச்சி பெற்ற செய்தி கேட்டதும் ஒட்டுமொத்த கிராமமும் கொண்டாடி மகிழ்ந்தது. எங்கள் கிராமத்திலேயே முதல் முறையாக பொறியியல் பட்டம் பெற்றது சங்கர்தான்.’

‘சங்கரின் படிப்புக்காக எங்கள் அப்பா 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வங்கியிலிருந்து ஒரு லட்சம்தான் கிடைத்தது. மிச்ச பணத்தை அவர் வட்டிக்குதான் வாங்கியிருந்தார்’ என்கிறார் விக்னேஸ்வரன். சங்கர் கொல்லப்பட்டபோது உடுமலைப்பேட்டையில் பி.எஸ்ஸி கணிணியியல் படித்து வந்தார் விக்னேஸ்வரன்.

படிப்பு முடிந்த கையோடு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது. ஏப்ரல் மாத வாக்கில் கவுசல்யாவோடு சென்னைக்குக் குடிபெயரலாம் என்று சங்கர் முடிவு செய்திருந்தார்.

‘அவர்கள் (பெண்ணின் குடும்பத்தினர்) இந்த அளவுக்குச் செல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்கிறார் சங்கரின் தந்தை வேலுச்சாமி. அவர் ஒரு கூலித் தொழிலாளர். தலையில் சுமையை ஏற்றி இறக்கும் கடினமான வேலை செய்துவந்தவர். படித்து முடித்து நல்ல வேலையிலும் அமர்ந்திருக்கும் சங்கரை நினைத்து அவர் எவ்வளவு பெருமிதம் கொண்டிருப்பார் என்று நாம் யூகித்துக்கொள்ளலாம். ‘சங்கருக்குச் சென்னையில் வேலை கிடைத்ததை அறிந்ததும் இனி அவர்கள் அங்கே பாதுகாப்பாக இருப்பார்கள் என்றுதான் நினைத்தோம். இனி எல்லாம் இயல்பானதாக மாறிவிடும் என்றும் நம்பினோம்.’

கவுசல்யா தன் கல்லூரிப் படிப்பைத் தனக்காக இடைநிறுத்திக்கொண்டது சங்கருக்குத் தெரியும். இது என் முறை. கவுசல்யாவின் கனவை நிறைவேற்றவேண்டியது தன் கடமை என்பதை சங்கர் உணர்ந்திருந்தார். ‘கவுசல்யா சென்னையில் படிப்பைத் தொடரவேண்டும் என்று என் மகன் விரும்பினான்’ என்கிறார் வேலுச்சாமி.

விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்ந்துவிடலாம் என்றுதான் எல்லோரும் நினைத்திருக்கிறார்கள். கனவும் கண்டு வந்திருக்கிறார்கள். அந்தக் கனவுகளோடுதான் சங்கரும் கவுசல்யாவும் உடுமலைப்பேட்டைக்கு மார்ச் 13 அன்று வந்திருக்கிறார்கள். கடைத்தெருவுக்குச் சென்று தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக்கொண்டு செல்வதுதான் திட்டம். திட்டமிட்டபடியே எல்லாவற்றையும் வாங்கிமுடித்தனர். சங்கருக்கு எடுத்த ஒரு புது சட்டையும் பையில் இருந்தது.

மதியம் சரியாக 2.15 மணிக்கு இருவரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம்  நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பழனி பிரதானச் சாலையின் தெற்குப் பகுதி வழியாகச் சாலையைக் கடப்பதற்காக இருவரும் காத்திருந்தனர். மொத்தம் ஐந்து பேர் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு, திட்டமிட்டு அவர்களைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை எங்கே எதிர்கொள்ளவேண்டும், எதிர்கொள்ளும்போது என்ன செய்யவேண்டும் என்பதையும்கூட முன்கூட்டியே பேசி வைத்திருந்தனர். தாக்குவதற்கும் வெட்டிச் சாய்ப்பதற்கான ஆயுதங்கள் அவர்களிடம் தயாராக இருந்தன.

கண்மூடி திறப்பதற்குள் ஐந்து பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழிமறித்துத் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. சில கணங்கள்தான். நீண்ட அரிவாளால் சங்கரின் தலையை வெட்டியிருக்கிறார்கள். வெட்டுப்பட்டு விழுந்த சங்கர் பிடித்துத் தள்ளப்பட்டிருக்கிறார். கீழே விழும்போது அவர்களில் ஒருவன் ஆத்திரம் பொங்கப் பின்வருமாறு திட்டியிருக்கிறான். ‘எங்க ஜாதி புள்ளைய மேரேஜ் பண்ணுவாயாடா…’ என்று ஆரம்பித்து மோசமான வசையில் முடிந்திருக்கிறது. சங்கரின் சாதியின் பெயரைத் தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தும் வசைச்சொற்கள் அவை. ‘என்னடா பள்ளப்பயலுக்கு காதல் திருமணம் ஒரு கேடா, செத்துத்தொலைடா!’

இந்தக் கொலை எதற்காக என்பதில் எந்த ஐயமும் எவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் உறுதி அந்தச் சொற்களில் வெளிப்பட்டது. அவர்களைப் பொருத்தவரை கொலையல்ல அது. தண்டனை. மரண தண்டனை விதிக்கப்படும்போது எதற்காக தண்டனை என்பது குற்றவாளிக்குத் தெளிவாகச் சொல்லப்படுகிறது அல்லவா? அந்த வழக்கமே இங்கும் பின்பற்றப்பட்டிருக்கிறது. ‘உனக்கென்று ஓரிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  அந்த இடத்தில்தான் நீயும் உங்களைப் போன்றவர்களும் புழங்கிக்கொள்ளவேண்டும். அதன் எல்லையை நீ கடந்திருக்கிறாய். ‘எங்க ஜாதி’ எல்லைக்குள் நீ அத்துமீறி பிரவேசித்திருக்கிறாய். அதன்மூலம் எங்கள் மாண்பு கெட்டுப்போய்விட்டது. உன் காதலும் திருமணமும் எங்களை அசுத்தப்படுத்திவிட்டது. எனவே நீ இறக்கவேண்டும்.’

பொங்கி வெடிக்கும் வன்மத்தோடு சங்கரின் வலது கரத்திலும் கழுத்திலும் மாற்றி மாற்றி வெட்டியிருக்கிறார்கள். கவுசல்யாவையும் அதே வன்மத்தோடு தாக்கப்பட்டிருக்கிறார். ‘இத்தோடு செத்துத்தொலைடி’ என்று நீளமான கத்தியால் அவர் தலையின் வலது பக்கமும் இடது கை விரல்களிலும் வெட்டியிருக்கிறார்கள். கவுசல்யா இழைத்த குற்றம் என்ன என்பதும் அங்கேயே அறிவிக்கப்படுகிறது. துடித்து விழுந்த கவுசல்யாவைப் பார்த்து ஒருவன் கத்தியிருக்கிறான். ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’

இது சாதிக்காக, சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறை என்பதை இதைவிடவும் பட்டவர்த்தனமாக அறிவிக்கமுடியுமா?

(தொடரும்)

பகிர:
nv-author-image

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

3 thoughts on “சாதியின் பெயரால் #2 – ‘காதல் கல்யாணமா செய்கிறாய்?’”

 1. கண்களில் கண்ணீருடன் தான் இதைக் கடக்க முடிகிறது என்றாலும் இந்த வன்மம் எங்கள் கிராமத்திற்கு அருகில் என்னுடன் படித்த சக மாணவிக்கும் அமைதியாக நடந்ததை நினைத்து மனம் பதறுகிறது.ஆம் இன்று வரை என் சக மாணவியின் மரணம் இதே காரணத்திற்குத்தான் நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் வெளியில் சொல்லப்பட்டது தற்கொலை.வெகு வருடம் கழித்துதான் அவளைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.இந்த சாதி வெறி என்ற ஆணி வேர் அடியோடு பிடுங்கப்படும் போது அதிகமான உயிர்கள் காவு வாங்கப்படும் என்பதாகவே உணர்கிறேன்.படித்த சமுதாயத்தில் கூட சிலர் சுயநலத்துக்காகவே இந்த மடத்தனமான சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.இனி வரும் தலை முறைகள் இதன் கொடூரத்தை உணரச்செய்ய வேண்டும்.அரசாங்கமே சாதி மதம் தாண்டி திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் விழிப்புணர்வும் அளிக்க முன்வர வேண்டும்.ஆனால் தன் கட்சியைப்பலப்படுத்துவதற்கே இந்த சாதிதான் மிக முக்கிய காரணமாக இருக்கும் பட்சத்தில் அரசாங்கத்தை நம்பி ஒரு பயனும் கிடைக்கப்போவதில்லை.

  கடுமையான சட்டங்கள் வந்தாலொழிய இந்த சாதிவெறி தணியவே தணியாது.மக்கள் மாற நினைத்தாலும் சாதிவெறியர்கள் விடமாட்டார்கள்.
  நடந்த சம்பவத்தை அப்படியே சுட்டிக்காட்டி இருக்கிறார்.ஊடகங்களிலும் இது போன்ற கட்டுரைகளிலும் வாசித்து கடந்து சென்றுவிடத்தான் முடிகிறது .சட்டங்கள் கடுமையாக்கப்படும் வரையில் இந்தக்கொடூரக் கொலைகள் தொடரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

 2. Kumaresan Muruganandam

  மக்கள் மனங்களில் பெரும் மாற்றம் உருவாக நாம் உழைக்க வேண்டும். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நெடியது. விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நேற்று இன்றா விதைக்கப்பட்டது இந்த நச்சு விதை!
  நம்பிக்கையை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு இந்த களையைக் களைவோம்.

 3. காதல்… சாதி… எதிர்ப்பு… காலம் மாறினாலும்
  . இது தான் இடம் என்று சாதி பேரைச் சொல்லிக கொல்லும வெறி எப்போது அடங்குமோ…கட்சி.. மாற்றம் பேசி முழங்குவோர் இதற்கு வழி காண வேண்டும்.. மனம் மாற களம் காண வேண்டும்.. வாழ விடுவோம் என்று வீதிக்கு வீதி பிரசாரம் செய்தாலும் சாதி ஒதுக்கப்படுமா…..

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *