Skip to content
Home » சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

‘சாதியின் பேரமைதி’

ஐவரில் ஒருவர் கவுசல்யாவுக்குச் சொந்தக்காரர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. சங்கரை விரட்டி, விரட்டி சரமாரியாகக் கத்தியால் குத்தியிருக்கிறார். சங்கரைக் காப்பாற்ற முனைந்த கவுசல்யாவையும் தாக்கியிருக்கிறார். சங்கரைக் கொன்றுவிட்டு, கவுசல்யாவையும் தாக்கிவிட்டு ஐந்து பேரும் வந்த வழியே புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். சுற்றிலும் நல்ல கூட்டம். இருந்தும் அவர்கள் வந்தபோதும் சரி, தாக்கும்போதும் சரி, தாக்கிவிட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பியோடும்போதும் சரி; ஒருவரும் அவர்களைத் தடுத்ததுபோல் தெரியவில்லை.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். சங்கர் வழியிலேயே இறந்துவிட்டார். கவுசல்யாவுக்குத் தலையில் 18 தையல் போட்டிருக்கிறார்கள்.

அருகிலிருந்த ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் இந்தப் பதைபதைக்கச் செய்யும் சம்பவம் முழுக்கப் பதிவாகியுள்ளது. எப்படியோ இது வெளியில் கசிந்து, சமூக வலைத்தளம் முழுக்க நெருப்பு போல் பற்றிப் பரவ ஆரம்பித்துவிட்டது. சமீப காலங்களில் மிகுந்த பரபரப்போடு பரப்பப்பட்ட காணொளிக் காட்சிகளில் ஒன்றாக இது அநேகமாக இருக்கக்கூடும். சிவில் சமூகம் இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனது.

ஐந்து பேரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கவுசல்யாவின் தந்தை சின்னசாமி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் சரணடைந்தார். சின்னசாமி ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர், வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தவர்.

சாதியும் சாதி மீறலும்

‘எங்கள் கிராமத்தில் 1500 பள்ளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன’ என்கிறார் வேலுச்சாமி.

கிராமங்களில் பொதுவாக, குறிப்பிட்ட சாதி வட்டத்துக்குள்தான் திருமணங்கள் நடைபெறும் என்றாலும் சாதி விட்டு சாதி மணம் செய்துகொள்ளும் வழக்கமும் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறது. பெரும்பாலும் பெற்றோரின் சம்மதம் பெறாமல்தான் கலப்பு மணங்கள் நடைபெறுவது வழக்கம்.

குமரிலிங்கம் பல கலப்பு மணங்களைக் கண்டிருக்கிறது. பள்ளர், அருந்ததியர், வன்னியர் ஆகியோருக்கு இடையில் திருமணங்கள் நடந்திருக்கின்றன. சாதி கடந்து மட்டுமல்ல மதம் கடந்தும் மண உறவுகள் மலர்ந்திருக்கின்றன. பள்ளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் குமரிலிங்கத்தில் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. கலப்பு மணம் புரிந்துகொண்டவர்கள் பெரிதாக எந்த இடையூறும் இன்றி சுமூகமாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஒரு தலித் செயற்பாட்டாளரும் இதை ஒப்புக்கொள்கிறார். ‘கிட்டத்தட்ட 40 குடும்பங்களில் ஒன்றோ இரண்டோ கலப்புத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன.’ அவர்களைப் போலவே சங்கரும் கவுசல்யாவும் ஏன் வாழ்ந்திருக்கமுடியாது? ஏனென்றால், ‘முதல் முறையாக கள்ளர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு தலித்தை மணம் செய்துகொண்டிருக்கிறார்’ என்கிறார் அந்தச் செயற்பாட்டாளர்.

என் மகன் வேட்டையாடப்பட்டிருக்கிறான். பட்டப்பகலில் கொல்லப்பட்டிருக்கிறான். நூற்றுக்கணக்கானோர் நிறைந்திருக்கும் இடத்தில் எப்படி அது நடந்திருக்கமுடியும்? ஒரேயொரு காவலர் கூடவா இருந்திருக்க மாட்டார்?‘ என்று மனம் உடைந்து போகிறார் வேலுச்சாமி.

அபாயகரமான அமைதி

வன்முறைத் தாக்குதல் நடக்கும்போது யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது முதல் அதிர்ச்சி என்றால் நடந்த பிறகு அரசியல் களத்தில் நிலவும் அமைதி அடுத்த அதிர்ச்சி. அப்போது ஆட்சியிலிருந்த அஇஅதிமுக மட்டுமல்ல, திமுகவும்கூடப் போதுமான எதிர்வினை புரியவில்லை என்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. மே 16 தேர்தல் நெருங்கி வந்துகொண்டிருந்ததால் தலித் அமைப்புகள், சிபிஎம், சிபிஐ, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எவ்வளவு கவனமாக முடியுமோ அவ்வளவு கவனமாக இதைக் கையாண்டனர். ஒன்று அமைதியாக இருந்தனர் அல்லது அரை அமைதியோடு கடந்து சென்றனர். சங்கர் கொலை குறித்து வெளிவந்த சில அறிக்கைகளும்கூட சுற்றி வளைத்தே அமைந்திருந்தன.

அஇஅதிமுக ஏப்ரல் 2016 வரை எதுவுமே பேசவில்லை. திமுகவோ இதை ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்த்தது. நடந்திருப்பது சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறை, சாதித் தூய்மை, சாதியப் பெருமிதம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்து நடத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான படுகொலை என்று சொல்ல ஏனோ ஒருவருக்கும் மனம் வரவில்லை.

சம்பவம் நடந்த மறுதினம் வெளியிட்ட அறிக்கையில், எல்லாக் கொலைகளும் கண்டிக்கத்தக்கவையே என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். தனது செய்தி அறிக்கையில் கேள்வி பதில் பாணியில் பதிலளிக்கும்போது இக்கொலையைக் கண்டித்திருந்தார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இருவருமே ‘கலப்பு மணம்’ என்னும் பதத்தைப் பயன்படுத்தவில்லை.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கறாரான தொனியில் கொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். சில பாஜக தலைவர்கள் நிலைமையின் தீவிரத்தைக் குறைக்கும் விதமாக, பெண்கள் குடும்பங்களை மதித்து நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்கள். சாதியின் பெயரால் நடத்தப்பட்டிருக்கும் இந்தக் கொலையை ஒப்புக்கொள்வது இந்து ஒற்றுமை என்னும் அவர்கள் லட்சியக் கனவுக்கு எதிரானதாக மாறிவிடும் அல்லவா?

ஆளும் அதிமுகவோடு அணிசேர்ந்திருந்த சில தலித் அமைப்புகளும் இது குறித்துப் பேசுவது சங்கடமானதாகவே இருந்திருக்கும் போலும். தூத்துக்குடியைச் சேர்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஒருவர், ஆணவக் கொலையில் ஈடுபடும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் (பிசி) பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் (ஓபிசி) இடஒதுக்கீடு கிடையாது என்று அறிவிக்கவேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 153ஏ, தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் இடஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பது இவர் கோரிக்கை. இப்படியொரு கோரிக்கையை முன்வைத்ததற்காகவே அவர்மீது தமிழக அரசு வழக்குகள் பதிவு செய்யும் அளவுக்குச் சென்றது. பிசி, ஓபிசி பிரிவினரின் வாக்கு வங்கியின் முக்கியத்துவத்தை அதிமுக உணர்ந்திருந்ததையே இது காட்டுகிறது. அதிமுக மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளின் நோக்கமும் இதுதான்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸிடம் இது பற்றிக் கருத்து சேகரிக்க பத்திரிகையாளர்கள் முயன்றிருக்கின்றனர். ஊடகம் வலியுறுத்தவேண்டிய அனைத்து மாநில, தேசிய பிரச்சினைகள் குறித்தும் நான் தொடர்ந்து கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்லி முடித்துக்கொண்டுவிட்டார். நடந்திருப்பது பொருட்படுத்தத்தக்க அளவுக்குப் பெரிய விஷயமல்ல என்பதே அவர் சொல்லாமல் விட்ட செய்தி என்பதை உணர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டைப் படுகொலையைக் கண்டிப்பதாக ஓர் அறிக்கை அதன்பின் அவரிடமிருந்து வெளிவந்தது.

அனைத்து இடைநிலைச் சாதியினரையும் ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைப்பதன்மூலம் சாதி இந்துக்களின் ஓட்டுகளைக் கவர்வதே டாக்டர் ராமதாஸின் திட்டம் என்று குற்றம்சாட்டுகிறார் புதிய தமிழகத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ‘சாதியின் பெயரால் மேற்குப் பகுதிகளில் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களுக்கு அவரைத்தான் பொறுப்பாளியாக்கவேண்டும்’.

குமரிலிங்கம் கிராமத்துக்குச் சென்று சங்கரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்தத் தலைவர் வன்னி அரசு சங்கரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் அளித்திபருக்கிறார். கவுசல்யாவின் கல்விச் செலவை ஏற்க விசிகவும் அனைத்திந்தியக் காப்பீட்டுப் பணியாளர்கள் கூட்டமைப்பும் முன்வந்தன.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல உதவிக்கரங்கள் நீண்டன என்பது உண்மைதான். ஆனால் அரசியல் களத்திலிருந்தவர்கள் தங்கள் அதிகாரத்தைக் கொண்டு இதற்கு மேலும் செய்திருக்கமுடியும் என்பதும் உண்மை. நடந்திருப்பது சாதியின் பெயரால் நடத்தப்பட்டிருக்கும் ஆணவக் கொலை என்பதை எல்லாக் கட்சிகளுமே தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கமுடியும். என்ன குற்றம் நடந்திருக்கிறதோ அதன் பெயரைத் தயக்கமின்றிச் சொல்லியே அதனைக் கண்டித்திருக்கவும் முடியும்.

கொன்றவர் தொடங்கி கொல்லப்பட்டவர் குடும்பத்தினர் வரை; சமூக ஊடகங்கள் தொடங்கி அச்சு, காட்சி ஊடகம்வரை எல்லோரும் ஒப்புக்கொண்டுவிட்ட மிக அடிப்படையான உண்மைதான் அது. சங்கரும் கவுசல்யாவும் குரூரமாகத் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சியை இணையத்தில் காணாதவர்களே இருக்கமுடியாது என்பதால் நடந்திருப்பது அப்பட்டமான ஆணவக்கொலை என்பதை சிவில் சமூகமும் நன்கறிந்தே இருந்தது. அரசியல் கட்சிகள் மட்டும்தான் நேரடியாகப் பெயர் சொல்லி அழைக்க இறுதிவரை மறுத்துவிட்டன.

அதற்குக் காரணம் அடையாள அரசியலின் எழுச்சி என்கிறார்கள் சமூக, கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்கள். சாதி அடையாளமும் சாதி அடிப்படையில் வாக்கு செலுத்தும் வழக்கமும் நீடிக்கும்வரை சாதித் தூய்மை குறித்த கருத்தாக்கமும் நீடிக்கவே செய்யும். தமிழக அரசியல் போக்கைத் தீர்மானிப்பதில் இந்த மூன்று அம்சங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாதி கடந்த காதல் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது என்கிறார் விடுதலைக் கட்சிகள் அமைப்பைச் சேர்ந்த து. ரவிக்குமார்.

அரசியல்வாதிகளின் அமைதியை, அம்பேத்கரின் சொற்களில் சொல்வதானால் ‘சாதியின் பேரமைதி’ என்றுதான் அழைக்கவேண்டியிருக்கும்.

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

1 thought on “சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’”

  1. காலம் காலமாகத் தொற்று போல் தொடரும் சாதிக் கொடுமை… அதைக் கடந்த மனங்கள் இணைப்பை ஏற்கும் பக்குவம் அற்ற கொடும் குணம் கொண்டோர் கொலையில் முடிப்பதை நிறுத்த… தடுக்க…வேண்டும் என்ற எண்ணம் பரவ வேண்டும். அமைதி இதில் கூடாது. வாக்கு வங்கி அரசியல் மாறி பிரச்சினை சார்ந்த அரசியல் இனி தேவை. தேர்தலுக்கு தேர்தல் பேசுவது.. பின் வேறு பாணி அரசியல் ஏன் என்ற வினா தலைவர்களை நோக்கி நீள வேண்டும்.. பேரமைதி பெரும் கருத்தியல் புரட்சியாக மாறுமா…

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *