குற்றவாளிகள் மேல் முறையீட்டுக்குச் சென்றபோது வழக்கும் அடுத்த கட்டத்துக்குச் சென்றது. அரசுத் தரப்பும் கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையும் உறுதி செய்யுமாறும் அரசுத் தரப்பு கேட்டுக்கொண்டது.
நீதிபதிகள் சத்திய நாராயணா, நிர்மல் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இரு தரப்பு வாதங்களும் பிப்ரவரி 12ஆம் தேதி நிறைவடைந்தன. 27ஆம் தேதி எழுத்துப் பூர்வமாக வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்பின் ஒத்திவைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இறுதியாக 22 ஜூன் 2020 அன்று வெளிவந்தது.
தீர்ப்பின்படி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டார். மற்ற ஐவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஐந்து பேரும் குறைந்தது 25 ஆண்டுகளாவது சிறையில் கழித்தாகவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. தன்ராஜுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையும் மணிகண்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டுச் சிறையும் ரத்து செய்யப்பட்டது.
இவை போக, தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்த அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விடுவிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை. அதனால் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லிவிட்டது நீதிமன்றம்.
எதிர்பார்த்தது போலவே இத்தீர்ப்பு பல தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது’ என்றது தீண்டாமை ஒழிப்பு முன்னணி. ‘இந்த வழக்கில், உடனடியாகத் தமிழக அரசு, உரிய வலுவான, சான்றுகளைத் தந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திடவேண்டும்’ என்றும் அது அரசை வலியுறுத்தியது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, தலித்திய, பெரியாரிய அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் அதன்பின் மேல்முறையீடு நடைபெறவில்லை.
ஆணவக்கொலையும் தனிச்சட்டமும்
சாதித் தூய்மையைக் காப்பதற்காக நடத்தப்படும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துவருகிறது என்கிறார் எவிடென்ஸ் எனும் சமூகநல அமைப்பை நடத்திவரும் அ. கதிர். ’கலப்பு மணம் செய்துகொண்டவர்களில் ஆண்களும் பெண்களுமாக 81 பேர் 2013 தொடங்கி மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் பலமான சமூகச் சட்டங்கள் உள்ளன என்பது நிஜம்தான் என்றாலும் அவற்றைப் பிரயோகிக்கும் துணிவை அரசியல் களத்தில் நம்மால் காணமுடியவில்லை. எனவே இத்தகைய கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவைப்படுகிறது’ என்கிறார் கதிர்.
‘மேற்கண்ட 81 மரணங்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் பெண்கள். தலித்துகளைத் திருமணம் செய்துகொண்டதற்காகச் சொந்தக் குடும்பத்தினராலே இவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்கிறார் கதிர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ்மருதூர் எனும் கிராமத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மனிதத்தன்மையற்றக் கொலைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சாதி இந்துவான பழனியப்பன் என்பவரை அமிர்தவல்லி எனும் தலித் பெண் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து பழனியப்பனின் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் தாக்கிக் கொன்றிருக்கிறார்கள். அத்துடன் நில்லாமல், பிறந்து 40 நாள்களே ஆகியிருந்த சிசுவையும் கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள். ‘மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இத்தகைய நிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறோம். கொடூரமான இந்த வழக்கத்தை நிறுத்த சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்’ என்று வலியுறுத்துகிறார் கதிர்.
சமூகச் செயற்பாட்டாளர் அ. மார்க்ஸும் இதனை ஏற்கிறார். சிறிது காலமாகவே ஆணவப் படுகொலைகள் பற்றி நாம் நிறைய கேள்விப்படுகிறோம் என்பதால் இது ஒரு சமீபத்திய போக்காக இருக்கவேண்டும் என்று பலர் நம்புகின்றனர். தலித் அமைப்புகளும் ஊடகங்களும் சமீப காலமாக இத்தகைய நிகழ்வுகளை அதிகம் வெளிக்கொண்டுவருவதாலும் விவாதிப்பதாலும் அப்படியொரு தோற்றம் ஏற்படுகிறது. மற்றபடி, ஆணவக் கொலை நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் நிகழ்ந்துவருகிறது என்கிறார் மார்க்ஸ். பட்டியல் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கு எப்படி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதோ அதேபோல் ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் சிறப்புச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு நீதி பெற்றுத் தரமுடியும் என்கிறார் அ. மார்க்ஸ்.
தற்சமயம் பெரும்பாலான ஆணவக் கொலைகள் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174இன் கீழ் சந்தேகத்துக்குரிய மரணங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. சங்கர் போன்றோரின் கொடூரமான கொலைகளுக்கு 302ஆம் பிரிவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளும் பொருந்தும். ஆனால் இவை போதுமானவையல்ல என்கிறார் கதிர். ’கலப்பு மணம் செய்துகொண்டவர்களில் 18 வயது தொடங்கி 30 வரையிலானவர்களின் மரணங்கள், குறிப்பாக, பெண்களின் மரணங்கள் முழுமையாக விசாரிக்கப்படவேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அதற்கு சிறப்புச் சட்டம்தான் உதவும்.’ 2012ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் ஒரு சட்ட வரைவை (Prohibition of Unlawful Assembly (Interference with the Freedom of Matrimonial Alliances) முன்மொழிந்தது. அதை அரசு இன்னமும் பரிசீலிக்கவில்லை என்று நினைவுபடுத்துகிறார் கதிர். இதற்கிடையில், வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது.
கடந்த காலமும் எதிர்காலமும்
ஒரு பக்கம் சட்டப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இன்னொரு பக்கம் தீவிர மனப் போராட்டங்களால் அலைக்கழிக்கப்பட்டு வந்தார் கவுசல்யா. வாழ்வின் மகிழ்ச்சியான கணங்களையெல்லாம் யாரோ தட்டிப் பறித்துக்கொண்டுவிட்டது போல் இருந்தது. அச்சமும் குழப்பமும் கலக்கமும் அவரை ஓயாமல் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தன. வன்முறையின் கோர முகத்தை மிக அருகில் கண்டுவிட்ட அவரால் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலவில்லை. உடலில் ஏற்பட்டிருந்த காயங்களை மட்டுமே மருத்துவமனையில் சீர் செய்து அனுப்பியிருந்தனர். உள்ளுக்குள் ரணமாகிக்கிடந்த நினைவுகளை என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. விடுபடமுடியாத துன்பச் சூழலில் சிக்கிக்கொண்டது போல உணர்ந்தார். அந்த உணர்வு பெரிதாக வளர்ந்து அவரைப் போட்டு அழுத்திக்கொண்டிருந்தது.
தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக வலைத்தளம் என்று தொடங்கி முழு ஊடக உலகும் அவர் கடந்த காலத்தை அணு அணுவாகப் பிரித்து வைத்து, அலசி ஆராய்ந்து கொண்டிருந்தபோது அவர் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருப்பார் என்பதை ஒருவராலும் கற்பனைக்கூடச் செய்து பார்க்கமுடியாது. அங்குலம் அங்குலமாகத்தான் அவரால் தன்னைத் திரட்டியெடுத்துக்கொள்ளமுடிந்தது. மெல்ல, மெல்லதான் அவரால் எழுந்து நிற்கமுடிந்தது. கால்களை நிலத்தில் பதித்து ஊன்றி நிற்பதற்குமுன்பே அவர் தன் போராட்டங்களைத் தொடங்கிவிட்டார்.
நீதிமன்றக்கூண்டில் ஏறி நின்று தயக்கமோ கலக்கமோ இன்றி தெள்ளத்தெளிவாகக் குற்றவாளிகளைக் கை காட்டி, இவர்கள்தான் என் சங்கரைக் கொன்றனர் என்று அறிவிக்கும் வலுவை அவர் தனக்குள்ளிருந்தே திரட்டிக்கொண்டார். தன் ரத்த உறவுகளை நோக்கி விரல்களை நீட்டுகிறோமே எனும் நடுக்கம் அவரிடம் அப்போது இல்லை. நடக்கும் போரில் தான் எந்தப் பக்கம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதில் அவருக்குத் துளி குழப்பமும் இல்லை. என்ன நடந்தாலும் சரி, நான் சங்கரைத்தான் மணம் செய்துகொள்வேன். அவரோடுதான் சேர்ந்து வாழ்வேன் என்று எவ்வளவு துணிவோடு முன்பு முழங்கினாரோ அதே துணிவோடு, இவர்கள்தான் என் சங்கரை என்னிடமிருந்து பறித்தனர். இவர்களுக்குத் தண்டனை கொடுங்கள் என்று முழங்கினார் கவுசல்யா.
நினைவுகள் அழிவதில்லை என்பது வேறு எவரையும்விட கவுசல்யாவுக்குத் தெரியும். காலம் எல்லா ரணங்களையும் ஆற்றுவதில்லை என்பதையும் அவர் அனுபவப்பூர்வமாகவே அறிவார். அனைத்தையும்மீறி அவர் தன் முதல் அடியை எடுத்து வைத்தார். கடந்த காலத்திலிருந்து தன்னைப் பிய்த்தெடுத்துக்கொண்டு நிகழ்காலத்தில் கால்களைப் பதித்தார்.
முதல் முறை நடை பழகும் குழந்தை போல் தட்டுத் தடுமாறியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கமுடிந்தது. நிற்கமுடியுமா, நடக்கமுடியுமா, அப்படியே நடக்க முடிந்தாலும் இனி எங்கே போவது என்று சந்தேகங்களும் குழப்பங்களும் தோன்றிக்கொண்டேதான் இருந்தன. இருந்தும் அவர் நடப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. தன் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பை நிரந்தரமாகக் கடந்த காலத்திடம் ஒப்படைக்க அவர் தயாராக இல்லை. அச்சமின்றி நடக்கத் தொடங்கினார்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, கவுசல்யா போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு அரசுப் பணியோ ஓய்வூதியமோ வழங்கவேண்டும். அதன்படி சங்கரின் தந்தைக்கு உடுமலைப்பேட்டையில் ஒரு சத்துணவுக் கூடத்தில் வேலை வழங்கப்பட்டது. கவுசல்யாவுக்கு ஓய்வூதியமும் அளிக்கும் உத்தரவையும் அரசு பிறப்பித்தது. கவுசல்யாவின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகவே இவை சாத்தியமாயின.
இதைச் சாத்தியப்படுத்தியதில் எவிடென்ஸ் கதிர் மற்றும் அவர் அமைப்பின் உதவியை நன்றியோடு நினைவுகூர்கிறார் கவுசல்யா. நீண்ட சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கான துணிவை கவுசல்யாவுக்கு வழங்கியதோடு வாழ்வின் மிகப் பலகீனமான ஒரு கட்டத்தில் அவருக்குப் பக்கபலமாகவும் இருந்திருக்கிறார் கதிர். உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் சோர்ந்துவிடாமல் பாதுகாத்திருக்கிறார். கவுசல்யா மறுபிறப்பு எடுத்து வந்ததில் கதிருக்கு நிச்சயம் குறிப்பிடத்தக்க ஓரிடம் இருக்கிறது.
சங்கரின் பெயரில் சமூக நீதி அறக்கட்டளையொன்றை உடுமலைப்பேட்டையில் தொடங்கியிருக்கிறார் கவுசல்யா. கலப்பு மணம் புரிந்துகொள்ளும் தம்பதியினருக்கும் தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ஆதரவுக்கரம் அளிப்பது இந்த அறக்கட்டளையின் முக்கியப் பணியாக இருக்கும் என்கிறார் கவுசல்யா. டிசம்பர் 2018இல் சக்தி என்பவரை கவுசல்யா மணம் புரிந்துகொண்டார். சங்கரின் குடும்பத்தினர் நேரில் வந்து கலந்துகொண்டனர். மற்றொரு வாழ்க்கை. மற்றொரு தொடக்கம்.
இன்று கவுசல்யா ஒடுக்கப்பட்டோர் மத்தியில் ஓர் ஆளுமையாக, நம்பிக்கையூட்டும் ஒரு போராளியாக வளர்ந்து நிற்கிறார். ‘நான் தொடர்ந்து போராடுவேன்’ என்று மிகுந்த உத்வேகத்தோடு அவரால் இன்று சொல்லமுடிகிறது. தன் வாழ்வையும் தன்னைப் போன்ற எண்ணற்றோரின் வாழ்வையும் சிதைத்தது, இன்னமும் சிதைத்துக்கொண்டிருப்பது சாதிதான் என்னும் நிதர்சனமான உண்மையை அவர் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் பதிவு செய்து வருகிறார். எந்தக் குற்றத்தைச் செய்யாதே என்று அவர் குடும்பம் வலியுறுத்தியதோ அதையேதான் அவர் சமூகத்துக்குப் பரிந்துரைக்கிறார் : சாதி கடந்து காதலியுங்கள். சாதியை மறுத்துக் காதலியுங்கள். சாதியை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்ளுங்கள்!
நம்மில் பலரைப் போல் புத்தகங்களிலிருந்தும் கோட்பாடுகளிலிருந்தும் அல்ல, களத்திலிருந்தும் கள யதார்த்தத்திலிருந்தும் சாதியைப் புரிந்துகொண்டவர் கவுசல்யா. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் ‘சாதி ஒழியவேண்டும்’ என்று இன்று குரல் கொடுத்து வருகிறார் கவுசல்யா. சாதியின் கோரப்பிடியிலிருந்து இன்று நாம் ஒரு சமூகமாக வெளிவருகிறோமோ அன்றுதான் நமக்கெல்லாம் மெய்யான விடுதலை சாத்தியம் என்கிறார் அவர். ‘சமூக நீதியும் சாதியொழிப்பும் ஒரே நேரத்தில் நடைபெறவேண்டும்’ என்கிறார் கவுசல்யா. ‘அதற்காக நாம் அனைவரும் வேறுபாடுகளின்றி ஒன்றுபடவேண்டும்.’
நீண்ட நெடிய போர்தான். ஆனால் அதை முன்னெடுப்பதற்கான வலு என்னிடம் இருக்கிறது என்கிறார் கவுசல்யா. இது ஆபத்தான பணி என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ‘நான் கோழையாக இருந்திருந்தால் சங்கரின் மனைவியாக இருந்திருக்கமுடியாது. நான் பெரியாரின் பேத்தி.’
(தொடரும்)
கதிர் மாமனிதராகப் போற்றப்பட வேண்டியவர்.
சக்தியும் பாராட்டப்பட வேண்டியவர்.
கவுசல்யாவின் மன வலிமை மற்றும் போராட மற்றவர்களுக்கு உதவ அறக்கட்டளையை நிறுவியுள்ளது போற்றுதலுக்குரியது.
சக்தி கவுசல்யா தம்பதியர்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்துகாட்ட வேண்டும். வாழ்த்துக்கள்.
சீராக இந்நிகழ்வுகளை சிரத்தையுடன் படம்பிடித்து எழுதி வெளிக்கொண்டு வரும் திரு. இளங்கோவன் ராஜசேகரின் பணியும் போற்றுதலுக்குரியது.