Skip to content
Home » சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!

சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!

இளவரசன்

இளவரசன் மன உளைச்சலில் சிக்கியிருந்தாரா என்றால், ஆம். இறப்பதற்கு முன்பு பல மணி நேரங்களுக்கு இதயம் முழுக்க வலியைச் சுமந்துகொண்டிருந்தார் அவர். தன் வாழ்வைச் செலுத்திக்கொண்டிருக்கும் ஆதார அச்சு சக்கரத்திலிருந்து முறிந்து விழுந்துவிட்டதுபோல் இருந்திருக்கும் அவருக்கு. பார்த்துப் பார்த்து வளர்த்து வைத்திருந்த கனவுகள் அனைத்தும் ஒரே நாளில் கலைந்துபோனதுபோல் உணர்ந்திருப்பார்.

பற்றிக்கொள்ள எந்தக் கரமும் இல்லாததுபோல், ‘வருந்தாதே, நான் இருக்கிறேன்’ என்று நம்பிக்கையூட்ட எந்தக் குரலும் இல்லாததுபோல் அவர் உணர்ந்திருக்கவேண்டும். இனியும் வாழ்வது சாத்தியமா என்றும் அந்த வாழ்க்கைக்குப் பொருளென்று ஏதேனும் இருக்குமா என்றும் அவர் பரிதவித்திருப்பார். தனது வெறுமை உடலிலிருந்து பரவி முழு உலகையும் பற்றிக்கொண்டதைக் கண்டு அஞ்சியிருப்பார். மனிதர்கள் உணர்வற்றவர்களாக மாறிவிட்டதையும் அவர்களிடமிருந்து மனிதம் துண்டிக்கப்பட்டுவிட்டதையும் கண்டு நம்பிக்கையிழந்திருப்பார். பொருளற்ற, சாரமற்ற, ஈரமும் அற்ற இந்த நிலத்தில் எதற்காக உயிர்த்திருக்கவேண்டும்? யாருக்காக?

0

தர்மபுரியிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அருகில் தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரிக்குப் பின்புறம் அமைந்திருந்த ரயில் தண்டவாளத்துக்கு அருகில் 20 வயது இளைஞனொருவனின் உடல் 4 ஜூலை 2013 அன்று மாலை 3.45 மணிக்குக் கண்டறியப்பட்டது. தலை பிளந்திருந்தது. மற்றபடி உடலில் பெரிய காயங்கள் இல்லை. ரயில் பாதையிலிருந்து சில அடி தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. உங்கள் மகனின் வண்டி நிற்கிறது, வாருங்கள் என்று சொல்லிதான் தந்தை, டி. இளங்கோவை ஒரு காவலர் அழைத்திருக்கிறார். குழப்பத்தோடு வந்தவருக்கு அதன்பின் அவர் மகனின் உடலும் காட்டப்பட்டிருக்கிறது.

தர்மபுரி மாவட்ட காவல்துறை தனது விசாரணைகளின் முடிவில் நடந்திருப்பது தற்கொலைதான் என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்தது. இல்லை, என் மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார் டி. இளங்கோ. ஆயிரம் பிரச்சினைகள் வந்த பிறகும் மிகுந்த நம்பிக்கையோடுதான் அவன் இருந்தான். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், திவ்யா என்னிடம் திரும்பி வரத்தான் போகிறாள் என்றுதான் கடைசி வரை சொல்லிக்கொண்டிருந்தான். எப்படியும் தனக்குக் காவல் துறையில் வேலை கிடைக்கும் என்றும் அவன் நம்பிக்கொண்டிருந்தான். என் இளவசரன் நிச்சயம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டான்! இதை என்னால் ஏற்கமுடியாது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறையின் விசாரணை முடிவை ஏற்றுக்கொண்டது. ‘இதில் எந்தச் சதியும் இல்லை. இளவசரன் கொல்லப்படவில்லை. கொலை எனும் பேச்சுக்கே இங்கே இடமில்லை. இளவரசன் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்!‘ மிகுந்த எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட சிங்காரவேலு ஆணையம் வந்தடைந்த முடிவும் இதுதான். ‘நடந்திருப்பது தற்கொலை. இதில் விவாதங்களுக்கோ சர்ச்சைகளுக்கோ இடமில்லை.‘

இளவரசனின் மரணம் சர்ச்சைக்குரியது என்று சொல்பவர்களும் சரி, அதில் சந்தேகத்துக்கு எந்த இடமும் இல்லை என்று சொல்பவர்களும் சரி. இருவருமே ஒப்புக்கொள்ளும் ஓர் உண்மை, இளவரசன் தனது இறுதிக் கணங்களில் கடும் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்தார் என்பதுதான். அந்த மன அழுத்தத்துக்கான காரணங்கள் வெளிப்படையானவை. நம் மனச்சாட்சியை உலுக்கியெடுப்பவை.

இளவரசனின் கதை ஷேக்ஸ்பியரின் துயர நாடகத்தின் சாயலைக் கொண்டிருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தின் வறண்ட நிலத்தில் பூத்த அவருடைய காதல் குடும்ப மோதல், மனக்கசப்பு, தற்கொலை, வன்முறை, சூறையாடல், கொலை, சாதி மோதல், சமூகக் கொந்தளிப்பு, அரசியல் புயல் என்று அடுத்தடுத்து சங்கிலித் தொடர்போல் வளர்ந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டிருக்கிறது. தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் மகள் திவ்யாவின்மீது கொண்ட காதல் அவருடைய மரணத்தில் முடிவடைந்திருக்கிறது.

பிரச்சினையின் ஆரம்பமும் அடிப்படையும் ஒன்றுதான். இளவரசன் ஒரு தலித். திவ்யா மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சாதியைச் சேர்ந்தவர். சாதிப் படிநிலையின் ஒழுங்கைக் குலைத்துப்போடும் ஆற்றல் கொண்ட இந்தக் காதலை இணையமுடியாத அல்லது இணையக்கூடாத காதல் என்றே நம் சமூகம் கவனத்தோடு வரையறுத்து வைத்துள்ளது. அந்த எல்லையை மீறிக் கடந்ததுதான் இளவரசனின் பெருங்குற்றம்.

தனது காதல் ஒரு குற்றமாகப் பார்க்கப்படும் என்பதை இளவரசன் அறிந்திருக்கவில்லை என்று சொல்லமுடியாது. சமூகத்தின் விதிமுறைகளை அவர் நிச்சயம் அறிந்து வைத்திருந்தார். எதிர்ப்புகள் வரும் என்று தெரியும். சதி வலைகள் பின்னப்படும் என்று தெரியும். ஆனால் அனைத்தையும் முறியடிக்கும் சக்தியாக திவ்யா தன்னோடு இருப்பார் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கையோடுதான் அவர் திவ்யாவை மணந்துகொண்டார். அந்த நம்பிக்கையோடுதான் ஒரு புதிய வாழ்வையும் தொடங்கினார். அந்த ஆதார நம்பிக்கை முறிந்துபோனபோது இருள் தவிர வேறு எதுவும் இளவரசனின் கண்களுக்குத் தெரியவில்லை.

இளவரசனை விழுங்கிய அந்த இருளை யார் அவர்மீது திணித்தது? இந்தக் கேள்விக்கு ஆத்ம சுத்தியோடு விடை தேடத் தொடங்கினால் தனி மனிதர்களைக் காட்டிலும் அதிகமாக அமைப்புகளையே நாம் சுட்டிக்காட்டவேண்டியிருக்கும். சாதியமைப்பு. வேர் போல் பரவியிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனை. சாதியைத் தங்கள் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகள். தூய்மைவாதம். சாதியப் பெருமிதம். பெண்களை உடைமைகளாகக் கருதும் பிற்போக்கு மனோபாவம். ஆண்டான், அடிமை மனநிலை. குலப்பெருமை. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஆதிக்கம் செலுத்தம் கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டம். வர்க்க வேறுபாடுகள். பிறப்பின் அடிப்படையில் நான் மேலே, நீ கீழே என்று மனிதர்களைப் பாகுபடுத்தும் போக்கு. இவை அனைத்தின்மீதும் நம் விரல்களை நீட்டவேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் பல்வேறு காரணங்கள் அடுக்கி, பல்வேறு தத்துவங்கள் சொல்லி, நியாயப்படுத்தும், பின்பற்றும், கண்டும் காணாமலும் போகும் அனைவரையும் கண்டு நாம் கவலைப்பட்டாக வேண்டும். இவையெல்லாம் மாறினால் ஒழிய வெளிச்சம் கிடைக்கப்போவதில்லை.

ரயில்வே தண்டவாளத்துக்கு அருகில் இளவரசனின் உடல் கண்டறியப்பட்டுள்ள செய்தி என்னை வந்தடைந்தபோது பெரிய பாறாங்கல் என்மீது வந்து விழுந்ததுபோல் இருந்தது. இது உண்மைதானா என்று மீண்டும், மீண்டும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்று என் மனம் அரற்றிக்கொண்டே இருந்தது. அதற்கு முந்தைய தினம்தான் இளவரசனைச் சந்தித்திருந்தேன். பேசியிருந்தேன். அவருடைய முகம் என் நினைவுகளை நிறைக்க ஆரம்பித்தது. அவருடைய புன்னகை வளர்ந்து, வளர்ந்து என்னைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தது.

பல இரவுகள் உறக்கமின்றித் தவித்தேன். எதையோ பறிகொடுத்ததுபோல் வெறுமையாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் நான் நானாகவே இல்லை. என்னுடைய இயல்பு நிலை பறிபோய்விட்டது போல், இன்னது என்று சுட்டிக்காட்டமுடியாத ஏதோவொன்று என்னிடமிருந்து பறிக்கப்பட்டதுபோல் உணர்ந்தேன். என் தவிப்பு முழுமையாக அடங்குவதற்கும் இதிலிருந்து நான் மீண்டுவருவதற்கும் எனக்கு மேலும் அதிகக் காலம் பிடித்தது.

0

இளவரசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பதற்கான இறுதி சாட்சியாக அவருடைய கடிதத்தைக் காவல் துறை உயர்த்திக் காட்டியது. நான்கு பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதத்தை அவர் மரணமடைந்த இடத்துக்கு அருகிலிருந்து கிராமத்தினர் கண்டறிந்து கொடுத்திருக்கிறார்கள். அது இளவரசன் எழுதிய கடிதம்தான் என்பதை அவருடைய வேறு கடிதங்களோடு ஒப்பிட்டு சென்னையிலுள்ள தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்திருக்கின்றனர். தனது மரணத்துக்குச் சிறிது நேரத்துக்கு அவர் இதனை எழுதியிருக்கவேண்டும் என்பது அவர்கள் கணிப்பு.

ஆம், நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று நேரடியாக அறிவித்திருப்பதோடு, ஏன் அந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது என்பதையும் அக்கடிதத்தில் இளவரசன் விளக்கியிருந்தார். தன் மரணத்துக்கு யாரையும் பொறுப்பாளியாக்கவேண்டியதில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்திலிருந்து சில பகுதிகளைக் காவல் துறையினர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். கீழ்வருபவை இளவரசனின் சொற்கள்.

‘என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. இது (தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பது) என் முடிவு. என் கடைசி ஆசை இதுதான். என் மரணத்துக்குப் பிறகு திவ்யா என்னைக் காண வருவார். அப்படி அவள் வந்தால் யாரும் அவரைத் திட்டக்கூடாது. (என் உடலைக் காண) அவள் அனுமதிக்கப்படவேண்டும். தயவு செய்து கோபம் கொண்டு அவளை யாரும் திட்டிவிட வேண்டாம். திவ்யா மிக நல்ல பெண். நான் அவளை ஆழமாகக் காதலிக்கிறேன். எனக்காக அவள் கஷ்டப்படக்கூடாது. அவளாவது மகிழ்ச்சியோடு வாழவேண்டும்.’

தனது கடிதத்தின் கடைசி வரியை மட்டும் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார் இளவரசன்.

‘I love you so much da baby Divya.’

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

1 thought on “சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!”

  1. Kumaresan Muruganandam

    மிகவும் வேதனையானது, வாசிப்பதற்கும் கூட. படிநிலைகளால் பிரிக்கப்பட்ட இந்த நாடு நீண்ட தூரம் செல்ல வேண்டும். எவ்வளவு தூரமானாலும், எவ்வளவு காலமானாலும், கடந்தேயாக வேண்டும். கடந்து செல்வோம் என்ற நம்பிக்கையை விதைப்போம்.

    இந்தத் தொடர் ஆரம்பம் முதல் மனதை உலுக்கி வருவதோடு பலரையும் சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன். ஆனவக்கொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என்ற குரல்கள் வெகுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *