திவ்யாவுக்கு வேறு வகையான தண்டனையைச் சமூகம் அளித்திருந்தது. இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய தினம், அதாவது 3 ஜூன் 2013 அன்று திவ்யா தன் கணவரைக் ‘கைவிட்டுப்’ பிரிந்து செல்லவேண்டியிருந்தது. முதலில் காதலையும் பின்னர் இதயத்திலிருந்து இளவரசனையும் அவர் முற்றாகத் துறக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
தர்மபுரியில் நாயக்கன் கோட்டை கிராமத்துக்கு அருகிலுள்ள செல்லங்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன், தேன்மொழி ஆகியோரின் மகள், திவ்யா. சாதி அடுக்கில் இடைநிலையில் இருக்கும் வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர். தமிழக மக்கள் தொகையில் தோராயமாக 13 சதவிகிதம்வரை (அம்பாசங்கர் ஆணைய அறிக்கை, 1985) கொண்ட சமூகம் இது. குறிப்பாக வட தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
இந்து சாதிப் படிநிலை என்பது மிகக் கவனமாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்புமுறை என்று அம்பேத்கர் குறிப்பிட்டதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். தமக்கு மேலே சில குழுக்கள் இருப்பதுபோல் கீழும் எப்போதும் சிலர் இருப்பதைச் சாதியமைப்பு உறுதி செய்கிறது. இந்த அமைப்பின்படி ஒரே நேரத்தில் நீங்கள் ஆதிக்கத்துக்கு ஆட்பட்டவராகவும் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கமுடியும். சாதியமைப்புக்கென்று ஓர் ஒழுங்குமுறை இருக்கிறது. அவரவர் அவரவருக்கான இடத்தில் பொருந்தியிருக்கும்வரை பிரச்சினை இருக்காது. மீறல் நிகழும்போது ஒழுங்கு குலைக்கப்படுகிறது.
அதனால்தான் நத்தம் காலனியிலுள்ள பறையர் சாதியைச் சேர்ந்த இளவரசனை திவ்யா காதலித்ததை ஒரு தனி நபர் நிகழ்வாக அவரைச் சுற்றியிருந்தவர்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதைப் போல் பதறினார்கள். வீட்டிலிருப்போரால், உறவினர்களால், அக்கம் பக்கத்தினரால் எத்தகைய தாக்குதல்களுக்கெல்லாம் திவ்யா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளாகியிருப்பார் என்பதை நாம் யூகிக்கத்தான் வேண்டியிருக்கும். வசைகள், சாபங்கள், மிரட்டல்கள், எதிர்ப்புகள் எதற்கும் குறைவு இருந்திருக்காது. அனைத்தையும் மீறி அக்டோபர் 2012இல் இளவரசனும் திவ்யாவும் வீட்டைவிட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டனர்.
சாதியின் லட்சுமணக் கோடு மீறப்பட்டது. இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினை சமூகப் பிரச்சினையாகப் பூதாகரம் எடுத்து நின்றது. நடந்திருப்பது எவ்வளவு பெரிய ஒழுங்கீனம் என்பதையும் இந்தத் திருமணம் எத்தனை பெரிய அவமானத்தை வன்னியர் சாதி மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் நவம்பர் 7ஆம் தேதி காலை கிராமத்தில் கூட்டப்பட்ட பஞ்சாயத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
அடிப்படையில் அது ஒரு கட்டப்பஞ்சாயத்துதான். சம்பந்தப்பட்ட இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு திரட்டப்பட்டிருந்தனர். என்ன இருந்தாலும் நாகராஜன் தன் மகளை இப்படி வளர்த்திருக்கக்கூடாது அல்லது அவள் வெளியேறிச் சென்றதை அனுமதித்திருக்கக்கூடாது என்பதுபோல் குற்றம் சாட்டும் தொனியில் அங்கிருப்பவர்கள் நிச்சயம் பேசியிருக்கவேண்டும். அதன்பின் நடந்ததை அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
நாகராஜன் மிகுந்த வருத்தத்தோடு தன் தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறாராம். என் மகள் ஒரு தலித் இளைஞனைக் காதலித்ததைத் தொடக்கம் முதலே நான் ஏற்கவில்லை. எனக்கு இதில் உடன்பாடில்லை என்பதை என் மகளிடம் பலமுறை வெளிப்படுத்திவிட்டேன். கடிந்தும் பார்த்துவிட்டேன். ஆனால் அவள் கேட்பதாக இல்லை. எதுவும் சரிவராத நிலையில், என் மகளிடம் மண்டியிட்டு, தயவுசெய்து அவனை மறந்துவிடு, எங்களோடு திரும்பிவிடு என்றும் இறைஞ்சிவிட்டேன். அவளோ, என் கணவனை விட்டுப் பிரியமாட்டேன் என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லிவிட்டாள். இதற்குமேல் நான் என்ன செய்வது? மனமுடைந்துதான் நாகராஜன் கதறியிருக்கவேண்டும். ஆனால் சுற்றியிருந்தவர்களோ அவருடைய இயலாமையைப் பரிகசித்திருக்கிறார்கள்.
பேசவேண்டியதெல்லாம் பேசி முடித்தபின், ஒரு பெண் அவளுடைய தந்தைக்குச் சொந்தமானவள் என்றும் தந்தையின் அனுமதியின்றி அவளை யார் கவர்ந்து சென்றாலும் அது தவறு என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள். திசை மாறிச் சென்றுவிட்ட திவ்யா ‘மீட்கப்படவேண்டும்’ என்றும் தந்தையிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வேறொரு கோணத்தில் பார்க்கவேண்டுமானால், திவ்யா யாருடைய உடைமை என்பதைத் தீர்மானிக்கவேண்டிய அதிகாரத்தை சாதி கைப்பற்றிக்கொண்டது. அதன்படி திவ்யா அவருடைய சாதிக்குச் சொந்தமானவர். இக்கூட்டத்தில் இளவரசனின் தரப்பினரும் கலந்துகொண்டனர் என்றாலும் அவர்கள் குற்றவாளியின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம்.
அந்தக் கிராமம் சந்தித்த முதல் கலப்பு மணம் அல்ல இது. பல கலப்புத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஏற்கமுடியாத பெற்றோரால் அவை எதிர்க்கப்பட்டிருக்கின்றன, நாளடைவில் எதிர்ப்புகள் பலவீனமடைந்து இரு குடும்பங்களும் இணைந்திருக்கின்றன. இணைய மனமில்லாதவர்களும் இருந்திருக்கிறார்கள். இவை இயல்பானவை. எல்லா இடங்களிலும் நீடிப்பவை. ஆனால் திவ்யாவை இளவரசன் மணந்துகொண்டதை மற்றொரு கலப்பு மணமாக வன்னியர்களால் எடுத்துக்கொள்ளமுடியாமல் போனதற்கு ஒரு காரணம் சாதியை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட தீவிர அரசியல் பிரசாரம்.
நடைபெற்றிருப்பது திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் சதி என்றும் இதற்குப் பின்னால் ஒரு தந்திரமான வேலைத்திட்டம் இருக்கிறது என்றும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள். நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இதை இனியும் சகித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை என்று அவர்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. வேற்று நாட்டு அரசர்கள் எதிரி நாட்டுக்குப் படையெடுத்து வந்து செல்வத்தைக் கைப்பற்றுவதுபோல் இளவரசன்கள் திட்டமிட்டு வந்து நம் இளவரசிகளைக் கவர்ந்து செல்கிறார்கள் என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. இந்த உணர்வு கட்டுக்கடங்காத கோபத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நாகராஜன் தன் மகளை ஆழமாக நேசித்தவர் என்கிறார் அவர் கிராமத்தைச் சேர்ந்த நாகம்மா. ஒரு நல்ல தந்தையாக அவர் இருந்தார். ஏற்கெனவே தன் மகளின் பிரிவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பஞ்சாயத்தில் எல்லோர் முன்னாலும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதியிருக்கவேண்டும் என்கிறார் இவர்.
அருகிலிருந்த கூட்டுறவு அமைப்பொன்றில் ஒரு சிறிய பொறுப்பில் (ஜூனியர் கிளார்க்) நாகராஜன் பணியாற்றி வந்திருக்கிறார். 1980களில் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் நாகராஜனின் பெயரும் இருந்திருக்கிறது. நிலத் தகராறு தொடர்பாக நடைபெற்ற ஒரு கொலை அது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) புரட்சிகர இளைஞர் பிரிவின் ஆதரவாளராகவும் நாகராஜன் திகழ்ந்திருக்கிறார். நக்சலைட் இயக்கம் தர்மபுரியில் செல்வாக்கோடு இருந்த காலகட்டம் அது. (இதைப் பற்றி பின்னர் பார்க்கவிருக்கிறோம்). செல்வாக்கு சரிந்ததும் இயக்கத்திலிருந்த பலரும் அங்கிருந்து வெளியேறி வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துகொண்டிருக்கிறார்கள்.
நாகராஜன் தன் மகளின் திருமணத்தை மாபெரும் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி என்று ஆரம்பத்தில் நினைத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் நாள்கள் செல்லச் செல்ல அது உண்மைதான் என்று அவர் நம்ப ஆரம்பித்திருப்பார். ஊர் மக்களின் பேச்சும் பார்வையும் அவரை அசைத்திருக்கும். பஞ்சாயத்து அவரை நிலைகுலையச் செய்திருக்கும். கிராமத்தின் முழுக் கவனமும் தன்மீது குவிந்திருப்பதைக் கண்டு அவர் கலங்கியிருப்பார். திவ்யாவின் திருமணம் தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமின்றி, தன் சமூகத்தையே களங்கப்படுத்திவிட்டதென்றும் அந்தக் களங்கம் இனி அகலாது என்றும் அவர் அஞ்சியிருப்பார். சாதிப் பெருமையைக் காக்கவேண்டிய முக்கியப் பொறுப்பைத் தவறவிட்டுவிட்டோமே என்னும் குற்றவுணர்வு அவரை அரித்திருக்கும். பஞ்சாயத்து நடந்த அதே நவம்பர் 7 அன்று அவர் தற்கொலை செய்து கொண்டார்.
0
நாகராஜனின் உடல் கண்டெடுக்கப்பட்ட அந்தக் கணம் வெடிகுண்டின் திரி பற்ற வைக்கப்பட்டது. உள்ளுக்குள் அதுவரை அடங்கியிருந்த கோபம் வெறுப்பாக மாறுமாறு தூண்டிவிடப்பட்டது. வெறுப்பு தீ போல் பற்றியெறிய ஆரம்பித்தது. அது உள்ளே எரிய வேண்டிய தீ அல்ல, அள்ளியெடுத்து வெளியில் வீசவேண்டிய தீ என்னும் முடிவுக்கு ஒரே கணத்தில் பலரும் வந்து சேர்ந்தனர். இனி என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் பேசி விவாதிக்கவேண்டிய அவசியமே அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.
திவ்யாவின் செல்லங்கோட்டைக்கும் இளவரசனின் நத்தம் காலனிக்கும் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுதான் இருக்கும். செல்லங்கோட்டையிலிருப்போர் தங்கள் அன்றாடத் தேவைகள் அனைத்துக்கும் நத்தம் காலனியைக் கடந்துதான் பிரதான வீதிக்கு வந்தாகவேண்டும். திவ்யாவும் அந்த வழியில்தான் தனது கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார். நத்தம் காலனியிலிருப்பவர்களின் வீடுகள் சாலையை ஒட்டியே அமைந்திருப்பதால், அவசியம் ஏற்பட்டாலொழிய அவர்கள் எதிர்திசையில், செல்லங்கோட்டைக்குப் போகவேண்டியிருக்காது.
நாகராஜனின் சடலத்தை ஏந்திக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். முதல் இலக்கு, நத்தம் காலனி. குறிப்பாக, இளவரசனின் வீடு. சடலம் கீழே இறக்கப்பட்டது. இளவரசன் அங்கே இல்லை என்பது தெரியும். அதனாலென்ன? குற்றமிழைத்திருப்பது ஓர் இளைஞன் மட்டுமேவா? இளவரசன் ஒரு தனி மனிதன் அல்ல. தனது சமூகத்தின் பிரதிநிதி. தனது சமூகத்தால் உருவாக்கப்பட்டு, தூண்டிவிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவரும் ஒரு குற்றவாளி. வன்னியர்கள்மீது தலித்துகள் மேற்கொண்ட போர் இது. முதல் பலி, நாகராஜன். இதைவிடவும் ஒரு பெரிய சீண்டல் இருந்துவிடமுடியுமா?
நவம்பர் 7ஆம் தேதி நத்தம் காலனிக்குள் சீற்றத்தோடு நுழைந்தது ஒரு கும்பல். அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய பகுதிகளும் தலித்துகளின் குடியிருப்புகள்தான் என்பதால் இரு குழுக்கள் அங்கே கிளம்பிச் சென்றன. சில நிமிடங்களில் மூன்று பகுதிகளும் பற்றியெரிய ஆரம்பித்தன.
(தொடரும்)
வன்னியர்கள் 13 சதவிகிதம் என்று சொல்வது போன்று பறையர்கள் எத்துனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்றும் சொல்ல வேண்டும்
வித்திட்டது யார், எந்த சமூகம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது இடை சாதிகளும், சாதி படிநிலையில் அதற்கு கீழ்(?) உள்ளவர்களும் சாதியின் பெயரால் வெட்டி மாய்ந்து வருகிறார்கள். இது எப்போது மாறும்?