நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க ஆரம்பித்தன. வர்க்க உணர்வுகள் பொலபொலவென்று உதிர்ந்துபோயின. விவசாயிகள், தொழிலாளிகள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் அதுவரை தங்களை முன்னிலைப்படுத்திவந்தவர்கள் இப்போது சாதியின் பெயரால் அடையாளம் கண்டு, பிரிந்து செல்ல ஆரம்பித்தனர்.
2005ஆம் ஆண்டு தொடங்கி வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல சாதி அமைப்புகள் நாயக்கன் கோட்டைக்குள்ளும் சுற்று வட்டாரங்களிலும் ஊடுருவி, செல்வாக்கு பெற ஆரம்பித்தன. சாதி உணர்வோடு சேர்ந்து ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், பழமைவாதம் உள்ளிட்ட பிற்போக்கான குணங்களும் மக்களைப் பற்றிக்கொண்டன. இந்நிலைக்கு இடதுசாரிகளும் ஒரு வகையில் காரணம் என்றே சொல்லவேண்டும். மாறிவரும் அரசியல் சூழலை உன்னிப்பாகக் கவனித்து, சரியான தருணத்தில் சரியான அரசியலை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க அவர்கள் தவறிவிட்டார்கள்.
நக்சல்பாரிகள் பலமிழந்துவிட்டதை உணர்ந்ததுமே சிபிஐ, சிபிஎம் இரண்டும் தருமபுரியில் களப்பணிகளைத் தொடங்கியிருக்கவேண்டும். ஏற்கெனவே அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்த மக்களிடம் சற்று முயன்றிருந்தால் இந்த இரு கட்சிகளுமே நெருங்கியிருக்கமுடியும். வன்முறை போராட்டத்தில் நம்பிக்கையற்ற, அதே சமயம் புரட்சிகரக் கருத்துகளின் தாக்கத்துக்கு முன்பே உள்ளாகியிருந்த இம்மக்கள் இடதுசாரிகளோடு கரம் கோத்திருப்பார்கள். ஒருவிதமான கோட்பாட்டு வெற்றிடம் நிலவியது உண்மை என்று சிபிஎம்மின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனும் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில் சாதி அடையாளம் கூர்மையடைந்ததைத் தொடர்ந்து கலப்பு மணத்துக்கு எதிரான குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. வன்னியர்களும் கொங்கு வேளாளர்களும் இதில் முன்னணியில் இருந்தனர். நம் சாதியைச் சேர்ந்தவர்கள் நமக்குள்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றும் பிற சாதிகளோடு ரத்தக் கலப்பு செய்வது குற்றமாகும் என்றும் இவர்கள் வெளிப்படையாகவே பரப்புரை மேற்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதை அவர்கள் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை.
திருமணம் இவ்வாறாக ஓர் அரசியல் செயல்பாடாக மாற்றமடைந்தது. சாதித் தூய்மையைக் காப்பதே ஒவ்வொரு திருமணத்தின் முதலும் இறுதியுமான குறிக்கோளாகச் சித்திரிக்கப்பட்டது. சாதித் தூய்மை என்னும் கருத்தாக்கத்தை உடைக்கவேண்டுமானால் கலப்பு மணங்களை ஊக்குவித்தாகவேண்டும். ‘சாதி இறுக்கத்தைக் குறைக்க கலப்புத் திருமணங்களை அதிக அளவில் ஊக்குவிக்கவேண்டும். கட்சியின் ஆதரவோடு இது நடைபெறவேண்டியது முக்கியம். கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளோடுதான் நாங்கள் நிற்கிறோம் என்பதை உணர்த்தவேண்டியது காலத்தின் தேவை’ என்கிறார் சிபிஎம் மூத்தத் தலைவர் கே. பாலகிருஷ்ணன். இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்புமூலமாக நாயக்கன் கோட்டை இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்றார் ஹரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. தில்லிபாபு. இளவரசன் திவ்யா திருமணத்துக்குப் பிறகு, ஒரு கலவரம் நடந்து முடிந்த பிறகு, இந்த உண்மையை இடதுசாரிகள் உணர்ந்துகொண்டனர். அதற்குள் எல்லாமே மாறிவிட்டிருந்தது.
சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தெடுத்த நிலத்தில் சாதிப் பெருமித உணர்வு இப்படி ஆதிக்கம் செலுத்துவது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது என்கிறார் கலவர இடத்தை நேரில் வந்து கண்ட சிபிஐயின் மூத்தத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு. ‘ஒரு நாகரிக சமுதாயத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழவே கூடாது. சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை ஏற்கும் எவரும் கலப்பு மணங்களை ஏற்கவே செய்வர். மாறிவரும் சமூக விழுமியங்களின் அடையாளம் இத்தகைய திருமணங்கள். சாதிப் படிநிலையை உயர்த்திப் பிடிக்கும் எவரும் எதிர்க்கப்படவேண்டும்’.
1980களிலும் 1990களிலும் இம்மாவட்டத்தில் 25 கலப்பு மணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் இடையிலானவை. அப்போதெல்லாம் இத்தனை பெரிய எதிர்ப்புகளும் கலவரங்களும் தோன்றியதில்லை என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிபிஐ (எம்எல்) கட்சி நினைவூட்டியது.
‘கொண்டாம்பட்டியில் தலித்துகளுக்கு நிலப் பங்கீட்டை வழங்க அரசு முன்வந்தபோது வன்னியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு திரண்டு வந்தது. நாங்களெல்லாம் கல்வி, பொருளாதாரம் என்று அவர்களைவிடவும் கூடுதலாக வளர்ந்து வந்ததை அவர்கள் விரும்பவில்லை என்பதையே இந்த எதிர்ப்புகள் உணர்த்தின’ என்கிறார் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த ஏ. ரவி. இவர் ஒரு மேல்நிலைப் பட்டதாரி. தனியார் பண்ணையொன்றில் பணியாற்றுகிறார். ‘கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாயக்கன் கோட்டையில் இன்றுவரை 200 இளைஞர்கள் மேல்படிப்பு படித்துவருகின்றனர். மருத்துவம் நீங்கலாக, எல்லாத் துறைகளிலும் எங்களிடமிருந்து பட்டதாரிகள் உருவாகி வந்திருக்கிறார்கள். வன்னியர்களைக் காட்டிலும் எங்களிடம்தான் அதிகப் பட்டதாரிகள் இருக்கிறார்கள்.’ அதனால்தான் பாடப்புத்தகங்கள், சான்றிதழ்கள், மிதிவண்டிகள் என்று தலித்துகளின் கல்வியோடும் சமூக முன்னேற்றத்தோடும் தொடர்புடைய அடையாளங்கள் பார்த்துப் பார்த்து அழிக்கப்பட்டிருக்கின்றன.
0
சாதி சங்கங்களின் பரவலுக்கும் வெறுப்புப் பேச்சின் வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பிருக்கிறது. வன்னியர் சங்கத்திலிருந்து உருவாகி வளர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது செல்வாக்கைத் திரட்டிக்கொள்ள சாதி அரசியலுக்குள் தஞ்சம் புகுந்துகொண்டது. தலித்துகள்மீதான வெறுப்புப் பிரசாரம் பலம்பெறத் தொடங்கியது. அனல் பறக்கும் பேச்சாளராகக் கருதப்பட்ட காடுவெட்டி குரு சர்ச்சைக்குரியவராகவும் தலித்துகளைக் கூர்மையாகத் தாக்கிப் பேசுபவராகவும் இருந்தார். ஏப்ரல் 2012இல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் விழாவில் காடுவெட்டி குரு ஆற்றிய உரையில் ஆவேசமும் வன்மமும் நிறைந்திருந்தன. தலித்துகளிடம் வன்னியர்கள் ஏமாறக்கூடாது என்றும் அவர்கள் விரிக்கும் காதல் வலையில் நம் பெண்கள் சிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டதோடு நில்லாமல், வெளிப்படையாகவே வன்முறைக்கு அறைகூவல் விடுத்தார். ஒரு வன்னியர் பெண்ணைப் பிற சாதியைச் சேர்ந்த யார் காதலித்து மணந்துகொண்டாலும் அவன் அழிக்கப்படவேண்டும் என்று கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் முழங்கினார் காடுவெட்டி குரு. அடுத்த சில தினங்களில் வன்முறை வெடித்தது.
மற்றொரு பக்கம், தலித்துகளும் தங்களுக்கான அரசியல் கட்சியைத் தேர்ந்தெடுத்திருந்தனர். நக்சல்பாரி காலத்தில் புரட்சிகர அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். வன்னியர்களின் அரசியல் தலைவராக டாக்டர் ராமதாஸும் தலித்துகளின் அரசியல் தலைவராக தொல். திருமாவளவனும் அறியப்பட்டனர். இரு வேறு கட்சிகளாக இருந்தாலும் தொடக்கத்தில் இந்த இரு தலைவர்களும் தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் கோட்பாட்டின் முன்னால் இணைந்துதான் நின்றுகொண்டிருந்தனர். அப்போதுமேகூட அந்த உறவில் ஒருவித உரசல் உள்ளுக்குள் மறைந்துகொண்டுதான் இருந்தது. தருமபுரி சம்பவத்துக்குப் பிறகு எல்லாமே மாறிப்போனது. திமுக-அதிமுக போல் விசிக-பாமகவும் இன்னொரு வகையான இரு துருவ அரசியல் கட்சிகளாக மாறின.
தலித்துகள் மீதான தொடர்ச்சியான வெறுப்புப் பேச்சுதான் அவர்கள்மீதான வன்முறைத் தாக்குதலாக வளர்ந்து நிற்கிறது. தருமபுரி கலவரத்துக்கு வன்னியர் சங்கமும் பாமகவும்தான் காரணம்; டாக்டர் ராமதாஸ்தான் இதற்கெல்லாம் பொறுப்பேற்கவேண்டும் என்று குற்றம்சாட்டினார் திருமாவளவன். ஆனால் டாக்டர் ராமதாஸ் இக்குற்றச்சாட்டை ஏற்கவில்லை. பாமகவுக்கோ வன்னியர் சங்கத்துக்கோ இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றதோடு தன்னிடமோ தன் கட்சியிடமோ தலித் விரோத உணர்வையே காணமுடியாது என்றும் தெரிவித்தார். வன்னியர்களுக்காக மட்டுமல்ல, தலித்துகளுக்காகவும் தான் குரல் கொடுத்து வருவதாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்காகவும் சேர்த்தே தான் பாடுபடுவதாகவும் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான கலப்பு மணத்தைத் தான் எதிர்த்ததேயில்லை என்றும் என்னுடன் உரையாடும்போது விளக்கினார். ‘ஒரு தலித் பையனோ வன்னியர் பெண்ணோ கலப்பு மணம் செய்துகொள்வதாக இருந்தால் அவர்கள் திருமணத்தை நான் ஆதரிக்கவே செய்வேன். ஒரே ஒரு நிபந்தனைதான். தம்பதிக்கு 21 வயது ஆகியிருக்கவேண்டும். எதிர்கால வாழ்வையும் அதன் சிக்கல்களையும் புரிந்துகொள்ள இந்த வயது முக்கியம்.’
தன்மீது குற்றம்சுமத்திய விசிகமீது தானும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார் டாக்டர் ராமதாஸ். ‘பருவ வயதில் இருப்பவர்களைச் சுண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதற்கு விசிகவில் சிலர் முயல்கிறார்கள். இவர்கள் அரங்கேற்றும் நாடகத் திருமணங்களை நாங்கள் எதிர்க்கத்தான் வேண்டியிருக்கிறது.’ கலப்பு மணம்மூலம் சாதியை அழிக்கமுடியும் என்பதையும் இவர் ஏற்கத் தயாராக இல்லை. ‘திராவிடக் கட்சிகள் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. சாதியழிப்புக்குக் கலப்பு மணமும் உதவலாம். ஆனால் அது மட்டுமே ஒரே வழியல்ல.’
திருமாவளவனின் குற்றச்சாட்டிலுள்ள உண்மைத்தன்மையைக் காவல்துறை அளித்த புள்ளிவிவரத்தைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம். கலவரத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 142 பேரில் (17 நவம்பர் 2012 வரை) 15 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் பாமக கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் இரண்டு கவுன்சிலர்கள், ஒரு முன்னாள் கவுன்சிலர், கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஆகியோரும் அடக்கம். வன்னியர் சங்கம், பாமக இரண்டிலும் உறுப்பினர்களாக இருந்தவர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989 உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் இவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் காவல்துறையினரின் செயல்பாடும் கண்டனத்துக்கு உள்ளானது. கலவரத்தைத் தடுத்து நிறுத்த காவல் துறையினர் தங்களால் இயன்ற அனைத்தையும் நேர்மையாகச் செய்தனரா, தங்கள் கடமையைச் சரியாக நிறைவேற்றினரா என்னும் கேள்வியும் பெரிய அளவில் மக்களிடையே எழுந்தது. ‘நாங்கள் சற்று தாமதமாகவே எதிர்வினையாற்றினோம்’ என்கிறார் தருமபுரி காவல்துறை அதிகாரி அஸ்ரா கர்க். ‘கலவரம் வெடித்தபோது நான் ராமநாதபுரத்தில் தேவர் ஜெயந்தி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் ஆறு மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது.’
மேலே உள்ள எல்லாப் புள்ளிகளையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்கு விரிவான ஒரு சித்திரம் கிடைக்கிறது. அந்தச் சித்திரம் கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறது. இளவசரன், திவ்யா ஆகிய இரு சாமானியர்களுக்குப் பின்னால் கண்ணுக்குப் புலப்படாத இத்தனை சக்திகள் மறைந்து நின்று இயங்கியிருக்கின்றன. சாதி என்னும் ஒற்றைப் பரிமாணத்தைக் கொண்டுமட்டும் அனைத்தையும் புரிந்துகொண்டுவிடமுடியாது.
(தொடரும்)