Skip to content
Home » சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

சாதியின் பெயரால்

நிச்சயம் எதிர்ப்புகள் வரும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு தீவிரமான விளைவுகள் ஏற்படும் என்றோ, இவ்வளவு வீடுகள் எரிக்கப்படும் என்றோ, இவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்றோ இளவரசனும் சரி, திவ்யாவும் சரி கணித்திருக்க வாய்ப்பில்லை. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி என்றால் அதைத் தொடர்ந்து மூண்ட கலவரம் பேரதிர்ச்சியையும் பெரும் கலக்கத்தையும் அவர்களுக்கு உண்டாக்கியிருக்கவேண்டும். ஒரு திருமணம் இத்தனை பெரிய பகையையும் வெறுப்பையுமா தோற்றுவிக்கவேண்டும்? ஒரு காதல் இவ்வளவு பேரையா மிருகங்களாக மாற்றும்? இத்தனை பெரிய வன்முறைத் தீயையா வளர்த்தெடுக்கவேண்டும்?

இவ்வளவும் நம்மால்தான் என்று இருவரும் தங்களுக்குள் கிடந்து எப்படியெல்லாம் துடித்துப்போயிருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சமூகத்தின் கண்களுக்கு எங்கள் காதல் குற்றம் என்றே வைத்துக்கொண்டாலும் எனக்கான தண்டனையை என் குடும்பத்தினர், சாதிக்காரர்கள் அனைவருமா அனுபவிக்கவேண்டும்? என் பொருட்டு நூற்றுக்கணக்கானவர்கள் ஏன் தங்கள் வீடு, வாசலை இழந்து நிற்கவேண்டும் என்று இளவரசன் கலங்கியிருப்பார். என் காதலைத் தன்னுடைய அவமானமாக அப்பா ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்? என்னுடைய தனிப்பட்ட முடிவில் என் சாதிக்காரர்கள் ஏன் மூக்கை நுழைத்து இவ்வளவு பெரிய கலவரத்தை உண்டாக்கவேண்டும், இவ்வளவு பேர் வாழ்க்கையை அழிக்கவேண்டும் என்று திவ்யா உடைந்து போயிருப்பார்.

ஆரம்பம் தொட்டே அவர்களுடைய அதிகபட்ச அச்சம், நம்மைப் பிரித்துவிடுவார்கள் என்பதாக மட்டுமே இருந்தது. வீட்டைவிட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்ட கையோடு இருவரும் காவல்துறையிடம்தான் அடைக்கலம் புகுந்தது அதனால்தான். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, காவல்துறையும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முன்வந்தது.

இப்போது என்னாகும்? நாம் தாக்கப்படுவோமா? கொல்லப்படுவோமா? பற்றியெறிந்துகொண்டிருக்கும் தீயில் நம் கனவுகளோடு சேர்ந்து நாமும் சாம்பலாகவேண்டியதுதானா? குற்றவுணர்ச்சியும் உயிரச்சமும் போட்டிப்போட்டுக்கொண்டு விழுங்கிக்கொண்டிருந்த அந்தக் கணத்தில் சாதியமைப்பு எவ்வளவு கொடூரமானது என்பதை இருவரும் உணர்ந்திருப்பார்கள். மூர்க்கமான விலங்குக்கூட்டமொன்று துரத்திவருவதுபோல், இதயமற்ற இந்த உலகிலிருந்து தப்பி வேறு புதிய உலகைக் கண்டடைந்துவிடும் துடிப்போடு ஓடத் தொடங்கினார்கள்.

திவ்யாவின் குடும்பம் இப்போது கிட்டத்தட்ட முழுமையாகவே சாதிச் சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்து சேர்ந்திருந்தது. திவ்யாவை ‘மீட்பதற்கு’ இரு வழிமுறைகள் வகுக்கப்பட்டன. முதலாவது, சட்டத்தின் வழி. காதல் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் அதே உத்தியை திவ்யாவுக்கும் கடைப்பிடித்தனர். என் மகள் கடத்தப்பட்டிருக்கிறாள். கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் திவ்யாவை அவள் விருப்பத்துக்கு முரணாக இளவரசன் எங்கோ அடைத்து வைத்திருக்கிறான். என் மகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவேண்டும் என்று கோரி மார்ச் 2013இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் தாய் தேன்மொழி ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார். இரண்டாவது பின்வாசல் வழியாக திவ்யாவைத் தொடர்பு கொண்டுப் பேசி அவரை வழிக்குக் கொண்டுவருவது. மிரட்டுவது, கெஞ்சுவது, உணர்வுகளைத் தூண்டும் வகையில் உளவியல் தாக்குதல் நடத்துவது என்று அனைத்து வடிவங்களும் கையாளப்பட்டன. முதல் வழிமுறையை திவ்யா சமாளித்துவிட்டார். என்னை யாரும் கடத்தவில்லை. நான் விரும்பியே இளவரசனோடு இணைந்தேன் என்று அவரால் பதிலளிக்கமுடிந்தது. ஆனால் இரண்டாவது வழிமுறை கையாளப்பட்டபோது திணறிப்போனார். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, உடனே கிளம்பி வா என்றும் அழைப்புப் போனது.

தருமபுரியில் இளவரசனின் வீட்டுக்கு இருவரும் குடிபெயர்ந்தபோது, ஒரு நாள் அம்மாவே நேரடியாகக் கிளம்பி வந்திருக்கிறார். ‘திவ்யாவின் அம்மா தேன்மொழி தருமபுரியிலிருந்த எங்கள் வீட்டுக்கு ஜனவரி மாதம் வந்தார். எல்லாம் நல்லபடியாக நடக்கும், பயப்படவேண்டாம் என்று சொன்னார். நாங்கள் அவரை நம்பி எங்கள் மருமகளை அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்’என்று நினைவுகூர்கிறார் இளவரசனின் அம்மா. பாவம், தந்தையை இழந்த பெண் அம்மாவோடு இருந்துவிட்டு வரட்டும் என்றே அவர் நினைத்திருக்கிறார். எல்லாம் சரியானதும் திவ்யா திரும்பிவிடுவார் என்றே அவர் நம்பியிருக்கிறார் வேறெதையும்விட திவ்யா தன்மீது கொண்டிருந்த காதலை மலைபோல் நம்பினார் இளவரசன். அந்த நம்பிக்கையோடு திவ்யாவை அனுப்பி வைத்தார்.

இது ஒரு தந்திரமான ஏற்பாடு என்பது இளவரசனின் குடும்பத்தினர் தாமதாகவே உணர்ந்திருக்கின்றனர். ஆட்கொணர்வு மனுவைச் சமர்ப்பித்துவிட்டுதான் திவ்யாவின் அம்மா அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பது திவ்யா வெளியேறிய பிறகுதான் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. நல்லபடியாகப் பேசி, புன்னகைத்து திவ்யாவை அவர்களிடமிருந்து பிரிப்பதுதான் திட்டம் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

அப்படித்தான் நடந்தது. திவ்யா அதன்பிறகு திரும்பவேயில்லை என்பதோடு எல்லாமே தலைகீழாக மாறிப்போனது. அம்மாவுடன் இணைந்த பிறகு இளவரசனிடமிருந்து மனதளவிலும் பிரிய ஆரம்பித்துவிட்டார் திவ்யா. எல்லா இழப்புகளையும், எல்லாத் துயரங்களையும் தாங்கிக்கொண்டு மிகுந்த நம்பிக்கையோடு ஒன்பது மாதங்கள் இளவரசனோடு இணைந்து வாழ்ந்தவர் எதனால் நம்பிக்கையிழந்தார், ஏன் மனமாற்றம் அடைந்தார்? இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல, இன்னொரு கேள்விக்கும் பதிலில்லை. அம்மா, உறவினர், அக்கம் பக்கத்தினர், சாதிச் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என்று பலமுனைகளிலிருந்தும் ஒரே நேரத்தில் அழுத்தம் கூடிக்கொண்டே போகும்போது அவரால் வேறு என்ன செய்திருக்கமுடியும்? இவ்வளவு பெரிதாக வளர்ந்து நிற்கும் சூறாவளியோடு இனியும் போராடி ஜெயிக்கமுடியாது என்னும் நிலையில் அவர் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கவேண்டும்.

ஜூன் 7ஆம் தேதி தன் தாயுடன் இணைந்து நீதிமன்றத்துக்கு வருகை தந்த திவ்யா டிவிஷன் பெஞ்ச் முன்பு மிகுந்த கலக்கத்தோடும் முரண்பட்டும் பேசியிருக்கிறார். இது நானாக எடுத்து முடிவு. இளவரசனுடன் சேர்ந்துதான் வாழ்வேன் என்று சொன்னவர் இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். தந்தையின் மரணத்தாலும் அதன்பிறகு நடைபெற்ற வன்முறை கலவரத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறேன். என் அம்மாவுடன் இணைந்திருக்கவே விரும்புகிறேன் என்றார்.

இளவரசன் அப்போது சென்னையில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். திவ்யா உடைந்துபோய் பேசிக்கொண்டிருந்தபோது அவர் நீதிமன்ற வளாகத்தில்தான் இருந்தார். திவ்யாவை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்பதைத் தவிர அவர் மனதில் வேறு எந்த எண்ணமும் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. தன் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு திவ்யாவைத் தொலைவிலிருந்து காணும் வாய்ப்புக்கூட அவருக்கு அமையவில்லை. எப்படியும் நீதிமன்றத்துக்கு வருவார் என்றும் அங்கேயே கண்டுவிடலாம் என்றும் கனவு கண்டுகொண்டிருந்தார். அச்சத்திலும் கலக்கத்திலும் திவ்யா முழுமையாகச் சிக்குண்டுக் கிடப்பார் என்றும் இளவரசன் எதிர்பார்த்திருந்தார். அவரிடம் பேசி, நிலைமையை விளக்கி, சீர்படுத்தி மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடமுடியும் என்றும் அதேபோல் திவ்யாவின் குடும்பத்திடம் பேசி, எப்படியாவது அவர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியும் என்றும் நம்பிக்கையோடு காத்திருந்தார்.

ஒரு வேளை, நான் எதிர்பார்த்தபடி நடக்காமல் போனால் என்னாகும் எனும் அச்சமும் கட்டுப்படுத்தமுடியாதபடி இளவரசனுக்குள் வளர்ந்துகொண்டிருந்தது. இந்தப் பிரிவு நிரந்தரமாகிவிட்டால் என்ன செய்வது? ஒருபோதும் திரும்பி வரமுடியாத நிலைக்கு திவ்யா தள்ளப்பட்டுவிட்டால் என்னாகும்? நான் என்னாவேன்?

எவ்வளவு முயன்றும் திவ்யாவை அன்று நீதிமன்றத்தில் சந்திக்கமுடியவில்லை இளவரசனால். இளவரசனைக் காண திவ்யாவுக்கு இப்போதைக்கு விருப்பமில்லை என்று அவர் சார்பாகத் தகவல் அளித்தார் பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. பாலு. மிகுந்த ஏமாற்றத்தோடும் கனத்த இதயத்தோடும் இளவரசன் திரும்பிச் செல்லவேண்டியிருந்து.

இதற்கிடையில் திவ்யா தானாகவே முன்வந்து நீதிமன்றத்துக்கு வந்தாரா அல்லது மிரட்டி வரவழைக்கப்பட்டாரா எனும் கேள்வி எழுந்தபோது, மிரட்டல் எனும் பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னதோடு நில்லாமல் இளவரசனுக்கும் திவ்யாவுக்கும் இடையிலான திருமணத்தையும் கேள்விக்கு உட்படுத்தினார் பாலு. ‘திவ்யாவைத் திருமணம் செய்துகொண்டதாக இளவரசன் அறிவித்தபோது அவன் வயது 19 மட்டுமே. மணமகளுக்கு 20 வயது. இது ஏற்கத்தக்க திருமண வயதே கிடையாது. இந்துத் திருமணச் சட்டம், 1955ம் இதைத்தான் சொல்கிறது.’

எங்கள் மகனின் திருமணம் சடங்குகள்படி சரியான முறையில்தான் நடந்தது என்றனர் இளவரசனின் பெற்றோர். ‘முதலில், ஆந்திராவிலுள்ள ஒரு கோவிலில் இளவசரனும் திவ்யாவும் திருமணம் செய்துகொண்டனர். மீண்டும், தருமபுரியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஒரு கோவிலுக்கு அருகில் அவர்கள் மணம் புரிந்துகொண்டனர்.’ ஆனால் அதற்கான சான்றாதாரத்தை அவர்களால் வழங்கமுடியவில்லை. ‘தருமபுரி கோவில் நிர்வாகத்தினர் கடைசி நேரத்தில் திருமணப் பதிவுச் சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டனர். திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக்கூட அவர்கள் தரவில்லை. வன்முறை விளைவுகளை ஏற்படலாம் எனும் அச்சமே காரணம்.’

‘அவர்கள் மட்டும் திருமணச் சான்றிதழைக் கொடுத்திருந்தால், எங்களுக்குச் சாதகமாக எல்லாம் முடிந்திருக்கும்’ என்றார் இளவரசனின் தந்தை, இளங்கோ. தருமபுரி அரசு மருத்துவமனையின் ஆவணப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் அவர். எந்தச் சான்றையும் அளிக்கமுடியாத நிலையில் இவர்களுடைய திருமணம் ‘பதிவு செய்யப்படாத திருமணமாகவே’ எடுத்துக்கொள்ளப்பட்டது.

இனி அம்மாவோடு இருக்கப்போகிறேன் என்று ஒரு பக்கம் திவ்யா அறிவித்துவிட்டார். மற்றொரு பக்கம், திருமணமே பிரச்சினைக்குரியதாக மாறி நிற்கிறது. இனி நம்பிக்கை கொள்வதற்கு என்ன இருக்கிறது இந்த வாழ்வில்? இடிந்துபோனார் இளவரசன்.

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *