இளவசரனை முதல் முறையாகச் சந்தித்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. 3 ஜூலை 2013. சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் நான் நுழைந்தபோது, ‘நான் என் அம்மாவோடு இருக்க விரும்புகிறேன்’ என்று திவ்யா ஏற்கெனவே அறிவித்து முடித்திருந்தார். அவரையும் அவர் அம்மாவையும் தனிப்படைப் பிரிவினரைப் போல் வன்னியர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுற்றி வளைத்துப் பாதுகாப்போடு வளாகத்திலிருந்து அழைத்துச் சென்றுவிட்டிருந்தனர். திவ்யாவிடமிருந்தும் வழக்கறிஞர்களிடமிருந்தும் அன்றைய தினத்துக்கான பைட்டை மீடியா ஆள்கள் எடுத்து முடித்து, கிளம்பியிருந்தனர். வெறுமை சூழ்ந்திருந்தது. இளவரசனை ஆட்கொண்டிருந்த அதே வெறுமை.
இளவசரன் எங்கிருப்பார் என்பது எனக்குத் தெரியும். நீதிமன்றத்திலிருந்து கிளம்பி பாரிஸ் கார்னரிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான ரஜினிகாந்தின் அலுவலகத்தை அடைந்தேன். இளவரசனுக்காக முன்னின்று வாதாடிக்கொண்டிருந்த சமூக நோக்குள்ள வழக்கறிஞர்கள் குழுவைச் சார்ந்தவர். நான் சென்றபோது இளவரசன் தனது பெற்றோரோடு அவர் அறையில் அமர்ந்திருந்தார். கவலைப்படாதீர்கள், நல்லபடியாக முடியும் என்பதுபோல் ரஜினிகாந்த் ஆறுதல் அளித்துக்கொண்டிருந்தார்.
ஆனால் எதையும் உள்வாங்கிக்கொள்ளும் நிலையில் இளவரசன் இல்லை. அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னமும் வெளிவரவில்லை என்பதை உணரமுடிந்தது. திவ்யாவின் பிரிவு அவருடைய ஜீவனை அழித்துவிட்டிருந்தது. வெற்றுடலை மட்டுமே விட்டு வைத்திருந்தது. இருந்தாலும் நான் உள்ளே நுழைந்தபோது தலையை உயர்த்தி என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கண நேரம் மலர்ந்து, உடனே மறைந்தும்விட்டது அந்தப் பாசாங்கற்ற புன்னகை. அப்பாவித்தனமான அவருடைய தோற்றம் என்னை ஆட்கொண்டது. கண்ணீரும் நினைவுகளும் அவர் கண்களில் தளும்பிக்கொண்டிருந்தன.
தற்செயலாக அவர் மணிக்கட்டைப் பார்த்தேன். வெள்ளை நிற பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. எனது நாற்பதாண்டுக்காலப் பத்திரிகைப் பணி காரணமாகச் சில எச்சரிக்கை மணிகள் ஒலிப்பதைக் கேட்டேன். என் அச்சத்தை அங்குள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று ஏனோ எனக்குத் தோன்றவில்லை. இளவரசனிடம் பேசவேண்டும் என்று மட்டும் சொன்னேன். தி. நகரிலுள்ள லாட்ஜுக்குதான் சென்றுகொண்டிருக்கிறோம். அங்கேயே நீங்கள் உரையாடலாம். இயன்றவரை துரிதமாகத் தருமபுரிக்குத் திரும்பவிருக்கிறோம் என்று பதில் கிடைத்தது. உடனடியாக ஒப்புக்கொண்டேன். உள்ளுக்குள் ஓர் ஓரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இளவரசனுடன் உரையாடமுடிந்துவிட்டால் அப்போது நான் ஃபிரண்ட்லைனுக்காக எழுதிக்கொண்டிருந்த கட்டுரையில் அவர் சொற்களை மேற்கோள் காட்டுவதற்கு வாகாக இருக்கும். ஒரு பத்திரிகையாளனாக உடனடியாக எனக்குத் தோன்றியது இதுதான். இப்படித் தோன்றியதற்காக அதன்பின் நான் வருந்தாத நாளே கிடையாது.
இளவரசனுடன் உரையாடுவதற்கான வாய்ப்பை ஒரு ‘எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரியாக’ என் மனம் உடனே கற்பனை செய்யத் தொடங்கியது ஏன்? இளவரசனின் ஏமாற்றத்தை, இழப்பை, அவர் இதயத்தைப் போட்டு அழுத்திக்கொண்டிருக்கும் பெருவலியை அல்லவா அன்று நான் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும்? சக மனிதனாக அவருடைய இழப்பின் ஒரு துளியையாவது நானும் உணர்ந்திருக்கவேண்டும் அல்லவா? தன் கனவு வாழ்வை முற்றாகத் தொலைத்துவிட்டு, பிளாஸ்திரி ஒட்டிய கையோடு என் முன்னால் அமர்ந்திருக்கும் 19 வயது இளைஞனை ஒரு ஸ்டோரியாகப் பார்க்கும் மனநிலை அன்று எப்படி வாய்த்தது எனக்கு? இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்ப்பதற்கே சற்று அவமானமாக இருக்கிறது.
இளவரசன் தன் உணர்வுகளை எப்படியாவது சொற்களாக வடித்து என்னோடு பகிர்ந்துகொண்டுவிடவேண்டும், அச்சொற்களை நான் துல்லியமாக எழுத்தில் பதிவு செய்துவிடவேண்டும் என்னும் எண்ணமே எனக்குள் அன்று மேலோங்கி இருந்தது. அதை ஒரு குரூரமான எண்ணம் என்று சொல்லலாமா? இளவரசனின் கதை என்பது எனக்கானது அல்ல, அவருக்கானது மட்டும்தான் என்னும் அடிப்படையான உண்மையை ஏன் அன்று என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை? அவரிடமிருந்து பதில்கள் பெறுவதில் காட்டிய அக்கறையில் எத்தனை சதவிகிதத்தை அவருக்கு நம்பிக்கையூட்டுவதில் செலுத்தினேன்? எல்லா ஊடகவியலாளர்களைப் போல் நானும் அவர் வலியை, உணர்வுகளை என்னுடைய ரிப்போர்டிங்குக்குப் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே அல்லவா விழைந்திருக்கிறேன்? ஒரு பத்திரிகையாளனாக என் கடமையை அன்று நான் சரியாகவே நிறைவேற்றியிருந்தேன் என்று என் கட்டுரைகளை வாசித்தவர்கள் வேண்டுமானால் நினைக்கலாம். என் மனச்சாட்சி ஏற்குமா?
லாட்ஜில் அவர் அறைக்குள் நானும் இளவரசனும் மட்டுமே அமர்ந்திருந்தோம். முதலில் அவர் மணிக்கட்டு குறித்துதான் கேட்டேன். என்ன நடந்தது என்றேன். இளவரசன் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் சோகம் தவிர வேறு எதுவும் புலப்படவில்லை. ஏதேனும் சொல்வார் என்று நினைத்தேன். உன் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை என்பதுபோல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
திவ்யா குறித்து அன்று நான் எதுவும் கேட்கவில்லை. கேட்பது அறமாகாது என்பதை உணர்ந்திருந்தேன். அன்றைய நீதிமன்ற நிகழ்வு குறித்து என்ன பேசினாலும் அது அவரை நோகடிக்கும் என்பதால் அது தொடர்பான கேள்விகளையும் தவிர்த்துவிட்டேன். சமூகம் உங்கள் பிரச்சினையை எப்படி அணுகிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். ‘ஒருவேளை மீடியா எங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் எங்கள் திருமண வாழ்க்கை இப்படி முடிவுக்கு வந்திருக்காது’ என்று பதில் வந்தது.
இளவரசனின் சொற்களில் தொனித்த நியாயத்தையும் கவலையையும் ஒரு பத்திரிகையாளனாக என்னால் மிக நன்றாக உள்வாங்கிக்கொள்ளமுடிந்தது. விதிவிலக்காகச் சிலரைத் தவிர்த்து ஊடகத்துறையைச் சேர்ந்த அனைவரும் இளவரசனையும் திவ்யாவையும் பரபரப்பான ‘மேட்டர்களாகவே’ கருதி வந்தனர். அவர்களுடைய காதல், திருமணம், தலைமறைவு வாழ்க்கை அனைத்தையும் குறித்து தோண்டித் துருவி செய்திகள் சேகரித்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு வன்னியர் சாதிப் பெண்ணை ஒரு தலித் இளைஞன் காதலித்துக் கரம் பிடித்தது அன்றைய காலத்தின் சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியிருந்தது. தொடர்ந்து மூண்ட சமூக எதிர்ப்பு சர்ச்சையை மேலும் வளர்த்தெடுத்தது. ‘நாடகக் காதல்’, ‘திட்டமிட்ட சதி’ என்றெல்லாம் வன்னியர் சங்கமும் பாமகவும் போட்டிப்போட்டுக்கொண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தியபோது இளவசரனின் கதை கூர்மையடைந்தது. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டதும் அதைத் தொடர்ந்து கலவரத் தீ பற்றியெறிந்ததும் மீடியாவின் முழுக் கவனத்தையும் பற்றிக்கொண்டது. தருமபுரி கடந்து தமிழகமெங்கும் இளவரசனும் திவ்யாவும் பேசுபொருளாக மாறினார்கள். அவர்களுடைய பின்னணி விரிவாக அலசப்பட்டது. சாதிய உணர்வுகள் மென்மேலும் கூர்மையடைந்தன. தனிப்பட்ட இருவரின் காதலும் திருமணமும் பொதுவெளிக்கு இழுத்து வரப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. திவ்யா இளவரசன்மேல் கொண்டிருந்தது உண்மையான காதல்தானா? திவ்யா தானாகவே முன்வந்து இளவரசனைக் காதலித்தாரா அல்லது அவருக்கு ஏதேனும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டனா?
கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளை, குறிப்பாக திவ்யா இளவரசனின் இல்லத்திலிருந்து வெளியேறியதை உணர்ச்சிப்பூர்வமான ஒரு கதையாக மீடியா சித்திரித்தது. இளவரசனை ஒரு துன்பியல் நாயகனாக உருவாக்கிக் காட்டும் போக்கு ஒரு பக்கம் தொடர்ந்தது என்றால் இன்னொரு பக்கத்தில் அவரை ஒடுக்கப்பட்ட சாதியின் கதாநாயகனாக உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சாதியமைப்புகளும் மீடியாவின் வெளிச்சத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டன. கவர்ந்து செல்லப்பட்ட ஒரு விலைமதிப்பில்லா பொருள் திரும்பக் கிடைத்ததுபோல் திவ்யா தன் தாயிடம் திரும்பிவந்ததை ஒரு வெற்றிக்கதையாக மாற்றிக் காட்டியவர்களும் இருந்தனர். இவர்கள் பார்வையில் இளவரசன் ஓர் எதிர் நாயகனாக இருந்தார். அவர் பின்னால் ஓர் இயக்கமே இருந்தது போலவும் அவருடைய நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியே தீர்மானித்ததுபோலவும் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன.
இந்த வெளிச்சம் இளவரசனின் கண்களைக் கூசச் செய்தது. மீடியா ஆள்கள் ஓயாமல் துரத்திக்கொண்டிருந்ததால் அவரால் நிதானமாகச் சிந்திக்கக்கூட முடியவில்லை. மீடியாவின் தொடர் கண்காணிப்பில், தொடர் வெளிச்சத்தில் இருந்தது அவரை உள்ளுக்குள் ஒடுங்கச் செய்தது. பரபரப்பான செய்தியாகத் தன் வாழ்க்கை மாறிக்கொண்டிருந்ததை அவரால் தடுக்கமுடியவில்லை. வெறுப்புப் பேச்சு அவரை நிம்மதியிழக்கச் செய்தது. தன்னால்தான் நூற்றுக்கணக்கான தலித் குடும்பங்களின் வீடுகள் சூறையாடப்பட்டன, எரிக்கப்பட்டன என்று ஏற்கெனவே மன வேதனை கொண்டிருந்த இளவரசனை திவ்யாவின் பிரிவு முறித்துப்போட்டிருந்தது. எல்லோரையும்விட்டு, எல்லாவற்றையும் விட்டு எங்காவது கண்காணாத இடத்துக்கு ஓடிச் சென்றுவிடவேண்டும் என்று இளவரசன் உள்ளுக்குள் கிடந்து தவித்திருக்கவேண்டும். வெளிச்சத்தின் வலி போதும், இனி தேவை இருள்தான் என்றும் அவர் முடிவெடுத்திருக்கலாம்.
(தொடரும்)