இளவரசன் என் முன்னால் உடைந்து அழுத காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திவ்யா இப்படிச் செய்திருக்கக்கூடாது! என்னைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று அரற்றிய இளவசரனை என்னால் தேற்றமுடியவில்லை. அவருக்கு ஆறுதல் அளித்திருக்கக்கூடிய ஒரு சொல்லும் என்னிடம் இல்லை. மீடியா நினைத்திருந்தால் நேர்மறையாகப் பங்காற்றியிருக்கமுடியும். ஆனால் உடைந்துபோயிருந்த அவர் வாழ்க்கையை வண்ணமயமாகக் காட்டுவதில்தான் அவர்களுக்கு அக்கறை இருந்தது.
15 அல்லது 20 நிமிடங்கள் பேசிய பிறகு, நீங்களும் திவ்யாவும் இணைந்திருக்கும் படம் ஏதேனும் இருக்கிறதா என்று இளவரசனிடம் கேட்டேன். தன் மொபைலை எடுத்துச் சில நிமிடங்கள் தேடிப் பார்த்துவிட்டு, நான் உங்களுக்கு நிச்சயம் அனுப்பி வைக்கிறேன் என்று உறுதியளித்தார். தைரியமாக இருங்கள் என்று மட்டும் இளவரசனிடம் அழுத்தமாகச் சொன்னேன்.
தி.நகரிலுள்ள ஒரு லாட்ஜுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். நானும் சென்றேன். விசிக தலைவர் தொல். திருமாவளவன், து. ரவிக்குமார் இருவரையும் அங்கே சந்தித்தேன். இளவரசன் தொடர்பாக அடுத்து என்ன செய்யலாம் என்று சில சட்ட விவகாரங்களை நாங்கள் விவாதித்தோம். மதிய உணவில் இணையுமாறு திருமா என்னை வரவேற்றார். விவாதத்தைத் தொடர்ந்தபடியே உண்டு முடித்தோம். லாபியில் ஒரு தமிழ் வாரப் பத்திரிகையின் பெண் நிருபர் இளவரசனைப் பேட்டி காண காத்திருப்பதைக் கண்டேன். சில நிமிடங்களில் அந்த நிருபர், புகைப்படக்காரர், இளவரசன் மூவரும் அறைக்குள் சென்றனர். பேட்டி முடிந்த பிறகு இளவரசனிடம் சொல்லிவிட்டு விடைபெறலாம் என்று நினைத்து வெளியில் காத்திருந்தேன். ஆனால் அறையின் கதவு திறப்பதாக இல்லை. இளவரசனின் பெற்றோரும்கூட என்னோடு சேர்ந்து வெளியில்தான் காத்திருந்தனர். இளவரசனைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அவர்களிடமும் ரவிக்குமாரிடமும் சொல்லிவிட்டு, அங்கிருந்து விடைபெற்றேன். நான் அலுவலகம் சென்றாகவேண்டும். அன்றைய நிகழ்வை எழுதி முடித்தாகவேண்டும்.
அதன்பின் அந்தத் தமிழ் பத்திரிகை செய்தியைக் காண நேர்ந்தது. முகப்புப் படமே இளவரசனுடையதுதான். நன்கு பெரிதாக்கப்பட்ட அந்தப் படத்தில் மணிக்கட்டில் பிளாஸ்திரியோடு இளவரசனின் உருவம் இருந்தது. அநேகமாக இளவரசனின் கடைசி பேட்டி அது. ஊடக உலகோடு அவர் கொண்டிருந்த சிக்கலான உறவின் இறுதி அத்தியாயமாகவும் அது அமைந்துபோனது.
இருதலைக் கொள்ளி எறும்பு என்பதை இளவரசனின் உருவில் கண்டேன். திவ்யாமீதான நம்பிக்கையை, காதலை அவர் இழக்க விரும்பவில்லை. இன்னொரு பக்கம், திவ்யாவின் பிரிவையும் ஏற்றுக்கொண்டாகவேண்டிய நிலை. கேள்விகள் முடிவற்று அவருக்குள் பெருகிக்கொண்டே இருந்தன. சுயமாகச் சிந்திக்கவும் தேர்ந்தெடுக்கவும் முடியுமென்றால் நிச்சயம் திவ்யா இப்படியொரு முடிவை எடுத்திருக்கமாட்டார். அபரிமிதமான அழுத்தத்தில் சிக்கிக்கொண்டிருக்கும்போது எப்படி அவரால் நேராகச் சிந்திக்கமுடியும்? இப்படிச் சொல்லித் தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றார். முடியவில்லை. ‘திவ்யா பிரிந்தது இளவரசனை வெகுவாக அச்சுறுத்திவிட்டது. அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவன் மனதைத் தேற்ற எங்களால் இயன்ற அனைத்தையும் செய்தோம்’ என்கிறார் இளவரசனின் அப்பா, இளங்கோ.
அணைவதற்குமுன்பு தன் திராணியை முழுக்கத் திரட்டி ஒரேயொருமுறை பிரகாசித்துவிடும் மெழுகுவர்த்தி போல், கடைசி தருணத்தில் கணநேர நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருக்கிறார் இளவரசன். பரவாயில்லை, அவள் போகட்டும். நம் வீட்டில் வாழ அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று அப்பாவிடம் சொல்லியிருக்கிறார். கவலைப்படாதீர்கள், நானொரு வேலை தேடிக்கொள்கிறேன். உங்கள் எல்லோரையும் பார்த்துக்கொள்கிறேன் என்றும் நம்பிக்கையூட்டியிருக்கிறார்.
காலம் அனைத்துக் காயங்களையும் ஆற்றும். பிரிவுத்துயரை மறந்துவிட்டு இளவரசன் தனது பாதையை எப்படியாவது மீட்டெடுத்துக்கொள்வார் என்றுதான் நானும் நம்பினேன். இளவரசனைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய மறுநாள் (4 ஜூலை 2013) நண்பகல் அவருடைய உடல் தண்டவாளத்துக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்தி என்னை வந்தடைந்தபோது இடிந்துபோனேன். நேற்று நான் சந்தித்த இளவரசன் இன்று இல்லை என்பதை என்னால் உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது தவறான செய்தியாக இருக்கவேண்டும் என்று என் மனம் திரும்பத் திரும்ப என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தது. இளவரசனின் முகம் என் நினைவுகளை முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டது. என்னால் உறங்கமுடியவில்லை. இயல்பாகப் பணியாற்றமுடியவில்லை. சிந்தனையை வேறு திசையில் திருப்புவதற்கு நான் மேற்கொண்ட அத்தனை பிரயத்தனங்களும் பொய்த்துப்போயின. என்னால் எதுவும் செய்திருக்கமுடியாதுதான் என்றாலும் விவரிக்கமுடியாத குற்றவுணர்வுக்கு ஆட்பட்டேன். நாம் கூட்டாக அவரைக் கைவிட்டுவிட்டோம் என்னும் உணர்வு மேலோங்குவதை என்னால் தடுக்கமுடியவில்லை.
உங்களைச் சுற்றிப் பெரும் சக்திகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு பெரும் சிலந்தி வலைக்குள் பூச்சிபோல் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள், கவனமாக இருங்கள் என்று யாரும் அவரை எச்சரித்ததாகத் தெரியவில்லை. எங்கள் காதல் வலுவானது; எங்களை யாராலும் பிரிக்கமுடியாது என்று பதின் வயதுக்கேயுரிய அசாத்திய துணிச்சலோடு இருந்திருக்கிறார் இளவரசன். அவருக்கு இறுதிவரை யாரும் யதார்த்தத்தைப் புரியவைக்கவில்லை. ஓநாய் கூட்டம்போல் சாதியம் அவரைத் துரத்திக்கொண்டிருந்தது. கொடூரமான ஒரு விலங்கின் கரங்களில் தெரிந்தே நாம் அவரை ஒப்புக்கொடுத்துவிட்டோம்.
திவ்யா இல்லாத வாழ்வை என்னால் கற்பனைகூடச் செய்து பார்க்கமுடியவில்லை என்று என்னிடம் சொன்னார் இளவரசன். படுத்தால் உறங்கமுடியவில்லை என்றார். அவர் சொற்கள் மீண்டும், மீண்டும் என்னை அலைக்கழித்துக்கொண்டே இருந்தன. தனிப்பட்ட துயர்போல், என்னுடைய தனிப்பட்ட வலிபோல் மாறியிருந்தது இளவரசனின் இழப்பு. வாரக்கணக்கில் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். என் இயல்புநிலை பறிபோய்விட்டதுபோல் உணர்ந்தேன்.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இளவரசனின் சொற்கள், அவருடைய கபடமற்ற முகம், அதில் மலர்ந்த புன்னகை அனைத்தும் நினைவில் மோதுகின்றன. ஒரு பத்திரிகையாளன் தனது தனிப்பட்ட உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளைத் தன் பணியில் வெளிப்படுத்தக்கூடாது; புறநிலையோடுதான் எதையும், எவரையும் அணுகவேண்டும் என்பதை ஏற்கிறேன். என் பணி வாழ்வில் தமிழகத்தின் நீள, அகலங்களைப் பல முறை கடந்து வந்திருக்கிறேன். வெளிச்சமற்ற சந்து பொந்துகளிலெல்லாம் அலைந்து, திரிந்திருக்கிறேன். ஒடுக்குமுறை, வன்முறை, கலவரம், மனித உரிமைமீறல் என்று பலவற்றைக் குறித்தும் எழுதியிருக்கிறேன். எண்ணற்ற பிரமுகர்களை, கட்சித் தலைவர்களை, களப்போராளிகளை, அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். நினைவுகூரப் பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருக்கின்றன. இருந்தும் தனிப்பட்ட முறையில் இளவரசன் போல் எனக்குள் தாக்கம் செலுத்திய இன்னொருவர் இல்லை என்றே சொல்லவேண்டும்.
வாழும்போது மட்டுமல்ல, இறந்தபிறகும் இளவரசனுக்கு விடுதலை கிடைக்கவில்லை. அவர் உடல் கிடைத்த மறுகணமே அவர் மரணத்தை மர்மப் புகை மூடிக்கொண்டுவிட்டது. இன்றுவரை வாதங்களும் அனுமானங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
பரபரப்பு தொற்றிக்கொண்டது. சிறிது காலம் அமைதியாக இருந்த தருமபுரி மீண்டும் வெளிச்சத்தின்கீழ் வந்து சேர்ந்தது. விசிக தலைவர்கள் தருமபுரிக்கு விரைந்து சென்றனர். உயர் மட்ட காவல்துறை அதிகாரியொருவர் என்னை அழைத்தார். இளவரசனும் அவர் பெற்றோரும் தங்கியிருந்த லாட்ஜில் நீங்களும் இருந்தீர்களா? அவர்களைச் சந்தித்தீர்களா என்று விசாரித்தார். இந்த விஷயம் எப்படி அதற்குள் காவல்துறையைச் சென்றடைந்தது என்பதை என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆம் என்றோ இல்லையென்றோ சொல்ல எனக்கு விருப்பமில்லை. நான் உங்களோடு பேசவேண்டிய அவசியமில்லை என்று மட்டும் சுருக்கமாகப் பதிலளித்தேன். நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து எனது சட்ட ஆலோசகர்களோடு விவாதித்தேன். காவல்துறையிடமிருந்து சம்மன் வரட்டும். விசாரணை தொடங்கினால் அதிகாரப்பூர்வமாக அதை எதிர்கொள்வோம் என்று அவர்கள் ஆலோசனை அளித்தனர். அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் எனக்கு சம்மனும் வரவில்லை. வேறெந்த அழைப்பும் வரவில்லை.
(தொடரும்)
When everything is not right, its Painful.
Take care of sir.