Skip to content
Home » சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

சாதியின் பெயரால்

இளவரசனின் காதலோ அல்லது காதலுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களோ அல்ல, மரணமே அவருடைய அடையாளமாக மாறி நிற்பது துயரமானது. இளவரசனின் மரணம் குறித்து பலவிதமான யூகங்களும் சதிக் கோட்பாடுகளும் இணைய வெளியில் வலம் வர ஆரம்பித்தன. அவை ஊடகத்தின் கவனத்தைக் கவர்ந்தன. தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கேற்ப இளவரசனின் மரணத்தைச் சிலர் அர்த்தப்படுத்திக்கொண்டனர். தன் வாழ்க்கையை ஊடகம் பொறுப்புணர்வோடு அணுகியிருக்கவேண்டும் என்று வருந்தினார் இளவரசன். ஊடகம் மாறவில்லை. சாதியமைப்பு மாறவில்லை. சாதியக் கண்ணோட்டம் மாறவில்லை. பகை மாறவில்லை. எதுவுமே மாறவில்லை. இளவரசனின் மரணத்திலிருந்து யாரும், எதுவும் கற்றுக்கொண்டதுபோல் தெரியவில்லை.

தருமபுரி மாவட்ட காவல் துறை தொடங்கி சென்னை உயர் நீதிமன்றம்வரை அனைவரும் இளவரசன் தற்கொலை செய்துகொண்டார் எனும் முடிவுக்கே வந்து சேர்ந்திருந்தனர். இளவரசனின் கடிதம் தொடங்கி உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வரையிலான ஆதாரங்களை இவர்கள் உயர்த்திப் பிடித்தனர். கடும் மன உளைச்சலே இம்முடிவுக்கு இளவரசனைத் தள்ளியது என்பது அவர்கள் வாதம்.

இது உண்மையல்ல என்கிறார் இளவரசனின் தந்தை இளங்கோ. காவல் துறை வழக்கைத் துரிதமாக முடிப்பதில்தான் அக்கறை கொண்டிருக்கிறதே தவிர உண்மையைக் கண்டறிவதில் அல்ல. எனவே காவல்துறையின் வாதத்தை ஏற்கமுடியாது என்பது இவர் குற்றச்சாட்டு. காவல் துறை தன்னிச்சையாகச் செயல்பட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறது என்பதைவிட அவர்களை அவ்வாறு செய்யச்சொல்லி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது என்பதே உண்மை. மேற்கொண்டு சாதிய மோதல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் தற்கொலை என்று சொல்லி வழக்கை மூடுவதுதான் உசிதமாக இருக்கும் என்று அதிகாரிகள் கருதியிருக்கலாம். எனவே சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து இளவரசனின் மரணத்தை விசாரிக்கவேண்டும் என்று கோரி பொதுநல மனுவொன்றை (WP 21150/2013) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் இளங்கோ.

தலித், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இளவரசனின் மரணத்தை ஆணவக் கொலை என்றே அழைத்தனர். அறிக்கைகளும் ஆதாரங்களும் தீர்ப்புகளும் முழு உண்மையை வெளிப்படுத்தவில்லை என்று அவர்கள் கருதினர். பதவியிலுள்ள நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்று தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையை ஆட்சியிலிருந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலர் தலைமையில் 8 ஜூலை 2013 அன்று விசாரணை ஆணையமொன்று அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் அறிக்கை ஐந்தாண்டுகள் கழித்து, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் வெளிவந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவுதான் விசாரணை ஆணையத்தின் முடிவும். அதற்குமுன்பு என்னென்ன ஆதாரங்கள் அலசப்பட்டனவோ அதே ஆதாரங்களைத்தான் ஆணையமும் கணக்கில் எடுத்துக்கொண்டது. இளவரசனின் கடிதம், உடற்கூறு பரிசோதனை முடிவுகள், சந்தர்ப்ப சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆணையம் தன் அறிக்கையை தயாரித்திருந்தது. இந்த அறிக்கை இன்றுவரை மக்கள் பார்வைக்குக் கொண்டுவரப்படவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் அறிக்கையின் முக்கியப் பகுதிகளைத் தனிப்பட்ட முறையில் என்னால் பெறமுடிந்தது. அந்த அறிக்கை என்ன சொல்கிறது? சில முக்கியப் பகுதிகளை மட்டும் பார்ப்போம்.

0

அறிக்கையின்படி 4 ஜூலை 2013 அன்று மதியம் தருமபுரி ரயில் நிலையத்துக்கு அருகில் விரைந்துகொண்டிருந்த ரயில் வண்டியில் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்துகொண்டார். கோயமுத்தூர் குர்லா விரைவு ரயில் (வண்டி எண் 10014) சரியாக 1.20 மணிக்கு இளவரசனை மோதித் தள்ளியிருக்கிறது. தருமபுரிக்கும் சிவாடிக்கும் இடையில் ரயில் தண்டவாளத்துக்கருகில் அவர் உடல் 3.45 மணிக்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தடங்கம் கிராம நிர்வாக அலுவலரான டி. ஜெயராமனின் புகாரைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் (பிரிவு 174, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், குற்ற எண் 96/2013).

ரயில்வே காவல்துறையின் கோயமுத்தூர் பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி. கே. ராஜேந்திரன் என்பவர் முதலில் இந்த வழக்கை விசாரித்திருக்கிறார். தமிழ்நாடு டி.ஜி.பி உத்தரவின் பேரில் 6 ஜூலை அன்று ஹரூர் டி.எஸ்.பியான எம். சம்பத் என்பவருக்கு விசாரணை மாற்றிவிடப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய தினம், தருமபுரி மருத்துவமனையில் மூன்று மருத்துவர்களின் குழுவொன்று முதல் உடற்கூறு பரிசோதனையை நடத்தியிருக்கிறது. இளவரசனின் உடலில் உள்ள காயங்கள் ரயில் சக்கரங்களால் உண்டானவை என்பதை இந்தக் குழு கண்டறிந்திருக்கிறது. ரயிலின் பக்கவாட்டுப் பகுதி உடலைத் தாக்கியிருக்கிறது. காயமடைந்திருக்கும் இடது முன்கையில் கிரீஸ் கரை படிந்திருக்கிறது. தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மரணத்துக்கு அதுவே காரணம். ரயில் விபத்துகளில் பொதுவாகத் தென்படும் அடையாளங்கள் இவை.

இளவரசனின் தந்தை இதை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் நான்கு மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. ராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சம்பத் குமார், காஞ்சிபுரம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே. தங்கராஜ் ஆகிய அமைப்பு சாராதவர்களைக் கொண்டு இளவரசனின் உடல் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. முந்தைய உடற்கூறு பரிசோதனையின் காணொளிப் பதிவையும் இவர்கள் பார்வையிட்டனர். இளவரசனின் மரணத்தில் எந்தச் சர்ச்சையும் இல்லை. ஏற்கெனவே உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் சரியான முடிவுக்கே வந்து சேர்ந்திருக்கின்றனர். இதில் ஐயத்துக்கு இடமேயில்லை என்று அவர்கள் முடித்துக்கொண்டனர். இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த சிபி சிஐடி, சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை ஆணையம் ஆகிய மூவருக்கும் தங்கள் அறிக்கையை இவர்கள் சமர்ப்பித்தனர்.

அப்போதும் சர்ச்சைகள் ஓயாத நிலையில் 13 ஜூலை அன்று டாக்டர் டி.என். பரத்வாஜ், டாக்டர் மிலோ டாஃபின், டாக்டர் சுதிர் குமார் குப்தா ஆகிய மூன்று எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு இரண்டாம் உடற்கூறு பரிசோதனை நிகழ்த்தப்பட்டது. அதுவரை இளவரசனின் உடல் தருமபுரி அரசு மருத்துவமனையின் பிரேத அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

தர்மபுரி அரசு மருத்துவமனையும் எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒரே முடிவுக்குத்தான் வந்து சேர்ந்திருந்தன.  இரண்டுமே ரயில் வண்டி மோதியதால் ஏற்பட்ட காயங்களே இளவரசனின் மரணத்துக்குக் காரணம் என்று ஐயத்துக்கு இடமின்றி அறிவித்துள்ளன. இரண்டு அறிக்கைகளும் பல இடங்களில் ஒத்துப்போகின்றன. கனமான பொருள் (இந்த இடத்தில் ரயில் வண்டி சக்கரம்) மோதியதால் ஏற்பட்ட காயமே மரணத்துக்குக் காரணம். நொடிப் பொழுதில் மரணம் சம்பவித்திருக்கிறது. இறப்பதற்கு முன்பு இளவரசனின் உடலில் எந்தக் காயமும் இல்லை. இதன் பொருள் இளவரசன் யாராலும் தாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர்மீது முன்னதாக எந்த வன்முறையும் நிகழ்த்தப்படவில்லை. ஓரிடத்தில் மட்டும் மருத்துவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது என்பதையும் அது முக்கியமான இடம் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. தமிழகத் தரப்பில் ஆய்வு செய்த மருத்துவர் ஒருவர், இளவரசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று முடிவு செய்துவிடமுடியாது என்று தெரிவித்திருக்கிறார். கனமான பொருள் தலையில் மோதியதால் நேர்ந்த மரணம் என்று உறுதிபடச் சொல்லலாமே ஒழிய, அது ரயிலின் சக்கரம்தான் என்று உறுதியாகச் சொல்லிவிடமுடியாது என்பது அவர் வாதம்.

சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ அறிக்கைகளை ஏற்றுக்கொண்டது. எய்ம்ஸ் அறிக்கையின்படி ரயிலில் பாய்வதற்கு முன்பு இளவரசன் மது அருந்தியிருக்கிறார். அவருடைய உள்ளுறுப்புகள் சேலத்தில் தடயவியல் பரிசோதகர்களால் ஆராயப்பட்டபோது எதில் ஆல்கஹாலின் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுபோக வேறு நஞ்சு பொருள்கள் உடலில் காணப்படவில்லை. மன அழுத்தம் காரணமாக இளவரசன் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதையே இவையெல்லாம் உணர்த்துகின்றன. இளவரசனின் மரணத்தில் சர்ச்சைகளுக்கோ சந்தேகங்களுக்கோ இடமில்லை. இவ்வாறு சொல்லி வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவுதான் சிங்காரவேலர் ஆணையத்தின் முடிவும்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *