‘உம்மவன் முருகேசன் எங்கே?’ என்று மருதுபாண்டி ஐந்தாறு ஆள்களோடு திரண்டு வந்து காலையிலேயே கத்தியபோது சாமிகண்ணு மிரண்டு போனார். என்ன விஷயம் என்று தயக்கத்தோடு கேட்டபோது, ‘பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக்கின்னு இழுத்தடிக்கிறான்’ என்று பதில் வந்தது. எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து உடனே கூட்டிவா என்று சொல்லி அவரை விரட்டினார்கள். அவர்கள் சொல்வது உண்மையல்ல என்பது தந்தைக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக வாங்குவதற்கோ, வாங்கி வைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வதற்கோ நிச்சயம் வாய்ப்பில்லை. இது வேறு ஏதோ விவகாரம் என்பதை விளங்கிக்கொண்டுவிட்டார். என்னவாக இருக்கும்? பதைபதைத்தபடி முருகேசனைத் தேடி ஓடத் தொடங்கினார்.
அடுத்து முருகேசனின் தம்பி வேல்முருகன் வழிமறிக்கப்பட்டிருக்கிறார். அதே விசாரணை. எங்கே முருகேசன்? எனக்குத் தெரியவில்லை என்று அவர் சொன்னதை மருதுபாண்டி ஏற்கவில்லை. வேல்முருகனை இழுத்து வந்து ஓர் அறைக்குள் தள்ளி, கட்டி வைத்து அடிக்க ஆரம்பித்தார்கள். சத்தம் கேட்டு பக்கத்திலிருந்த சித்தப்பா அய்யாசாமி ஓடி வந்திருக்கிறார். குப்பநத்தம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர். உடனே அவரைப் பிடித்துக்கொண்டார்கள். முருகேசன் என் முன்னால் வரும்வரை வேல்முருகனை விடுவிக்கப்போவதில்லை. போ, உடனே அவனை இழுத்து வா!
சித்தப்பாவுக்கும் என்ன நடந்தது, எதற்காக முருகேசனைத் தேடுகிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் முருகேசன் எங்கிருக்கக்கூடும் என்பதை ஒருவாறு யூகித்துவிட்டார். அவர் யூகம் சரியாகவே இருந்தது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலம் தாலுக்காவில் அமைந்திருக்கும் வண்ணான்குடிகாடு என்னும் கிராமத்திலுள்ள அக்கா வீட்டில் பதுங்கியிருந்தார் முருகேசன். விவரம் சொல்லி, அவரை அழைத்துக்கொண்டு வண்டி பிடித்து புதுக்கூரைப்பேட்டை வந்து மருதுபாண்டியிடம் ஒப்படைத்தார் சித்தப்பா. நான் என் வாழ்நாளில் செய்த மாபெரும் தவறு என்று இந்நிகழ்வைக் கண்ணீரோடு பின்னர் நினைவுகூர்கிறார் அவர்.
முருகேசனைக் கண்டதும் இரையைக் கண்ட வேட்டை விலங்குபோல் பாய்ந்து பிடித்து கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினார்கள். கையையும் காலையும் கட்டி, ‘சொல்லு, பொண்ணை எங்க ஒளிச்சி வச்சிருக்க?’ என்று முருகேசனிடம் திரும்பத் திரும்பக் கேட்டு தாக்கியிருக்கிறார்கள். அலறியபடி தடுக்க வந்த குடும்பத்தினரை, ஆண் பெண் பேதமின்றி அடித்துத் துவைத்திருக்கிறார்கள். தெரியாது, தெரியாது என்று அரற்றிக்கொண்டிருந்த முருகேசனைக் கிட்டத்தட்ட கழுத்தை நெறித்துக் கொன்றிருப்பார்கள். அப்போதும் வாய் திறக்க மறுத்த நிலையில் அடுத்த நிலை சித்திரவதை ஆரம்பமானது. கிராமத்துக்கு அருகில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சோதனைக்காக பல குழிகளை வெட்டி வைப்பது வழக்கம். அப்படித் தோண்டப்பட்டிருந்த 300 அடி குழியொன்றில் முருகேசன் தலைகீழாக கீழே இறக்கப்பட்டார். தாள மாட்டாத ஒரு கணத்தில், விழுப்புரம் மூங்கில்துறைப்பட்டில் உறவினர் வீட்டில் கண்ணகி தங்கியிருந்ததை முருகேசன் ஒப்புக்கொண்டார். உண்மையான வேட்டை அதன்பிறகுதான் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகிலுள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் துறையில் இணைந்து படித்து வந்தவர். அதே பல்கலையில் வணிகவியல் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தார் துரைசாமியின் மகள் கண்ணகி. அவரைக் காதலித்தது முருகேசனின் முதல் குற்றம். தான் காதலிப்பது வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை என்று தெரிந்திருந்தும் ஒரு தலித்தான முருகேசன் அவரை மணந்துகொண்டது இரண்டாவது குற்றம். 5 மே 2003 அன்று கடலூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டபோது முருகேசனுக்கு 25 வயது, கண்ணகிக்கு 22.
ஆபத்தை முன்னுணர்ந்து மூங்கில்துறைப்பட்டில் தன் மனைவியைப் பாதுகாப்பாகத் தங்க வைத்திருக்கிறார் முருகேசன். கண்ணகி சிறிது காலம் தலைமறைவாக இருந்தால் நிலைமை மாறும். திருமணத்தை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று முருகேசன் நம்பிக்கொண்டிருந்தார் போலிருக்கிறது. திருமணம் குறித்த தகவல் கிடைத்ததும் ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டது கண்ணகியின் குடும்பம். கண்களில் மின்னும் வெறியோடு மருதுபாண்டி தன் தங்கை கண்ணகியை இழுத்துச் சென்றபோது முருகேசனின் நம்பிக்கை உடைந்து சிதறியிருக்கவேண்டும்.
என்ன நடந்திருக்கிறது என்பதை உணர்ந்ததும் முருகேசனின் குடும்பத்தினர் மேலும் பீதியடைந்தனர். காடு, கரை எல்லாவற்றையும் தந்துவிடுகிறோம். என் மகன் செய்த தவறை மன்னித்து இத்தோடு விட்டுவிடுங்கள் என்று கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறார்கள். மேலும், வசை, மேலும் தாக்குதல். இவர்களிடம் இனியும் பேசிப் பலனில்லை என்பதை உணர்ந்து, விருத்தாச்சலம் காவல் நிலையத்துக்கு விரைந்திருக்கிறார்கள். வன்முறைத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது; நாங்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறோம்; எங்கள் மகன் பரிதாபமான நிலையில் கொலைக் கூட்டத்தாரிடையே சிக்கிக்கிடக்கிறான் என்று கலக்கத்தோடு முறையிட்ட பிறகும் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததோடு, அவர்களையெல்லாம் அங்கிருந்து விரட்டியும் அடித்திருக்கிறார்கள் காவலர்கள்.
அதற்குள் அருகிலுள்ள முந்திரிக்காட்டுக்குள் ஊரே திரண்டிருந்தது. முருகேசனின் கையையும் காலையும் கட்டி கீழே தள்ளியிருந்தார்கள். தள்ளியுள்ள ஒரு மரத்தில் கண்ணகியும் கட்டப்பட்டிருந்தார். காரில் இழுத்து வரும்போதே போதுமான அளவுக்கு அவரைச் சித்திரவதை செய்திருந்தார்கள். முருகேசனின் சித்தப்பாவையும் பிடித்துக் கட்டியிருந்தார்கள். என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்று அனைத்தும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
நஞ்சு தயாராக இருந்தது. முருகேசனுக்கு அதை ஊட்டும் பணியை மருதுபாண்டி ஏற்றுக்கொண்டிருந்தார். எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முருகேசனின் மூக்கு, காது வழியாக நஞ்சு செலுத்தப்பட்டது. பல்லைக் கடித்தபடி, வாயை இறுக்க மூடியிருந்த கண்ணகிக்கும் அதேபோல் நஞ்சு புகட்டப்பட்டது. கத்தல், கதறல் எதுவும் பொருட்படுத்தப்படவில்லை. புட்டியிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சுபோல் தோன்றவில்லை அது. மனித மூளையில் ஊறிக்கொண்டிருந்ததுதான் கை வழியாக, விரல் வழியாகக் கசிந்து வந்திருக்கிறது. முருகேசனின் குடும்பமே கதறிக்கொண்டிருந்திருக்கிறது. கண்ணகியின் குடும்பத்தினரும் இருந்திருக்கிறார்கள். இருவரையும் நன்கறிந்த ஊர் மக்களும் அங்கேதான் இருந்திருக்கிறார்கள். அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்களா? உணர்ந்த பிறகும் ஏன் அமைதியில் உறைந்து கிடந்தார்கள்? ஒருவர்கூட ஏன் தடுக்க முன்வரவில்லை? எதிர்த்து ஒரு குரலும் ஏன் கிளம்பவில்லை? அந்தக் காட்டிலுள்ள மரம்போல் அசையாமல் மனிதர்கள் நின்றுவிட்டது ஏன்? ‘ஊரே தெரண்டிருக்க ரண்டு உசுரும் போயிருச்சு’ என்கிறார் அய்யாசாமி. இது நடந்தது 8 ஜூலை 2003 அன்று.
வேலை முடிந்தபாடில்லை. விழுந்து கிடந்த இரு உடல்களையும் சேகரித்துக்கொண்டார்கள். மிகக் கவனமாகப் பெண்ணின் உடலை அவருடைய சாதிக்கான சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். பையனின் உடலுக்குச் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள ஓடையே போதுமானது என்று அவர்களுக்குத் தோன்றியது. வன்முறைக்குச் சாதியில்லை. இன்ன சாதியைச் சேர்ந்த மனிதர்கள்தான் சக மனிதர்களை அடிக்கலாம், உதைக்கலாம், நஞ்சு கொடுத்து கொல்லலாம் என்று எந்தச் சட்டமும் எங்கும் இருப்பதுபோல் தெரியவில்லை. கொன்ற பிறகு உடலை எரிக்கும் பணியை எல்லோரும் செய்துவிடமுடியாது. இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள் அப்பணியைச் செய்யக்கூடாது. முருகேசனின் உடலை மட்டுமல்ல அவர் காதலித்து மணந்த கண்ணகியின் உடலையும் தலித்துகள்தான் தீயிட்டு எரித்தாகவேண்டும். உண்மையில் அதுதான் நடந்தது. திருமணமான இரு மாதங்களில் இருவரும் காற்றில் கலந்தனர்.
இந்த இரட்டைக் கொலைகளை ஓராண்டுக்குப் பிறகு முதல் முதலில் வெளியுலகுக்குக் கொண்டுவந்தது தமிழ் இதழ் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த உள்ளூர் நிருபர்தான். 18 பிப்ரவரி 2007 அன்று உண்மை அறியும் குழுவொன்று (பேரா.அய்.இளங்கோவன், ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர்கள் லூஸி, செபாஸ்டியன், ரஜினிகாந்த், மங்கம்மாள், செங்கொடி, மூர்த்தி உள்ளிட்டோர் அதில் இடம்பெற்றிருந்தனர்) கடலூர் குப்பநத்தம் கிராமத்துக்குச் சென்று முருகேசன் குடும்பத்தாரிடம் மேற்கொண்ட உரையாடலிலிருந்து மேலே சில மேற்கோள்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. முருகேசனும் கண்ணகியும் தாக்கப்பட்டது தொடங்கி அவர்களுடைய உடல் எரிக்கப்பட்டது வரையிலான கொடூரமான நிகழ்வுகளை நேரடியாகக் கண்டவர்கள் இவர்கள். காடெங்கும் ஆக்கிரமித்துப் பரவிய மரண ஓலத்தை அவர்களால் தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாது.
ஆணவப் படுகொலை என்னும் பதத்தைத் தமிழகம் முதல் முதலாகப் பாவிக்கத் தொடங்கியது இந்நிகழ்வுக்குப் பிறகுதான். கொலை அல்ல, கொலைகள். இதற்குமுன்பே இத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்றாலும் சாதிய மோதல், சாதியக் கொலை என்றெல்லாம் அவை அழைக்கப்பட்டு வந்தன. சாதியம் எப்படி இயல்பானதாக, எங்கும் நிறைந்ததாக இருக்கிறதோ அதேபோல் சாதியக் கொலைகளும் இயல்பானவையாகவும் அவ்வப்போது நிகழ்பவையாகவும் கருதப்பட்டு வந்தன.
முருகேசன், கண்ணகி நிகழ்வு அந்நிலையை மாற்றியமைத்தது. இது வழக்கமான குற்றச்செயலல்ல. வழக்கமான சட்ட ஒழுங்குப் பிரச்சினையல்ல. தங்கள் சாதிப் பெருமிதத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக, தங்கள் குடும்பப் பெருமிதத்துக்கு ஏற்பட்டுவிட்ட ‘கறையை’ அழிப்பதற்காக, ஆணவத்தின் உச்சத்தில் நிகழ்த்தப்பட்ட கொலைகள் இவை. கொலை எனும் செயல் மட்டுமல்ல; அதைச் செய்யத் தூண்டிய சாதிப் பெருமித உணர்வு எனும் அச்சுறுத்தலையும் நாம் இங்கே கணக்கில் கொண்டாகவேண்டும். அந்த வகையில் முருகேசன் கண்ணகி ஆணவக் கொலைகள் தனிக்கவனத்தோடு ஆராயப்படவேண்டியது அவசியமாகிறது.
(தொடரும்)