Skip to content
Home » சாதியின் பெயரால் #19 – நத்தை வேகத்தில் நீதி

சாதியின் பெயரால் #19 – நத்தை வேகத்தில் நீதி

கண்ணகி - முருகேசன்

பட்டவர்த்தனமாக ஊர் மக்கள் முன்பாக நடத்தப்பட்ட கொலைகள் என்பதால் முருகேசன், கண்ணகி வழக்கில் நீதி கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால் தவறு.

குற்றம் நடந்தது 7-8 ஜூலை 2003 அன்று. இருந்தும் 17 ஜூலை அன்றுதான் விருதாச்சலம் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. எப்படிப்பட்ட குற்றம், நோக்கம் என்ன, குற்றவாளிகள் யார் போன்ற அனைத்தும் அனைவருக்கும் தெரியும் என்றாலும் காவல்துறை இந்த இரட்டைக் கொலைகளைப் பெரிதாகவே எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை. மிகவும் மெத்தனமாக வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியவர்கள் திடுதிடுப்பென்று அதிர்ச்சியூட்டும் வகையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

கண்ணகியின் அப்பா துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி உள்ளிட்ட நான்கு பேரோடு சேர்த்து முருகேசனின் அப்பா சாமிக்கண்ணு, சித்தப்பா அய்யாசாமி உள்ளிட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். கொலை செய்தவர்கள் தரப்பில் நான்கு பேர். கொலையுண்டவர்கள் தரப்பில் நான்கு பேர். நான்கு வன்னியர்கள். நான்கு தலித்துகள். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை இப்படிப் புரிந்துகொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது!

முருகேசனையும் கண்ணகியையும் இந்த எட்டு பேரும் சேர்ந்து துன்புறுத்தினார்களாம். எட்டு பேரும் சேர்ந்து மரத்தில் கட்டிப்போட்டு அடித்தார்கள். பிறகு நஞ்சூட்டிக் கொன்று, எரித்து முடித்தார்களாம். சொல் பேச்சு மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால் மனம் வெகுண்டு முருகேசனை அவருடைய பெற்றோரும் கண்ணகியை அவருடைய பெற்றோரும் கொன்று எரித்துவிட்டார்கள் என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் விருதாச்சலம் காவலர்கள். பாதிக்கப்பட்டவர்களும் குற்றவாளிகளாக முத்திரை குத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். என்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்ட சாமிக்கண்ணு காவலரால் தாக்கப்பட்டிருக்கிறார். 23 தினங்களுக்குப் பிறகு எட்டு பேருக்கும் ஒன்றாகப் பிணை கிடைத்திருக்கிறது.

அப்படிக் கிடைத்த பிணைக்குப் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. கண்ணகியின் அப்பா துரைசாமி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர். அவர் 30 நாள்கள் சிறையில் இருந்தால் அவருடைய பதவி பறிபோய்விடும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடலூர் மாவட்ட நீதிபதி முன்னதாகவே அவரை பிணையில் விடுவித்திருக்கிறார். மகனைப் பறிகொடுத்து நிற்கும் சாமிக்கண்ணு 36 நாள்கள் சிறையில் அவதிப்படவேண்டியிருந்தது. காவல்துறை தொடங்கி நீதிமன்றம்வரை அவர்களுக்கிருந்த செல்வாக்கையே இது உணர்த்துகிறது. நேர் மாறாக, தலித் என்பதால் சொந்த ஊரிலேயே முருகேசனின் குடும்பத்துக்கு ஆதரவோ அனுதாபமோ கிடைக்கவில்லை. ஆக மொத்தம் சாதிதான் இங்கே அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரே சக்தி. நீதி, நியாயம், சமத்துவம் ஆகிய மானுட விழுமியங்களும்கூட சாதியால் வெற்றிகரமாக வளைக்கப்படுகின்றன என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இந்த வழக்கு.

உள்ளூரில் இப்படித்தான் நடக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததும் சாமிக்கண்ணுவை மனுதாரராகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. துரைசாமி உள்ளிட்டவர்களின் பிணையை ரத்து செய்யவேண்டும் என்றும் சிபிஐ வழக்கை விசாரிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மறைந்த உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் துரைசாமியின் பிணையை ரத்து செய்தார். நடந்திருப்பது காட்டுமிராண்டித்தனமான கொலை என்று சொல்லி 22 ஏப்ரல் 2004 அன்று வழக்கை சிபிஐக்கும் மாற்றினார்.

மூத்த வழக்கறிஞர் பொ. ரத்தினம், சமூக ஆர்வலர் கோ. சுகுமாரன் தலைமையில் ஒரு சிறு குழு முனைப்போடு இயங்கியதால் நிகழ்ந்த மாற்றம் இது. ‘தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட உதவி மையம்’ எனும் அமைப்பின்கீழ் இவர்கள் அனைவரும் திரண்டு நின்று ஆதரவுக்கரம் நீட்டியதால்தான் உடைந்து போகும் நிலையிலிருந்த வழக்கு உயிர் பெற்றது. விருத்தாச்சலத்திலிருந்து செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கும் அங்கிருந்து கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கும் வழக்கு மாற்றப்பட்டதை இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. இறுதியாக, கடலூரில்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணைக்கு வந்தது. சட்டப்படி, இயல்பாக ஒரு விசாரணையை நடத்துவதற்கு இவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது.

சிபிஐ தனது புலன் விசாரணையை விரிவாக மேற்கொண்டது. நஞ்சு இருந்த புட்டி, இரண்டு சில்வர் டம்ளர்கள் உள்ளிட்டவை களத்தில் கிடைத்த தடயங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. குற்றத்தை நிரூபிக்கப் பிரதானமாகச் சாட்சியங்களே பட்டியலிடப்பட்டிருந்தனர். எனவே சாட்சியங்களை முறையாக வரவழைக்கப்பட்டு அவர்களுடைய வாக்குமூலங்களை சிபிஐ திரட்டிக்கொண்டது. துரைசாமி, மருதுபாண்டி மற்றும் உறவினர்கள் ஆகியோரோடு சட்டத்தை வளைத்துப் பொய் வழக்குப் பதிவு செய்த விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகளாகப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். காழ்ப்போடு சேர்க்கப்பட்டிருந்த பெயர்கள் கவனமாக நீக்கப்பட்டன. குற்றவாளிகள் சாட்சியங்களை செல்போனில் அழைத்து மிரட்டியதற்கான உரையாடல் பதிவுகளையும் சிபிஐ திரட்டியிருந்தது.

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற இரு காவல் அதிகாரிகள், தமிழ்மாறன் மற்றும் செல்லமுத்து. முதலாமவர், தேவர், இரண்டாமவர் வேட்டுவக் கவுண்டர். கொல்லப்பட்ட இடத்துக்கு இந்த இருவருமே சென்றிருக்கிறார்கள். எரிந்துகொண்டிருந்த உடல் பாகங்களைப் பார்வையிட்டிருக்கிறார்கள். அதற்கான சாட்சிகளும் இருந்திருக்கிறார்கள். விசாரணையின் போக்கை வேண்டுமென்றே திசை மாற்றியவர்கள் இவர்கள்தாம். இதைப் பின்னர் நீதிபதியும் ஒப்புக்கொண்டார். குற்றவாளிகள் ஆதிக்கச் சாதியினர் என்பதால் இந்தக் காவலர்கள் அவர்களுக்கு ஆதரவாக இயங்கியிருப்பது கண்கூடு. பாதிக்கப்பட்டவர்களோடு அல்ல, குற்றவாளிகளுடன் உடன் சேர்ந்து நிற்கவேண்டும் என்று இவர்கள் நினைத்து இயங்கியதற்குப் பின்னாலுள்ளது அப்பட்டமான சாதிப் பற்று மட்டுமே.

வாக்குமூலம் அளித்த பலர் பின்னர் பிறழ் சாட்சியங்களாக மாறியதும் நிகழ்ந்தது. சாட்சியம் அளிக்கவேண்டியவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிகழ்வும் பரபரப்பாகப் பேசப்பட்டது.மா. செல்வராசு என்பவர் புதுக்கூரைப்பேட்டை அருகில் கடலூர் விருதாச்சலம் சாலையில் மயங்கிக் கிடந்திருக்கிறார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. கண்ணகி முருகேசனைக் கொன்றவர்கள்தான் இதற்குக் காரணம் என்று இருநூறுக்கும் அதிகமானோர் திரண்டு காவல் துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து, செல்வராசுவின் மனைவியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நேரடியான, மறைமுகமான மிரட்டல்கள், அழுத்தங்கள், பின்னணி சதி வேலைகள், தடங்கல்கள் அனைத்தையும் கடந்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வழக்கு முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நீதிக்கான பயணம் எளிதானதல்ல என்பதை முருகேசன் தரப்பினர் நன்கு உணர்ந்திருந்தனர் என்றாலும் வழக்கு நீண்டுகொண்டே போனதும் அலைக்கழிப்புகள் அதிகரித்துக்கொண்டே போனதும் அவர்களை உடலளவில் மட்டுமின்றி மனரீதியாகவும் கடுமையாகப் பாதித்தது. ‘வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்!’ என்றும் ‘அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்!’ என்றும் எதிர்பாராத திசைகளிலிருந்தெல்லாம் அழுத்தம் வந்துகொண்டே இருந்தது. ‘ஒருவேளை நமக்குச் சாதகமான தீர்ப்பு வந்தாலும் பாதிக்கப்படப்போவது நாம்தான். அவர்களை மேலும் மேலும் பகைத்துக்கொண்டு அதே ஊரில் நாம் எப்படி வாழ்வது?’ என்று சுற்றத்தாரே கலங்கித்தான் போனார்கள். என்ன நடந்தாலும் சரி, நீதி கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்பதில் முருகேசனின் அப்பாவும் மற்றவர்களும் உறுதியோடு இருந்தனர்.

ஆண்டுக்கணக்கில் நீண்டு சென்ற பிறகு ஒரு வழியாக விசாரணையை முடித்துக்கொண்டு 690 பக்க இறுதி அறிக்கையை 14 மார்ச் 2010 அன்று கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது சிபிஐ.

(தொடரும்)

பகிர:
nv-author-image

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *