‘இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, வாபஸ் வாங்கிவிடுங்கள்’ எனும் விநோதமான அறிவுரையை வழக்கு நடைபெற்ற காலம் நெடுகிலும் முருகேசனின் குடும்பத்தார் எதிர்கொண்டபடியே இருந்தனர். பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை மட்டுமே இது என்று அவர்கள் நம்பினர் போலிருக்கிறது. எளியவர்கள் மட்டுமல்ல போராளிகளாகக் கருதப்பட்ட சில அரசியல்வாதிகளுமேகூட இதே அறிவுரையைத்தான் வழங்கியிருக்கிறார்கள் என்பதை இன்று பார்க்கும்போது ஆச்சரியமாக மட்டுமின்றி அதிர்ச்சியாகவும் இருக்கிறது. காவல்துறையின் போக்கும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஏசுவது, மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது என்று பாதிக்கப்பட்டவர்களை உளவியல்ரீதியில் தொடர்ந்து வதைத்து வந்திருக்கின்றனர். ‘ரவுடி லிஸ்ட்ல சேர்த்து என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிருவோம்’ என்றுகூட மிரட்டியிருக்கிறார்கள்.
வழக்கை நடத்துவதற்கு முருகேசன் தரப்பு வழக்கறிஞர் பொ. ரத்தினம் மிகவும் பிரயத்தனப்படவேண்டியிருந்தது. ஒன்று அதிகார வர்க்கம் அளவு கடந்த மெத்தனத்தோடு நடந்துகொள்ளும். அல்லது, ஏதேனும் காரணம் காட்டி ஒன்று மாற்றி ஒன்று முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டே இருக்கும். இவற்றையெல்லாம் சமாளித்து முன்னேறுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இயல்பாக நடக்கவேண்டிய விஷயங்களுக்குக்குகூடப் போராடவேண்டியிருப்பதை என்னவென்று சொல்ல? என்று வருந்துகிறார் ரத்தினம்.
இடர்ப்பாடுகளைக் கண்டு அஞ்சி நாம் விலகிவிடுவோம், வழக்கைக் கைவிட்டுவிடுவோம் என்று அவர்கள் நினைத்திருந்தனர் போலிருக்கிறது! சிபிஐ அனுபவமற்ற விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்தபோது நாங்கள் எதிர்த்தோம். அனுபவமுள்ளவர்தான் நியமிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். பொய் குற்றச்சாட்டுகளிலிருந்து பாதிக்கப்பட்டோரை விடுவிப்பதும் எளிதானதாக இருக்கவில்லை என்கிறார் ரத்தினம்.
இரட்டைக் கொலைகள் நடந்து 18 ஆண்டுகள் கழித்து, சிபிஐ தனது அறிக்கையைச் சமர்ப்பித்து பத்து ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக கடலூர் சிறப்பு நிதிமன்றம் தனது தீர்ப்பை 24 செப்டெம்பர் 2021 அன்று அளித்தது. நீதிபதி உத்தமராஜா தனது தீர்ப்பை வாசித்து முடித்தபோது காலச்சக்கரம் பல சுற்றுகள் சுற்றி முடித்திருந்தன.
நாம் தொடக்கத்தில் பார்த்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் சான்றுகள் போதுமான அளவுக்குச் சேகரிக்கப்பட்டிருந்தபோதிலும் அவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கமுடியவில்லை. எனவே, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுவிக்கப்பட்டார். முருகேசன் கண்ணகி வழக்கில் நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இருவரையும் கொல்வதற்கு விரிவாகச் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதைப் போதுமான சாட்சியங்களைக் கொண்டு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் முருகேசன் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்தனர். சாட்சியங்கள் எந்த இடத்திலும் முரணான தகவல்களை அளிக்காமல் ஒரே சீராக தங்கள் வாக்குமூலங்களை அளித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
முருகேசனின் சகோதரிகளுள் ஒருவரான தமிழரசி, சின்னப்பிள்ளை, சாமிக்கண்ணு, வேல்முருகன், பழனிவேலு (முருகேசனின் தம்பி) ஆகியோர் வலுவான சாட்சியங்களை அளித்தனர். தயவு செய்து முருகேசனை விட்டுவிடுங்கள் என்று கொல்லப்படுவதற்கு இறுதிக்கணம் வரை நாங்கள் கண்ணீர் விட்டுக் கதறி மன்றாடினோம் என்று தங்கையும் அம்மாவும் அளித்த சாட்சியம் வலு சேர்ந்தது. முருகேசனுக்கு என்ன நடந்தது என்பதைப் படிப்படியாக இருவரும் விவரித்தனர். தாக்கியவர், நஞ்சு புகட்டியவர் அனைவரையும் பெயர் குறிப்பிட்டு அடையாளம் காட்டினார் தமிழரசி.
கடைசியாக முருகேசனையும் கண்ணகியையும் எங்கே பார்த்தீர்கள் என்னும் கேள்விக்கு அனைவரும் ஒன்றுபோலவே பதிலளித்திருக்கின்றனர். கண்ணகியின் குடும்பத்தினரே இருவரையும் கடத்திச் சென்றனர் என்பதிலும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருவரும் இறுதிக் கணங்களில் சிக்கியிருந்தனர் என்பதும் குற்றத்தை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தது. இருவரையும் நாங்கள் கொல்லவில்லை என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை கண்ணகியின் வீட்டினரையே சாரும். ஆனால் அவர்களால் அதைச் செய்ய இயலவில்லை என்கிறது தீர்ப்பு.
கடமை தவறியதற்காகவும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததற்காகவும் தமிழ்மாறன், செல்லமுத்து ஆகிய இரு காவலர்களை சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழும் அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததும் ஒரு முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்கிறார் கோ. சுகுமாரன். பக்கச் சார்பின்றிச் செயல்படவேண்டிய காவல் துறை ஆதிக்கச் சாதியினருக்குத் துணையாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டிருந்தன. சதிக் கோட்பாட்டோடு இந்த ஆதாரங்கள் பொருந்தி வந்தன. மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், 351(1)(a) பிரிவின் கீழும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 3இன் கீழும் இருவருக்கும் தலா 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை பாதிக்கப்பட்டோரைச் சென்றடையும்.
‘அபத்தமான கற்பனைக் கதைகளை’ உருவாக்கி முருகேசன் தரப்பினருக்கு இவர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்ததை நீதிபதி தனது தீர்ப்பில் கவனப்படுத்தினார். ‘வன்னியர் சாதிப் பெருமிதத்தை’ உயர்த்திப் பிடிக்கும் வகையில்தான் தேவையற்ற கைதுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதையும் தெளிவாகவே தீர்ப்பு குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்டவர் ஒரு தலித் என்று தெரிந்தும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அவர்கள் தவிர்த்தது ஏன் என்னும் கேள்வியையும் நீதிபதி எழுப்பினார். முதல் தகவல் அறிக்கையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் குற்றம் நடந்திருக்கிறது என்பதை அது தெளிவாகவே பதிவு செய்திருக்கிறது. குற்றம் நடந்தது தெரியும் என்றாலும் தமிழ் இதழொன்றில் செய்தி வரும்வரை, கிராம நிர்வாக அலுவலர் முன்பு குற்றவாளிகள் சரணடையும்வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததைத் தீர்ப்பு கண்டித்தது. உடந்தைக்கு இதைவிடப் பெரிய ஆதாரம் இருந்துவிடமுடியாது அல்லவா?
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டி (குற்றவாளி எண் 2) 120B, 302, 147, 347, 364, 149, 201 மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 3(1)(X), 3(2)(5) ஆகியவற்றின்கீழ் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு சென்னை உயர் நீதிமன்றத்தைச் சாரும் என்று குறிப்பிட்டது தீர்ப்பு.
கண்ணகியின் அப்பா துரைசாமிக்கு (குற்றவாளி எண் 1) பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. கூடுதலாக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. முருகேசன் தரப்பில் பொய் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டிருந்த அய்யாசாமி, குணசேகரன் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஐயத்துக்கு இடமின்றி இவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதே விடுவிப்புக்கான காரணம்.
தீர்ப்பு 202 பக்கங்களுக்கு நீண்டு சென்றது. நடந்திருப்பது கொடூரமான குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான செயல் என்றது தீர்ப்பு. சாதியப் பெருமிதத்தையும் சமூக வெறுப்பையும் கடைப்பிடிப்பவர்களுக்கு இந்தத் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. எந்த மழுப்பலுமின்றிச் சாதி ஆணவக் கொலையை அதன் பெயரைச் சொல்லிக் குறிப்பிட்ட முக்கியமான தீர்ப்பாக இதனைக் கொள்ளமுடியும். வழக்கைச் சரியாக நடத்தாத காரணத்தால் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது தமிழ்நாட்டில் அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும்.
இதே மாதிரியான ஒரு வழக்கில் (லதா சிங் வழக்கு) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, சாதிப் பெருமிதக் கொலையில் பெருமிதம் கொள்ள ஏதுமில்லை என்று வலியுறுத்தியது சிறப்பு நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பு. பழங்கால, நிலப்பிரபுத்துவ மனோநிலையில் ஊறிக்கிடக்கும், கொடூர மனம் கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய கொலைகளைப் புரியமுடியும். சாதி ஆணவத்தோடு நிகழ்த்தப்படும் இக்கொலைகள் அரிதினும் அரிதானவை என்றே கொள்ளவேண்டியிருக்கும். மரண தண்டனை மட்டுமே இதற்கு வழங்க இயலும். இத்தகைய காட்டுமிராண்டித்தனங்களை நாம் தடுத்து நிறுத்தியாகவேண்டும். நம் தேசத்துக்கே இவை அவமானத்தை ஏற்படுத்த வல்லவை. சாதியின் பெயரால் ஆணவக்கொலை புரியவேண்டும் என்று இனியும் நினைப்பவர்களுக்குத் தூக்கு மேடை காத்துக்கொண்டிருக்கிறது என்னும் எச்சரிக்கையையும் இதே தீர்ப்பில் காணமுடிகிறது.
நாம் செய்வது தவறு எனும் உணர்வே இல்லாமல் பட்டவர்த்தனமாக இவர்கள் கொடூரமான குற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். எந்தவிதமான சஞ்சலமோ வருத்தமோ இவர்களிடம் இல்லை. மற்றவர்கள் மனதில் அச்சத்தை விதைக்கும் வகையில் இருவரையும் கொன்றிருக்கிறார்கள் என்கிறது தீர்ப்பு. பாதிக்கப்பட்டோருக்கு அரசும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தமராஜா கேட்டுக்கொண்டார். தீர்ப்பின் இறுதிவரை பின்வருமாறு தமிழில் அமைந்திருந்தது. ‘
0
‘ஒருவருக்கு மரண தண்டனை, மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனை’ எனும் கடலூர் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தண்டிக்கப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். பி.என். பிரகாஷ், நக்கீரன் ஆகிய நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இதனை விசாரித்தது. தற்கொலை வழக்கு என்று முதலில் பதிவு செய்யப்பட்டு பின்னரே கொலை வழக்கமாக மாற்றப்பட்டது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்களே இல்லை என்றும் தண்டிக்கப்பட்டவர்கள் வாதிட்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி இந்த வழக்கை விசாரிக்கமுடியாது என்றும் வாதிட்டனர். நடந்திருப்பது ஆணவக்கொலைதான்; அதற்குப் போதுமான சாட்சியங்கள் இருக்கின்றன என்று அரசுத் தரப்பினர் விளக்கமளித்தனர்.
இந்நிலையில் 8 ஜூன் 2022 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. மருது பாண்டிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கண்ணகியின் அப்பா துரைசாமி உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. முன்னதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த துரைசாமியின் உறவினர்கள் ரங்கசாமி, சின்னதுரை இருவரும் விடுவிக்கப்பட்டனர். காவலர் தமிழ்மாறனுக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையும் அளிக்கப்பட்டன.
0
பேருந்து வசதிகூட இல்லாத ஊரிலிருந்து ஒரு தலித் பட்டதாரி உருவாகி வருவதென்பது எவ்வளவு அசாத்தியமானது, எந்த அளவுக்குக் கடினமானது என்பது எங்களுக்குத்தான் தெரியும் என்று மனம் நிறைந்த வருத்தத்தோடு நினைவுகூர்கிறார் முருகேசனின் தம்பி வேல்முருகன். முருகேசனுக்கு பெங்களூரூவில் வேலை கிடைத்திருக்கிறது. ஏழாயிரம் வரை சம்பளம் பேசியிருக்கிறார்கள். தன் திறமையால் நிச்சயம் முருகேசன் இன்னும் இன்னும் மேலே வளர்ந்து சென்றிருப்பார். அவருடைய வளர்ச்சி ஊரிலுள்ள மற்ற தலித்துகளுக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்திருக்கும் என்று ஏங்குகிறார் வேல்முருகன். முருகேசன் எனும் தனிமனிதன் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் கூட்டுக்கனவும் சேர்த்தே அழிக்கப்பட்டிருக்கிறது.
(தொடரும்)