திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்தான் கடைசியாக கோகுலைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண்ணும் உடனிருந்திருக்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) முடித்திருந்தார்கள். படிப்பு நிறைவடைந்து ஒரு மாதமான நிலையில் ஒரு நாள், அம்மா, கல்லூரிக்குப் போய் மார்க் ஷீட் உள்ளிட்ட சான்றிதழ்களை வாங்கி வருகிறேன் என்று காலையில் சொல்லிவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்றிருக்கிறார் கோகுல். இது நடந்தது 23 ஜூன் 2015 அன்று. அதன்பின் என் மகனை நான் உயிரோடு பார்க்கவில்லை என்று வெடித்து அழுகிறார் 40 வயது வி. சித்ரா.
சில மாதங்களுக்கு முன்பு இதே திருச்செங்கோட்டில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. காரணம் ஒரு புத்தகம். ‘கிராமப்புறங்களில் நள்ளிரவில் கூட்டங்கள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டோம். சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களைப் பிரதியெடுத்து எல்லோருக்கும் விநியோகிக்கிறார்கள். குறிப்பாக, பெண்களிடம் அளித்துப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். பிரசாரம்போல் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ஓர் ஆசிரியர்.
அந்தப் புத்தகம், பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன். திருச்செங்கோடு கோயில் திருவிழா குறித்த தவறான சித்திரத்தை அளிப்பதோடு அப்பகுதிவாழ் கொங்குச் சமூகத்தினரை, குறிப்பாகப் பெண்களை இழிவு செய்யும் நோக்கோடு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் குற்றச்சாட்டின் சாரம். பெருமாள் முருகன் மீதான வெறுப்புப் பிரசாரத்தின் ஒரு பகுதியாகத்தான் மேலே கண்ட நள்ளிரவுச் சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
கொங்கு வேளாளர் என்று அறியப்படும் கவுண்டர்கள் மேற்கு தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்து வருகின்றனர். எங்கே சாதிப் பெருமித உணர்வு அபரிமிதமாகத் தலைதூக்குகிறதோ அங்கே சாதிக் காவலர்கள் தோன்றிச் செழிப்பது வழக்கம். பண்பாட்டைக் காப்பது, மரபை உயர்த்திப் பிடிப்பது தூய்மை பேணுவது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இவர்கள் செய்வதெல்லாம் ஒடுக்குமுறைதான். பெருமாள் முருகனின் புதினத்தை எதிர்ப்பதன்மூலம் அவர்கள் தங்கள் சாதியை, சாதியின் இருப்பை, அதன் செல்வாக்கை உறுதி செய்துகொள்கின்றனர். ஓர் எழுத்தாளருக்கு எதிராக, அவர் படைப்புக்கு எதிராகத் தொடங்கிய நச்சுப் பிரசாரம் சிறிது சிறிதாக விரிவடைந்து சூழலை மாசுபடுத்தத் தொடங்கியது. கோகுலைப் பற்றிக்கொண்டது அந்த மாசுதான்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓமலூரில் சாஸ்தா நகர் எனும் பகுதியில் வசித்து வந்தார் 21 வயது கோகுல் ராஜ். கோகுலின் அண்ணன் கலைச்செல்வனும் பொறியியல் பட்டதாரிதான். கோகுலுக்கு என்ன நடந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டவர் அவர்தான். கோகுலுடன் இணைந்து கோயிலுக்குச் சென்ற சுவாதிதான் கலைச்செல்வனைக் கைப்பேசியில் அழைத்து அவர் தம்பிக்கு என்ன நடந்தது என்பதைப் பதற்றத்தோடு விவரித்திருக்கிறார். 20 வயது சுவாதி நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்தி வேலூர் எனும் பகுதியைச் சேர்ந்தவர். நானும் கோகுலும் மலையுச்சியில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். அங்கே பேசிக்கொண்டிருந்தபோது சிலர் எங்களை அடையாளம் கண்டு நெருங்கி வந்தனர். தங்களோடு புறப்பட்டு வருமாறு கோகுலை அவர்கள் மிரட்டினார்கள். கோகுல் மறுத்தபோது, பலவந்தப்படுத்தி இழுத்துச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
எந்த வாகனத்தில் கோகுலைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள் என்பதையும் சுவாதி கவனித்து நினைவில் வைத்திருந்திருக்கிறார். வெள்ளை நிற எஸ்யூவி சொகுசு கார். ‘தீரன் சின்னமலை பேரவை’ எனும் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. யுவராஜ் என்பவரைச் சந்திக்க வருமாறு கோகுல் வற்புறுத்தப்பட்டிருக்கிறார். கோகுலை வண்டிக்குள் திணித்த பிறகு சுவாதியிடம் திரும்பி, வீட்டுக்குப் போ என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். அவருடைய கைப்பேசியைப் பறித்துக்கொண்ட பிறகு அவரை விரட்டியிருக்கிறார்கள். இது எப்போது நடந்தது என்பதையும் சுவாதி தெரிவித்திருக்கிறார். காலை 10 மணியிலிருந்து மதியத்துக்குள்.
கோகுலைத் தனியாகச் சந்தித்ததற்கான காரணத்தையும் சுவாதி சொல்லியிருக்கிறார். நாங்கள் ஒரே வகுப்பில் படிக்கிறோம். இருவரும் நண்பர்கள் மட்டுமே. கோகுலுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டிருக்கிறது. என்னிடம் கேட்டார். அதைக் கொடுப்பதற்காகத்தான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். பணத்தேவைக்கு விளக்கமும் சொல்லப்பட்டிருக்கிறது. என்னுடைய கைப்பேசி பழுதடைந்துவிட்டது என்று கோகுல் சொன்னார். எனவே நான் ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன். அதன் பிறகு இருவருமே மலையேறி சாமியைப் பார்க்கச் சென்றோம்.
கோயிலுக்குள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகள் சுவாதியின் தகவல்களை உறுதி செய்துள்ளன. இருவரும் காலை சரியாக 10.52 மணிக்கு கோயிலுக்குள் நுழைந்திருப்பதைக் கருவறைக்கு அருகிலுள்ள காமிராக்கள் (1,2,3 மற்றும் 4) படம் பிடித்துள்ளன. ஒரு மணி நேரம் கழித்து, 11.50 மணிக்கு இருவரும் கோயிலைவிட்டு வெளியேறுகின்றனர். அப்போது அவர்களுடன் அடையாளம் தெரியாத சிலரும் காணப்படுகின்றனர். நான்கு பேர் கோகுலைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள்.
இரவு வரை கோகுல் திரும்பி வராததால் அம்மா, அண்ணன் இருவரும் திருச்செங்கோடு காவல் நிலையம் சென்று புகாரளித்திருக்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்டம் 363ஆம் பிரிவின்கீழ் காணாமல் போனவரைக் கண்டறிவதற்காக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கிடையில் கோகுலின் நண்பரும் வழக்கறிஞருமான பார்த்திபன் காவல் நிலையத்துக்கு விரைந்து வருகிறார். அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளரும்கூட. உங்கள் விசாரணையை அந்த இளம் பெண்ணிடமிருந்து நீங்கள் ஏன் தொடங்கக்கூடாது? அவருடன் இருந்தபோதுதானே கோகுல் காணாமல் போயிருக்கிறார்? காவல் துறை இதற்கு உடன்பட்டு சுவாதியை வரவழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அண்ணன் கலைச்செல்வனிடம் பகிர்ந்துகொண்ட அதே தகவல்களை வரிசைக்கிரமமாக மீண்டும் காவலர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார் சுவாதி.
கோகுல் ராஜ் பறையர் சாதியைச் சேர்ந்தவர். சுவாதி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கோகுலைக் கடத்திச் சென்ற தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் சுவாதியின் சாதியைச் சேர்ந்தவர். கோகுல் மிரட்டப்பட்டிருக்கிறார், இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார். சுவாதி வெறுமனே எச்சரித்து விடப்பட்டிருக்கிறார். எந்தச் சாதிய உணர்வு சுவாதியைப் பாதிப்பின்றிப் பார்த்துக்கொண்டதோ அதே சாதிய உணர்வுதான் கோகுல்மீது வெறுப்போடு பாய்ந்திருக்கிறது.
மறுநாள் காலை கோகுலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இளவரசனின் மரணத்தை நினைவுகூரும் வகையில் அதே போல் ஒரு ரயில் பாதை. அதே போல் சற்று தள்ளி ஓர் உடல். இந்த முறை கோகுலின் தலை தனியே துண்டிக்கப்பட்டுக் கிடந்தது. ஈரோடுக்கு அருகிலுள்ள கிழக்கு தொட்டிப்பாளையம் கிராமத்துக்கு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் கிடந்திருக்கிறது உடல். தகவல் தெரிவிக்கப்பட்டதும் கோகுல் வீட்டிலிருந்து அலறியபடி ஓடிவந்திருக்கிறார்கள். ஆம், என் மகன்தான் என்று வெடித்து அழ ஆரம்பித்திருக்கிறார் சித்ரா. புன்னகையோடு விடைபெற்றுச் சென்ற தனது மகனை இருபத்து நான்கு மணி நேரம் கழித்து சடலமாக, அதுவும் கொடூரமான நிலையில் வைத்து அவர் பார்க்கவேண்டியிருந்ததை என்னவென்று சொல்வது?
(தொடரும்)